சூரியாள்

Saturday, April 28, 2012
காரைக்கால் அம்மையார்களும் கல்பனா சாவ்லாக்களும்-6

யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. எந்த அடையாளம்  பெண்ணை ஆணுக்கானவளாக  அடையாளப் படுத்தியதோ அதே அடையாளத்தை ஒரு எதிர்ப்பு சக்தியாக பயன்படுத்தியிருக்கின்றது ஒரு சுயமரியாதை சக்தி என்பதை நினைக்கும் போது வியப்பாகவே இருக்கின்றது. ஆரம்பத்தில் தாலி பற்றிய பெரிய சிந்தனைகள் அற்றவளாகவே இருந்தேன். எனது முதல் கவிதை தொகுப்பு வெளி வந்த போது பொன்னீலன்  தாலி குறித்து இப்படி எழுதிச் செல்வார் தனது முன்னுரையில்.
“தாலிக்கு பஞ்சாபியில்  பொருள் சிறிய பூட்டு, இன்னும் சில வட இந்திய மொழிகளிலுமே அது பூட்டு எனும் பொருளிலேயே பயன்படுத்தப் படுகின்றது. ஒரு பெண்ணை ஆணுடன் பூட்டி விடும் அடையாளம் என்பதால் தாலி என்று பெயர் பெற்றது திலகபாமாவின் கவிதை உலகிலும் தாலி பெண்ணுக்கிடும் பூட்டாகவே உருக் கொண்டிருக்கின்றது” என்றார்.
 அவரின் இந்த விளக்கங்கள் என்னுள்    கேள்விகளை எழுப்பிய போது தான் காலம் தோறும் நான் எனது தாயாரின் அல்லது பட்டி வீரன் பட்டி உறவினர்களின் பெண்களின் கழுத்தில் இருந்திருந்த தாலி பற்றிய சிந்தனை ஈர்க்கின்றது. வெறுமனே கணவன் மனைவி இருவரது பெயரும் எழுதப் பட்டு  திருமண நாள் என தேதி குறிப்பிடப் பட்டிருந்த தாலிகளின் அடிப்படை குறித்த கேள்வி எழும்பியது. திருமண அடையாளமே  பிராமண அடையாளங்களையும் சமய அடையாளங்களையும் கைக்கொண்டிருந்த போது  அதிலிருந்து மீள்கின்ற ஒன்றாக மத அடையாளங்களை நிராகரிக்கின்ற  ஆணும் பெண்ணுக்குமான உறவின் பாலமாக அந்த தாலி அடையாளம் மாறியிருந்தது கூட ஒரு எதிர்ப்புணர்வுதான் என எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் இன்று பட்டி வீரன் பட்டியில் பல பெண்களின் தாலிகள் ஏதோ மெடல் போல இருப்பதின் காரணம் எதுவும் அறியாமல்  புது பாஷனுக்கு மாறுவதைப் போல  வேறு வடிவ அல்லது மீண்டும்  சமய அடையாளங்களை சுமந்தபடியும்  அய்யரை வைத்து திருமணம் செய்வித்தல் எனவும் மாறிக் கொண்டிருக்கின்றது. ஒரு சுயமரியாதை இயக்கத்தின் அழுத்தமான செயலூக்கங்கள் வெறும் சடங்காகி காலாவதியானதின் வெளிப்பாடு  எனது தாயரின் தாலி போல பெயர்கள் தாங்கி இல்லாது என் தாலி சிவலிங்க வடிவிலும் எனது தம்பி மனைவியின் தாலி  பெயர்கள் தாங்கியபடியும் ஒரு குடும்ப தாலி என்ற வகையில் மட்டும்  இருப்பது
வெறும் உணர்வுகளற்ற அடையாளமாக தாலி மாறிவிட்டது குறித்து எண்ணம் வந்தபோது  எனது தாலியை கழற்றி விட்டு உறவுக்கான உணர்வுகளை மட்டும் பத்திரப் படுத்திக் கொண்டேன்.சிலேட்டில் நேர் கோடு போட்டு எழுதச் சொல்லித் தருவது நேர் வரிசையில் எழுதப் பழகத்தான். பழகிய பின் கோடுகள் அநாவசியமாகின்றன. அடையாளங்கள் அநாவசியமானபின் தாலி தொலைதல் அதிர்வாக இருக்கவில்லை.ஆனால் இது  புரியாது எனச் சுற்றி இருந்த சமூகம்  கேள்வி கேட்டது.
 கட்டிட வேலைக்காக அடமானம் வைச்சிட்டியா எனும் கேள்வி தொடங்கி ”என்ன புரட்சியா?” எனும் நக்கல் வரைக்கும், எவனாவது நாளைக்கு உன்னைப் பார்த்து சின்னப் பொண்ணுன்னு நினைச்சு கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டா என்ன செய்வே?”  எனும் கேள்விகளும் சுழன்று வந்தது.
இவ்வளவு கேள்வி கேட்கின்ற இச்சமூகம்  அந்த அடையாளத்திற்கான புனிதத்தை உணர்வை சரியாக வைத்திருக்கின்றதா? எனும் கேள்வியை நான் கேட்டு விட்டால்  எனைக் கொத்தி தின்று விடக் கூடும்
மார்ச் 15 முதல் 22ம் தேதி வரை முக்தி நாத் செல்லும் ஒரு குழுவோடு பயணம் சென்றிருந்தேன். ஏறக்குறைய 47 பேரில் பெரும்பான்மை 50 வயது கடந்த பெண்கள் நானும் இன்னுமொரு பெண்ணும் மட்டுமே அங்கிருந்தவர்களில் இளையவர்கள். வந்திருந்த எல்லா பெண்களுமே  நான் கழுத்து நிறைய போட்டுட்டு முன்னாடி நடந்தா தான் என் கணவரோட மதிப்பு கூடும் என்றும் என்னுடன் வாக்குவாதம் செய்பவர்கள். 10 சவரனுக்கு குறையாது எப்பவும் தங்கத் தாலி அணிந்திருப்பவர்கள் சிவகாசியோடு இருந்தவரைக்கும் தாலியை எக்காரணம் கொண்டும் கழற்றியறியாத அவர்கள் இந்த பயணத்தில் வெறும் பாசிமணிகளோடு பயணமாயினர் . போகின்ற நேபாள நாடு வறுமை மிகுந்த நாடு அந்த நாட்டிற்கு   அதிக நகையோடு போவது ஆபத்து எனச் சொன்ன வழிகாட்டியின் பயமுறுத்தலுக்கு பயந்து ஒட்டுமொத்தமாக அனைவரும்  தாலியை கழட்டி வைத்து விட்டு வந்திருந்தனர். முன்பெல்லாம் அப்படி கழற்றி வைத்து விட்டு போகும் போதும் மஞ்சக் கயிற்றை அவசியமாக கட்டிக் கொண்டு செல்வார்கள்.  அதுவும் அவசியமற்றுத் தான் இந்த பயணம் அமைந்திருந்தது
இதைப் பார்த்த போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது எனக்கு தெரிந்த  ஒரு அம்மா வயது 55 இருக்கும்  திடீரென ஒரு நாள் தனது நீள முடியை காதுவரை குட்டையாக்கி வெட்டி வந்திருந்தார்கள். எப்படி என்னாயிற்று அழகாயிருக்கே உங்களுக்கு என்றேன்
 ஒரு சின்ன வெட்கமுடன் அழகுக்காக இல்லை. கோவிலுக்கு நேர்ந்து கிட்டு பூ முடி குடுத்தேன் என்றார். பூமுடி என்றால் கொஞ்சூண்டு முடி வெட்டியதோடு நிறுத்தியிறுக்கலாம். ஆனால் அவருக்கு தன் முடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை தனது ஆசையாக வெளிப்படுத்த இருந்த தயக்கம் கடவுள் பேரில் நிகழ்ந்திருக்கின்றது எனபது  தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இவ்வளவு காலம் பிள்ளைகளுக்காக வாழ்ந்து விட்ட வாழ்வை தனக்காக வாழ்ந்து விட நினைக்கும் போதும் அதை ஒளித்துக் கொள்ள வேண்டி வருகின்றதே  என்று நினைக்கும் போது இதழ்களில் சிரிப்பும் உள்ளுக்குள் வலியும் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
ஒட்டு மொத்தமாக இந்த பயணத்தில்  வந்திருந்த அனைத்து பெண்களுக்கும் கழுத்தில் விதவிதமாக  தொலைக்காட்சியில் வர்ணனையாளர்கள் போட்டு வருவது போல் பெரிசு பெரிசாக கடைகளில் வாங்கினார்கள் உடனே உடனே போட்டும் கொண்டார்கள். இதெல்லாம் ஊரிலெல்லாம் போய் போட முடியாதுன்னு  சொல்லிட வேறு செய்தார்கள்.கழட்டி வைக்க முடியாத தாலி என்பதிலிருந்து விட்டு விடுதலையாகி நிற்கின்ற ஆர்வம்  களவு போய் விடும் எனும் காரணத்திற்காகக் காத்திருந்திருக்கின்றது
ஊர் வந்து சேர்ந்தது அடுத்த சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் சிலர் மீண்டும் எழுப்பக் கூடும்  என்னிடம் தாலி எங்கே எனும் கேள்விதனை
இன்னும் இதுபோல எத்தனை உணர்வுதனை பத்திரப்படுத்திக் கொன்டே இருக்கின்றது இப்பெண்கள் உலகம்
இந்த பயணத்தில் எங்களோடு பயணித்திருந்த  பெண்களில் ஒருவர்  தனியாக வந்திருந்தார்.  உற்சாகமாக இளமை மனோபாவமோடு எல்லா இடமும் பயணம் செய்தார் முக்திநாத் கோவிலுக்கு மலை அடியிலிருந்து ஒரு 100 மீட்டர் நடந்து போகவேண்டும் அல்லது நடக்கத் தயங்குபவர்கள் அங்கே பைக் ஓட்டிச் செல்லும் ஆட்களோடு மேலே போய் வரலாம். உண்மையில் தூரம் சிறிதே என்றாலும் கடல்மட்டத்திலிருந்து 12000 அடிஉயரத்திலிருந்த இடத்தின் குளிரும்  ஆக்சிஜன் குறைவால் வருகின்ற மூச்சு வாங்குதலும் நடப்பதற்கு பெருந் தடையாக இருந்தன.
பைக்கில் ஏறி அமர்ந்து உற்சாகமாக அந்த ஓட்டுபவரை கட்டிப் பிடித்துக் கொண்டார்.  கரடு முரடான மலை ஏற்றத்தில் அப்படி போவது தேவையாக இருந்தது. பயண ஏழு நாளும் முடிந்த பிறகு தற்செயலாக தனிமையில் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது அவர் பைக்கில் போனதை நான் படம் பிடித்திருந்ததை எடுத்துக் காண்பித்தேன்.
ஒரு நிமிடம் சலனமற்று அமர்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் துளிர்ப்பதை மெல்ல துடைத்து திலகபாமா என்னுடைய நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறி இருந்திருக்கின்றது என்பதை இந்த படம்தான் உணர்த்துகின்றது அன்று கூட அந்த நிமிடத்தை கடந்து விட வேண்டும் என்பது தான் முந்தி இருந்தது . எத்தனையோ சின்னப் பொண்ணுங்க ஜீன்ஸ் போட்டுக்கிட்டு பைக்கில கட்டிப் பிடிச்சுக்கிட்டு போகும் போது ஆசையா இருக்கும். உனக்குத் தெரியாது என் கணவன் எனது 36 வது வயதில் இறந்து போனார். இந்த போட்டோவைப் பார்த்தா நல்லா  சந்தோசமா இருக்கு. நம்ப கூட டூர்  கைடா வந்த அந்த சின்னப் பையனும் பார்க்க அழகா இருந்தான். நான் தனியா இருந்து ரசிச்சுகிட்டே இருந்தேன். பேச ஆசை ஆனா தயக்கம் அழகா எப்பவும் கையைக் கட்டிகிட்டே இருந்தான் அந்தப் பையன்
இப்படி அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த போது இடைவெட்டாது அந்த கண்களில் வழியும் ஆசையையும் , நிராசையாகிப் போன வலியும் பார்க்கக் கிடைக்க எதுவும் பேசாது கேட்ட படி இருந்தேன்.
பேசாமல் இருப்பதை விட சில விடயங்கள் பேசி முடிக்கும் போது தீர்ந்து விடும். அந்த அம்மாள் பேசித் தீர்த்துக் கொள்ளக் காத்திருந்தேன்
 வாழ்க்கை என்பதை வாழ முடியாமல் போவதை உணர்ந்து விடக் கூட முடியாத சூழலை எப்பவும் தன்னைச் சுற்றி தகவமைத்துக் கொண்டே இருக்கின்றாள் பெண் என்பதை  அந்த அம்மாவின் வார்த்தைகளும் உணர்வுகளும் சொல்லிப் போனது
எனது நண்பர்  வயதான பெண்களுக்கு ஸ்பரிச சுகத்திற்கு ஏங்குகின்ற ஒரு மனது ஆழ்நிலையில் இருக்கும். ஒரு கால கட்டமோடு  அவர்கள் அந்த மனநிலையிலிருந்து நிர்பந்தமாக காலத்தின் சூழ்நிலையில் விலக்கி வைக்கப் படுகின்றார்கள் ஆகவே பாட்டியம்மாக்களை கண்டால் தொட்டுத் தழுவியும் பேசுவது , அன்பை இன்னும் அதிகமாய் வெளிப் படுத்தும் , அவர்களை சந்தோசப் படுத்த இதைக் கூடச் செய்யவில்லையென்றால் எப்படி என்று சொல்லிப் போனது நினைவுக்கு வந்து போனது  அந்த அம்மாவிடம் விடை பெறுகின்ற போது  கை பற்றி  அணைத்துக் கொண்டு  விலகினேன் .
கொஞ்சம்  எனது மனவலி குறைந்தது போல இருந்தது.
அதே போல என்னுடன் வந்திருந்த இன்னுமொரு பெண்மணி சொன்னார் பொதுவாக நீள கம்மல்கள் போடுவதில்லை ஊரில்( சிவகாசியில்) ஆனால் என் பெண் அவளுடைய கம்மல்களைப் பூராவும் கொடுத்து விட்டிருக்கின்றாள்  அதை போட்டுக் கொள்ளச் சொல்லி அதை நான் போட்டிருப்பதை அவள் பார்க்க முடியாதென்பதால் புகைப்படம் எடுத்து வரச் சொல்லியிருக்கின்றாள் என்றார். அவருடைய புகைப்படக் கருவியில் மின்சார இருப்பு தீர்ந்து போயிருந்த போது என்னுடைய புகைப்படக் கருவிலேயே அவரை பல்வேறு கோணங்களில் எடுத்தேன் அவர் போட்டிருந்த நகைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவும். பயணம் முடியும் வரை சந்தோசமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு கிளம்பும் போது  கொஞ்சம் கவலை வந்து விட்டது  என் புகைப்படக் கருவியில் எடுத்த படங்களை அனைவரும் மொத்தமாக சி.டி போட்டு வேண்டும் என்று சொன்னபோது.
திலகபாமா நீங்கள் யாருக்கும் படங்கள் சி. டி கொடுக்கும் போது என்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் அதில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
இன்னும் தனை ஆமையென சுருக்கிக் கொள்ளும் மனோநிலை போகவில்லையே என்று வருத்த மோடு , உங்கள் விருப்பப் படி செய்வேன் கவலைப் படவேண்டாம் என்று சொல்லி விட்டு சிரித்தபடி நகன்றேன். விமானம் எங்களை மதுரையில் தரைஇறக்கி விட்டு விட்டது . முக்திநாத் குளிர் என்னோடு பேசிய விடயங்களை அசை போட்ட படியே உடன்பாடில்லா இந்த பெண்களின் தளத்தில் தரையிறங்க முடியாது தவித்த படியே இருக்கின்றேன் .

posted by Thilagabama m @ 4/28/2012 10:32:00 am  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates