சூரியாள்
|
Monday, January 19, 2009 |
தூர தேசம் போன நண்டு |
வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும் வாழ மட்டுமே வைக்கும் பூமியாய் எப்பவும் இருக்கும் எம் தாய்த்திருமண்ணின் தை மாதப் பிறப்பில் வாழ்த்தியபடி வணங்குகின்றேன்
கவியரங்கில் தமிழ்ப் பொங்கலிட துவங்குகின்றேன்.
ஆடியிலே பிறந்த மண்ணாய் பச்சை ஆடையின்றி தவழுவாள் முதல் முடி இறக்கியவளாய் நாற்று துளிர் விட பொக்கை வாய் சிரிக்க நடை பயில்வாள்
கெண்டை துள்ள பாத்தியில் அல்லி மொக்கு விரிக்க வரப்பு நீர் கொலுசாய் கிணுகிணுங்க
காற்றில் ஆடும் தாவணியாய் பசுமை அசைந்தாட குமரியாய் ஏற்றத்தின் அசைவில் பந்தாடுவாள்
நரை கூடி குமரித் தோற்றம் தொலைத்த எம் ஔவையாய் எல்லார் பசி தீர்க்க தையில் வீடு வருவாள் நாங்களிடும் படையல் வாங்க
இளமையும் மூப்பும் நாளின் இருபொழுதாய் தாங்கி தினம் தினம் விடியலில் புதிதாய் பிறந்தவள் இன்றெங்கே
பிசைஞ்ச மண்ணெடுத்து பானையாய் சுட்டெடுத்து குத்தலரிசி களைஞ்சு விட்டு பொங்கலாய் பொங்கியவள் குக்கர் விசிலுக்குள் காணாமல் போனதெங்கே
ஏட்டைத் தொட்டவன் எனை மறந்தான்-களத்து பாட்டைப் படிச்சவன் பாவையாய் போனான் நடவு நட்டபடி குனிஞ்சிருந்த உடம்பு திரையைப் பார்த்து குந்தியபடி கரையுது மென்பொருளில் கோட்டை கட்டி மௌசே இயக்கமாகிப் போனது
மனிதன் ஒரு பக்கம் இறுக இயற்கை மறுபக்கம் கருக செல்லாத நாணயமாய் வாழ்வு
வெள்ளம் ஓடிய ஆறுகள் வெள்ளத்தின் போது மட்டுமே விழிச்சிருக்கு
பள்ளம் பார்த்து நிரம்பிய நீர்கள் பள்ளமாகவே விலா எலும்பு காட்டி வாடிக் கிடக்கு
வரப்பு நண்டு ஒன்று தூர தேசம் கிளம்புது
மாறும் வாழ்க்கை மாற்றத்தை மூட்டையாய் தோளில் போட்டு
தேசாந்திரம் போன நண்டு நிறுவனப் படிகளில் ஏறியபடி கேள்வி கேட்குது
அலைபேசி, மகிழுந்து அணு உலை, மென்பொருள் நிறுவனங்கள் மெல்ல மெல்ல விதைக்கப் படுது அயலக பறவைகள் கூடு கட்டவென்று
சூரியனை தொலைத்த குளிர்விக்கப் பட்ட அறைகள் சூரியப் பொங்கலிட ஏன் வேணும்
சக்கரங்களை காலில் கட்டி புகை துப்பி மறையும் வாகனங்கள் மாடுகளுக்கு ஏன் நன்றி சொல்லனும்
சுவர்களுக்குள் சுருங்கி தொலைக்காட்சிக்குள் முடங்கி தொடர்கள் உறவுகளாக மாறி விட காணும் பொங்கலில் ஆற்றங்கரை ஏன் நிறையனும்
கட்டிய அணைகளில் நீர் சிறையிருக்க முடிச்சிட்ட தாலியில் பெண்ணும் சொத்தாக
விளைஞ்ச நெல்லெடுத்து சுட்ட மண்ணெடுத்து புது வெள்ள நீரெடுத்து கரும்புருகிய வெல்லமெடுத்து பொங்கலிட ஏன் வேணும்
தேசாந்திரம் போன நண்டு நிறுவனப் படிகளில் ஏறியபடி கேள்வி கேட்குது புதிது புதிசாய் கேள்வி கேட்குது
உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிட பயங்கரவாதங்கள் பக்கத்தில் அவ்வப்போது பார்த்திட்டோம்
கடல் கடந்த போருக்கு கண்ணீரால் தூதனுப்பினோம் தேர்தலும் ஒரு வெள்ளாமையாக தார் பாய்ச்சி கட்டிய வேட்டி தரை புரள ஜிப்ஸி ஏறி கூப்பிய கையோடு போனோம்
நிறுவனப் படிகளின் குளிரில் ஆயிரமாயிரம் அறிவியல் அதிசயங்கள் உலகத்திற்கே போட்டியாய் விளைய எட்டுக் கையிலும் அலைபேசியோடிருந்த நண்டு சிறு வயிறு பசியெடுக்க பத்தும் பறந்து கிறங்கி விழ புதுப் பதில்கள் உரைக்குது
அவரவர் வட்டில் சோறு அவரவர் முன்னிருக்க சமாதானமும் சந்தோசமும் நிறைஞ்சிருந்தது அது அந்தக் காலம்
பண்டங்களுக்கு பண்டமே மாற்றாக பணங்களே விலை போனது அது அந்தக் காலம்
ஆக்கிரமிக்கவும் , அடங்கிடவும் ஆளின்றி விடுதலையே வாழ்வாகியிருந்தது அது அந்தக் காலம்
ஒரு வட்டில் சோறு இருவர் முன்னிருக்க குரங்கு உபாயங்கள் முளைச்சிடுது சோறு விளைவித்த மண் மண் கையிலெடுத்திருந்த பெண் பெண்ணை கொண்டாடிய ஆண் முதல் அதிகாரமும் அடிமையும் முளைவிட்டது
ஒரு வட்டில் சோறு நால்வர் முன்னிருக்க அணி பிரிந்து ஆள் சேர்த்து போர் முன்னெடுப்புகள் துவங்குது
காலம் பார்த்து கற்ற நண்டு புதுக் கீதை சொல்லுது பார்த்தன் இன்றி தேரும் இன்றி பைபிள் எழுதிப் போகுது கன்னி மரியுமின்றி, உயிர்த்தெழுதலுமின்றி குரானும் வாசிக்கப் பழகுது
படிச்சவனெல்லாம் பார்க்கவேணும் தொலைக்க முடியா தொழில் விவசாயமுன்னு நினைக்கவேணும்
முப்பாட்டன் குடுமியாகவும் இல்லாம நவீன பங்காகவும் மாறாம மென்பொருள் அறிவையும் விளை பொருளுக்கு கொண்டு வரவேணும்
பழம் பெருமை பேசும் திண்ணைகள் அழிய புதுப் பெருமைகள் பிறக்க வேணும்
பேயாத மழையில் பயிர்கள் மாட்டுத் தீவனமாக பேய்ஞ்சு கெடுத்த மழையில் எதுவுமில்லாதாகிப் போக கோவணாண்டியாய் நின்ற விவசாயிக்கு புத்தாடை தரும் நிலமாய் பருத்தி புடவையாய் காய்க்க வயக்காட்டை மாத்த வேணூம்
அதிகாரம் தொலைத்த நிறுவன அறிவுகளை விதை நெல்லா மாத்த வேணும் வரப்புகள் தொலைத்த வயக்காட்டுப் பரப்புகளை பெருந்தொழிலாய் இளைஞன் கையிலெடுக்க வேணும்
கார் தொழிற்சாலைகள் விவசாய கருவிகளை வடிவமைக்கட்டும்
அணு உலைகள் பேயாத மழையிலும் பெருகும் விளைச்சலுக்கும்
பேஞ்ச மழையிலும் நிறையும் குளத்துக்கும் அடி கோலட்டும்
நாலு வழிச் சாலைகள் நகரங்களை மட்டுமன்றி மனிதர்களின் உழைப்பை இணைக்கட்டும்
வயிறு நிறைஞ்சா பூர்வ குடியா, புலம் பெயர்ந்தவனா சண்டையிருக்காது
வயிறு நிறைஞ்சா உன் நாடு , என் நாடு பிரித்தலுமிருக்காது
வரைபடக் கோடுகள் நிர்வாகத்திற்கேயன்றி மனிதனின் நினைப்பிலிமிருக்காது
தனித்துவங்கள் பெருமைக்கா, பொதுமைக்கா குழப்பமிருக்காது
வயிறு நிறைஞ்சா சயனைடு தாலி கட்டி தீவிரவாதம் தேடித் திரிய நினைப்புமிருக்காது
வயிறு நிறைக்க மண்ணிருந்தா அதை உழைப்பில் நிறைக்கும் மனமிருந்தா பயிரு வளர்க்கும் திறமிருந்தா அதை பகிர்ந்து உண்ணும் தீர்க்கமிருந்தா
பழசும் புதுசும் இணைஞ்சிருந்தா அதை பழக்கும் பொது அறிவிருந்தா இளமை முதுமை பகிர்தலிருந்தா அதை கலக்கும் பக்குவம் அறிந்திருந்தா
உன்னை ஜெயிக்க உலகம் ஜெயிக்க ஆசை வராது தன்னை பெருக்க, தண்ணீரும் அடக்க தேவை வராது ஆயுதம் பிடிச்சு, ஆளை அழிக்கும் அறிவும் வராது பெரியோரென்றும், சிரியோரென்றும் பேதம் வராது
வயிறு சொன்ன வேதமுணர்ந்த நண்டு மண்ணில் இறங்குது கதிரறுப்பின் பின் பொங்கலிட கனவு காணுது அதன் விதைப்பில் மணியாக வாழ்க்கை விளையுது
கவியரங்கில் தமிழ்ப் பொங்கலிட தானும் கிளம்புதுLabels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 1/19/2009 04:04:00 pm   |
|
|
Friday, January 16, 2009 |
நடனங்களில் மிதிபடும் சுயமரியாதை |
நடனங்களில் மிதிபடும் சுயமரியாதை
தமிழ் நாட்டின் இன்றைய அரசியலில் மிகப் பெரிய பலமாய் இருந்து கொண்டிருப்பதுவும் அஸ்திவாரமாய் மண்ணுக்குள் புதையுண்டு நமக்கு காணக் கிடைக்காததுவாய் இருந்து கொண்டிருப்பதுவும் சுயமரியாதையே அவற்றில் அடிப்படையில் தான் அரிச்சுவடி எழுதப் பழகிய அரசியல் காட்சிகள் இன்று ஒவ்வொரு தமிழ்குடிமகனும் அறிந்தும் அறியாமலும், எதிர் மறையாகவோ நேர் மறையாகவோ தாக்கம் தந்து , கொடியேற்றி கோட்டைக்குப் போய் பொற்காலம் என்று பொய்யுரைத்து ஊடகங்களில் மூழ்கிக் கிடக்கின்றன. அப்படி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருந்த அந்த மந்திரச் சொல்லின் ஒளி நாமே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமையெல்லாம் தீண்டித் தழுவி புனிதப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டாமா? எப்போவிருந்து அதன் நிழலின் இருளை நாம் மனிதனின் மேல் அவன் உழைப்பின் மேல் விழ விடத் தயாரானோம். நடனங்கள் உடல் உழைப்பில் களைத்துச் சோரும் மனிதன் அதே உடல் அசைவின் மூலம் மனித உற்சாகத்தை மீட்டெடுக்கும் ஒரு கலை. மூளையின் உழைப்பில் சோர்வுறும் மனிதன் விரும்பி தன்னை மீட்டெடுக்க கண்டெடுத்த கலை வடிவ உடல் உழைப்பு நடனம்.
அந்நடனம் எங்கெங்கும் இந்த இரண்டாண்டுகளில் ஊடகங்களில் விற்பனைப் பிரதானப் பொருளாகிப் போக அதில் அடிக்கடி மிதிபடுவது மனிதனின், மனிதத்தின் சுயமரியாதையே
சமீபத்தில் ஒரு நிகழ்வில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து 4 வருடங்களாக அந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து கொண்டிருக்கின்றேன். கால மாறுதல்களை அதனால் அவதானிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. முதல் இரண்டு வருடம் வரை நடந்த போட்டிகளில் வெற்றி தோல்விகள் வெகு இயல்பாய் ஏற்றுக் கொள்ளப் பட்டு மாணவ மாணவிகள் ஆட்டங்களை கொண்டாட்ட மனோநிலையோடு முடித்து விட்டுச் சென்றார்கள்.போன வருடம் முதல் அதிலும் இந்த வருடம் இன்னும் அதிகமாக போட்டியில் சில விசயங்கள் எனக்கு நெருடலாய் படத் துவங்கின. முதலில் அப்போட்டிகளில் உற்சாகமான நல்ல விசயங்கள் . நடனம் என்பதன் மேலிருந்த தயக்கம் , மனத்தடை எல்லாம் கழன்று விட்டன. அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களுக்கு நிகரான உடலசைவுகளை தங்களாலும் முடியுமெனச் செய்வதற்கும் , அதற்கு வீட்டிலுள்ளோரின் குறிப்பாக பெற்றோரின் ஆதரவும் கிடைத்து வருவதும் மிகப் பெரிய விசயம்(உணர்ச்சி வசப் பட்டு திரைபடத்தை மிஞ்சும் உடலசைவுகளை போலச் செய்வது துரதிர்ஷ்டவசமே) 80 களில் நடன நிகழ்ச்சிக்கு பெயர் கொடுத்தேன் என்பதற்காக வீட்டில் நான் அடி வாங்கிய காலங்கள் நினைவுக்கு வருகின்றன.பொது இடங்களில் பெண் உடலசைவு இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படி இருக்கக்கூடாது எனும் காலங்கள் தகர்ந்து விட்டன. நாட்டிய நிகழ்வு முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில் மாணவர்களால் கேலி செய்யப் பட்டதாலேயே அடுத்த வாரமே படிப்பு நிறுத்தி திருமண பந்தத்துக்குள் ஆட்படுத்தப் பட்ட எம் பள்ளித் தோழியின் நினைவும் இன்னும் மறையவில்லை எனக்குள். ஆனால் இவையெல்லாம் மாறியிருக்கின்றது . போட்டி போட்டுக் கொண்டு போட்டிகளுக்கு தயார் செய்கின்றனர். அந்த சந்தோசத்தோடு முடிந்து விடுகின்றதா? அதுதான் இல்லை சமீபத்திய தொலைக்காட்சி நடனக் காட்சிகளின் பாதிப்பில் எல்லாரும் திறமை சாலிகளாக அல்லது திறமை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் ஒரு பொதுமைக்கு வந்து விட எல்லாரும் ஒரே போல் சிறப்பாக வெளிப்படுத்தினர்.தேர்வுக் குழுவிற்கு மதிப்பெண் போடுவதில் சிக்கல் வருமளவிற்கு உண்மையிலேயே 27 நடனக் குழுவினரிடையே 10 குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருக்க ஒப்பீட்டு ரீதியிலும் , ரசனை ரீதியிலும் முதல் மூன்று குழுக்களை மூவர் அடங்கிய குழு தேர்ந்தெடுத்து அறிவித்து முடிக்க, ஆங்காங்கே சோகமே உருவாக பரிசு பெறாத மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர். என்னேரமும் அழுது விடத் தயாராயிருந்த மனோநிலையில். தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தொடர்களில் அழுது கொண்டிருந்தது காணாதென்று நடனப் போட்டிகளில் தோல்வியடைந்தவர்களின் அழுகையை நெருக்கத்தில் தொடர்ந்து காண்பித்து கண்ணீரில் உணர்வுகளின் வெளிப்பாட்டில் காசு பார்க்கும் அயோக்கியத் தனம். அது மட்டுமல்லாது அதே அழுகின்ற மனோ நிலையை பக்க விளைவாகவும் தந்து போயிருப்பதை நினைக்க எவ்வளவு மோசமான உணர்வுச் சிதறல்களுக்கு இடம் கொடுத்து விடுகிறோம் நாமே அறியாமல் என்ற கவலை வருகின்றது. இது தெற்கில் ஒரு ஊரில் என்றால் இன்னொரு எதிர்திசை மனோபாவமும் இருக்கின்றது. அது சென்னை போன்ற இடங்களிலிருந்து கிளம்புவது சென்னையில் இதே போல் ஒரு கல்லூரிக் கிடையே நடந்த நடனப் போட்டிக்கு எனது நண்பர் ஒருவர் நடுவராக போயிருந்த அனுபவத்தைச் சொல்லிய போது எதிர் திசை மனோபாவத்தை உணர்ந்தேன். நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகளும் சிறப்பாக செய்திருக்கின்றனர். எல்லாருக்குள்ளும் வென்று விட வேண்டும் என்ற முனைப்புக்கும் மேலாக “எப்படியாவது” வென்று விடுதல் எனும் மனோபாவம் வெறியாகவே இருப்பதை உணர முடிந்தது. அதை இப்படியும் சொல்லலாம். தோல்விகளை இயல்பாக எடுத்துக் கொள்வதை தொலைத்துக் கொண்டே இருக்கின்றோம்.
அந்த நடுவர் இடைவேளையின் போது செல்லிடைப் பேசியில் பேசுவதற்காக தனிமை நோக்கிச் செல்ல அங்கு வந்த மாணவி தன் நடனத் திறமை எப்படி இருந்தது என கேள்வி எழுப்பியிருக்கின்றார். நடுவரோ நன்றாக இருந்தது எனச் சொல்ல அடுத்து வருவபர்கள் இன்னும் நன்றாகவே ஆடுவார்கள் அதனால் நீங்கள் எங்களுக்கு இன்னும் கூடுதல்மதிப்பெண் போடுங்கள் நாங்கள் வெற்றி பெற என்று கேட்டிருக்கின்றார். அவர் அதிர்ந்து போய் நிற்க “ மதிப்பெண் கூடப் போட்டால் உங்களுக்கு ஒரு முத்தம் தருவேன் என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியில் உறைய வைக்க , எங்கே எதற்கும் தயாராயிருக்கும் அம்மாணவி ஏதாவது ஏடாகூடாமாக நிகழ்த்தி விடுவாளோ எனப் பயந்து மீண்டும் கூட்டம் இருக்கின்ற இடத்திற்கே திருப்பி வந்து விட்டார்.காதல் குறித்து அங்கு பேசப் பட்ட பகிரப் பட்ட கருத்துக்களும் சொல்லப் பட்ட பதில்களும் வாழ்வின் புனிதங்களைப் பற்றிய எல்லாவற்றையும் உடைத்துப் போடுவதாய் இருக்கின்றது. வெற்றி பெற்றோம் என்ற பெருமையைத் தவிர வேறு எதையுமே தந்திடாத ஒரு கல்லூரிகளுக்கிடையேயான நடனப் போட்டியில் தோல்விக்காக அழுவதும், தோல்விகளைத் தவிர்க்க எந்த விலையும் தரத் தயாராயிருப்பதையும் , சுயமரியாதை பற்றிய சிந்தனை அறவே இல்லாமல் போய் விட்டிருப்பதன் அடையாளமே இது . இது மோசமான அடையாளம் தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் அசைவே “சுயமரியாதை” என்ற புள்ளியிலிருந்து தொடங்கி நிற்க தெரிந்தோ தெரியாமலோ அனிச்சைச் செயலாகவே கூடவோ சுயமரியாதை உணர்வு ஒவ்வொரு செயல்பாட்டிலும் இதுதானென்று பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்திருக்க வேண்டாமா? சுயமரியாதையைக் கைவிட்டு கண்ணீர் சிந்துவதும் , வெற்றிக்காக குறுக்கு வழிகளும் நியாயமே எனும் இரு துருவ செயல்பாடுகளும் நிராகரிக்கப் படவேண்டியவை. ஊடகங்கள் நிராகரிக்கப் படவேண்டிய எதிர்மறைகளை அவர்களின் சுயநலங்களுக்காக நன்றாகவே விதைத்து விடுகின்றன. திறமையும் வெற்றியும் “சுயமரியாதை” எனும் அஸ்திவாரத்தின் மேலே எழுப்பப் பட வேண்டிய கட்டிடங்கள் நன்றி: அதிகாலை.காம் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9694&Itemid=163Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 1/16/2009 09:52:00 am   |
|
|
Saturday, January 10, 2009 |
திசையொரு பாகம் |
திசையொரு பாகம் திலகபாமா
அவன் மனிதனாயிருந்த பொழுதினில் தாயின் முலைப் பாலருந்தி பூமியில் கால் முளைத்த போதும் தாரத்தின் நெஞ்சில் கிடந்து இன்னொரு விதைக்கு வித்தாய் மாறிய போதும்
தமக்கையின் மாராப்பு காற்று கலைத்து விடும் வேளையிலும் இமைகள் தாழ்த்தி எவரும் பார்த்திடாத உறுதியிலிருந்தான்
கலைவெறி ஏற ஒருவனோ உடல் வெளியை தளமாக்கி மெல்லிய சேலையும் கல்லுக்குள் விரித்தேன் பார் கலைபெருமை கூவினான்
பார்த்ததை உயிராக்கினேன் வர்ணத்தில் விலைப் பெருமையாக்கினான் ஒருவன்
அதிகார வெறியேரியவனோ ஆணின் உயிரைக் கொண்று பெண்ணின் உடலைக் கொல்ல சவத்தின் ஆடையுரித்து நிர்வாணத்தை நிர்வாணமாக்கினான்
அதிகார போராட்டத்தில் இன்னொருவனோ வக்ரங்களை தோலுரிக்கிறேனென்று சொல்லி ஆண் உடல் அம்மணத்தை மண்ணிட்டு மூடிவிட்டு பெண் சவ பரி நிர்வாணத்தை காட்சியாக்கி கையேந்துகின்றான்.
சுட்டு விரலை அதிகார வெறி பக்கம் நீட்ட
வெற்றிகள் திறந்து பார்த்த உடலை தோல்விகள் விழிகள் முன் நீட்டி கண்ணீரை தம் வெற்றிக்காய் விளைவித்துக் கொள்கின்றன
கௌரவ அழிப்புக்கும் பாண்டவ பழி வாங்கலின் வெற்றிக்கும் பிரதானமாய் பாஞ்சாலிகளின் துகிலுரிப்பே மாறித் தொலைய
மாடங்கள் பீடமாக்கி பள்ளங்கள் துவக்காக்கி
புத்தனே பற்களை புனிதப் பொருளாய் அனுப்பினாலும்
குருதி குடிக்கவே தூக்கி மாட்டிக் கொள்ளும் கூட்டம்
தாலி அறுத்தான் சந்தையில் முலை அறுத்தவளின் கத்தியில் என் முழு உடலையும் கூறிடுகிறேன் திசையொரு பாகமாக எரியவிட நன்றி அதிகாலை.காம்Labels: கவிதை |
posted by mathibama.blogspot.com @ 1/10/2009 09:05:00 pm   |
|
|
Thursday, January 08, 2009 |
திசைகளின் தரிசனம்-பயணக் கட்டுரைகள் |

திசைகளின் தரிசனம்-பயணக் கட்டுரைகள்எனது பயணக் கட்டுரைகள் , தொகுப்பாக காவ்யா வெளியீடாக வெளி வந்து விட்டது Labels: நூலறிமுகம் |
posted by mathibama.blogspot.com @ 1/08/2009 11:48:00 pm   |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|