சூரியாள்

Saturday, May 27, 2006
நனைந்த நதி -5

.காட்டு வழிக் காற்று

அந்த ஆலமரம் நிழலில் நின்று கொண்டிருக்கிறோமா இல்லை சூரியன் தூவிச் சென்ற வெயில் உருளைகளில் நிற்க முடியாது உருண்டு கொண்டிருக்கிறோமா? தொடங்கிய புள்ளி ஒன்றாய் இருக்க எங்கெங்கோ புள்ளியிட்டு இல்லாத போது தேடியலைந்து கண்டு எல்லாப் புள்ளிகளையும் ஒன்றாய் இணைக்க முயன்றதில் விழுது வீழ வீழ்ந்து விடாது வியாபித்தபடி நின்று கொண்டிருந்தது எனக்குள் துவங்கிய ஆட்டம் போல. கண் முன்னே ஏதோ உருவம் தோன்ற முயன்று கண்ணாமூச்சிஆடிய படி இருந்தது இப்பொழுது எதுஆரம்பம் என்பது அந்த ஆலமரத்தில் மட்டுமல்ல என்னிலும் கண்டறிய முடியாததாகவே
கால் ஊன்றிய வேர் எது?
இதுவாய் இருக்குமோ?
இல்லை இது பின்னாளில் வீழ்ந்த விழுது
இதுவாய் இருக்குமோ?
விழுதுகள் வேர்களான பின் தன் நிஜம் மறைத்துக் கொண்டன. சாத்தியமில்லை முகம் மறைத்துக் கொண்ட பின் நீ குற்றம் சொல்ல விழி தேடித் திரிவது.. ஒரு வேளை கண்டாலும் அது போட்டிருந்த முகமூடிகளின் விழியாய் இருக்க சுட்டு விரல் நீட்டலில் பிரயோசனம் தான் என்ன?
போகிறது, இது முதல் விழுதாய் இருக்கக் கூடும் எனும் நம்பிக்கையில் பேசுகின்றேன்
போன பருவத்தில் நதி போன பாதை தேய்ந்து சுவடாகிக் கிடக்க புது வெள்ளம் சுவடழித்து பழசு மறந்து மறைத்து ஓடிக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா? வழக்கம் போல . வழக்கங்கள் பழக்கங்களுக்கு அடிமையாகாது புதிதாய் சிந்தனைகள் கேள்விகள் புறப்பட தினம் தோறும் எரிச்சல் தந்த காத்திருப்பு. முறித்து விட மனம் கனிந்து பின் கனன்று நின்றது. பழைய சுவடுகள் கண்ணில் படாது போயிருக்க பூமி மேல் முளைத்திருந்த பச்சை புல்லும் பூத்திருந்த வண்ணங்களூம் ஈர்க்க புதிய தடங்களோடு பயணிக்கிறேன்
இயந்திர மயமாகிப் போன வாழ்வின் இரசனைகளும் காதலுணர்வும் மாறிப் போகக் கூடுமா? என்ன?ஆனால் கூடுதலான உழைப்புக்கு அப்படியான உணர்வுகளை புதுப்பித்தல் தேவையாய்த்தானிருக்கிறது என்பதை உணராது வாழ்வதாய் சொல்லிக் கொள்ளும் மனிதராய் என் கணவர் குமாரும்.

அடுப்பில் தோசைக்கல்லை காய வைத்திருந்து காத்திருந்தேன் காத்திருப்பில் கவனம் திசை திரும்ப இப்போது அதிகம் காய்ந்து விட்டது கறுப்புச் சட்டியிலிருந்து ஆவி பறந்து கொண்டிருக்க இப்போ மாவு அதில் சமமாகப் பரவ முடியாது என் மனம் எதிலும், நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் ஒட்டாது தவிப்பதைப் போல , இருந்தும் பசிக்கு அவசரமாக ஊத்தித் தொலைக்க தேவையாயிருந்தது கரண்டியில் மாவெடுத்து சட்டியில் மையமாய் வைத்துச் சுற்ற கரண்டியோடு மாவு பாதி வெந்தும் வேகாமலும் பின்னாலேயே சுருண்டு வந்தது . எரிச்சல் பற்றிக் கொள்ள அடுப்பை நிறுத்தினேன். இனி இந்த தோசையை மனமா சாப்பிட முடியாது. தவிப்போடு காத்திருந்தது கிடைத்த போது அனுபவிக்க முடியாமல் போவது பற்றிய நீண்ட நாளைய வருத்தம் இன்றைய வெறும் சாப்பாட்டும் பிரச்சனையிலும் முன் நிற்க. போய் கட்டிலில் விழுந்தேன். வயிற்றுக்குள் பசி வளரஆரம்பித்திருந்தது சின்னப் புள்ளியாயிருந்த அதன் உருவம் வெடித்து உள்ளிருந்து வந்த ஒற்றைப் புழு மெல்ல ஊர்ந்த படி என்னைத் தின்னபடி விஸ்வரூபம் எடுக்க வண்ண சிறகுகள் மெல்ல முளைக்க பறக்கத் துவங்கியது கால்களில் மாட்டியிருந்தது என் உருவம். நான் பிடி உதற நினைத்து ஒன்றும் ஆகி விடப் போவதில்லை நினைத்துக் கொண்டிருக்கையில் தூக்கிப் பறந்த வழியில் கண்ட மெல்லிய ரோஜா பற்றிக் கொள்ள கையோடு வந்தது பூவோடு முள்ளும் அவள் கைகளில் அது வாளாய் உருமாறியிருந்தது .வாளெடுத்து வீசத் துவங்க இரண்டு பட்ட சிறகுகள் துண்டாகி காற்றில்ஆடி அசைந்து படகாய் மிதந்து வீழ கனமோடு அதற்கு முன்னால் தரை சேர்ந்திருந்தேன் .மீள முடியா காயமோடு இதற்கு கால்களடியிலேயே இருந்திருக்கலாமோ? நினைப்பே தவறு என மனமுதற வீழ்ந்த அவள் காயங்களின் குருதி ஈரத்தில் வேர் ஊன்றியிருந்தது அவள் கையோடு வந்திருந்த ரோஜாச் செடி.
இன்னொரு தலைமுறை அவளிலிருந்து சந்தோசமாய் முகிழ்க்க காயம் தாங்கத் தயாரனாள். விஸ்வரூபம் எடுத்ததை அடக்க நினைத்து குப்புறப் படுக்க கண் மூடிய போதும் நினைவுக்குள் இருந்து ஒன்றிலிருந்து மற்றொன்றாய் நிறைய வெடித்து கிளம்புவதை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது தடுமாற காதுக்குள் அலறல் ஓசை கேட்டது.
"வெள்ளிக் கிழமையும் அதுவுமா இப்படியா படுத்து மூஞ்சிய தூங்கிகிட்டு கிடப்பாங்க" காதுகளில் குரல் பட்டு எதிரொலித்தது நாராசமாய் இருந்தது வார்த்தைகளின் ஒலி அலைகள் காற்றில் கரைந்து விழுதலிலும் வேகமாய் வேலையோடு கரைந்து போயிருந்தான். குமார் கேள்விகள் ஒரு நாளும் பதில்களை நோக்கி ஒரு நாளும் எழுப்பப் படுவதில்லை இப்போ நிஜமாகவே வயிற்றுக்குள்ளிருந்து அலறியது வெறும் பசிதானா?
கேள்வி வந்தது
நிச்சயமாக இல்லை.
மனப் பசி காதல் பசி, காமப் பசி. வார்த்தையாடல் சரிதானா? யோசனை வந்தது நிச்சயமாக இல்லை இருக்க முடியாது. மனம் சொன்னது " பெண்களெல்லாம் காமப் பசி இல்லைன்னு பொய் சொல்வீங்க". மனதுக்குள் ஒருஆண் குரல் பெண்ணுக்காய் குரல் கொடுப்பதாய் சொல்லிக் கொண்டு போனது
"இல்லை இல்லை"
இப்போ கண்கள் மூடியிருந்தும் மனதோடு இதுவரை பேசியிருந்தவள் வாய் இப்போது உச்சரிக்க குளியறையிலிருந்து வெளிவந்த குமார் எரிச்சலோடு
" என்ன இல்லை?" என்று கேட்க விழித்துக் கொண்டேன்.
துண்டோடு ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தான் . தலை முடி படிய மறுத்திருந்தது அதை படிய வைப்பதையே பிரதான கலவையாகக் கொண்டிருந்த அவன் அவசரமும் செய்கைகளும் சிரிப்பு தந்தது . என் சிரிப்பின் வெறுப்பின் சாயலும் சுமந்திருக்க வேண்டும் கண்டு இன்னும் கோபமானான். தலையை துவட்டிய படியே "ஆமா ராத்திரியெல்லாம் கூப்பிட்டா வந்திடாத . இப்போ கிடந்து புலம்பு."
அவன் தலை முடி இருந்து தெறித்த நீர்த்துளிகள் ஊசிகளாய் என் மேலிறங்கின
எதற்கு பதில் சொல்கிறான் திகைத்து அதிர்ந்து போய் இருக்க தன் மனம் கேள்விக்கு பதில் கிடைத்தது சந்தோசமாயிருந்தது . இது காமப் பசியல்ல. அதுவாயிருந்தால் தனித்துக் கொள்ள எனக்கொன்றும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலியே. அதையும் தாண்டி இன்னமும் மனது வேறெதையோ தேடிக் கொண்டிருக்கிறது. ஏன் குமாருக்கு புரிய மறுக்கிறது. மனசு சிரித்துக் கொள்ள
"எல்லார் வீட்டிலேயும் எது நடக்கிறதோ? அது மாதிரிதான் நானும் இருக்கிறேன் . நீதான் என்னவோ பிரமாதமா என்னை காதலிக்கிறதில்லைன்னு கவலைப் படுறே." சொல்லிய வாறே கதவைத் திறந்து செருப்பு போட்டு வெளீயேறியிருந்தான் அலுவலகத்திற்கென்று
அவன் திறந்து வெளீப்போன கதவு மீண்டும் மூடிக் கொண்டது. இப்போ எதைத் திறப்பது?
யாருக்காகத் திறப்பது?
அவளுள் கேள்வி. சரி, கேள்விக்கு விடை கண்டு என்ன செய்ய ". இப்போதே பதில் கிடைத்திருந்தது மனப் பசியிலும் காதல் பசியிலும் மனம் துன்புறுவது . இந்த பதிலை தேடியிருக்க வேண்டியது நானா? இல்லை குமாரா? நான் இந்த பதில் தேடிப் பெற்று என்ன செய்யப் போகிறேன்? புரியாது விழிக்க விழி திறந்து வைக்க மனமில்லாது மூடிக் கொண்டேன். நான் நினைத்திருந்த காதல் கை சேருவதாயான கற்பனையில் ஒரு வித போதை வர மெல்லத் கண் அயர்ந்திருந்தேன் விழித்துப் பார்க்கையில் காட்டுக்குள் இருந்தேன். அடர் காடு. பெய்து ஓய்ந்திருந்த மழைத்துளியில் மிச்சங்கள் ஒவ்வொரு காற்றசைவுக்கும் உதிர்ந்து நனைத்தது எனை காதலால். எங்கிருந்தோ பறவை ஒலி தன் நேசத்தை காற்று வழி அனுப்பித்துக் கொண்டிருந்தது வித வித மான மிருகங்கள் என் நேசிப்புக்காயும் அரவணைப்புக்காயும் காத்துக் கிடக்க எல்லாவற்றுக்கும் தன் அன்பை பூரணமாய் வழங்கியபடி தன்னைத்தானே உயிர்ப்பித்த அகலிகையாய் நான் மாறியிருந்தேன். வனத்தினுள் ஒரு கோயில் ஆள் அரவமற்று சுகந்த காட்டு மலர்களின் வாசனையும் வேர்களின் வெப்ப சுவாசமும் கலந்தகாற்று நாசி தீண்டிப் போக கருவறை அருகில் சென்றேன். கடவுள் என் வாசம் பட்டு விழிகள் திறக்க கடவுள்ஆயிரத் தெட்டு வருடங்களாக தவமிருந்ததாயும் எனக்கே எனக்கானவள் நீயென்றும் சொல்ல சிரித்து வைத்தேன்.
கடவுளின் விழிகளில் திகைப்புத் தெரிந்தது
"பலபேர் தவமிருந்து என்னோடு கலந்திடும் வரம் கேட்டிருக்க, ஏன் சிரிப்போடு உன் நிராகரிப்பு? "
கடவுளின் கேள்வியிது
"உன்னுடையவளாய் எனைத் தந்து விட்டு பின்னர் உனக்காகவெண்று காத்திருக்கும் தவறு தனை ஒரு போதும் நான் செய்யப் போவதில்லை. நான் தேங்கி விடுகின்ற நீருமன்று. வேர் ஊன்றுகின்ற மரமுமன்று ஆதி அந்தம் சொல்ல முடியா நீர் உணர மட்டுமே முடிந்த காற்று , பெய்து விட்டு போன மழைநீர் தேனாய் மாறுகின்ற அதிசயம். சூரிய ஒளியாய் இருக்கையில் எரிக்கவும், நிலவின் ஒளியாய் மாறுகையில் குளிரவும் பழகிய ஒளி . தொடருக உந்தன் தவத்தை யாரையும் உடைமையாய் ஆக்கிவிடத் துணியாத மனத்துக்காக , சொல்லி காற்றாய்த் தழுவி நீராய் முத்தமிட்டு ஒளியாய் பிரிந்து பறந்தேன்
நிகழ்ந்து முடிந்திருந்த ஸ்பரிசத் சங்கமத்தில் உடல் கரைந்து போயிருக்க , கடவுள் கல்லாகியிருந்தார். இனி எந்த பெண்ணின் உடலிலும் சுகம் அடைந்து விட முடியாது என்பதை சுகங்கள் மனத்தோடு தொடர்புடையதை உணர்த்தி போயிருந்தது அவளது உடல். உடல் தாண்டி இன்னும் எதோ தெரியத் துவங்க. கடவுளுக்கு ஞானக் கண் திறந்திருந்தது.
எல்லாரும் எல்லாமும் உறைந்து நிற்க கையோடு சில பூக்களும் வேர்களும் நட்சத்திரங்களும் அன்புப் பரிசாய் தாங்கி என் பயணம்
என் மேனியில் நீர் வடிவது உறுத்த இமை திறப்பில் உதறப் பட்டன காடுகளும் எல்லாமும்.
மின்சாரம் நின்று போயிருக்க வியர்த்திருந்தது .பூவின் கடவுளின் வாசம் இன்னும் என் நாசியில். எல்லா எண்ணங்களையும் தூர எறிந்து விட்டு குளிக்கப் போனேன் . காத்திருப்பு என்பது என்னிடமிருந்து தன்னைக் கழட்டிக் கொண்டது
posted by Thilagabama m @ 5/27/2006 11:47:00 pm   0 comments
Wednesday, May 24, 2006
மனவெளிப் பயணம் 4

ஞாயிறு மாலை 3.45க்கு பெர்லினிருந்து கிளம்புகின்றோம். நீளச் சாலைகள் மட்டுமே உயிர்த்திருக்கின்ற பூமியில் இருக்கின்றோமோ எனும் சந்தேகம் கிளப்பும் புறவழிச் சாலை அப்படியான பூமியில் மனிதருக்கு பதில் வாகனங்கள் மட்டும் உயிர்வாழ்வதாய் தோற்றம் தர ,இயந்திரங்களோடு வாழப் பயந்து பின்னோக்கி ஓடும் பூமி, அதில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்க முயலும்மரங்கள்
கிருஸ்துமஸ் விழாவிற்கென்று வளர்ந்து உதிராது நிற்கும் பசுமை சுமந்திருக்கும் மரங்கள்,மூடிய காரின் கண்ணாடிக் கதவுக்குள் இருந்து காணக் கிடைக்க, ஒரு மணி நேரத்தில் 180 கி. மீ வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வசதி. வழியெங்கும் இலையுதிர்க்க நிறம் மாறிய படி இருக்கும் மரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் மொட்டை மரமாக நிற்கத் துவங்கும். மரங்கள் சொல்வதில்லை குளிரை விழுங்கி குளிரோடு சிலநேரம் தனது பச்சையங்களையும் தானே விழுங்கித்தான் பத்திரப் படுத்தப் போகின்றதோ?
பயணங்களில் தான் என் மனம் என்னோடு பேசத் துவங்குகின்றது . நான் காது கொடுத்து கேட்க வேண்டியவளாகின்றேன். எப்பவும் எல்லாரும் அவர்களுக்கான மகிழ்வாய் நான் மாறுவதை விரும்பும் போது நான் மாறிப் போகின்றேன் ஏனென்றால் நானும் அதையே விரும்பினேன். எனக்கானவராய் மாறிப் போகின்ற நபர், காலம், சூழல் இதிலெல்லாம் காதல் உருவாகத் துவங்குகையில் எதிர்த்திருப்பவர்களின் எதிர்பார்ப்பை மிதிக்க முடியாதவர்களாகிப் போகின்றோம். நான் எப்பவும் சலனிக்காது என் வேலைகள் இலட்சியங்கள் போராட்டங்களோடு பயணிக்க பயண நேரங்கள் பெரும்பாலும் எனது தனிமையான நேரங்களாகிப் போக என் மனம் அந்த நேரங்களில் தான் என்னோடு தர்க்கிக்கின்றது. பேசுகின்றது ,காதலிக்கின்றது , சண்டையும் போடுகின்றது . அதனூடான குடும்ப வாழ்வின் பிரசவங்கள் தான் என் எண்ணக் குழந்தைகள் எழுத்துக் குழந்தைகள்
சூரியன் வாயு சந்திரன் , இந்திரன் என எல்லா உயர் சக்திகளுடன் என் மந்திரம் கலக்க கை சேருகின்ற குழந்தைகளை ஆற்றில் விடாது அர்ச்சுனனாக்கும் வலு சேர்க்கின்றேன் எப்பவும் என் கைகளுக்கு.
இன்பா கேட்கின்றார், பல முக்கிய படைப்பாளிகளுடன் தாங்கள் பயணித்த போது இருந்த கலகலப்பு என்னோடு பயணிக்கின்ற போது இருக்கவில்லையே என்று, ஒரு கவிஞர் அல்லது கலையோடு தொடர்புடையவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என தீர்மானிக்க முடியுமா?
524 கி.மீ பயணம் டென்மார்க் நோக்கி. வைன்(vegen) வந்து சேர, சத்ய்தாஸ் அவரது வீடு வந்து சேர்ந்தோம். சாப்பிட்டுஅன்றிரவு சத்யதாஸின் மகள் சத்யா “பாலம்” எனும் பத்திரிக்கைக்காக பேட்டி எடுத்தார்.அவரது வீட்டில் அன்று இரவு தங்கிய பொழுதுகள் அற்புதமானவை, அதை அப்படியானதாய் மாற்றியது சத்யா, சில நேரம் இளையவர்கள் ஆச்சரியப் படுத்துகின்றார்கள் அவர்காளின் இயல்புகள் எங்களை கற்றுக் கொள்ள வைக்கின்றன. இன்னமும் எந்த வித சாயலும் படிந்திடாத அதே நேரம் நிகழ்கின்ற வாழ்வை ஒட்டி சிந்திக்கின்ற அனுபவம் வாய்த்திருக்கின்றதையும் காண சந்தோசம் வருகின்றது . அதை விட நான் பேசுகையிலும் அதை அப்படியே ஏற்காமல் கேள்வி எழுப்பி புதிய தளமிருந்து என்னையும் யோசிக்க வைத்த சத்யா தற்போதைய போலித் தனங்களோடு எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணியக் கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து புதிய இளம் தலைமுறை புதிய கட்டமைப்புகளை அதன் தனித் தன்மையால் நிகழ்த்தி விடும் எனும் நம்பிக்கையும் நாமும் எங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பதையும் அடையாளம் காண்பித்துப் போகின்றது .
24.10.05
மறு நாள் கிளம்பி அருகில் இருந்த குன்ஸ்ட்(kunst museum) அருங்காட்சியகம் போனோம் அன்று விடுமுறையாம். வெளியே இருந்த சில சிற்பங்கள் பச்சை புல்வெளியில். சுள்ளென்று அடிக்கும் வெயில், எங்கிருந்து தான் குளிர் வருகின்றதோ தெரியவில்லை, உள்ளுக்குள் நடுங்கிய படியே தான் கருஞ் சிற்பங்களை பார்க்க கொஞ்சம் நெஞ்சதிர்கின்றது. காற்றையும் கிழித்துக் கொண்டு அல்லது அதோடு கரைந்து அதுவாகவே மாறி , காற்று மனித முகம் கொண்டு வேகமெடுத்து ஓடுவதாய் ஓட அதன் கையில் மணல் மணிக் கூடு. அசையாச் சிற்பமெனினும், காலம் மெல்லக் கரைவதாயும் அதற்குள் ஓட வேண்டிய இடத்தைச் சேர்ந்து விடத் துடிக்கும் மனிதனின் அவல வடிவத்தையும் குறிப்பதாய் தொனிக்கின்றது. அதே வேளையில் நம்மூர் சிற்பங்கள் நினைவு வருகின்றது இந்தியாவிலும் போரும் போர் சார்ந்த வாழ்வும் இருந்ததை நம் சங்க இலக்கியங்கள் மூலமும், இன்னமும் அதன் சாட்சியாய் நிற்கின்ற கோட்டை கொத்தளங்களை காணும் போதும், அதன் வழி வந்த கலை வடிவங்களான இலக்கியமோ, சிற்பமோ, ஓவியமோ எதிலும் அவநம்பிக்கை பயணம் இருந்ததில்லை. ஆனால் மேலைத் தேய இந்த எல்லாக் கலைகளிலும் அவநம்பிக்கை பயணம் தெரிய நமது கலைகளின் ஆழம், போருக்கு பின்னும் நம்பிக்கையில் பயணிக்க வைத்த வாழ்க்கை முறை , கலாசாரம், பண்பாடு எல்லாம் மகிழ்வைத் தருகின்றாது.

குன்ஸ்ட் அருங்காட்சியம் அருகே கடை வீதியில் இருந்த ஒரு சிலையொன்று உயர்ந்து நின்ற கவசம் பூன்ற அந்த சிலை எழும்புக் கூடுகளின் மேல் நிமிர்ந்து நின்றது அந்த சிலையின் அடியில் கவிதை வரிகள் எங்களுடன் வந்த சத்யதாஸ் அவர்களின் மொழிபெயர்ப்பில்
niels Hansan Jacobsen(1861-1941)என்பவரின் கவிதை வரிகள்“ தலையிலிருந்து கால் வரை இரும்புகளால் அணிந்திருந்தான் அவன் முகத்தில் கழுகின் சாடை இருந்தது, கொடுமை செய்வதை பற்றி கருணை இல்லாதவனாக இருந்தான். அவன் காலில் விழுந்து கெஞ்சினேன். அதெற்கெல்லாம் அவன் மசியப் போறதில்லை.
பேசுவதற்கு ஒன்றும் இல்லை. வலியை உணர்த்துகின்ற வரிகள்
Militarismen(1898-1899)
போகிற வழியில் வயல் வெளிகள் உழுது விட்டபடி கிடக்க, இதுவரை புலம் பெயர்ந்த தமிழர்கள் விவசாயத்தில் நுழையவில்லை. காணி வாங்கி விவசாயம் பண்ணுவது ஏன் சாத்தியப் படவில்லை.
வயல் வெளிகளில் குளிர் காலத்திற்காக சேகரிக்கப் பட்ட வைக்கோல் வெள்ளை பாலிதீன் பைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றது
அங்கிருந்து கிளம்பி ரீபெக்( Ribe) எனும் கிராமத்திற்கு செல்கின்றோம். நதி உண்மையில் நதியின் கரையில் நிற்கின்ற மகிழ்வைத் தருகின்றது. கொஞ்சிச் சிணுங்கிய படி ஓடுகின்றது நிறமற்றிருந்த நீர் அதற்கு நிழல் தந்து கொண்டிருந்த மரங்கள் , நீரில் மிதந்து கொண்டிருந்த படகுகள் அதன் பின் புறத்தில் பழமையின் வண்ணம்குறையாது ஒரு ஒழுங்குகளுக்குள் நிற்கும் கட்டிடங்கள் என நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் நகரமாய் இருக்க, பெரிய நுழைவாயிலுக்குள் நுழைகின்றோம். தரையெங்கும் சதுர சதுர கற்கள் பதித்திருக்க. தெருவில் நடந்து கொண்டிருக்கும் போதே வானுயர நின்ற அந்த தேவாலயம் பழமையின் கம்பீரம் ஜொலிக்க நிற்கின்றது தேவாலயங்களோ கோவிலோ அதன் பிரம்மாண்டத் தோற்றம் நமக்குள் இருக்கும் “நானை” சின்னதாக்கிப் போடுகின்றது
பாதிரிமார்கள் புதைக்கப் பட்ட இடங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய மெலிதான சிற்பங்களைக் காண எனக்கு சித்தர்கள் நினைவு வந்து போகின்றது.
தேவாலயத்தின் மேல் தளத்திற்கு போகின்றோம்.தூரத்து நதி கடலோடு கலந்து வரும் சங்கமிப்பு மெல்ல ஊறும் புழுக்களாய் நகர்ந்து போய்க் கொண்டிருந்த இரயில் பச்சை பசேலென்று அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த மனித சாம்பல் சுமந்து நிற்கும் சுடுகாடு? இடுகாடு? உயர இருந்து பார்க்க சகதிகள் கூட கண்ணுக்கு அழகாகவே தெரிய காற்றின் குளிரை உள்வாங்கியபடி தேவாலயத்திற்குள் இறங்குகின்றோம்.
1686ல் வடிவமைக்கப் பட்ட கடிகாரம் 450 வருடங்களுக்கு முந்தியது என்ற போதும் ஓடிக் கொண்டிருக்கின்றது.எத்தனை விதமான பருவ மாற்றங்களுக்கு, சூழல் மாற்றங்களுக்கு, எத்தனை விதமான மனிதருக்கு சாட்சிகளாக நின்று கொண்டிருக்கிறது.
இன்றைய நவீன ஓவியங்களின் குழப்பங்கள் இல்லாது வருடிப் போகும் ஓவியங்கள் , தாங்கியிருந்த சுவர்கள் பேரமைதியும் குளிர்ச்சியும் தந்து போகும் சூழல். உயரத்தில் இருக்கும் ஆர்கன் கேட்க மட்டுமே சாத்தியப் படுகின்ற இசையை பார்க்கவும் முடிகின்றதாய் மனப் பிரமை தர வெளியேறுகின்றோம். வைனை இட்டுக் கிளம்பி ஆர்ம்ஸ்டர்டாமை நோக்கி பயணமாகின்றோம்

பகல்கள் இரவுகளாக
நிறாம் தொலைக்கப் பார்க்கின்றேன்
இரவுகள் விடியல்களாக
கழுவிப் போட அதில் நடக்கின்றேன்

சந்தோசங்கள்
அடுத்த கட்டத்தில்
உருட்டிய தாயத்தில்
பாம்பு கடித்து வால் வந்து சேர
கனத்து சுமைகளாகிப் போகின்றன
விதைத்து விட்டு
அறுவடைக்கு காத்திராது
அடுத்த பருவம் தேடிப் பறக்கும்
கண்டம் கடக்கும் காலப் பறவை
மீண்டு வருகையில்
முடித்த அறுவடை போக
சிதறிய நெல்மணிகள்
என் திரும்பலுக்காய் காத்திருக்க
விரித்த சிறகுகளில்
வியனுலகு குடித்து முடிக்கின்றேன்
மண் தின்னதை
யாரும் காணாததால்
இதுவரை என்
வாய் திறக்கச் சொல்லவில்லை
அதற்குள் சுழலும் உலகம் காண

இப்பொழுது நால்வராக மழையும் எங்களோடு புறப்பட்டிருந்தது சுட்டிக் குழந்தையாக கால் உதறி வீம்புக்கழுகும் குழந்தை நினைவு வைப்பர் தள்ளத் தள்ள வந்து வீழும் தூறல் தந்து போகின்றது
மாலை 5 மணிக்கு துவங்கிய எங்கள் பயணம் இரவு நீண்ட நேரம் ஆகிவிட தொடர்ந்து போக முடியாது “ஹம்பெர்க்” எனும் இடத்தருகில் வண்டி நிறுத்தி ஓய்வெடுக்கவென்று ஒதுக்கப் பட்ட இடத்தில் நிறுத்தி விட்டு அதோடேயே தூங்கிப் போனோம் சுருட்டி எடுத்து வந்திருந்த படுக்கைக்குள் எங்களைத் திணித்துக் கொண்டு பூட்டிக் கொண்டோம். கூட்டுப் புழுவாய் மாறுதல் மனிதனுக்கு சாத்தியமா? விடியலில் வண்ணச் சிறகுகள் என் முதுகில் முளைத்திருக்குமா? தூக்கத்தில் லார்வாவாகி முடங்கி, சிறகுகளோடு வெளிவந்து நிறங்களை பூமியெங்கும் நான் உதிர்க்க………
எங்கிருந்தோ வந்து நின்றது காவல் துறை வண்டி. எங்களது வண்டி சக்கரங்களில் ஒன்று காத்தில்லாமல் இருப்பது பற்றி எச்சரிக்கை செய்து போக முயலும் போது எங்கள் வண்டியில் இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்டிருந்த ஒரு விபத்தில் வண்டியின் முன்பகுதி நசுங்கியிருப்பதை கேள்வி எழுப்பி அது பற்றிய முழுத்தகவலும் பெற்றுக் கொண்டு எங்கள் கடவுச் சீட்டுக்களை பரிசோதித்து விட்டு வண்டியை சரி செய்து கிளம்ப இரத்தமும் சதையுமான மனிதன் வெறும் கடவுச் சீட்டாக மாறிப் போவது பற்றிய கவலை எனக்குள் எழுகின்றது. சக்கரத்தை சரி செய்து கிளம்ப எத்தனித்த போதும் தூக்கம் மூவரையும் அழுத்த மீண்டும் ஓரிடம் நிறுத்தி 8 மணி வரை தூங்கிப் போனோம்
நாங்கள் விழித்த போது இரவெல்லாம் விழித்திருந்த அசதியில் தூங்கிப் போயிருந்தது மழை, உடன் சூரியனும். மேகக் கூட்டத்திற்குள் தன்னை திணித்துக் கொண்டு எழும்ப மனமில்லாது கிடந்தது சூரியன்.
10 மணிக்கு ஆம்ஸ்டர்டாம் நகரின் எல்லைக்குள் நுழைகின்றோம் நாங்கள் எதிர்பார்த்து வந்த உறவினர்கள் வீட்டில் இல்லாது போக வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு விட்டு அங்கேயே இருந்த கடையினில் முகம் கழுவி நாங்களும் குரோசோங்(crosong) சாப்பிட்டு விட்டு நகருக்குள் புகுந்தோம். ஊரின் நடுப் பகுதிக்கு வர திடீரென எங்களை ஒரே மாதிரியான உயர அழகிய கட்டிடங்கள் சூழ்ந்து கொண்டன. நாங்கள் மிரண்டு நிற்கிறோம் ஒரே சாலையில் டிராம் மற்றும் அனைத்து வாகனங்களும் பயணிக்க தயக்கங்களோடேயே வண்டி ஊர்கின்றது. அருங்காட்சியகங்கள் நிறைந்த நகரத்தின் முக்கிய இடத்தில் வந்து வண்டியை நிறுத்தி விட்டு ஓட்டி வந்த களைப்பு தீர இன்பாவை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு வான்கோவின் ஓவியங்கள் நிறைந்த அருங்காட்சியகத்திற்குள் செல்கிறோம்.
posted by Thilagabama m @ 5/24/2006 05:14:00 pm   0 comments
Monday, May 22, 2006
விடுமுறைக் காலங்கள்
பள்ளி செல்கின்ற குழந்தைகளோடு நாமும் விடுமுறையை அனுபவிக்கின்ற மனோநிலைக்கு வந்து விடுகின்றோம். டார்ஜிலிங், துரூக்கி என பயணங்களை முடித்து விட்டு இப்பொழுது தான் திரும்பியிருக்கின்றேன்.தொடர்ந்து எழுதுவேன்.
posted by Thilagabama m @ 5/22/2006 10:02:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates