சூரியாள்

Monday, February 06, 2012
காரைக்கால் அம்மையாரும் கல்பனா சாவ்லாக்களும்-3

டூலிப் பூக்களின் இளவரசிகள்

துருக்கியில் நடந்த மருத்துவர்கள் மாநாடு . என் கணவரோடு பயணித்த அனுபவம் வித்தியாசமானது. இந்தியா முழுவதிலுமிருந்தும், 400 மருத்துவர்கள் வந்து  கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று செவி வழி கேள்விப் பட்ட போது  கூட அது ஒரு பெரிய விசயமாகத்  தோன்றவில்லை. ஆனால் அப்படி ஒரு கூட்டத்தை பகுதி பகுதியாக 4 நாட்களில் சந்திக்க கிடைத்த  அனுபவங்கள் சுவையானது.
மருத்துவர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு அவர்களது அரங்குகளுக்குச்  செல்லும் அவசரமோடு  செல்லத் தொடங்கினர்  சாப்பிடுகின்ற  இடத்தில் மனைவிமார்களில் பலரும்  காலை  உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நான் அமர்ந்த மேசையின் அருகில் ஒரு பெண்மணி குழந்தையோடு அமர்ந்திருந்தார். குழந்தை, அவசர அவசரமாய் சாப்பாட்டை முடிந்து அரங்குக்கு செல்ல முனைந்த தந்தையோடு போவதற்கு அழுது, ஆர்ப்பாட்டம் செய்தது. அதை  சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்மணியால் சமாளிக்க முடியாமல் போக நான் குழந்தையைக் கையில்  எடுத்து சமாதானப் படுத்தி   அதனோடு ஒன்றிணைந்து போக அந்தப் பெண்மணியோடு  ஆங்கிலத்தில் உரையாடத் துவங்கினேன்
அறிமுகங்கள் ஆயின
டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த பெண்மணி  அவரும் மருத்துவர். எனைப் போல் அல்ல
நீங்களும் மருத்துவரா?
ஆமாம்
ஏன் நீங்க மீட்டிங்குக்குப் போகலை
குழந்தையைப் பார்த்துக்கனுமே
நீங்க எந்த ஊரு
தமிழ் நாடு
ஓ எனக்குப் பிடிக்கும்
அப்படியா ஏன்?
தெற்கத்தி காரவுங்க  கலாச்சாரத்திலும் ஒழுங்கிலும் ரொம்ப சிறந்தவங்களா இருப்பாங்க
எதை வைச்சு  சொல்றீங்க?
எங்களோட திருமணம் காதல் திருமணம். நான் படிக்க போனதுக்கப்புறம் எங்கம்மா சொன்னாங்க
”நீ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதெல்லாம்  எங்களுக்கு சம்மதமே

ஆனால் நம்ம பகுதி  பையனோ அல்லது   தெற்கத்தி பையனோ  என்றால் எங்களுக்கு சம்மதமே ஆனால் டெல்லியைச் சுத்தி இருக்கின்ற நார்த்  இண்டியன்ஸ் பையங்க வேணாம்ன்னு சொன்னாங்க”.
ஏன்?காரணம்.
எங்க கலாசாரமும் , தெற்க இருக்கிறவுங்க கலாசாரமும் ஒன்றாகயிருக்கும்.  அவங்களுக்கு ஒரு ஒழுங்கு இருக்கும் .என்று சொல்லிக் கொண்டிருந்ததை  கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் அருகிலிருந்தவர் எங்களோடு உரையாடலில் கலந்து கொண்டார். 
ஆமா  அவங்க சொல்றது  உண்மைதான். ”நார்த் இண்டியன்ஸ்” அதாவது நாங்க தொடர்ந்து பல பேரால்  பாதிக்கப் பட்டிருக்கிறோம். எது எங்க காலாச்சரம்னு எங்களுக்கே தெரியாத அளவுக்கு போர் எடுத்து வருகிற ஒவ்வொருத்தரோட  கலாச்சாரமும் எங்க முதுகில மூஞ்சியில பதிவாகியிருக்கு. கிடைக்கிற ஒவ்வொரு நாளும்  ”யாரும் அபகரிக்காத என்னோட நாள்” அதை எந்த வித தடையுமின்றி அனுபவிச்சிடனும்கிற தத்துவம் எங்க இரத்தத்திலேயே ஊறிப் போயிடுச்சு
மூணாவது அடிக்கடி யாருடைய அதிகாரத்திற்குள்ளாவது  எங்கள் பரம்பரையா  நிகழ்ந்ததுனால எப்பவும் எங்களுக்கு எதிரில் இருப்பவர்களை  முந்திக்கிட்டு  அதிகாரம் செய்து கொள்கின்ற பழக்கமும் எங்களது ஆயிடுச்சு
தெற்கே அப்படியில்லை பாரம்பரியமா உள்ள கலாச்சாரம், குலையாத வாழ்க்கை, நம்பிக்கையான நாளை என்பது அவர்களுடையது
வட கிழக்கு பகுதியில் இருக்கிற இவங்களும்  தெற்கே இருக்கிறவுங்க  மாதிரிதான். சோ உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகும். உண்மையை  சொல்லப் போனா நாங்க உங்களால் ஒத்துக் கொள்ள முடியாதவர்கள், பச்சையா சொன்ன ”ஆடுகாலிகளா” தெரிவோம் என்று சொல்லி சிரித்து முடித்தாங்க.
தொடர்ந்து நடந்த ஒன்று கூடல்களின் போது விருந்தின் போதும் அவர் சொன்னதன் நிஜத்தை புரிந்து கொள்ள முடிந்தது
ஆந்திரா, கன்னடா, என தெற்கத்திக் காரர்கள் வேகமாக இணைந்து கொள்ள முடிந்தது.  திடீரென ஒரு கூச்சல் குழப்பம்,
இதுதான் வேணும் என்று அதிகாரம் செய்யும் தனம்,
 இரவு விருந்துகளில் ஆடிப் பாடி முழுக்க ரசித்து முடிக்கின்ற  கூட்டம் பெரும் பாலும் நாம் நார்த் இண்டியன்ஸ் என்று சொல்லக் கூடிய என் அவதானிப்பில் ஹரியாணா , மத்தியப் பிரதேசம் உத்திரப் பிரதேசம், என்பதாகவே இருந்தது.சிலர் கலகங்கள் வெறுமனே கவன ஈர்ப்புக்காகவே இருந்தது.

ஆழ்ந்த ஆய்வுக்குரிய  இந்த விசயத்தை ஒரு சமூகத்தின் இயல்பின் காரணங்களை ஒரு காலைச் சாப்பாட்டோடு பகிர்ந்து கொண்டது மகிழ்வாக இருந்த அதே நேரத்தில் இதுமாதிரியான தகவல் மட்டும் இலக்கியவாதிகளின்   கையில் சிக்கினால், சொல்லியது பெண் எனும் போது ஒன்று இதுமாதிரி வேறு யாரும் சொல்லியிருகிறாங்களான்னு ரெஃபரன்ஸ் தேடி காணாமல் ஆக்கிடுவாங்க அல்லது தாங்கள் சிந்தித்திருந்தால்  யாரும் இதுவரை அறியாத விசயம் என்று ஒரு புத்தகமாகவே ஆக்கிடுவாங்க. ஆனால் தான் சிந்தித்த இந்த விசயம் பெருமதிப்பானது , ஒரு இந்திய சமூகத்தையே ஒரு திருமண விசயத்தை முன்னிட்டு கேள்விக் குள்ளாக்கியது என்று அந்தப் பெண் யோசித்திருக்கவே மாட்டாள். தன் வாழ்வியலோடு எளிதாக சந்தித்ததை , சிந்தித்ததை , ஆண்கள் சிந்தித்திருந்தால்  ”அசைவுகளாக” புத்தகம் போட்டு ”தொ. ப”க்கள் அறிவாளிகளாகிட, தங்கள் பெண்களின் சிந்தனைகளை நம்பாதவர்கள், புத்தகமானபிறகு அதை விதந்தோதி  கூட்டத்திற்கு கூட்டம் வாந்தியெடுத்து அறிவாளிப் பட்டம் சூடிக் கொள்வார்கள்
பெண்களோ சாப்பாட்டாடு சிந்தித்து சமையலறையிலேயே அதன் பெருமதிப்பை உணராது மறந்து போகின்றனர்.எனது பக்தி எனது இயல்பு என வாழ்ந்த காரைக்கால் அம்மையார் போலவே....

இன்னும் வீர இளவரசிகளும்,
பேருந்து பயணத்தின் போது எங்களுக்கு வழிகாட்டியாக வந்த நபர் சொன்ன  ராணியின் கதை சுவாரசியமானது. இக்கதை டூலிப் பூக்களோடு சம்பந்தப் பட்டது.

ஒரு அரசன் இருந்தான். துருக்கியிலிருந்து ஹாலந்து நாட்டிற்கு டூலிப் பூக்கள் எடுத்துச் செல்லப் பட்ட பிறகு இங்கு அது இல்லாமல் போய் விட்டது.அரசனின்  ராணிமார்கள் அந்தப்புரத்தில் ஆயிரம் பேர்கள் இருந்தனர். ஆனால் அவனுக்கோ ஒரு ராணியின் மேல் மட்டும் எப்பொழுதுமான ஒரு ஈர்ப்பு இருந்து வந்தது. அவளை அவன் ஆசையோடு நெருங்கிய போது அவள் சொன்னாள்  இந்த நகரம் முழுவதும் டூலிப் பூக்களை மீண்டும் பூக்க  வைக்க வேண்டும் அப்பொழுதுதான் நான் உனக்கு கிடைப்பேன் என்று .
கேட்ட அரசன் மீண்டும் ஹாலந்திலிருந்து பூக்களை தருவித்து நாடு முழுவதும் பூக்களை பயிரிட ஏற்பாடு செய்தான்

இந்த கதை எனக்கு சுவாரசியமானதாக இருந்தது. சொல்லப் பட்ட கதைகளூடாக  சொல்லாமல் விட்ட உணர்வு என் வாசிப்பில் அகப் பட்டது.
அந்தப் புரத்து ஒட்டு மொத்தங்களுக்குள் தன்னை தொலைத்து விட விரும்பாத தன் சுய இருப்பு கோரும் ஒரு பெண்நிலை வாதியாகவே அந்த பெயர் தெரியாத அரசி தெரிந்தாள்.
இணையத்தில் இக்கட்டுரைக்காக அத்தகவல் இருக்குமா என்று தேடிப் பார்த்தேன் . இல்லை. தனக்கும் அரசனுக்குமான உறவை பகிரங்கப் படுத்த விரும்பிய அவள்  அதனை வாய்மொழியாக உரத்துச் சொல்ல அது அரசாணை அல்ல என்பதை உணர்ந்து அவர்கள் நெருக்கத்தை ஊரெங்கும் அவன் விதைக்கும் டூலிப் பூக்களின் ஊடாக ஊருக்கு உணர்த்தி விட்டாள் . அரசிகளாக வாழ்ந்து  போன ஆயிரக்கணக்கான பெண்களுக்கிடையில் இவளது கதை மட்டும் நம்மோடு நின்று போனதற்கு அவளது இருப்பு குறித்த திடமான சிந்தனையே காரணம்.ஆனால் அதிலும் ஒரு வருத்தம் என்னவென்றால் அவள் உணர்வாக புரிய வைக்க விரும்பிய விசயத்தை பருப் பொருளின் ஊடாகவே இன்னும் இச்சமூகம்  சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதன் நிஜம்தான். காண முடியாத காதலைக்கான முடிந்த பூக்களின் வாயிலாக உணர்த்தச் சொன்னாள்  பூக்களை மட்டும் வாங்கித் தந்து போகும்  பருப் பொருள்களோடு எல்லாவற்றையும் பார்த்து , பின்பு பருப் பொருட்களை மட்டும் பார்க்கும் மனோபாவச் சமூகம். இக்கதையையும் அப்படியே வாசித்துப் போகின்றது
டூலிப் பூக்களின் வண்ணங்கள் போலவே பெண்கள் இன்னும் வலம் வருவார்கள்

நன்றி : பாவையர் மலர்
posted by Thilagabama m @ 2/06/2012 09:02:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates