சூரியாள்

Friday, September 19, 2008
கூந்தல் நதிக் கதைகள்

கூந்தல் நதிக் கதைகள்

( அநாதி சொரூபக் கவிதை)

கவிதை குறித்த இயங்கியலை அதன் உள்ளடக்கமும், உருவமும் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இரண்டும் அக புற காரணிகளாய் செயல்படுவது தவிர்க்க முடியாதொன்றாகிப் போக இரு பக்கமிருந்தும் சிந்திக்கிறதொன்றாகவே கவிதை உரையாடல்கள் அமைந்து விடும்
கவிதை குறித்த உரத்த உரையாடல்கள் எப்பவும் நம்மை ஒற்றை வாசிப்பில் தள்ளி விடக் கூடிய அபாயம் இருப்பினும், அதன் பன்முகத் தன்மையின் அடுத்தடுத்த பரிமாணங்களை பேசித் தெளிவு பெற்று விட வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றோம். கடந்த 3 ஆண்டுகளாக சர்ச்சைகளையே கவிதை குறித்த உரத்த உரையாடல்களாக பதிவு செய்து விட்ட இன்றைய கவிதை உலகு , அது தீர்ந்து போன நொடியிலிருந்து ஒரு மௌனத்தை கடைப்பிடிப்பது தவிர்க்க இயலாததொன்றாகிப் போகின்றது.

கவிதை இசையின் வழி இயங்குதலை கைவிட்டு காட்சிப் படுத்தலை தன் இயங்கு தளமாக்கியும் கொண்டுள்ள தருணத்திலிருந்து மௌன வழி உணர்த்தலை தன் வெளிப்படு வாசலாக்கியும் கொண்டுள்ளது.
ஆனால் மௌனம் சாவுக்கு ஒப்பானது என்பதால் வேறு வேறு வார்த்தைகளில் அடுத்த நகர்தலுக்கான உரையாடலை வடிவமைப்பது அவசியமாகின்றது

பாரதிக்குப் பின் பெண்ணும் கவிதையும் என்பது நாம் அறிந்து தொடங்கிய ஒரு எல்லையென வைத்துக் கொண்டு இந்த கட்டுரை அதன் நகர்தலை நிகழ்த்துகின்றது. கவிதையின் இன்றைய ஒட்டு மொத்த இருப்பை என் உணர்தலாகவும், எனது கூந்தல் நதிக் கதைகள் படைப்பின் மீதான உரையாகவும் இக்கட்டுரை பேசுகின்றது

“ஒவ்வொரு காலமும் இந்த பருவம் போல் எப்பொழுதும் வெயில் அடித்ததேஇல்லை” எனச் சொல்லும் ஒரு மனிதனின் மன நிலையிலிருந்து கொண்டு தான் புதுக்கவிதை காலாவதியாகி விட்டது என்றது போன்ற கவிதை விமரிசனமும் , நனீன கவிதை செத்து விட்டது என்ற உரையாடலும் நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது.


கவிதையின் தளங்கள் அந்தந்த கால கட்ட வாழ்வை ஒட்டி மாறுவதும் , நிலைபெறுவதுமாக மீண்டும் மாறுவதுமாக இருந்து வருகின்றது.
எங்களுக்கு முன்னால் இருந்த முன் தீர்மானங்கள் இன்றைய யதார்த்ததின் ஒளியில் வேறு வர்ணம் சுமப்பதுவும், இதுவரை இருந்த சிந்தனைகளை இன்னொரு தளத்திற்கு நகர்த்திப் போவதும் வாழ்வாக இருக்க ,அப்படியான வாழ்வைத்தான் இன்றைய கலை மற்றும் கவிதை உலகு தனது இயங்குதளமாக மாற்றிக் கொள்கின்றது. அதே நேரம் ஒற்றை இயங்குதளத்திற்குள் ஒரு கலைப்படைப்பு தன்னை அடைத்துக் கொள்வதும் சாத்தியமில்லை ஏனெனில், இன்றைக்கு ஒருவருக்கு இருக்கின்ற வாழ்க்கை மற்றவர்க்கு சாத்தியமில்லாததாகிப் போனதினால் ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் அல்லது 70 களில் சொன்னது போல் வானம்பாடிகள் , எழுத்து இலக்கியவாதிகள் என் கட்டம் கட்டி விட முடியா சூழலும் இன்றைய நிதர்சனம். ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் தீர்மானித்து விட முடியாது ஒவ்வொரு படைப்பாளியும் புதிய புதிய வகைமைகளை உருவாக்கிக் கொள்வது இன்றைய கவிதையின் பலமும் பலவீனமும் ஆகும்

இது இப்படி இருக்க எங்களை இயல்பாக வாழ்ந்து விட அனுமதியாத முன் தீர்மானங்கள் புதிய யதார்த்த இயல்பின் முன் கட்டுடைவதும் கவிதையின் இயங்கியலைத் தீர்மானிக்கின்றது தன்னை இதுவரை இருந்ததிலிருந்து நகர்த்திக் கொள்ளும் படைப்பு அடுத்த தளத்தை தன்னில் புதிய சிந்தனைகளோடு கட்டமைப்பதுவும் அதன் முக்கியப் பணியாக கையகப் படுத்துகின்றது.

கட்டுடைப்பதுவும் மீள்கட்டமைப்பும் இன்றைய பின்னவீனத்துவத்தின் கூறுகள் மட்டுமல்ல. காப்பிய கால கலை உலகு தொட்டு இன்றைய காலம் வரைக்கும் என்றைக்கும் நம்மிடையே இருந்து கொண்டிருப்பதுதான்.
எந்த ஒரு கலை வடிவமுமே முரண்பட்ட சமூக அமைப்பிலிருந்து கொண்டு ஏற்படும் வளர்ச்சி பற்றியதாகவே இருக்கும்

தன் வாழ்க்கையோடு தன்னையும் சேர்த்து எழுதிப் பார்த்துக் கொண்டிருப்பவனாகவே படைப்பாளி இருக்கிறான்.அனிச்சைச் செயலாய் சமூகமும் , அவனது நினைவு மனமும் வெளிப்பட்டே தீரும். அவநம்பிக்கையுள் இருக்கும் படைப்பாளி பார்வையில் ஒட்டு மொத்தமும் அவநம்பிக்கையாகவே தெரிவதும், வாழ்க்கையை செம்மையான திறனோடு அமைத்துக் கொள்கின்ற படைப்பாளி பார்வையில் திறனைக் கைக்கொள்ளும் விசாலம் சிக்குவதும் கண்கூடாக கிடைக்கின்றது வாசகனுக்கு

கூந்தல் நதிக் கதைகள்

எனக்கு முன்னால் ஒரு இளம் விதவையின் காதலும் , புரிந்துணரவைக்க முடியா தோல்வியும் இயலாமையும், கனவுகளைத் தொலைத்து விட்ட கோபத்திற்கு அப்பால் மிச்சமிருக்கின்ற வினாடிகளை வாழ்ந்து விடத் துடிக்கின்ற அவலம் காணக் கிடைத்த போது , அவை எழுப்பிய கேள்விகளிலிருந்து கூந்தல் நதிக் கதைகளின் கரு உருவானது.
ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய போது எல்லாக் கவிதைகளையும் போலவே முடிந்து விடும் என நினைத்த கவிதை முடிவுறாது நீளப் போன உணர்வுகளால் தன்னையும் நீட்டித்துக் கொண்ட போது அதுவும் 3 ஆண்டு காலம் எனக்குள் சுழன்று கொண்டே இருந்தது , அந்த சுழற்சியில் ஒரு நாள் இடை புகுந்தாள் பாஞ்சாலி, நான் மனதுக்குள் எழுப்பிக் கொண்டிருக்கின்ற கேள்விகள் வெறும் இன்றைக்கானது மட்டும் தானா? அதே கேள்விகள் என்னிடமும் இருக்கிறது என்ற பாஞ்சாலியின் குரலைத் தொடர்ந்து அதன் கதை ஓட்டத்தில் பாஞ்சாலியின் மறு வாசிப்பும் கவிதையின் கதைக் களனானது.
நிகழின் கேள்விகளாய் இக்கவிதையின் கதாநாயகியான பாரதியும், நேற்றைய உணர்வுகளாய் பாஞ்சாலியும் உரத்துச் சிந்தித்துப் போகின்றார்கள். பாஞ்சாலியையோ, புராண பாத்திரங்களையோ மீட்டுருவாக்கி உலா விட வேண்டிய தேவை ஒன்றும் இக்கவிதைக்கு இல்லை. அதே நேரம் புராண பாத்திரங்களும் அன்றைய கால வாழ்வின் பிரதி பலிப்பே. ஒற்றை பெண்ணின் கேள்வியாய் நின்று விடாது உணர்வுகளை பொதுமைப் படுத்தி தந்து விட கவிதைக்கு பயன் பட்டிருக்கின்றது இத்தொன்மக் கதையாடல்கள்.

காலம், இடம், பிரதேசம் எல்லாம் மாறிய போதும் ,வேறு வேறு மாதிரியான காரணிகளூடான பிரச்சனைகளின் பின்னும் ஒரே மாதிரியான உணர்வுகள் இருப்பதை சொல்லும் விதமாகவே யமனை நதிக் கரையும், மருதா நதி தீரமும் இக்கவிதையின் படிமமாயிருக்கின்றது. அன்றுமின்றும் உணர்வுகளை உணர்த்திவிட முடியா வெற்றிடம் பெண் பக்கமிருப்பதையும், உணர்த்திவிடும் போதும் ஆண் அதை அவனுக்கான மொழியிலேயே வாசித்து விடுவதையும் பாரதியும் ( இக்கதையின் கதாபாத்திர பாரதி) பாஞ்சாலியும் பேசிப் போகின்றனர். எல்லோரும் அறிந்த சம்பவங்களுக்கிடையேயும் பார்த்திராத ஒரு பக்கமும் அதன் மீதான குற்ற வாசிப்பையும் இக்கவிதை நிகழ்த்துகின்றது.
கவிதையின் ஒவ்வொரு அத்தியாயமும் நதிகளின் பெயராலேயே துவங்குகின்றது. நதிகளின் பெயரை பெண்ணுக்கான படிமமாக்குவது என்பது புதிதில்லை என்ற போதும், இருக்கின்ற நதிகளின் பெயரால் அவை இல்லை என்பதுவும் பெயர்களின் புனைவுகள் ஆழ்ந்த அர்த்த வெளிப்பாட்டுக்குள் இழுத்துச் செல்வதும் தவிர்க்க முடியாதொன்றாகிப் போகின்றது.

2003 இல் எழுதத் துவங்கிய இக்கவிதை மூன்று ஆண்டு கால இடைவெளியில் என் பல்வேறு பட்ட வாழ்வின் வேறு பாடுகளில் எழும்பிய விசாரணைக்குள்ளிருந்தும் எழுதப் பட்டது.

அநாதி சொரூபக் கவிதை

நேற்றைய வரலாற்றுக் கதையாடல்களுக்குள் வாசிக்கப் படாத உணர்வுகளும் இன்றைய யதார்த்த வாழ்வுச் சிக்கல் எழுப்பும் கேள்விகளும் ஒரே நேர் கோட்டில் இருப்பதைப் பதிவு செய்து போகும் இக்கவிதையில் நேற்றுமல்லாது இன்றுமல்லாது இதுதானென்று அறுதியிட்டுக் கூற முடியாத ஏற்கனவே இருக்கின்ற வடிவங்களுக்குள் தன்னை திணித்துக் கொள்ளாத சொரூபம் தாங்கி இருக்கின்றது என்பதால் “ அநாதி சொரூபக் கவிதை என்று பெயரிட்டுள்ளேன், பெயர் என்பது வெறும் அடையாளப் படுத்துதல் அவ்வளவே.
இக்கவிதை எழுதப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் இலக்கிய நண்பர்களிடமிருந்து என்ன எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்று கேட்கப் பட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குள் கேள்வி எழுந்தது.

அதே நேரம் இங்குள்ள இலக்கியப் போக்குகளுக்கு மேலைத்தேய இலக்கியப் பெயர்களை மொழிபெயர்த்து வைப்பதில் எப்பவும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை.

யாப்பு செய்யுள் வெண்பா , கவிதை புதுக்கவிதை , நவீனம் , பின் நவீனம் , இப்படியாக தொடரும் பெயர்பட்டியல் என்பது அந்தந்த கால கட்டத்தை அந்தந்த காலத்தின் கலை வெளியை காலத்தோடு சேர்த்து அடையாளப் படுத்தும் மொழியே தவிர கவிதையின் இயங்கியல் அன்று.முதலில் இருந்த பெயர் பட்டியல் காலணி ஆதிக்கத்திற்கு முந்தைய நமது வகைப் படுத்தல்கள் , கவிதைக்கு அப்புறமாக எல்லாமே காலணிஆதிக்கம் நம் மேல் சுவடு வைத்து விட்டும் போன பதிவுகளின் எச்சமாக மேலைத் தேயத்தின் வகைப் படுத்தல்களை நமக்கானதாகவும் மாற்றி வாசிக்கும் முயற்சிகளே.கவிதையின் இயங்கு தளமோ படைப்பாளியின் தனிப்பட்ட குணாதிசயங்களோடும் அவை சமூகத்தோடு ஒட்டியும் வெட்டியுமென அவனே அறிந்தும் அறியாமலும் தொடர்புடையதாகவே அமைந்து விட, அவற்றை வகைப் படுத்த நாமோ மேலைத்தேய வகைப் படுத்தல்களை மொழிபெயர்த்து நமது படைப்புகளுக்கும் உலக இலக்கியங்களோடு ஒப்பு நோக்குகின்றோம் என போலிக் கௌரவமாய் இட்டுக் கொண்டிருக்கின்றோம். நமது குழந்தைக்கு நாம் கண்டு பிரமிக்கும் பக்கத்து வீட்டுக் காரன் பெயரை முன்மொழிவது போல

எனவே என்ன எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்பதற்கு நாமே வகைப்படுத்துவதே சரியென்று பட்டதால் எனது இக்கவிதை வடிவத்திற்கு அநாதி சொரூபக் கவிதை எனப் பெயரிட்டேன்.

கவிதை உலக இலக்கியங்கள் போல என “ தொழில் நுட்பப் படுதல் “ செய்யப் படுகின்றது . வாழ்க்கையை எழுதாது படைப்பாளி தொழில் நுட்பப் படுதலுக்கு தன் எழுத்தை உட்படுத்தும் போது போலச் செய்கின்ற படைப்பில் ஏற்கனவே இருக்கின்ற சடங்கு முறைமைக்கு எதிராக மாறாது தானும் மற்றுமொரு அல்லது வேறொரு சடங்கு முறைமையே கடைப்பிடிக்கத் துவங்குகின்றது

இன்றைய கவிதையில் இயங்கியலை வகைமைப் படுத்தி ஒரு பெயரிடல் அதை சுட்டிக் காண்பிப்பதற்கும் அடையாளப் படுத்துவதற்கும் உதவுமே அன்றி கவிதையின் சட்டமாகி விடாது. அந்தச் சட்டத்திற்குள் இன்னொரு படைப்பாளி கண்டிப்பாக சிக்கிக் கொள்ள முடியாது. வேண்டுமென்றால் அதிலிருந்து இன்னொன்றாய் மாறலாம். .தெரிந்த நாலா திசைகளிலும் தெரியாத எல்லாத் திசையிலும் அது வளரவும் பெருகவும் கூடியது. வாழ்வை தன் வரையறையாக்கிக் கொண்டு கவிதையின் இயங்கியல் தொடரத் தொடர படைப்பாளி தன்னை சமூகமாய் வாசிக்கத் தருகின்ற இடத்திலிருந்து மரிக்கவும் அவனை வெளித் தள்ளிய படைப்பு அதாவது பொதுமைக்கு வந்த படைப்பை கொண்டாடுவதன் மூலம் படைப்பாளியை உயிர்க்கவும் வைக்கும். கவிதையின் சிறப்பே இருந்தும் இல்லாமலிருப்பதாய் தோற்றம் தருவரும், சொல்லிய விடயத்திலிருந்து சொல்லாத ஒன்றாய் மாறுவதும், மரித்த இடமிருந்து உயிர்ப்பதும் என எதிர்முரண் இயங்கியலை தன்னகத்தே கொண்டிருப்பதுவும் ஆகும் நமது கடவுளர்கள் போல

இறுதியாக பெண் எழுத்து என்ற வகைமையில் என் இக்கட்டுரை எதையுமே சுட்ட விரும்பவில்லை, இன்றைய கால கட்டம், ஒட்டு மொத்தங்களுக்குள் தொலைந்து போகும் தனித்துவங்களை பேசத் தொடங்கி முன்னெழும்பிய பெண்ணியமும் தலித்தியமும், தனித்துவங்களையே பேசிப் பேசி, கொண்டாடி மீண்டும் தனிமைப் பட்டுப் போகக் கூடிய அபாயத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஒட்டு மொத்தங்களுக்குள் சுயம் தொலைந்து விடக் கூடாது என்ற போதும் பொதுமைக்குள் வருவதுவே எல்லா இடமும் படைப்பும் படைப்பாளியும் நிரம்பிக் காணப் படுகின்ற வெற்றித் தருணமாக அமையும்.
11.09.08
( காந்தி கிராம பல்கலைக கழகத்தில் பாரதிக்கு பின் பெண்ணும் கவிதையும்
என்ற தலைப்பில் நடத்தப் பட்ட கருத்தரங்கில் வாசிக்கப் பட்ட கட்டுரை ?

Labels:

posted by mathibama.blogspot.com @ 9/19/2008 07:30:00 pm   0 comments
Saturday, September 06, 2008
வாழ்த்துகின்றோம்

அருளாளர் ஆர்.எம்.வி. அவர்களின் 83ஆம் பிறந்த நாள் மங்களம்
9.9.08 ராணி சீதை மகாலில் நடைபெற இருக்கின்ற இலக்கிய விழா ஐந்து எழுத்தாளர்களை “ கலை இலக்கிய செல்வர்கள்” என ஆற்காடு வீராசாமி கௌரவிக்க இருக்கின்றார்.
எழுத்தாளர். பி. வி. மெய்கண்டார்
எழுத்தாளர். பத்மாவதி விவேகானந்தர்
எழுத்தாளர். மூவேந்தர் முத்து
கவிஞர் .வைகை செல்வி
ஒளிப்படக் கலைஞர் யோகா

அவ்விலக்கிய விழாவில்
“வளரும் செம்மொழி” என்ற தலைப்பில் அப்துல் ரகுமானும்
“காப்பியம் வளர்த்த தமிழ் “என்ற தலைப்பில் செல்வ கணபதியும்
உரையாற்ற இருக்கின்றனர்


இவ்விழாவில் பாராட்டு பெறும் கலைஞர்களையும், எனது தோழியுமான வைகைச் செல்வியையும் மனமார வாழ்த்துகின்றோம்

Labels:

posted by mathibama.blogspot.com @ 9/06/2008 02:32:00 pm   0 comments
Tuesday, September 02, 2008
திறப்பின் கூண்டுகள்
திறப்பின் கூண்டுகள்
திலகபாமா


காலம் காலமாய்
கம்பிகள் தேய
புலியை தனதாக்கியிருத
கூண்டு திறந்து கொண்டது

காரணங்கள் கேட்கப் பட்டன
புலியிடமும்
கூண்டிடமும்

சொல்லாமலேயே
பேசப் பட்டுக் கொண்டிருந்தன
புலியைத் திறந்து விட்ட
கூண்டின் பெருந்தன்மைகள்

புலியின் இரைச்சலும் கழிச்சலும்
சகித்திருந்த கூண்டின்
இறுதிப் பொறுமையின்மையும்

சும்மாயிருந்த பொழுதுகளில்
இரும்புக் கம்பியில் பல் தடமிட்ட
புலியின் முரட்டுத் தனங்களும்

இணையாக முடியா
கூண்டின் இயலாமைகள்
புலி உணர்த்திய தருணமொன்றில்
கூண்டின் கம்பிகள்
நெளிந்து காற்றின் மோதலில்
தூளானதை
நம்ப மறுக்கும் கூடாரங்கள்
சவுக்குகளோடு அலைய

நடக்கையில்
கால் பதியும் மண்ணோடும்
ஓடுகையில்
துண்டாட முடியா நீரோடும்
பாய்கையில்
முன் பாயும் காற்றோடும்
இருளில் தேடும் விழியில்
எரியும் நெருப்போடும்
தீர்மானத்தில்
இதுதானென முடியா வானோடும்

இணையாகிக் கலக்கிறது புலி

(புதிய பார்வை இதழில் வெளிவந்த கவிதை)

Labels:

posted by mathibama.blogspot.com @ 9/02/2008 10:13:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates