சூரியாள்
|
Thursday, May 22, 2008 |
சிற்ப நகரம் |
சிற்ப நகரம்
எப்பவும் முன்னிலைப் படுத்தப் பட்டவனாய் இருந்து இருந்து விஸ்வரூபங்கள் பின்னாலும் தரிசனமாகலாமென மறந்தவனாய் நீ
காலத்தின் பருவத்தில் விரிகின்ற இதழ்களைக் கூட கட்டுக்குள் வைக்கின்றேன் கிளம்பும் வாசத்துள் மூழ்கி விடக் கூடாதென்பதற்காக
கருணைகளை போதாமைகளாய் வாசிக்கும் நீ கற்களை ஊன்றிய படி நான் நீளப் போன பாதையில் வேரில்லை பூவில்லை கலையில்லை கல்லுக்கு கண் திறப்பில்லை சொல்லிப் போகின்றாய்
அடையாளம் சொன்ன கற்களின் வரிசையின் இறுதியில் சிற்ப நகரம் நீ நகரமாய் பார்த்து தொலைக்க மறைக்கின்றன சிற்பங்கள்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/22/2008 06:57:00 pm   |
|
|
Monday, May 19, 2008 |
அழைப்பிதழ் |
சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு கிளை நூலகம் கபிலர் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை செம்பியம் சென்னை-11 (பிருந்தா திரையரங்கம் எதிரில்) வாசகர் வட்டம் நாள் 24.5.08 சனி மாலை 5.30 மணிக்கு இடம் நூலக வளாகம்
இலக்கிய நிகழ்ச்சி
வரவேற்புரை: தமிழ்மணவாளன் தலைமை சொர்ணபாரதி
திலகபாமா வின் கூந்தல் நதிக் கதைகள்
கவிதை நூல்
விமர்சன உரை சூர்ய ராஜன் கவின்கவி
கருத்துரை திலகபாமா உயிர்த்தெழும் படைப்பாளியின் கவிதை இயங்கியல்
நன்றியுரை: ச. மாசிலாமணி அனைவரும் வருக அன்புடன் அழைக்கும் வே. எழிலரசு தலைவர் தமிழ்மணவாளன் பொருளாளர் சொர்ணபாரதி ச . மாசிலாமணிLabels: அழைப்பிதழ் |
posted by mathibama.blogspot.com @ 5/19/2008 01:20:00 pm   |
|
|
Sunday, May 04, 2008 |
விதைக்குள் உறக்கம் |
உன் கர்ப்பப் பை கத கதப்புகள் தேவையாயிருக்கின்றன
பருவம் முளைத்த காலம் தொட்டு தொடுவதைத் தவிர்த்தாள் அம்மா
மூணாம் பேருக்குத் தெரியாமல் பெரியவளானதை முற்போக்காய் கடந்தவள் எப்பவும் நெருப்பு அடிவயிற்றில் சுமக்க வெம்மை தாங்காது எனைத் தூர வைத்து விட்டாள்
திருமண இரைச்சலின் பின் எனக்கென்று உரிமைகள் தொலைத்தும் அம்மாவினதா மருமகளினதா உடைமைப் போராட்டத்தில் என்னை அந்நியமாக்கி துப்பிய அம்மா வீடு
கணவன் பிள்ளைகள் சுற்றம் நட்புகள் எல்லாம் என் மடி நிழலில் உறங்கிப் போக
உறக்கம் மறந்த விழிப்பு நிலையில் எப்பவும் இரவுகள் தொடை துளைத்த வண்டோடு
இறங்கப் போகின்ற சந்திப்புதனை தவற விட்டு விடாதிருக்க விழிகள் தண்டவாளம் மீதிறங்கி தற்கொலை செய்து கொண்டன தூக்கத்தை
பாதரசப் பிரதிபலிப்பு அற்று பிறந்த நாளை நினைவு கொண்டு வாழ்த்தும் தாயின் மடி உறக்கம் தூங்காமலேயே பெரும் கனவாகிப் போனது
குளிரும் இரவுகளில் தலையணை நனைக்கும் கண்ணீர்த் துளிகள் கனவை அழித்த படியே ஏக்கத்தை முளைக்க வைக்கின்றது
நூற்றாண்டுகளாய் விழித்திருக்கும் விருட்சங்களை பார்க்கையிலெல்லாம் கேட்டு வைக்கின்றேன் மீண்டும் விதைக்குள் உறங்க ஆசை துளிர்த்ததுண்டா வெனLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 5/04/2008 06:20:00 pm   |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|