சூரியாள்
|
Monday, November 24, 2008 |
திரைப்படங்களும் பெண்ணும் |
திரைப் படங்களும் , பெண்ணும்
நாமே அறியாமல் திரைப் படங்களில் நம் உணர்வுகளைச் சிதைத்து போகும் இன்னுமொரு விசயம் பெண் உடல். இதற்காக கவலைப் பட வேண்டியது பெண்கள் அல்லது பெண்ணியவாதிகள் மட்டுமல்ல. மொத்த சமூகமுமே அதன் பலனை அனுபவித்த வண்ணமே இருக்கின்றது.
பெண் உடலை காட்சிப் பொருளாக்கித் தந்து விடுகின்றது இன்றைய திரைப்படங்கள். திரைத்துறையைப் பொதுவாக சீர்படுத்துவது பற்றி நான் யோசிப்பதே இல்லை அது முழுக்க முழுக்க வியாபாரம். பிழைப்புக்கான வழி. ஒருவர் அதை லட்சியம் என்று எடுத்துச் செய்தாலும் , கூட்டு முயற்சியில் உருவாகின்ற ஒரு படம் தவிர்க்கவே முடியாமல் உடன் வேலை பார்த்த ஒரு பெரிய கூட்டத்தைப் பணத்தால் நிறைவு செய்து விட வேண்டிய பொறுப்பு இருந்து கொண்டே இருக்கும் வரைக்கும் அது வியாபாரம் என்பதைத் தாண்டி கலை உணர்வுக்குள் வந்து விடவே முடியாது என்பது என் அபிப்பிராயம் கலை உணர்வுகளை விற்றுப் பிழைக்கவே அத்துறை பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது . எனவே அதை சீர் படுத்துவது பற்றி நான் பேசப் போவதில்லை. ஆனால் அதைச் சந்திக்கும் மனிதனின் உணர்வுதனை அவனே அறியாது எங்கெல்லாம் தன் காலடிகளை வைத்து சிதைத்து விட்டும் போகின்றது என்பதை அடையாளம் காட்டவே விரும்புகின்றேன். ஆபாசம் என்பதற்கு ஆயிரத்தெட்டு வரை முறைகளை ஒவ்வொருவரும் சொல்லக் கூடும் . இயல்பாக இல்லாது வலிய சொல்லப் படும் அல்லது உறுத்தலாக செய்யப் படும் எல்லாமே ஆபாசம் தான். ஏற்கனவே இன்றைய பொருளியல் உலகு எல்லாவற்றையும் பொருளாக்கி விற்பனை வியாபாரமாக்கியதில் பெண் உடலையும் உணர்வையும் பொருளாக்கி விற்பனைக்கு தந்து விட்டது என்பதைக் கண்கூடாக சாட்சியங்களோடு பார்க்க நமக்குத் தருவது திரைப் படங்கள். அதனால்தான் பிளேடு விளம்பரத்திற்குக் கூட பெண் உடல் தேவைப் படுகின்றது.பெண் உனைக் காதலிக்க வேண்டுமா எங்களது body spray உபயோகப் படுத்துங்கள் என கூசாமல் கோர முடிகின்றது விளம்பரங்களால். இலங்கையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஒரு நண்பர் கேள்வி கேட்டார். திரைப்படங்களுக்கு எதிராய் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று? நான் சொன்னேன், போராட்டம், தார் பூசுவது இதையெல்லாம் விட பெண் உடல் பொருளாக பார்க்கப் படுவதற்கு எதிரான கருத்தியலை உருவாக்க வேண்டும். அதை என் இலக்கியங்கள் கவிதைகள் அறிவுத் தளத்தில் செயல் படுத்தும் என்றேன்.பெண் என்பவள் உடல் மட்டுமல்ல என்பதும் நிறுவப் பட வேண்டும். இந்த கருத்தியல்கள் இயக்க தளங்களில் இருப்பவர்களால் சுவீகரிக்கப்படும் ஆனால் அதே திரை நாமே அறியாமல் நமது உள்ளத்து உணர்வுகளை இன்று மாற்றியிருக்கின்றது. பெற்றோர்களுக்கு குழந்தையின் உடலும்,(அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் தான்) தம்பதியினருக்கு அவரவர்களது உடலும் தவிர்த்து அந்நிய உடலை பார்க்க நேர்ந்தால் கூசுகின்ற நாம் அல்லது பார்வையை விலக்கிக் கொள்கின்ற நாம், எந்த வித தயக்கமும் இன்றி இன்று திரையில் அதில் வருகின்ற எல்லா உடல்களையும் ஆடைகளைந்து பார்ப்பதை இயல்பாக்கி வைத்திருக்கின்றோம். முன்பெல்லாம் எப்பவாவது வரும் ஆடல்காட்சிகளில் கூட பெண் உடலை பார்க்கக் கூசுகின்ற குடும்பச் சூழல், இன்று தவிர்க்க முடியாமல் படமுழுக்க வரும் அரை குறை காட்சிகளை இது இயல்பு என பார்க்க வைத்திருக்கின்றது. விதி விலக்குகளை எல்லாம் புதிதாய் காண்பிக்கின்றோம் என்று எல்லாரும் அறிய காண்பித்து விடுவதால் எதுவும் தப்பில்லை எனும் மனோ நிலை பொதுப் புத்தியாக மாறுவதற்கு வழி சமைத்து விடுகின்றது.அவர்கள் காண்பிக்கின்ற விதி விலக்குகளை பார்த்து விட்டு எல்லாரும் அதேபோல் இருக்க முயற்சித்து மலினப் படுத்தி விடுகின்றார்கள் அதில் பேசப் பட்ட விசயத்தை இதனால் எத்தனை மூடி மறைத்தாலும் எப்படி உடை உடுத்தினாலும் காமிராக் கண் வழியாக வக்கிரமாக பார்க்கச் சொல்லிக் கொடுக்கின்ற வேலையை தொடர்ந்து செய்து விடுகின்றன.இது ஆரோக்கியமான போக்கு அல்ல . 3வயதுக் குழந்தைகள் கூட பள்ளியில் நண்பர்களிடையே என்ன என்று தெரியாமலேயே காதல் பற்றி பேசுவதும், பெண் குழந்தைகளை கட்டி அணைத்து காதல் என்று செய்யத் துணிவதையும் பார்க்க நேருகின்ற போது திரைப்படங்கள் எவ்வளவு ஆழமாக சிதைக்கின்றன என்று யோசிக்க வேண்டியிருக்கின்றது. நாம் தருவது எப்படி இந்த சமூகத்திற்கு போய் சேரும் என்ற கணிப்பு இல்லாது , தீர்மானம் இல்லாது கலைமற்றும் அறிவுத் தளத்தில் செயல் படுபவர்கள் செயல்பட முடியாது. கூடாது. இதைச் சொல்லும் போது நான் கலாசாரக் காவலராக முத்திரை குத்தப்படக் கூடும்.. என்னைப் பொறுத்தவரை கலாசாரம் என்பது மனிதனோடு மனிதன் இணக்கமாக வாழ்வதற்கு நடைமுறையில் உருவாகும் செயல்பாடுகளே அன்றி , வெற்றுச் சடங்குகள் கலாசாரம் அல்ல.அப்படியான கலாசாரங்களை எப்பவும் பேண விரும்புபவளாகவே இருப்பேன். பலர் சடங்கு முறைமைகளை கலாசாரம் என்று நம்பிக் கொண்டு கலாசாரம் எங்களை அடிமைப் படுத்துகின்றது என்று வாதிடுகின்றனர்.. சடங்குமுறைமைகள் கலாசாரம் அல்லவே.
இதில் வெள்ளித் திரை மட்டுமல்ல , சின்னத் திரை இன்னும் மோசமாக இயங்கி வருகின்றது. பள்ளிக் கூடக் காட்சிகள், ஒரு பெண் 4 மாணவர்கள், ஒருவருக் கொருவர் அவளை எனக்கானவள் என்று உடைமைப் பொருளாய் சித்தரிக்கும் நிகழ்வை இன்னும் எத்தனை காலம் “அன்பெண்று” சொல்லிக் கொண்டிருக்கப் போகின்றார்கள். எனக்கென்று வீடு இருக்கின்றது எனக்கென்று ஒரு கார் இருக்கின்றது என்பது போல் எனக்கென்று ஒரு பெண் இருக்கின்றாள் என்று உடைமைப் பொருளாய் மாற்றி விடுகின்ற செய்கைகளை அன்பின் பேராலேயே நிகழ்த்தி விடுகின்றனர்.
என் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்த ஒரு இளம் மாணவி( செவிலியர் பயற்சிக்கென வருகின்ற மாணவி) ஒரு நாள் வாசலுக்குப் போவதும் வருவதுமாக வேலை சிரத்தையின்றி இருக்க , அழைத்து என்னவென்று கேட்டேன், முதலில் சொல்ல மறுத்த அவள், தன் காதலன் வாசலில் இருப்பதைச் சொன்னாள். இங்கு எதற்கு வந்திருக்கின்றார். என்று கேட்க. நான் யாருடனும், குறிப்பாக ஆண்களுடன் பேசக் கூடாது என்று சொல்கிறார் அக்கா என்றாள் அதிர்ந்து போனேன். காதல் தொடக்கம். இதிலேயே என்னைத் தவிர அயலாடனும் பேசாதே என்று சொல்லும் இளைஞன் , அதிலும் அதை வேவு பார்க்க வேலை பார்க்கும் இடம் வரை வரும் இளைஞன், நாளைய வாழ்க்கை பற்றிய பிரமிப்பு எனக்கு வர எடுத்துச் சொல்கின்றேன். அந்தப் பெண் ஒரே வார்த்தையில் சொல்கின்றாள். என் மேல் இருக்கின்ற பாசம், அவனுக்கு மட்டும் தான் நான் என்று சொல்வது எனக்கும் பிடிக்கின்றது என்று. திரைப்படங்கள் தருகின்ற ரொமாண்டிக்கான இந்த நினைப்பிற்குள் இருப்பது தற்காலிகமான சுகமாக இருக்கலாம். ஆனால் யதர்த்தம் வேறு விதமானதாயிற்றே தான் வைத்தியம் பார்க்க வந்த இடத்தில் அவளைக் காதலித்தது போல் இன்னொரு முறை வேறு யாரும் காதலித்து விடுவார்களோ , அவளும் அதையும் நம்பத் துவங்கி விடுவாளோ என்ற பயமும் அவனை அவளை பத்திரப் படுத்தும் மனோ நிலைக்கு தள்ளுகின்றது.அந்தப் பத்திரப் படுத்தலில் தன் சுயம் தொலைந்து போவதை காதல் அன்பு என்று சொல்லி பூசி மறைக்கப் பார்க்கின்ற ஆண் உலகை வாசித்து விட முடியாதவளாக பெண் இருப்பை வைத்திருப்பதில் இந்த திரைப் படங்கள் மிக முக்கியமான பங்காற்றி இருக்கின்றன. வித்தியாசமான திரைப்படமாய் கலை இலக்கிய அமைப்புகளாலும் தூக்கிச் செல்லப் பட்ட படங்களும் கூட அப்படியான வாழைப்பழ ஊசி ஏத்தலாய் சில கருத்தியல்களை பெண்ணுக்கு எதிராக செய்து விடுகின்றன. ஆட்டோகிராஃப் எல்லாரும் விரும்பி பார்த்த படமென்பதற்கு அப்பால் ஒரு ஆண் பல பெண்களை நேசிப்பது என்பது இயல்பு என்பதாய் பெண் பொதுப்புத்தியில் நுழைத்து விடுவது துரதிர்ஷ்டமே. பெண் உடல் மழுங்கடிக்கப் பட்ட வெற்றுப் பொருளாகப் பார்க்கப் படுவதிலிருந்து தவிர்க்க, எமது முன்னோர்கள் தந்திருக்கும் உறவுக்களுக்கிடயேயான புனிதத்தை வெற்றுச் சடங்குகளுக்குள் சிக்காது மீட்டெடுக்க வேண்டியது மிக அவசியம் உதாரணமாக ஒரு துக்க வீட்டில் உறவை இழந்த துக்கம் தவிர்க்க , இன்னும் பல உறவுகள் இருக்கின்றோம் என்பதை உணத்தவே உறவுகள் வந்து துணி எடுத்துக் கொடுத்து தன் அருகாமையை தெரிவிக்க சொல்லிக் கொடுத்தனர் நம் முன்னோர். ஆனால் துணி எடுத்துக் கொடுத்தலை வெற்றுச் சடங்காக்கி அதில் கௌரவம், ஆணவம் , தன் முனைப்பு எல்லாம் வந்து “ உறவுகளின் அருகாமையை உணர்த்துகின்ற நெகிழ்வுச் சம்பவமே” நிகழ்ந்து விட முடியா தளத்தை இன்று உருவாக்கி இருக்கின்றது அந்த சடங்கு கலாசாரத்தை தூர எறிந்து விட்டு உறவுகளின் புனிதங்களை பேணும் கலாசாரங்கள் தகவமைக்கப் படுதலும் இன்றைய மனிதம் பேணும் வழிகளாக அமையும். நன்றி அதிகாலை.காம்Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 11/24/2008 10:00:00 am   |
|
|
Wednesday, November 12, 2008 |
சுருட்டப் பட்ட வீடும், விரிக்கப் பட்ட மைதானமும் |
(உயிர் எழுத்து இதழில் வெளி வந்த சிறுகதை) சுருட்டப் பட்ட வீடும், விரிக்கப் பட்ட மைதானமும்
திடப் பொருளென சொல்லப் பட்ட அறைச்சுவர்கள் நெகிழ்ந்து வித வித வடிவங்களெடுப்பதை என்றாவது சந்தித்ததுண்டா நீங்கள்? அடிக்கடி அப்படியான விநோதங்களுக்குள் திமிங்கல முழுங்களாய் நான் போக நேர்ந்து விடுவதுண்டு. துளியும் சேதாரமின்றி விழுங்கி பயணப் பட வைத்து அந்த அறைகளென சொல்லப் பட்டவைகள் எனைச் செரிக்காமல் துப்பி விடுவதும் உண்டு.
இதோ இந்த இருவர் விளையாட்டுகளில் நாலு சுவர்களுக்குள்ளான இந்த மையக் கூடம் விநோத உருவங்களாக அவர்கள் நினைக்கின்ற வடிவமைக்கின்ற எல்லாமாகவும் மாறிய படி இருந்தது. சமையலறையிலிருந்த என் தாளிப்புச் சத்தங்களோ, குழாயில் தண்ணீர் வரும் சப்தமோ குக்கரின் கூவலோ அவர்களை அவர்களின் உலகம் விட்டு தரையிறக்குவதே இல்லை. இது பள்ளி விடுமுறை. அடுத்த வருடம் தொட்டு பெரியவனின் இந்த வெளி புத்தகங்களுக்குள் அதன் எழுத்துக்களை எண்ணச் சொல்லி சிறைப்பிடிக்கப் படலாம் அரசாங்கத் தேர்வை முன்னிட்டு. அவன் திறமைகள் வெறும் எண்களாலேயே வாசிக்கப் படலாம்.அவன் எதிர்காலங்கள் அந்த சிறையிருப்பை அவன் சரியாகச் செய்து முடித்து நன்னடத்தை சான்று வாங்கி வெளிவருவதை முன்னிட்டு வாழ்வின் முக்கிய திருப்பமாக மாறக் கூடும்
விரும்பியோ விரும்பாமலோ கூடிருப்புக்குள் அவனைத் தள்ளியாக வேண்டிய நிர்ப்பந்தம் கொஞ்ச காலம் அவனது பரந்த வெளியை மறக்க வைக்கக் கூடும்
இதோ என் சிந்தனைகள் அவ்வப் போது இடைவெட்டினாலும் காதுகள் அடுத்த அறையினில் அவர்களது உரையாடலில் உருவாகிய உலகத்திற்குள் எனையும் இழுத்துப் போட்டுக் கொள்கின்றது. நாற்காலி கவிழ்த்திப் போடப் பட்டு விண்வெளி பயணத்துக் காணதாய் மாறியிருக்க இல்லாத எதிரிகள் அறையெங்கும் நிறைய, நாலாபக்கம் என் சமையலறைக் கரண்டிகள் குண்டு துப்பும் துப்பாக்கியாகி மோதி சிதறடித்துக் கொண்டிருந்தது. அறை வான வெளியாக இருவரும் மிதந்து கொண்டிருந்தார்கள். புதிது புதிதாய் சாகசங்களை நிகழ்த்தத் தேவையான எதிரிகளை வலுவான சிலநேரம் பலமற்ற எதிரிகளை தாங்களே உருவாக்கிக் கொண்டு அதன் வலைக்குள் வீழ்ந்து செய்வதறியாது திகைத்து புதிய ஆயுதங்களையும் இரகசியங்களையும் கண்டு பிடித்து பலம் பெற்று மீண்டும் யுத்தம் நடத்தி எல்லாம் சிதறடித்து தரையிறங்கினார்கள். சின்னவனுக்கோ இறங்கிய பிறகு சந்தேகம் எழுந்தது. இன்னமும் ஒரு எதிரியை விட்டு விட்டு வந்ததாக மீண்டும் களமேறி பறந்தான். நாற்காலி இருந்த இடத்திலேயே இருக்க அவன் எதிரியின் இடத்திற்கு போய் சேர்ந்து தீர்த்து விட்டு வெற்றியின் களிப்பும் போரின் சோர்வும் முகத்தில் அப்ப தரையிறங்கினான். இறங்கிய இடமெங்கும் புழுதி பறக்க அதற்குள்ளிருந்து மெல்ல அவன் வெளிப்பட்டான். பருப்பு குக்கர் விசிலடிக்க , தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நான் அடுப்பை குறைத்து வை குமார் என்று சொல்ல , அவனோ தான் அடுத்த தாக்குதலுக்கு தயாராயிருப்பதாய் சொல்லி தம்பியை அடுப்பை குறைடா செல்வம் எனச் சொல்ல , அவனோ புதிய எதிரி மீண்டும் கண்ணில் தெரிவதாயும் எதிரியின் தாக்குதலில் தன் களம் நிலை குலைவதாயும் சொல்லி மீண்டும் அறையை விண்வெளியாக்கி மறந்து போக நான் வீட்டின் தரையிருந்து பிடுங்கிக் கொள்ள முடியா வேரோடு , தொலைபேசியை காத்திருக்கச் சொல்லி விட்டு அடுக்களைக்குள் பாய்ந்தேன். அடுப்பின் கோபம் குறைத்து , வாசுகி காலம் தொட்டு நான் விட்டு வந்த இடத்திலேயே நின்றிருந்த தொலைபேசியோடு தொடர்ந்தேன்.
எனது உரையாடல் முடித்து வெளியேற இதுவரை பால் வெளியாய் , கருந்துளையாய் இருந்த வெளிகள், போரின் எச்சங்களை சுமந்ததாய் இருந்த அந்த வெளி தூள் தூளாகியிருந்தது. விண்வெளிக் கலங்கள் கழிந்து கிடந்த . சனிக் கிரக குப்பைகள் சுமந்த வளையமாய் வீடு சுழன்று கொண்டிருந்தது, இப்பொழுது வாகன இரைச்சல் எங்களது முக்கிய படுக்கையறைக்குள்ளிருந்து கேட்டது. இரைச்சலோடு, புகையின் திணறுலுமாக நிரப்பியது அந்த அறையை வாகனங்களின் துடிப்பும் சுவாசமும். படுக்கை கார்களின் ஓடு தளமாயும், தலையணைகள் அவை ஏற முடியா சாகச மலைக் குண்றுகளாகவும் மாறியிருந்தன.நல்ல நிலையிலிருந்த சில கார்களும் சில டப்பாக்களும் போட்டிக்குத் தயாராகியிருந்தன . என் குரல் அவர்களைத் துரத்துகின்றது . “ ரெண்டு பேரும் வீட்டை தலை கீழா கவுத்து விட்டு போனா என்ன அர்த்தம் அதது இடத்துல வையுங்கடா” என் குரல் அவர்களைத் துரத்தியதில் தோற்றுப் போய் பின்தங்க கார்களின் இரைச்சலில் கரைந்து போகின்றது அவர்கள் உலகத்தை தொட்டு விட முடியாமலேயே.
எல்லாக் காயும் நறுக்கி முடித்திருக்க கை துடைக்க துண்டெடுக்க வெளி வந்த நான் விண் வெளியாக இருந்த மையக் கூடத்தை மீண்டும் வீடாக்கி விட்டும் போகின்றேன். என் சின்ன சின்ன பொருட்களின் இடமாற்றங்களில் இதுவரை பால்வெளிப் பாதையாக இருந்த கூடம் , பளிங்கு சுமக்கும் அறையின் மூச்சு முட்டும் வெளியாய் மாறிச் சுருங்கிக் கொள்கின்றது. என் அழுத்தப் பிழிதலில் அறைவிட்டு வெளித் தள்ளப் பட்ட பிள்ளைகளின் உலகு வெள்ளமென மாறி வெளியே ஓடுகின்றது.
* இன்னும் ஒரு நாளை நீங்கள் எங்களோடு செலவிடத் தயாராகின்றீர்கள். காலையிலேயே வீடு இன்று அவர்களுக்கானதாய் மாறத் தயாராகியிருந்தது.கூடத்தில் வந்தவர்கள் அமரவென்று போடப் பட்டிருந்த மெத்தை நாற்காலிகள் பதுங்கி இடந்தரத் தயாராயின. ஆடுவதற்கென்று போடப் பட்ட நாற்காலி ஆடாமல் நிறுத்தி வைக்கும் வசத்தில் ஒதுக்கப் பட்டிருந்தது. உடையும் பொருட்கள், வீடு மைதானமாகிக் கொண்டிருப்பது உணர்ந்து தாங்கள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல என தங்களை அடுத்த அறைக்குள் நகர்த்திக் கொண்டன.இருவரும் ஒவ்வொருவரும் 11 பேருக்கும் சமமாய் தன்னை விரித்துக் கொண்டார்கள் ஆடுகளத்தின் பரப்பு அறை சுவர்களில் பட்டு அதன் மேலேறி விரிந்தது ஒரு பக்க சுவர் ஸ்டெம்ப் ஆகியிருக்க, 2 ஓட்டங்களுக்கு ஒரு எல்லையும் 4 ஓட்டங்களுக்கு ஒரு எல்லையும் 6 ஓட்டங்களுக்கு ஒரு எல்லையும் என ஓடாமலேயே ஓட்டங்கள் சாத்தியமாக புதிய எல்லைகள் குறிக்கப் பட்டு விளையாட்டு சட்டமாகின,
நான் மைதானத்திலிருந்து சமையலறைக்குள் போய் விட்டு மீண்டு வரும் போது 6 நபர்கள் ஆட்டம் விட்டு வெளியேறி 150 வது ஓட்டம் ஓடப் படாமலேயே ஒருவன் கணக்கில் ஏறியிருந்தது. இருந்தது ஒரே பந்து . பந்து தீரப் போவதாய் செல்வம் சொல்கின்றான். அடுத்து அவன் தீர்த்து போன பந்தை குமார் மீண்டும் வளர்த்து முதலிலிருந்து வீசத் துவங்குவான். நானோ படுக்கையறையில் நேற்றைய அழுக்குகள் துவைத்து உலர்த்தப் பட்டிருந்ததை மடித்து அவற்றின் பரப்பினை குறைக்கும் முயற்சியில் மூழ்கிப் போகின்றேன். தீர்ந்து விட்டதாய் நினைத்த அழுக்குகள் படுக்கை மேலே துவைத்து உலர்ந்த உருப்படிகளாகி இடத்தை நிரப்பியிருந்தன. மடிக்க மடிக்க அது தன்னைச் சுருக்கிக் கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றது. நாளை இவையே மீண்டும் விஸ்வரூபமெடுத்து தீராத அழுக்குகளாய் கூடை நிரப்பும். மடித்த ஒழுங்கிலில்லா ஆடைகள் அலமாரிக்குள் தங்களைப் புதைத்துக் கொண்டன. அடுக்கப் பட்ட அவை பல்வேறு வர்ணங்களில் வரிசைக் கோடாய் மாரித் தெரியத் துவங்க , மீண்டும் மைதானத்துள் இடை குறுக்கிட வேண்டி யிருந்தது.சொல்லிப் போகின்றேன். “திருப்பி வீடா மாத்தி வைக்கலை பாத்துகுங்க”
பறந்து வந்த பந்து மட்டையில் பட்டு சுவரில் தெறிக்கின்றது. இதுவரை இருவருக்குள்ளும் இருந்த நடுவர் காணாமல் போய் விட்டாரா என்ன? ஒரே சல சலப்பு
நான் குச்சி மாரும் , பினாயிலும் கையிலெடுத்து இன்னொரு திசை வழி மைதானத்தை ஊடுருவுகின்றேன்.கழி வறைக்குள் திருகி விட்ட தண்ணீர் என் காதுகளில் நிரம்பி வழிய முழுக்க அதன் சுவராகி மட்டும் போகின்றேன்.தண்ணீர் ஈரத்தில் விடியலில் கழுவிய முகமாய் புதிதாய் காட்சி தர , கதவைத் திறந்து பினாயில் வாசம் அறையெங்கும் நழுவ விட்டு வெளியேற மைதானத்தை கடக்க நேருகையில் மைதானம் ஆளற்றுக் கிடக்கின்றது.படுக்கையில் குமாரும் செல்வமும். குமாரது கைகளில் ஹாரி பாட்டர் தடிமனான புத்தகம் அவன் நெஞ்சில் உட்கார்ந்திருந்தபடி சாய்ந்து நிற்கின்றது.செல்வமோ குப்புறப் படுத்திருக்கின்றான். முதுகு குலுங்கிக் கொண்டு இருக்கின்றது.கையிலிருந்ததை அதது இடங்களில் செருகி விட்டு மீண்டும் ஆளற்ற மைதானத்தைக் கடக்கின்றேன். என்னாச்சு என் கேள்விக்கு பதில்களற்று கிடக்கிறது படுக்கை. சுருட்டப் பட்ட கம்பளத்திற்குள் என் வீடு மூச்சுத் திணறி கிடக்கின்றது அதன் திணறலின் சப்தம் என்னுள்ளேயிருந்தும் கேட்டுக் கொண்டிருந்ததால் மைதானம் முழுக்க 100 பந்துகள் பட்டுத் தெறிப்பது போல் மனம் பதறி தப்பிக்க முயலுகின்றது. எல்லாப் பந்துகளையும் நிறுத்தி விட என்னில் முளைக்கின்றது நூறு கைகள்.ஆனால் அவை தரையில் பட்டுத் தெறித்த பந்துகளின் ஓசை காதுகளில் அறைய வேறு வழியின்றி மைதானத்தை வெளித்தள்ளி வீட்டை விடுவித்து கம்பளத்தை நடுவில் விரித்து , நானும் அதன் மௌனத்தில் எனை கரைத்துக் கொள்கின்றேன்Labels: சிறுகதை |
posted by mathibama.blogspot.com @ 11/12/2008 08:28:00 pm   |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|