சூரியாள்

Friday, December 23, 2005
பாரதி இலக்கிய சங்கத்தின் சி. க நினைவரங்கு

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி
காவ்யா அறக்கட்டளை சென்னை
இணைந்து நடத்தும்
சி. க நினைவரங்கு


இடம்: v.s சுந்தரஞ் செட்டியார், சீனியம்மாள் கல்யாணமண்டபம்
நாள்: 28.12.05 , புதன் கிழமை, காலை 9 மணி

காலை 9 மணி “ புதுமைப் பித்தனும், கனகசபாபதியும்”
திரு. தோதாத்ரி
“இலக்கியத்தில் சி. க வின் இடம்”
பொ. நா கமலா
காலை 11 மணி ஆவணப் படங்கள் திரையிடல்
சி. சு. செல்லப்பா பற்ரிய ஆவணப் படம்
இயக்கம் . யதார்த்தா பென்னேஸ்வரன்
“ஆதலினால் காதல் செய்வீர்”
தமயந்தி- ஒளியோவியத் தொகுப்பு, நார்வே

“வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு”
இயக்கம்- திலகபாமா
மதியம்1.30 உணவு இடைவேளை

மதியம் 2.30 “ மையம் கொண்டுள்ள மாற்றிதழ் அதிர்வும்
தமிழ் வெளியில் அதன் பிரதிபலிப்பும்”
அமிர்தம் சூர்யா
“ வடக்கு வாசல்” _அப்பாஸ்
“பெண்ணே நீ “ வைகை செல்வி
“ வானகமே வையகமே” முத்து பாரதி
ஏற்புரை : வில் விஜயன் (கௌரவ ஆசிரியர், வானகமே வையகமே)
மாலை 5 மணி சி. க நூல் வெளியீடும், பரிசளிப்பு விழாவும்
பொன்னீலன்
கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்.
பரிசும், வாழ்த்துக்களையும் பெறுபவர்கள்.
சி. கனகசபாபதி நினைவுப் பரிசு
ஏ,இராஜலட்சுமி( எனக்கான காற்று)
சி. சு. செல்லப்பா நினைவுப் பரிசு
விழி பா. இதயவேந்தன்( மலரினம் மெல்லிது)

இடைவெளியை மட்டுமல்லாது
இசைவெளியையும் நிரப்புபவர்
உமா சங்கர் பாடல்களுடன்
posted by Thilagabama Mahendrasekar @ 12/23/2005 10:55:00 pm   0 comments
Tuesday, December 20, 2005
லண்டன் பெண்கள் சந்திப்பு

லண்டனில் நடைபெற்ற 24 வது பெண்கள் சந்திப்பு
அக்டோபர் மாதம் 15ம் தேதி லண்டனில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ள லண்டன் வந்து சேர்ந்திருந்தேன் . அரங்கின் உள்ளே நுழைந்த போது மங்கையர்கரசி அவர்களால் கருத்துரை நிகழ்த்தப் பட்டுக்கொண்டிருந்தது. 20 பேர் கூடியிருந்தனர் ..உரையின் முடிவில் மீண்டும் தற்போது வந்து சேர்ந்து கொண்டவர்களுக்காக மீண்டும் ஒரு சுய அறிமுகம் நடந்தது. வெறும் பெயர்களாக மட்டுமே இணையம் வழி அறியப் பட்டிருந்தவர்கள் முதன் முறையாக உருவங்களோடு உடலங்களோடு அறிமுகமானோம்.தொடர்ந்து எல்லா சந்திப்புகளிலும் கலந்து கொண்டிருக்கும் இன்பராணி , பெண்கள் சந்திப்பின் தோற்றம் பற்றி பகிர்ந்து கொண்ட தகவல்கள் முக்கியமானவை . புகலிடத் தமிழர்களின் 6வது இலக்கிய சந்திப்பின்( சுசீந்திரன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட) போது , . அந்த நாட்களில் சேர்ந்து இருக்க கிடைக்க சந்தர்ப்பங்களில் பெண்கள் ஒட்டு மொத்த நிகழ்விலிருந்து விலகி, மெல்ல மௌனங்கள் உடைபட்ட சந்தர்ப்பங்களில் பெண் சார்ந்த வாழ்வியல் சிக்கல்களை, தான் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பேச நேர்ந்த போது அவர்கள் தங்களுக்கான தனிமை சிலவற்றை பகிரவும் பேசவும் தேவையென தீர்மானிக்க அதுவே பெண்கள் சந்திப்பின் துவக்கத்திற்கு காரணமாகவும் இருந்து விட்டது. தொடர்ந்து பல சந்திப்புகள் இலக்கிய சந்திப்புக்கு முன்னாலோ பின்னாலோ நடத்தப் பட்டிருகின்றது. பெண்கள் சந்திப்புகளில் கலந்து கொண்ட பெண்கள் அதே சூட்டோடு இலக்கிய சந்திப்புகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பின்னாளில் இரண்டு நிகழ்வுகளும் வேறு வேறு நாட்களில் திட்டமிடப் பட்டு விட்டதுஇது 24வது இலக்கிய சந்திப்பு. முதல் நிகழ்வாக சுனாமி தாக்குதல் பற்றியும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் உரை நிகழ்த்தினார் ஜெசிமா அவர்கள்.மட்டகளப்பு சூர்யா பெண்கள் அமைப்பைச் சேர்ந்த வாசுகி தென்கிழக்காசியப் பெண்களின் பிரச்சனைகள் எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை, பெண்ணியத்தின் அடிப்படை பிரச்சனைகள் தொடங்கி இன்றைய சிக்கல்கள் விசாரணைகள் என விரிந்து ஒரு பரந்த தளத்திற்கு இட்டுச் சென்றது .பெண்களும் ரோக்கியமும் எனும் தலைப்பில் மருத்துவர் கீதா அவர்கள் பேசிய பேச்சு மருத்துவ துறை சார்ந்த அறிவியல் விடயங்களை தனித் தமிழில் அதுவும் குழப்பமில்லாத எளிய நடையில் பேசியது நிறைவாக இருந்தது. எல்லாருக்கும் தெரிந்த விசயங்களாக இருந்த போதும் திரும்ப கேட்டல் என்பது புதிய கேள்விகளை சந்தேகங்களை எழுப்பியது பலருக்குள். சுவிஸிலிருந்து வந்திருந்த றஞ்சி பெண்கள் தொடர்பாக வருகின்ற இதழ்களை அறிமுகம் செய்து பேசினார். மீனா அவர்கள் இந்திய மருத்துவத்துறையில் பெண்கள் எனும் தலைப்பில் முத்துலெட்சுமி ரெட்டி பற்றிய உரை நிகழ்த்த புதிய விசயமாய் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.பெண்கள் சந்திப்பு 2005ம் ண்டு மலர் மல்லிகா அவர்கள் வெளியிட ஓவியை வாசுகி பெற்றுக் கொண்டார். மதிய உணவுக்குப் பின்னர் “இலக்கியத்தில் பெண்கள் எனும் எனது கட்டுரை வாசிப்பு நிகழ்ந்தது நேரமின்மை காரணமாக முழுக் கட்டுரையும் வாசிக்க முடியாது போக தொடர்ந்து விவாதங்கள் நடந்தது . பெண் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க முயற்சிகள் இந்தியாவில் நடக்கின்றது அதுவும் எய்ட்ஸை ஒழிப்பதற்கு என்று வெளி நாட்டு சக்திகள் வழங்கும் பணத்தை தொடர்ந்து பெற்றுக் கொள்ள எற்படுத்தும் வசதியாகவே இந்த சட்டபூர்வமாக்கும் முயற்சிகள் நடக்கின்றதே ஒழிய எந்த பாலியல் தொழிலாளர்களுக்கும் நல்லது செய்ய அல்ல என்று நான் பேசியதை தொடர்ந்து பிரான்சை சேர்ந்த விஜி வெளிநாடுகளில் எல்லாம் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப் பட்டிருக்கின்றது. அதனாலேயே அவர்களுக்கு அரசாங்க சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பிருக்கின்றது என்றும் விவாதத்தில் பேசினார். காலச் சுவடு உயிர்மை போன்ற சிற்றிதழ்கள் தொடர்ந்து பெண் எழுத்துக்களை திசை திருப்பி வரும் அரசியலை நான் பேசியதை குறிப்பிட்டு சுமதி ரூபன் தொடர்ந்து எல்லா இடங்களிலும் இப்படியே பேசி வருகின்றீர்கள். என்றும் கூறினார். . எல்லாவற்றுக்குமான பதிலாக என்னுரையில் , பெண் உடல் சார்ந்து பார்க்கப் பட்டுதான் காலம் காலமாக ஒடுக்கப் பட்டு வருகின்றாள் பெண் விடுதலை பற்றி பேசுகின்ற நாம் இன்னமும் உடல் சர்ந்து பெசுவது என்பது அந்த ணாதிக்க குரலை வழி மொழிவதாகவே அமையும் அதிலிருந்து விடுபட வேண்டும், பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு எதிரான ஒன்றாக அமையாமல் தனிமதத்துவம் சார்ந்த தீமையாக மாறுவதை, சுதந்திரம், உரிமை எனும் பேரில் அனுமதிக்க முடியாது எனும் பேச்சோடு நிறைவு செய்தேன். விவாதம் கிளப்பியவர்கள் திருப்தியில்லாமலேயே அடுத்த நிகழ்வுக்கு போனார்கள். நிர்மலா அவர்கள் அரசியலும், வன்முறையும் பற்றி உரை நிகழ்த்த இலங்கை அரசியல் சார்ந்த யதார்த்தத்தோடு இணைந்த பேச்சாக இருக்க கேட்போரையும் அதற்குள் இழுத்துப் போட்டிருந்தது. மறுநாள் றஜீதா அவர்களின் பெண்களும் , நாடகமேடையும் எனும் கட்டுரை நாடக மேடை தொடர்பாக புதிய விசயங்களை அறிமுகப் படுத்தியது , தேவ கௌரியின் “ பத்திரிகைகளில் பெண்கள் கருத்துருவாக்கம் செய்யும் முறைமை பற்றிய நோக்கு எனும் தலைப்பிலான பேச்சும் பல்வேறு தளங்களில் சுழன்று கனேசலிங்கம் யோகேஸ்வரியின் பிரச்சனை பற்றிய விவாதத்தில் வந்து சுழன்றது. அடுத்ததாக சுமதி ரூபனின் தனி நடிப்பு பெண்களின் பல்வேறு உணர்வுச் சிதைவுகளை தொட்டுச் செல்வதாக வடிவமைக்கப் பட்டிருந்த போதும், அவரது அளவுக் கதிகமான அழுகையூடான கதறலினால் சிதறிப் போனது தொலைக்காட்சி நாடகங்கள் அழுது அழுது வைப்பதற்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. கூட்டத்தில் அந்த நிகழ்வும் கணி¢சமான தரவைப் பெற்று விட அழுது விட்டால் பெண்கள் உருகிப் போகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு சாட்சியாய் கிப் போனது.உண்மையில் நடிப்பு என்பது உடல் மொழி கொண்டு பேசும் விசயம் . அதற்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்று எனக்குப் பட்டது.ஓவியங்கள் பற்றி ஓவியர்கள் அளித்த விளக்கமும் நாடகம் தொடர்பாக ரஜிதாவின் விளக்கமும் எனக்குள் நிறைய சாதகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.. மாற்றுக் கருத்துக்கள் நிறைய இருந்த போதும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள கூடியதாக இருந்தது. பொதுவான இலக்கிய கூட்டங்களில் பெண்கள் தங்கள் பேச்சு அறிவு பூர்வமானதாக கருதப் படுமா எனும் தயக்கத்தோடு தவற விடுகின்ற தருணங்கள் இந்த கூட்டத்தில் இல்லை. நினைத்ததை பேசி தெளிவு பெற்றுக் கொள்ள கூடியதாய் இருந்தது. . அதே நேரம் குறிப்பிட்ட சில பெண்களை தவிர மற்றவர் பேசத் தயங்கும் சூழலும், அந்த ஒரு சில பெண்களின் திக்க மனோ பாவங்களால் விளைந்திருந்தது.. நிகழ்வுகள் புகைப்படம் தவிர ஒலி ஒளி வடிவமாக பதிவு செய்யப் படுவது தடை செய்யப் பட்டிருக்கின்றது என்று நான் என் பேச்சை பதிவு செய்து கொள்ள கேட்ட போது சொல்லப் பட்டது.. அமைப்புக்கு கட்டுப் பட்டு நான் அதை ஒத்துக் கொண்டாலும்,,இவ்வளவு உழைப்பும், செலவும் செய்யப் பட்டு பேசப் பட்ட விசயங்களின் பதிவுகள் மிக முக்கியம் அதை நிகழ்ச்சி அமைப்பாளர்களாவது தங்களது பொறுப்பில் எடுத்து செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்யப் படுமானால் பின்னாளில் அவை மிகப் பெரிய பொக்கிசமாக சில வேளை மாறக் கூடும்.. தேவதாசி குலத்தில் பிறந்து பாலியல் தொழிலை சட்ட விரோதமாக்க வேண்டும் என்று பாடு பட்ட முத்து லெட்சுமி பற்றியும் பேசி விட்டு, பாலியல் தொழிலை சட்ட பூர்வமாக்க வேண்டும் என்றும் விவாதம் வைத்தது , முத்து லெட்சுமியின் இடத்தை அவர்கள் சரியாக உணரவில்லை என்றும் காட்டியது.பெண்கள் சந்திப்பு நிகழ்ந்து விடக் கூடாது எனும் எண்ணங்கள் சுற்றி வளைத்த போதும் வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்த இந்த நிகழ்வு மகிழ்வே. சிற்சில குறைகளை களைந்து இன்னும் வலிமையாக அடுத்த கூட்டம் அமையும் எனும் எதிர்பார்ப்போடு பிரிந்து வந்தேன்
posted by Thilagabama Mahendrasekar @ 12/20/2005 12:39:00 pm   0 comments


இனி முடியாதுன்னால் கருவறுக்க
திலகபாமா

இரண்டாய்
நாலாய்
எட்டாய்
பதினாறாய்
இன்னும் இன்னுமுமாய்
கிழிக்கப் படுமுன்னரே
தகுதியிழந்தன
பயணம் தொலைத்த சீட்டுகள்
கிழி பட்ட தாள்களிலிருந்தும்
எழுத்துக்களும் எண்களும்
வியாபகம் கொள்கின்றன

எச்சில் கூட்டி
தொண்டையடைக்க
விழுங்கிய
எதிர்பார்ப்பு விசத்தின்
துகள்களையும் தூக்கியபடி
பறந்து திரிகின்றன

உலக்கையாய் பெற்ற போதும்
உதிர்த்துதிர்த்து கரைத்தும்
கோரையாய் முளைத்தும்
விதைத்த வினைகள்
பெயர்மாறி உருமாறிய போதும்
உதாசீனங்களையும்
உதாசீனங்களோடு உன்னையும்
அடித்து சாய்த்துப் போகும்
அணுக்களையும் தூக்கித் திரிகின்றன

துகள்கள் முளைவிடுமோ
கிளைவிடுமோ தெரியாது
கனவுகளைத் தொலைத்த
உதறல்களை வேரறுக்கும்

எண்களைச் சேர்த்து ஒரு நாளும்
எழுத்துக்களைச் சேர்த்து ஒரு பொழுதும்
உருவாக முடியாது நானே
கருவறுத்த பின்
நீ வேரறுக்க எது மிச்சமிருக்கும்
posted by Thilagabama Mahendrasekar @ 12/20/2005 10:55:00 am   0 comments
Friday, December 16, 2005
தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு

டிசம்பர் மாதம் 11ம் தேதி காலை 10 மணிக்கு தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு பாரதி இலக்கிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.விடாது பெய்து கொண்டிருந்த மழை , கூட்டத்தை தாமதப் படுத்தவே. 11. 15 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமானது
இந்நிகழ்ச்சி வெறுமனே அவரது நினைவுகளை பேசி வருத்தப் படுகின்ற கூட்டமாய் இருப்பதை தான் விரும்பவில்லை அதைவிட அவரது நினைவுகள் அவரது படைப்பு தந்து விட்டு போன மகிழ்வான தருணங்களை நினைத்துப் பார்ப்பதுதான் அந்த படைப்பாளிக்கும் , அவர் கவலைப் பட்ட சமூகத்திற்கும் செய்யக் கூடிய நல்ல விசயமாக இருக்கும். அந்த வகையில் இன்று தனுஷ்கோடி ராமசாமியின் படைப்புகளைப் பற்றிய விரிவான விவாத அரங்காக இந்த நிகழ்வு அமைய வேண்டும் என விரும்பினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக , அவரது படைப்புகளைத் தொகுப்புகளாகவும் இதழ்கலில் வந்த போதும் வாசித்திருந்த போதும், இன்று மீண்டும் தீவி ர வாசிப்புக்குள்ளாக விரும்பி புத்தகங்களை தேடினேன். அவரது தோழர் நாவல் எனக்கு கிடைக்க வில்லை. அதனால் வாசிப்பு முழுமையானதாய் நிகழ்த்த முடியாது போனது. இருப்பினும், ஒட்டு மொத்த படைப்புகளிலும் இந்த வட்டார வழக்கு எழுத்துக்கள் இருப்பதையும், அவரது எழுத்து போலித் தனங்களின்றி அடித்தள மக்களின் அன்றாடக் கவலைகளிலிருந்து எழும் கேள்விகளை, சின்ன சின்ன நிகழ்வுகள் தான் என்றாலும் அதற்கிடையில் சமூகத்தின் முன் வைக்க வேண்டிய கேள்விகளை வைத்து விடுகின்றது. யதார்த்தங்களில் இருக்கின்ற விசயங்களை பேசும் போதும் அப்படியே பேசி விடாது, இந்த சமுகம் அல்லது மனிதம் இப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்ற வகையில் புதிய கேள்விகளை, யதார்த்த வாழ்வில் நாம் சந்திக்க முடியா கேள்விகளை கேட்டு விட்டுப் போய் விடுவார்.அவர் தோற்றத்தில் தெரிந்த கம்பீரம் என்பது அவரது உள்ளத்தின் உண்மையின் வெளிப்பாடு. என்று திலகபாமா பேச, தொடர்ந்து
அவரது நாரணம்மாள் எனும் சிறுகதை தொகுப்பு பற்றி விமரிசனம் தந்த சிவபெருமான் பொருளாதரா ரீதியாக கஷ்டப் படும் ஓருவன் சமூகத்தில், எப்படி எல்லாம் அலைக்கழிக்கப் படுகின்றான் என்பதைக் காட்டும், பல கதைகள் நியாயமான அதிர்ச்சியை தந்து நமை சிந்திக்க வைப்பவையாக இருக்கும் என்று பேசினார்.
முத்து பாரதி , தோழர் நாவல் அவரது முக்கிய படைப்புகளில் ஒன்று, அவருக்கான அஞ்சலியை த. மு எ ச மிகச் சிறப்பாக செய்தது என்றும் குறிப்பிட்டார். தனுஷ்கோடிராமசாமி “ எடிட் செய்யனும் “எனும் வார்த்தையை அடிக்கடி பிரயோகம் செய்வர். நான் எழுதிய கதைகளை பற்றிய விமரிசனம் கேட்கையில், எடிட் செய்யுங்க தோழரே, அருமையான கதை உள்ளிருக்கு என்பார். நண்பர்களை தேவையில்லாதவர்களை எடிட் செய்யுங்கள் என்பார். அவரது தீம்தரிகிட எனும் சிறுகதை தொகுப்பில் வந்த கந்தகக் கிடங்கிலே எனும் சிறுகதை இந்த மண்ணின் பிரச்சனைகளை பேசியது. அந்த தொகுப்பு சிவகாசியில் வைத்து எரிக்கப் பட்டது மிக முக்கிய நிகழ்வு. அவர் கதைகளில் “தீப்பெட்டி தொழிற்சாலைகள் எங்களது குழந்தைகள் விளையாட்டை அள்ளிக் கொண்டு போனது” என்று எழுதுவார். அந்த வாக்கியம் இன்று தொலைக்காட்சி, கணிணி எல்லாவற்றுக்கும் பொருந்தும், அவரது தோழர் நாவல் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நிறைய பிரதிகள் அடிக்கப் பட்டது. “செந்தட்டிக் காளைக் கதைகள் “ எனும் தொடர் புதிய பார்வையில் வெளிவந்தது. அவருக்கு பிடித்தமானது என்று அடிக்கடி குறிப்பிட்டிருக்கின்றார்.

வைத்தியநாதன் பேராசிரியர் சிவநேசன் ஆகியோரும் அவரது படைப்புகளும் படைப்பு சார்ந்த நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
சாத்தூர் கிளை கலைஇலக்கிய பெரு மண்றத்தின் செயலாளரும், தனுஷ்கோடி ராமசாமியின் பள்ளிக் கூடத்திலிருந்து அவரது இறப்பு வரை நண்பராக சகலமும் பகிர்ந்து கொண்டவரான பழனிக் குமார், “இறப்பை அவர் ஏற்றுக் கொண்டார் என்றும், எல்லா அனுபவங்களையும் பதிவாகவும் இலக்கியமாகக்கவும் முயன்றார். அவரிடம் நேர்மையான கம்பீரம் குறையாத திட மனம் எப்பவும் இருந்தது என்றார்.மாற்று அமைப்புகளிலும் அவருக்கு இருந்த நட்பு வெளிபாட்டையும் இளைஞர் சூழ எப்பவும் அவர் இருக்க விரும்பியதையும் பகிர்ந்து கொண்டார்.
பேராசிரியர் பொ. நா. கமலா அவர் எழுதிய அஞ்சலி பாடலை இசைத்தார்.
நிகழ்வுக்கு தனுஷ்கோடி ராமசாமியின் புதல்வர் வந்திருந்தார்.தன் தந்தையூடான நினைவுகளை அவரும் பகிர்ந்து கொண்டார். சாத்தூரில் அவர் சார்பாக அறக்கட்டளை நிறுவப் பட்டு இளம் படைப்பாளிகளுக்கு அவர் நினைவை போற்றும் வண்ணம் விருது வழங்க இருக்கிறது எனும் தகவல்களையும் பழனிக் குமார் அறிவித்தார்.
தனுஷ்கோடி ராமசாமியின் நூல்கள்
சிம்ம சொப்பனம்
சேதாரம்
நாரணம்மாள்
தீம்தரிகிட
பெண்மை என்றும் வாக
வாழ்க்கை நெருப்பூ
நாவல்கள்
தோழர்
நிழல் என்னும் ஒரு கவிதை
posted by Thilagabama Mahendrasekar @ 12/16/2005 12:44:00 pm   0 comments
Wednesday, December 14, 2005
கவிதையியல்
வாழ்க்கை தருகின்ற அனுபவங்களே எனைப் பொறுத்த வரையில் கவிதை. வாழ்வியலில் நமக்கு முன்னால் இருக்கின்ற சூழ்நிலைகள் நிகழ்கின்ற நிகழ்வுகள், ஏற்கனவே நமக்குள் இருக்கின்ற தீர்மானங்கள். இவற்றுக் கிடையே இருக்கின்ற முரண்களின் பிண்ணனியில் எழுப்பப் படுகின்ற விசாரணைகள், விவாதங்கள் தேடல்கள் இவைதான் எழுத்தின் இலக்கியத்தின் அடிப்படை என்று நினைக்கின்றேன்.இந்த முரண்கள் தான் எழுத்தை கையிலெடுக்க வைத்திருக்கின்றது. அதிலும் கவிதை என்பது எல்லா இலக்கிய வகைளிலும் மேம்பட்ட ஒன்று. மற்ற எழுத்துக்கள் வாசகனோடு பேசும். கவிதை ஒரு படி மேலே போய் உணர வைக்கும். . எனைப் பொறுத்தவரை கவிதை பேசக் கூடிய விடயமல்ல. உணரக் கூடிய விடயம் கவிதையில் தான் அந்த சொற்கள் சூழலாகவோ, பேசப் படுகின்ற அதே பொருளாகவோ மாறி விடக் கூடிய சாத்தியம் இருக்கின்றது.அப்படியானால் எல்லா அநுபவங்களும் கவிதையாகி விடுமா? எனைக் கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன் . அனுபவங்களையும் அவ்வெழுத்து எப்படி அணுகுகின்றது என்பதைப் பொறுத்தே அது கவிதையாகின்றது. இன்னும் சொல்லப் போனால் அநுபவங்களின் திரட்சி தான் கவிதை. அநுபவகங்கள் நமக்குள் எழுப்பும் கேள்விகள் தொடர்ந்த தேடல்கள் தேடல்கள் நமக்கு முன் வைக்கும் தீர்மானங்கள் என அநுபவங்களின் திரட்சியான வடிவமாகவே கவிதையை நான் பார்க்கின்றேன்
திசை திரும்பும் விடுதலை
வாடைக் காற்று வீசும் இரவு

மௌனப் போர்வைக்குள்
தூங்கும் மொழி
மீட்டுதல் இல்லாமலும்

அதிர்வுகளில் இசை
வழிய விடும் வீணை
கானம் உன் காதுகளுக்கு
புரிதலென்பது
இல்லாவிட்டால்
இரைச்சலாய் அர்த்தப் பட்டு விடக் கூடும்
வெறும் கம்பி

வெறும் உலோகம்
கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டு
மின்சாரம் பாய ஒளியாகவும்
இழுத்துக் கட்டப் பட்டு
அதிர்வுகளில் சிக்க ஒலியாகவும்
மாறித் திரிவது சாபமல்ல
வரம்

தின்னும் கறியிலும்
சொல்லும் மொழியிலும்
சாதியை , பிரிவினையை நிறுவப் பார்க்கும் நீ
ஒலியை வெறும் கம்பியாகவும்
ஒளியை வெறும் உலோகமாகவும்
திசை திருப்பித் திரிவது
உணருகையில் உனக்குள் புகும்
விடுதலை


தாழி
மண்ணுக்குள் புதை பட்டிருந்த
நானும் மண் தான்
காலமெலாம்
வீம்போடும், விரக்தியோடும்
காதலோடும்
ஏதேதோ காரணங்களோடும்
எதற்கெதற்கோ தூக்கித் திரிந்த அடையாளங்களை
இழந்த உடல்கள்
இத்துக் கிடக்கின்றன. என்னுள்

யாரின் சுவாசமோ
யாரின் குருதியின் இறுதித் துளிகளின்
துகள்களோ
யாரின் கனவுகளோ
எந்த ஆதிக் கண்களின் மிச்ச எச்சங்களோ
சுமந்தபடிபுதைக்கப் பட்ட மண்ணோடு
புணர்ந்து விட முடியாது நான்தூக்கி வந்திருக்கின்றேன்
மண்னோடு மண்ணாய்
மக்கி விட நான் வெறும் மண்ணல்ல
சுடப் பட்டு வனையப் பட்டு
காலவெளி கடந்து
சுவடுகள் சுமந்த வந்த தாழி

நிகழில்
நாளை
இன்று மரித்துப் போகும் தினமொன்றில்
கைப் பிடிச் சாம்பலோடு
இன்றின் சுவடுகள்
நாளைக்கென்று இல்லாமல் போக
தீயில் உயிர்த்த சாம்பலின்று
அலை பட்டு கரைந்த போதும்
கரையில் கோரையாய் முளைத்து
மாடின் மடிபுகுந்து
குழந்தை வாயில் தவழ்ந்து
ஜீவன் வழி வழியாய்

இன்னுமொரு சுழற்சிசக்கரமாய்
சுவடுகளை தூக்கி வந்து
ஓடும் ஆண்டுகள் கழித்தும்
வாசிக்க பத்திரப் படுத்துவேன்
காற்று வெளியை
கலயமாக்கி
வனைதலையும் சுடப் படுதலையும்
தூளாக்கி

இதுதான் கவிதை என்று நான் அடையாளம் காண்பிப்பதை விட உங்களை உணரச் செய்வதுவே சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகின்றது. நமைச் சூந்திருக்கும் காற்றை எப்படி நாம் உணருகிறோமோ அது போல் கவிதையை உணருதல் அவசியம். நமக்கு உவப்பான விசயங்க¨ள் பேசும் போது கவிதைகள் சில்லென்று வீசும், சில நம்மிடையே இருக்கும் உண்மைகளை உரைக்கும் போது வெப்பக் காற்று துப்பிப் போகும்,
கவிதை இன்றைய யதார்த்தத்தை பிரதி பலிப்பதாய் இருக்க வேண்டும் யதார்த்தம் என்று சொல்ல்ப் போகும் ரெண்டு விதமான சிக்கல்கள் நமக்குள் வருகின்றன யதார்த்தம் எனும் பெயரில் செய்தித் தாள்கலில் உள்ளதை எல்லாம் கவிதை யாக்கும் , போக்கும், பார்த்ததையெல்லாம் எதற்கு என்ற சிந்தனையில்லாது பதிவாக்கும் போக்கும் இருந்து வருகின்றது. அதிலிருந்து மீண்டு வரும் எந்த கவிதை களை யதார்த்தம் என்று சொல்லலம் என்றால், இயற்கையியல் போக்கை தாண்டி அக்கவிதைகளில் நடப்பியல் போக்கு இருக்க வேண்டும்,இயற்கையியல் என்பது பார்த்ததை அப்படியே பதிவு செய்வது. .நடப்பியல் என்பது ஒரு படி மேலே போய் அந்த நிகழ்வு என்ன விளைவுகளை தருகின்றது அது சரியா தவறா தவறென்றால் சரி செய்வதெப்படி இப்படியான கேள்விகளை உள்ளடக்கியதாக இருப்பதே நடப்பியல்

யாருக்கு வேண்டும் அஞ்சலிகள்
சுடுகின்ற யதார்த்தங்கள்
சுவாரஷ்யங்களுக்கென்றே
சூடு பறக்க தின்னும் மனிதர்

எப்பவும் இரத்தமும் சதையுமாய்
உணர்வும் உயிர்ப்புமாய்
இருந்திருந்த அருந்ததிகள்
தினம் தினம் உடல் சிதறி வீழும்
கல்பனா சாவ்லாக்களாய்
உலகம் முழுவதும்

இன்றும் கல்பனாக்களுக்கும்
அங்கீகாரங்கள் சிதறிய பிறகு தானா
பூக்களுக்கு மட்டுமேன் புகழாரங்கள்
இதழ்கள் உதிர வாழ்வைத் தொலைத்து
விதையாய்ப் புதைந்த பிறகு

சிதறினாலும் சிதறல்களும்
கோள்களாகி
வீழ்ந்தும் மீண்டும்
பிய்ந்த சதைகள் ஒட்டி
தழும்பு மறைத்துத் திரியும்
வாழும் கல்பனாக்களுக்கு தேவையில்லை
அங்கீகாரம் தரத் தயாராயில்லாத
உங்கள் அஞ்சலிகள்

மருதாணிக் கறைகள்
மலர தொடங்கையிலேயே
கட்டப் பட்டு விட்ட மாலை
மலர்தலும் உதிர்தலும்
தவிர்ப்பதற்கான
ஜண்டி சுற்றல்களுடன்

மினி மினுத்த மாலை தோளில் கிடக்க
வாசத்தில் உறுத்தல்கள் தொலைத்து
உறவுகளோடு நடக்கின்றேன்

ஆரத்தி எடுத்த கைகள்
பொட்டிட்டு நெட்டி முறிக்க
எறிகின்ற சூடங்களோடு
தெருவில் விழுகின்ற வர்ணங்கள்

உன் சம்பாத்தியங்கள் எனக்கானதாய் நீ சொல்ல
என் உழைப்புகள் உனக்கானதாய் நான் சொல்ல
பலதும் பரிமாறிய படியே
கடக்கின்றாம் காலங்களை

காதலையே கைப்பிடிப்பது
கற்புடைமையாக சொல்லப் பட்டதாலா
இன்னமும் தேடிக் கொண்டிருகிறேன் காதலை
யாருடைய தீர்மானங்களுகாகவோ
காதலது இல்லாது
கலந்து விட முடிகின்ற நிஜங்கள்
கற்பின் அர்த்தங்களை அழித்துப் போக
மணப் பெண் கோலத்தில் எனை
அதிசயித்த குட்டிப் பெண்ணுக்கு
நெத்தி சூடி, வங்கி, ஒட்டியாணம்
என்னிடமிருந்து இடம் மாற்றிவிட்டு
மருதாணிக் கறைகளை
என்னோடவே அழியக் காத்திருக்கின்றேன்

)கவிதையில் அழகியல் இருக்க வெண்டும். எது அழகியல்? அழகியலை ஏற்கனவே புனிதப் படுத்தப் பட்ட விசயங்களை பேசுவதையே அழகியல் என்று பலரும் நினைத்துக் கொண்டிருகின்றனர். இந்த சமுதாயத்தில் நிகழ்கின்ற மோசமான விசயங்களையும், வலிகளையும் கவிதை பேசும். னால் எப்படி பேசுகின்றது என்பதும் எந்த இடத்தில் அதை கவிதையாகுகிறது என்பதும் தான் முக்கியம். அழகியல் தான் உரை நடையிலிருந்து சொற்களின் சேர்க்கையை கவிதையாக்குகின்றது

திரி சங்கு உலகு
விரியும் இதழ்களை
காணத் தராத மலர் இதழ் விரிப்பாய்
விரிந்து கிடந்தது எனக்குள் ஓர்
திரி சங்கு சொர்க்க உலகு
தங்கச் சருகு தின்று
வண்ண பேதம் தொலைத்து
காத்துக் கிடந்தன மரங்கள் பச்சையாய்

பனியும் உறைதலும்
கதிரின் உஷ்ணமும்
வேறுபட்டுப் போகாத உணர்வு தரும்
சாபங்களும் , வரங்களும்
இற்றுப் ஓன இன்மைகளில்
தானாய் உயிர் பெறும்
அகலிகை கற்களும்
கௌதம கற்களும்
பேசிச் சிரிக்க
காதலில் காமத்தின் வாசம் மறக்கும்
இந்திரன்கள்

கணவனின் குரலுக்கு
கை நழுவ விட்டு வந்த
அதிரும் அரவை இயந்திரம்
தூக்கியடித்து சிந்திப் போக
என் தன்மானங்களும் கனவுகளும்
வள்ளுவன் குரலுக்கு வாசுகி விட்டு
வந்த வடக் கயிற்றுடன்
தூக்கிலிட்டுக் கிடக்கும்

இன்றும் விட்டு வர முடியாத அலுவல்களுடன்சுருண்டு கொள்கின்றனநான் விரித்து வைத்த திரிசங்கு உலகுமக்கிய ஈர நெடியுடனும்மல்லிகை வாசமுடனும்
நாளை என் மகள் திணிக்கக் கூடும் தன் கனவுவிரிப்புகளை மெத்தைகளின் அடியில்
எந்த்ட் அதலைமுறை காணூம் தன் கனவுகள் பச்சை புல்வெளியாய் விரியும் நாளை
எந்த இலக்கிய வகையாக இருந்தபோதும் அது இலக்கியத்திற்கான இடத்தைப் பெறுவது அது கொண்டிருக்கின்ற சமூகப் பிரக்ஞையை கணக்கில் கொண்டேபொதுவாகவே எல்லா படைப்பாளியும் தன்னைத்தான் ஒவ்வொரு படைப்பிலும் எழுதிப் பார்க்கின்றான். அப்படி தனிப்பட்ட மனிதனின் எண்ணப் பதிவுகள் எப்போ இலக்கியம் கிறது என்றால்.. அதில் பேசப் படுகின்ற அநுபவம் வாசிக்கப் படுபவனுடைய அநுபவமாக மாறும் போது தனிமனிதன் சமுதாயத்துக்கு உரியவனாகின்றான். அவன் பேசுகின்ற விசயம் சமுதாயத்துக் குரியதாகின்றது.
பஞ்சும் நெருப்பும்
நான் பஞ்சா நெருப்பா
புரியத் தெரியாது ஒருவருக்கும்
புரிந்தாலும் புரியாததாய்
காட்டிக் கொள்ளவே விருப்பம் இவர்களுக்கு

நெகிழ்ந்து கிடக்கையில் பஞ்சாகவும்
முறுக்கி எண்ணையில்
மூழ்கடித்துப் போடையில்
நெருப்பாகவும்
மாறிப் போவேன்
எனைப் புரியவென
புதிய மொழி பேசச் சொல்லி
என் முறுக்கேறல்களையும்
பற்றிக் கொள்ளுவதையும்
பறிக்கும் முயற்சியாய்
பிரித்தெனை நனைத்து போட
புரியாத பஞ்சுகளோ
பறப்பதாய் நினைத்து
மரங்களில் சிக்கி சகதியில் நனைந்து

வேண்டாம் புரிய வைக்கும் முயற்சிகள்
முறுக்கேறும் பஞ்சுகள்
திரிகளாய் எரியத் தொடங்கும்
இந்த வெளிச்சமும் , வெப்பமும்
எனக்காக
யாரும் குளிர்காயவும்
எனக்கான வெளிச்சத்தில் நிழல் வேடிக்கை
காட்டவும் அல்ல
எரியும் நெருப்புக்கு எண்ணையாய்
உணர்வு வார்க்க
எந்த மொழியும் பேசாமலேயே
புரியத் தொடங்கும் உனக்கு
பஞ்சும் நெருப்பும் வேறல்ல வென்று

இந்த கவிதையில் எனது அனுபவமாகவே எல்லாம் பதிவாகியிருப்பினும்., வாசிப்பவருக்கு , பஞ்சா, நெருப்பா எனும் கேள்வி கேட்பது யார் ? என கேள்வி கேட்க வைக்கும் இது வெறும் ஒற்றை பெண்ணின், தனி மனுசியின் கேள்வி அல்ல , பல நூறு பெண்களின் நிலையை, உணர்வை பேசுவது. பல நேரங்களில் பெண்கள் பஞ்சாகவும், நெருப்பாகவும் அடையாளப் படுத்தப் படுகின்றனர்.இந்த அடையாளங்களில் எது உண்மை நிலை. இவர்கள் சித்தரிக்கின்ற பெண் அதுவாகவே இருக்கின்றாளா? இல்லை என்பதே என்னுடைய அவதானிப்பு. பொதுவாக ஏற்கனவே இருக்கின்ற படிமங்கள் பற்றியும் யோசிக்க வேண்டும். பெண் நிலவு, மலர் நதி இப்படியான படிமங்கள் பெண் இப்படியாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தியலை முன் வைக்கின்றது அதையும் நாம் யோசிக்க வேண்டும் என்பதன் விளைவே “ சூரியாள் “ எனும் சொல்லாடல் கவிஞன் எழுத்திலும் மொழியிலும் புதிய விசயங்களை செய்பவனாக இருக்க வேண்டும். அவனுக்குள்ளிருக்கும் தேடல் இயல்பாகவே அதை நிகழ்த்தும் இந்த சமயத்தில் இன்னொன்றை தெளிவு படுத்த வேண்டும். நான் நீ என்கின்ற இந்த சொல்லாடல்களினால் இது தன்னுணர்ச்சிக் கவிதை போல் தோன்றுவதாய் பலர் குற்றச் சாட்டு வைக்கக் கூடும் நாம் எதிர் கொள்ளும் சமுதாயம் , நிகழ்த்தும் பாதிப்புகள் , தனி மனிதனின் செயல் பாடுகளினால் ஒட்டு மொத்த சமுதாயத்திலும் நிகழும் பாதிப்புகளும் நிகழ்ந்த வண்ணமே இருக்க, கவிதைகளில் வரும் நான் எண்பது நானல்ல. இது தன்ணுனர்ச்சியில்ஆரம்பித்து பொது நிலைக்கு பரிமாணம் பெறும்

நேற்றின் சேகரம்

ஈரம் தோய்ந்திருந்த
கொல்லைப் புறக் கதவாய் நானும்
நி¢லையோடு பொருந்த மறுக்க
அடித்து சாத்தியாயிற்று
திருஷ்டி கழித்து
தீயில் கரைய விட்ட சூடமோடு
எரியும்ஆசைகளோடு
முன் கதவும் தாழிட
உரை குத்திய பால்
நீருள் கன்னிமை காக்க
மூழ்கடிக்கப் பட்ட சோறு
சூடேற்றிய குழம்பு
எல்லாம் பார்த்து பார்த்து
மூடி வைக்கப்படது
என்னையும் சேர்த்து
எதை தொலைத்து விடாமலிருக்கனும்
என் ற கேள்வியுடன்

தொலைந்த இருளோடு
நேற்றைய நிஜம் கரைந்து போயிமிருக்க
மூடி வைத்திருந்த புத்தகத்துள்
எழுதப் பட்டிருந்த கவிதை
சேகரம் செய்திருந்தது
யாராலும் சேமிக்க முடியாத
நேற்றைய பொழுதின்
நிஜங்களின் படிமங்களை
இந்த் கவிதையில் வரும் நான் என்பது தினம் தோறும் நடக்கும் ஒரு நிகழ்வை வெறும் நிகழ்வாக மட்டும் சித்தரிக்காமல் வாழ்வோடு இணைக்கும் வார்த்தையாகவே “நான்” எனபதை பார்க்கின்றேன் இன்றைக்கு கவிதை காட்சி வடிவமானதாக இருந்து வருகின்றது . இசைவழியாக காதுகளை அடைவதை விடுத்து காட்சி வடிவமாக்குவதை. கையிலெடுத்திருக்கின்றது. எந்த ஒரு போக்குகளுக்குமே பக்க விளைவுகளும் எதிர் விளைவுகளும் உண்டு. னால் அது அதீதமாகி விடாது நாம் மட்டுப் படுத்தி வைத்தலே சரியான ஒரு போக்குக்கு வித்திடும்

எட்டாவது பிறவி

பச்சை நிறம் பூத்துக் கிடந்த
கிணற்று நீர்
நானுள்ளே குதிக்க
நுரைத்தது வெள்ளையாய்
தெறித்து சிதறிய நீர்
மேட்டில் இருந்த புல்லில்
பட்டு வழிந்து மீண்டும்
கிணற்றுள் கிளப்பியது வட்ட அலைகளை
நானோ அலைகளுக்குள் சிக்காத
ஆழத்திற்கு போயிருந்தேன்
தென்னங் கீற்றுகளின் வழியே
வழிந்து வீழ்ந்த ஒளி
நீருள்ளிருந்து நான் பார்க்க
நிறப்பிரிகை செய்தது
மேலேயிருந்து காணக் கிடைத்த
பசுமைக்குள்
காணக் கிடைக்காத
அதிசயங்களும் அசுத்தங்களும்
கண்களுக்கருகில் வந்து போகின்றன

ஆறு பிறவிகளுக்கு முன்
நான் தவறித் தொலைத்த
அந்த மோதிரம்
எதிர் வினை செய்து துருவேறாது
இயல்பை விடாதிருப்பதும்
இருப்பை உணர்த்துவதுமாய் மின்னிக் கிடக்க
அதில் என்னின் சுதந்திர வாசம்
நீராலும் கரைந்து விடாது வீசி
என் கை சேர

மூச்சடக்குதலுக்கும்
சுவாசித்தலுக்கிடையிலும்
அதிசயங்களை கரை சேர்க்கப் பார்க்கிறேன்
நீர் எனை அடக்கியதாய்
வாய்ச் சவடால் பேச
அடங்கும் போதும்
என் வேர் கிளை பரப்பி
அஸ்திவாரம் போட்டிருக்கும்

இனி யாரும் ஆழத்தில்
மூழ்கடித்து விடாத இருப்பை
கழற்றி விடக்கூடிய மோதிரமாய் இல்லாது
விரல்களாய் மாற்றிக் கொள்கிறேன்

மூச்சு விட மேலே வரும் போது
உறுதி செய்து கொள்கிறேன்
எட்டாவது பிறவியிலாவது
மூச்சடக்கி மூழ்கி வர
தேவையில்லாத நிலைக்காக

இதில் கிணறு நமக்கு காட்சி வடிவமாகின்றது. அதே நேரம் காட்சிப் படுத்தலையும் தாண்டி ஒரு கலை வடிவத்திற்கான சிருஷ்டி அந்த படைப்பில் இருக்க வேண்டும். காட்சி வடிவமாகிய கிணற்றுக்குள் மோதிரமும், மோதிரப் படிமத்திற்குள் பேசப் படுகின்ற விடுதலை குறித்த சிந்தனைகளூம் சிருஷ்டி பெறும் போது காட்சி வடிவமாக்கப் பட்ட அந்த எழுத்து கவிதையாகின்றது
என்னைப் பொறுத்த வையில் முற்போக்கு நவீனம் என்பதெல்லாம் இன்றைய அந்த அந்த கால கட்டன்ங்களில் சமுதாயத்தில் நிகழும் மாற்றங்கள் அந்த மாற்றங்கள் தனி மனிதனில் நிகழ்த்தும் மாற்றங்கள் இச்சமுதாயம் மனிதனின் முன் வைக்கும் விழுமியங்கள் அவைகள் உருவாக்கி வைத்திருக்கும் கருத்தியல்கள் , சமுதாயம் நமக்குள் திணிக்கின்ற விசயங்கள் அவற்றுக்கு எதிரான சிந்தனைகளை கலைப் படைப்பாக்கும் போதே நிகழ்வதாகவே நான் கருதுகின்றேன்நான்
காலம் காலமாக நமக்குள் நமக்கு முன்னால் இருக்கின்ற விழுமியத்தை கருத்தியலை இக்கவிதை கேள்வி கேட்கின்றது. இக்கவிதையில் பேசப் படுகின்ற விசயம் என்ன? காதலின் போது ஒரு பெண் “ நான் “ என்பதை துறக்கிறாள். அன்பு வயப் படும் போது மட்டுமே அது சாத்தியம். இன்றைக்கும் பெண்ணின் நிலை இதுதான். அவள் கண்ணெதிரில் அவள் முகமே தெரிந்தாலும் நேச முகம் மட்டுமே அகக் கண்ணில் படுகின்றது . இந்த மனனிலை இன்றும் நமக்குள் ணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் நிறைய உணர்வுச் சிதைவுகளை தந்து போகின்றது. நல்ல உறவுகள் சந்தோசமான வாழ்வின் அடிப்படை சந்தோசமான வாழ்வுதான் மிகச் சிறந்த கவிதை அப்படியான நல்ல உறவு அமைய என்ன தேவை. என தேடும் தேடல்களை பதிவாக்குவது தானிக்கவிதை. நீயும் உனக்குளிருக்கும் நானை தொலைத்து விட்டு வா என நமக்கு முன் இருந்த கருத்தியல்களின் மீது விசாரணை வைக்கத் தேவையான சிந்தனையை கொண்டு நிற்கும் கவிதையாகின்றது.
அரசியல் கவிதைகள். ஏற்கனவே இருந்த ஒரு கருத்தியலை மறுத்து இன்னொமொரு புதிய கருத்தியலை உருவாக்க தலைப்படுமானால் அது அரசியல் கவிதை என்பேன். பொதுவாக ஒரு கருத்து பெண்கள் அரசியல் எழுத வில்லை என்று. இந்நாள் வரைக்கும் ஒவ்வொரு பெண்ணும் ணின் பார்வையிலேயேதான் எல்லாவற்றையும் பார்க்க படைக்க பழக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றாள் .இதிலிருந்து மாறுபட்டு சுயமாக வெளிப்பட்ட சிந்தனைகளை ஒத்துக்கொள்வது என்பது , பலருக்கும் முடியாததாயிருக்க அதை தொடர்ந்து செய்வதே ஒரு அரசியல். அது சார்ந்து ஒரு பெண் பேசுவதே அரசியல். எனது வெற்றிகளை உனது பெருந்தன்மையாய் மாற்றிப் போடும் சூழ்ச்சி என்பதிலும்போர்க்கள விதிகளைஎன் சந்ததிகளை முன்னிறுத்திமுடிச்சிப் போடும் நீ என்பதிலும் அரசியலாகப் பார்க்க வேண்டிய கோணங்களை என்னால் அடையாளம் காட்ட முடியும் இன்னமும் நல்ல எழுத்து எது எனத் தீர்மானிப்பவர்கள் ண்களாகவே இருக்கின்றனர். ஏன் என் கூடுதலான வளர்த்தி கூட வருத்தப் படக்கூடிய விசயமாகவே நம்மையும் நினைக்க வைத்திருக்கின்றனர் .


வேர்த்தாலி தொலைத்த கள்ளிப் பூ

உனக்கே உனக்கு மட்டுமான
முல்லையாகத்தான் நான்
வேண்டுமென்றிருந்தாய்
காதல் வறட்சியால் நான்
கள்ளியாகிப் போனேன்
காற்றின் ஈரத்தை உண்டு
காத்திருப்பை முட்களாக சூடி
சூடிய முட்களுக்குள்ளும் ஈரம் மூடி

வானத்து முதல் துளி வீழ்ந்த போதும்
முட் கிரீடம்
எந்த ஆடும் மேய்ந்து விடாதிருக்க
குடும்ப கௌரவமாய் சுமத்தப் பட்டிருந்தேன்
சிறையிருப்புக்காய் குறைபட்ட போது
உனக்கென்ன
பட்டாம்பூச்சி கணக்காய்
சிறகுகளாய் இதழ்கள் இருக்கே
மண்ணோடு என் பூவையும்
கட்டி வைத்த வேர்கள் சொல்ல
முதல் முதலாய் இதழ்களை
அசைத்துப் பார்க்கிறது இந்த கள்ளிப் பூ

மேகமெங்கும் கள்ளிப் பூக்களும்
துளசிப் பூக்களும்
வானிலிருந்து தேன் மழை சிந்த
சிறகை விரித்து வாழத் துவங்கியிருக்க
புலம்பும் வேர்கள்
இதழ்களை சிறகுகளாய்
அடையாளம் காட்டியதற்காய்
இழந்து விட்ட தேன்களுக்காய்

வேர்த்தாலிகளைத் தொலைத்து
இடம் பெயருகின்றன பூக்கள்
விதைகளாய் உருமாறி
***********

புவித் தொட்டி

நீ தீர்மானித்திருந்த எனது வீரம்
திருமண முடிச்சுக்களோடும்
முந்தானை முடிச்சுக்களோடும்
சுருக்கிட்டு கிடக்க

என் வளர்த்தி
ஐந்தடிக்கு கொஞ்சம் கூடுதலாய்
மிஞ்சும் என் வளர்ச்சியை
தகுதியின்மையாய் நிறுவும் நீ

உன் முதிர்ச்சிகள் சந்தனமாயும்
என் முதிர்ச்சிகள் தீயலாயும்

உன் உணருதல்கள் மாறும் வரை
சந்தன வாசம் உன்னை
சேரப் போவதேயில்லை

அதீதங்களாய்
அடையாளப் படுத்திய கிளைகள்
உனக்கான வெளிச்சம் மறைப்பதாய்
என் காலடியில் இருந்து
குறை சொல்லும் நீ
கிளை தாங்கிய பூவாய்
இருந்த வரை சுமக்கும் நீ
வேர் தாங்கும் விதையாய் மாற
விதண்டா வாதமென்று தூர எறிகின்றாய்

வாழ்த்தினாலும் வீழ்த்தினாலும்
வளர்வதில் மட்டுமே
கவனம் கொள்ளும் நான்

என் விஸ்வரூபங்கள்
உன் மண் தொட்டிகள்
தாங்குவதில்லையென
புவியை தொட்டியாய்

மாற்றிக் கொள்கின்றேன்
இறுதியாய் ஒன்று சொல்லிக் கொள்ள வேண்டும். நான் பேசுவது பெண்ணியம் அல்ல. பெண்ணுக்கான மனித இருப்பைத் தான் நிலை நிறுத்த உணர வைக்க பேச வேண்டி இருக்கின்றது.. நான் பொதுமைக்குள் வந்து விட முயலும் போதும் சாயம் பூசும் வேலைகள் தொடருகின்றன. அவற்றுக் கெதிரான குரல்களை என் எழுத்துக்கள் பதிவு செய்கின்றன. பிரதி பலிக்கின்றன. எதிர்வினை செய்கின்றன

posted by Thilagabama Mahendrasekar @ 12/14/2005 11:50:00 am   4 comments
Tuesday, December 13, 2005
அதிசயமாகும் நடுகற்கள்

அதிசயமாகும் நடுகற்கள்

தூரத்து அரியணை சறுக்கல்கள்
சொட்டாங்கல்லோடு
மேலே போன போதும்
கூட்டிச் சேர்த்து
உள்ளங்கைக்குள் அடக்கிட முடிந்தது.

சட்டங்களின்
சாயும் முற்கள்
பறிக்கும் ரோஜாக்களோடு
கூடவே வர
கிள்ளி எறிந்து மாலை தொடுத்தோம்

பணங்களின் ஏற்ற இறக்கத்தில்
சோழி உருட்டி ஏணி ஏறி
அடித்த நொண்டியில்
பழம் வைத்து
அபிமன்யு வெளியேற மறந்த
பத்ம வியூகம்
சொற்களில் உடைத்து
சோறும் படைத்தோம்

கழுவையில் நழுவும் மீனாய்
தீவிரவாத தலைபற்றி
தரையில் உரசி
கொதிக்கும் புளியில்
குழம்பும் ஆக்கினோம்

வாள் சொருகிய இடுப்புகளோடு
வீரம் பேசிய மீசைகள்
எதிரில் வர
பூமத்திய ரேகையாய்
நம் உலகங்களிரண்டாய் பிரியும்

என் உலகம்
நீ நிறைக்கப் பார்த்த
உன் உலகத்தினடியில்
மறைக்கப் பார்க்க
பேசிப் பேசி ஓய்கின்றேன்
பெண்ணியமென்று
நீ பெயரிட்டு போகின்றாய்

நீ நிறுவப் பார்த்த
உன் உலகத்திற்கு
நான் இடுகின்ற நடுகல்
நாளை அதிசயமாகும்
உனதும் எனதுமற்ற
பொது உலகில்
posted by Thilagabama Mahendrasekar @ 12/13/2005 09:01:00 pm   1 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates