சூரியாள்

Monday, January 21, 2013
காமாலைக் கண்ணோடு எழுதப் பட்ட காமத்திப் பூ


காமாலைக் கண்ணோடு எழுதப் பட்ட காமத்திப் பூ

காமாலைக் கண்ணணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல எல்லாவற்றையும் காமம் தொட்டு எழுதவும்,சாமந்திப் பூ கூட காமத்திப்பூ வாகவே  தெரிய நேர்ந்து விட்ட நிர்ப்பந்தம் கவிஞருக்கு. இன்றைக்கு சந்தையில் விலை போகின்ற வரிகளும் வார்த்தைகளும் சிந்தனைகளும் கவிதைகளாக சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து வென்றிருக்கின்றார்.
2002 லிருந்து எழுதப் பட்டுக் கொண்டிருக்கின்ற உடல்மொழி , அதிர்ச்சி மதிப்பீட்டில் இச்சமூகத்தை வாசகனை  விமரிசகனை திரும்பிப் பார்க்க வைக்கும் என நம்பினார்கள் உடல்மொழி கவிஞர்கள். சரி அதுவே நடந்தது.பார்வை விழுந்த பிறகு அது தந்த அரசியல் அவர்களை காமத்துபால்.  கவிஞர்களாகவே( நன்றி இந்தியா டுடே) அடையாளப் படுத்தியதே அல்லாது இச்சமூகம் பெண் உடலின் மேல் கொண்டிருந்த அதிகார மையத்தை தகர்க்க ஒருபோதும் உதவவே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு சாட்சியங்கள் நீங்கள் கேட்டால் இதை எழுதுகின்ற பெண்கவிஞர்களின் வாழ்விலிருந்தே என்னால் எடுத்து தர முடியும்
சிலர் எரிய பலர் குளிர்காயும் அரசியல் இலக்கியவாதிகள் மத்தியிலும் ஊதி ஊதி அவல் திங்கும் பதிப்பாசியர்களும் தான் யதார்த்தம்
 சரி இத்தொகுப்பில் கவிஞரின் இதற்கு முன் வெளிவந்த சில தொகுப்புகளின் பொதுப் பார்வை குறித்து எழுதப் பட்ட சில வரிகளும், ஏற்கனவே ஆணாதிக்கசமூகத்தில் இருந்து கொண்டிருந்த பெண் உடலரசியலைத் தான் மீண்டும் நிலை நிறுத்தப் பார்க்கின்றது எனபதற்கான சாட்சியங்களாகிப் போகின்றது. இந்த தொடர்ச்சியில் கவிதை அரசியல் எல்லாம் உதிர்ந்து பெண் உடலுறுப்பை உச்சரித்து பார்த்துக் கொள்ளும் வக்கிரம் தான் நீடிக்கின்றது.
கவிஞரின் தொகுப்பு பற்றிய அந்த முன்னுரைகளில் சில
”பெண் வாசம் வீசும் பூமிக்கான பருவங்கள் , காதல் காமம், வெஞ்சினம்”-(தீண்டப் படாத முத்தம்)
”போலி மதிப்பீடுகளின் இருளில் வாழ்வின் முச்சந்தியில் வேட்கையை விளக்காக உயர்த்திப் பிடிக்கின்றன”- இரவு மிருகம்.
உடல்-ஆகாயம்
மனம் –நிலம்
விடுதலைக்கான வேட்கை- பெண் உடல்
பெண் இருப்பின் சீற்றம் தவிப்பு, குமுறல் பகிரங்கப் படுத்தப் படுகின்றன-அவளை மொழிபெயர்த்தல்

துளித் துளிக் காதல், பெருங்கடல் காமம்-காமத்திப் பூ

இதுவரை உடன்பாடு கொள்ள முடியாத கவிஞர்களின் கவிதைகளை அந்த முன் தீர்மானங்களை தூர வைத்து விட்டு மீள் வாசிப்பு செய்து விடத் தோன்றியது. புதிதாய் ஏதேனும் பார்வைகள் சாத்தியமாகின்றனவா என்று..
நிறைய யோசிக்க வைக்கின்றன
யோசிக்க வைப்பதில் இரண்டு வகை இருக்கின்றன
ஒன்று எப்படி இருக்க வேணும் என யோசிக்க வைக்கும் சம்பவங்கள் சிந்தனைகள்
இரண்டாவது எப்படியெல்லாம் இருந்து விடக் கூடாது என்று யோசிக்க வைப்பது
இந்த கவிதை தொகுப்பு இரண்டாவதற்கு அடிகோலுகின்றது
மேலே கொடுத்திருக்கின்ற வரிகளை மீண்டும் வாசித்துப் பார்க்க விரும்புகின்றேன்
அதற்கு முன்பாக கோட்பாடு ரீதியாக ஒடுக்கப் பட்ட மக்களுக்கான எழுத்தும் இயக்கமும்தான் கவிஞருடையது என நம்ப வைக்கப் பட்டிருக்கின்ற இந்தசூழலில் அவை இக்கவிதைகளில் எங்கே இருக்கின்றன. இதுவரை பேசப் படாத பாலியல் வேட்கைகள், வார்த்தைகள் என்பதற்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் சாதாரண அடித்தட்டு மக்கள் வாழ முடியாத மேற்கத்திய வாழ்வை சிந்தனையை  எப்படி மறைத்து வைத்திருக்கின்றன என வாசிக்கின்ற கவிதைகளில் தேடுதல் அல்லது உணர்தல் வேண்டியிருக்கின்றது. எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் ஆணாதிக்கக் குரல்கள் அல்லது கலாச்சாரக் குரல்கள் என்று அர்த்தப் படுத்தி விடுவார்களோ பயத்திலேயே ஒதுக்கப் பட்டுக் கிடக்கின்றன.
எனக்கும் நேர்ந்திருக்கின்ற ஆபத்தும் அதுதான் கலாசாரக் காவல், பத்தினித் தனங்கள், ஆண்குரல் பேச்சு என்கின்ற விமரிசனக் குரலை ஒடுக்குகின்ற சொல்லாடல்களைத் தாண்டிய பதிவுகள் தான் இவை
  இக்கவிதைகள்
பெண் வாசம் வீசும் பூமிக்கான பருவங்கள் , காதல் காமம், வெஞ்சினம்-(தீண்டப் படாத முத்தம்)
இது  கவிதைத் தொகுப்புக்காக கொடுக்கப் பட்ட உரை அது அவரது புத்தகத்தில் வெளியாகின்ற போது அவரும் அதற்கு உடன்படுகின்றார் என்றுதானே அர்த்தம்
இதுவரை  பெண்ணுக்கான பருவங்களாக இந்த ஆணாதிக்க உலகு சித்தரித்து வைத்திருக்கின்ற குணாதிசயங்களே  காதல் காமம் வெஞ்சினம்தான். உதாரணமாக இன்றைய எல்லா சின்னத் திரை நாடகங்களிலும்அவைகளைத்தான் பெண் குணங்களாக சித்தரிக்கி கின்றார்கள். காலம் காலமாக அவள் உடல் சார்ந்து சிந்திகப்படுகையில் எல்லாம் காதலும் காமமும் வெஞ்சினமும், காத்திருப்புமே பெண்ணின் வாழ்வாக ஆக்கப் பட்டிருக்கின்றது என்று தொடர்ந்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றோம் எங்களைப் போன்ற கவிஞர்கள் அந்த பெண் வாழ்வை  வாழ்தல் தேடல், ஆண்மை, வீரம், அறிவியல் ஞானம், தொலைகின்ற வேரடி மண்ணை காப்பதுவும், அதில் கலந்து கிடக்கின்ற நோய்மைகளை அகற்ற சிந்தனை போர் நடத்துவமாக இவை எல்லாமே  பெண்ணின் வாழ்வாக சித்தரித்து விட முயன்று கொண்டிருக்கையில் மீண்டும் காலம் காலமாக கடந்து வந்த காதலும் காமமும் ஒன்றே இலக்காக ஆக்கிரமிக்கும் உடல்மொழியின் போக்கு இன்றைக்கு தேக்க நிலைக்கு வந்து விட்டது மட்டுமன்றி அடுத்த சீர்கேட்டுக்கும் வழி வகுக்கத் தொடங்கி விட்டது
மெகா தொடர். என்ற ஆங்கில வார்த்தையை அகற்றி விட்டு நெடுந்தொடர் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தி பெருமை கொள்பவர்கள், தொடரில் வரும் பெண்களின் குணங்களாக காதல் காமம் , வெஞ்சினம் தவிர எதையுமே முன் வைக்கவே இல்லாமல் போகின்ற போது பெருமை காய்ந்து கிடந்த பூமியில் ஊற்றிய குவளை நீராய் ஆவியாகிப் போய் விடுகின்றதே அதுவாகத்தான் ”உடல்மொழி” என்ற வார்த்தையும் ஆகி விட்டிருக்கின்றது
அடுத்தது
”போலி மதிப்பீடுகளின் இருளில் வாழ்வின் முச்சந்தியில் வேட்கையை விளக்காக உயர்த்திப் பிடிக்கின்றன”- இரவு மிருகம்.
உடல்-ஆகாயம்
மனம் –நிலம்
விடுதலைக்கான வேட்கை- பெண் உடல்
வேட்கையை விளக்காக உயர்த்தி பிடிப்பதுவும், உடலை விடுதலைக் கான வேட்கையை குறிக்கும் குறியீடாக்குவதுமே ஆபத்தானது.
உடலையே விடுதலைக்கான கருவியாக் ஆக்கினால், பெண்ணை உடமையாக்க நினைப்பவர்கள் முதலில் அந்த உடலையேஅல்லது உடலின் வழியாகவே சிறைப் பிடிக்க முனைவார்கள். அதுவே நிகழ்ந்ததும் நிகழ்வதும்
இன்று  காதல் என்பது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஆக்கிரமிக்க பயன்படுத்தும் கருவியாகவும் , காமம் ஒருவருக்கொருவர் வைக்கின்ற பொறியாகவுமே மாறி விட்டுருக்கின்றது
ஆண் பெண்ணின் காமத்தை எழுதுவதும், பெண் பெண்ணின் காமத்தை எழுதுவதும் வேறு வேறு என்று நாம் சொல்லிக் கொண்டாலும் கிளர்ச்சியாய் வாசித்துப் பழகிய சமூகம் அதையும் அதற்கே பயன்படுத்துகின்றது . பெண் சுகம் கொடுப்பவளாக இருக்க வைக்கப் பட்டிருக்கின்றாள் என்பதற்கு மொன்னையான எதிர்ப்பதமாக சுகத்தை எடுக்கிறவளாக மாற்றுவது கவிஞரின் கவிதைகளில் பாடு பொருளாகின்றது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெண் கொடுப்பவளாக இருந்தாலும் எடுப்பவளாக இருந்தாலும் , எல்லா இடத்திலும் துய்க்கப் பழகியவனாகவே ஆண் இருக்கின்றான் என்ற உண்மையில் எல்லா எதிர்ப்பதங்களும் பெண்ணுக்கு எதிராகவே ஆகி விட்டுருக்கின்றது 
துளித் துளிக் காதல்  பெருங்கடல் காமம்
பெருங்கடலாய் காதலும், துளித் துளியாய் காமமும் இருந்த போதுதான் இனிக்கும் வாழ்க்கை. அதன் சதவீதங்கள் மாறுகையில்  விகாரமும் வக்கிரமுமாய் , விதி விலக்கான வாழ்வியல் அனுபவங்களாய் மாறிப் போகிறபோது மனித வாழ்வு அவநம்பிக்கையில் சிக்கிக் கொள்கின்றது.
புதிதாக தேவையான உடலரசியலை கவிதைகள் பேசவில்லை , ஏற்கனவே பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வியலையே புதிய வார்த்தைகளில் பேசிப் போகின்றன பெரும்பாலான இவரின் கவிதைகள்
வீழ்தல்
எனகெதிராக
நீ வியூகங்களை
வகுக்கும் போது
ஆயுதங்களைக்
கூர் தீட்டும் போதும்
ரௌத்ரம் பொங்கக்
களமாடுகிறேன்
ஆயுதங்கள்
ஏதுமற்ற
உன் கண்களில்
அன்பின்
கடைசித் துளி
சொட்டும்போது
வீழ்ந்து போகிறேன்
எதுவுமில்லாமல்
இக்கவிதையில்  உன் கண்களில் /அன்பின்/ கடைசித் துளி/ - இது காலம் காலமாக இருந்து வருகின்ற ஒன்றுதானே எப்பவும் பெண் இந்த அன்பின் காரணமிட்டேதானே முடக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றாள். அதையே மீண்டும் மீண்டும் கவிதையாக்கிக் கொண்டிருப்பது ஆணாதிக்க சமூகத்தின் பிரதியாக பெண்ணை மீண்டும் உருவாக்கவே வழி வகுக்கும்
மேல்தட்டு வர்க்க பெண்களின் கவிதைகளை தொடர்ந்து நிராகரிப்பதாக சொல்லியபடியும், தாங்களே ஒடுக்கப் பட்டவர்களின் அரசியலை பேசுவதாகவும் பேசுகின்ற இக்கவிஞர்களின் கவிதைகள் உண்மையிலேயே ஒடுக்கப் பட்டவர்களின் வாழ்வை பேசுகின்றதா? கேள்விக்கு அவரது கவிதையே பதிலாகின்றது
இரவு தன் ஆடைகளைக் களைந்து
நிர்வாணத்தில் களி கூரும்(று)
ஒடுக்கப் பட்டவன் நல்ல ஆடைகளுக்கு ஏங்குபவனாகவும், நிர்வாணத்தை எப்பவும் மறைக்கப் போராடுபவனாகவுமே இருக்கின்றான்.இரவு களி கூறுவதாக சொல்லிய போதிலும், நிர்வாணத்தை களி கூறுகின்ற ஒடுக்கப் பட்டவனின் ஏக்கமாகவும் இதை கொள்ள முடியாது. நிர்வாணத்தில் களி கூறுவது மேல்தட்டு மனோபாவம்,அந்த மனோபாவத்தில் இருக்கும் இக்கவிதையில் இருக்கும் கவிஞரின் இரவு எப்படி ஒடுக்கப் பட்டவர்களினதாக இருக்க முடியும்.கவிஞரின் கருத்தியலும்,அவர்கள்  கவிதையில் இருப்பதாக சொல்லுகின்ற கருத்தியல் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை அதற்கான எதிர் கருத்தியலை அல்லவா கவிதைகள் கொண்டிருக்கின்றன.
என்னையும் அவனையும்
போதையின் சுழலில்
வாரி மடித்துப் போடுகிறது
குடுவையின் மறைவிலிருக்கும்
வடித்தெடுத்த சாராயம்

ஒடுக்கப் பட்ட மக்களை இன்னும் துன்பத்தில் ஆழ்த்துவதுதான் சாராயமாக இருக்கின்றதே அல்லாது அவர்களை இன்பத்துக்குள் ஆழ்த்துவதாக அது இல்லவே இல்லை.அதுவும் சாராயம் ஒடுக்கப் பட்ட இனத்தின் ஒவ்வொரு பெண்ணுக்குமெதிரான வன்முறையாகவே மாறிக் கொண்டிருக்கின்றது . கவிஞர்  தற்பொழுது நடுத்தட்டு வர்க்கம் கூட இல்லை மேல்தட்டு வர்க்க வாழ்க்கைக்குள் அதன் சுவைக்குள்  விழுந்து விட்டதையே இக்கவிதை காட்டுகின்றது. ஆக ஒடுக்கப் பட்டவர்களின் குரலைப் பேசுகிறது எனது கவிதைகள் என்பதான பீடத்தை துறந்து விட வேண்டியதுதான்
பெண்களின் உறுப்புகளை சொல்வதினால் எக்கவிதையும் பெண்களின் குரலாகுவதில்லை. பறை, பனை கரிசல்  போன்ற வார்த்தைகள் மட்டுமே ஒடுக்கப் பட்டவர்களின் குரலாகுவதுமில்லை
வாழ்தல் நிமித்தம் என்ற கவிதையில் தொலைகின்ற இயற்கைக்காக பாடுவதாக ,அமைந்திருக்கக் கூடிய கவிதையில் இறுதியில்
பனையோலை வீட்டைக்
குறுக்காகக் கடக்கிறது
ஒரு புறவழிச் சாலை
கிராமங்கள் தொலைவதற்காக வருத்தப் படுபவர்கள், நகரங்களில் வசிக்கிறார்கள் . நகர வசதிகளை எல்லாம் அனுபவித்துக் கொண்டு, கிராமத்து வசதியின்மைதான் இயற்கை சுகம் எனும் பிம்பத்தை கட்டி எழுப்பப் பார்க்கின்றார்கள் கிராமவாசி அதன் வாழ் நிலையில் உறைந்து போயிருக்கவா விரும்புகின்றோம். இல்லையே கிராமம்  நகரமாய் மாறுதல் வளர்ச்சி. பனையோலை வீட்டை மட்டுமல்ல காங்கிரீட் வீடுகளையும் சேர்த்துதான் கடக்கின்றது புறவழிச் சாலை
முதிர்ச்சியடையாத சிந்தனைகள், அன்றைய போக்குகளை, மேற்கத்திய  உத்திகளை படி எடுக்கும் மனோ நிலை, தீர  சிந்திக்காது  மனத்தில் தீர்மானிக்கும் முடிவுகள் இவை கவிதைகளில் பிரதி பலிப்பதை மறைக்க முடியவில்லை.  இதுவும் கடந்து போகும் பெண் பிரதிநிதித்துவத்திலிருந்து மனித வளத்திற்கான விசயங்களை பேச இன்னொரு கவிஞர் துளிர்ப்பார் என நம்புவோம்
posted by mathibama.blogspot.com @ 1/21/2013 06:38:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates