சூரியாள்

Wednesday, August 23, 2006
பெரு வெடிப்பு-கவிதை
பெரு வெடிப்பு

மணல் வெளி
விரல்கள் கோடிழுக்க
இழுத்த நேர்கோட்டிற்கான புரிதல்கள்

விரலை தட்டி விடும்
கற்களைப் புறந்தள்ளி
அலுங்காது இழுத்த கோட்டில்
ஸ்திரம் காணக் கிடைத்ததாய்
நான் சொல்ல

வட்டங்களை சிதைக்க வந்த
கருத்தியல் கொண்டு வந்ததாய்
கோடுகளின் நிறம் மாற்றி
பேசும் நீ

புரியாமல் போனதை சொல்ல
எழுந்து வரும் உன் கோபங்களை
புரியாமைக்கான சாட்சியங்களாய்
உன் முன் நிறுத்த
வட்டம் , கோடு எல்லாம் தொலைத்து
மணல் வெளியெங்கும்
புள்ளிகளாய் சிதறிப் பரவும் நீ

ஒவ்வொரு பெரு வெடிப்பின் பின்னும்
ஒன்று திரளும் கோளாய்
புள்ளிகளிலிருந்து புறப்பட்டுக் கிளம்பும்
நான்

இருளாய் பகலாய்
மலையாய், கடலாய்
பசிய புற்களாய் , பாறைகளாய்
எதுவாய் நீ அடையாளப் படுத்திய போதும்
இதுவெல்லாம் உள்ளடக்கிய
நீ கண்டு விட முடியாத
ஒன்றாக நான்
posted by Thilagabama Mahendrasekar @ 8/23/2006 09:37:00 pm   0 comments
Tuesday, August 15, 2006
விடுதலைஎன்பது கடின உழைப்பு-கவிதை
சென்னை தொலைக்காட்சி கவியரங்கில் படிக்கப் பட்டது

விடுதலை என்பது உழைப்பு

கந்தக பூமியில் கருவேல நிழலில்
வெளியில் பூத்து வேரில் காய்க்கும்
கரிசக் காட்டு கடலைப் பூவொன்றின்
கனிவான வணக்கங்கள்

நதிகளை உவர்ப்பாக்கி
உவர்ப்பிலும் முத்தெடுத்து தரும்
கடல் சுமந்த ஊரிது

கரையெல்லாம் கால் ஒட்டா மணலாக்கி
சுவடுகளை பத்திரபடுத்தி தேடவும் விட்டு
உணர்விலும் விடுதலை தந்தவர்களை
சிலையாக்கி கரையெல்லாம் சிறை வைத்த ஊரிது

அரசியல் மாற்றங்கள்
ஆட்சி மாற்றங்கள் கண்ட போதும்
பல் கலப்பு மொழியை செம்மொழியாக்கி
தமிழென உலா விட்ட தமிழக தலைநகரிது

இங்கு
விடுதலை பாட வந்த கவிஞன் நான்
வானத்துள்ளும் வசப் படாதது கவிதைதான்
தலைப்புக்குள் சிறைப்படுமோ தெரியாது
உழைப்புள் விடுதலை வசப்படும் உண்மையறிவேன்

கவிதைக்குள் கதை
சிறைகள் பெயர்த்த கதை
இவை தொடர் கதைகளல்ல
எங்கு விட்டாலும் பிடித்து கொள்ள
நூலிழை விடாது பின்வாருங்கள்
நான் விடுகின்ற கதையை பிடித்து கொள்ள
காதுகள் எம் பாட்டுக்குள் தலை விட
உணர வைப்பேன் விடுதலை
கண்களூக்குள் காட்சிகள் வந்து விட
காண வைக்கும் கவிதை விடுதலை


முக்காடிட்ட தள்ளாமைக்குள்
மூழ்கியிருந்த உருவம் ஒன்று
உள்ளங்கை தீ வடுவுக்குள்
கரை தேடுது நினைவுகளோடு இன்று

சூடிழுத்தது உன் அம்மாவா
சொல் பேச்சு கேட்காததாலா
கோடிழுத்த என் கேள்விக்குள்
பெருமூச்சு தனை விட்டாள்

பாட்டி வடுவுக்குள் வீழ்ந்து
நினைவுகள் எடுத்துப் போட்டாள்

கன்னி வாடி ஜமீனில்
கன்னியாய் தானிருந்த நேரம்
கோட்டையுள்ளே உடையவரும்
வாயில் வெளியே முதலையாய்
உள்நுழைய காத்திருந்தவரும்

பிடிபட்டால் நிழந்து விடும்
சூறையாடலுக்குப் பயந்து
மூட்டிய தீயில்புகைக்கு பதில்
சூழ்ந்திருந்தது பெண்ணினம்

வாயிற்கதவு உடைபட
வேக தீயில் வீழ்ந்தனர் வேகமாக

வீழ்ந்த உடல்கள்
காற்றும் நுழைய விடாது மறுக்க
உயிர் உடல்கள் தின்னவெறுத்து
பெண்ணுடல்கள் அணைக்கமறுத்து
அணைந்து போனது தீ

விருப்பமில்லா பெண்களை
தழுவ விரும்பாது தானே தீக்குளித்தது தீ

கரித் தழும்போடு எழுந்தவர்கள்
விறகோடு விரட்டினர் வெள்ளையர்களை
தருணங்கள் உணர்த்திய விடுதலை
வடுவோடு சொல்லிப் போன பாட்டி

மூழ்கிய நான் திடுக்கிட
இருட்டுற நேரத்துல என்ன வாய்ப்பேச்சு
போகிற வழியில் எண்ணெய் வாங்கு
வீடு பெருக்கு விளக்கு பொறுத்து
வைச்ச உலையை பார்த்துக்கோ
குலசாமிக்கு விளக்கு போட்டு வந்திடுறேன்
சொல்லிப் போன அம்மா குரலில்

அன்று கைவந்த
விடுதலை உணர்வைஉணர முடியாது
தேடுகின்றாள் பாட்டி
வீடு வெளிச்சமாய் சுத்தமாய்
பெண் வாழ்வு யாரும் துடைக்க முடியா
அழுக்குகளோடு
விடுதலை இல்லா உழைப்போடு

சூரியனும் துளைத்து உள் வர முடியா காடு
ஆரியன் உள்நுழைந்து திருத்தி வைத்த வீடு
கம்பி வெளி கிளி உலாவும் காற்று வெளிக் கூடு
பூனைகளிடமிருந்து காப்பதாய் கோவலன்களின் கூப்பாடு

வானவெளி சிறகு விரியும்
மாதவிகளில் பறத்தல் கோவலன்களுக்காக
தத்தி நடை பயின்று கூண்டுச்
சிறையிருக்கும் சீதைகள் இராமன்களுக்காக
வெளிகளோ உள்ளிருப்புகளோ
மாறுவதெப்போ அவரவர்க்காக
மாறிய தருணத்தில் சாத்தியமான பொழுதுகளில்
களிப்பு கை சேரும் விடுதலைக்காக

கொத்தப் போன தானியத்துள்
சிறையிருந்தது விருட்சம்
தனக்குக் கிடைக்காத விடுதலை
தந்து விட கிளி கொண்டது விருப்பம்
கூண்டுத் துளை வழி
வழிய விட்டது தானியத்தை
தினம் தோறும் வார்த்தது
தான் குடிக்க இருந்த நீரை

விதை வெடிச்சு சிறகாச்சு
வேர் விட்டு செடியாச்சு
கிளை வெடிச்சு மரமாச்சு
வேரின் ஊன்றலில் ஒரு நாள்
கூண்டு பெயர்ந்து தூள் தூளாச்சு
வான வெளி இன்று கிளிக்காச்சு
மாதாவி கண்ணகி எல்லை இல்லாதாச்சு

விடுதலை என்பது
விட்டு விடுதலையாவதா?-குடும்பம்
கட்டுடைத்து போவதா? இல்லை நிதம்
சோறுபடைத்து மூழ்குவதா?

விடுதலை என்பது
பெண்ணை உணருவதா?-இல்லையவள்
தன்னை உணருவதா? மனித இருப்பின்
தன்மை உணருவதா?


விடுதலை என்பது
வெளியேற உழைப்பதா? நான்மட்டும்
தப்பிக் கொள்ள நினைப்பதா-வருங்காலம்
வெளியேற வாசலுமமைப்பதா?

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த
நேற்று உழைச்சாச்சு
பற்றிய நெருப்பு கனலாய் எரிய
இன்று கனன்றாச்சு
தொட்டது பூவாய் மலர்ந்திடவென்று
விதைத்தது நானாச்சு
பட்டது போக உழைத்த பலனை
பார்க்கும் நாளாச்சு

நாஜிகளின் வன்கொடுமை வாசலில்
ஒரு வாசகம்
வேலை செய்தால் விடுதலை யடைவாய்

விடுதலை அர்த்தம் மரணமென்று
அவர் சொன்ன கதை பழம்பொருளாச்சு

செக்கிழுத்தும் சிறையிருந்தும்
கப்பல் விட்டும் விதேசி விட்டும்
போராடிய காலங்கள் போயாச்சு
விடுதலை அர்த்தமின்று வேறாச்சு

சுருங்கிச் சும்மாடாய் போன உலகத்திலே
மனம் விரியவென்று வாய்ப்பிருக்க
திறந்த பலகணிகள் வழியாக
உள்நிழையுது பல அரக்கிறுக்கு

நீண்ட இரவிருக்கு குளிரிருக்கு
குடும்பஅமைப்பில்லா மேலைத் தேயத்திலே
மன வக்ரமிருக்கு வடிய விடும் கலையிருக்கு அதை
அள்ளித் தெளிக்குது கீழைத் தேயத்திலே
நீண்ட மரபிருக்கு வலுவிருக்கு
காவியங்கள் தந்த நம்ம தேசத்திலே அதை
மறந்திருக்கு புடிக்குது புதுக்கிறுக்கு
விற்க வலை வீசும் உலகமயமாக்கலிலே

பெண்உடல் பண்டமாகுது,நுகர் பொருளாகுது
இலக்கியத்துள்ளும் நீலிக் கண்ணீர் வடிக்குது
வணிகமயமாக்கலிலே
சோம்பலிருக்குது பீடம் தேடித் திரியுது
ஆளைப் போட்டு ஏறி மிதிக்குது
உழைக்க மறந்த வீணர் கூட்டத்திலே

ஆக்ரமித்திருந்த காலச்சுவடுகள்
போலிகளாய் உயிர்மைகள் போர்த்த உடல்கள்
விற்க வீசும் வலையிலே
விழுந்திடாது காக்கனும் பெண் உழைப்பு

வெள்ளித் திரை ராமகிருஷ்ணன்களை
வேரறுக்கட்டும் சீதை ராதைகள்
கோபியர்கள் சூழத் திரிந்த கண்ணன்களுக்கு
தந்து போகட்டும் தனிமைச்சிறையிருப்பை ருக்மணிகள்
பச்சைத் தமிழன்கள் பச்சை தேவதைகளுக்கு
முந்தானை விரிக்கையில் முத்துலெட்சுமிகள்
சீறி எழட்டும்
கள்ளத்தனம் உடுத்தி திரியும் மனுஷ்ய புத்திரன்கள்
புதிய தாண்டவத்திலே புறம் காட்ட
பெண்ணின உழைப்பு
உணரத் தரும் விடுதலை உணர்வு

உழைப்பை சொல்லனும் உரத்துச் சொல்லனும்
உழைப்பு தரும் விடுதலையைகாணச் செய்யனும்
உண்மை சொல்ல சொல்லனும்
மண்ணோடு மக்களை நினைக்கச் சொல்லனும்
இலக்கியம் மண்ணில் வேரூண்றி கிளைக்கச் சொல்லனும்

விடுதலை என்பது உணர்வு
உணர்வு தருவது உழைப்பு
உழைப்பு தரும் தனித்துவம்
தனித்துவம் தரும் விடுதலை

விடுதலை கோசமல்ல
விடுதலை போராட்டமல்ல
விடுதலை உனக்கானதல்ல
விடுதலை அவரவர்க்கானது

அவரவர் உழைப்பில் சாத்தியமாகும்
சத்திய விடுதலை எல்லாருக்குமானது
posted by Thilagabama Mahendrasekar @ 8/15/2006 12:49:00 pm   1 comments
Thursday, August 10, 2006
பொதிகை சுதந்திர தினக் கவியரங்கம்
ஆகஸ்டு 15 சுதந்திர தினக் கவியரங்கம் காலை 10.05 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.
பங்கேற்பாளர்கள்.ஜவர்கர்லால், பரிணாமன், முத்துலிங்கம்,சொ.சோ.மி,வெண்ணிலா திலகபாமா
posted by Thilagabama Mahendrasekar @ 8/10/2006 10:12:00 pm   0 comments
Monday, August 07, 2006
நனைந்த நதி -6

விழிகள்
- திலகபாமா
-
விழிகளுக்கு நான் அடிமையாக நேர்ந்த கதையை நினைத்துப்
பார்க்கின்றேன். நினைவுகளின் ஒரு பக்க நுனியெடுத்துப் பிடித்தபடி
அதன் ஆரம்பம் தேட மெல்ல நகர்கிறேன். என் நகர்தலில் என்
பாவாடை சட்டைப் பருவம் வந்து நிழலாட.....
அந்த குறுகலான சந்தில் நெருக்கலான வீடுகள், உயரம் குறைவான
நிலைப்படிகள். மாலை நேர மஞ்சள் வெயில், தன் பங்குக்கு வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்களோடு போட்டி போட்டுக் கொண்டு தன் கோலத்தை பூமி மேல் எழுதிக் கொண்டிருந்தது சந்தின் முடிவில் இருந்த தண்டவாளத்தில் இரயில் காற்றில் புகைக் கோலமிட்டபடி போய்க் கொண்டிருக்க, குதியாட்டமும் கையாட்டலுமாக சந்தோசத்தில் திளைத்திருந்த பிள்ளைகள் கூட்டம்.
கருவேலஞ்செடிகளும், எருக்கஞ்செடிகளும் நிறைந்திருக்க ,
கருவேலஞ்செடிகளின் இலைகளில் சமைப்பதாய் பாவணை செய்து
கொண்டிருந்த பெண் குழந்தைகள், எருக்கஞ் செடியில் பட்டுப் புழுக்களை
தேடி சேகரித்து கொண்டிருந்த குழந்தைகளின் கூட்டம் எல்லாம் தாண்டி
ஈரமாயிருந்த தெருவில் பாவாடை நனையாது நான் தூக்கிச் செருகிக்
கொண்டு நடந்த அந்த மஞ்சள் வெயில் மாலை வேளை நினைவில் வந்து
போனது.
எழுவது வயது ஆச்சியும் நானும்.. வயது தன் வருகையை
அவர் கைகளில் செதுக்கியிருந்த சுருங்கிய தோலை நிமிண்டிக் கொண்டே என் கேள்வி

" எங்கே ஆச்சி போறோம்?"
“இங்கே ஒரு பெரியாச்சி இருக்காங்கடா. எனக்கு அக்கா
அவங்களை பார்க்கப் போகிறோம்.”
உங்களுக்கு அக்கா இருக்காங்களா? தங்கச்சி , தம்பி எல்லாம் இருக்காங்களாஆச்சி?

இருந்தாங்கடா ,ஒரு தம்பி, தங்கச்சி.. .. இப்ப இல்லை இறந்துட்டாங்க. இந்த அக்கா மட்டும் தானிருக்காங்க
வாழ்வைப் போல் எங்கே குறுகும், எங்கே திரும்பும் என்றறியா தெருவில்
போய்க் கொண்டே இருக்க பெரிய பழைய மரக்கதவொன்றின் அருகில் வந்து
நின்றோம்.

"பூவேய்,.. ..மல்லி, முல்லை ... . .. ..

என்று தெருவில் வித்துக் கொண்டு போக

எங்கிருந்தோ ஒரு குரல்

“எனக்கும் பூவு? குரல் வரும் திசைதேடி, அது என்னால் அனுமானிக்க

முடியாததாய்......

அதே நேரம் யாருமே அந்தக் குரலை, பூக்காரி முதற்கொண்டு கண்டு
கொள்ளவில்லை என்பதுமெனை யோசிக்க வைக்க, திரும்பித் திரும்பி நான்
தேட, நாங்கள் நின்றிருந்த வாசலின் கதவடியில் ஒரு துளை இருக்க அதில்
கண் ஒன்று முளைத்திருந்தது .இங்கிருப்போர் எல்லாருக்கும் மிகப் பழக்கமாயிருந்த குரல் போலும் அது.....

குழந்தைகள் தங்கள் விளையாட்டில் மூடிய கண்களோடு
கோடுகளை மிதிக்காது செல்லாக்குகளை மிதிக்க நகண்டு
கொண்டிருந்தார்கள். பையன்களோ சிமெண்ட் பாலங்களுக்கிடையில்
கிட்டிப் புள் வைக்க தோண்டியிருந்தார்கள்.கிட்டிப் புல்கள் தாக்குமோ
பயந்தில் அந்த வழியாக வந்த யாவரும் யோசித்த படி நடக்க. யார்
காதிலும் விழாத அந்த குரல்

எனக்கு மட்டும் மிகத் துல்லியமாகக் கேட்டது. பேசியது கண்கள் என நான்
உணர்ந்ததாலா?

கண் பேசியது, " நான் காசு தரேன் பூ வாங்கிக் கொடு “
இமைக்கும் கண்கள் பேசியதாய் தோற்றம் தர, கண்கள் பேசுகிறது
என்கிற எண்ணத்திலிருந்து நான் மீளவே முடியாது தவித்துக்
கொண்டிருக்க , ஓட்டை வழியா இரு விரல்கள், விரல்களுக்கு நடுவில்
செல்லாமல் போயிருந்த அலுமினிய மூன்று பைசா காசொன்று.

இந்த உலகிலிருந்து அந்த பேசிய விழிகள்
அந்நியப்பட்டிருக்கும் கால இடைவெளியை காட்டி நிற்க,

“இந்தா எனக்கு கொஞ்சம் பூவாங்கிக் கொடு.

“பொறு கதவு திறக்க குமார் வரட்டும் வாங்கலாம்”.அதட்டலா இல்லையா

என்று தீர்மானிக்க முடியாதவாறு ஆச்சியிடமிருந்து பதில் வர,

விளையாடிக் கொண்டிருந்த எதிர் வீட்டுப் பிள்ளைகள்

இவ்வுலகு மறந்து தன்னுலகில் நிலைத்திருக்க, அவர்களில் ஒரு பெண்ணை

அழைத்தார் ச்சி,

“ பாப்பா, குமார் அன்னாச்சியை ப் போய் கூப்பிட்டு வர்றியாப்பா?

ஒருஆச்சி வந்திருக்கேன்னு போய் சொல்லு.”

“சரி பாட்டி”. சொல்லி விட்டு ஓடினாள்

வாசலில் காலாட்டியபடி விளையாடுபவர்களை பார்த்துக்

கொண்டிருந்தேன். மாமாவை கூப்பிடப் போன பிள்ளையால் விடுபட்ட

இடம் எவ்வளவு விரைவாக நிரப்பப்பட்டுவிட்டது.

" பொரிகடலை வாங்கிக் கொடேன்'

மெல்லப் பயம் நீங்கி விழிகளை ஏறிட்டேன்

புருவம் அற்ற விழிகள்

விழிகளுக்கு முன்னால் அந்த 3 பைசா நாணயம் நின்று கொண்டிருந்தது.

விழிகளின் மொழி, இல்லை விழியின் மொழி புரிய ஆரம்பித்த முதல் தருணம்

இதுதான். ஆம் இப்போ பேசிக் கொண்டிருந்தது விழிதான். அந்த விழி ஒரு

முழு மனிதமாகவே காட்சி தந்து கொண்டிருந்ததுஆச்சர்யம் தந்தது

விழி பேசியது என் பேச்சு கேட்டது விழிகளுக்கு, விழி நீட்டி காசு

தந்தது , விழியாலேயே பெற்றுக் கொள்ள விழைய, விழி பார்க்க மட்டும்

முடியும் எனபது போய் எல்லாமாகி இருந்த விழி.

குமார் என்றழைக்கப்பட்ட மாமா வந்து கதவைத் திறக்க அதிர்ச்சி

காத்திருந்தது. விழியையே ஒரு ஜீவனாக அதுவரை தரிசித்திருந்த என்

விழிகள் உள்ளிருந்த உண்மையை ஒப்புக் கொள்ள மறுத்தது. எலும்பும்

தோலுமாக,ஆம் உடைகள் ஏதுமின்றி, அதற்கான உணர்வுகள் ஏதுமின்றி

இதுவரை பேசிய விழிகளுக்கும் , விழிதனின் இளமைக்கும் சம்பந்த

மில்லாத உருவம்


முதன் முறையாக ஒரு மனிதரை ஆடையின்றிப் பார்த்த அதிர்ச்சி

மனதுக்குள் பாய்ந்திருக்க உறைந்திருந்தேன் நான் வாசலோடு. உள்ளே

சென்றிருந்த மாமாவும் , ஆச்சியும் எல்லாம் சகஜமாக எடுத்தபடி உள்ளே

போயிருக்க கொஞ்ச நேரம் முன் வரை நான் பார்த்திருந்த இளமை விழிகளைத்

தேடியபடி செய்வதறியாது நின்றிருந்தேன்.....மனிதனின் உயிர்ப்பு மொத்தமும்

விழிகளில் தேக்கி வைக்கப் பட்டிருக்க, விழிகளில் எனக்கு காதல் பிறந்திருந்தது


“ உள்ளே வாம்மா” , மாமா அழைக்க போவதா வேண்டாமா ,

தரையோடு தரையாகக் கிடந்த உருவத்தைத் தாண்ட முடியுமா பயம்

பற்றிக் கொள்ள, அதற்குள் மாமா சேலை எடுத்து அவர் மேல் போட்டு மூட

முயற்சிக்க , ஒரு மகன், அந்த நிமிடம் தாயாகி நின்றதும், தாய்

குழந்தையானதும், உறவுகளை நாம் என்ன தான் தீர்மானித்து வைத்திருந்தாலும்,

நம்மிடையே இருக்கும் மனிதம், உருவாக்கும் உறவுகள் எத்தனை வித்தியாசமானவை.

நம்மால் தீர்மானித்து வைத்திருந்தவைகளை சிதைக்கக் கூடியவை. அந்த

சிதைவுகளும் கூட சுகமானவை....

“என்ன சித்தி செய்ய எத்தனை செய்தாலும் மேலுக்கு அவங்க ஒண்ணும்

போட்டுக்கிறதில்லை.சொல்லி முடித்த வினாடிகளில் எறியப்பட்ட சேலை மாமா

முகத்தில் வீழ்ந்து கைகளில் வழிய

“அக்கா பலகாரம் சாப்பிடுக்கா, ஆச்சி அன்போடு உபசரிக்க அதை


அவுங்க வாங்குகின்ற இடைவெளியில் நான் விலகி ஆச்சியிடம்

போய்ச்சேர எத்தனிக்க என் இடம் பெயரல் அவருக்குள்
என்ன செய்ததோ தெரியலை. என்ன நடக்குதுன்னு நான் யோசிக்குமுன்

தூரப்போய் விழுந்தேன்.என் கண்களுக்கருகில் பாதவிரல்கள்.ஒரு நிமிட

யோசனையில் தான் நான் எங்கிருக்கிறேன் என்று புலப்பட்டது.

அடுத்து யோசித்தேன் என்ன நடந்தது?.மாமா தூக்கி விட

முயல,
“ ஆச்சி அடி பட்டிருச்சாப்பா”, என கேட்க மனதுக்குள் நடந்தது

ஓடியது. நான் உள்ளே வர முயலவும் பெரியஆச்சி எத்திவிட விழுந்திருக்கிறேன்

கால்களுக்குள். பயங்களோடும் பிரமிப்போடும்,கொஞ்சம் முன் வரை கைகளாகவும்

வாயாகும் இருந்திருந்த விழிகளை நிமிர்ந்து பார்த்தேன்.பார்வையின் வலு எனக்கு

விழுந்த உதையின் வலியில் தெரிந்தது.

விழிகளை விடுத்து முதல் முறையாக கைகள் நீண்டன.

“ இந்தா பலகாரம் சாப்பிடு”

வாங்க நெருங்க பயந்த எனைப் பார்த்து விட்டு

“நான் எத்துன பிள்ளைக்கு கொடு”.

அதட்டலோடு நீட்டப்பட்ட பலகாரம்.

நடுங்கிய விரல்களோடு வாங்கியதை வாயில் போடத் தோன்றாது

விரல்களுக்குள் பத்திரப்படுத்த , விரல்களில் பிசுபிசுப்பு

“ சரி போவமா? சித்தி”.மாமா கேட்க கதவைத் தாளிட்டு

வெளியே வர , கதவுக் கடியில் மீண்டும் விழிகள் எல்லாமுமாய்

மாறியிருந்தன.. இது எனக்குள் நுழைந்த முதல் விழிகள்.தொடர்ந்து என்னுள் விழிகள்

பதித்த சுவடுகள் காலம் வந்து அலைகளாய் கழுவிச் செல்ல நினைத்தாலும்

அழியாத தடங்களாய்.....
ஆச்சியின் சுருங்கிய தோல்கள் , கிள்ளக் கிடைத்த ஆசைகள் மறந்து

போயிருக்க, மறக்காது நின்ற ஸ்பரிசங்கள்...
ஆச்சி, எங்கள் வீட்டுக்கு முன்புறம்நட்டு வைத்து விட்டு போயிருந்த

மாஞ்செடி கையூன்றி வேரூன்றி வருகிற மாசியில் மரம் தழைக்க மழை

பெய்து விட்டால் சிம்போடு பூவும் விட்டு , கடந்து சென்ற காலங்களில்

நமக்கென்று எஞ்சி நின்ற கனிகளை தந்து விட்டு போகக் கூடும்

காற்றில் சலசலத்து மரம் சிரிக்க, என் கையிருந்த குடத்து நீர் சிரித்த

படி வேரில் விழுந்தது.. எல்லாரும் ஒரு நாள் எனைப்போல் குடத்துள்ளிருந்து

வெளியே வீழ்ந்து மண்ணில் கலந்து வேரில் நுழைந்து, பூவாகி

மனமாகி, கனியாகி ருசியாகி , ஏகாந்தமாக வேண்டுமென சொல்லிச்

சிரிக்க


அந்த 3 காசும், விழியும், மல்லிகைப் பூ கேட்கும் குரலும் மனசுக்குள் நின்று

போக , காலங்கள் கரைகின்றன. டித்திரிந்த காலங்கள் மறைந்து , பயந்தடங்கிய

காலங்களும் மாறி பாதை தேடத்துவங்கும் பருவங்கள் வந்தன. இன்னமும்

கருவேலஞ்செடிகளும் எருக்கஞ்செடிகளில் பட்டுக் கூடுகளூம் மட்டும்

மாறாது. கல்லூரி விடுதிகள் நோக்கி பறக்க ஆரம்பித்திருந்த காலமிது. அடுத்த வாரம்

கிளம்புவதற்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அன்றுவீட்டுக்கு

வந்தார். உடல்தனில் குறைந்து போன கம்பீரம் குரல் தனில்

நிலைத்திருந்தது.. கூடத்திற்கும் வாராந்தாவிற்கும் இடையில் நின்றவர் அழைக்க நான்

வேலையை போட்டு விட்டு யாரென்று பார்க்க வந்தேன். வேட்டி , சட்டை, நரை

விழத் துவங்கியிருந்த வயது, யாரென்று தெரியவில்லை, இல்லை பார்த்திருக்கிறேன்.

நினைவு வரவில்லை . எட்டாத நினைவுகளோடு நானிருக்க,

“ அம்மா இல்லையாடா” கேட்டபடி உள்ளே வந்த படி சொன்னார். “ நான் குமார்

மாமா டா, அம்மா இருக்காங்களா?”

பொட்டில் அடித்தமாதிரி ஏதேதோ குறிப்பாய் நினைவுக்கு வர

“கூப்பிடுறேன் மாமா” உட்காருங்க” இன்னமும் நினைவு வராதவளாக

சம்பிரதாயமாக சொல்லிப் போனேன். பெயர் மட்டும் தெரியுமே என்று உணர்த்திக்

கொண்டே இருக்க, தெளிந்திருந்த குட்டையின் அடியில் முழ்கியிருந்த விசயங்கள்

மேலெழும்பின. அவர் குரல் குழப்பியிருந்தது.

இந்தக்குரல்..இந்தக் குரல்.. நினைவுகளின்ஆழத்தின் நுனி எடுக்க முடியாது

யோசனைகளோடு நடந்தேன். அம்மா பின் கட்டில் வேலையா இருக்க வேகமாகப்

போகும் எண்ணம் மனதிருந்தும் கால் நடக்க மறுத்தது, நினைவுகளில் கனங்களோடு.

மோதிக் கொண்டதுணர்ந்த போது தான் அம்மா இருக்குமிடம் வந்திருப்பது தெரிய,

“என்னாம்மா முழிச்சு கிட்டே வந்து மோதுற”.

மேலும் கீழுமாய் அம்மா பார்க்க

“ குமார் மாமா வந்திருக்காரும்மா”. இதோ வருகிறேன். அம்மாவிடம் அவசரம்

தொற்றிக் கொள்ள, அரைத்திருந்த மசாலாவை அடுப்படியில் வைத்து விட்டு

ஓட்டமும் நடையுமாய் வந்தாள் அம்மா.

வாங்கண்ணா, நல்லாயிருக்கீங்களா”

“நல்லாயிருக்கேம்மா”

“அண்ணி பிள்ளைகள் எப்படி இருக்காங்க “

“எல்லா நல்லா இருக்காங்க. இது நம்ம பாப்பாவாடா”.

எனைப் பார்த்து கேட்க நான் இன்னமும் எங்கு பார்த்திருக்கிறேன் அறிய முடியாது

குழம்பியபடி ,

“சே அம்மாவிடம் யாருன்னு கேட்காம போனோமே, யோசனையோடு தண்ணி

எடுத்து வந்து வைக்க

“ அண்ணிக்கு இப்பதான் அப்பாடான்னு இருக்கும்” அம்மா சொல்ல

மாமா தண்ணி தம்ளருக்குள் தேடிய படி பேசினார்.

ஆமா அவளும் அழுத்து போயிட்டாள்ல, அம்மாவை கடைசி காலத்தில சமாளிப்பது

கஸ்டமாயிட்டது”

ம்..ம்.. இப்பதான் நினைவுக்கு வருது.ஆச்சியோட விரல் பிடித்துப் போன

நினைவுகள் வந்தலை மோதின..

பெரியாச்சி ....

“அம்மாவுக்கு வருகிற ஞாயிறு சாமி கும்பிடரோம்பா, வந்திடுங்க, மாப்பிள்ளை எங்கே

? . சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன்

ஏதேதோ இருவரும் பேசி வருத்தப் பட்டார்கள், நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்,

மகிழ்ந்தார்கள் எதுவுமே எனக்குள் நிற்காது விழி வந்து முன்னாடி நின்றது.

ஞாயிறு எல்லாரும் பயணமானோம் ஆச்சி சாமி கும்பிடுதலுக்கு.

மாமா வந்து சொல்லி போனதிலிருந்து மனசு கனத்து கிடந்தது ஏன் இப்படிஆனது
ஆச்சிக்கு? கேள்வி அரிக்க, அம்மாவிடம் கேட்டுப் பார்த்தேன். அம்மாவுக்குள்

இதுவரைக்கும் அதுமாதிரி கேள்விகள் ஏன் இல்லாதிருந்தது என்று ,கூட ஒரு

கேள்வியும் சேர்ந்து கொண்டது

“எனக்குத்தெரியலைம்மா, எனக்கு விபரம் தெரிஞ்சதிலிருந்து இப்படித்தான்

இருக்காங்க”. அம்மாவுக்கு அதற்கு மேல் ஆர்வமில்லை.

பயணம் சீக்கிரம் முடிந்து போனது .,எனக்குள் இருந்த கேள்வியின்

நீளங்களால்.
ஆமாம் பயணம் என்றால் எப்போதும் உல்லாசமாய் கழியும் என் பொழுதுகள் இந்த

முறை ஒரு வித அழுத்தங்களோடு பயணித்தது அழுத்தமான மௌனங்கள் .இல்லை

இல்லை அது என்ன மௌனம்.. .. மனக் கேள்விகளின் பேரிரைச்சல் . பதிலுரைக்க

முடியாது திகைத்துக் கொண்டிருந்தேன். எல்லாரையும் போல ஏன் ஆச்சியால

சந்தோசமா வாழ முடியலை? ஏன் வாழ முடியலை என்கிற கேள்விகள் ஏன் என்

அம்மா போன்றவர்களுக்குள் எழும்பாமல் போனது. .

“சே” ஒரு கேள்விக்கும் பதில்

தெரியலை.மனத்தில் ஒரு இயலாமை சூழ சன்னலில் பார்வை நிலைத்திருந்தது.

முகத்தில் வீசும் காற்று முடியை கலைத்துப் போட கைகுட்டை எடுத்து முடிகளை

ஒன்று சேர்த்து கட்டினேன்

தூங்கியிருப்பேனோ? விழிப்பு வந்த போதுதான் தூங்கியிருந்தது

தெரிந்தது.ஊர் வந்து சேர்ந்திருந்தோம் பேருந்து நிலையத்திற்குரிய இரைச்சல்,

மெல்லிய நாற்றம் கண் விழிக்குமுன்னரே புலன்களை வந்தடைந்திருந்தது

இறங்கி ரிக்க்ஷா பிடித்து குமார் மாமாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீடு

நெருங்கவும் ரிஷாவை நிறுத்தி இறங்கி கூலி கொடுத்து அனுப்பி விட வீட்டுக்குள்

உறவினர்கள் கூட்டம் இருந்தது..சேலையை உதறி முந்தியை செருகி அம்மா தனை

தயார் செய்து கொண்டார்.அம்மாவின் பார்வை என் மேல் விழ பல் மெல்ல

கடிபட்டது. உள்ளிருந்து வார்த்தைகள் எனக்கு மட்டும் காதில் விழும் படியாய்

“ தலைல கட்டியிருக்கிற கர்சீப்பை அவுருடீ. ரௌடி மாதிரி இருக்கு”

உள்ளிருந்து மாமா வாசலுக்கு விரைந்து வர அவர் வருவதற்குள் அம்மா உதிர்த்த

அவசர வார்த்தைகள்.ஒரு கையால் தலையை கோதுவது போல் சடையை

கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்தேன்.

கண் முன்னிருந்த வீட்டுக்குள் கவனம் இருந்தது இது பெரியாச்சி வாழ்ந்த

வீடாம். மன நிலை சரியில்லைன்னப் புறம்தான் மூடிய அந்த சின்ன வீட்டுக்குள்

அடைத்திருக்கிறார்கள்ஆச்சி எப்படியெல்லாம் அந்த வாழ்க்கையை நேசித்திருப்பாள்

காலங்கள் போன பின்பும் குழையாதிருந்த பழமை சொன்னது.

செருப்பை கழற்றி உள்ளே நுழைந்தோம்,. திண்ணையிட்ட வீடு. திண்ணை

கம்பிகளால் மறைக்கப் பட்டு பச்சை நிற வர்ணம் அடித்திருந்தார்கள். இப்பொ இந்த

வர்ணம் யாரும் அடிப்பார்களா சந்தேகம் தான். வீடுகள் பூராவும் உறவுகள்

சிரித்திருக்க, அந்த காலத்து பூக்கள் தரை அவர்களை விட அழகாய் சிரித்தது. பிரிந்த

உறவை சாக்கிட்டு இருக்கின்ற உறவுகள் சேர்ந்திருந்தன. நடுக்கூடத்தில் ஆச்சி படம்

மாலையிட்டு விளக்கேற்றி படையல் வைக்கத் தயாராக. என் மனதில் நின்று போன

ஒடிசலான கன்னங்களோ வயோதிகத்தை எழுதிய தோலோ படத்தில் இல்லை

கருப்பு வெள்ளையில், வெளிறிய நிறத்தில் ஜாக்கெட் சாம்பல் நிறத்தில் மடிப்பு

வைத்து கட்டாத சேலை , பிண்ணணியில் பெரிய மாடங்களுடன் கூடிய

கட்டடங்கள், வரைந்திருக்கிறார்கள் படத்தை என்று உணர்த்திய போதும், கண்கள் ,

ஆம் நான் பார்த்த பேசிய விழிகள் என்று எனக்குள் உணர்த்த இப்போதும் அந்த

விழி எனைப் பார்த்தது

3 காசு நீட்டி மல்லிபூ கேட்குமோ.நினைவு உதறி எல்லாருக்குள்ளும் ஐக்கியமானேன்

கூட்ட இரைச்சலில் இருந்தும் ஏதோ தனித்து நின்றிருப்பதாய் இருந்தேன். கூடம்

தாண்டியிருந்ததும் முற்றம். மேலே கம்பியிட்டு வெயில் உள்ளே வந்து

கொண்டிருந்தது. பழைய வீடு புதிய நாகரீகத்திற்குள் புகுத்திக்

கொண்டிருந்தது.இருந்தும் பழமையின் வயோதிகம் எத்தனை மறைக்கப்

பட்டிருந்தாலும், அழகான உணர்வோடு தெரிந்தும் கொண்டிருந்தது.

சுவரெங்கும்ஆச்சியின் திருமண புகைப்படம் , சந்ததிகளின் கல்யாண புகைப்பட

வரிசைகள் வரிசையாக இருந்தது .எல்லாப் படங்களிலும் மனிதர்கள்

புகைப்படங்களுக்கான சிரிப்பை ஏந்தியிருந்தார்கள்.

ஆச்சிக்கு ஏன் இப்படி னது எனக்குள் கேள்வி இன்னமும்

எனக்குள்.ஆச்சியோட பிள்ளைகள் எல்லாரும் வந்திருந்தனர். குமார் மாமா

எல்லாரையும் வரவேற்பதும், வேலைகளை தன் மகனுக்கு உத்தரவிடுவதுமாக

இருந்தார்.

நடுக்கூடத்திலிருந்து படிக்கட்டுகள் மாடிக்கு போனது.மாடி பலகடைப்பாக இருக்க,

அந்த காலத்து வீடு தந்தஆர்வம் மேலே தயக்கத்தோடு ஏறினேன். பலகடைப்பு

தாண்டி உள்ளே ஒரு மச்சு மிகச் சிறிய இருட்டான அறை. எதிர்த்திருந்த

சன்னலிலிருந்து சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது கீற்றாய் விளக்கு

பொத்தானை நான் தேடித் தொட அறை வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

பழைய சாமான்கள் அறையெங்கும். மெத்தைகள் தலையணைகள், ஒரு பெரிய

பித்தளை அண்டா, நிறமிழந்து கறுத்துப் போய் இருக்க அதனுள் சின்ன சின்ன சில

பித்தளை சாமான்கள், இன்று உபயோகத்தில் காண முடியாத சாமான்கள்

அவை. சுவருக்குள் பதிந்திருந்த சின்ன மர அலமாரி. மெல்லத் திறந்தேன். புத்தகங்கள்

என்ன புத்தகங்கள் ,வரிசையாக பார்க்க உள்ளே ஒரு சின்ன குறிப்பேடு, சிட்டை

புத்தகம் இருக்க திறந்து பார்த்தேன்

நடுங்கும் விரல்களோடு யாரோ எழுதியிருந்தார்கள்.தேதி 28.3.50 என்று இருக்க
ஆர்வம் தொற்றிக் கொண்டது எனக்கு.. காலை 200 மாலை 400 என்று பால்கணக்கு

இருக்க.ஆச்சி எழுத்தோ? கேள்வி மனதுள்.தொடர்ந்து திருப்ப அழிந்த சில

எழுத்துக்களோடு சில வரிகள் வாசிக்க கிடைத்தன

மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை

அழகு தங்க மாப்பிள்ளை

அழிந்திருந்த சில வரிகள் தொடர்ந்து

யானை மேல ஏறச் சொன்னா

பானை மேல ஏறுவாரு

ஓடும்ஆத்தில குளிக்கச் சொன்னா

ஓணானை தேடி திரிவாரு

பாடல் வரிகள் தொடந்து நான் திருப்ப, நோட்டு முழுவதும் எழுத்தால் நிரப்பப்பட்டு

இருந்தது.

ஒரு வேளை என் கேள்விக்கு இதில் விடை இருக்குமோ?ஆரம்ப பக்கத்தை

தேடினேன்

“என்னால இனி தாங்க முடியாது” என்றுஆரம்பமாயிருந்த முதல் வரியே நெஞ்சில்

குறு குறுப்பு தர மெல்ல வெளியே எட்டிப் பார்த்தேன்.கீழே ஒரே சிரிப்பும் பேச்சும்,

அவசரங்களுமாய் இருக்க மீண்டும் அறைக்குள் ஒரு துணி மெத்தை மீது வெளிச்சம்

நன்கு படும்படி அமர்ந்து கொண்டேன் வாசிக்க தொடங்கினேன்.

என்னால் இனி தாங்க முடியாது . மனசு கிடந்து தவிக்குது. யார் கிட்டேயும்

இது பற்றி பகிர்ந்துக்கிட முடியாது. ரெண்டு நாளா ஒரே அழுத்தம் நெஞ்சுக்குள். ஒரு

பிராண்டல் .குளிர் காய்ச்சல் போல் அடிக்கடி தூக்கிப் போட்டது உடம்பு. கோவத்தில்

பிள்ளைகளிடம் கத்தியிருக்கிறேன் தப்புன்னு தெரிஞ்சும். மனசுக்குள் ஒரே

அல்லாட்டம். திரும்ப திரும்ப பழசை ஏன் நினைக்கிறேன்னு கேக்கிறாரு அவரு.

மறக்க கூடிய விசயமா அது. மறக்க முடியலைங்கிறது எவ்வளவு கொடுமையான

நிஜம். அவருகென்ன லேசா சொல்லிட்டு போயிடுராரு. பாதிக்கப் பட்டது

நானில்ல. எவ்வளவு முரண்பாடு தப்பு செய்த அவருக்கு ஒருவித பாதிப்பும் இல்லை

.ஒரு ஆணின் தவறு எவ்வளவு பெரிய பாதிப்புகளை பெண்ணுக்குள் நிகழ்த்துகிறது.

அந்தஆணை சார்ந்து இருக்க நான் பழகியிருப்பதாலா, அவரின் தவறுகள் என்னை

ஏன் பாதிக்கிறது.. யோசனைகளில் கிறுகிறுக்கிறது

என்னிக்கும் போல அன்னிக்கும் நான் ஏன் தூங்கியிருக்க கூடாது.

தூங்கியிருந்தா இந்த மன உளைச்சலுக்கு நான் ஆளாயிருக்க

வேண்டாமில்ல. என்னைக்குமில்லாம அன்னைக்கு ஏன் முழிச்சிட்டு இருந்தேன். ஒரே

வயிற்று வலி அன்று . வேறொரு சமயமா இருந்தா இந்த மாதிரி நேரங்களில்ஆழ்ந்து

தூங்கி விடுவேன்.. கீழ் வீட்டுல அத்தை மாமா தூங்கி ரொம்ப நேரமாச்சு. இன்னமும்

அவர் வேலை முடிச்சு வரலை

வந்திடுவாருன்னு கொஞ்ச நேரம் படுக்கைல புரண்டு பார்க்கிறேன். தூங்கவும்

முடியலை. காத்திருப்பின் எரிச்சலும் வயிற்று வலியும் எழுப்பி விட எழுந்து

கூடத்திற்குள் இறங்கும் படிக்கட்டில் வந்தமர்கின்றேன்

கீழே போனா அத்தை எழுந்துகிடுவாங்க. பிறகு தூங்குமா அவன் வந்திடுவான்னு

வற்புறுத்துவாங்க. அவங்களை எழுப்பி விட்டுடக் கூடாதுன்னு படிக்கட்டுலேயே

அமர்கின்றேன். காத்திருக்கிறேன்.

மனி 10.30 வலி தாங்காது முழங்காலில் தலை வைத்து படுத்தபடி , கால்களை

இறுக்கிக் கொள்கிறேன். ஏதோ ஒரு சலனம் காதுகளில் விழ, என்ன சத்தம்

யோசிக்கலானேன். சமையல் கட்டு இங்கிருந்து பார்க்க நன்கு தெரிந்தது. அதன்

கதவில் என் கண்கள் நிலைத்து திரும்பியது. .திருப்பி மேலே பார்த்தேன். குழந்தை

டாது கட்டிலுக்கு பக்கத்தில் இட்ட தொட்டிலில் தூங்கிக்

கொண்டிருந்தான்.தொட்டில் அடியைப் பார்த்தேன் . இன்னமும் நனைக்கவில்லை.பிறகு

சத்தம் எங்கிருந்து.திரும்ப சமையல் அறைக்கதவில் என்கண்கள் தானாகவே போய்

நிற்க , கதவு மெல்லத் திறந்து சத்தம் வராது சட்டென மூடியது. நிஜமா , பிரமையா,

யோசிக்கு முன் வெள்ளை நிறம் கதவு இடைவெளியில் இருந்து மெல்ல தன்னை

உள்ளிழுத்துக் கொண்டது.

படபடவென்று நெஞ்சு அடிப்பது என் காதுகளுக்கு முரசோசையாக கேட்டது.

கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது . வேகமா எழுந்து ஓடி கதவைத் திறந்து கை

தானே விளைக்கப் போட, அவரும் வேலைக்காரியும்..

மூவரும் உறைந்து போய் நிற்க.

“தண்ணி கேட்டு வந்தேன்” மெல்ல அவர் பேச்சை இழுக்க

“சரி மேலே போங்க..” என்னிடமிருந்து தெறித்து விழுந்த வார்த்தைகள்

சடாரென வெளியேறி அவர் மேலே போயிருந்தார். வேலைக்காரியோ குனிந்த படி

நின்றிருந்தாள்.

நல்ல காரியம் செஞ்சிருக்கே சொல்லி விட்டு, நானும் படியேறினேன்

வேலைக்காரி காரணம் சொல்லாது நின்று விட்டிருந்தாள்.இப்போ மூன்றாவது

குழந்தை தொட்டிலில். மாமா போன வருடம் போயிட்டார். இன்னமும் அன்னைக்கு

என்ன நடந்தது, ஏன் நடந்தது அவர் மனம் திறந்து பேசலை. கேட்டு நான் செய்யப்

போவதென்ன.. நானும் கேட்டுக்கலை. ரெண்டு நாள் நான் கொடுத்த தனிமை

பொறுத்துக் கொள்ள முடியலையா? ஏன் ஏன் ன்னு எனக்குள்ளஆயிரம் கேள்விகள்.

வயது 40 ஐத் தொடவும், உறவுகளில் இருந்த ர்வம் குறைந்து போயிருந்தது. வயது

காரணமாஆர்வமில்லைன்னு தெரிஞ்சாலும் மனது கிடந்து கஸ்டப்படுது. ரெண்டு

நாள் பொறுத்துக் கொள்ளாதவருக்கு இப்பொ எனை தொடந்து உதாசீனப்படுத்துவது

எப்படி சாத்தியமாயிற்று.

எப்படி சொல்ல , எப்படி பேச , எங்களுக்குள் உறைந்து போயிருக்கிற ஒரு கறுப்பு

பிரதேசம் சமீப காலமா மிக அழுத்தமா எங்க இரண்டு பேருக்கிடையில்

அமர்ந்திருந்தது..

உதாசீனங்களையும் தாங்க முடியாது, நெருக்கத்தையும் தவிர்க்க முடியாது, சமீப

காலமா மனசு குழம்புது. தாங்காம எழுதுறேன்..

அதற்கு மேல் சில பக்கங்கள் காணாமல் போயிருந்தன. எழுதவில்லையா?
ஆச்சியே கிழிச்சிடாங்களா? தானா அழிஞ்சதா? இல்லை தாத்தா கிழித்திருப்பாரோ?

கீழே இருந்து குரல் கேட்டது சாமி கும்பிட வாங்கன்னு எழுந்தேன் வேகமாக. அந்த

சிட்டைப் புத்தகம் என் முந்தானை மடிப்புக்குள். இழுத்து நான் செருக எனக்குள்

புதைந்து கொண்டது. லைட்டை நிறுத்தி வெளியேற மோதிக் கொண்டேன்

குமார் மாமாவின் பையன் எனை விட ஒன்றிரண்டு வயது மூத்தவராக இருக்கலாம்.

மோதிய வேகத்தில் நிமிர்ந்தேன்

இருட்டுக்குள்ள என்னா செய்யுறீங்க? கேட்டபடி விளக்கை போட்டு பித்தளை

அண்டாவிலிருந்து அரிவாளை எடுத்து

“சாமி கும்பிடப் போறாங்க . வாங்க கீழே “

சொல்லியபடிக் இறங்க நானோ அந்த விழிதனில்; நிலைத்திருந்தேன். விழி மல்லிப்பூ

கேட்டு காசு நீட்டியது.

ஊர் வந்திருச்சு எழுந்திடுமா . அம்மா எழுப்பி விட பதறி அடித்து எழுந்தேன்.

முந்தானையை மட்டும் விட மனமில்லாது. அதற்குள் சிட்டை புத்தகம் இல்லை. ஒரு

வேளை போகும் வீட்டில் அது கிடைக்குமோ?

மீண்டும் கேள்விகள் .பதிலில்லா கேள்விகள்.. ரெண்டு விழிகள் மட்டும் சிரித்தது கண்

முன்னால் பதில்களாய்
posted by Thilagabama Mahendrasekar @ 8/07/2006 11:59:00 pm   1 comments
Saturday, August 05, 2006
மனவெளிப் பயணம் 627.10.05
மதியம் 2 மணிக்கு katwaigt எனும் கடலோர கிராமத்திற்கு போகின்றோம் வீசும் காற்றில் வெயிலின் வெப்பமும் குளிரின் சுகந்தமும் கலக்கச் செய்கின்ற கடல், நுரை பூக்க கரையில் மோதுகின்றது கடல். பட்டம் விடும் சிறுவர்கள் மணலில் கோட்டை கட்டி குழந்தைகளுக்கு உதவுவதாய் சொல்லி பால்ய கால நினைவலைகளுக்குள் தங்களையும் கரைய விடும் பெரியவர்கள், துணையாய் நாய்களோடு நடமாடும் மனிதர்கள். நாய்தான் அவர்கள் பேச்சை கேட்கின்ற, அதீதமாய் எதுவும் எதிர்பார்க்காது கட்டுப் பட்டு நிற்கின்றதோ? மனிதனுக்கு எப்பவும் தனக்கு அடிமையாய் இருக்கின்ற ஒரு நபர் தேவையாயிருக்கின்ற மனோநிலையை வெளிப்படுத்தும் நாயோடு நடப்பவர்கள். அன்புக்கு கட்டுப் படுகின்ற ( அடிமைத் தனத்தை ஏற்றுக் கொள்கின்ற அல்ல) சக மனிதருக்கான ஏக்கம் எப்பவும் தொடர்கின்றது. அதே நேரம் இல்லாத குடும்ப அமைப்பு வாழுகின்ற ஒவ்வொருவருக்கும் இடையே அப்படியான ஒரு ஈர்ப்பை உருவாக்க முடியாது உதிர்த்துப் போடுகின்றது.
கால்புதையும் மணல் சிதறிக் கிடக்கும் இறந்த கால எச்சங்களாய் சிப்பிகள் , நிகழ்காலமாய் விழித்துப் பார்க்கும் நண்டுத் துளைகள் எதிர்காலமாய் ஆர்ப்பரித்து விரிந்து கிடக்கும் நீலக் கடலோடு நடக்கின்றேன் யாருமற்ற வெளியாய் ஒரு வெறுமை சூழுகின்றது.ஓயாத இரைச்சல் நிகழ்த்தும் கூட்டமிருந்தும் அந்த வெறுமை கழிவிரக்கமாக மாறவிடாது முழுக்க முழுக்க எனக்கான உலகமிது என்ற சிந்தனையை உரத்து சொல்லி தனிமை ரசிக்கப் பழகுகின்றேன் பாடல்களை உரத்துப் பாடிய படி கடலோடு நீள நடக்கின்றேன் ஒரு மணி நேரம் இருக்குமா? திரும்பி வருகையில் என் குரலினில் ஒரு பெரிய மாற்றமிருந்தது குரல் வழக்கத்தை விட சுகமானதாய் குழைவானதாய் மாறியிருந்தது தொடர்ந்து பாடியது இதை சாத்தியப் படுத்தியதா? கடலின் உப்புக் காற்றா? ஈரக் காற்றா? எது சாத்தியப் படுத்தியிருக்கும்?.
வந்ததிலிருந்து இன்று வரை கால் உறை இல்லாது நடக்கவே இல்லாததால் பாதங்கள் மிருதுவாகிப் போயிருக்க இன்று தான் குறுமணலில் பாதம் புதைய நடக்கின்றேன் அதன் ஸ்பரிசம் சில்லிடுகை ஆதரவான நினைவை தந்து தனிமையை அகற்றப் பார்க்கின்றது.

8.30 மணி ஆகியிருக்க இன்னமும் சூரியன் முழித்துக் கொள்ளாத நேரமாகியிருக்க இருள் பூமி விட்டுப் போக மறுத்து கட்டிக் கொண்டு கிடக்கிறது.
சோறிட அழைக்கும் காகங்கள் இல்லை
விடியலைச் சொல்லும் சேவல்கள் இல்லை
இருள் போர்வை போர்த்தி
விடியலை எழும்ப விடாது
செய்திருந்த குளிர்
எனையும் எழும்ப விடாது செய்திருக்க
ஈரம் சுமந்த காற்று
வந்ததன் நினைவை
காதலாய் போர்த்திப் போக
போர்த்துகின்ற ஈரம்
எல்லாம் தூர எறிந்து
எனை மரத்துப் போகச்
செய்கின்ற
வட துருவக் கடலில்
காலை நனைக்கின்றேன்
இனி எது குத்தினாலும்
குத்தல்களை உணராது என் பாதம்

“சேவல்கள் கூவாத பொழுதினிலும்
எனக்கான விடியல்கள் உதயமாகின்றன “ என்று எப்பவோ எழுதிய கவிதை வரிகள் நிஜமாகியிருக்க, எப்பவோ எழுதுகின்ற வரிகள் பின்னாளில் நிஜமாகின்றதின் சத்தியம் ஆச்சரியம் தருகின்றது.
காரின் பம்பர் அடிபட்டிருந்ததை சரி செய்துவிட்டு றஞ்சியின் வீட்டுத் தரை விரிப்பு ஒட்டுகின்ற வெலையை செய்யத் துவங்கினர் சுசியும் ராஜனும். தரை விரிப்பை ஒட்டுவதற்கு வீட்டின் அலமாரிகளையெல்லாம் பிரித்து உள்ளிருந்த துணிமணிகளையெல்லாம் எடுத்து ஒவ்வொரு , அலமாரியையே பிரித்து எடுத்து ஒவ்வொரு அறையாய் ஒதுக்கி ஒட்டி விட்டு பின் மீண்டும் அலமாரி கட்டில் என அடுக்கும் வேலையில் இன்பா வேகமாய் இருக்க உடன் நானும் தயக்கங்களுடன் . அலமாரியில் இருந்த துணியை ஒதுக்கத் துவங்கவும் எனது நினைவு அலமாரியிடமிருந்து சிவகாசி வந்து போகின்றது.
புதிதாய் திருமணமாகி புது மணப் பெண்னாய் புகுந்த வீடு போய் மெல்ல மெல்ல எனக்கான இடம் எனதான வீடு என்று எண்ணத்தை பதிய வைத்துக் கொள்ள துவங்கிய தருணத்தில் ஆறுமாதங்கள் கடந்து விட கிறக்கத்திற்கு ஓய்வு எடுக்க வென்று அம்மா வீடு போய் 15 நாட்கள் இருந்து வாந்தியெல்லாம் நின்று விட்டுத் திரும்பிய தருணத்தில் எனது அலமாரி நான் வைத்து விட்டு போன படியாக இல்லாதிருக்க நான் இல்லாத தருணங்களில் புடவைகளை அடுக்கி வைக்க அலமாரி
திறந்ததற்காக கோபப் பட்டு அதிலிருந்து அலமாரிச் சாவிக் கொத்தை இடுப்பில் செருகிய படி நடந்த நாட்களில் இருப்பை காப்பாற்றும் அவசியமும் எனக்கானது என்று மாற்றிக் கொள்ள வேண்டி இருந்த எண்ணங்களும் நினைவுக்கு வர எந்த வித தயக்கங்களுமின்றி அடுத்தவர் அலமாரியை ஒதுக்க , மனம் வராமல் தவித்தாலும் இன்பாவோடு வேலைகளைத் தொடருகின்றேன். நான் இருந்த பொழுதுகளில் ஒரு நாளும் அலமாரி அடுக்க உதவாதவர்கள் யாரும் அறியாது சிறுவாட்டுப் பணத்தை புடவைக்குள் வைத்திருக்கிறேனா என்று அறிந்து கொள்ளத்தான் என் அலமாரி திறக்கப் பட்டது என உணர்ந்த போது எனது கோபம் இன்னமும் அதிகரித்து இரட்டைத் தாழ்ப்பாள் போட வைத்திருந்தது
ஆனால் மாறுகின்ற காலகட்டங்களில் அலமாரிகளை உடமையாக்குவதை நான் தூர எரிந்து விட நான் அறியாது திறந்து பார்க்கும் எண்ணமும் தொலைத்து போக எதை எங்கே எப்படி செயல்படுத்த வேண்டும் என் உணர்த்தி போகின்ற விடயங்களாய் மாறிப் போகின்றன அன்றைக்கு அலமாரியை எனது இருப்பாக்கி எதிர்ப்பை சொல்ல நேர்ந்த காலத்தையும் இன்றைக்கு அடுத்தவர் அலமாரியை யோசிக்காது அடுக்கி வைக்க நேர்ந்திருக்கின்ற சூழலும் அலமாரிக்குள் வீட்டுக்குள் எங்களது இருப்பை சிறை வைத்து விடக் கூடாது என்று எண்ணம் தந்து போகின்றது.
இன்றைக்கும் தமிழகத்து சூழலில் சமையல்கட்டை வேலையை பகிர்வதைக் கூட அதிகார பகிர்வாய் நினைத்து இருப்பு தொலைந்து போகுமோ என்று பயப்படும் மாமியாரையும் , இருப்பை கைக்கொள்ள நினைக்கும் மருமகளையும் தினந்தோறும் பார்க்கின்றோம்.
29.10
கலை 8.45 க்கு ஆம்ஸ்டர்டாமிலிருந்து கிளம்பி மாலை 4 மணிக்கு பெர்லின் வந்து சேருகின்றோம் என்னுடன் இருவார பொழுதுகளை ஓடித் திரிய வேண்டிய இயந்திர உலகத்துக்கிடையே இருந்து விடுபட்டு திரிந்த சுசி இன்பா இருவரும் தங்கள் விடுமுறையை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்தது அவரவர் பணிகளுக்கு திரும்பிப் போக தனிமையென்று வீட்டோடு நின்று விடக் கூடாதென்று யோசிக்கத் துவங்கிய தருணமிது
30.10.05
காலை உணவை முடித்துக் கொண்டேன். நண்பன் உடன் இல்லா பொழுதுகள் தொடர்கின்றன. சுசீக்கு டாட் மூன் எனும் இடத்தில் வேலை . வந்திருப்பது ஆண் நண்பனாயிருந்தால் உடன் அழைத்துப் போயிருக்கக் கூடுமோ நான் பெண்ணாயிருப்பதால் யோசிக்க வேண்டியிருக்கிறதோ தயக்கம் யார் வளர்த்தது ?
நாடா? அதைத்தான் தாண்டி வந்தாச்சே
சமூகமா? கேள்வி கேட்கும் நபர்களில்லையே .
எங்களது மனோபாவங்களா? ஆம் என்கிறது மனது. பெண் என்பதால், விடுபட வேண்டியிருக்கின்றதோ எனும் என் கேள்வியே தவறோ? எனக்குள்ளும் அப்படி நினைப்பு எழக் கூடாது என நினைக்கின்றேன் தனியான பயணங்களுக்கு இல்லை எனக்கான பயணத்திற்கு தயாராகின்றேன் அதே நேரம் எனக்காக என்று இருவாரமும் இனி வரும் நாட்களையும் திட்டமிடுபவர்களையும் வருந்தச் செய்யக் கூடாது எனும் பயமும் எப்பவும் உடனிருக்க பெர்லினை சுற்றி வரத் திட்டமிட்டு கிளம்புகின்றேன் .பொ. கருணாகர மூர்த்தி அவர்கள் வந்திருந்தார்கள். இலக்கிய விசயங்களை பேசிக் கோண்டிருந்து விட்டு, நேரம் கிடைக்கும் போது வெளியே போக எனக்குத் துணை வருவதாய் சொல்லிப் போனார்
திறந்தேயிருக்கின்றன
கூண்டுகள்
வாசல்களில்
வழி மறிக்கும் புன்னகைகள்
பூட்டில்லா வாய்கள்
வாய்த்திருந்த போதும்
கேட்பதற்கான
காதுகளற்ற முகங்கள்
பேசும் எண்ணத்தையே
புதைகுழிக்குள் இறக்கியிருக்க
இன்னிசை பிறக்கும்
சலங்கைகள் தான் காலில்
எனினும் போகின்ற இடங்களை
சொல்லும் உளவாளியாய் மாற
நடக்கவே இயலாது போயிற்று

நேற்றைய இரவு 2 மணியிலிருந்து 1 மணி நேரம் குறைத்து வைக்கப் பட்டிருக்கின்றது . இன்றைக்கு வழக்கம் போல் தயா நேரம் குறைத்து வைக்க பட்டது மறந்து 5 மணிக்கு வழக்கமாய் கிளம்பும் வேலைக்கு தன் கடிகார நேரமான 5 மணிக்கே கிளம்பிப் போக, எல்லார் கடிகாரமும் 4மணி காண்பிக்க சிக்கல் வந்ததை சொல்லிப் போகின்றார்.
posted by Thilagabama Mahendrasekar @ 8/05/2006 02:19:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates