சூரியாள்

Monday, December 17, 2007
கானல்காடு நிகழ்வு
அக்டோபர் 6, 7 தேதிகளில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது கானல் காடு சந்திப்பும் (முதல் சந்திப்பு இரண்டு வருடங்களுக்கு முன்) ஒரு வெற்றிகரமான நிகழ்வு என்று இதை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த கவிஞர் திலகபாமா நிச்சயமாகச் சொல்லிக்கொள்ளலாம். வயிறு நிறைய உணவு, புத்தி நிறைய விஷயங்கள், நண்பர்களின் சந்திப்பால் மனது நிறைய குதூகலம். திருப்தியான பயணம் என்பதற்கு வேறென்ன தகுதிகள் வேண்டும். நிகழ்வின் முதல்நாள் காலை சிறந்த கவிதைத் தொகுப்பாக அமரர் சி. கனகசபாபதி அறக்கட்டளையை நடத்தி வரும் திருமதி லெட்சுமியம்மாளால் தேர்வு செய்யப்பட்ட கவிஞர் அம்சப்ரியாவின் என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை மற்றும் அமிர்தம் சூர்யாவின் பகுதிநேரக் கடவுளின் நாட்குறிப்பேடு ஆகிய கவிதை நூல்களுக்கான பரிசளிப்பு விழாவும், வைகைச் செல்வியின் இன்னொரு வானம் இன்னொரு உலகம் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் பட்டிவீரன்பட்டி எஸ்.எம்.கே.எஸ் திருமண மண்டபத்தில் வைத்து நடத்தப்பட்டது. நிகழ்வு உபயம் பாரதி இலக்கிய சங்கம். நிகழ்வில் முல்லை நடவரசு, பொ.நா. கமலா ஆகியோர் பேசினார்கள். (கலந்துகொண்ட தீவிர இலக்கியவாதிகளின் பொறுமையைச் சற்றே சோதிக்கக்கூடிய உரைகள்தான் என்றாலும் பள்ளிக் குழந்தைகளைக் கவனத்தில்கொண்டு, அவர்கள் அறிமுகம் பெறுவதற்காகவே குறிப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வென்று திலகபாமா பிறகு தனிப்பட்ட பேச்சில் சொன்னார்.) சிறப்புரை பொன்னீலன். இது முடிந்ததும் பொன்னீலன், தோத்தாத்திரி, பழமலய், பிரம்மராஜன், கண்ணன், பழனிவேள், பா.வெங்கடேசன், அமிர்தம் சூர்யா, விஜயேந்திரா, கவின்கவி, தமிழ் மணவாளன், எழிலரசு, அண்ணா கண்ணன், விழி.பா. இதயவேந்தன், ரெங்கநாயகி, அம்சப்ரியா, ரவிக்குமார், ராம்ராஜ், பொ.நா. கமலா, சொர்ணபாரதி, பெரியசாமி ராஜா, திலகபாமா இவர்களுடன் எட்டு ஆய்வுப் பட்ட மாணவர்கள் என்று சுமார் முப்பது பேர் அடங்கிய குழு கானல்காடு புறப்பட்டுச் சென்றது. மதிய உணவிற்குப்பிறகு மாலை நான்கு மணியளவில் முதல் அமர்வு தொடங்கியபோது கவிஞர்கள் தங்களுடைய சில கவிதைகளோடு சுய அறிமுகம் செய்துகொண்டபின் பிரம்மராஜன் தற்காலத்திய கவிதைகளில் பிரயோகிக்கப்படும் தொன்ம மற்றும் புராணிகப் படிமங்கள் அவை பற்றிய முழுமையான அறிதலோடு வைக்கப்படுகிறதா என்கிற கேள்வியை முன்வைக்க அதைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக உடனே காரசாரமான விவாதங்கள் தொடங்கிவிட்டன. முழுமையான அறிதல் என்பது பிரஸ்தாபப் படிமங்கள் கவிதை எந்த அளவிற்கு அவற்றை வேண்டுகின்றனவோ அந்த அளவையும் பிரயோகத்தையும் பொறுத்தது என்பது பரவலான கருத்தாக இருந்தது. பொ.நா. மீனாட்சி தொன்மத்திற்கும் புராணிகத்திற்குமான வித்தியாசம் என்னவென்று கேட்டார். (இதற்கு விடை மறுநாள் தோத்தாத்திரியின் கட்டுரை வாசிப்பில் கிடைத்தது). பழமலை கவிதை என்பது மக்களுக்கானதாயும் அவர்களுடைய புழக்க மொழியிலும் அமையாமல் தரப்படுத்தப்பட்ட மொழியில் அமைவது பற்றின தன்னுடைய கருத்துகளை வெளியிட்டார். கூடவே வள்ளலாரின் கவிதைகள் பற்றிய சுருக்கமான அறிமுக உரை ஒன்றையும் நிகழ்த்தினார். வள்ளலார் தேவுகளைப் பற்றிய தன்னுடைய ஐயாயிரம் கவிதைகளை ஒதுக்கிவிட்டு மானுடம் பற்றிய கவிதைகளையே தன்னுடைய கவிதைகளென்று அறிவித்துக்கொண்டதன் துணிச்சலைக் குறித்ததாக அவருடைய சிறிய உரை மறுநாளும் தொடர்ந்துகொண்டிருந்தது. விவாதங்களுக்குப் பின் இரவு உணவு. முடிந்ததும் வழக்கம்போல விவாதக் களத்திற்கு வெளியே குழுக்குழுவாகப் பிரிந்த நண்பர்களின் பாடல்கள், குளிர் காய்தல்கள், தனிப்பட்ட விவாதங்கள்.


மறுநாள் காலை உணவிற்குப் பிறகு பேராசிரியர் தோத்தாத்திரியின் ஆண்டாள் பாடல்களின் சமூகப் பின்னணி பற்றிய உரையுடன் முதல் அமர்வு பதினோரு மணியளவில் துவங்கியது. ஆண்டாள் உட்பட பக்தி இயக்கக் காலக்கட்டத்தின் இரு பெரும் சக்திகளான ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் கவிதைகள் அன்றைய அரசமைப்பின் இன்றியமையாத தேவையாயிருந்த குடியானவர்களின் உழைப்பைச் சிதற விட்டுவிடாமல் உற்பத்தியின்மீது அவர்களுடைய சக்தியை ஒன்றாகக் குவிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, குழுப் பாடல் தன்மையனவாக, கட்டமைக்கப்பட்டவையென்பது அவருடைய உரையின் சாராம்சமாக இருந்தது. தோத்தாத்திரியை அடுத்து படைப்பாளியின் அகங்காரமும் வாசகத் திமிரும் என்கிற தலைப்பில் கவிஞர் பிரம்மராஜன் தன்னுடைய கட்டுரையை வாசித்தார். மிரள வைத்த தலைப்பென்றாலும் படைப்பாளி-பிரதி-வாசக உறவுகளின் கட்டுமானம் மீதான ஆழ்ந்த பார்வையையும் தெளிவான உதாரண விளக்கங்களையும் கொண்ட பயனுள்ள கட்டுரையென்றே ஆய்வு மாணவர்கள் உள்ளிட்ட பலராலும் அது சிலாகிக்கப்பட்டது. பிரம்மராஜன் கட்டுரைக்குப்பிறகு எழுத்தாளர் பொன்னீலன் திலகபாமாவின் சமீபத்திய நீள்கவிதைத் தொகுப்பான கூந்தல் நதிக் கதைகள் பிரதியின்மேல் தன்னுடைய பார்வையை ஒரு சிறு கட்டுரையாக வாசித்தளித்தார். பிரதியில் தொன்மங்களும் நிகழ்காலச் சிந்தனைகளும் ஊடிழையாகப் பாவி வரும் விதத்தை விளக்கியும் விதந்தோதியும் சென்ற பார்வையாக அது அமைந்திருந்தது.


தேநீர் இடைவேளைக்குப்பின் பெரியசாமி ராஜா கேரளாவில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தென் திருவிதாங்கூர் என்றழைக்கப்பட்ட கன்னியாகுமரி பகுதியில் நடந்த தோள் சீலைப் போராட்டம் பற்றிய சரியான வரலாற்றுப் பதிவுகள் இல்லையென்கிற தன் வாதத்தை முன்வைத்துத் தன்னுடைய சிந்தனைகளை அவையினர்முன் பதிவு செய்தார். பெரியசாமி ராஜா பேசி முடித்ததும் பொன்னீலன் அந்தப் போராட்டம் விரிவாகப் பேசப்பட்டிருக்கும் தெற்கிலிருந்து (பொன்னீலன்), தோள்சீலைப் போராட்டம் (டி.எஸ்.ஜார்ஜ் மார்த்தாண்டம்) உள்ளிட்ட பலருடைய நூல்களைக் குறிப்பிட்டு அவருடைய வாசிப்பின் போதாமையை முன்னிறுத்தி கிட்டத்தட்ட அவருடைய உரை முழுவதையுமே மறுக்கும்விதத்தில் தோள்சீலைப் போராட்டம் பற்றிய வேறொரு நீண்ட உரையை நிகழ்த்தினார். உணவு இடைவேளைக்குப்பிறகு அனைவரும் ஊர் திரும்பும் மனநிலையில் இருக்க ஏழலரசுவின் தமிழ் கவிதை வரலாறு பற்றிய கட்டுரை ஒன்று அவர்கள் கவனத்தைத் திரும்பத் தன்பால் இழுத்து வாதப் பிரதிவாதங்களைத் தூண்டிவிட்டுச் சந்திப்பை நிறைவு செய்தது. இரண்டு நாட்களும் எழில் மிகுந்த மலைவனப் பிரதேசத்தில் படைப்பாளிகள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வகை செய்த பெருமிதத்தோடு திலகபாமா நன்றியுரைக்க சந்திப்பு மாலை நிறைவெய்தியது. பயனும் இனியவையுமான இரண்டு நாட்கள்.
posted by mathibama.blogspot.com @ 12/17/2007 10:05:00 pm   0 comments
Saturday, December 15, 2007
PIT புகைப்படப் போட்டிக்கு

posted by mathibama.blogspot.com @ 12/15/2007 11:55:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates