சூரியாள்

Monday, November 11, 2013
பேச மறந்த குறிப்புகள்
               பேச மறந்த குறிப்புகள்
         அமெரிக்கன் கல்லூரியில் 4.9.13 அன்று தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் “ பெண் கவிதை வெளி” என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தனர். வேறு யார் பேசுகிறார்கள் என்ற போது ந. முருகேச பாண்டியன் பேசுகிறார் என்றார்கள். நல்லவிசயம் தான் மாற்று கருத்துக்கள் இரு பக்கமும் பதிவு செய்வது அவசியம், மாணவர்கள் தங்களது காலத்திற்கும் தேவைக்குமான விசயத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று சொன்னேன்.
         மாணவர்களும், கொஞ்சமாக மாணவிகளும் அமர்ந்திருந்தனர். முதலில் எனை உரை ஆற்ற  அழைத்தார் தலைமைப் பொறுப்பிலிருந்த பேராசிரியர்.
   பெண் கவிஞர்கள் இன்று என்ற தலைப்பில் என் உரை, சில உண்மைச் சம்பவங்களின் சாட்சியங்களோடு முன்வைக்கப்பட்டது. இன்றைய கவிஞர்களின் கவிதைகளின் வாசிப்பில் அடிப்படையில் அதன் இயங்குதளம் எப்படி இருக்கின்றது. அதில் புதிய மொழிகளோடு வலம் வருபவர்களின் கவிதைகளின் பாதை எது என்பதாக என் உரை இருந்தது. நான் ரசித்த கவிதைகள் அதன் இயங்கு தளம்,பேசப் படாத கவிஞர்களின்  கவிதைகள் எனவும்,புகழ் அடைந்ததினாலேயே ஒரு படைப்பு சிறப்பானதொன்றாக அமைந்து விடுவதில்லை எனவும் பெண் உடல் மொழி குறித்த போக்குகளையும் சொல்லி எனக்கு அதில் உடன்பாடில்லை என்பதற்கான காரணங்களோடு முடிந்தது உரை. நேரம் ஆகிவிட்டது என்பதை பேராசிரியர்கள் குறிப்புணர்த்த அத்துடன் நிறைவு செய்து கொண்டேன் உரையை.
      அடுத்து பேசவந்த முருகேச பாண்டியன் பெண் கவிதைகளின் தொடக்கத்தை ஒளவை, ஆண்டாளிலிருந்து தொடங்கினார். இன்றைய பெண் கவிஞர்களின் உடல்மொழி அந்த மரபின் தொடர்ச்சியே என்றும் வெள்ளிவீதியார் எழுதியதைத்தான் இவர்களும் எழுதுகிறார்கள். உடன்போக்கு, திருமணத்திற்குப் முன்னும் பின்னுமான உறவு இதை களமாக வைத்துக் கொண்டிருந்த தமிழ்ச்சமூகம் இப்பொழுது காதலைக் கூட அனுமதிக்கவில்லை எனவும் வருத்தப்பட்டார்.
   கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா எனப் பாடல் எழுதிய சினேகன் பெண் கவிஞர்களை எரிக்கப் போவதாக பேட்டி கொடுத்ததை நையாண்டி செய்தார். உலக இலக்கியத்தை கொஞ்சம் படித்திருப்பதால் இந்த இலக்கிய போக்கின் நியாயத்தை புரிந்து கொள்ள முடிந்ததாய் பேசினார். பெண்ணை தீட்டாக நினைப்பதற்கு மாற்றாக தூமை பற்றி கவிதை எழுதிய புரட்சி கவிஞர்களைப் பாராட்டிய போதும், சிறந்த கவிதைகளாக வாசிக்க தேர்ந்தெடுத்த 3 கவிதைகளிலும் புரட்சி வார்த்தைகள் இல்லாத கவிதையாய் தேர்ந்தெடுத்து வாசித்தார்.
  ஒட்டு மொத்தமாக பெண் உடல் மொழிக் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பது மட்டுமே ஒரே போக்கு என்பதாய் அதற்கு மாற்று கருத்துக்களோடு கவிதை எழுதுபவர்களை நிராகரித்து பேசி முடித்தார்.
( அங்கிருந்த மாணவ மாணவிகளுக்கு உடல்மொழி குறித்த விசயங்கள் இதுவரை போய் சேரவேயில்லை)
       அவ்வளவும் ஆணாதிக்கத்தால் நிரம்பி வழிகின்றது உலகம் என்பதாயும் பெண்கள் உடலை எழுதுவதாலேயே அதை அழித்து நிலை நிறுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லிப் போனார்.
        பாடலாசிரியர் சினேகன் எங்கள் கண்ணுக்குத் தெரிந்த ஆபத்து என்றால் முருகேச பாண்டியன் போன்ற விமரிசகர்கள் கண்களுக்கு புலனாகாத ஆபத்துகள். இவர் பட்டியலில் உடல் மொழி எழுதாத கவிதைகளில் தப்பித்தது தமிழிச்சி  தங்கப்பாண்டியன் மட்டுமே அது தமிழிச்சியின் கவிதை தந்த கம்பீரம். வாழ்த்துக்கள். சினேகன் உடல் மொழி பெண் கவிஞர்களை எரிப்பேன் என்றார்
 முருகேச பாண்டியன் போன்ற விமரிசகர்கள் ஏனைய மற்ற பெண் கவிஞர்களின் எல்லா தடங்களையும் எரிக்காமலேயே மறைத்து  விடுகிறார்களே அது நியாயமா.
         தலித் பெண் எழுத்துக்கள் உடல் மொழிக் கவிதைகளை அதிக   காத்திரமாக எழுதுவதாகச் சொன்னார்.
 குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத்தில் 2 நாள் நடந்த திராவிடக் கவிஞர்கள் கூட்டத்தில் தெலுங்கு மொழிக் கவிஞரான சுபத்ரா அவர்களுடன் உரையாடிய போது மேல் தட்டுவர்க்கப் பெண்கள் தான்  எங்கள் பகுதியில் உடல் மொழிக் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கின்றனர். தலித் பெண்களான எங்களுக்கு அதைவிட அதிகமான கவனத்தில் கொள்ள வேண்டிய முதலில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இருக்கின்றன என்றார்.
       உலக இலக்கியங்களை வாசிக்கும் விமரிசகர் முருகேச பாண்டியன் கொஞ்சம் அக்கம் பக்கம் பிரதேச எழுத்தாளர்கள் பேசுவதையும் கேட்கட்டும். கோட்பாடு இசங்களின் பின்னால் எழுத்தும் எழுத்தாளர்களும் பயணிப்பதை விட்டு, கொஞ்சம் மனிதர்களின் உணர்வுகளையும் , பிரச்சனைகளையும் கவனிக்கட்டும்.
         யோனி, முலை, தூமை இந்த மூன்றில் எதாவதோரு வார்த்தை இருந்தால் மட்டுமே உடல் மொழி கவிதைகள், என்ற சூத்திரத்தை ஜெபித்துக் கொண்டு, விமரிசிக்கத் தொடங்குவது தான் இங்கே நிகழ்கின்ற அபத்தம். பாலியல் விசயங்கள், வேட்கைக் குறித்துப் பேசக் கூடாதென்பதல்ல, அதை எப்படி, எந்த இடத்தில் பேசவேண்டும் என்பதிலேயே அதன் வெற்றியும் தோல்வியும் இருக்கின்றது. என்னுடைய வரையறைக்கு பதில் சொல்ல வேண்டாம். வாழ்வியலின் வரையறைக்கு பதில் சொல்லட்டும் இந்த வார்த்தைகள் இல்லாமல் பாலியல் சிக்கல்களை வாழ்வியலோடு பேசுகின்ற  படைப்புகளை  அது நிஜமாகவே காத்திரமாக இருப்பதால் கண்டு கொள்ளாமல் போகும் விமரிசகர்கள், பொய் கடி கடிக்கும்,  ”தீவிரவாதப் பெண்ணியம்” என  லேபிள் குத்திய படைப்புகளை மட்டுமே பெண்ணியக் கவிதைகளாக பிரகடனம் செய்து வருகின்றார்கள்.

             முருகேச பாண்டியன் பேச்சை முடித்து அமரும் போது அடுத்தது மாணவர்களின் கேள்விக்கான நேரம் என பேராசிரியர்கள் சொன்னதும் நான் எனக்கு 2 நிமிடம் வழங்குமாறு கேட்டேன். முருகேச பாண்டியன் இல்லை இது மாணவர்களுக்கான நேரம் உங்களுக்கு தர முடியாது என மறுத்தார். அதை நிராகரித்து சில மாற்று கருத்துக்களை பதிவு செய்வது அவசியம் என்று சொன்னேன்.
என் உரையில் இரண்டு நாளைக்கு முந்தைய தினமலரில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானவர்களின் 78% பேர் நண்பர்களும், காதலர்களும் என்று ஆய்வு சொல்கிறது என வெளியானது
         வேண்டாதவர்களை விட எங்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களிடம்தான் ரொம்ப கவனமாக இருக்க வேண்டியிருக்கின்றது.அன்பின் பேரால் நடக்கின்ற ஒடுக்குமுறையைத்தான் அடையாளம் காண முடியாமலேயே அனுமதிக்கின்ற ஆபத்தை செய்கின்றோம்.
       பாலியல் சுதந்திரம் பற்றி பேசுகின்ற இலக்கிய வாதிகள்தான் பெண் கவிஞர்களிடம் அவர்களது பாலியல் தெரிவு பற்றிய சுதந்திரத்தை கேலி செய்து, தோளில் கை போடுபவர்களாக இருக்கின்றார்கள்.
      தன் தவற்றை எல்லாரும் குறை சொல்லாமல் இருக்க வேண்டுமானால் எல்லாறையும் அத்தவற்றை செய்ய வைத்துவிடு என்ற தாரக மந்திரத்தை கடைப்பிடிப்பவர்களாக சிற்றிலக்கியவாதிகள் பெண்களை பயன்படுத்திக் கொள்வதற்கு சுதந்திரம் என்ற கட்டுப்பாடற்ற வாழ்வை போதிக்கிறவர்களாக இருக்கின்றார்கள்.
 உடல் மொழி கவிஞர்கள் வெள்ளிவீதியார், ஆண்டாள் போன்று மரபு வழியில் எழுதுகின்ற கவிஞர்கள் என்கின்றார் முருகேச பாண்டியன்.
மரபுகளை உடைக்கின்ற  நவீனப் படைப்பாளிகளாய் பிரகனடப் படுத்திக் கொள்ளும் உடல் மொழிக் கவிஞர்கள் இதை அறிந்தால் சண்டைக்கு வர மாட்டார்களா? அவ்வளவு பழமையான சிந்தனையோடவா இன்றைய கவிஞர்கள் இருக்கின்றார்கள்.  

        உடல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுகின்ற போது கூட ஒரு ஆளை நோக்கி குற்றம் காட்டிவிட முடிகிறது. அதே நேரம் இந்த ஆணாதிக்க சமூகத்தால் உணர்வு ரீதியாக சிதைக்கப்படுவதன் பாதிப்பு அதிகம்  பேசப்படாமல் இருக்கத்தான். உடல் உடல் என்று பேச வைத்துக் கொண்டிருக்கிறது பெண் எழுத்தை வியாபார பொருளாக்கி இருக்கின்ற இலக்கிய உலகு.
  சாலையில் என் மேல் இடித்து விட்டு போகிறவனை நான் கை நீட்டி குற்றஞ் காட்டிவிட முடியும், அதே நேரம் எனைச் சீண்டி வேஷ்டியை அவிழ்த்துக் கட்டும் ஆணின் மேல் எந்த வித குற்றச்சாட்டும் வைக்கமுடியாமல் உணர்வு சிதைவுறுவதை பார்த்து மகிழும் சமூகமாகவே இருக்கிறது என்பதை சொல்ல விடாமல் இருக்கவே முருகேச பாண்டியன் போன்ற ஆட்கள் உடல் மொழி எழுத்துக்களை ஆதரித்த வண்ணம் இருக்கின்றனர்.
     இப்படியாக என் குற்றச்சாட்டை நான் சொல்லவும் உணர்ச்சிவசப்பட்டு முருகேச பாண்டியன் அப்பொழுதுதான் தனது முத்தான வாதத்தை உதிர்த்தார். இப்படி ஆபாசமாகவும், அருவருப்பாகவும் திலகபாமா பேசுவதை கண்டிக்கிறேன் என்றவர்,
     முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் உருவாவதற்கு எத்தனையோ ஆண்களின் உதவிதான் காரணம் என்றாரே பார்க்கலாம். உதவிய ஆண்கள் இல்லையென்றால் முத்துலட்சுமி ரெட்டி வந்திருக்கவே முடியாதாம்
“ அப்ப இத்தனை ஆண்களும் சேர்ந்து ஆளுக்கொரு முத்துலட்சுமி ரெட்டியை கொண்டு வந்திருக்கலாமே. வகுப்பில் திரைக்கு மறைவில் உட்கார்ந்து படிக்கச் சொல்லியிருக்கத் தேவையில்லையே”
வீட்டில் தன்னோடு இருக்கின்ற பெண்கள் அறிவாளியா இருந்தா ஆண்களுக்கும் உதவிதானே. அந்த சுயநலத்திற்காகவாவது எங்கள் பெண்களை அறிவாளிகளாக வைத்திருக்கவே செய்கிறோம் என்ற தன்னிலை விளக்கம் வேறு.
       ஆமாமா வீட்டுப் பெண் பிள்ளைக்கு பாடல் சொல்லிக் கொடுக்க, தனது வங்கிக் கணக்குகளை சரிபார்க்க, தான் எழுதிக் கொடுப்பதை சரி பார்க்க என நீங்கள் “அறிவாளியா” வைத்திருப்பதுதான் தெரியுமே.
       என்னிடமே நிறைய இலக்கியவாதிகள் சொன்னதுண்டு நல்லவேளை நீங்க தோழியா போய்ட்டீங்க மனைவியா இருந்தா நாங்க தாங்கமாட்டோம் என்று. ஆம் வீட்டில், பெண்டாட்டி சொல் பேச்சு கேட்பவளாகவும், தோழி சுதந்திரமானவளாகவும், இருந்தால் “எல்லாவற்றுக்கும்” வசதி. என்று கணக்கிடும் ஆண்களிடமிருந்து நகன்ற வண்ணமே இருக்க வேண்டியிருக்கின்றது.
  விமரிசகர்களோ படைப்பாளிகளோ  கோட்பாடுகளை தங்கள் செயல்பாடுகளுக்கு பலம் சேர்க்க பயன்படுத்திக் கொள்ளலாமே அல்லாது , அதுவே செயல்பாடாக மாற்றிக் கொள்வது  செக்கு மாடு சுத்துச்சுன்னு வண்டி மாடும் சுத்துன்ன கதையா போகும், வாழ்க்கையை வாசியுங்கள் அதன் குரலை உ
ற்றுக் கவனியுங்கள் புதிய கோட்பாடுகள் உங்களிடமிருந்தும் உங்கள் படைப்புகளிலிருந்தும் பிறக்கலாம்



posted by mathibama.blogspot.com @ 11/11/2013 02:52:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates