சூரியாள்

Tuesday, October 08, 2013
சிறுகதை

கன்னி சாபம்

திலகபாமா
இரவு மணி 8.30 வீட்டில் மனைவி  மகன் , மகளுக்கான வேலைகள் சூழ்ந்து இருந்த போதும்  தனக்கான வேலைகள் முடிந்து விட்டது என முடிவுக்கு வந்து விட்டான் பார்த்திபன். மாத்திரைகளைக் கையில் எடுத்தான் ஒவ்வொரு இரவும் சாப்பிட வேண்டிய  சர்க்கரை பிரஷருக்கான மாத்திரைகள்  அதில் ஒரு மாத்திரையை அரை மாத்திரையாக்கிப் போட்டால் பதினைந்து நாள் மாத்திரைகளை 30 நாட்களுக்குச் சாப்பிடலாம் . யோசனை வரவும் மனைவி கமலா பார்க்கிறாளா  என்று  திரும்பி சமையக் கட்டுக்குள் பார்த்தான். மனைவி அடுப்படியிலும் மகன் மகள் கவனம் படிப்பு மற்றும் தொலைக் காட்சிகளிலும் இருக்க ஒரு மாத்திரையை  சடக்கென்று  ஒடித்து  பாதியை மட்டும் வாயில் போட்டு விடுகின்றான் . மனைவியில் குரல் அடுப்படியிலிருந்து வந்தது  ”மாத்திரையை சரியா போடுங்க மிச்சப் படுத்திறேன்னு குறைச்சிடாதீங்க”
குரலை அலட்சியப் படுத்தி படுக்கையை விரித்து விளக்கை அணைத்தான்

இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனுக்கான அமைதியான உலகு தாலாட்டத் தொடங்கிவிடும்
மகள் படித்து முடித்து சென்னையில் வேலை செய்யத் தொடங்கியிருந்தாள். விடுமுறை சனி ஞாயிறென்று வீடு வந்திருந்தாள்..
கமலா அடுப்படியில் வேலைகள் முடித்து படுக்கப் போய் விட்ட கணவனின் அறைக்குள் புகுந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். அதற்குத் தானா உள் வந்தாள்?
 இல்லை. எப்பவாவது கணவனாக , தன்னை காதலியாக எதிர் நோக்கி காத்திருக்க மாட்டானா என்று எழும் நப்பாசையில் பத்து வருட  ஒவ்வொரு இரவிலும் தீராது தேடுவது போலவே இன்றும் தேடினாள். ஆரம்பத்தில் தாம்பத்யம் குழந்தைப் பேறுக்கான  கடமையாக நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருந்தது இரு குழந்தைகள் பிறப்புக்குப் பின்னர் மறந்தே போயிருந்தது.
தினமும் கிடைக்காது போனாலும் பிள்ளைகள் முகங்களுக்காக நம்பிக்கை ஈரம் வைத்து இரவில் உலர்ந்து போவதன் வலியை தானே தன் வாலை விழுங்கி பசி தீர்த்து விடும் பாம்பாய் மாறிக் கொண்டிருந்தாள்..
ஒவ்வொரு இரவும் பார்த்திபனின் பெற்றோர்கள் அவளின் மாமியார் மாமனார் நினைவுக்கு வந்தார்கள். தன் வேலை தவிர வேறெதுவும் நினைக்காதவன் , தன் வேலையில் கொஞ்சமும் உறங்காதவன் என்று பெருமை பேசிப் போகும் போதும் ஆமாமா என்று வாய் பேச, மனம் சொல்ல முடியாமல் கருகியது.
 அலுவலகம் பணி மட்டும் தானா மனிதனின் பொறுப்பு  அப்படி என்றால் அவனது அலுவலக கணிணிக்கும் அவனுக்கும் என்ன வேறுபாடு.

காலையில் தொடங்கிய  கணிணி  மாலை 5 மணிக்கு shut down செய்யப் படுவது போல வாழும் பார்த்திபன், சூழ இருந்த உறவுகள் நமக்காக வேலை செய்ய வேண்டியவர்கள் நாம் அலுவலக பணி செய்ய வேண்டியவன் என்று மிக இளம் வயதிலேயே மூளையில் பதியப் பட்டவனாக  இருந்தான். அது தவிர சூழல்களுக்கு ஏற்ப மாறும் திறன் இல்லாததாலும் மனவியின் ஆசாபாசங்களை சீந்தவும் முடியாமல் போயிருக்க உறங்கிக் கிடந்த அறையின் இருட்டை  விளக்கை போட்டு பார்த்து விட்டு வேறு வழியேதும் இல்லாதது கண்டு வெளியேறினாள்

மகளின் தொலைக் காட்சிக்கும் மகனின் படிப்புக்கும் விழித்திருந்த மனதை தொலைத்து விட்டு உறக்கம் சூழ்கின்ற போது படுக்கையில் சுருண்டு கொண்டாள். அலை அலையாய் கரங்கள் வந்து அணைத்துக் கொண்டிருக்க  அதன் சுகத்தில் உடலில் சூடுபரவ , உடல் சூடற்ற தலையணையின் சில்லிப்பில் அந்த தன் உடல் சூட்டின் எதிர் இணைவாக மூளையில் எல்லாமே இயல்பு மீறி சுக உணர்வாய் இருக்க அந்த உணர்வை நாக்கில் பத்திரப் படுத்திச் சுவைத்தபடி  உறங்கிப் போனாள்.
அடுத்தநாள்
மூத்தவள் மகளின் வரன் எதுவும் சரியாகத் தகையாமல்  தட்டிப் போய்க் கொண்டே இருந்தது .பாண்டி கவலைப் படத் துவங்கினான். கமலா அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.  பரவாயில்லையே மகள் 27 வயதுக்கப்புறமும் உண்ர்வுகளை அடக்கி கன்னி கழியாது இருக்கிறாளே .என்ற கவலை தகப்பனானதும் வரத்  துவங்கி விட்டதே. மகள் என்று வந்து விட்ட பிறகாவது பெண்ணின் உணர்வுகளுக்காக கவலைப் படுகிறானே. பத்து வருடம் முன்பு அவள் ( அவனுக்கு தொலைதல் இல்லையோ) தொலைத்து விட்ட தாம்பத்ய  வாழ்க்கை , மனைவி தானே என்று கடந்து விட்ட போதும் மகள் என்றவுடன் பெருங்கவலையாய் அவனுள் உருவெடுப்பது, தந்த மகிழ்ச்சி மகள் திருமணம் தடையாய் இருக்கிறதே என்ற கவலையைத் தாண்டியும் உருவாகுவதைத் தவிர்க்க முடியவில்லை.
 அறிவு சொல்லியா உணர்வு அடங்குகின்றது.
பார்த்திபன் புதிய மாத்திரைகளைக் கையில் பொறுக்கிய வண்ணம் “ அவளுக்கு கல்யாணம் முடிஞ்சா என் தகப்பன் கடமை முடிஞ்சிடும்னு பார்த்தா அது முடிய வழியில்லையே. இன்னும் நாலு புரோக்கரிடம் சொல்லி வைக்கனும். ஜாதகத்தை முடிஞ்சா மாற்றி எழுதிட முடியுமான்னு பார்க்கனும் அவ கல்யாணம் சீக்கிரமா முடிஞ்சிட்டா என் கடமை முடிச்சிடும்
யாரை நோக்கியும் இல்லாது தனக்காகவும். அதே நேரம் கமலாக்காகவும் அவன் பேசிக் கொண்டே இருந்தான்
பார்த்தியின்  மிகச் சிறிய இந்த  உரையாடலில் கடலுக்குள் யாரும் பார்க்க முடியாது நிகழ்ந்து விட்ட  நிலத்திட்டு பெயரலாய்  அவள் மனம் பெயர்ந்து ஆழப் போக  பேரலைகள் அதில் வஞ்சகத்தோடு எழுந்தன
“.பாவி மனுசா அப்பவும் உன் வேலை முடியவில்லையென்றுதான் கவலைப் படுறியா, பிள்ளை இந்த வயசு வரை சுகங்களை அனுபவிக்காம  இறுக்கமா  இறுக்க வேண்டி இருக்கேன்னு நான் கவலைப்பட்ட மாதிரி கவலைப் படலையா”
மனம் ஓலமிட்ட போதும் வார்த்தைகளில் கொட்டவில்லை.
அது சரி அதுக்கான கவலை வந்திடுச்சுன்னாலே என்னைப் பற்றியும் கவலைப் பட்டிருப்பியே….பத்துவருடமாக புரியாத பார்த்திபனுக்கு இனித் தானா புரியப் போகின்றது.  
மாலை ஜோசியரிடம் போய்க் கேட்போம் அம்மா வரேன்னு சொல்லியிருக்காங்க நீயும் கிளம்பிரு என்று சொல்லி அலுவலகம் போன பார்த்தி
மாலை 6 மணிக்குத் தான் வந்தான். கமலா, கூட தன் அம்மாவோடு ஜோசியரின் வீட்டுக்குப் போக  அவர் விரல்களின் கூட்டல் பஞ்சாங்கங்களின் பிரட்டலுக்கு அப்புறமாகச்  சொன்னார்.
இது அப்பா வழி பெண் தோசம் ஒன்று எரிந்து கொண்டேயிருக்கு

பார்த்தியின் அம்மா,
“ எல்லாம் அம்மா பேச்சு பொண்ணாடாட்டி சொல்  கேட்கின்ற பசங்க  அவங்க அப்பாவும் அப்படித்தான்  பெண் தோசம் எப்படி வரும் ஐயா என்று புலம்ப,”
மீண்டும் கமலாவின் மனம் உரத்துப் பேசிற்று
சரியாகத் தான் சொல்லுகிறார் ஜோசியர் பெண்  பாவங்கள் சூழ்ந்த குடும்பம் தானே இது கடமைகளை செய்கின்ற உங்க பிள்ளைகளுக்கு  காதலின் உணர்வுகளை பூர்த்தி செய்கின்ற கடமை கண்ணுக்குத் தெரியாம போகின்ற வரைக்கும் பெண் தோசம்   தீராமல் தொடரும். மனதில் அலை அடிக்க மூழ்கியபடி சொல்லிக் கொண்டே இருந்தாள்
 ”இது ஒரு பிறவித் தோசம்” என்ற ஜோசியர் உற்று அவளை ஆர்ப்பரித்து முழுங்க தானும் கூட  பிறவிக் கால தாபங்களோடு காத்திருப்பதாய் உணர்ந்தாள்
ஏழு கன்னிமார் கோவிலுக்கு பூஜை பண்ணுங்க, பொங்கல் வச்சு படையல் போடுங்க  என்று சொல்ல பார்த்திபன் பொங்கல் வைக்க அரிசி வெல்லம் வாங்கிப் போட பாய் கடை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அவனது கடமை முடிக்க
ஒவ்வொரு பிறவியிலும் கல்லாய் போன தன் சிலைகளுக்கு தானே பொங்கல் வைக்கனுமா எனச் சிரித்தபடி வெளியேறி வந்தாள்
பிறவிச் சாபம் தன் பையனையும் தொடருமா, அவனையாவது தான் கன்னி தெய்வமாய் இருந்த பொழுதில் காதலில் வாழ ஆசீர்வதித்து விட வேண்டும் என்று நினைத்திட்ட போது, மகிழ்கின்ற தெய்வம் தானே ஆசீர்வதிக்கும் தான் மகிழ்ந்து நெகிழ்ந்து வரமருள்கின்ற நேரம் வாய்க்குமா , அல்லது கல்லாய் தானுமாகி பொங்கல் வைக்கின்றவர்களுக்குத் தான் வரமருளனுமா?

சாத்தியங்கள் சாத்தியமின்மைகலூக்கு அப்பால் வாழ்வு நகன்றபடியே இருக்கின்றது கன்னித் தெய்வங்களுக்கு பரிகாரங்கள் செய்தபடியே

நன்றி தினமலர்
posted by Thilagabama m @ 10/08/2013 07:27:00 am  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates