சூரியாள்
|
Sunday, March 30, 2008 |
கவிதை-சிறை வைக்கும் பூக்கள் |
சிறை வைக்கும் பூக்கள்
இஸ்தான் புல் ராஜகுமாரி விதைக்கச் சொல்லிக் கேட்ட டூலிப் பூக்களாய்
நமது நட்பின் விதைகளை ஊரெங்கும் பூக்க மாசி மழைக்காலத்தில் விதைத்து வைக்கின்றேன்
வசந்த காலம் வந்து சேர்கின்ற பொழுதொன்றில் வண்ணங்களோடு பூத்து ஆயிரத்தொரு மனைவிகளுக்கிடையே நீ தொலைக்கப் பார்த்த என் விஸ்வரூபத்தை யாவருக்கும் காணத் தந்து பூக்களின் இதழ்களுக்குள் உன்னை சிறை வைக்கும்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 3/30/2008 11:55:00 pm   |
|
|
Saturday, March 15, 2008 |
இலக்கிய சந்திப்பு, பாரதி இலக்கிய சங்கம் |

|
posted by mathibama.blogspot.com @ 3/15/2008 01:28:00 pm   |
|
|
Wednesday, March 12, 2008 |
மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம் |
மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம் திலகபாமா
பெண் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெங்கும் இரண்டாவது பிரஜையாக, இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப் படுவதும், வாய்ப்புகள் மறுக்கப் படுவதும் உடைமைப் பொருளாக ஆக்கப் படுவதும் அவளது உடல் நுகர்வுப் பொருளாக உருமாறியிருப்பதும் கண்கூடு. இத்தன்மை ஒட்டு மொத்த சமூகத்தின் நாளைய எதிர்கால வளர்ச்சிக்கு எதிரான ஒன்றாகும். எந்த ஒரு மனிதனும் இன,பால் அடையாளங்களினாலோ அல்லது சாதிய , வர்க்க , மத வேறு பாடுகளினாலோ குறைவாக மதிப்பிடப் படுதல் , ஆதிக்க மனோ நிலைக்கு வித்திடுமொன்றாகிப் போகின்றது. ஆதிக்க மனோ நிலை அடிமைத் தனம் உருவாவதற்கு காரணமுமாகின்றது
அதுவும் நமது கலாசாரத்திற்குள் இருந்தும் நமது வாழ்வியலில் இருந்தும் பெண் எந்தெந்த இடத்தில் எல்லாம் வேதனைக் குள்ளாக்கப்படுகின்றாள் என்பதை இக்கட்டுரை பேசுகின்றது. காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் என்று பாரதி சொன்னதற்கிணங்க நமக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணங்களை உணராததையே இயல்பாக மாற்றிக் கொண்டிருப்பதையும் யோசிக்க வேண்டியிருக்கின்றது. சம்பவங்களின் இடமும் சாட்சியங்களின் நிகழ்வும் பிரதேச அரசியலை பேசினாலும் அதன் உணர்வுகள் பிரதேச இன எல்லைகளை கடந்து ஒடுக்கப் படுபவர்களின் அடிமைத் துயரங்களை சொல்லி ஆதிக்க மனோ நிலைக்கெதிரான குரலாக, பொதுமையடையக் கூடும்
சுயமிழத்தல் மனிதன் எனும் ஒட்டு மொத்தத்திற்குள் பெண் தன்னை காலம் காலமாக இரண்டறக் கலந்தபடியும் பெண் தன் சுயத்தை இழந்து ஆணுக்கானவளாக வடிவமைக்கப் பட்ட படியும் இருந்திருக்கின்றாள். அவளுக்கான மனித இருப்பு சமூகம் கலாசாரம் , பண்பாடு என்னும் பெயரால் மறுக்கப் பட்ட படியே இருக்கின்றது. காலம் காலமாக முன்னோர்களால் சமூக நல்வாழ்விற்காக வடிவமைக்கப் பட்ட கலாச்சாரங்களும் , பண்பாடும் மாறுகின்ற காலங்களின் போது அதன் மாறுதல்களை மறந்து மறுத்து காலாவதியாகி வெறும் சடங்குகளாக பலநேரங்களில் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றது. வெற்றுச் சடங்குகள் சிந்தனையின் திசை மாற்றி மேலும் மேலும் பெண்ணை புதிய மாற்றங்களோடு ஒத்திசைந்து போக முடியாதவளாக உறைய வைத்து விடுகின்றது ஆயிரம் அறிவியல் தொழில் நுட்பங்களின் பின்னரும் சுயாதீனமாக செயல் பட முடியாதவளாக பெண்ணை முடக்கி விடுகின்றது. பொருளாதாரம் , கல்வி மதம் என பெண்கள் அடிமைப் பட்டதற்கு காரணமாகவும் அதிலிருந்து விடுபட மாற்று வழியில் செல்ல வேண்டியிருப்பதாகவும் பலர் சொல்லிச் செல்கின்றனர்.கல்வி பெற்று விட்டால், பொருளாதார வல்லமை பெற்று விட்டால் பெண் விடுதலை பெற்று விடுவாள் என்று இன்றோ கல்வியறிவு பெற்று பேராசிரியராக வேலை செய்ய நேர்ந்தும் இரட்டைச் சுமையோடு தனக்கென கூட சுய முடிவுகள் எடுக்க முடியாதவர்களாக இருப்பதையும் ஆயிரக் கணக்கில் சம்பாதித்தும் தன் வாழ்க்கை ஆணைச் சார்ந்திருப்பதாய் நம்பி அவனது நேர்மையற்ற வழிமுறைகளை சகித்தும் வாழ்கின்றாள் பெண்.அவளது சுயமும், அவளது வாழ்வும் எது என அவள் உணரவிட முடியாத படிக்கு தொட்டிக்குள் வளரும் போன்சாய் செடியாய் வளர்க்கப் பட்டு விட்டு , விருட்சமாய் வளர முடியாத வர்கள் என அறிவிக்கப் படும் போக்கு இன்னமும் நம் சமூகத்தினரிடையே பொதுப் புத்தியில் நிலவி வருகின்றது.
உணர்வுச் சிதைவுகள்
பெண் எப்பவும் இருபக்கம் அடி வாங்கும் மத்தளமாக ஆகி விடுவதால் தனக்கு நேர்கின்ற உணர்வுச் சிதைவுகளை சாட்சியங்களோடு வைக்க முடியாது போய் விடுகின்றது.உணர்வுச் சிதைவுகளை அவளே உணர்ந்து விட முடியா படிக்கு வாழ்வியலோடு நமக்கு இச்சமூகம் தந்திருக்கின்றது. பெண்ணின் குடும்ப வேலைகள் தனிமனித வேலையாக நிறுவப் பட்டு மதிப்பிழக்கப் படுவதும் இதனால் தான். அவளது குடும்பப் பணியையும் இச்சமூகப் பொதுப் பணிக்கான பின் அரங்க வேலையினில் ஒன்று தான் என்பதை அறிவு ஜீவிகளாலும் ஆண்களாக இருப்பவர்களாலும், ஆண் வழிச் சிந்தனையில் ஊறிப் போயிருக்கும் பெண்களாலும் அடையாளம் காணப் பட முடியாமல் போவது ஆச்சரியப் படத்தக்க விசயமில்லை
பண்டமாக்கப் படல்
இன்றைய வாழ்வில் இதுவரை இருந்து வந்த சமூக அமைப்புகளின் பார்வைகள் உலக மயமாக்களில் , சந்தைக் கலாசாரத்தில் நுகர்வுக் காலத்தில் எல்லாமே பண்டமாக்கப் பட்டு வருகின்றது. காதல் பெண் , தாய்மை , தந்தைமை என எல்லா உணர்வுகளும் கூட இன்று பண்டமாக்கப் பட்டு விட்டது, திடப் பொருள்கள் மட்டும் சந்தைக்கு வருதல் என்றில்லாது , அரூப உணர்வுகளும் தினங்களாக மாற்றப் பட்டு பண்டமாக்கப் பட்டு விற்பனைக்கு வந்து விட்டன. அதிலும் பெண் உடல் வெற்று பண்டமாக்கப் பட்டு சந்தையில் விற்பனைப் பொருளாவதும், குடும்பச் சூழலில் , காதலில் உடமைப் பொருளாய் மாறிப் போவதும் இன்று நிகழ்ந்திருக்கின்றது. இது தொடருமானால் பெண் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப் படுவாள்
நவீனம் என்ற பெயரில் புனிதங்களை உடைத்தல்
ஒரு சமூகம் காலம் காலமாக தொடர்ச்சியான தன் தேடலில் வாழ்வுக்கான வழிமுறையை கண்டறிந்து அதை பண்பாடாக தொடர்ந்து வாழ்ந்து வருகின்றது. அதில் மனிதன் மனிதம் குறையாமல் வாழ்வதற்கான புனிதங்கள் புதைந்து கிடந்தும் , அதை உணராது பழமை எனத் தள்ளியும் நவீனம் என்ற பெயரில் மேலைத் தேய வாழ்வியலை , கருத்தியலை முகமூடிகளாக பூட்டிக் கொள்வதும் சமூகத்திற்கே எதிரானது என்றாலும் பெண்ணுக்கு பெருந்தீங்கு செய்வதுவும் உணரப் படவேண்டிய ஒன்றாகும்
உடல் சார்ந்த அடையாளங்கள்
உடல் வெறும் பௌதீக வேறுபாடே.உணர்வு என்பது உடலைச் சார்ந்து கட்டமைக்கப் படுதல் இங்கு காலம் காலமாய் நிர்பந்திக்கப் படுகின்றது . வெட்கம்,மென்மை , நளினம் போன்ற உணர்வுகள் பெண் உடல் சார்ந்து நிறுவப் பட்டு விடுகின்றது. எந்த வேலைக்கு சூழலுக்கு பழக்கப் படுகின்றதோ அதுக்கான உணர்வுகளையும் பிரதி பலிப்பதுவே உடல். உடல் ரீதியான வேறு பாடுகள் உணர்வுகளை தீர்மானிப்பதில்லை. கல்லுடைக்கும் வேலைக்கு பழக்கப் படும் நபர் உறுதியான , முரட்டுத் தனமானவராகவும், கணிணி வேலைக்கு பழக்கப் படுபவர் மிகவும் மென்மையாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது. பெண் காலம் காலமாக ஒரே மாதிரியான சூழலுக்குள் அவள் பெண் , அவளது உடல் பாதுகாக்கப் பட வேண்டியது என்றும், அவள் கருவறையைக் காரணமிட்டே முடக்கப் படுகின்றது. கற்பு என்ற உணர்வும் அவள் உடல் சார்ந்தே அவளிடம் திணிக்கப் பட்டு இருந்தது எனவே உடல் சார்ந்த ஆடையாளங்களை நிராகரித்து அதுவும் ஆண்கள் பார்வையாலேயே காலம் காலமாக வருணிக்கப் பட்ட பெண் உடல் சார்ந்த அடையாளங்களை மறுதலிப்பதுவும் உடல் மட்டுமல்ல பெண் என நிறுவுவதுவும் பெண் மாற்றியமைக்க வேண்டிய முக்கிய பார்வையாகும்
வாழ்வெது வெற்றியெது
இதுவரையிலும் பெண் வாழ்வில் ,ஆணோடு இணைந்து இல்லாத பெண் வாழ்வில் தோற்று விட்டவளாகவும், அவளது வெற்றிகள் ஆண் வாழ்வோடு ஒப்பீட்டு ரீதியில் மதிப்பீடுகள் உருவாக்கப் படுவதும் நம்மிடையே இருக்கின்றது.இருவர் உலகமும் வேறு வேறாக இருக்க ஒப்பீட்டு அடிப்படடையிலான மதிப்பீடுகள் பிழையாகப் போய் விடுகின்றன. இந்த ஒப்பீடுகள் புதுமை விரும்பும் பெண்களையும் ஆணைப் போல இருக்கவே நிர்பந்திக்கின்றன. அவளது இயல்பை உணரச் செய்வதில்லை. அந்த போலச் செய்தலில் போலிகளும் பிழைகளும் நிகழ்ந்து விடுவதுண்டு.பெண் தன் வாழ்வியல் தேவைகளை முன்னிட்டு புதியதாய் திறமையோடு செயல்படத் துவங்கினாலே முன்னிறுத்தப் படுபவளாய் மாறி விடுவாள்.
மாற்றுப் பார்வை
இந்த இடர்ப்பாடுகளின் பின் தான் நமக்கு கேள்வி எழும்புகின்றது பெண் எந்தப் புள்ளியிலிருந்து தன் பயணத்தை தொடங்கி பாதை உண்டாக்கிப் போக வேண்டும் காடு திருத்தி பாதை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் பெண்ணுக்கு இன்று இருக்கின்றது
இதுவரை இருந்து வந்த சமூக அமைப்புகளின் பார்வைகள் உலக மயமாக்களில் மாற்றுப் பார்வைக்கு நிர்பந்திக்கின்றன. இன்றைய வாழ்வின் மனிதன் புலம் பெயர்ந்து கொண்டிருக்கின்றான் வாழ்வை விட்டு தொழிலை விட்டு , தனது மொழி தனது கலாச்சாராம் என்பதை விட்டு பல் மொழி பல் கலாச்சாரம் எனபனவற்றை யோசிக்க தேவை உருவாகியிருக்கின்றது இதுவரை இருந்த கலாசாரங்களை விட்டும் தவிர்க்க முடியாது உலக மயமாக்களை எதிர் கொள்கின்ற நமக்கு இதுவரை இருந்த பொதுப் புத்தியிலிருந்து மாற்றுப் பார்வையை எதிர் கொள்ள வேண்டியிருக்கின்றது .நேற்றைய வாழ்க்கையை படியெடுக்கும் மனநிலை அறவே கடந்து போயிருக்கின்றது
இதுவரை இருந்த குடும்பச் சூழலிலிருந்து வெளி வந்திருக்கின்ற பெண் தன் சுயத்தை முழுதும் உணர்ந்திருக்கின்றாளா? பெண் என்றால் உடல் மட்டும் தான் என்று காலம் காலமாய் நிறுவி வந்ததிலிருந்து பெண் தன்னை தான் உடல் மட்டுமல்ல உணர்வுமானவள் என்று உணரவும் உணர்த்தவும் வேண்டிய தேவை இன்று வந்திருக்கின்றது . பெண் உடல் சிதைவுகளை கண்டு விடுகின்ற நமக்கு உணர்வுச் சிதைவுகள் அடையாளம் கண்டு கொள்ளப் பட முடியா இரகசிய சாட்சியங்களாகின்றன பெண் எந்த வித உணருதலுமின்றி புகுந்து விட்ட மாறுதலுக்கேற்ப அப்படியே தளம் மாற்றம் மட்டுமே செய்யப் படுகின்றாள். அது ஏற்கனவே இருந்த ஒடுக்குமுறைக்கான கூறுகளையும் உள்ளடக்கியதாய் இருந்து விடுகின்றது. இதுவரை இருந்த கூட்டை விடுவித்துக் கொண்டு வெளி வருகின்ற பெண் தான் போய் விழுகின்ற இடத்தில் என்ன கட்டமைக்கப் போகின்றோம் என்ற தெளிவில்லா விட்டால் , ஏற்கனவே நமை அடிமைத்தனத்திற்குள் தள்ளி விட்ட மனோ பாவங்கள் புதிய இடத்திலும் ஆக்கிரமித்து விடக் கூடும். அதையும் அவளே விரும்பி செய்வதற்கான நிர்பந்தம் சமூகச் சடங்குகளின் மூலமாகவும் ஆதிக்க வழிச் சிந்தனை வழியாகவும் நிகழ்த்தப் படுகின்றது
உணர்வுச் சிதைவுகளை உணர்ந்து விட முடியா படிக்கு வடிவமைக்கப் பட்ட தளைகளிலிருந்து அவள் விடுவிக்கப் பட வேண்டும்
50 களில் இருந்ததைவிட 90 களில் முன்னேறியிருக்கின்றோம் என்ற போதும் , முனை அடிக்கப் பட்டு கட்டப் பட்ட கயிறுகளின் நீளம்தான் கூடியிருக்கிறதே ஒழிய முளைகள் பிடுங்கப் படவில்லை. எத்தனையோ நாட்டு விடுதலை சாத்தியமான பின்னும் அதோடு பெண் விடுதலை ஏன் சாத்தியமாகவில்லை எனும் கேள்வி மிக முக்கிய மான ஒன்றாகும்.
சமூகத்தின் பொதுப் புத்தியிலிருந்து விடுபட்டு பெண்ணின் மனித இருப்பை உணரச் செய்து விடுவது தான் சமூகத்தின் அனைவரும் மகிழ்ச்சியோடிருக்க உதவுவதாகும்.
பெண் விடுதலை சிந்தனை சாத்தியமாகி விட்டால் பெண் இடம் மட்டுமல்ல, அது ஒட்டு மொத்த சமூகத்திற்கே நீண்ட காலத்தில் தொடர்ச்சியான மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்றாகும்
இம்மாற்றுப் பார்வைகள் பெண்ணைத் தனிமைப் படுத்தும் முயற்சியாக இல்லாது, பெண்ணின் சுயம் உணர்ந்து அதை யாரும் சிதைத்து விட முடியா தளத்தில் நிறுவி பின் பொதுமையோடு அதன் உண்மைகள் மறுக்கப் படா இடத்தில் நிறுவ வேண்டும். அந்த தருணத்தில் பெண்ணியச் சிந்தனைகள் மனித வளச் சிந்தனைகளாக பார்க்கப் படும். மனிதன் எனும் ஒட்டு மொத்தத்தில் இருந்து பெண் அடையாளமற்றுப் போய்க் கொண்டிருக்கின்றதில் தன்னை நிலை நிறுத்த அவளே தன்னைப் பிரதானமாக உணர்ந்து கொள்ள வேண்டிய தேவையும், உணர்ந்த பிறகு தன் முழுமையை ஒட்டு மொத்தத்தில் சரியான இடத்தில் இனி ஒரு காலும் பிழையாக குறைத்து உணர்ந்து விட முடியாத படிக்கு பொருத்தி அதே சமூகத்திற்கு மீளத் தர சிந்தனைத் தளத்திலும் செயல் தளத்திலும் பெண் செயல்பட வேண்டியிருக்கின்றது.
பெண்ணியம் மனிதத்தின் முதல் படி.
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில் |
posted by mathibama.blogspot.com @ 3/12/2008 01:42:00 pm   |
|
|
Wednesday, March 05, 2008 |
முரண்படும் உலகில் தமிழ் எழுத்தின் இன்றைய பெண் நிலை வாதம் |
இக்கட்டுரை இலங்கையில் நடந்த தெற்காசிய பெண்ணிய மாநாட்டில் டிசம்பர் 1 தேதி வாசிக்கப் பட்டது. இந்த மாத அம்ருதா இதழில் வெளி வந்திருக்கின்றது
முரண் படும் உலகில் தமிழ் எழுத்தின் இன்றைய பெண் நிலை வாதம்
வரை படங்கள் தாண்டி கிளை பரப்பும் வசந்தங்கள்- திலகபாமா
பூக்களையும் புயல்களையும் தீர்மானிக்கும் மானிடர் தீர்மானங்களுக்குள் சிக்காது வாழ்வு வாழ்ந்து கோண்டிருக்கிறது.
கால காலமாக எப்பவும் முரண்படும் உலகு என்பது எங்கள் எதிரில் இருந்து கொண்டிருக்கும் யதார்த்தமாகும்.தொடர்ந்த வாழ்வியலில் தான் தேடிக் கண்டடைந்த வாழ்வுக்கான பதில்களை ஒரு பண்பாடாகவும் கலாசாரமாகவும் நமக்கு முன்னால் இருந்த சமூகத்திடமிருந்து நாம் பெற்றுக் கொண்டே பயணிக்கின்றோம் அந்த பெற்றுக் கொள்ளுதல் சில வேளைகளில் இன்றைய யதார்த்ததின் முன் காலாவதியாகி விடுகின்றது அந்த கால கட்டத்தில் அதை உணராது அப்படியே சடங்குகளாக கடைப்பிடிக்கும் போது அது சமூகத்திற்கெதிரான ஒன்றாக மாறி விடுகின்றது . மனிதன் எந்த தருணத்தில் இயல்பாக வாழ முடியாது ஏற்கனவே இருக்கின்ற விழுமியங்கள் இன்றைய இயல்பு யதார்த்தத்தின் முன் தடையாக மாறுகின்ற வேளையில் தேவைகளை ஒட்டி அதை மீள் கட்டமைப்பு செய்பவனாக மாறுகின்றான். அப்படி மாறுகின்றவன், எழுத்தில் தன் சிந்தனைத் தளத்தை வடிவமைக்கும் போது,அவன் நினைவு மனம் உள்வாங்கியதை , கேள்விகளும் தேடலுமாக அடுத்த கட்ட ரசாயான மாற்றத்திற்கு அனுமதிக்கும் மனம், தனது நினைவிலி மனத்தின் ஊடாக வெளிப்படுத்துவதே படைப்பாக இருக்கின்றது.அப்படியான படைப்பின் வழியாக தன் முன்னால் இருந்து கொண்டிருக்கின்ற காலாவதியான நடைமுறையிலிருந்து தனது இயல்பாக தோன்றிய கற்பனை வாழ்க்கைக்குமான பாலமாக அதை மாற்றிக் கொள்கின்றான். அப்படியான பாலமாக மாறுவது எல்லா தரப்பினருக்கும் சாத்தியமில்லாதாகிப் போகின்ற போது , முரண்படும் உலகு நம்முன்னால் தரிசனமாகின்றது. அந்த முரண்படும் உலகில் இருந்து தான் படைப்பின் ஆரம்பப் புள்ளிகள் தொடருகின்றன.புலம் பெயருகின்ற வாழ்வு இன்று இலங்கைக்கான சொல்லாடலாக மட்டுமல்லாது ஊர் விட்டும், உறவு விட்டும், மொழி மறந்தும், சாதியக் குழு அடையாளம் தொலைத்தும் பெயருதல் எல்லார் வாழ்வினூடாகவும் நுழைந்தே விட்டது . மனிதன் பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயருதல் தவிர்க்க முடியா தொன்றாகிப் போன பிறகு படைப்பாளிகள் ஒருமித்த வரையறைக்குள் வந்து விடுதல் என்பதும் இயலாததாகவும், ஒருவர் கைக்கொள்ளுகின்ற படைப்பின் இயங்குதளங்கள் இன்னொருவருக்கு புதியதாகவும் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் இருந்து கொண்டு தான் தமிழ் எழுத்தின் பெண் நிலை வாதம் என்னவாக இருக்கின்றது எனத் தேட வேண்டியிருக்கின்றது
தந்தை வழிச் சமூகம் பெண்ணாய் பூட்டிய புராதனப் பெட்டிக்குள்ளிருந்து தாயாணமைச் சமூகம் நிறுவ செல்வமென மாறிப் பரவுவேன் ............... மனுஷியாய் உணர முடிந்த அந்த நாளொன்றில் வாழ்த்துச் சொல்வேன் பெண்மை வாழ்கவென்றல்ல மானுடம் வாழ்க வென்று
தமிழ் எழுத்து அதன் மண் சார்ந்த , பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் உள்ளடக்கியதே ஆகும். இடமும் காலமும் உள்ளடக்கி வருங்காலத்திற்கு இன்றைய காலத்தை வாசிக்கத் தருகின்ற படைப்பாகவும் இருக்க வேண்டும். இன்றைய இயந்திர உலகில் இதுவரை பெண் இருந்திருந்த வாழ்க்கை முறைமைகளை தகர்த்து புதிய தேவைகளுக்கேற்ப அவள் அவதாரம் எடுக்க வேண்டியதுள்ளது.
தரிசனச் சொற்கள்
தாண்டவனின் அடி முடி காண முடியா கூட்டம்
பெரு விரலாய் தாண்டவர் உரு மாறிப் போகும் விச்வரூபிணியாய் அவளிருக்க
அவரவர் கண்களின் நீல அகலத்தில் காட்சிகள் தரிசனமாயின
கூந்தலின் அசைவுகளில் சூறாவளிகள் கருவாயின வழிந்த சொட்டு வியர்வையில் வெள்ளத்தில் மூழ்கியது நிலம்
இமையோடு விழி பார்க்க முடியாதவர்கள் மூடாத விழியாளாகவும்
அதிர்வுகளோடு உதடுகளைச் சந்தித்தவர் ஓயாது பேசுபவளாகவும்
விரல் நகச் சிவப்போடு உள்ளங்கை ரேகை பார்க்க முடியாதவர் இரத்தம் தின்னும் குரூபியாகவும்
சொல்லிய படியே அலைய
உருவம் உள்வாங்க முடியாதவர்கள் அவள் உறுப்புகளை உச்சரித்தபடியே இருக்க
விஸ்வரூபிணி மூன்றாமடிக்கல்ல முதலடிக்கே நிலமின்றி உன் தலை மிதிக்கின்றாள்
அவளழுத்தலில் மூச்சு திணரும் போது விரற்கடை பார்வையில் அவள் அளந்த உலகம் உனக்கு புலனாக
உணர்ந்த தரிசனம் சொல்ல முடியாது நீ மூழ்கிப் போய்விட
மண் கீறும் விதைகள் மூழ்கிப் போன உன் தரிசனச் சொற்களோடு உதிக்கின்றன.
அதே நேரம் பெண்ணை தனக்குள் உட்படுத்தி வைத்திருக்கும் ஆதிக்க சமுதாயம் புதிய அவதாரம் பெண் எடுப்பதை விரும்புகின்ற போதும் , அவள் தன் பால்ய கால பழமை உடைகளையே பூட்டிக் கொள்ள நிர்பந்திக்கின்றது . இன்றைய பெண்ணுக்கு தனக்கு முன்னால் இருக்கின்ற சமூகமோ ஆணோ இப்படித்தான் இருக்க வேண்டுமென நிர்பந்திக்கின்ற பொழுது அதுவாக இல்லாமல் போவதே பெரும் விடுதலை வாழ்வாக மாறிப் போகின்றது. அந்த விடுதலைத் தேடலில் அவள் தன்னியல்புகளையும் தொலைத்து விட்டு எப்பவும் கவசம் பூண்டவளாக இரும்பு உடைக்காரியாக உலாவர வேண்டியிருக்கின்றது . காலம் காலமாக புதையுண்டு வேர் விட்டு நின்றிருக்கும் பெண் சிறகு விரிக்கும் போதும் வேரை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் மண்ணிடமிருந்து பிய்த்துக் கொண்டு போக நேரிடுவது துரதிர்ஷ்டமே.. தன் துளியும் இழக்காது பெண் சிறகு விரித்தலே விடுதலை மட்டுமன்று வாழ்வாகவும் இருக்கும். இதுவரை இருந்திருந்த இயல்புகளை விட்டு புதிய் வெளிகளை தேடிப் பயணிக்கும் பெண் முன்னால் பல சிக்கல்கள் இருக்கின்றன. புதியதாக தீர்மானிக்கப் படுகின்ற வெளிகள் , ஏற்கனவே இருந்ததை விட மோசமான ஒன்றாகவும், அல்லது புதிய வெளிகளை தேடுவதிலேயே தொலைந்து போய் விடக கூடிய வாய்ப்பும் இருக்கின்றது புதிய வெளிகளைத் தேடிச் சிறகு விரிக்கும் பெண் தான் போகின்ற புதிய வெளியில் என்ன கட்டமைக்கப் போகின்றோம் என்ற தெளிந்த சிந்தனை இல்லாவிட்டால் இதுவரை அவளை ஆக்கிரமித்திருந்த அடிமை மனோ நிலைகள், கருத்தியல்கள் மீண்டும் சூழ்ந்து புதிய இடத்திலும் பழைய சிக்கல்களை அனுமதித்து விடும். கவிதை ஒற்றைப் புரிதலுக்கு சாத்தியமில்லை என்று உணர்ந்திருந்த போதும்,, "யோனிகளற்று போகட்டும் பிரபஞ்சம்" என்று முடியும் கவிதை வரியிலும், "சன்னல்கள் கண்களாகவும் வாசல்கள் யோனியாகவும்" என்று சொல்லிப் போகும் கவிதையிலும் ஆணாதிக்கத்திற்கு எதிராக கிளம்பிய கோபத்திலும் பெண் என்றால் மீண்டும் அவளது உடல் தானென்று பதிவு செய்து போகின்ற கவிதை வரிகளும்,உடலைக் கொண்டாடுதல் எனும் போக்கிலும் மீண்டும் பெண்ணை உடல் சார்ந்த பொருளாகவே பார்க்கப் படக் கூடிய பழைய சிக்கலுக்குள் நம்மைத் திணித்துப் போகுமொன்றாகும் இத்தனை விசய சிந்தனைகளோடு பெண் நிலை வாதம் இன்று உணரப் பட்டிருக்கின்றதா? தமிழ் எழுத்தில், இக்கேள்வியின் முன் இன்னுமொரு துணைக் கேள்வி இருக்கின்றது. எழுத்து பால் அடையாளத்தோடு வாசிக்கப் படத்தான் வேண்டுமா? தேவையில்லைதான். எனும் போதும் ஒரு விமரிசகனாய் நாம் மாறிவிட்ட பிறகு ஒப்பு நோக்குவதற்கும் கூடுதல் குறைச்சலை தீர்மானிப்பதற்கும் அடையாளங்கள் தேவைப் படுகின்றன. உண்மையில் படைப்பாளியாய் எழுத்து பால் அடையாளங்களை கடந்த படியே தான் , அடையாளங்களில் தொலையும் மனிதத்தின் இருப்பு பற்றி பேசுகின்றது ஆண்களின் பெரும்பாலான எழுத்துக்களில் பெண் நிலை வாதம் பாடு பொருளாக ஆகாத பொழுதினிலும் அவர் பார்வையில் பெண் எப்படி பார்க்கப் பட்டிருக்கின்றாள் என்பதுவும் நாம் அவதானிக்க வேண்டிய ஒன்றே. அந்த வகையில் ஆண்களின் படைப்பில் பெண் காலம் காலமாக ஆணுக்கானவளாக உடைமையாக சுகம் தரும் ஒரு பொருளாக தன்னை விட அறிவில் , வீரத்தில் குறைந்தவளாக அதெல்லாம் அவள் குணமேயல்ல என்ற விதத்திலும் தான் பெரும்பான்மை படைப்பாகின்றது.. தேசிய விடுதலையோடு , பால் இன பொருளாதார ஒடுக்கப் பட்டவர்களின் விடுதலையையும் சேர்த்தே பேசமுடியாத துரதிர்ஷ்டமே நேருகின்றது. பெண் நிலை வாதத்தை பேசுகின்ற பெண்களிடம், சமூகப் பிரச்சனைகளை பேசுவீர்களா என்று எழுப்பும் கேள்வியிலும் பெண்களின் பிரச்சனைகள் சமூகப் பிரச்சனை அல்ல எனச் சொல்லாமல் சொல்லும் அதன் நுண்ணரசியல் இருக்கின்றது. மன்னர்களையும் , புரவலர்களையுமே பாடுபொருளாக்கிய காலகட்டத்தில் இருந்திருந்த இளங்கோவடிகள் பெண்ணை நாயகியாக்கி அதிலும் மன்னனை எதிர்த்து கேள்வி எழுப்புபவளாகவும் பாத்திர படைப்பைச் செய்து போயிருக்கின்றதை இன்று அதையே மீள எழுதிப் பார்க்கும் ஜெயமோகன் கொற்றவையில், கண்ணகியால் ஆனது ஒன்றுமில்லை, நாடே மக்கள் கலவரத்தில் தானே தீப்பிடித்து எரிந்தது என்று இன்று பெண் பாத்திரப் படைப்பின் தீவிரத் தன்மையை மாற்றிப் போடுவதிலும், தொடர்ந்து அதில் வருகின்ற பெண் பாத்திரங்கள் இன்றைய தொலைக்காட்சித் தொடர் நாயகிகளை விட கேவலமாக அழுவதையும் அதையும் சொல்லுமிடத்து ,அவர்கள் அழுத கண்ணீரெல்லாம் முலைகள் மேலே விழுவதாக தொடர்ந்து எழுதுவதிலும் பெண்ணுடலை பேசிப் பார்க்கும் வக்கிர மனமும், பெண் இருப்பின் முக்கியத்துவத்தை அற்றுப் போகச் செய்கின்ற நுண்ணரசியலும் இன்றும் நாம் கேள்வி எழுப்ப வேண்டிய தளத்தில் இருக்கின்றது. நவீன கவிதையின் முன்னோடியாக அறிமுகப் படுத்தப் படும் கலைஞர்களிடத்தும் இச்சிந்தனையை காண முடிகின்றது
அவள் அழகாயில்லாததால் தங்கையாகி விட்டாள்
தன் ஆடுதன் செட்டுக்கு ஜோக்கர் கிடைக்காத வரை என் மனைவி பத்தினியாயிருப்பாள்
குனிந்து வளைந்து கூட்டிப் போனாள் வீடு சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு
பெண் இருப்பு அவள் பௌதீக உடல் சார்ந்தே தீர்மானிக்கப் படுவதையும் அதன் காரணமிட்டே நுகர் பொருளாக மாற்றப் படுவதையும், உடலை பிரதானப் படுத்திய தொனியில் அவள் உணர்வுச் சிதைவுகளை அலட்சியப் படுத்தும் மனோ நிலையை அவளூடாகவே விதைத்து போவதையும் சான்று சொல்லிப் போகின்ற வரிகள் இவை. மேலும் பெண்ணுக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதாக சொல்லிக் கொள்ளுகின்ற சாக்கில் அவளேதான் அவளுக்கு எதிரி என்றும் எதிரியாக்கிப் போகின்ற எழுத்து வகைமைகளும் ஏராளம் " ஒவ்வொருஆணின் வெற்றிக்குப் பின்னும் பெண் இருக்கின்றாள் என சொல்லிப் போகும் கௌரவ வரிகளுக்குப் பின்னே பெண் பின்னால் நிற்க போதிப்பதும் ஆண் வென்றாலே போதுமானது எனச் சொல்லும் கயமையும் உடன் இருக்கின்றது. இதை தாண்டி பாரதி தான் முதன் முதலில் மாற்றிப் பாடுகின்றார் ஆணெல்லாங் கற்பைவிட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையுங்கற் பழிந்திடாதோ என்று அணுகியவன் பாரதி. அ. மாதவையாவின், கிளாரிந்தா , சோ.தர்மரின் கூகை போன்ற நாவல்கள் இவை பொதுத்தளத்தில் இயங்கிய போதிலும் இவற்றின் நுண்ணரசியலில் அடிமை மனோபாவ ஒழிப்பும், ஆதிக்க எதிர்ப்பும் இப்படைப்புகளின் அடிப்படை நீரோட்டமாக இருக்கின்ற பட்சத்தில் அவை பெண்ணுக்குமானதாக மாறி விடுகின்றது அல்லது குறைந்த பட்சம் பெண் நிலையை இறங்க விடாது மதிப்பு தரும் தளத்தில் அமைத்துப் போவது பெண் நிலை வாததிற்கு வலு சேர்க்கின்ற படைப்பாக இருக்கின்றது. உல்க மயமாக்கலில் மேலைத்தேயங்கள் தருகின்ற புதிய விசயமெனும் பிரமிப்பில் அவற்றின் இலக்கியப் போக்குகள் மட்டுமே உன்னதமெனக் கொண்டு அதை படியெடுக்கும் உருவாக்க கலைத்தேர்ச்சி அற்ற படைப்பாளியாகவும் , படைப்பையும் தந்து போகின்றவனாக மாறிப் போகின்றான். அப்படியான உத்திகளினால் நிரப்பப் படுகின்ற எழுத்துக்கள் நிகழ் நிமிடத்தின் கொதிநிலையைத் தவற விட்டு விடுகின்றன. இன்றைக்கு பின்நவீனத்துவம், மாய யதார்த்த வாதம் எனச் சொல்லப் படுகின்ற படைப்புகள் சோதனைக் குழாயில் உருவாகும் வெற்றுப் பொருளாக சந்தையில் எந்தப் பொருள் தேவை இருக்கின்றதோ அப்படியான ஒன்றாக உருவாக்கப் படுவதும் போலித்தனங்களே அன்றி மக்களுக்கானதில்லை
ஆண்களின் பெண் பற்றிய பார்வை இப்படியாக இருக்கின்றதென்றால் பெண் எழுத்து என்னவாக இருந்து கொண்டு இருக்கின்றது.
பெண் தன் எழுத்தை எந்தப் புள்ளியிலிருந்து துவங்குகின்றாள். விடிவெள்ளியிலிருந்து அது கிளம்புவதில்லை. இருளில் வெளிச்சப் பொறியைத் தூவி விதைக்கும் உரசல்களாக முளைக்கின்றன. சில உரசியே உடைந்து போகின்றன சில உரசல்களில் பற்றிக் கொள்கின்றன.பற்றிக் கொண்டவை தொடர்ந்து உயிர்த்திருக்க போராடிப் பார்க்கின்றன. அதன் பற்றிக் கொள்ளும் வேகமும் பயணப்படு திசையும் தலைமுறை தலைமுறைக்கும் போராட்டத்தை விட்டுச் செல்வதாகவே இருக்கின்றன ஏன் பற்றிக் கொண்ட பொறி நிரந்தர சூரியனாய் ஒளிர முடியாது போகின்றது .ஒன்று நூற்றாண்டு நூற்றாண்டுகளாக ஊற வைக்கப் பட்ட மனித வாழ்வில் பெண் வாழ்வில் எது எரிதல் எது வெளிச்சம் என உணர்ந்து கொள்ள முடியா அளவுக்கு சிதைவுகள் உணர்வுகளில் இரண்டு உடலைக் காரணமிட்டு பத்திரப் படுத்தப் பட்ட பெண் வாழ்வு எப்பவும் கவனங்கள் உடலோடவே நின்று போக உணர்வுச் சிதைவுகள் மறக்கடிக்கப் படுகின்றன. உண்மையில் உணர்வுச் சிதைவுகள்தான் உள்ளிருந்தே அரித்து பார்க்கப் படுகின்ற உடல் சிதைவுகளை காட்டிலும் வன் கொடுமைகளாக , சமூக பிரச்சனையாகவும் வெளியில் வேறொரு ரூபம் காட்டித் திரிவதாய் மாறிப் போகின்றன. பெண் வாழ்வின் சமீப காலமாக வெளிப் பாடுகளுக்கான சாத்தியக் கூறுகளின் பெருக்கமும் , வழமையான செக்கு மாட்டுத் தனங்களை விட்டு புதியதை தேடிப் பயணிக்க வேண்டிய நிர்பந்தமும் , இதுவரை ஆதிக்க சமுதாயமும் தன் மேல் திணித்திருந்ததை எல்லாம் கேள்வி கேட்டு விட வேண்டிய நிர்பந்தமும் பெண்ணுக்கு நேர அதன் வெளிப்பாடாக , குரலாக பெண் எழுத்து ஒரு வலுவான வெளியை அடைந்தது.
விடுதலையாக உணர்த்தப் படுவதும் வாழ்வு வாசிக்கப் படுவதும் எப்பவும் ஆணாலேயும் ஆண் வழிச் சிந்தனையாலும், ஆணை நிராகரிப்பதாகச் சொல்லப் படும் போதும் அவனை மையப் படுத்தி விலகிச் செல்வதுமாய் இருக்க உணர்ந்து விட முடியா உண்மை உணர்வுகள் கரிகளாகவே உணர்த்தப் பட்டு பூமியின் அடித்தட்டுகளில் ஒளிராத வைரங்களாக புதைந்து கிடக்கின்றன
வாழ்வு மாறுகின்றது ஒருவருக்கிருந்த வாழ்வு மற்றவருக்கில்லை. பெண் வாழ்வும் கௌரவமும் அடுத்தவரிடம் பேசி விட முடியா அழுத்தம் இவற்றிலிருந்து பெண் எழுத்து கிளைக்கின்றது. அவை பெரும் பாலும் பாடு பொருளைத் தேடித் திரிவதில்லை. சிதைபட்ட அவளது உணர்விலிருந்தே வேர் கொள்கின்றது. அவளது எழுத்தில் வார்த்தைகள் வாய்ஜாலமிடுவதில்லை. அதன் வாய்மைகள் புதிய வார்த்தைகளாகிப் போகின்றன. அழகியலை வடிவமைப்பதில்லை . குழந்தையை நேசிக்கும் மனநிலையிலிருந்து யாருக்குமில்லாத புதிய அழகியல்கள் குழந்தை விளையாட்டாய் கையகப் படுத்துகிறாள். உண்மைகளை உணர்வுகளை நினைவு மனம் உள்வாங்கி தர்க்கித்துக் கொண்டதை விவாதித்ததை , தீர்வுகண்டதை தான் கண்ட தீர்வு அடுத்தவருக்குப் பொய்த்துப் போனதை மௌன மனத்தின் உரத்த ஒப்பாரிகளாய் தாலாட்டாய் பரணியாய் உணர்த்தி விடப் பார்க்கின்றன.அவளது எழுத்து இதற்கு முந்தைய வடிவாக்கங்களை முறைமைகளை கோட்பாடுகளை கையிலெடுப்பதில்லை உண்மையில் அதற்கு நேரமோ அவகாசமோ இருப்பதில்லை. அது புதிய இயல்புகளை கட்டமைக்கப் பார்க்க அது இதுவரை பார்த்திராத ஒன்றாக இருப்பதாலேயே மிரண்டு போகின்ற எழுத்துலகம் அதை நிராகரிப்பதுமாய் இருக்கின்றது. சிற்ப நகரம்
எப்பவும் முன்னிலைப் படுத்தப் பட்டவனாய் இருந்து இருந்து விஸ்வரூபங்கள் பின்னாலும் தரிசனமாகலாமென மறந்தவனாய் நீ
காலத்தின் பருவத்தில் விரிகின்ற இதழ்களைக் கூட கட்டுக்குள் வைக்கின்றேன் கிளம்பும் வாசத்துள் மூழ்கி விடக் கூடாதென்பதற்காக
கருணைகளை போதாமைகளாய் வாசிக்கும் நீ கற்களை ஊன்றிய படி நான் நீளப் போன பாதையில் வேரில்லை பூவில்லை கலையில்லை கல்லுக்கு கண் திறப்பில்லை சொல்லிப் போகின்றாய்
அடையாளம் சொன்ன கற்களின் வரிசையின் இறுதியில் சிற்ப நகரம் நீ நகரமாய் பார்த்து தொலைக்க மறைகின்றன சிற்பங்கள்
பா. விசாலத்தின் மெல்லக் கனவாய் பழங்கதையாய் நாவல், அழகிய நாயகி அம்மாளின் கவலை இவையெல்லாம் காத்திரமான அதேநேரம் கவனிக்கப் படாத படைப்புகள். என் கல்லூரிக் காலத்தில் எனக்கு அறிமுகமான சுபத்ரா தொடங்கி , இரா. மீனாட்சி ராஜம் கிருஷ்ணன், விசாலம் இராஜலெட்சுமியென இன்று இலங்கை பெண் படைப்பாளிகளையும் உள்ளடக்கிய படியே நீளுகின்றது அப்பட்டியல். எந்த எதிர் துருவம் சென்றாலும் வெற்றியாய் உணர விடாப் பக்கமிருப்பதால் அவளுள்ளும் இயலாமையும் நம்பிக்கையின்மையும் கூடுதலாகவே இருக்கின்றன. இயலாமையைப் பேசுகின்ற படைப்புகள் இயற்கையியலுக்குள் தன்னைத் தள்ளி தானே அடுத்த அடி எடுக்க விடாது செய்து விடுகின்றன அதைத் தாண்டி தட்டி காலடி எடுத்து வைப்பவர்கள் மிக அரிதே அப்படி அரிதாய் வந்தவர்கள் இளமை வேகத்தில் வேகமாய் வந்து வேகமாய் வாழ்வின் ஓட்டத்தில் ஆணின் வாழ்க்கை நிறம் தாங்கி தாண்டிப் போய் விடுகின்றார்கள் தோல்வியில் அடையாளமற்று. இன்னும் சில பெண்ணுக்கான ஒடுக்குறைகளை கலைந்து பொதுமைக்குள் வந்தும் வெற்றியில் அடையாளம் இழக்கின்றன. தோல்விகள் பேசப் படுகின்ற அளவுக்கு வெற்றிகள் நிராகரிக்கப் படுகின்றன. அடையாள மற்றுப் போகின்றவர்களை வெற்றியாக மட்டுமல்லாது கடந்து வந்த போராட்ட வலியின் , மறக்கப் பட்டு விட்ட வலியையும் பேசுவதும் பெண் எழுத்தாகும்
தன்னை உணர்த்த உரத்துச் சொல்லி தன் கலப்படமில்லா உலகத்தை பார்க்கத் தந்து ஆதிக்க மனோபாவனங்களற்று பொதுமைக்குள் வந்து விடப் பேசும் தன்னுலகம் பெண் எழுத்தாகும்
அப்படி சுயம்புவாய் எழும்பும் பெண் எழுத்துக்களை ஏற்கனவே உள்ள எழுத்துலகம் எப்படி பார்க்கின்றன வலியை சொல்லும் உலகைப் புலம்பும் உலகமிது என சொல்லிப் போகின்றது புதிதாய் படைக்கின்ற எழுத்துலகை தங்கள் கை பட்டியலுக்குள் இல்லாததால் செல்லாது என அறிவித்துப் போகின்றது. உணர்வுச் சிதைவுகளை உணர்த்தி விடும் படைப்புகளையும் ஆதிக்க சிந்தனையிலிருந்து , நிஜ விடுதலையை நோக்கி நகர்த்தி விடும் படைப்புகளையும் சில நேரம் திட்டமிட்டு நிராகரித்தும் சிலநேரம் இதுவரை இல்லாத பார்வைகளை முன் வைப்பதால் புரிந்து கொள்ள இயலாமலும் , சொல்லப் பட்டதுவை அதுவாகவே வாசிக்காதும் தன் இயலாமையை மறைக்க குற்றஞ் சாட்டியும் போகின்றது. உச்சரிக்கப் பட்ட வார்த்தைகள் உரைக்கப் பட்ட அர்த்தங்கள் உறியப் படாமலேயே மரித்துப் போகின்றன
இன்னும் சில நேரம் இன்றைய தகவலும் தொழில் நுட்பமும் வாசிக்கக் கிடைக்க கூடிய மேற்கத்திய ஐரோப்பிய பெண்ணியத்தை , இதுவரை இங்கு யாரும் சொல்லப் படாதது எனும் தளத்தில் முன் வைத்தும் அதே போல் மொட்டைப் புரிதலோடு படி எடுத்தும் கொண்டிருக்கின்றன.அவற்றை வாசிக்கும் போது அதன் சூழல் அதற்குப் பிண்ணிருந்த தேவை , இவையும் வாசிக்கப் பட்டிருக்கிறதா? அதை விவாதித்து அதை இந்த களத்திற்கு கொண்டு வந்திருக்கிறோமா? உலக இலக்கியத்தை எழுத்தாக வாசிப்பது இருக்கட்டும், உள்ளூர் சனத்தின் உணர்வுகளை செத்துப் போகாத படைப்பாளிகளாய் படைத்துத் தந்திருக்கிறோமா? காமத்தைப் பேசுவது இருக்கட்டும். ஒடுக்கப்பட்ட மனிதருக்கு சிதைக்கப் பட்ட உணர்வுகளுக்கிடை காமத்தைப் பேசுவது தான் இன்றைய தேவையா?
கோட்படு ரீதியாக உண்டான வரைவிலக்கணத்துள் நாளைய வாழ்க்கை ஏன் இன்றைய வாழ்க்கை யாவது சிக்குமா? கோட்பாடுகளை அச்சாக்கி அதில் பிரதிமை செய்து தரும் எழுத்துக்கள் , தன்னோடவே இருக்கும் தமிழ் சமூகத்தின் மண் சார்ந்த உணருதல்களை உள் வாங்குவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறோமா?
இன்னுமொரு முக்கிய விடயம் கோட்பாடுகளை வாசித்து மொழி பெயர்த்து தருபவர்கள் அவர்களுக்கே நேர்மையாக அதன் நியாய அநியாயங்களையும், சாதக பாதகங்களையும் எங்கள் முன் வைக்கின்றதா? பொதுவான போக்குகளையே வைக்கத் தவறுகின்ற இலக்கிய உலகு ஆணாதிக்க வாசிப்பிலேயே அவற்றை வாசித்து தருகின்றது.
பெண்ணை அவள் உடல் கடந்து அவளே வந்து விட முடியா தன்மையை நிறுவிப் போகச் செய்கின்றது இன்றைய புதிய புதிய தேவைகளுக்கேற்ப உண்மைகளை பேசுகையில் தான் புதிய கருப் பொருட்கள் கவிதையின் பாடுபொருளாகியும் புதிய வடிவாக்கங்களும் பிறக்குமே அல்லாது புதிதாய் எதைப் பேச எனத் தேடித் திரிவது போலிகளின் உற்பத்திக்கும் செயப் படு பொருளாக எழுத்து மாறுவதற்கும் வழி வகுக்கும். எப்பவும் எதையும் நாம் புதிதாகச் செய்து விடவில்லை. அந்தந்த கால கட்டங்களில் எழும்பும் வாழ்க்கைத் தேவைகளுக்கேற்ப புதிதாய் ஏற்கனவே இருந்தவற்றை மீண்டும் சொல்லிப் பார்க்கின்றோம் கருத்தியல் ரீதியான விவாதங்களில் இரு வேறு தளத்திலிருப்பதாகச் சொல்லிக் கொள்கின்ற யாவருமே ஒரே விசயத்தை இரு வேறு வாக்கியங்களில் சொல்லிப் பார்க்கின்றவர்களாகவே இருக்கின்றோம். அரை அளவு தண்ணீர் நிரம்பியிருக்கும் குவளையைப் பார்த்து ஒருவர் அரை குவளை நிரம்பியிருக்கின்றது இருக்கிறது என்கிறார். இன்னொருவர் அரை குவளை காலியாக இருக்கின்றது என்கிறார். ஆனால் எங்கள் முன்னால் சோம்பேறியாக நகர மறுத்து இருக்கின்ற நபரிடம் இன்னமும் அரை தம்ளர் தான் காலியாக இருக்கின்றது உடனடியாக நிரப்பு எனவும் அவநம்பிக்கையுடன் இருக்கின்ற நபரிடம் இன்னமும் நிரப்ப வேண்டியது அரை குவளை மட்டுமே என்றும் ஆக மொத்தம் முழுமையாவது குறிக்கோளாக இரு வேறு வசனங்களையும் பேசப் புறப்படுகின்றவர்களாகவே இருக்கின்றோம். இன்றைய சமுதாயம் , புலம் பெயர்தலை முன்னிட்டு அவ நம்பிக்கையுடனும், எதிர் மறை வழிபாட்டு மரபியலை கையிலெடுக்கும் சமுதாயமாகவும் மாறிப் போயிருப்பது கண்கூடு. வெற்றி அடைந்த முத்துலெட்சுமியை மறந்து விடுகின்ற நமக்கு ஜெயலட்சுமிகள் மறக்கப் படுவதே இல்லை.ஆக்கக் குரல்கள் பார்க்கப் படும் விதத்தை விட ,கலகக் குரல்கள் உற்று நோக்கப் படுவதன் அபாயம் அது பெரும் பான்மையெனும் தோற்றம் உடல் மொழியை பத்திரிக்கைகள், பதிப்பகங்கள் இதை எழுதுங்கள் என நிர்ப்பந்த்திப்பதிலிருந்து அது சந்தைப் பொருளாகி விட்டது தெரிகின்றது. புலி வருது , புலி வருது என அலறிய போலிகளுக்கு மத்தியிலிருந்து தான் , நிஜ புலியை கண்டவனும் அலற வேண்டியிருக்கின்றது. எனவே புலி வருகுது எனும் போலிக் குரல்களையும் ஒடுக்குவதும், புலியை எதிர்கொள்வதும் என பெண் நிலை வாதத்தின் வேலையாகவும் இருக்கின்றது.
ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலை நோக்கில் ரேகை சட்டத்திற்கெதிராக “ கட்டை விரலை வெட்டு” என்பதற்கும் பெண் ஒடுக்கப் படுதலுக்கெதிராக “ கர்ப்பப் பையை எடுத்துப் போடு” என்பதிலும் பெரும் வேறு பாடு இருக்கின்றது இரண்டாவதில் பெண்ணின் இயல்பான பெண்மையை காலியாக்கப் பட்டு விடுகின்றது விடுதலை வேண்டுமெனில் பெண் பெண்மையை இழக்கத்தான் வேண்டுமா? பெண் விடுதலை கண்டிப்பாக எந்த நிபந்தனைகளுமின்றி அமைய வேண்டும் இன்று மண் சார்ந்து பேசுகின்ற கோட்பாடுகள் கூட விடுதலை கிடைக்க கிடைக்க உதிர்ந்து விடும் என்பதுவே நிஜம் அந்த இழப்பை சந்திக்க கோட்பாடுகளை புதிய சிந்தனைகள் மூலம் வடிவமைப்பவர்களும் தயாராக வேண்டும்
பெண் வேண்டுவது பாலியல் சுதந்திரம் மட்டுமன்று பாலியல் தெரிவுக்கான சுதந்திரம், அதுவும் கூட பெண்ணின் ஒட்டு மொத்த விடுதலையில் நூறில் ஒரு பங்கு மட்டுமே பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு உண்மையான எதிர்ப்பாக இல்லாமல் கட்டுப்பாடற்ற தனி மனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறிவிடும் அபாயமும் இருக்கின்றது படு-களம்
எழுத்தின் சுதந்திரம் சொல்லி நண்பனானாய்
பெண்ணில்லையடி நீ ஆணென்று தோளில் கை போட்டாய்
பாலியல் சனநாயகம் பேசி நிகழக் கூடாதெனும் தருணத்தில் நிகழ்ந்து விட கூடிக் கலந்தாய்
மடியில் கட்டியிருந்த உண்மைப் பூனையை இனியும் மூட முடியாது வளைய வர விட்டாய்
கட்டிலின் கால்களுக்கு பின் விலங்கு போட்டு எனக்குத் திரையும் இட்டாய்
அந்யோன்யங்களுக்கிடையே எல்லாம் தந்தும் பெற்ற பின் அழகை தின்று அறிவை மறைத்து நீ ஆணாகிப் போன தருணத்தில் என் சமதளங்களை உடைத்து பள்ளத்துள் உனைத் தள்ளி சிலுவைகள் நடுகின்றேன்
உச்சி மலையில் தென்றல் மட்டுமே எனைத் தழுவ அனுமதித்து
குருத் தோலை திருநாளெல்லாம் புதிய சிலுவைகள் நடப் பட்டு ஆண்கள் அறையப் பட்டு காதலோடு வழி மீள
படுக்கையறை எல்லாம் நிராகரித்து போர்பயிற்சிக் களம் ஆக்கி கட்டிலின் கால்களில் கத்தி செய்கிறேன்
பெண்கள் காதலில் எப்பவும் காதலர்களாக “ஆண்கள்” இல்லாது போக
இன்றைய ஊடகங்களினால் பெரிதாக்கப் பட்டு விட்ட தோற்றம் தரும் பெண் எழுத்து.பாலியல் சுதந்திரம் எனும் மாய வலைக்குள் சிக்க வைக்கப் பட்டு ஒட்டு மொத்த விடுதலையை விட்டு வெறும் படுக்கையறைக்குள் முடக்கப் படும் முயற்சிகள் தானே அறியாமலும் அன்பின் பேராலும் தான் நிகழ்த்தப் படுக்கின்றன. அந்த நிகழ்த்தப் படுதல்களைத் தாண்டி உண்மையான உணருதல்களாய் எழுதப் படுகின்ற பெண் எழுத்து ஏற்கனவே நிறுவப் பட்டிருக்கிற அளவு கோள்களுக்குள் சிக்கவில்லை என்பதால் கவனிப்பாரற்று கிடக்கின்றன.
என்னைப் பொறுத்தவரை பெண் விடுதலை என்பது என் முன்னால் இருக்கும் சமூகமோ அல்லது ஆணோ நான் எதுவாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்ற போது நான் அதுவாக இல்லாது போதல் ஆகும் இலக்கிய உலகில் நிறுவப் படாவிட்டாலும் எழுத்தும் சிந்தனையும் எழுதுகின்ற அப்பெண்ணின் தொடர் இயக்கத்தில் வெளிப்பட்டு சூழ இருந்தவர்களை மெல்ல மெல்ல நிறம் மாற்றிப் போகும் . அந்த நிற மாற்றுதலே உண்மையில் அதன் வெற்றி அப்படியான எழுத்தில் பெண் மொழி மட்டுமல்ல, அப்படி பார்க்கப் புகுவது கூட ஆணாதிக்க சிந்தனையே அன்றி வேறல்ல அவளது குழநந்தைகளுக்கான பாடலில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே இருக்கின்றனர்.அவளது வாழ்வுக்கான பாடலில் விரிகின்ற உலகம் ஆணின் வெளியையும் அரசியல் பார்வைகளையும் நவீன யுகத்தில் கணிணி தொடுதல்களும், யுகாந்திர யுகாந்திர தொன்ம நுண்ணரசியிலை புதிதாய் சமைக்கின்ற காட்சிகளையும் உள்ளடக்கியதே. பெண் எழுதுவதாலேயே எப்பவும் பெண்ணிய எழுத்தென்று முத்திரை குத்தப் படுவதும் ஆபத்தானதே , அந்த ஆபத்தையும் கடந்து வாசிக்கும் போதும் வாசிக்கப் படும் போதும் தான் பெண் எழுத்து பிரபஞ்ச எழுத்தாக பார்க்கப் படும் அப்படி பார்க்கப்படும் அன்றைக்குத்தான் பெண் எழுத்து சரியாக பார்க்கப் பட்டும் எழுதப் பட்டும் இருக்கிறதென்பதைச் சொல்ல முடியும்
நீ நிறுவப் பார்க்கின்ற உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் எனதும் உனது மற்ற பொது உலகில் |
posted by mathibama.blogspot.com @ 3/05/2008 09:38:00 pm   |
|
|
|
கவிதையன்று |
சக்கர முட்கள் ஏந்தி சுழலும் காலம் திக்குகள் எட்டுத் தாங்கி வாழுது ஞாலம் மேலிருந்து கீழாக வந்து விடும் போதும் இருள்கள் ஒளியாக விழித்து விட்ட நாளும் மாறாது மறையாது கவியுது கிரகணமொன்று தாங்காது தவிப்பில்இருளைப்பேசும் குரலிது கவிதையன்று
அசோகர் நட்டு மரங்கள் வெறும் பாடங்களாச்சு நாலு வழிச் சாலையில் வேர்கள் குப்புற விழுந்தாச்சு மின்னல் கீற்று மொழியாய் வாழ்வது வேகமாச்சு கன்னல் மொழி வாழ்வு மட்டும் இருள் நிழலிலென்றும் கரையலாச்சு
குன்றாயிருந்த உயரங்கள் தூளாகிக் குறுகி சாலைக்கான ஜல்லியாச்சு குவாரியில் கசியும் ஊற்றின் ஈரங்கள் அலுமினிய உருக்கலில் மண்ணின் தாய்ப்பாலை அடைக்கும் புற்றாச்சு தாயாண்மை சமுதாயங்கள் தடங்கள் மாறலாச்சு பெண் ஊற்றின் ஈரங்கள் ஆதிக்க அடைசலில் சோற்றுக்குள் தவமாச்சு கால் சுடுகின்ற நெருப்பு தவக் காலங்களில் பெண்ணுக்கு எப்பவும் பூக்குழியாச்சு
பெரியவளான நாள் தொட்டு சிறுபிள்ளையாகவே முடக்கப் பட்டோம் "சிநேகிதிகளை" விற்பதற்கு வடிவிலும் அழகிலும் பெரியவளாக்கப் பட்டோம்
நீயும் வளர நானும் வளர பச்சை ஓலைகளுக்குள் சிறை வைக்க நான் மட்டுமென்ன உயிரற்ற உடலா
கட்டுவிரியனே கடிக்கையிலும் லோகிதாசனை தூக்கியபடி சுடுகாடு தேடிச் சந்திரமதிகள் திரிய அரிச்சந்திர பரம்பரைகள் பெருமை சூடிப் போக
வரம் வாங்கி வந்த எட்டு குத்து தாலியை எடுத்தெறிகின்றோம் வேலை பார்த்த மயானத்தில் விறகோடு எரிக்க
மறந்த படி வாழ எந்த காலம் தொட்டு பழக்கப் படுத்தப் பட்டோம்
அடிவயிற்று நெருப்புள்ளாகவே இருந்து இருந்து சூட்டின் சுவையை சுவைக்கப் பழகி விட்டோம்
சுடுவதைச் சொல்ல குளிர்விக்கப் பட வேண்டும்
காடு வெட்டி களம் சேர்த்து சுடுகின்ற சூரியனுக்கும் பொங்கல் வைத்த இனமே
எரிகின்ற சூரியனை பொட்டுக்காக சிறை வைத்த கொண்டை மீசை சுமந்த இனமே
உனக்காக சிறை வை கால் சுடும் நெருப்புதனை
தினமொரு சீதை விழுங்காதிருக்க சந்தேக இராமன் முளைக்காதிருக்க
காண முடியா காற்றாய் வெற்றிடமாய் ஆக்க முடியா வளியாய் நிரம்பித் ததும்பு
பிடிக்க முடியா தென்றலாய் குடித்து விட முடியா அமிர்தமாய் கடைதலில் கிளம்பு
அடைக்க முடியா ஒளியாய் கண்ணன் சுவைக்க முடியா அமுத சுரபி ஒற்றைப் பருக்கையாய் மணிமேகலையாய் மாறு
பார்க்குமிடமெல்லாம் நிறைவது கன்ணனல்ல கோபியர்களின் காதல்களென கோலடித்து ஆடு
தராசுகளில் நிறுக்க முடியா ருக்மணி பாமா காதல்களைச் சொன்ன பாரிஜாதங்களாய் திசையெங்கும் திரிந்து விடு
வானமே இல்லை சூரியன் உதிப்பதில்லை மறைவதுமில்லை நிலவுகள் தேய்வதில்லை சூரிய காந்திகள் சூரியனுக்காய் திரும்புவதில்லை
நீ கை வண்ணம் காட்ட அசுரமாவதில்லை கால் வண்ணம் காட்ட பாறையாகப் போவதுமில்லை
சாதிகள் இரண்டுமில்லை மனிதம் ஒன்றேதான்
எனப் புதிய சட்டங்கள் வரையும் சிகண்டி அவதாரமெடு தேவவிரதன்கள் அம்பைகளை விட வீரன்களில்லையென நிறுவ
முச்சந்தி விளம்பரங்கள் மூடி வைத்த நடுப்பக்க புத்தகங்கள்
தீவிர இலக்கியப் பெயரில் பெண்ணுடலை எழுதி விற்றுத் தீர்க்கும் காலச்சுவடுகள்
சிதைக்கப் பட்ட உணர்வுகளை உணரவிடாது உடல்களை முன்னிறுத்தி நகன்ற ஆதிக்க மனோபாவங்கள்
உணர மறுத்து உடல்களுக்குள் முடங்கி நடுங்கும் அடிமை மனோ பாவங்கள்
கண்ணகி எரித்த மதுரையில் மாதவிகளை மீட்டெடுக்கும் வெள்ளித் திரைகள்
முப்பத்து மூன்று சந்தவீதம் கேட்டபடியெ காலங்கள் செத்துப் போக சிலுவை அறையும் அரசியல்கள்
உயிர்த்தெழ முடியாதிருக்க உள் ஒதுக்கீடு கேட்டு கள்ளா பாலா புரியாது குழப்பும் சாணக்கிய குடுமிகள்
எத்தனை நெருப்புகள் காலடியில் தாமரைகளாக பழக்கத்தில்
ஆதிக்க அடிமை மனோபாவங்கள் பெரு வெடிப்பில் தூளாக
உடலை மையமிட்ட அரசியல்கள் உணர்வுகளின் வலியை அர்த்தமாக்கத் துவங்கும் பால் வெளிக்கு பயணப்படுத்தும் காற்று
நாளை பிறக்கின்ற பொழுதொன்றில் கால்சுடும் நெருப்பு வேர் விடும் பொறுப்பாகும் வான நெற்றியின் சூரியத் திலகமுமாகும் |
posted by mathibama.blogspot.com @ 3/05/2008 09:20:00 pm   |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|