சூரியாள்

Tuesday, June 29, 2010
செம்மொழி மாநாட்டுப் படங்கள்
கவிஞர் மதுமிதா, நான் ,வைகை செல்வி
சிங்கை கிருஷ்ணன் , நான்,மதுமிதா, எங்களை இவ்வரங்கில் பேச அழைத்த ஆல்பிரெட்,பழனியப்பன் மற்றும் நண்பர்கள்
posted by mathibama.blogspot.com @ 6/29/2010 11:48:00 pm   0 comments
Sunday, June 20, 2010
செம்மொழி மாநாடு
25-06-2010

கவிஞர்.திலகபாமா,சிவகாசி.2:00-2:15துவக்கமும் அறிமுகமும்
திரு.வி.இராமன்,கோவை2:15-2:45இணையம் மூலம் கற்பித்தல்
திரு.அருண்,சென்னை.2:45-3:15குறும்படங்கள் ஓர் விழிப்புணர்வு ஊடகமாக
திரும‌தி.லூசியா லெபோ,பிரான்சு3:15-3:45இணைய‌ இத‌ழ்க‌ள்-ஒரு பருந்துப் பார்வை
திரு.ப.கதிர்வேலு,ஈரோடு3:45-4:15வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனை
திரு.கனகராஜ்,ஈரோடு.
posted by mathibama.blogspot.com @ 6/20/2010 06:27:00 pm   0 comments
Saturday, June 19, 2010
ஆயுதக் கோடுகள் விமர்சனம்
ஆயுதக் கோடுகள் விமர்சனம்


-திலக பாமா
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விலிருந்து கிளம்பிய எழுத்துகள் வலியைமட்டும் கொட்டுவதாக இருந்த காலங்கள் போன பின்பு இன்று மொழிக்கான பிரயத்தனங்களும் ,தங்களுக்கான செவ்விலக்கியப் பாதையை உருவாக்கிக் கொள்ளும் எத்தனங்களும் ஆயுதக் கோடுகளின் தொகுப்பில் பலமான முன்னகர்தல்கள்
வ்வொரு கவிதைத் தொகுப்பு வாசிப்பின் போதும் கவிதை என்பது என்ன என்ற கேள்வி முன்னால் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் படைப்பாளி ஏற்கனவே இருக்கின்ற இலக்கணங்களின் வழிச் செல்பவன் அல்ல. பழைய வழித் தடங்களில் இடர்களை கண்டபோது புதிய தடங்களை தேடுபவன். தேடியதை தேடியதன் வலியை அனுபவத்தை கண்டடைந்த மகிழ்வை எழுத்தின் வழி பகிர்ந்து தருபவன்.எழுதப் படுகின்ற கலங்களும் கேட்கின்ற மனிதர்களும் கூட எதை கவிதை பேச வேண்டும் என தீர்மானிக்கிறார்கள். கருத்தியலைத் தாண்டி அவற்றை எழுதி பார்கின்ற பிரயத்தனத்திலிருந்தும் கூட கவிதை எது என்பது தீர்மானமாகின்றது. என்னைப் பொறுத்த வரையில் வாழ்வின் சரடுகளை நடப்பியல் யதார்த்தமோடு சொல்லிச் செல்கின்ற தருணம் எழுத்து இலக்கியமாகின்றது. அதிலும் சொல்லின் பொருளில் புதிய சிந்தனைத் தளத்தை உருவாக்கி போகின்ற இடம்தான் கவிதைக்கான இடம். அனுபவத் திரட்சியாக வந்து விழுகின்ற சொற்கள் ஒவ்வொரு சொல்லையும் நிகழும் கணமாக்கிக் காட்சியாகிப் போகும். ஆயுதக் கோடுகள் தொகுப்பைப் பொறுத்த வரையில் வாசகனாக அது எனக்குத் தந்த அனுபவத்தையும் விமரிசனாக நான் ஆய்ந்து பார்த்த விடயத்தையும் இங்கு முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
நான்கு வருடங்களுக்கு முன்னால் மதுரையின் ஒரு மேடையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொற்களை அர்த்தமிழக்கச் செய்ய வேண்டும் என்று சொல்லி ஆங்கில வசைச் சொல் எப்படி அர்த்தமிழந்து பல்வேறு தளத்திலேயும் உபயோகப்படுத்தப் படுகின்றதோ அதுபோல் தமிழ் மொழியின் சொற்களையும் அர்த்தமிழக்கச் செய்யவேண்டும் என்று சொன்ன போது அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அப்படியான வருத்தம் இப்பொழுது வாசிக்கக் கிடைன்ற இத்தொகுப்பில் கடந்து போயிருப்பதையும் சொற்களுக்கான மொழிக்கான தேடல் நிறைந்து கிடப்பதுவும் நம்பிக்கை தருகின்றது அல்லது எதிர்பார்ப்பைத் தருகின்றது. இது இத்தொகுப்பின் முதல் பலம்.
வார்த்தைகளை அர்த்தமிழக்கச் செய்வதைவிட அதன் அர்த்தங்களை இன்றைக்கானதாய் நமக்கானதாய் மாற்றிக் கொள்வது அவசியம். அந்த அவசியம் உணர்ந்த தொகுப்பாக இத்தொகுப்பில் கவிதைகள் இருக்கின்றன. மயக்கப் படும் வார்த்தைகள் கவிதையில் மிதியடிப் பதிவுகள் போன்ற வார்த்தைகளும் தூவலியல் கவிதையும் மொழியின் வாசிப்பை மாற்றிப் போடும் பலம். இக்கவிதைகளில் சமூகப் பொறுப்புணர்வும் , படைப்பாளியின் சமூக அக்கறையும் கோபமும் முதல் வாசிப்பிலேயே எல்லோருக்கும் தெரிந்து விடுகின்ற விஷயம். அதையடுத்து அக்கோபம் எவ்விடத்தில் கவிதையாகின்றது என்பதில் இருக்கின்ற வாசகத் தேடலுக்கு "அநாதை மனம்" கவிதை நல்ல பதிலாகப் போயிருக்கின்றது.
" வன்னழுத்தங்களால் பிளக்கப்பட்ட அணுதொகுப்பின்
வலியுணர் வொலியதிர்வுகள் அடுக்கப் பட்டு
பீறிட்டு வெளியேறும் உயிரிணைப்பின்
............. "

அடுத்து ஒரு விமரிசனாக தொடர்ந்து இங்கு நடக்கின்ற அரசியல் எழுத்தரசியல் , சமூக அரசியல் எல்லாம் ஒரு படைப்பாளியை எங்கெங்கு அசைத்துக் கொண்டிருக்கிறது என்று அவதானிக்கின்ற ஓர் ஆளாக அடுத்த கருத்தோட்டத்தை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
இன்றைக்கு படைப்பாளியின் வாழ்வு வந்து தளத்தை தீர்மானிப்பதை விடுத்து எழுத்தின், இலக்கிய வாதிகளின், பத்திரிக்கைகளின் வியாபார அரசியல் பலநேரம் எழுத்தின் தளத்தை ஆக்கிரமித்து விடுகிறதுமுண்டு அப்படியான பாதிப்பை சமீப கால் தொகுப்புகளில் நிறையவே காண முடிகிறது. பெண்மொழி பின் நவீனத்துவம் என்று பத்திரிக்கையின் வியாபார உத்திகளின் பின்னால் நகலும் எழுத்தாளனின் மனமும் நிதர்சன மாயிருக்கிறது. வாழ்வு வழியாக எழுத்தை கொண்டு செலுத்தப் பழகிவிட்ட படைப்பாளி ஒன்று நேர்மையாக அந்த அரசியலுக்குள்ளும் அல்லது எதிர்க்கும் போதும் இவ்வரசியலுக்குள்ளுமாக செயல்படத் துவங்கி வ்டுவது தவிர்க்க முடியாததாகிப் போகின்றது.
ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்வில் மலமள்ளுதலும் கழிவறைகளோடும் வாழ்வாக இருந்திருந்த மக்களின் எழுத்துகளில் தவிர்க்க முடியாமல் வார்த்தைகள் வந்து விழுந்த காலம் போய் அந்த வாழ்வை விட்டு நகன்று விட்ட மனிதர்களும் அதே வார்த்தைகளை தங்கள் உவமான உவமேயங்களுக்கு தங்களையறியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாமலிருப்பதை இக்கவிதைகளிலும் அடையாளம் காண முடிகிறது.
ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்விலிருந்து கிளம்பிய எழுத்துகள் வலியை மட்டும் கொட்டுவதாக இருந்த ஆரம்ப காலங்கள் போன பின்பு இன்று மொழிக்கான பிரயத்தனங்களும் தங்களுக்கான செவ்விலக்கிய பாதையை உருவாக்கிக் கொள்ளும் எத்தனங்கள் எல்லாம் ஆயுதக் கோடுகளின் தொகுப்பில் பலமான முன்னகர்தல்கள். அதே நேரம் ஒடுக்கப் பட்டவர்களின் மொழி என்று இயற்கையியலாக பேசிக் கொண்டிருந்த எழுத்தின் சாயலை விட்டு விட்டால் ஒடுக்கப் பட்டவர்களின் மொழி என்பதிலிருந்து விலகி விடுவோமோ என்ற அச்சம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மக்களரசின் மகன் , மாக்கள் போன்ற கவிதைகள் அந்த அச்சத்தின் அடையாளங்களாக இருக்கின்றன. அறிவாளிகளின் அரசியல் போன்ற கவிதைகள் மக்களின் வாழ்விலிருந்து என்றில்லாது நான் ஏற்கனவே சொன்னது போல் இலக்கியவாதிகளின் அரசியலை எதிர்த்து எழுதிப் போகின்றது.
உதாரணமாக, ஒரு இலக்கிய நிகழ்வு நடக்கின்றது. அதில் நடக்கின்ற தனி மனித செயல்பாடுகளில் உடன்பாடு இல்லை. அதை ஒரு கவிஞர் தனது கவிதையில் பதிவாகுகிறார். என்னைப் பொறுத்த வரை அவற்றை ஒரு படைப்பாளி கடந்து விடலாம் என்று நினைக்கிறேன்.ஆயுதக் கோடுகளில் ஆங்காங்கே அந்த எதிர்ப்பரசியல் தெரிகிறது. அது அவ்வெழுத்தின் பலவீனமாக நான் பார்க்கிறேன்.
ஏற்கனவே இருக்கின்ற செவ்வியல் தன்மையை அப்படியே படி எடுப்பதுவும் பலவீனமாகவே அமையும். புதிய படைப்பாளிகள் புதிய செவ்வியல் கோட்பாடுகளை உருவாகுவது அவர்கள் எழுத்துக்கும் , எழுத்து கொண்டிருக்கும் அரசியலுக்கும் மிக பெரும் வலு சேர்க்கின்ற விசயமாகவே இருக்கும்.
இன்னுமொன்று, அதிகார வர்க்கமோ ஒடுக்கப் பட்ட இனமோ எல்லோருக்கும் வாழ்வைப் பற்றிப் பேசும்போது அவர்களே அறியாமல் பெண் குறித்த அவர்களது எண்ணங்கள் வந்து விழுந்து விடும்.கவிதையில் பொய் பேச முடியாது. அது படைப்பாளியின் பலம் பலவீனம் இரண்டையுமே காண்பித்து விடும். அவ்வகையில் பெண் குறித்த பார்வைகள் படைப்பாளிகளிடத்தில் அவசியம் மாற வேண்டும். ஆண் வதைபட்டால் தியாகமேன்பதும் , பெண் வதைபட்டால் கற்பிழப்பு என்பதும் ஆண் தலைப் பட்ட சமூகம். என்று வாசித்த வரிகள் நினைவில் வந்து போகின்றது.அப்படியான பெண்எதிர்நிலை பார்வைகளை தொகுப்பு நெடுகிலும் பார்க்க முடிகிறது. வழி மொழிதல் , சேயற்ற தமிழகம் போன்ற கவிதைகளில் "கட்டுக் கதைகள் கலவி செய்யும் அந்தப் புறமாக இருக்கிறாள்" எனும் வரிகள் அதற்கு உதாரணம்.அந்தப் புறம் , சிவப்பு விளக்கு ஆகிய பிரதேசங்கள் அவச் சொல்லாக மாறி போனது பெண்ணால்தான் என்ற தோரணை கவிதைகளில் வழிகிறது.முற்போக்கு சிந்தனை தமிழ் முதல்வனுக்கும் இல்லை என்பது தெரிகிறது. சொல்லிப் பழகிய சொல்லின் மயக்கத்தில் அர்த்தம் மாறிப் போனதை அறியாமல் உச்சரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
நான் உறங்கிய போது என்னோடு புணர்ந்தவள்
தவித்த வாய்க்கு தண்ணீர் கூட மறுக்கும்
எதிரிகளையும் பெற்று விட்டிருக்கிறாள் (வழி மொழிதல் )


தன்னலத் தண்டன்களால்
கற்பழிக்கப் படுவதற்கு (சேயற்ற தமிழகம் )
இந்த வரிகள் பிள்ளைகள் பெருமை தேடித் தருகின்ற போது என் மகன் என்பதுவும் , அசந்தர்ப்பவசமாக சிக்கலுக்குள்ளாகும்போதும் நீ பேத பிள்ளையின் லட்சணத்தைப் பாரு என தாயை நோக்கி சூழும் ஆணாதிக்க மனோநிலை சாமான்யனிடம் இருக்கலாம். கவிஞரிடம் இருக்கக் கூடாது..தொடரும் ரவிக் குமார் போன்ற கவிதைகள் ஆதிக்க சாதி மேலான எதிர்ப்பைச் சொல்ல பெண்ணுடல் தன் வன்மத்தை நிகழ்த்திக் காட்டுகின்றது. இந்த வன்மம் காலம் காலமாக நம்மிடையே புரையோடிப் போன கிராமத்து ஆணாதிக்க மனோபாவம், வார்த்தைகள் இன்னமும் கவிதைகளில் இடம் பெறத்தான் வேண்டுமா?
சிலுவை மீதேறிய சுமை எனும் கவிதையில் சண்டையிடும் காலத்துக்காய் காத்திருக்கும் குரங்கின் மேல் கோபம் வருவது இருக்கட்டும். அதற்காக நான் பரிதாபப் படவேண்டியது குருதி குடிக்க பதுங்கியிருக்கும் பூனைகள் மேலா? அடைக்கலம் புகுந்து அப்பங்கள் திங்கும் எலியின் மேலா? இல்லை குருதி வழிய சிலுவை சுமந்த இயேசுவின் உழைப்பின்மேல் அந்தத் தன்னலமற்ற தியாகத்தின் மேலா? குரங்கு பிடுங்கித் தின்கிறது என்பதற்காய் பூனை எலிமேல் பரிதாபப் படத் துவங்கச் சொல்லுகிறது சிலுவை மீதேறிய சுமை எனும் கவிதையின் பொருள் மயக்கம், தவிர்க்க வேண்டியது என நினைக்கிறேன்.
எவருக்கும் அறிவில்லை
எல்லாவற்றையும் உடைத்துவிட்டு
எனைப் பேசும்
ஏதாவதொரு பொருள் படைக்க
பேசுவதற்காக பொருள் படைக்க யாரையோ நம்பியிருத்தலை தவிர்த்தர்க்குரிய உழைப்பும், நம்முடைய செயல்களே நமை பற்றிப் பேசும் எனும் அறிவு கொண்டிருத்தலும் இன்றைய நம் தேவை.
தவிர்க்க முடியாதபடி உமை எல்லாப் பொருளும் பேச உண்மையும் திறமையுமாய் செயல் செய்க.உழைப்பே எல்லோருக்குமான விடுதலை. வாழ்த்துகள்.

-திலக பாமா
mathibama@yahoo.com
94431 24688
(மதுரை அமெரிக்கன் கல்லூரி காட்சி ஊடகத் துறை 15.12.2009 அன்று நடத்திய "ஆயுதக் கோடுகள் " நூல் திறனாய்வுக் கூட்டத்தில் கவிஞரும் நாவலாசிரியருமான திலக் பாமா வாசித்த கட்டுரை )
posted by mathibama.blogspot.com @ 6/19/2010 09:04:00 am   1 comments
Wednesday, June 09, 2010
சக்தியின் சிவம்கள்
மோனத் தவத்தில் எப்பவுமிருந்தாய்
உலகம் உய்விக்கப் போவதாய்
காவலிருந்த பூதகணங்கள் சொல்லித் திரிந்தன
நீளுகின்ற தவத்தில்
யாருக்கும் பயனின்றி
ஒரு நாள் எல்லார்
பார்வையிலிருந்தும் மறைந்து போனாய்

காற்றில் கலந்து போன ஆண்பாலை
என்னில் உயிர்த்து கொள்ள வேண்டி வர
சக்தியின் பாதியில் சிவன்கள் முளைக்கின்றன.
அழித்தலுக்காய் உனைத் தேடித் திரிந்தவர்கள்
என்னில் பாதியை நீ சுமந்திருப்பதாக
பிதற்றித் திரிகின்றார்கள்

தலை மாற்றியே வாசித்து
பழக்கப் பட்ட கூட்டம்
அர்த்த நாரி என்பதைக் கூட
உன்னில் நானென்றே சொல்ல
நானோ இருபாலுமாகி
விஸ்வரூபமெடுக்கின்றேன்.

நெருப்பில் சாம்பராகிக் கரைகின்றாய்
கார்த்திகைக் குளத்தில்
உருவாகவே முடியாதபடிக்கு

******************************************
2
நீ விரும்பிய போது தேரோட்டியாகி
வலுவேறின என் தோள்கள்

ஆணாகுதலும் பெண்ணாகுதலும்
கூடு விட்டு கூடு பாய்தலாய்
நிகழ்த்திக் கொண்டிருந்தேன்
நீ தட்டேந்தி காசையும்
குரலேந்தி கரவொலியினையும்
பெற்றுப் போனாய்

உனக்கான ஆணாயும்
உனக்கான பெண்னாயும்
எப்பவும் மாற முடிகிறதென்பது
உணர்ந்த போது
எனக்கான ஆணாய் மாறினேன்

சிவ சக்தி என்று நீ
பாதி இடம் தந்ததாய் கன்னத்தில்
இட்டுக் கொள்ளும்
கூட்டம்
posted by mathibama.blogspot.com @ 6/09/2010 09:21:00 pm   1 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates