இவர்கள் இன்ன செய்கிறோமென்று அறியாதவர்கள்
போலிக் கவலைக்கு பொய்க்கணக்கு
திலகபாமா
10ம் தேதி ஏப்ரல் மாதம் பொன்னம்மாள் அவர்களை அழகம் பட்டியில் அவரது இல்லத்தில் கக்கன் பற்றிய ஆவணப் படத்திற்காக சந்தித்துவிட்டு வந்த பிறகு அவர்கள் சட்டமன்றத்தில் என்னவெல்லாம் கேள்விகள் கேட்டு மக்களுக்கான விசயங்களை செய்து முடித்தார்கள் என்று சொல்லியதை நினைக்கையில் என் தொகுதி எம்.எல்.ஏ என்னவாக இருக்கின்றார். இதுவரை சட்டசபையில் என்ன என்ன தொகுதிக்காக கேட்டு வாங்கியிருக்கின்றார் என்ற கேள்விகள் முளைத்தன. இன்று அவர் வகிக்கும் பொறுப்பு செய்தி மற்றும் விளம்பரத்துறை. மக்களுக்காக வேலை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் செய்தி மற்றும் விளம்பரம் செய்வதற்காக பொறுப்பேற்று என்ன செய்தியை சொல்லிவிடப் போகின்றார். அல்லது அரசின் செய்தி மற்றும் விளம்பரத்திற்கான வேலைகளைச் செய்யவா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைச் செய்ய ஏதாவதொரு அதிகாரிகளை அரசு நியமித்துக் கொண்டால் போதாதா. தொகுதிக்கான பணிகளைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அமைச்சர் பொறுப்பு ஏற்கும் போதும் அரசு நிர்வாகம் மக்களுக்காக பயன்படும் பாலமாக இருப்பாரா அல்லது அரசின் விளம்பரத்துறை நிர்வாக வேலைகளைக் கவனிக்கவா.
யாரும் கேள்வி கேட்கக் கூடத் தோன்றாமல் புதிது புதிதாய் துறைகளை அறிமுகப்படுத்தி பதவிகள் வழங்கி கட்சியாளர்களை சந்தோசப்படுத்த நினைக்கின்ற அரசியல் கட்சிகள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தொடர்ந்து மக்களுக்கு தேவையான பணிகளுக்கு துறை அமைப்பதை விடுத்து ஏதாவது ஒரு துறை அமைத்தால் போதும் என முடிவுக்கு வந்து விட்டனரோ.
காமராசரிடம் ஒரு முறை சிலர் போய் கேட்டிருக்கின்றார் அரசு இதுவரை செய்த திட்டங்களை மக்களுக்கு சொல்லனும் அதற்கு ஒரு படம் எடுக்கலாம் என்று
எவ்வளவு செலவாகும் என்று கேட்ட காமராசர் அவர்கள் செலவுத் தொகையைச் சொன்னதும் சொன்னாராம் இவ்வளவு தொகை இருந்தால் இன்னும் பல பள்ளிக் கூடங்களை கட்டி விடுவேன் அரசு என்ன செய்தது என்பது மக்களுக்குத் தெரியும் என்றாராம்.
ஆனால் இன்றோ மந்திரிகள் மண்சோறு சாப்பிடுவதை எப்படி வழிகாட்டும் மக்களின் முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்வது என்றே கவலைப்பட்ட படியும், தீர்ப்பு வருவதற்குள் இன்னும் புதிது புதிதாய் எத்தனை வேண்டுதல்களை செய்ய வேண்டி வருமோ என்று கலங்கியபடியும் இருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி நிர்வாகிகள், மந்திரிகள், சாதாரண தொண்டன் என்று எந்த வேறுபாடும் இன்றி போலிக் கவலைக்கு பொய்க்கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படி நடந்தவற்றில் ஒரு நல்ல விசயம் என்ன தெரியுமா? முன்பெல்லாம் கடைசி தொண்டன் மொட்டைபோடுவான், அலகு குத்துவான். இன்று வேறுபாடில்லாமல் மந்திரிகள் 1008 தேங்காய் உடைக்கிறார்கள், மண்சோறு சாப்பிடுவதாய் படம் பிடித்துக் கொள்கிறார்கள்.
இனி வருகின்ற பங்குனி, சித்திரை, வைகாசி திருவிழாக்கலெல்லாம் வழிகாட்டு மக்களின் முதல்வருக்கான வேண்டுதலாய் மாறி தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும்.
நாமும் சிப்ஸ் கொறித்தபடி பார்த்து சிரித்துக் கொள்வோம்.
மக்களும் நாம் எதற்கு இவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினோம் என்பதை மறந்து எங்களது சட்டமன்ற உறுப்பினர் மந்திரியானதற்கு மகிழ்ந்து ஏதாவது எச்சில் கையை உதரிவிட மாட்டார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அரசு அதிகாரிகளாய் மக்கள் தேர்ந்தெடுத்த மந்திரிகள் மாறிப்போனதை கேள்வி கேட்க மறந்தும் போய் விட்டோம்
பாவம் மக்கள் முதல் மந்திரிகள் வரை இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்.