சூரியாள்

Wednesday, December 14, 2011
காரைக்கால் அம்மையார்களும் கல்பனாசாவ்லாக்களும்-2

சரி குடும்பத்திற்குள் இருந்தவளைத்தான் நாங்கள் ஒத்துக் கொள்வதில்லை அவளது வாழ்வு எவ்வளவு போராட்டத்துடன் வாழப் பட்டதாயினும் அது போராட்டமென்றோ அல்லது அவள் போராளி  என்றோ இச்சமூகம் வடிவமைத்த மனிதர்களாய் வாழும் நாம் யாரும் ஒத்துக் கொள்வதாயில்லை. அது தனி மனிதத்துவம் சார்ந்த வாழ்வியலாகவே பார்க்கப் பட்டு விடுகின்றது
ஆனால் இலங்கையின் விடுதலைப் போராட்டங்களில் பல்வேறு ஆண்களின் அரசியல் குழறுபடிகளுக்கிடையிலும் தவிர்க்க முடியாது தன் ஆளுமையை ஒவ்வொரு நகர்விலும் செய்து போன பெண்கள் கதைகளும் நம்மில் கதைகளாகவே உலாவருகின்றன.  செத்த பிறகு சிலரின் வரலாறுகள் சிலாகிக்கப் பட்டாலும் வாழுகின்ற பல பெண்களும்   கூட போராளிகளாக பார்க்கப் பட்டார்களா என்பது மிக முக்கியமான கேள்வி. வரலாற்றில் அவர்களது பெயர் எங்கேயும் சாட்சியங்களாக  இல்லாது கவனமுடன் அழிக்கப் பட்டு வருகின்றது என்பதும் அவர்களும் அவர்களின் வெற்றிகளாக நடந்ததை சொல்லாமல் இருக்க நேர்ந்து விடுகின்றது என்பதும் இதுவரை நாம் கண்டு கொண்டிருக்கின்ற உண்மை.
லண்டனில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில்   அந்தப் பெண்மணியை சந்தித்த போது முதல் பார்வையிலேயே தோற்றத்தில் அவரது முரட்டுத் தணத்தில் அதிர்ந்தேன். அவர் பெண் என்பதையே மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. ஆனால் ஒவ்வொரு விவாதத்தின் போதும் அவரது வாதம் மிக ஆளுமையோடும், சிறு விசயங்கள் கூட வேறுபட்ட புதிய தரிசனங்களோடும் வந்து விழுந்த போது தோற்றம் பற்றிய யோசனை மறந்து வியப்பு தொற்றிக் கொண்டது அவரைப் பற்றி எனது தோழிகளிடம் விசாரித்த போது
அவர் இலங்கை விடுதலை அமைப்புக்குள் மிக முக்கிய நபராக இருந்து , அந்த அமைப்பு ரீதியான எல்லா செயல்பாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமுமாக இருந்த  பெண்மணி என்றும், அந்த அமைப்புக்கான போர் முறைகளை வெளிநாடு சென்று கற்று வந்து பயிற்றுவித்தவர் என்றும்  இலங்கை அரசால் சிறையில் அடைக்கப் பட்டு, தப்பியோடி தமிழகம் வந்து  லண்டன் சென்று வாழத் துவங்கியிருக்கும் அவர், தான் இருந்த இயக்கத்திலேயே தவறான முடிவுகள் எடுக்கப் படும் போது சுட்டிக் காட்டியதாலேயே மறுக்கப் ப ட்டும் வெறுக்கப் பட்டும் , தன் இரத்த உறவுகளை அதனாலும் இழந்தும் இருக்கின்றார் என்றும் சொல்லப் பட்டபோது சொல்லப் பட்ட  கதைகளுக்கு அப்பால் இருந்த நிஜமும் பிரம்மாண்டமாகவே இருந்ததை உணர முடிந்தது இன்றும் கூட தனது முகவரிகளை  மறைத்தே வாழ கடமைப் பட்டுள்ள அவரை சந்தித்த போது குடும்பத்திலுள்ள ஆண்கள் மனோநிலைதான் இயக்கத்திலுள்ளவர்களுக்கும் ஆகின்றது என்று தெரிய வந்தது  அப்போது பெண்களின் செயல்பாடுகள் வெற்றிகளாக பதிவதன் அவசியம் உணர்ந்தேன்.
இந்தக் கட்டுரையில் என்னாலேயே அப்பெண்மனியின் வீரச் செயல்களை சொல்ல முடிந்த எனக்கு பெயரை சொல்ல முடியாமல் போவது துரதிர்ஷ்டமே. ஆனால் போராளிகளாக வாழ்ந்த பெண்களும் கூட  இன்றும் அதே வேகம் குறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரும் கூட வரலாற்றில் இருந்து மறைந்து விட்டு வாழக் கோரும் வாழ்க்கைதான் சாத்திய மாகி இருக்கின்றது.
ஈழத்து விடுதலை இயக்கத்தின் அடிப்படை அரசியலிலிருந்து , ரிச்சர்ட் வாக்னரும், ஹிட்லரும் என வெங்கட் சாமிநாதனின் கட்டுரையை எதிர்த்து எதிர்வினையும் செய்யக் கூடிய எல்லா ஆளுமையும்  இவருக்கு உண்டு என்பது சமீபத்தில் வெங்கட் சாமிநாதன்  வாதங்களும் விவாதங்களும் என்ற கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்த போது  தெரியவந்தது  அப்படிப் பட்ட ஆளூமை தன்னை தானே மறைத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றதே என்று, நினைக்கும் போது , வெறுமனே  கலகக் குரல்கள்  என எதற்கும் பொருத்த மில்லாது தகுதிக்கு மீறி வெளிச்சத்தை தன் மேல் படர விட எல்லா விளம்பரங்களையும் செய்து கொள்ளும் தமிழகத்து  பெண் கவிஞர்கள் சிலரின் ஆர்ப்பாட்டங்களும் நினைவுக்கு வராமல் இல்லை. இன்னும் எத்தனை ஆளுமைகளை அந்தப் பெண்மணியிடமிருந்து நான் சந்திக்க முடியாமல் போய் இருக்கின்றதோ என்றும் யோசிக்க வேண்டி இருக்கின்றது. ஒரு ஆண் அரசியலில் பெரிய ஆளுமை என்றால்  குடும்பம் போன்ற விசயங்கள் சிறு விசயங்களாக தோற்றம் தந்து விடும் அவர்களுக்கு ஆனால் பெண்களுக்கோ அப்படியில்லை. அவ்வளவு அரசியல்  இசை  போர் முறை எல்லாவற்றையும் பேசும் அதே பெண்மணியின் பெண்கள் சந்திப்பு உரையாடலில் அவரது மகன் தனது இலங்கை வாழ்  தாத்தாவூடான உரையாடலை  சொல்லி ஆணாதிக்க சமூகத்திற்கு பழக்கப் பட்டிருக்கிறோம் என்பதை குறிப்பிட்டு பேசிய விதம் பெண்களுக்கு எல்லா பக்கத்திலும் கண் இருக்க வேண்டி இருப்பதையும் அப்படி இல்லாத ஆண்களுக்கு அது  பிரமிப்பாகவே தோன்றாது போவதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது

அவரது மகன் தாத்தா உரையாடல் இதுதான்
 சமைப்பது பெண் வேலை எனப் பழகிய இலங்கையிலிருந்து வந்திருந்த தாத்தா,இலண்டன் வாழ்க்கைக்கு பழக்கப் பட்ட வேலைக்குச் செல்லும் அம்மா அப்பா பையன்
தாத்தாவிற்காக தினமும் சமைத்து வைத்து விட்டு அம்மா கிளம்புகின்ற போது பையனின் கேள்வி
 ஏன் தாத்தா உனக்கு சமைக்கத் தெரியாதா 
தெரியாதேப்பா
60 வருடங்கள் வாழ்க்கை  வாழ்வதும் உழைப்பதும் சாப்பிடுவதற்குத்தான். அதற்கான அடிப்படை வேலை சமையல் எப்படித் தெரிந்து கொள்லாமல் இருப்பீர்கள்
வியந்து, தனக்கு வேணும் என்பதை தானே சமைத்து சாப்பிட்டபடி வெளியேறிப் போகின்ற பையன்
இது தான் சம்பவம்.போர் பயிற்சி முறை மட்டுமல்லாது மிக மெல்லிய உணர்வு தளங்களையும் அவதானிக்கவும் முடியுமென்கின்ற பெண் ஆளுமை என்னால் மறக்க முடியாத ஆளுமை
 பெண்கள் விசயத்தில்  உண்மைகளும், உழைப்புகளும் வெற்றிகளும் மேடையேறாததும்,   தோல்விகளும் படோபடங்களும் வெளிச்சத்திற்கு வருவதும் கூட இச்சமூகம் தன்னையே அறியாது பெண்ணுக்கெதிராக நிகழ்த்தி வரும்  வன்முறைகள் தான். பெண்கள் வாழ்ந்த வெற்றிகள் நிராகரிக்கப் பட்டு  உருவிலிகளாக காரைக்கால்  அம்மையார்களாக மாற்றப் பட்டு விடுகின்றனர். 
நன்றி :பாவையர் மலர்
posted by mathibama.blogspot.com @ 12/14/2011 11:01:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates