சூரியாள்

Friday, December 23, 2011
என்றுமே அணைகள் பிரச்சனையா?

அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்

நா . தில்லை கோவிந்தன்


“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு
எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும்
இந்நாடே”
இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் .
கட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட,
ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள்
ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று
ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல.
மணல் திருட்டு, மணலில் கள்ளச்சந்தை, மணல் எடுத்தால் லாரிகள் பறிமுதல்.
ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கைது.. மணல் லாரி ஓட்டுநரை தடுத்த தாசில்தாரை
லாரியால் கொலை . ஏன் இந்த நிலைமை ? .அரசாங்கம், பொதுமக்கள்,அதிகாரிகள்
பொறியாளர்கள் ,விவசாய வல்லுநர்கள், கட்டிடத் தொழில் வல்லுநர்கள் எல்லோரும்
சிந்தித்துப் பார்க்க வேண்டும் . நிலத்தடி நீர் நாளுக்கு நாள் அதல பாதாளத்துக்குப்
போய்க்கொண்டிருக்கிறது. ஆழ்குழாய் கிணறுகள் போடுவதால்தான் இந்த நிலைமை
என்று சொல்லுகின்றார்கள், நிலத்தடி நீர் கீழ் நோக்கி போவதால்தான்
ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டன. குடிநீருக்குப் பஞ்சம் . தொடர்ச்சியாக பருவமழை
பொய்த்துவிட்டது. மழைகுறைவுக்கு வனங்கள் அழிக்கப்பட்டதுதான் காரணம் . வனங்கள்
அழிக்கப்பட்டதற்கு அரசாங்கம் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.
வனமகோத்சவம் நடத்தினோமே அதன் விளைவு என்ன ? ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தைப்
பற்றி மாத்திரம் குறிப்பிட விரும்புகின்றேன் . வரு:ஷநாடு வனப்பகுதியை அழிப்பதை அரசாங்கம் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் . வைத்ததைச் சொல்லிவிட்டு வருஷ நாட்டுக்குப் போ : என்பது 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழமொழி . கொடைக்கானல்
மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுகின்றன . அதே போன்று அய்யம்பாளையம்
கோம்பையில் பஞ்சந்தாங்கி என்ற வனப்பகுதி தாண்டிக்குடி வளர வளர்ந்த வனம் .
முற்றிலும் அழிக்கப்பட்டது . கொடைக்கானல் மலையில் ஏன் தமிழ் நாட்டிலே
வனங்களை ஏலப்பயிர் சாகுபடி செய்ய தனிப்பட்ட விவசாயிகளுள் 25 வருட
குத்தகைக்கு ஏலம் மூலம் விடப்படும், . அதை அரசாங்கம் நிறுத்தி வனங்களைத்
தன் வசப்படுத்திக்கொண்டது. தனியார் வசம் இருந்தவரை வனங்கள்
பாதுகாக்கப்பட்டன . அரசாங்கம் வனங்களை எடுத்துக் கொண்டதால் சமுக
விரோதிகளால் வனப்பகுதியை கொஞ்சம் , கொஞ்சமாக அழிக்கப்பட்டன..
வெள்ளாடுகள் மலைப்பகுதியில் வெளிப்பகுதிகளிலும் , காடுகளிலும்
மேய்ப்பதால் பசுமை பாதிக்கப்படுகின்றது . வனங்கள் அழிக்கப்பட்டன.
அணைகள் கட்டுவதற்கு பொறியாளர்களின் ஆலோசனை
கேட்கப்பட்டதா ? அணைகள் கட்டின செலவு எவ்வளவு ? அதை
அரசாங்கம் எப்படி வசூலித்தது. அணைகள் கட்டும்முன்பு இருந்த
விவசாய நிலத்தின் விஸ்தீரணம் எவ்வளவு ? அணைகள் கட்டிய
பின்பு உள்ள விவசாய நிலம் எவ்வளவு ? அணைகள் கட்டியதால்
விவசாயிகளின் REPARIAN RIGHT பாதிக்கப்பட்டதா ? அணைகளைக்
கட்டியதால்தானே நிலத்தடி நீர் கீழே போனது . குடிநீருக்கும் பஞ்சம்
வந்தது.. ஆறுகளில் பானையைப் புதைக்கும் அளவுக்கும் குழிகள்
தோண்டப்பட்டன.. அணையால் தண்ணீரை மட்டும் தேக்கவில்லை .
மணலையும் சேர்த்து தேக்கி விட்டோம் . அதனால் தான் இந்த அவல நிலைமை .
அணைகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் பிரயோஜனப்படாது .
வைக்கப் புல்லில் நாய் படுப்பதுபோல்தான் . அணைகள் கட்டியது அரசியல்
விபத்து . பீட்டரைக் கொள்ளை அடித்துப் பாலுக்குக் கொடுத்த கதைதான் .
(ROB PETER AND GIVE TO PAUL)
உதாரணமாக ஒன்று பட்ட மதுரை மாவட்டம் , ஒன்றுபட்ட
இராமநாதபுரத்தில் கட்டப்பட்ட சில அணைகளைப் பற்றி பார்ப்போம் .
-வைகை அணை:-
இது காங்கிரஸ்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது . அணைக்கட்டும்
விஷயம் சட்டசபையில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது .ராமநாதபுரம் மாவட்டத்துக்கு
தண்ணீர் விட்டது போக எஞ்சிய நீர் வைகை அணையில் தேக்கப்படும்: : என்று
சட்டசபையில் வாக்களித்த பின்புதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . பின்புதான்
வைகை அணை கட்டப்பட்டது . ஆனால் எல்லா உறுதி மொழிகளும் காற்றில்
பறக்கப்பட்டன . இரண்டு மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்பட்டதுடன் மதுரைக்கு
குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது . வைகை அணையில் 22 அடி வண்டல் மண்
படிந்து உள்ளது .வைகையில் இரண்டாவது அணைக்கட்ட வேண்டும் என்று சிலர்
வாதாடுகின்றார்கள் .இந்த வாதம் முற்றிலும் தவறானது . வைகை ஆற்றில்
திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரை வந்து சேரவில்லை . குடிநீர் பிரச்சினை ,
மணல் திருட்டு , ஆற்றில் பானையைப் புதைக்கும் அளவிற்கு பள்ளம் .
மதுரை , ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் பாதிப்பு இவை எல்லாவற்றிற்கும்
காரணம் வைகை அணைதான் . அணையில் தேங்கி இருக்கும் வண்டலை
வெளியேற்ற வேண்டும் . அணையின் ஷட்டர்களையும் அதன் அடிப்பாகத்தை
இடித்து தண்ணீரும் ,வண்டலும் கலந்து Free Flow Of Water and Sand ----
விடப்பட வேண்டும் .இது ஒன்றுதான் எல்லாப் பிரச்சினைகளையும் போக்கும் .
கல்கி உதவி ஆசிரியர் 1986 ம் மருதாநதி, சொட்டங்குளம் ,வஞ்சி ஓடைகளைப்
பார்த்து “அணைக் கட்டினார்கள் , அடி வயிற்றில் அடித்தார்கள்” என்று கட்டுரை
எழுதினார் . இது எல்லா மாதிரி அணைகளுக்கும் பொருந்தும் . வைகை ஆற்றில்
குடவனாறு , மருதாநதி ,மஞ்சளாறு இவைகளில் கழிவுகள் எல்லாம் கட்டாத்து
அய்யம்பாளையத்தில் வைகை ஆற்றில் சேரும் . இப்பொழுது கனம் முதலமைச்சர்
அவர்கள் அணைகளில் இருந்து குடிநீருக்காகத் தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவு
பிறப்பித்திருக்கின்றார்கள் . அணைகள் கட்டாமல் இருந்திருந்தால் ஆற்றில் தண்ணீர்
தானாக ஓடிக்கொண்டிருக்கும் . குடிநீர் பஞ்சம் வந்திருக்காது . மணல் பிடிப்புதான்
தண்ணீர் சேமிக்கும் வங்கி . அந்த மணலை அணைக்கட்டி தடுத்து நிறுத்தியது
மகாதவறு . மக்கள் , அரசியல்வாதிகள் பொறியாளர்கள் விவசாய வல்லுனர்கள்
யாரும் சென்ற 50 ஆண்டுகளைத் திரும்பி பார்க்கத் தவறிவிட்டார்கள் .
அமெரிக்காவில் Maine ‘s Kennier ஆற்றில் உள்ள 7... 2 . மீட்டர்
உயரம் , 85 மீட்டர் அகலம் கொண்ட Edward Dam உடைத்து எறியப்பட்டது .
அமெரிக்கா இப்பொழுது அணைகளை இடிப்பதில் ஆர்வமாக உள்ளது .
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் Ego தான் அணைகள் கட்டப்பட்டன .
இது தான் நிதர்சனமான உண்மை .
திருச்சி ஜில்லாவில் இராமசமுத்திரத்தில் மணல் எடுக்க அரசாங்கம்
அனுமதி கொடுத்திருக்கின்றது . இப்படி மணல் அள்ளுவது வெய்யில் காலத்தில்
தண்ணீர் ஆற்றில் ஓடுவதைத் தடுத்துவிடும் என்று வாழை சாகுபடியாளர்கள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் . ஆனால் ஆட்சியர் டாக்டர் மணிவாசன் குறிப்பிட்ட
இடத்தில் மணல் வாரப்படுவதால் தண்ணீர் ஓடுவதைத் தடுக்காது என்று
சமாதானப்படுத்தியிருக்கின்றார் . இது தவறான செயல் . நிலத்தடி நீர்
மகாநாடு திண்டுக்கல்லில் நடந்தது . ஆற்றில் மணல் அள்ளுவதால் நீர் மட்டம்
குறையும் . எனவே மாவட்ட அதிகாரிகள் ரவுடிகளையும் , அரசியல் தலையீட்டையும்
கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து உள்ளனர் .
அறிவில் சிறந்த அறிவாளர்கள் மதிப்புக்குரிய வி . ஆர் . கிருஷ்ண அய்யர்
எச் .சுரேஷ் ,வி .வசந்தாதேவி , எல் . மார்க்கண்டன் , கே . கோபாலகிருஷ்ணன்
இவர்கள் அடங்கிய கமிட்டியிடம் மனுக்கள் கொடுத்தனர் .
மதிப்புக்குரிய கமிட்டி அங்கத்தினர்கள் மலையிலிருந்து உற்பத்தியாகும்
ஆறுகள் சமவெளிப்பகுதியை இணைக்கும் பாலம் . அதைத் தடுக்கும் எந்த வேலைக்கும்
மக்களின் நலனையும் இயற்கையையும் பாதிக்கும் என்று கூறியிருக்கின்றனர் . தாமிரபரனி
நதிக் கரையில் 100,000 தென்னை மரங்கள் கருகிப்போனது . 50,000 பேருக்கு வேலை இல்லை .அரசாங்கம் மணல் திருட்டை எடுத்த நடவடிக்கை போதுமானதல்ல . கோர்ட்டுக்குப் போயிருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . ஆனால் ஏன் இந்த நிலைமை
ஏற்பட்டது என்பதைப் பொதுமக்களும் சொல்லவில்லை . மதிப்பிற்குரிய கமிட்டி
அங்கத்தினர்களும் ஆராயவில்லை .மணல் அள்ளுவற்கு லைசென்ஸ் கொடுக்கக்கூடாது .
லைசென்ஸ் வந்தவுடன் ஊழலும் வந்துவிடும் . சிவனப்பன் போன்ற பெரிய , பெரிய
வல்லுநர்கள் எல்லாம் இந்த மணல் பஞ்சம் ஏன் ஏற்பட்டது என்று அதன் Root Cause
என்ன என்று ஆராயாமல் விட்டுவிட்டார்கள். மணல் அள்ளக்கூடாது என்றால்
மணலுக்கு எங்கே போவது ? யாராவது சிந்தித்தார்களா ? வி . ஆர் . கிருஷ்ண் அய்யர்
கமிட்டி லேசாகத் கவனித்தது .. ஆனால் ஏனோ ஆழ்ந்து சிந்திக்கவில்லை . அரசாங்கத்துக்கும் , பொதுமக்களுக்கும் உள்ள இடைவெளி இது . ராமன் ஆண்டால் என்ன ? இராவணன்
ஆண்டால் என்ன ? என்ற நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டார்கள் . கண்ணகி மதுரையை
எரித்த பின்பு வைகை ஆற்றில்தான் நடந்து சென்று கேரள எல்லையில் தெய்வமானாள்.
வத்தலக்குண்டு-- உசிலம்பட்டி போகும் வழித்தடத்தில் வைகை ஆற்றில் கட்டப்பட்ட
பாலத்துக்கு கண்ணகி பாலம் என்றுதான் பெயர் . மக்களுக்கு அரசியல் தான் முக்கியமாகப்
போய்விட்டது . அரசியல்வாதிகள் ஆழ்ந்து சிந்திக்கவில்லை . அவர்கள் அரசியல்
பண்ணுகிறார்கள் .
மஞ்சளாறு அணை:-
----
இந்த அணையும் காங்கிரஸ் ஆட்சியின் போது கட்டப்பட்டதுதான் . மஞ்சளாறு
கொடைக்கானல் போகும் வழியில் வெள்ளி நீர் வீழ்ச்சி என்ற ஆறுதான் மஞ்சளாறு .
இடையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் சில சில சிறு ஆறுகளும் அதில் சேரும் .
டம் டம் பாறையிலிருந்து பார்த்தால் தண்ணீர் விழும் காட்சி கண்ணைக் கவரும் .
1953 – 54-ல் தேவதானப்பட்டியில் காங்கிரஸ் மாநாடு நடந்தது . உயர்திரு .காமராஜர்
அவர்கள்தான் தலைமை வகித்தார் . தேவதானப்பட்டி மக்கள் அணைக்கட்ட வேண்டும்
என்று கேட்டார்கள் . இன்று அவர்களுடைய வாரிசுகள் தண்ணீருக்காக அணையைத்
திறந்துவிடும்படி கெஞ்சுகின்றனர் . என்னே விபரீதம் .
மஞ்சளாறு அணையால் தேவதானப்பட்டி , பெரியகுளம் பெரிய விவசாயிகள் அணைக்கு
அடிவாரத்தில் உள்ள புஞ்சை நிலங்களை குறைந்த விலையில் விலைக்கு வாங்கி
தென்னந்தோப்புகளாக மாற்றிவிட்டார்கள் . அணைக்கட்டியதால் மேற்படி புஞ்சை
நிலங்களுக்கு ஊற்று அதிகமாகக் கிடைத்தது . ஆனால் அதனால் ஏற்பட்ட
நஷ்டங்கள் சொல்லி மாளாது . கங்குவார்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு , குன்னுவாரன்கோட்டை, கன்னாபட்டி உள்ள ஏரிகள் எல்லாம் நிரப்பப்படவில்லை.
வத்தலக்குண்டு பகுதி இருபோக நெல்விளையும் . வாழை கரும்பு மற்றும் வெற்றிலை
சாகுபடி செய்யப்படும் . பெரியகுளம் போகும் ரோட்டின் இருபுறங்களிலும் வெற்றிலை
விற்கப்படும் . வெற்றிலை அமோகமாக சாகுபடி செய்ததால் வெற்றிலைக்குண்டு என்று
பெயர் வந்தது . அது மருவி வத்தலக்குண்டு என பெயரிடப்பட்டது. ஆங்கிலேயர்கள்
Bataலgundu என்று அழைத்தார்கள் . இருபோகம் நெல் விளைவித்த வத்தலக்குண்டு
இன்று ஒரு போகத்திற்கே திண்டாடுகின்றது .
வத்தலக்குண்டுக்கு தண்ணீர் தொட்டியை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் திறந்து
வைத்தார்கள் . வத்தலக்குண்டு தண்ணீர் இளநீர் போன்று இருக்கும் . இன்று
வத்தலக்குண்டும் குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றது . மஞ்சளாறு தண்ணீர் மேலே
சொல்லப்பட்ட நிலங்களை எல்லாம் செழிக்க வைத்து மீதமுள்ள தண்ணீர் கட்டாத்து
அய்யம்பாளையத்தில் வைகையில் சேரும் .
குடவனாறு அணை {காமராஜர் -- சாகர்} ;--
----
குடவனாறு கீழ்பழனிமலையில் உற்பத்தியாகி கீழே வருகின்றது . அதில் வரும்
வண்டல் மண் நிலங்களுக்கு கிடைக்கும் .அதனால் சித்தையன் கோட்டை சம்பா நெல்லுக்கு
கிராக்கி அதிகம். திண்டுக்கல்லுக்கு சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஒடுக்கம் ஊற்றிலிருந்து
தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அது போதவிலை. ஆனதால் திண்டுக்கல் பிரமுகர்கள்
குடவனாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தினர்.
இப்போது காமராஜர் சாகர் அணை தண்ணீர் போதாதால் வைகை ஆற்றில் கிணறு வெட்டி
அதிலிருந்து திண்டுக்கல்லுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது . இதை முதலிலேயே
செய்திருக்கலாம் அல்லவா ? திரு . பக்தவச்சலம் அவர்கள் காமராஜர் அணைக்கட்டு கட்டுவதற்கான இடத்தைப் பார்த்துப் போனார் . நானும் கூடப்போனேன் . அணையை மேலே கட்டுவதாகத்தான் சொல்லப்பட்டது . ஆனால் கீழே இறக்கிக் கட்டிவிட்டார்கள் . திரும்பிவரும்பொழுது ஆத்தூர் விவசாயிகள் காரை மறித்து அணைக்கட்டக்கூடாது என்று
சொன்னார்கள் . திண்டுக்கல் நகருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது . உங்களைப்
பாதிக்காது என்றார் . ஆனால் திண்டுக்கல்லுக்கு மாத்திரம் அல்ல . போகும் வழிகள் உள்ள
எல்லா கிராமங்களுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டது . குடவனாற்றில் அணைக்கட்டும்போது
அணைக்கு ஒரு வாய்க்காலும் , விளைச்சல் நிலங்களுக்கு ஒரு வாய்க்காலும் விடப்பட்டது .
விவசாயிகளுக்கும் விடும் வாய்க்காலில் கல்லணை கட்டி வாய்க்காலை இரண்டாகப்
பிரித்தார்கள் . ஒரு பகுதி பெரிய அத்திக்குளம் , சின்ன அத்திக்குளம் , ஏத்தல் , சொட்டாங்குளம் பாய்ந்து வஞ்சி ஓடையில் மறுகால் போகும் . மற்றொரு வாய்க்கால்
புளியங்குளம் , புல்வெட்டி கண்மாய் , சித்தையன் கோட்டை கண்மாய் , செங்கட்டான்பட்டி
கண்மாய் பார்த்து மறுகால் போகும் . இந்த நீர் வஞ்சி ஓடையில் கலக்கும் . ஆனால்
1957- ல் அரசியல்வாதிகள் கல்லணையை உயர்த்திக் கட்டி ஏத்தல் சொட்டாங்குளம் வரும்
தண்ணீரைக் குறைத்து செங்கட்டான்பட்டி கண்மாய் மறுகாலை தடுத்து நிறுத்தி
சில்க்குவார்பட்டிக்கு தண்ணீர் கொண்டு போய் விட்டார்கள் . இது எப்படி நியாயமாகும் .
ஏற்கனவே இருந்த பாசனமுறையை ஒரு சில அரசியல்வாதிகள் அவர்கள் இஷ்டம்போல
தண்ணீரை எடுப்பது குற்றமாகும் . ஆனால் அரசாங்கமே ஷட்டரை உடைத்து தண்ணீர்
வரும் காலத்தில் தண்ணீரும் மணலும் சேர்ந்து வரவேண்டும் . விவசாயிகளை காமராஜர்
சாகரில் உள்ள வண்டலை தங்கள் நிலங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் .
முன்புபோல் கல்லணையைத் தாழ்த்திக்கட்டி ஏந்தல் , சொட்டாங்குளங்களுக்குத் தண்ணீர்
விடவேண்டும் . செங்கட்டாம்பட்டி கண்மாய் மறுகாலை தடுத்து கட்டிய கட்டிடத்தை இடித்து
வழக்கம்போல் அந்த மறுகால் தண்ணீர் ஓட வேண்டும் . திண்டுக்கல்லுக்கு அணைப்பட்டியிலிருந்து வைகை ஆற்றில் தோண்டப்பட்ட கிணற்றிலிருந்துதான் தண்ணீர்
எடுக்க வேண்டும் . அணைகள் எல்லாவற்றையும் தண்ணீர் தேக்காமல் Free Flow ஆக விட்டால் மதுரை மாவட்டத்துக்குக் குடிநீர் பஞ்சமும் வராது . விவசாயமும் முறையாக வளரும் .
மருதாநதிஅணை:-
----
மாருதாநதி கொடைக்கானல் தாலுகா,தாண்டிக்குடிக்கும்,பண்ணைக்காட்டுக்கும்
இடையே உள்ள வனப்பகுதியில் ஆரம்பித்து அய்யம்பாளையம் , பட்டிவீரன்பட்டி ,
வாடிப்பட்டி , முத்துலாபுரம் வழியாக ஓடும் . இதுவும் கட்டாத்து அய்யம்பாளையத்தில்
வைகையோடு கலக்கும் .ஆங்கிலேயர் காலத்தில் கொடைக்கானலுக்கு திண்டுக்கல் ,ஆத்துர்,
பெரும்பறை , கானல்காடு , மங்களங்கொம்பு , தாண்டிக்குடி , பண்ணைக்காடு வழியாக
சாலை போட நடவடிக்கை நடந்தது . மலை ஏரியாவாலும் , விவசாயிகள் எதிர்ப்பாலும் ,
மருதாநதி வெள்ளத்தில் ஆவணங்கள் எல்லாம் மருதாநதி உற்பத்தியாகி வரும் இடத்திலேயே
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாலும் தான் இப்பொமுது இருக்கும் காட்ரோடு போடப்பட்டது. மருதாநதியில் வெள்ளம் அந்த அளவுக்கு ஓடும். இப்பொமுது அந்த ஊற்று இருக்கும் இடம் தெரியவில்லை. வனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. மழை குறைந்துப் போய்விட்டது. நதியில் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. அய்யம்பாளையம், கோம்பையிலும்
மலேரியாக்காய்ச்சல் அதிகம். மருதாநதியை அய்யம்பாளையத்தில் தாண்டிக்குடி ரோட்டைக்
கடக்கும் இடத்தில் பெரிய பெரிய கல்லால் அணைப் போட்டு தண்ணீரை கால்பாவுக்கு ஒரு
வாய்க்கால் , மற்றொருவாய்க்கால் தாமரைக்குளம் , கருங்குளம் , சொட்டங்குளம் பாய்ந்து
வஞ்சி ஓடையில் ஓடும் . வஞ்சி ஓடையில் மருகால் போகும் . அணையால்
தேக்கப்பட்டபோதிலும் மருதாநதியில் கீழே பட்டிவீரன்பட்டி , முத்துலாபுரம் வகையறா
ஊர்களுக்கும் , வாடிப்பட்டி கண்மாயையும் நிரம்பி மறுகால் வழியாக வஞ்சி ஓடையில்
சேரும் . வஞ்சி ஓடையை நேரில் பார்த்தால் காலங்காலமாக இந்த ஓடையில் எவ்வளவு
தண்ணீர் போயிருக்கும் என்று தெரியும் . மருதாநதியில் 7 மாதம் தண்ணீர் ஓடும் . வஞ்சி
ஓடையில் 8 மாதம் ஓடும் . வஞ்சி ஓடை , சொட்டாங்குள்ம் மறுகாலிலிருந்து சுமார் 10 மைல்
தூரம் ஓடித்தான் கட்டாத்து அய்யம்பாளையத்தில் சேரும் . ஆகவே வைகை ஆற்றில் வருடம்
எல்லாம் தண்ணீர் ஓடும் . அப்படி ஓடும் தண்ணீர் அய்யம்பாளையம் , பஞ்சந்தாங்கி ,
வனக்கோம்பை , அய்யம்பாளையம் கண்மாய்கள் பாசனம் எல்லாம் கன்னிவாடி ஜமீனைச்
சேர்ந்தது . விவசாயிகளின் பொறுப்பில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது . பட்டிவீரன்பட்டியிலிருந்து மற்ற கிராமங்கள் எல்லாம் நிலக்கோட்டைத் தாலுகாவைச்
சேர்ந்தது . அய்யம்பாளையம் கோம்பையில் அணைக்கட்ட வேண்டும் என்று சில
விவசாயிகளும் , அணைக்கட்ட வேண்டாம் என்று ஒரு சிலரும் அரசாங்கத்துக்கு மனு
போட்டனர் . ஆனதால் அரசாங்கம் இந்த மனுக்களை எல்லாம் சேர்த்து Chief Engineer .
அவர்களுக்கு அனுப்பி வைத்தது . இந்த அணைதான் இரண்டு இன்ஜினியர்களால்
பார்வையிடப்பட்டு வெவ்வேறு ரிப்போர்ட் கொடுக்கப்பட்ட அணை .
முதலில் மருதாநதியை பார்வையிட்ட இன்ஜினியர் நதியில் தண்ணீர் பற்றாது ,
வேண்டுமானால் மேலே ஒரு Pick up Dam போட்டு நதியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் .
மக்கள் மனுவில் சொல்லப்பட்ட மனுக்களின்படி அணை கட்டினால் ஏராளமான மா , தென்னை தோப்புகள் அணையில் மூழ்கிவிடும் . அப்படி முழ்கினால் விவசாயிகளுக்கு நஷ்ட
ஈடு கொடுக்க வேண்டியதிருக்கும். அணையை கீழே இறக்க சிறிய விவசாயிகள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அணைக்கட்ட வேண்டாம் என்று அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி விட்டார் . அந்த இன்ஜினியரும் ரிட்டையர்ட் ஆகிவிட்டார். வேறு இன்ஜினியர் அந்த இடத்துக்கு வந்தார். அரசாங்கமும் மாறி விட்டது ஆனதால் அரசாங்கம்
எப்படியும் அணைக்கட்டித் தீரவேண்டும் என்ற பிடிவாதத்தால் இன்ஜினியரைக் கூப்பிட்டு
அணை கட்டுவதற்கான ரிப்போர்ட் எழுதும் படியும் , முந்திய இன்ஜினியர் எழுதிய ரிப்போர்ட்டை பைலில் இருந்து அப்புறப்படுத்தியும் , மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில்
கூப்பிட்டு அணைக்கட்ட வேண்டும் என்று ரிப்போர்ட் எழுதி அனுப்புமாறும் உத்தரவிட்டார் .
இன்ஜினியர் அணையிலிருந்து தெற்கு வாய்க்கால் , வடக்கு வாய்க்காலாகவும்
வெட்டி தண்ணீர் பாய்ச்சலாம் என்றும் , வத்தலக்குண்டுக்குக் கீழே ஏற்கனவே மஞ்சளாறு
பாய்ந்த கண்மாய்களையும் சேர்த்து அணைக்கட்டுவதற்கு பல ஆயிரக்கணக்கான அதிகப்படி
நிலங்கள் எழுதியதுடன் சொட்டாங்குளத்தையும் , வஞ்சி ஓடையையும் விலக்கிவிட்டார் .
ஆனதால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுளாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த வஞ்சிஓடை
வஞ்சிக்கப்பட்டது . கலெக்டர் அவர்களும் முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி அணைக்கட்டலாம்
என எழுதிவிட்டு , லீவு போட்டு சென்னை சென்றுவிட்டார் . அணையில் தண்ணீர் ஓடவில்லை . தண்ணீரும் மணலும் தேக்கி வைக்கப்பட்டதால் ஆற்றில் ஓடவில்லை .
தண்ணீரும் மணலும் தேக்கி வைக்கப்பட்டதால் ஆற்றில் மணல் எடுத்து ஆறு 10
அடி ஆழம் பள்ளமாக போய்விட்டது . நிலத்தடி நீர் வற்றிவிட்டது . மணல் திருட்டு ,
கள்ள வியாபாரம் ஆரம்பமாகிவிட்டது . சுமார் 10 மைல் ஓடும் வஞ்சி ஒடையில் இரு
பக்கங்களிலும் தென்னை மற்றும் நெல் பயிரிடப்பட்டு வந்தன் . வஞ்சி ஓடையில் இப்போது
பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டும் போய்விட்டது . நிலங்களில் எந்த பயிரும்
சாகுபடி செய்யப்படவில்லை . மாடுகளுக்குக் கூட புஞ்சைப் பயிர்கள் மேலாகத்தான் விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது . வத்தலகுண்டு - திண்டுக்கல் ரோட்டிலும் , வத்தல்குண்டு- மதுரை போகும் ரோட்டிலும் வஞ்சி ஓடைகளை ஏற்கனவே பாலங்கள்
அமைக்கப்பட்டிருக்கின்றது . பல் ஆயிரக்கனக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய்
விட்டன . விவசாய வேலை இல்லாததால் தங்களுடைய பழைய தொழிலை ஆரம்பித்து
விட்டார்கள் .
அணைக்கட்டி முடிந்தது . பெரிய விவசாயிகள் மாந்தோப்பும் , தென்னந்தோப்பும்
நீரில் மூழ்கின . விவசாயிகள் நஷ்ட ஈடுக் கோரி திண்டுக்கல் சப் - கோர்டில் கேஸ்
தாக்கல் செய்தார்கள் . அதற்கு கோர்ட் நஷ்ட ஈடு 1 1/2 கோடி ரூபாய் கொடுக்க உத்தரவிட்டது . ஹைகோர்ட்டும் கீழ்க்கோர்ட் ஆணையை அங்கீகரித்து ரூபாயை உடனே
கொடுக்க உத்தரவிட்டது. ரூபாயை அரசாங்கம் கொடுத்துவிட்டு உச்ச நீமன்றத்துக்கு அப்பீல்
செய்தது. சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன. கேஸ் என்ன ஆயிற்று தமிழக அரசாங்கத்தின்
பிடிவாதத்தால் அரசாங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் . அதை இப்பொழுது யாரும்
கேட்கவில்லை . எல்லா கட்சிக்காரர்களும் மறந்துவிட்டனர் . மருதாநதி அணைக்கட்டால்
அணையில் தண்ணீர் இருக்கின்றது . ஆனால் அய்யம்பாளையம் , பட்டிவீரன்பட்டி , வாடிப்பட்டி ஆகிய ஊர்களில் குடிநீர் பஞ்சம் . இன்ஜினியர் தண்ணீர் திறந்துவிட
மறுத்துவிட்டார் . திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்குமார் ஜ . ஏ .எஸ் .,
அவர்கள் அணையை நேரில் பார்த்து 4 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி
ஆணைப்பிறப்பித்தார் . வாடிப்பட்டியில் ஒரு கட்டத்தில் சிலர் தண்ணீர் கேட்டிருக்கின்றார்கள் . தண்ணீர் இல்லை தேநீர் தருகின்றேன் என்று சொல்லியிருக்கின்றார்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேட்டூர் அணையிலிருந்தும் , பரம்பிக்குளம் அணையிலிருந்தும் குடிதண்ணீருக்காக அணைகள் திறக்கும்படி உத்தரவு கேட்டிருக்கின்றார்கள் . வைகை அணையும் மதுரை குடிநீருக்காகத்தான் திறக்கப்பட்டிருக்கின்றது . மஞ்சளாறு , குடவனாறு , மருதாநதி அணைகள் எல்லாம்
திறந்துவிட்டால் வைகை ஆற்றுக்கு மேற்கொண்டு குடிநீர் கிடைக்கும் .
நிற்க , மருதாநதி பாசனசெப்பனிடுவதற்க்காக ரூ . 1. . 45 கோடி ரூபாய் உலக வங்கி கடன்
கொடுத்திருப்பதாகவும் , வேலைகள் நடப்பதாகவும் , வத்தலக்குண்டு துணைப்பொறியாளர்
பத்திரிக்கையில் அறிக்கைக் கொடுத்தார் . என்ன வேலை நடக்கின்றது என்று எழுதிக்
கேட்டேன் . பதில் இல்லை . சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்களுக்கும் தமிழில்தான் எழுதினேன் . பதில் இல்லை . சில மாதங்கள் கழித்து அதே இன்ஜினியர் கண்மாயை
பாதுகாக்க 4 சங்கங்கள் அமைத்திருப்பதாகவும் இன்னும் 2 சங்கம் அமைக்கப்படும்
என்று பத்திரிக்கையில் அறிக்கை விடுத்தார் . எனக்கு தெரிந்தவரையில் வடக்கு வாய்க்கால் , தெற்கு வாய்க்கால் தூர்ந்து போய்விட்டது . சங்கங்கள் வேலை செய்யவில்லை . அதற்காக என்ன செலவு என்பது தெரியவில்லை . நன்றாக இருந்த மண் வாரியை இரண்டுதரம் இடித்துக் கொண்டிருந்தனர் . தண்னீரே விடாத வஞ்சி ஓடையில் ஒருநாள்
மணல் வாரி இன்ஜின் வேலை செய்திருக்கின்றது . எங்களுடைய் Reparian Right
பறிக்கப்பட்டு இருக்கின்றது .
ஆனதால் ஒன்றுபட்ட மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களைப் பொறுத்தமட்டில்
வைகை அணை , மஞ்சளாறு அணை , காமராஜர் சாகர் அணை , மருதாநதி அணை இந்த
அணைகள் எல்லாம் முற்றிலுமாக திறக்கப்பட்டு தண்ணீரும் , வண்டல் மண்ணும் சேர்ந்து
நதியில் ஓட வேண்டும் . இதுதான் நிலத்தடி நீரையும் , குடிநீர் பஞ்சத்தையும் , மணல்திருட்டையும் , நிறுத்தும் சகல ரோக நிவாரணி . வைகையில் சிவகங்கை மாவட்டத்தில்
ஒரு இடத்தில் பெப்சி கோலா கம்பெனிக்கு தண்ணீர் எடுக்க லைசென்ஸ் கொடுக்கப்பட்டதாகக் கேள்வி . அப்படியானால் அதை நிறுத்திட வேண்டும் . விவசாய
வல்லுநர்கள் , இன்ஜினியர்கள் , அறிவாளிகள் மற்றும் பலர் ஆழ்ந்து சிந்தித்து ஒன்றுபட்ட
ஓர் முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . முக்காலத்தில் நமது முன்னோர்கள்
ஆற்றங்கரையில்தான் குடியேறினார்கள் . மதுரை மாநகரில் எத்தனை கண்மாய்கள் இருந்தன . அவைகளெல்லாம் மூடப்பட்டு வீடுகள் கட்டப்பட்டது . சமீபத்தில் கோர்ட் கூட
ஒரு கண்மாயில் கட்டப்பட்டதுதான். வைகை ஆற்றின் உப நதிகளான மஞ்சளாறு ,மருதாநதி
குடவனாறு இவைகளில் எல்லாம் அணை கட்டி வைகைக்கு தண்ணீர் வராமல் எப்படி
தடுக்கலாம் ? கர்நாடக அரசு கபினி , ஷேங்கி அணை கட்டியதால் காவேரியில் தண்ணீர்
வரவில்லை . நாம் உச்சநீதி மன்றத்திற்கு போனோம் . வைகைக்கு வரும் தண்ணீரை தடுத்து
அணை கட்டியது எப்படி நியாயமாகும் . வைகை அணை உட்பட தமிழ் நாட்டில் கட்டப்பட்ட
அணைகள் எல்லாம் நமக்குநாமே தோண்டிய புதைகுழிகள் ஆகும் . ஆனதால் எல்லா அணைகளையும் திறந்துவிட்டு ஆறுகளில் ஏற்பட்ட குழிகள் எல்லாவற்றையும் மூட
வேண்டும் . குழிகள் எல்லாம் மூடப்பட்ட பின்புதான் மணல் எடுக்க வேண்டும் . இதில்
அரசாங்கமும் , பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் . தேவைப்பட்டால்
உயர்நீதிமன்றத்தில் இந்தப்பிரச்சனையை எடுத்துரைத்து நீதி மன்ற உத்தரவு
வாங்கவேண்டும் .
நா . தில்லை கோவிந்தன்}
விவசாயி .
(சிவகாசி திலகபாமா அவர்கள் அனுப்பித் தந்தது.)
posted by mathibama.blogspot.com @ 12/23/2011 01:04:00 am   0 comments
Sunday, December 18, 2011
நிசும்ப சூதினியும் , வேதாளமும் 1

(புதிய பார்வை இதழில் வெளி வந்த சிறுகதை

நிசும்பசூதினியும், வேதாளமும்-1
திலகபாமா

வாரணாசி அரண்மனையில்  அரிச்சந்திரனின் பட்டதரசியான சந்திர மதியின் பல்லாங்குழிகளோடு சோழியில் தோற்றும் வெற்றி விதைத்த அந்தரங்கத் தோழி நிசும்ப சூதினி சோழியோடு  மட்டும் தான் தோற்கப் பிறந்தவள் வாழ்வில் வாளெடுத்தாளோ கூரின் எதிர் நிற்க ஆளூமில்லை  நிழலுமில்லை. அரண்மனைப் புகாப் பொழுதில் அவள் வயலோடு  தினைப்புலம் காக்க சென்றிருந்த நேரம் புலத்தின் கடைசியில் நின்றிருந்த  முருங்கை சடைச்சடையாய் பச்சைப் பாம்புகளாய் காய்த்துக் கிடந்தது. பகலில் காய் பறித்து  வீட்டுக்கு எடுத்துச் சென்றவள் ஒரு நாள் காவல் சுற்றி வந்தாள் கையில் தடியோடு  தூக்கிச் செருகிய பாவாடை இருளைக் கூட்டி தன்னோடு வைத்துக் கொள்ள முடியாமல் தவிக்க முருங்கையில் நிலவின் ஒளியில் இருள் கோடுகளாய் தெரிந்த  காய்களுக்கு நடுவில் வெளி நிழல் தலைகீழாகத் தொங்கக் கண்டாள்.
“யார் நீ?”
பதில் சொல்வதற்கு  நிழல் அசைந்தது.
என்ன செய்கின்றாய்?
தன்னைக் கண்டு வாளிடைச் செருகிய  வீரர்களும் அஞ்ச, தான் கண்ணில் பட்டும் அசராது கேள்வி கேட்கும் பாவையைப் பார்த்து வியந்தது.
வியப்பு பதில் சொல்ல வைத்தது

“விக்கிரமாதித்தன் தூக்கிச் சுமந்த வேதாளம் நான்
அவனுக்கப்புறம் இன்னும் எனக்கான தோள் கிடைக்கவில்லை. என் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மூளையும் கிடைக்கவில்லை. எனை அதோ தூரத்தில் விளக்கெரிகிற காளி கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் “
சிரித்தாள் . அவள் சிரிப்பில் இருள் விழித்துப் பார்த்தது.நட்சத்திரங்கள் சில உதிர்த்தன. தினைப்புலம் ஓர் அடி உயர்ந்து நின்றது. .

தோளும் மூளையும் நீ முன்தீர்மானித்த இடத்தில்  கிடைக்காததால் இல்லை  என்று சொல்லிப் போகின்றாய். உன் கண்ணெதிரிலேயே நின்றாலும் உன் புத்தியின் முன் தீர்மானங்கள் அதை கண்டடைய விடப் போவதில்லை.
தொங்கிய வேதாளம் மெல்ல வந்து மௌனப்பாய்ச்சலாய் தாக்கிய வார்த்தைகளை அடையாளம் கண்டு  வழக்கமான அதன் நிலைமாறி தலைக்கீழாக நேராக நின்றது
“என்னை இறக்கி விட முடியுமா” கேள்வி கேட்டபடி   தரையில் நின்ற வேதாளம் கண்டு சிரித்தாள் நிசும்ப சூதினி.கேள்வியின் அபத்தம் இன்னும் உரைக்கவில்லை வேதாளத்திற்கு
விக்கிரமாதித்தன் உனை வலுவில் இறக்கினான் நானோ என் வார்த்தைகளிலாலேயே இறக்கியாச்சு
தூக்கித் திரிவது ஒன்றும் பிரச்சனையில்லை
காற்றில் அலையும் உடம்பு நேராகி தரை நோக்கி நின்றிருந்ததை அப்பொழுதுதான் வேதாளம் உணர்ந்தது. சுதாரித்து அடுத்த வளைத்தலுக்கு ஆயுத்தமானது
என் கேள்விகள்...........

கேட்கலாமே

சொல்லி முடிக்கு முன் பதில் வந்தது . என் பதில்கள் இதுவரை நீ சரியென்று நம்பிக் கொண்டிருந்ததைத் தூக்கிச் சாப்பிடும் . ஒத்துக் கொள்ள முடியுமா  உன் தராசுகளை மீறி புதிய மொழிதனை வாசிப்பாயா?
மீண்டும் அதிர்ந்தேன்  ஆனானப் பட்ட விக்கிரமாதித்தனுக்கே நான் சட்ட திட்டம் போட்டேன் இவள் எனக்கு போடுகிறாளே.
என் அதிர்வில் மெத்தென்ற அதிர்வாய் எனை இழுத்து தோள் சேர்த்தாள்.சுமந்து கொண்டு நடந்தாள்
ஆகட்டும் கேள்விகள்
கேள்விகளுக்காக சொல்லப் படத் துவங்குகின்றன கதைகள் பாத்திரங்கள் உணர்வையும் மொழியையும் பேசி விட்டு கேள்விகளின் பதில்களை விரும்பி  விதைத்து விட்டுப் போகின்றன.நிசும்ப சூதினியின்  செவி வழி கதைகள்  நம்மிடம் உலாவரப் போகின்றன. தோற்பதை வெற்றிகரமாகப் பழகிய  அவள் விரல்கள்  அதை அங்கீகரிக்காது  மயானக் கரையில் எரித்த சமூகம், எரியும் போது பிடுங்கித் தின்ற அவலம், தூக்கி எரியப் பட்ட தாலிகளை அளிக்கப் பட்ட வரங்களாய் சொல்லித் திரிய வேண்டிய நிர்பந்த கெட்டிக் காரத்தனம்........ போதும் போதும் நீளுகின்றது பட்டியல் உள்ளம் சுமந்த வருத்தமளவிற்கு

1,பொய் சொன்னதாகச் சொன்ன உண்மைகள்

ஒரு ஊரில் இலவக்குறிஞ்சி என்றொரு பெண்   இருந்தாள் . அவள் விழியின் தீட்சண்யம் அவள் அகம் தந்ததா? அகத்தின் ஒளி  விழியின் பார்வையைத் தீர்மனித்திருந்ததா?  பார்க்கும்  உள்ளங்கள் விவாதம் நடத்தும் விழியாள் இறுக்கிச் செறுகிய மேலாடை அவள் சரிப்படுத்தத் தேவையில்லாது அவள் அசைவுக்கெல்லாம் உயிர்த்திருந்து மறைத்ததாய் சொல்லிக் கொண்டிருந்தது.காலத்திடமிருந்து இதுவரை கற்றுக் கொள்ள வேண்டியதை  எல்லாம் அது   எடுத்து வைக்குமுன்னரே உறிஞ்சிக் கொள்ளும் சாமர்த்தியக் காரி. பெண் பிள்ளைகளுக்கே பொறாமையும் பயமும் தரும் வேலைக்காரி.உழைப்பு அவள் சிரிப்பைப் போல் இயல்பாக இருந்து கொண்டே இருந்தது.  ஆண்களை வாழ்வென நம்பும் பெண்கள் அவளக் கண்டால் தன் ஆணை ஒளித்து வைக்கத் தலைப் பட்டார்கள் அதே நேரம் அவளிடம் அவர்கள் நெருங்கி விட முடியாது எனும் துணிவும் பெற்றிருந்தனர்.
அவள் நிழலைத் தீண்டி விட முடிந்தால் கூட  அவளைத்  தீண்டி விட்டதாய்  பெருமை பேசித் திரியும் ஆண்கள் கூட்டம் . உண்மையில் உள்ளூர அவளைத்  தீண்ட முடியாமைக்கும்  மனநெருக்கமாய் கூட அமர முடியாத தூரத்தில் அவள் இருப்பதையும் கண்டு மனம் வெதும்பி  வெல்ல முடியாத போது “ நீ ஆம்பிளை மாதிரி” என்று சொல்லிப் போய்க் கொண்டிருந்தது.
அவளோ அவன்கள் விரும்புகின்ற பெண்ணாக மாற முடியாமைக்கு வருந்தாது தனைத் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தாள்.
போய்க் கொண்டே இருந்ததில் நிறைய ஆண்களும் பெண்களும்  வந்து வந்து போன படி இருந்தனர்.  ஒவ்வொருவரூடான பகைமையும் நட்பும் நிறைய கேள்விகளோடு கற்றுக் கொடுத்தலை அறிமுகப் படுத்தியிருந்தது.
இலவக் குறிஞ்சியின் ஆடல் கலையின் ரசிகனாக அறிமுகமானான்  காணுமல்லன்
அவன் ரசனைக்கு  கொஞ்சம்  கொஞ்சமாக நட்பாகி காதலும் சுமக்கும் நெகிழ்ந்த தருணத்தை இருவரும் அடைந்திருந்த பொழுதினில் ஒரு நாள்  அவன் தன் அந்தரங்க விசயங்களை  பகிர்ந்து கொள்பவனாய் மாறுகின்றான். இலவக் குறிஞ்சியோ   நட்பு இறுகி நட்பின் பகிர்தலில்  இடைவெளிகள் குறைந்து காதலை நோக்கி நகரும் போதும் அது காமத்தை நோக்கி சென்று விடாது தட்டையாக்கி தட்டையாக்கி பயணிக்கப் பழகியிருந்தவள்.  அதே நேரம் காணுமல்லனின் ஒவ்வொரு நகர்வும் பகிர்தலின் கூடுதல்  பயன்பாட்டை உறிஞ்சிவிட கோரியபடி அவன் உள்ளம் செயல்படுவதை உணர்ந்த படி இருந்தாள். எனவே தூரங்களை  ஒரு அளவுக்கு  மேல் குறையவிடாது இருக்கும் படி பார்த்துக் கொண்டாள். அவன் காதல் நெருக்கமானது தான் என்று புரிய  வைக்க   முயன்றபடி இருந்தான். காணுமல்லனோ எப்பவும் இதுவரை சந்தித்திருந்த   ஆடலழகிகள்  பற்றி சொல்லியபடியே அவர்களை விட இவள் சிறந்தவள்  என வியந்தபடியே  இருந்தான்.
போன கோடை விழாவில் சந்தித்த பாலவந்தாகி  கலையை மட்டுமல்லாது  அவளையும் எல்லாருக்குமானவளாய் மாற்றித் தருவதை சொல்லிக் கொண்டே இருந்தான். அதை வெறுப்பது போல் சொல்லிய அவன் வார்த்தையில் என்னைத் தனக்குத் தரக் கோரும் கோரிக்கையும், தனக்கு மட்டுமானவளாய்  இருக்கக் கோரும் நிர்ப்பந்தமும் சேர்ந்தே இருந்தது. 
“பாலவந்தாகி நடனத்தில் நளினமோடு  சேர்த்து அசைவில் அனைவரையும் அழைக்கும் தோரணையும் இருந்தது குறிஞ்சி . உன் அசைவுகளில் நளினம் எல்லாரையும் வாழ்த்துமே அல்லாது வரவேற்காது . உன் விழி மொழியும் எனக்கு மட்டுமான புரிதலுக்கான மொழியாக பிரத்தேயமாக இருப்பதன் சுவை. அடாடா!  அதை வேறொருவர் அறியத் தரமாட்டாய் தானே” பாலவந்தாகியின் விழியில் வலை தெரிகிறது குறிஞ்சி”

அப்போ பாலவந்தாகி  வலை விரித்தாளென்றால் அதில் விழுந்தவர்களில் நீயும்  ஒருவன் தானோ”
இருக்கலாம் ஆனால்  என் காதலின்   மதிப்பைப் பத்திரப் படுத்த தெரிந்தவளல்ல அவள்”
அப்போ உனக்குத் தெரிந்ததா” நீயும் அவள் காதலை பத்திரப் படுத்தத் தெரியாது கழன்று கொண்டவன் தானே மல்லா”
பிறகேன் பாலவந்தாகியை மட்டும் குற்றேவல் சொல்லும் கயமைப் புத்தி”
மல்லனின் பேச்சு அடுத்த கிளைக்குத் தாவியது அந்த கிளையில் இப்பொழுது சுந்தர கீர்த்தி சிக்கிக் கொண்டான்
அவனும் நல்ல ரசிகன் இல்லையா” குறிஞ்சி கேட்டாள்

ரசிகன் தான். தன் ரசனைக்கு பாலவந்தாகியை விலை பேசி விட்டான்
“புரியலையே” சீண்டினாள் குறிஞ்சி.
‘அவளோடு இணைந்து அவனும் நாட்டியமாடினான்’. -காணுமல்லன்
நல்ல விசயம் தானே கலைஞர்கள் இருவர் எல்லா விசயத்தாலும் ஒன்று படுவது என்பது?
பகிர்தலுக்காக ஒன்றுபட்டோம் என்றில்லாது ஒன்று பட்டோம் பகிர்ந்து கொள்ளுதலிலும் தடையில்லை என்பது சுதந்திர மனோபாவம் தானே. குறிஞ்சி
நிறைய நிகழ்வுகள் முடிந்து பேர் வாங்கிய பிறகு அவன்  தேசாந்திரம் போய் விட்டான். இப்பொழுதெல்லாம் அவன் வருகின்ற காலம் மட்டும் தான் அவள் அரங்கேறுகின்றாள் . அதுவும் அவனோடு மட்டும்”காணுமல்லன்
உன் பிரச்சனை என்ன மல்லா? அவள் அவனுக்கானவனாக மட்டுமிருப்பதா? எல்லாரும் நேசிக்கக் கூடியவளாய் அவள் பொதுமையில்  வாழப் பழகி விட்டதா?
அல்லது உனக்கு மட்டுமானவளாய் அவளை ஒப்புக் கொடுக்க மறுத்து விட்டதா?
முதல் கேள்விக்கு  மறுப்பு சொல்வதா? பிரச்சனை எனக்கில்லை என்று கூறுவதா? ஒன்றிற்கு பதில்கள்  யோசிக்கு முன் வந்து விழுந்த அடுத்தடுத்த கேள்விகள் மல்லனுக்கு  முதல் கேள்வியை மறக்கடித்துப் போனது.

எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும்  தான் நிர்வாணமாய் நிற்க வேண்டி வரும் என்பதால் அவன் விரல்கள் மெல்லத் திசை மாறியது. இவள் விரல்களுக்கிடையில் தொட்டு  விட விருப்பமில்லாததாய்  தொனித்த வாறே ஊர்ந்தது.
எனக்கு நீ வேணும் குறிஞ்சி”
தந்து விட முடியாது  மல்லா நான் யாருக்கானவளாகவும் மாறிவிட முடியாது.
ஆம் உன்னை நெருங்கிட யாராலும் முடியாது “
அப்படி இல்லை மல்லா
நேசிப்போடு  யாவரும்  நெருங்கி விடலாம்  எனும்படி இலகுவானவள் தான். ஆக்கிரமிக்கும் நினைப்போடும் தனக்குள் அடக்கி விடும்  திட்டமிடுதலோடும்   நெருங்கி விட முடியாது  மல்லா

“அப்போ உன் காதல் நான் மட்டுமில்லையா?”
அவன் விழிகள் கெஞ்சியது
நீயும்  என் காதல்தான்” குறிஞ்சி  சொல்லிப் போனாள் வாக்கியத்தின் நிச்சயமற்ற தன்மையில் உறைந்து நின்றான் அவன்.

சொல் நிசும்ப சூதினி
மல்லனின் உண்மை சரியா ? குறிஞ்சியின் பொய் சரியா?

சரியாகச் சொன்னால் மீண்டும் மரமேறுவேன் பதில் தெரிந்து சொல்லாது இருப்பின் உன் தலை வெடிக்கக் கூடும் என்றது வேதாளம்.

மல்லனின் உண்மைகள் எவை
பாலவந்தாகியுடனும்  தான் வாழ நேர்ந்ததைச் குறிஞ்சியிடம் மறைக்காதது
சுந்தர கீர்த்தியின் மேல் தனது பொறாமையை வெளிப்படுத்தியது
இவனது உண்மைகள் சொல்லப் பட்ட உண்மைகள் எனும் பெயரில் செய்யப் பட்ட ஆதிக்கங்கள் அதற்கான பொய்மைகள் ஒளிந்து கொள்ளப் பார்க்கின்றன. வேதாளமே நீ விக்கிரமாதித்தனிடம் கேள்வி கேட்டிருந்தால்  ஒரு வேளை என்ன ஒருவேளை

காணுமல்லனின் உண்மை பேசிய நேர்மையைத்தான் மெச்சியிருப்பான். நீயும் சரி என்று கேட்டுக் கொண்டு மந்த புத்தியோடவே மரமேறியிருப்பாய்
இல்லை  மல்லனின் உண்மைகள் பாலவந்தாகி குறிஞ்சி எல்லாரையும் தனக்கானவர்களாய் மாற்றிக் கொள்ளச் சொல்லப் படுகின்ற உத்திகளே அன்றி உண்மைகள் அல்ல
குறிஞ்சியின் காதல்கள் பொய்களாய் தோற்றம் தந்தாலும் அவை மல்லனின்  தூண்டிலுக்குள் மாட்ட விரும்பாத மனிதத்தின் நழுவல்கள்  அவை நேசிப்பின் எல்லையற்ற விரிப்பை அவனுக்கானதாய் அடக்கிக் கொள்ளும் முயற்சியிலிருந்து தடுப்பவை . இரண்டும் ஒரே மாதிரித் தோன்றும் வேறு வேறு விசயங்கள் . திரவப் பொருளுக்கும் திடப் பொருளுக்கும் ஒரே தராசுகள் வைக்க முடியாதது போல பாதி உண்மைகளோடு வாழ்கின்றேன் என்று மார்தட்டிக் கொள்ளும் வார்த்தைகள் பாதி பொய்யைக் கண்டு விட்டதாக நீ சொன்னால், அதான் உண்மையைச் சொல்லி விட்டேனே என  மீசை முறுக்கும் கூட்டம். அந்த உண்மையில் சொன்ன பொய்யை  மறந்து விடக் கோரும். மறைத்துப் போகும் திருட்டுத் தனம்.
இப்பொழுது வேதாளம் திணறியது. மீண்டும் மரமேறினால் அவள் சொன்னது சரியாகும். ஆனால் ஏற்கனவே அவள் சொன்ன பதிலில்  தலை வெடிக்காததால்  அவள் பதில் சரியென்றாகி விட  வேறு வழியில்லாது தன் முகத்தை மறைத்துக் கொள்ள காற்றில் மிதந்தபடி மரத்தில் தொங்க விரைந்தது
திருத்தி விடவும் திருத்திக் கொள்லவும் முடியாத இடத்தில் இருக்கின்ற ஆண்களின் உலகம் பிரதி பலிப்பாகவே இருக்கின்ற வேதாளத்தை விரட்டிய படி மீண்டும் திரும்பி நடந்தாள் நிசும்ப சூதினி.  வலது காலை முருங்கை மரத்திற்கு மேலூண்றி  தலை கீழாகக் கிடந்த வேதாளத்தை  இழுத்து தோளில் ஏற்றினாள்.
 
  

posted by mathibama.blogspot.com @ 12/18/2011 08:10:00 pm   0 comments
Wednesday, December 14, 2011
காரைக்கால் அம்மையார்களும் கல்பனாசாவ்லாக்களும்-2

சரி குடும்பத்திற்குள் இருந்தவளைத்தான் நாங்கள் ஒத்துக் கொள்வதில்லை அவளது வாழ்வு எவ்வளவு போராட்டத்துடன் வாழப் பட்டதாயினும் அது போராட்டமென்றோ அல்லது அவள் போராளி  என்றோ இச்சமூகம் வடிவமைத்த மனிதர்களாய் வாழும் நாம் யாரும் ஒத்துக் கொள்வதாயில்லை. அது தனி மனிதத்துவம் சார்ந்த வாழ்வியலாகவே பார்க்கப் பட்டு விடுகின்றது
ஆனால் இலங்கையின் விடுதலைப் போராட்டங்களில் பல்வேறு ஆண்களின் அரசியல் குழறுபடிகளுக்கிடையிலும் தவிர்க்க முடியாது தன் ஆளுமையை ஒவ்வொரு நகர்விலும் செய்து போன பெண்கள் கதைகளும் நம்மில் கதைகளாகவே உலாவருகின்றன.  செத்த பிறகு சிலரின் வரலாறுகள் சிலாகிக்கப் பட்டாலும் வாழுகின்ற பல பெண்களும்   கூட போராளிகளாக பார்க்கப் பட்டார்களா என்பது மிக முக்கியமான கேள்வி. வரலாற்றில் அவர்களது பெயர் எங்கேயும் சாட்சியங்களாக  இல்லாது கவனமுடன் அழிக்கப் பட்டு வருகின்றது என்பதும் அவர்களும் அவர்களின் வெற்றிகளாக நடந்ததை சொல்லாமல் இருக்க நேர்ந்து விடுகின்றது என்பதும் இதுவரை நாம் கண்டு கொண்டிருக்கின்ற உண்மை.
லண்டனில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில்   அந்தப் பெண்மணியை சந்தித்த போது முதல் பார்வையிலேயே தோற்றத்தில் அவரது முரட்டுத் தணத்தில் அதிர்ந்தேன். அவர் பெண் என்பதையே மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. ஆனால் ஒவ்வொரு விவாதத்தின் போதும் அவரது வாதம் மிக ஆளுமையோடும், சிறு விசயங்கள் கூட வேறுபட்ட புதிய தரிசனங்களோடும் வந்து விழுந்த போது தோற்றம் பற்றிய யோசனை மறந்து வியப்பு தொற்றிக் கொண்டது அவரைப் பற்றி எனது தோழிகளிடம் விசாரித்த போது
அவர் இலங்கை விடுதலை அமைப்புக்குள் மிக முக்கிய நபராக இருந்து , அந்த அமைப்பு ரீதியான எல்லா செயல்பாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமுமாக இருந்த  பெண்மணி என்றும், அந்த அமைப்புக்கான போர் முறைகளை வெளிநாடு சென்று கற்று வந்து பயிற்றுவித்தவர் என்றும்  இலங்கை அரசால் சிறையில் அடைக்கப் பட்டு, தப்பியோடி தமிழகம் வந்து  லண்டன் சென்று வாழத் துவங்கியிருக்கும் அவர், தான் இருந்த இயக்கத்திலேயே தவறான முடிவுகள் எடுக்கப் படும் போது சுட்டிக் காட்டியதாலேயே மறுக்கப் ப ட்டும் வெறுக்கப் பட்டும் , தன் இரத்த உறவுகளை அதனாலும் இழந்தும் இருக்கின்றார் என்றும் சொல்லப் பட்டபோது சொல்லப் பட்ட  கதைகளுக்கு அப்பால் இருந்த நிஜமும் பிரம்மாண்டமாகவே இருந்ததை உணர முடிந்தது இன்றும் கூட தனது முகவரிகளை  மறைத்தே வாழ கடமைப் பட்டுள்ள அவரை சந்தித்த போது குடும்பத்திலுள்ள ஆண்கள் மனோநிலைதான் இயக்கத்திலுள்ளவர்களுக்கும் ஆகின்றது என்று தெரிய வந்தது  அப்போது பெண்களின் செயல்பாடுகள் வெற்றிகளாக பதிவதன் அவசியம் உணர்ந்தேன்.
இந்தக் கட்டுரையில் என்னாலேயே அப்பெண்மனியின் வீரச் செயல்களை சொல்ல முடிந்த எனக்கு பெயரை சொல்ல முடியாமல் போவது துரதிர்ஷ்டமே. ஆனால் போராளிகளாக வாழ்ந்த பெண்களும் கூட  இன்றும் அதே வேகம் குறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரும் கூட வரலாற்றில் இருந்து மறைந்து விட்டு வாழக் கோரும் வாழ்க்கைதான் சாத்திய மாகி இருக்கின்றது.
ஈழத்து விடுதலை இயக்கத்தின் அடிப்படை அரசியலிலிருந்து , ரிச்சர்ட் வாக்னரும், ஹிட்லரும் என வெங்கட் சாமிநாதனின் கட்டுரையை எதிர்த்து எதிர்வினையும் செய்யக் கூடிய எல்லா ஆளுமையும்  இவருக்கு உண்டு என்பது சமீபத்தில் வெங்கட் சாமிநாதன்  வாதங்களும் விவாதங்களும் என்ற கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்த போது  தெரியவந்தது  அப்படிப் பட்ட ஆளூமை தன்னை தானே மறைத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றதே என்று, நினைக்கும் போது , வெறுமனே  கலகக் குரல்கள்  என எதற்கும் பொருத்த மில்லாது தகுதிக்கு மீறி வெளிச்சத்தை தன் மேல் படர விட எல்லா விளம்பரங்களையும் செய்து கொள்ளும் தமிழகத்து  பெண் கவிஞர்கள் சிலரின் ஆர்ப்பாட்டங்களும் நினைவுக்கு வராமல் இல்லை. இன்னும் எத்தனை ஆளுமைகளை அந்தப் பெண்மணியிடமிருந்து நான் சந்திக்க முடியாமல் போய் இருக்கின்றதோ என்றும் யோசிக்க வேண்டி இருக்கின்றது. ஒரு ஆண் அரசியலில் பெரிய ஆளுமை என்றால்  குடும்பம் போன்ற விசயங்கள் சிறு விசயங்களாக தோற்றம் தந்து விடும் அவர்களுக்கு ஆனால் பெண்களுக்கோ அப்படியில்லை. அவ்வளவு அரசியல்  இசை  போர் முறை எல்லாவற்றையும் பேசும் அதே பெண்மணியின் பெண்கள் சந்திப்பு உரையாடலில் அவரது மகன் தனது இலங்கை வாழ்  தாத்தாவூடான உரையாடலை  சொல்லி ஆணாதிக்க சமூகத்திற்கு பழக்கப் பட்டிருக்கிறோம் என்பதை குறிப்பிட்டு பேசிய விதம் பெண்களுக்கு எல்லா பக்கத்திலும் கண் இருக்க வேண்டி இருப்பதையும் அப்படி இல்லாத ஆண்களுக்கு அது  பிரமிப்பாகவே தோன்றாது போவதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது

அவரது மகன் தாத்தா உரையாடல் இதுதான்
 சமைப்பது பெண் வேலை எனப் பழகிய இலங்கையிலிருந்து வந்திருந்த தாத்தா,இலண்டன் வாழ்க்கைக்கு பழக்கப் பட்ட வேலைக்குச் செல்லும் அம்மா அப்பா பையன்
தாத்தாவிற்காக தினமும் சமைத்து வைத்து விட்டு அம்மா கிளம்புகின்ற போது பையனின் கேள்வி
 ஏன் தாத்தா உனக்கு சமைக்கத் தெரியாதா 
தெரியாதேப்பா
60 வருடங்கள் வாழ்க்கை  வாழ்வதும் உழைப்பதும் சாப்பிடுவதற்குத்தான். அதற்கான அடிப்படை வேலை சமையல் எப்படித் தெரிந்து கொள்லாமல் இருப்பீர்கள்
வியந்து, தனக்கு வேணும் என்பதை தானே சமைத்து சாப்பிட்டபடி வெளியேறிப் போகின்ற பையன்
இது தான் சம்பவம்.போர் பயிற்சி முறை மட்டுமல்லாது மிக மெல்லிய உணர்வு தளங்களையும் அவதானிக்கவும் முடியுமென்கின்ற பெண் ஆளுமை என்னால் மறக்க முடியாத ஆளுமை
 பெண்கள் விசயத்தில்  உண்மைகளும், உழைப்புகளும் வெற்றிகளும் மேடையேறாததும்,   தோல்விகளும் படோபடங்களும் வெளிச்சத்திற்கு வருவதும் கூட இச்சமூகம் தன்னையே அறியாது பெண்ணுக்கெதிராக நிகழ்த்தி வரும்  வன்முறைகள் தான். பெண்கள் வாழ்ந்த வெற்றிகள் நிராகரிக்கப் பட்டு  உருவிலிகளாக காரைக்கால்  அம்மையார்களாக மாற்றப் பட்டு விடுகின்றனர். 
நன்றி :பாவையர் மலர்
posted by mathibama.blogspot.com @ 12/14/2011 11:01:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates