சூரியாள்

Friday, February 25, 2011
திலகபாமா கவிதைகளில் தொல்படிமங்களுக்கு எதிரான கலகம்

திலகபாமா கவிதைகளில் தொல்படிமங்களுக்கு எதிரான கலகம் – சு. மீனாட்சி, காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம்













முன்னுரை:

காலம் காலமாய் மக்கள் மனதிலும், பண்பாட்டிலும் நிலைத்து விட்ட புராண, இதிகாச மற்றும் பழங்கதை மரபுகளாகிய தொன்மங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட சமூக – பண்பாட்டு, மதிப்பினை அவற்றின் மீதே கட்டமைத்துள்ளன. இயல்பான புராண கதைப்பாத்திரங்கள் நிலைத்த ஒரு சமூக மதிப்பின் பிம்பமாக உருமாறி சமுகத்தில் தொல்படிமங்களாக நிலை பெற்றுவிடுகின்றன. இவ்வாறு குறிப்பிட்ட சமூக பண்பாட்டு மதிப்புகளை தாங்கிநிற்கும் தொன்மங்களை – தொன்மப்பாத்திரங்களை கவிஞர் திலகபாமா தம் கவிதைகளில் எங்ஙனம் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறார்? கட்டுடைக்கிறார்? மீட்டுருவாக்கம் செய்கிறார்? என்பனவற்றை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

தொன்மம் – தொல்படிமம் : விளக்கம்

பழமை என்றும் காலத்தால் முந்தையது என்றும் பொருள் தருவது தொன்மை, இத்தகைய தொன்மத்தைக் குறிப்பிடுகையில் தொல்காப்பியர்.

”தொன்மைதானே சொல்லுங்காலை

உரையோடு புணர்ந்த பழமை மேற்றே” (தொல் – பொருள் : 528)

என்பார். இதற்கு தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன அவை இராமசரிதமும், பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல் வருஞ்செய்யுள் என்று விளக்கமளிக்கிறார் இளம்பூரணர். தொன்மம் மொழியோடு கலந்து காணப்படுவதை ”தொன்மமும் ஒரு மொழி, வாழ்க்கை அனுபவங்களைக் குறியீடுகளால் பேசுவது தொன்மம். இத்தகைய குறியீடுகள் இல்லாமல் மக்கள் நடுவில் மொழித்தொடர்பு என்பது இன்றும் இல்லை” 1 என்று சுட்டிக்காட்டுகிறார், முனைவர் க. பஞ்சாங்கம். (2000 : ப.164)

தொன்மவியல் ஆய்வினை விரிவுபடுத்திய அறிஞரான நார்த்ராப்ஃபிரை ”கவிஞர் தொன்மத்தைத் தன் படைப்பு நோக்கங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கிறான்” 2 (1988 : ப.8) என்று தொன்மத்தின் பயன்பாட்டினை விளக்குவார். இவ்வாறான தொன்மங்கள் மற்றும் அவற்றின் அமையும் கதாபாத்திரங்களில் சில மக்களிடையே மீண்டும் மீண்டும் எடுத்தாளப்பட்டு தொல்படிமங்களாக (Archetypes) நிலைத்து விடுகின்றன. ”மக்கள் தொன்மங்களில் திரும்பத்திரும்ப வரும் சில படிமங்கள் காலம் மற்றும் வெளியிலிருந்து மிகவும் விலகியவையாக இருக்கின்றன. இவை ஏதேனும் ஒரு பொதுப்பொருள் கொண்டவையாகவோ அல்லது ஒப்பிடத்தக்க உளவியல் ரீதியான எதிர்வினைகள் மற்றும் அவை போன்ற பண்பாட்டு செயல்பாடுகளை வெளிக் கொணர்வதாகவும் இருக்கின்றன. இத்தகைய குறிப்பொருள் மற்றும் படிமங்களே தொல்படிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன”3 (1999: ப.160) இதை மூல உருக்கள் என்று கூறும் சிற்பி பாலசுப்ரமணியம், ”தொன்மங்களில் சில மூல உருக்களாக அமைந்து விடுகின்றன. அநீதி இழைக்கப்பட்டவன் என்றால் ஏகலைவன், கொடை என்றால் கர்ணன், கற்பு என்றால் சீதை, முன் கோபம் என்றால் துர்வாசன், நீதி கேட்கும் பெண்மை என்றால் கண்ணகி எனச்சில தொன்மங்கள் மூல உருக்களாக (Archetypes) உயர்ந்து விடுகின்றன” 4 (2001: ப.14) என்று விளக்குகிறார்.

இவ்வாறான தொன்மங்கள் மற்றும் தொல்படிமங்கள் மொழி, இலக்கியம் இவற்றைக்கடந்து ஒரு சமூகத்தின் ஆண்-பெண் கற்பு, ஒழுக்கம் போன்ற பண்பாட்டுத் தளங்களின் மீது குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளைக் கட்டமைத்துள்ளன. இத்தகைய மதிப்பீடுகளில் சில சிறப்பான அம்சங்களோடும் சில அடிமைத்தளைகளையும் தெரிந்தோ, தெரியாமலோ பண்பாட்டு அளவில் அவை ஒன்றிணைத்து விடுகின்றன.

தொல்படிமங்கள் கட்டமைப்பும் கட்டுடைப்பும்

இந்தியச் சமூகம் முழுவதும் பெண்களின் பண்புநலன்களை நிர்ணயிப்பதில் பெண் தொல்படிமங்கள் பெரும்பங்கினை வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது. எந்தவொரு பண்பிற்கும் சான்றாகக் காட்டி விடக்கூடிய அளவில் நம்மிடையே மிகுதியான பெண் தொல்படிமங்கள் காணக்கிடைக்கின்றன. அத்தொல்படிமங்களை தெய்வங்கள் என்று உயர்த்திக் கூறுவதும் இங்குதான் அதிகம். ஆதலால் ஒரு பெண் தெய்வநிலைக்கு உயர வேண்டுமானால் தெய்வமாக்கிப் பார்க்கப்பட்ட பெண் தொல்படிமங்களைத் தன் வாழ்விற்கு, தன் குணநலனிற்கு முன்னோடியாக, முன்மாதிரியாக (Roll model) ஒரு பெண் வரித்துக் கொள்ள வேண்டும்.

அத்தகைய பெண் தொல்படிமங்கள் அனைத்தும் ஆண்களால் படைக்கப்பட்டவை என்பது சிந்திக்கத்தக்கது. எனவே தான் அத்தொல்படிமங்கள் அவற்றின் பின்னணியில் வைத்திருக்கும் அடிக்கருத்தானது ஆணிற்கு சாதகமான கதைகளைக் கொண்டிருக்கின்றன. ஆண் தனக்கிழைக்கும் அநீதியை அறியாமல் தன்நலன் கருதாது ஆணின் நலமே தன் நலன் என்று கருதி பேசா மடந்தையாய் கண்ணகி தொல்படிமம் அமைந்திருப்பது இதற்கொரு சான்று. இதே போக்கில் அமைபவைதான் சீதை, சாவித்திரி, நளாயினி, பாஞ்சாலி, சகுந்தலை அனுசுயா, அகலிகை என்பன போன்ற பெண் தொல்படிமங்கள். இவையனைத்தும், ஆண் தன் அதிகாரப்போக்கைப் பெண் மீது செலுத்தவும் அதைப் பெண் தன் ”வரமே” என்று அடிமைத்தனத்தையே விரும்பி ஏற்றுக் கொள்வதுமாகக் கட்டமைக்கப்பட்டு இருக்கும் பெண் தொல்படிமங்கள் ஆகும்.

இத்தகைய தொல்படிமங்களை மறுபார்வைக்கு உட்படுத்தியதில் தற்காலத் தமிழ்ப்புனைகதையில் புதுமைப்பித்தனுக்கு சிறப்பிடம் உண்டு. அவர் தனது அகலிகை, சாப விமோச்சனம் போன்ற சிறுகதைகளில் அகலிகைத் தொல்படிமத்திற்குச் சொல்லப்பட்ட ”கற்பு நெறி பிறழ்ந்தவள்” என்ற மதிப்பீட்டை உடைத்து மறுபார்வைக்கு உட்படுத்தி புதிய சிந்தனைக்கு வித்திட்டார். பாரதியார் தனது ”பாஞ்சாலி சபதத்தில்” பாஞ்சாலியை இந்தியதேசத்திற்கு உருவகப்படுத்தி தேசவிடுதலைக்குப் புதுக்குரல் கொடுத்தார். இத்தகைய தொல்படிமங்கள் மீதான மறுவாசிப்பு இன்று பெண் படைப்பாளர்களிடையே தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இருப்பத்தோராம் நூற்றாண்டு தமிழ்க் கவிதைவெளியில் முனைந்து செயல்பட்டு வரும் பெண் படைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் திலகபாமா, தொல்படிமங்கள் காலந்தோறும் பெண்மீது செலுத்திவரும் ஆதிக்கத்தையும், அவை கொண்டிருக்கும் சமுக மதிப்பையும் கருத்துக் கட்டமைப்பையும் கட்டுடைத்துப் பார்க்க நினைக்கிறார். அதற்கேற்றவாறே தம் கவிதைகளில் இத்தொல்படிமங்களைக் கையாள்கிறார்.

திலகபாமா கட்டுடைக்கும் தொல்படிமங்கள்

கவிஞர் திலகபாமா தொல்படிமங்கள் சமுதாயத்தில் நிலைபெறச் செய்திருக்கும் மதிப்பீடுகளை நன்கு உணர்ந்தவராக இருப்பதை அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. ”நமது இதிகாசங்கள் பழங்கதைகள் நமக்குள் பல விசயங்களை வேரோடிப் போகச் செய்திருக்கின்றன. கற்பு, ஒழுக்கம், இருப்பு பற்றி பண்டைய இலக்கியங்கள் விதைத்து விட்டுப்போன உணர்வுகளைக் கடந்து விட முடியாதவர்களாகவே ஒவ்வொருவரும் பயணிக்கிறோம்.

பெண்ணுக்குள் அடிமைத்தனங்களை விதைத்தது போல் ஆணுக்குள் ஆதிக்க மனோபாவங்களையும் விதைத்துள்ளன. அதற்கான பழமையான விசயங்களைத் தூக்கி எறிவது புதுமையல்ல அவற்றை இன்றைய காலகட்டங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப புனரமைப்பது நம் கடமையாகிறது” 5 (2004: ப.11) என்று தொன்மங்கள் விட்டுச் சென்ற அடிமைத்தளைகளைக் கட்டுடைத்து அவற்றின் மீது மறு கட்டமைப்பினைச் செய்யவேண்டிய அவசியத்தைத் தெளிவுபடுத்துகிறார். அதற்கேற்ப அவர் தன்னுடைய சூரியனுக்கும் கிழக்கே என்ற கவிதைத் தொகுப்பில் சீதை, சகுந்தலை, பாஞ்சாலி போன்ற பெண் தொல்படிமங்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் அடிமைத்தளையைக் கட்டுடைத்து அதேசமயம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற இராமன், துஷ்யந்தன், பாண்டவர் ஆகிய ஆண் தொல்படிமங்களை எதிர்த்து கலகக் குரல் எழுப்புகிறார்.

சீதை தொல்படிமம்:

சீதை எனும் பெண் தொல்படிமம், தன்னைக் கொண்ட கணவன் நலமே தன் நலம் எனக்கருதும் பதிவிரதையாய், ”இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி” என்று கணவனது இருப்பையே தனக்குரிய இருப்பாய், கொண்டவன் சொல்லுக்கு எதிர்சொல் பேசாதவளாய், தீயில் குளித்தழு என்றால் ஏன்” என்று எதிர் கேள்வி கேட்காத உத்தமியாய், கொழுநனே தெய்வம் என்று தொழுது வாழ்ந்திடும் பெண்களுக்கு எல்லாம் முன்னோடியாய் கட்டமைக்கப்பட்டு இருக்கும் மிகப் பெரும் தொல்படிமமாகும்.

இத்தகைய சீதை தொல்படிமத்தை கட்டுடைக்க நினைக்கும் கவிஞர் திலகபாமா, தன் கவிதையில் சீதையெனும் தொல்படிமத்தைக் கேள்விகள் எழுப்புபவளாய், சந்தேகிப்பவளாய் அமைக்கிறார்.

”சூர்ப்பனகை இடம்தேடி

போர் என்று பொய் சொல்லி

வந்தாயோ என

சந்தேகத்தீயில் தீக்குளித்த எனக்கு” (சூரியனுக்கும் கிழக்கே பா.89)

என்று இராமனை சந்தேகப்பட்ட சீதையை உருவாக்கி, கணவனே தெய்வமென்று நினைத்த சீதையைக் கட்டுடைக்கிறார். தன்னைப் பெண் என்பதால் சந்தேகித்த இராமனைத் தான் சந்தேகிப்பது தவறு இல்லை என்றும், பெண்ணும் அவ்வாறு ஆணிடம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மையை எதிர்பார்ப்பாள் என்று சீதையின் சந்தேகத்தின் மூலம் குறியீடாக்குகிறார். அதே சமயத்தில் இராமன் என்ற ஆண் தொல்படிமத்தின் மீதமைந்த ”ஏகபத்தினி விரதன்” என்ற சமூக மதிப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.

ஆணைக்கேள்விக்குள்ளாக்க பெண்ணுக்கு இடமுண்டு, உரிமையுமுண்டு என்பதை,

”பெண்ணாய் நான் போனதால்

என் சந்தேகம் எனை

தீக்குளிக்கச் செய்ய

ஆணாய் போனதால்

உன் சந்தேகமுமெனையே

சுட்டெரிக்கவோ” (சூரியனுக்கும் கிழக்கே ப.89)

என்ற இராமனைக் கேள்வி கேட்கும் சீதையைப் படைத்து, மறுத்துப் பேசாமல் தீயில் இறங்கிய சீதைத் தொல்படிமத்தை மாற்றியமைத்துள்ளார். என் சந்தேகம் எனைச்சுட்டது எனக்கான தண்டனை என்றாலும், அதைப்போன்றதொரு தண்டனையை நீயும் சந்தேகப்பட்டதால் அடைந்திருக்க வேண்டும். ஆனால் உனக்கான தண்டனையும் எனக்கு விதிக்கப்பட்டது ஏன்? என்று இராமனைக் கேள்விகளால் துளைக்கும் சீதையைப் படைக்கிறார். திலகபாமா, இவ்வாறு இராமனைக் கேள்விகள் கேட்கும் சீதையை மலையாள இலக்கியத்தில் குமாரனாசான் தமது ”சிந்தனையில் மூழ்கிய சீதையில் படைத்துக்காட்டியுள்ளார்”. என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

மேலும் சீதையை எல்லைக் கோட்டிற்குள் நிற்க வைக்கும் இலட்சுமணனின் கோட்டை சீதை தாண்டுவதை,

”கற்பின் கனலுக்கிடும் எல்லை

காற்றுக்கிடம் எல்லையென

இலட்சுமணன் கிழித்த கோட்டை

படிதாண்டிக் கனலை

பார் நிறைத்த சீதையுண்டு” (சூரியனுக்கும் கிழக்கே ப.4)

என்று எல்லைக்குட்படாத காற்றாய்ச் சீதையைக் காட்டுகிறார். ஆண் விதித்த கட்டுப்பாட்டிற்குள் நின்று படிதாண்டா பத்தினியாய் காட்டப்பெற்ற சீதைத் தொல்படிமத்தை, எந்தக் கட்டுக்குள்ளும் அடைபடாதவளாய், ஆணின் அடக்குமுறை என்ற படியைத்தாண்டிய சீதையாய்க் காட்டுகிறார். இந்தச் சீதையைத் தம்மீது கற்பின் காரணமாய் கட்டப்பட்ட தடைச்சுவர்களை எல்லாம் உடைத்து, தம் ஆற்றலை உலகம் முழுவதும் பரவிடச் செய்திடும் இன்றைய புதுயுகப் பெண்களுக்குக் குறியீடாகக் காட்டுகிறார்.

துஷ்யந்தனை மறக்கும் சகுந்தலை:

ஆணாதிக்கப் போக்கிற்குள் அகப்பட்டு ஏமாற்றப்பட்டவளான ”சகுந்தலை” என்ற தொல்படிமம், அந்த ஆணையே சார்ந்து வாழ்தல் வேண்டி கணையாழி எனும் சாட்சியின் உதவியால் தன்னைப் பற்றிய நினைவுகளை எழுப்பி அதன்பின் அமைதியாய் அவனுடன் சேர்ந்துவாழ்தலே அறம் என்று போதிப்பதாய் அமைகிறது. இதனாலேயே ஏமாற்றிய ஆடவன் எத்தகையவனாய் இருந்தாலும் அவனையே மீண்டும் ஏற்றக் கொள்ளும் பெண்களை இச்சமூகம் பராட்டுகிறது. ஆனால் திலகபாமா, எத்தனாய் இருக்கும் துஷ்யந்தனை மறக்க விரும்பும் சகுந்தலையை.

”கண்களை காதலை மறந்து

கணையாழியால் நினைவு பெறும்

துஷ்யந்தனை மறக்க

சாபத்தை வரமாய் வேண்டியபடி” (சூரியனுக்கும் கிழக்கே ப.114)

என்று படைத்துக் காட்டுகிறார். காதலித்த பெண்ணை மறந்து போவதும், மறத்து விடுவதும் இயல்பாகிப்போன துஷ்யந்த ஆண் சமூகத்தை, அவன் மீண்டும் ஏற்க வேண்டும். அவனைச் சார்ந்தே பெண் வாழ்வு அமைய வேண்டும் என்று நினைக்காமல், பெண்கள் அத்தகைய ஆண்களை நிராகரிக்க வேண்டுமென்று பெண்களின் மனதில் மாற்றத்தை விதைக்க துஷ்யந்தனை மறக்கும் சகுந்தலையாய் புதிய சகுந்தலையைப் படைத்துக் காட்டுகிறார். இதே போன்ற சகுந்தலையைக் கவிஞர் சிற்பியும் தமது ”ஓ சகுந்தலா” கவிதையில் படைத்துள்ளார்.

துயரம் அகலாத பாஞ்சாலி

பாண்டவர்களின் வெற்றியில் தன் கூந்தல் முடித்தவளான பாஞ்சாலி எனும் தொல்படிமம், ஆடவர் பெற்ற வெற்றியைத் தனக்குரிய வெற்றியென்றும், அவளைக் கொண்ட ஆடவரால் அவளது துயரம் தீர்க்கப்பட்டதென்றும் காட்டப்படுகின்ற ஆணாதிக்கத்திற்கு உட்பட்ட ஓர் தொல்படிமமாகும் ஆனால் திலகபாமாவோ.

”காவலுக்கு ஐவர் இருக்க

கண்ணனை அழைக்க நேர்ந்த

நெஞ்ச நாணலின் அதிர்வல்லவா

அருச்சுனனின் நாணதிர்வை மிஞ்சியது” (சூரியனுக்கும் கிழக்கே ப.91)

என்று பெண்ணுக்குக் காவலாய் சொல்லப்படும் ஆடவர்களின் இழிநிலையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். காவலாய் இருக்கவேண்டிய பாண்டவர், பாஞ்சாலியை ஆபத்தில் சிக்க வைத்து வேடிக்கை பார்ப்பதையும், அவர்களை விடுத்து கண்ணனை தனக்குதவ அழைத்த பாஞ்சாலியின் நிலையையும் காட்டி, பெண் தனக்கு நேர்ந்த அவலத்தைத் தீர்க்க தன் முயற்சியையே நம்பியிருக்க வேண்டுமென்பதையும் காட்டுகிறார் மேலும்,

”பாண்டவர்களின் வெற்றியில்

பட்டாபிசேகங்கள்

பாஞ்சாலியின் நெஞ்சக்கறை

கொஞ்சமும் கழுவ முடியாமல்” (சூரியனுக்கும் கிழக்கே ப.92)

பாஞ்சாலியின் துயர நிலையைக் காட்டி, எந்தப்பாண்டவரின் வெற்றியைத் தனக்குக் கிடைத்த வெற்றியாய் எண்ணி பாஞ்சாலி கூந்தல் முடித்தாளோ அது அவளுக்குக் கிடைத்த வெற்றியல்ல, அது ஒரு போதும் பாஞ்சாலியின் நெஞ்சில் வடுவாகிப் போன துயரத்தை மாற்றவில்லை என்கிறார். இதனால் துயரம் நீங்கியதாய் எண்ணி கூந்தல் முடித்த பாஞ்சாலியை மாற்றிப்படைக்கிறார். பெண்கள் தம் துயர்தீர்க்க ஆணைச் சார்ந்து இல்லாமல் தானே முயலுதலும், அம்முயற்சியே பெண்ணிற்கு வெற்றியைத் தேடித்தரும் என்பதும் கவிஞரின் கருத்தாய் அமைகிறது.

முடிவுரை:-

பெண்களின் வாழ்வில் விடுதலையையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முனைகையில், சமகாலப் பிரச்சனைகளை மட்டும் தீர்க்க நினைக்காமல் அவற்றிக்கு மூலகாரணமாக அமைந்தவற்றையும் மாற்றியமைப்பது அவசியமாகும். இந்த அவசியத்தை நன்கு உணர்ந்தவரான கவிஞர் திலகபாமா, மக்கள் மனதில் பெண்ணுக்கான அடிமைத்தளைகளையும், அணுக்கான ஆதிக்க மனோபாவத்தையும் விதைக்கக் கூடிய பல சமூச மதிப்புகளை தன்னுள்ளே கொண்டிருக்கும் தொல்படிமங்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறார். ஆதிக்க சமூக மதிப்பின் பிம்பங்களாக இருக்கும் தொல்படிமங்களைத் தம் கவிதைகளில் கட்டுடைத்தும் கேள்விக்குட்படுத்தியும் கலகக் குரல் எழுப்பிம் அவை புனைந்து விட்டுச் சென்ற அடிமை, மற்றும் ஆதிக்கப் போக்கினை மாற்றி அமைகிறார்; அவற்றின் மீது புதுப்புனைவுகளைக் கட்டமைக்கிறார்.

சான்றாதாரங்கள்

1. சிற்பி பாலசுப்ரமணியம், படைப்பும் பார்வையும், கவிதா வெளியீடு, சென்னை, 2001.

2. திலகபாமா.ம. சூரியனுக்கும் கிழக்கே மதி வெளியீடு, சிவகாசி, 2001.

3. திலகபாமா.ம, (க.ஆ) – பெண்மொழி மனித மொழியாவது எப்போது? (கட்டுரை) ஏர் காலாண்டு இதழ், மதுரை, பிப்ரவரி, 2004.

4. நார்த்ராஃபிரை – இலக்கியத்தில் தொல்படிவங்கள், க.பஞ்சாங்கம் (மொ.பெ), அன்னம் (பி) லிட், சிவகங்கை, 1988.

5. பஞ்சாங்கம்.க – இலக்கியத்தின் இருப்பியலும், திறனாய்வின், இயங்கியலும், காவ்யா, பெங்களூர், 2000

6. Wil Fred L. Guerin (ed) , Mythological and Archetypal Approaches, A Handbook of Critical Approaches to Literature, Oxford, New York, Forth Edition – 1999

நன்றி:

http://thoguppukal.wordpress.com

posted by mathibama.blogspot.com @ 2/25/2011 10:04:00 pm   0 comments
Thursday, February 24, 2011
இடம்பெயர்வு இலக்கியம்

23 . 2. 11 அன்று நண்பகல் 1.30 மணியளவில் துவங்கிய ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை நிகழ்வில் ஜெர்மனியைச் சேர்ந்த .சுசீந்திரன் அவர்கள்இடப்பெயர்வு இலக்கியம்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தமிழ்த்துறை மாணவியின் வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் அவர்களின் தலைமை உரை இன்றைய பாடத் திட்ட மாறுதல்களும் அவற்றின் தேவைகளும் அதற்கு படைப்பாளிகளின் ஆதரவின் தேவை பற்றியும் உரையாற்றினார்.

பாரதி இலக்கிய சங்கத்தின் செயலர் திலகபாமா . சுசீந்திரன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்

அடுத்து நடந்தேறிய சுசீந்திரனின் உரையில், மிக முக்கிய இடப் பெயர்வுகள் பற்றியும் அவற்றின் தாக்கம் இலக்கியங்களின் பிரதிபலிப்பது பற்றியும் விரிவாக உரையாற்றினார். அவற்றில் புலம்பெயர்ந்த இலக்கியத்திற்கும் புகலிட இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும், அதனால் வரைபடங்களை அழித்துக் கொண்டு ஒரு புது வெளி உருவானதின் நன்மைகளையும் , வெளிநாட்டு இலக்கியங்களை மூலமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் அரிய வாய்ப்புகள் கிடைத்திருப்பது பற்றியும், சமூக கலாசார மாற்றங்களை மக்கள் எதிர்கொண்டதை இலக்கியங்கள் பிரதிபலிக்கக் கூடியதாய் இருப்பதைப் பற்றியும் உதாரணங்களோடு பேசினார், அவரது உரையைத் தொடர்ந்து மாணவர்களது பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்த கலந்துரையாடலோடு நிகழ்வு இனிதே முடிந்தது

posted by mathibama.blogspot.com @ 2/24/2011 08:11:00 pm   0 comments
Friday, February 04, 2011
தினமணி செய்தி
posted by mathibama.blogspot.com @ 2/04/2011 08:07:00 pm   1 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates