சூரியாள்

Tuesday, May 01, 2012
காரைக்கால் அம்மையார்களும், கல்பனா சாவ்லாக்களூம் 7
7,முன் குறிப்பு:- இனி பாவையர் மலரில் என் தொடர் வராது. தொடரின் ஏழாவது பகுதியை பாவையர் மலருக்கு அனுப்பியிருந்தேன் அதிலிருந்த சில கருத்துக்கள் உடன்பாடு என்ற போதும், அவரது பத்திரிக்கைக்கு உதவும் நண்பர்களை பாதிக்கும் என்று அபிப்பிராயப் பட்டதால் வேறு கட்டுரை எழுதித் தர முடியுமா என்று கேட்டார்.   ஏற்கவும் நிராகரிக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு கட்டுரை நிராகரிக்கப் படுகின்ற பட்சத்தில் அதன் தொடரை தொடர்ந்து எழுதித் தர என்னாலும் முடியாது என்பது எனது பதிலாக அமைந்தது. எழுத நினைத்தவற்றை நிறுத்தப் போவதில்லை. தொடர் எனது வலைத் தளத்தில் தொடர்ந்து வெளிவரும்

இந்த தொடரில் உங்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லப் போகின்றேன். நிஜங்களைப் பற்றி பேசிக் கொண்டு வந்த எனக்கு ஏன் கதை சொல்லும் ஆசை என்றுதானே கேட்கின்றீர்கள். கதைகள் நம் நிஜங்களின் நிகழின்  வாசிப்பை தீர்மானிக்கின்றன.  பெண்ணின் வெற்றியை அவளின் வெற்றியாக வாசிக்க விடாது  கதைகள் அவற்றை ஆணை நம்பிய அவளின் வாழ்வாகவும், அல்லது அவளின் தோல்வியாகவும் இதுவரை இருந்த பழகிய வாசிப்புக்கு உள்ளாக்குகின்றது . எனவே கதைகளை கவனமாக வாசித்தல் அவசியம். ஒவ்வொரு கதைக்கும் பல வாசல்கள் உண்டு. இக்கதை ஒரு நிகழ்வில் சொல்லப் பட்ட விதத்திலேயே உங்களிடமும் பகிரப் படுகின்றது பின்னாடியே எனது கேள்விகளுடனும், கதை என்னுடையது அல்ல
ஒரு புதிதாக திருமணமான தம்பதியினர் இருந்தார்களாம் அவர்களில் மனைவி ஆன்மீகவாதி கணவன்  நாத்தகவாதி. மனைவி ஒரு நாள் கணவனிடம் கோவிலுக்குச் சென்று வர சம்மதம் கேட்கின்றாராம். என்னுடைய கொள்கை என்னவென்று உனக்குத் தெரியும் அப்படியிருக்க எப்படிக் கேட்கலாம் என்று கொதிக்கிறாராம்.உடனே புது மனைவி வெட்கப் பட. அவர் சம்மதிக்கின்றார் போய் வர.
 கோவிலுக்கு சென்று வந்த மனைவி அழுகையோடு வருகின்றாள் ஏன் என்றுகணவன்  கேட்க
 எல்லாப் பெண்களும் ஜோடி ஜோடியாக வந்த போது தான் மட்டும் தனித்து போனதால் இரண்டு வாலிபப் பசங்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள் அவமானமாக இருந்தது .என்று சொல்லி அழ
மறுநாளும் கோவிலுக்கு கிளம்பும் அந்தப் பெண் இன்று அவர் அனுமதியை மட்டுமன்றி அவர் உடன் வந்தால் கேலியிலிருந்து தப்பிக்கலாம் என்று கோருகின்றாராம்.
உடனே புது மனைவியின் கோரிக்கையை நிறைவேற்ற  உடன் கிளம்பி போகின்றார்.கோவில் வாசல் வந்தவுடன்  மனைவி தனது செருப்பை அவர் முன்னாடி கழட்டி வைத்து விட்டு செல்ல முனைய கணவன் என்னம்மா என்னை செருப்பு பார்த்துக்கிட வைச்சிட்ட? என்று கேட்கின்றார், நீங்க பார்த்துக்கிட்டா 25 காசு மிச்சம்ன்னு  அவள் சொல்ல அவர் சம்மதிக்கின்றார். உள்ளே மனைவி போய் விட  வெளியே இருந்த சில ஆண்கள் அவர் முன்னாலிருந்த செருப்பை பார்த்து தாங்களும் அது போல  அவர்முன்னாடி போட்டு விட்டு போக அவர் என்ன செருப்பை இங்கே போடுறீங்க  நான் பார்த்துக்கொள்கின்ற ஆளில்லைங்க என்று சொல்கின்றார். அதற்கு அவர்கள் பொண்ணு செருப்புன்னா  பார்த்துக்குவீங்களோ என்று கேட்க வெட்கத்தினால் வருத்தப் படுகின்றான் கணவன்
வருத்தப் படும் அவரைக் கண்டு மனைவி சொல்லுகின்றாள்.நாளையிலிருந்து வாசலில் நிற்கவேண்டாம் நீங்கள் உள்ளே வந்து சாமி கும்பிடாமல் நின்று கொள்ளலாம் என்று யோசனை சொல்ல மனிதர் உடன்படுகின்றார்.
அடுத்தநாள் அதே போல் மறுபடியும் கிளம்புகின்றனர் கோவிலுக்கு
இந்த முறை வாசலில் நிற்காது  மனைவியோடவே அவரும் கோவிலுக்குள் சென்று நிற்க ஆரத்தி காண்பிக்கும் நேரத்தில் எல்லாரும் கையெடுத்துக் கும்பிட  , மனைவி அவரிடம் எல்லாரும் ஒரு மாதிரி பார்க்குறாங்க நீங்க சும்மா நின்னா, ஆகையினால் கைகளை கூப்ப மட்டும் செய்யுங்கள் என்று சொல்கின்றாராம். கை கூப்பிய கணவருக்கு  கும்பிடாமல் இருக்க முடியாமல் போனதாம் இப்படியாக ஆன்மீக நாட்டத்துள் எப்படி பெண் அன்பால் தன் கணவரை கொண்டு வந்தாள் என்று பேசினார் ஒரு மிகப் பெரிய பேச்சாளர்
அன்பினால் வெவ்வேறு  சிந்தனை போக்கில் உள்ளவர்களும் இணைந்தனர். என்று

இக்கதையில் மேலோட்டமாகப் பார்த்தோமானால் பெண் ஆணை ஆக்கிரமித்து விடுவதாகத் தோன்றும்
உண்மையில் இக்கதையினூடாக சொல்லப் படாமல் நம் உள்ளத்தில் திணிக்கப் படும் கருத்துக்களாவன
·         தான் விரும்புகின்ற ஆன்மீக வாழ்வை நடத்த அனுமதியை கணவனிடம் பெற்றுத்தான் தொடரமுடியுமா? கணவனுக்கு அப்படியான தேவை ஒரு போதும் எழவில்லையே
·         பெண் சோடியாகத்தான் கோவிலுக்கு போகலாம் ,தனியாகப் போனால் அவமானம்,
·         ஆண்கள் பெண்ணை  கேலி பேசுவது  பெண்களுக்கு அவமானம்
·         பெண்ணுடைய செருப்பை காவல் காப்பது ஆணுக்கு அவமானம்
·         கணவன் தன் மனைவி மேல் உள்ள பிரியத்தினால் கோவிலுக்கு உடன் வரவில்லை மனைவி தனக்கானவள் அவளை பிற ஆண் கேலி செய்கின்றான் தன் உடமைப் பொருள் பறிபோகுமோ என்கின்ற பயத்தில் காவலுக்காகவே கூடவே வருவதற்காகவே கிளம்புகின்றான்
·         பெண்ணும் அவனது ஆண் மனத்தை சீண்டி விட்டு விட்டேதான் தன் விருப்பத்தைச் சாதிக்கின்றாள்
தன் நியாய பலத்தில் விருப்பத்தைப்பேசவும் செயலாற்றவும் வாய்க்கக்  கூடிய  வாழ்வுதான் விடுதலையும் சமாதானமுமான வாழ்வு என்று இக்கதை சொல்பவர்களுக்கு எப்பொழுது புரியப் போகின்றது.
இக்கதையில் சொல்லப் படுகின்ற 25 பைசா என்பது எவ்வளவு கால கட்டமாக மாறாது இக்கதை ஒரே தொணியில் சொல்லப் பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதை புலனாக்கும்
எல்லாக் கதையாடல்களும் இன்றைக்கு  ஆண்மைய வாதத்தை எங்கெல்லாம் கொண்டிருக்கின்றது என்பதை மறுவாசிப்பு செய்ய வேண்டிய இடத்தில் இருக்கின்ற அரசியல் கலைஇலக்கிய முற்போக்காளர்கள் தட்டையான வாசிப்புக்கு தானும் ஆளாகி தன் பேச்சில் கிறங்கும் கூட்டத்தையும் ஆளாக்குவது எவ்வளவு அபத்தமானது என்பதை யோசிக்க வேண்டும்

இன்னொமொரு முக்கிய விசயம், ஒவ்வொரு கூட்டங்களிலும் பெண் பற்றிய உரையாடல்கள் நிகழ்கின்ற போதெல்லாம்  யாராவது ஒருவர் தப்பித் தவறி திலகபாமா( என்னை மட்டும் சொல்ல வில்லை, பத்திரிக்கை  ஆசிரியரையும் சேர்த்து தான் சொன்னார்கள், ஆனால் நான் என்னுடைய விசயத்திற்கே பதிலளிக்க முடியும்) போன்ற பெண்கள்  முன்னுக்கு வர உதவிய அவரது கணவருக்கும் எனது நன்றிகள் என்று சொல்லி விடுகின்ற போது  கவனமோடு அதை மறுத்து விட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றேன்.
சமீபத்தில் நடந்த கூட்டத்திலும் நடந்தது வீட்டில் ஒரு பெண் என்பவள் தன் வேலைகளை முடித்து விட்டு, அதன் பிறகு கணவனுக்கான வேலைகளையும்  செய்து முடிப்பதை கடமையாக வாசித்து விடும் நாம்,  ஒரு பெண் தன் குடும்ப வேலையையும் பார்த்து தனது ஆத்மார்த்த வேலைகளையும் , அதாவது என்னைப் போல் இலக்கிய கூட்டங்களுக்கு , இலக்கியத்திற்கு என நான் உழைத்து வெளியேறுவதையும் அனுமதிக்கும் கணவன் என்ற ஒரு பொருளிலேயே அதைகணவன் மனைவிக்கு செய்யும் உதவியாக்கி போய் விடுவது அபத்தம் இல்லையா,
என்  உழைப்பின் பெருமதிப்பை  யாருக்கும்  தாரை வார்க்கத் தயாராக இல்லை என்று நான் பேசி விட்டு அமர்ந்த போது அருகில் இருந்த பெரிய   திரைப்பட இயக்குநர் என் காதோரமாக கேட்டார்
ஏன் உன் வீட்டுக்காரன் ரொம்ப  சேட்டை பண்ணுவானா?
என் உழைப்புக்கான மதிப்பை நான் ஏன் பிறர்க்கு சமர்ப்பணம் பண்ணனும் என்ற என் பெருமிதமான கேள்வியை , உன் வீட்டுக்காரன் சரியில்லையா என்று கேட்டு தோல்வியாக வாசித்து விடும், இந்த மனோ நிலையை என்னவென்று சொல்வது
பெண் வெற்றியடைந்தால் அது ஆணின் பரிசாக இருக்க வேண்டும் அல்லது ஆண் தவறு செய்து விட்டாலும் பெண்ணின் கவனமின்மையாகவும் மாற்றி விடும் வாசிப்பு , எப்பவும் பெண் திறமானசெயல் பாட்டோடு இயங்க நினைத்துப் பார்த்து விட கூடாதவளாகவும்,இயங்கிய போதும் அவளது வெற்றிக்கு அவள்காரணமல்ல என்று தன்னடக்கத் தோடு தாரை வார்க்கவும் பழக்கி விடுகின்றது சமூகம், அவளும் அதோடு பழகிப் போய் விடுகின்றாள்.
இது மாற்றி யோசிக்க வேண்டிய தருணம், பெண்கள் தங்களது வெற்றிகளால் நினைவு கூறப் படவேண்டும்.காரைக்கால் அம்மையாரையும் கல்பனா சாவ்லாவையும் வாழும் போது நினைவு கூர்ந்து வரலாறாக்க வேண்டியது  அதற்கு முதலில் தன்னை உணர்ந்து செயல்பட வேண்டியது பெண்களின் கடமை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் அவர்கள் இருவரும் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள் அடையாளம் காண்பதற்கு பெண்களின் கண்களும் , பெண்களை உணரும் ஆண்களும் அவசியம் 
posted by mathibama.blogspot.com @ 5/01/2012 07:48:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates