சூரியாள்

Wednesday, February 13, 2008
தாகமோடு காதல்கள்
தாகமொடு காதல்கள்

கருப்பை வாசல் திறந்து
ஈன்றெடுத்த முட்டைகளாய்
எங்கெங்கும் தன் உயிர்பை
பாறைகளால் நிரப்பிய காட்டாறு
பங்குனி வெயிலின் தெறிப்பில்
உலர்ந்து கிடக்க

சுவை மறக்காத
பாறைகளின் இடை பள்ளத்தில்
கசியும் ஈரம்

கொண்டிருந்த தாகம்
பங்கு போட்டுக் கொள்ள
நானும் நீயும்

சுனையில் வாய் வைத்த நேரம்

நீரில் மிளிர்ந்த கொம்புகள்
இரசித்தபடி நீ
தனை மறந்து குடித்து முடிக்க
வைத்த வாயில்
உறிஞ்சாது நானிருக்க
நனைந்த உதடுகளோடு
தீராத தாகங்கள்

காலியான நீரோடு
தீர்ந்து போகாத காதல்களும்
posted by mathibama.blogspot.com @ 2/13/2008 10:27:00 am   0 comments
Monday, February 11, 2008
கூந்தல் நதிக் கதைகள் -பொன்னீலன் விமரிசனம்
திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்
போன்னீலன்


பாஞ்சாலி சபதத்திற்குப் பிறகு பெண் கூந்தலை மையக் கருவாகக் கொண்டு எழுதப் பட்ட நீண்ட கவிதை திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் என்று தோன்றுகின்றது. தோழர் ஞானி அவர்கள் கல்லாக்கப் பட்ட அகலிகையை மையமாக வைத்து எழுதிய கல்லிகை என்னும் நூல் இடைக்காலத்தின் நினைவுக்கு வருகிறது. வேறு நூல்களும் வந்திருக்கக் கூடும் என்றாலும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான இவ்வளவு காத்திரமான குரலை வெளிப் படுத்தும் சமீப கால தமிழ் நூல்களில் இது மிக முக்கியமானது என்று நான் கருதுகின்றேன்

கூந்தல் நதிக் கதைகள் இந்தியப் பெண் ஒடுக்குமுறையின் நீண்ட வரலாற்றுத் தளமாக நம் முன் விரிந்துக் கிடக்கிறது . ஆதியிலே பெண்ணுக்கிருந்த சுதந்திர நிலை நடுவிலே சுதந்திரம் பறி போய் அவள் அடிமைப் பட்ட நிலை அந்த அடிமைத் தனத்திலிருந்து இன்னும் விடுதலை பெற முடியாத கொடிய நெருக்கடி என்று மூன்று நிலைகளாக இந்த வரலாறு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது.
ஆதியில் பெண் நதியாய் இருந்தாள் வற்றியும் , பொங்கியும் என்றும் உயிரோடு இருக்கும் அந்த நதியின் சாட்சியாக மலைக்குன்றுகள் மழைக் காலத்தில் பச்சையைப் பிரசவித்தும் அனல் காலத்தில் மண் புழுதி அள்ளித் தெளித்தபடி உப்பித் திரியும் அடைக்கோழியாய் கொக்கரித்தும் அவள் வாழ்வு சுதந்திரமாக தொடர்கிறது. ஆனால் இயற்கை வளங்கள் செயற்கை தோப்புகளாகவும் வயல்களாகவும் தோட்டங்களாகவும் தனியுடைமையாக்கப் படும்போது நதி கட்டுப் படுத்தப் படுகிறாள் அணைகளால் அணைகளின் குறுக்கங்களால் அவளும் இறுகி சுய இயக்கம் இழந்து அணையை அழுத்துகிறாள் . இந்த சூழலை வருணாசிரம சூழல் என்று மிக அருமையாக சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

நாற்புற சுவராய் மலை சூழ
இறுகிக் கிடந்தது சூழல்
இறுக்கத்துள் வரப் பயந்த ஆதவன்
ஈர மேகத் திரையிட்டுக் கிடக்க
இங்கே நாற்புறச் சுவர் என்பது பெண்ணை வரலாற்றில் அடிமைப் படுத்திய நால் வர்ணச் சுவராக உருவகம் கொள்கிறது. ஆதவன் என்பது பெண்ணின் இயல்பான காதலனின் குறியீடு. நால்வர்ண இறுக்கத்துள் வரப் பயந்த இந்த ஆதவன் ஈர மேகங்களுக்குள் திரையிட்டுக் கிடக்கிறான்.

இந்தப் புள்ளியிலிருந்து கதை நம் மன அளவிலேயே குந்திக்கு தாவி விடுகிறது. திருமண மாகாத குந்தியின் சுதந்திரமான காதலன் சூரியன் அவன் மூலமே கர்ணனைப் பெறுகிறாள் குந்தி இந்த முதல் இழையின் தொடர்ச்சியாக வருகிறாள் . கூந்தல் அவிழ்ந்த பாஞ்சாலி, அவள் பிடரியை அழுத்துகிறது தாலிக் கணம். சுதந்திரமாக தலையைத் திருப்ப முடியாமல் அந்தக் கனம் அவளை அழுத்துகிறது . பாசனத்துக்கு என்று கட்டப் பட்ட அணையில் மீன் பிடிப்புக்காக வலைகளோடு சுற்றி வருகின்றன பரிசல்கள் பாஞ்சாலியை யாரும் காதலில் கொண்டு வரவில்லை. வில் வித்தையில் பரிசுப் பொருளாக வென்று வருகிறான் அர்ச்சுனன் அந்தப் பரிசுப் பொருளை ஐந்து பேருக்கும் பங்கிட்டுக் கொடுக்கிறாள் மாமியாரான குந்தி. இந்தப் பங்கிடப் பட்ட வாழ்க்கையில் இருந்து தன் சுயத்தை மீட்டுக் கொண்ட பின்பு தானே பாஞ்சாலி தன் அவிழ்ந்த கூந்தலை கழுவி முடிக்க முடியும். அதுவரை அவள் கூந்தலின் இரத்த வாடை , எப்படிப் போகும்?

இப்படிப் போகிறது பாஞ்சாலியின் கதை.

மூன்றாவது சரடு நவீன பாரதியின் கதை விடுதலையை அனுபவித்து வளரும் பாரதி யோரோ தீர்மானித்த கணவன் வீட்டுக்கு சீதனப் பொருட்களோடு தானும் ஒரு பொருளாகப் போகிறாள். அவள் வாழ்க்கை எப்படிப் போகிறது.

சமைத்துப் போட்டதைச் சாப்பிட்டு
கழுவப் போட்ட வட்டில்கள்
உறங்கி எழும்பிய கட்டில்கள்
நீ சம்பாதிக்கவும்
நான் சமைக்கவும்
நடக்கின்ற தாம்பத்யங்கள்
வீட்டிலும்
நாட்டிலும்
கண்டங்களிலும்

செல் வழியே பேசி இல்லில்லே சிறைப்பட்டு வாழ்கிறாள் பாரதி. கணவன் சுவர்ப் படமாக தொங்கிய பிறகும் விடுதலை வரவில்லை பாரதிக்கு. மாமியார் உருவிலும் கொழுந்தனார் உருவிலும் ஒடுக்குமுறை தொடருகிறது. ஆனாலும் அணையில் அடைபட்டும் போனாலும் சிறிதளவாவது கசிந்து தன் சுயத்தை வெளிப்படுத்தாமலா இருக்கும் நதி. அது தன்னைச் சுற்றிலும் ஈரப் படுத்திக் கொண்டு தான் இருக்கின்றது
இடையிலே இந்த பாரதியின் காதல் நதி பற்றி ஒரு இடைச் செருகல். அந்த காதலோ கை நழுவிய மோதிரமாக மறைந்து மறந்து போகின்றது. துஷ்யந்தனாகி விட்டான் காதலன் அவன் நிலை என்ன?

எனை வேண்டாமென்று சொல்ல
தங்கை முதல் குடும்பம் வரை
நூறு காரணம்
நான் காதலித்தவன் சொல்ல

இந்த காதல் ஒரு இரகசியம் ஆணாதிக்க வாழ்வின் வெளியே சொல்ல முடியாமல் உள்ளே போட்டு பூட்டி புதைத்து வைக்கும் இரகசியம். இந்த இரகசியத்தை வெளிப்படுத்தி அவளை அவமானப் படுத்தி வருகிறான் கண்ணன்
அறுத்து வீழ்த்தப் பட்ட மாம்பழத்தை திரும்ப ஒட்ட வைக்கும் சாக்கில் கண்னனாய் வருகிறான் அண்ணன் . இப்படியாக இப்படியாக வாழ்வின் அனுபவங்களால் இறுகி அகலிகை கல்லாய் போனாள் பாரதி

ஆயிரத்தெட்டு தழுவலின் பின்னும் கூட
உயிர்த்து விடாத அகலிகையாய்
அவள் பயணம் தொடருகிறது. அந்த கல்லுக்குள்ளேயும் பார்ப்பவர்கள் காண முடியாத மீன்களாய் இன்னும் காதல் ஓடிக் கொண்டு இருக்கின்றது கௌதமனோ பகலில் பூக்களோடு பூசையும் இரவில் வாழ்வோடு சயனமுமாய் பாரதி சிந்திக்கிறாள்.
இரவுகள் உறவுக்கானது மட்டுமல்ல
பகிர்தலுக்கானவை
எல்லாம் உறங்கிய பின்
உறங்கியிருந்த உணர்வுகள்
உலாவத் தொடங்குகின்றன.

இந்தச் சூழலில் கீசகனின் வதமும் நடைபெறுகிறது. கீசகன் வதம் என்ன?

உலகமழிந்த
தருணம் ஒவ்வொன்றும்
சொல்லப் பட்டது
வேறு காரணமாயிருக்க
உள்ளே எப்பவும் எனைப்போல்
மிதி பட்ட பெண்கள்
புரட்டிப் போடுகின்றார்கள்

இதற்கு முடிவுதான் என்ன? பாரதிக்கு விடுதலை எப்போது .


கன்னி கற்பு
அபேதங்கள் அற்று
மேரியாகத்தான் இருந்தேன்
ஆதி காலந்தொட்டு

இயேசு பிறப்பின் பின்
மேரி மாதாவாகிப் போனேன்
பேதங்கள் பிறந்திருந்தன
இயேசுவுக்கும்
நட்சத்திரங்களுக்கும்
முந்தியதாக

தாயாய் இருக்கையில்
குழந்தையின் உயிருகு
குருதிப் பாலாய்
மாற்றித் தந்தேன்
படை வீரனாய் மாறுகையில்
தர்மம் வெல்ல
குருதி குடிக்கும்
பாஞ்சாலியாய் மாறுவேன்

அப்போது தான்


வாழ்வு நதியாய்
மேடுகளை நொறுக்கி
பள்ளங்களை மேடாக்கி
வாடிய மணல்களை ஈரமாக்கி
ஈரத்தின் சேறுகளை
அடித்துத் தகர்த்து
மாறி மாறி நகர
சூழும் பாஞ்சாலிகளின்
கூந்தல்கள்
உதிரமின்றி
அர்ச்சுன அரியேறலுக்கு
காத்திருப்பின்றி
முடிந்து கொள்கின்றன பூக்களோடு

இவ்வாறு கூந்தல் நதிகளின் கதை பெண்ணின் முப்பிரிச் சடை போல மூன்று கதைகளின் பின்னலாக தொடருகின்றது. அதற்குள்ளும் அம்பை கதை சுபத்திரை கதை சந்திரமதி கதை, இரணியன் கதை தேவகி கதை, இயேசு கதை இப்படியாக நம் ஆதிக் கதைகள் எல்லாமே பெண் விடுதலை நோக்கில் மறு வாசிப்பு செய்யப் படுகிறது. முள் படுக்கை யாருக்கு?
பிதாமகனுக்கு சில நாட்கள் பாஞ்சாலிக்கோ வாழ்வு முழுவதும். இப்படியாக இந்தக் கதை பின்னல்கள் முழுவதும் பாதி தெரிந்தும் மீதி மறைந்தும் பெண்ணின் விரிவை விரித்துக் காட்டுகின்றன. மொத்தக் கதையையும் பார்க்கும் பொழுது ஒரு அடர்ந்த காட்டை எதிர் கொள்வது போலத் தோன்றுகின்றது . உள்ளே போகப் போக புதிது புதிதாக மரங்கள் விலங்குகள் பறவைகள் பூக்கள் கனிகள் தொடர்ந்து பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டே போகின்றன. தமிழில் இது ஒரு புது வடிவம்.

இந்தக் கவிதை நூலில் ஆதிக்கம் செய்பவை குறியீடுகளே. குறியீடுகளின் தொடர்ச்சியாகவே கவிதை தொடருகின்றது. ஒடுக்கப் பட்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும் . பெண்ணை இப்படிக் காட்டுகின்றார் ஆசிரியர்.

அணைகளுக்குள்
அடைபட்ட போதும்
புதைந்து கிடந்த புராதனங்கள்
நீரின் மேடையில்
நிகழ்த்திய நாடகத்தின்
பதிவுகளைத் தூக்கியபடி
கிலுகிலுப்பை கொண்டு வரும் நதி தீரம்

இப்படி நான்கு வரிகள்
தோளில் பட்ட தொடுதல்
ஒற்றை ஆடைத் தொடுதலை
நினைவு படுத்த
தெறித்து வீழ்ந்தேன்

இன்னுமொரு சித்திரம்

நினைவுக் கிண்ணத்தில்
ஒட்டிய பருக்கைகளாய்
குந்தியிலிருந்து நாளைய
பாரதிகள் வரை
வரங்கள் யாருக்காக
பாரதக் கதையில் வரும் ஒரு புள்ளியிது. இதுவே இந்தக்காவியத்தில் பெண் வரலாறாய் பல ஆயிரம் ஆண்டுகள் விரிந்து போகின்றது. இப்படி ஒரு கேள்வி
நான்
என் மேல் மூடிய ஆடை
எனதுணர்வுகள் எல்லாம்
சூதில்லாமலே
பகடையில்லாமலே
முன் பகை எதுமில்லாமலே
யார் வைத்தாடித் தோற்றது.

பெண் வரலாற்றையே இந்த ஒற்றைக் கேள்வி விழுங்கி விட்டு நிற்கின்றது. எத்தனையோ இயக்கங்கள் எத்தனையோ யுகங்கள் மாறிய பின்னும் பாஞ்சாலியின் நிலை மாறவில்லை.

சந்தையாகி
புரட்சியாகி
சிறைச்சாலையாகி
காங்கிரஸிற்கெனவும்
கம்யூனிசமெனவும்
திராவிடங்கெளென்றும்
மாறிப் போன பிறகும்
பஞ்சாலி விரித்த கூந்தலோடு
உறிஞ்சி உறிஞ்சி தீர்த்தும்
மறையாத வாசமோடு
உலா வருகின்றாள்

இப்படியாக இப்படியாக அடர்த்தியும் வேகமும் செறிந்த அழ்குமாய் இந்த நூல் அமைந்திருக்கின்றது . நம் ஆதிக் கதைகள் தெரியாதவர்களுக்கு இது புதிராக அமையலாம். தெரிந்தவர்களுக்கோ இது ஒரு கடல். பெண் விடுதலைக் குரிய முத்துக்கள் விளைந்து கிடக்கும் கடல்
posted by mathibama.blogspot.com @ 2/11/2008 06:10:00 pm   0 comments
Friday, February 08, 2008
நிஜங்களின் மூடு திரைகள்-கவிதை

நிஜங்களின் மூடு திரைகள்
திலகபாமா

தென்னாடுடைய சிவனார்க்கு
மாதவிலக்கான பெண்கள்
ஆனாலென்ன
ஆகாமல் போனாலென்ன

கயிலையின் குளிர் நுனி
எங்கள் பாதமுரசிய பிறகு

வெள்ளாமைக் கடையாளமென்று
தலைவழி தண்ணீரூற்றி
தீச்சட்டி எடுக்க வைத்த
பாட்டியின் சுருக்குப் பைக்குள்
சுத்தமும் பகுத்தறிவும்

கருவறையே நானாகிய பிறகு
கோவில் கருவறைக்கு
பகுத்தறிவு பாசறைகளின் போராட்டங்கள்
நிஜங்களின் மூடுதிரைகளோடு

கருவறை தாண்டி
சமையலறை கடந்து
கூடங்கள் மறுத்து
தாண்டிய படிகள்
உயர்த்துவதாக மாறப் போகின்ற
தருணத்தில்
பாதைகளை படுக்கையறைக்குள்
சுதந்திரமென்று சுற்றி விடும்
சூட்சும சாணக்கியங்கள்
தோற்றுப் போக

காலம் காலமாய் வேர் விட்ட
கட்டிலின் கால்கள்
மண்ணோடு சிறையிருந்த போதும்
கிளைகளில் கூடு கட்டி
சிறகுகள் வந்த பின்
வானத்தை இருப்பாக்கும் கிளிகளாக

கட்டிலோடு சிறைப்பிடிக்க
வலைகள் விரிக்கும்
நரித்தனங்களையும்
உறிஞ்சி பச்சையங்களாய்
மாற்றிப் போடட்டும் வேர்களினி
posted by mathibama.blogspot.com @ 2/08/2008 06:56:00 pm   1 comments
Sunday, February 03, 2008
பிப்ரவரி புகைப் படப் போட்டிக்கு





முதல் இரண்டும் போட்டிக்கு, மற்றவை பார்வைக்கு




posted by mathibama.blogspot.com @ 2/03/2008 01:07:00 pm   6 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates