சூரியாள்

Saturday, February 27, 2010
அழகிய நாயகி அம்மாள் அரங்கு
ிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வைத்து நடத்தப் பட்ட 2 நாள் கருத்தரங்கில் அழகிய நாயகி அம்மாள் அரங்கில் நடந்த நாவல் குறித்த விமரிசன அரங்கில் நான் வாசித்தளித்த கட்டுரை


ஹெர்மன் ஹெஸ்சே எழுதிய சித்தார்த்தன் , தமிழ் செல்வி எழுதிய அளம் , ஜெயமோஹன் எழுதிய கொற்றவை என்று இந்த மூன்று நாவல்களை என் விமரிசனத்திற்கு எடுத்துக் கொள்கின்றேன்.
எனது இந்த விமரிசனம் இரசனையின் பாற்பட்டது. விமரிசனம் என்பது சரி , பிழை சொல்வதல்ல ஒரு படைப்பை ஒட்டி அப்படைப்பாங்கள் சமூகத்தின் பிரதி பலிப்பாய் தந்து போகின்ற உணர்வுகளை , அதை செழுமைப் படுத்தும் நம் கருத்தாக்கங்களை தெரிவிப்பது. ஒப்பீட்டு ஆய்வுக்கென்று ஒரே கால கட்டத்துக்குட்பட்டதாக ஒரே தளத்திலுள்ளதாக இருந்தால் தான் சாத்தியம் என்ற வரையறைகள் தாண்டி மூன்று நாவல்களூக்கிடையேயும் ஒரு ஒப்பீடு என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்ததை இக்கட்டுரையில் தருகின்றேன்.

அளம்
தொடர்ந்து பெண் எழுத்தாளர்கள் கவிதையோடு நின்று போய் விடுவது பெரும்பான்மையாய் இருந்திருந்த காலகட்டம் நகன்று கொண்டிருக்கின்ற நேரமிது அதில் தொடர்ந்து பல நாவல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ச்செல்வி இன்றைக்கு பேசப் பட வேண்டிய முக்கிய நாவலாசிரியர். அவர் எழுதிய ஒரு நாவலை வாசித்தால் எல்லா நாவலிலும் பிரதேசம் மாறினாலும் உள்ளீடு ஒரே சாயலில் வேறு வேறு வர்ணங்களில் இருப்பது தெரியும் .
பிரதேச மொழியை அப்புவியின் வாழ்தலை இருப்பை நகர்தலை தோற்றுப் போதலின் வலியை இயலாமையின் யதார்த்தத்தை நம் முன் சொல்லிப் போகின்ற முயற்சி. அதில் தமிழ் செல்வியின் உழைப்பு உப்பளத் தொழில் சார்ந்த மொழியுனூடாக நாவலில் தடங்கலில்லாது பயணிப்பதிலிருந்து தெரிகிறது. முதற்பாதி இயற்கையோடு வாழ்வதைச் சொல்வதிலும் சரி உப்பள வாழ்வைச் சொல்வதிலும் சரி வாசிக்கின்ற ஒவ்வொருவரும் வியக்கின்ற விசயங்களைத் தானம் தருவதிலும் வென்று விடுகின்றது. மனிதனது அறியாமை வியப்பு. அப்படியான வியப்பைத் தந்து போகின்ற விசயங்கள் இருப்பதினாலேயே அவ்வியசங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை. நிஜமான அதன் தேவையின் பொருட்டும், அது சரியான இடத்தில் சொல்லப் பட்டிருப்பதினாலேயே அவை முக்கியத்துவம் பெறுகின்றன
ஆனால் நமக்கிடையே இருக்கின்ற பொதுப்புத்தியிலிருந்து சிக்காமல் போகின்ற ஒரு விசயம் அவரது எல்லா நாவலிலும் இழையோடக் காண்கின்றேன்.
இதுவரை நல்ல எழுத்து என்பதற்கு ஆண் வைத்திருக்கின்ற அளவீடுகளை அவர்களை விட சிறப்பாகச் செய்திருக்கின்ற படைப்பு அளம்
இதை இதுவரை இருந்திருக்கின்ற படைப்புலகை ஒத்துக் கொள்ள வைக்கின்ற எழுத்து பெரும் பலம் தான் ஆனால் அதே நேரத்தில் இதுவரை இருந்த படைப்புலகை ஒத்துக் கொள்ள வைக்க பெண் அவளுக்கெதிராக இருக்கின்ற ஆண்களின் உலகை படியெடுத்து விடுகின்ற தவறும் நிகழ்ந்தே இருக்கிறது அளம் நாவலில்.
பெண் துயரங்களைக் கூறுகின்றேன் என்று பெண் இயலாமைகளை பெரிசு படுத்தி அதை இயல்பாக்கிப் போவதுவும் , ஆண்மீறல்களை வீரமாகச் சித்தரிக்கும் போக்கும் எதிர் எதிர் திசையிலிருந்தும் ஒரே மாதிரியானவைதான். இதில் ஒரு பாதியைத் தான் தமிழ் செல்வி நாவல்களும் கொண்டிருக்கின்றது

சித்தார்த்தன் நாவல் உணர்வுகளால் எழுதப் பட்டிருக்கின்ற புனைவு மொழி. அளத்திலிருந்து சித்தார்த்தன் வேறு படுகின்ற இடம் புனைவின் பாதைதான். சித்தார்த்தனும் கொற்றவையும் எதிர் புனைவு மொழி. ஏற்கனவே இருக்கின்ற புனைவுகளுக்கு மாற்று வாசிப்பை தந்து போகின்றது இந்த இரு நாவல்களும் ஆனால் வேறு வேறு இடங்களில். சித்தார்த்தன் எதிர் புனைவு மறுக்கவே முடியாத உணர்வு தளம் எதிர் புனைவில் எதையும் அந்நாவல் தட்டையாக்கிப் போகவில்லை. அளம் எப்படி பிரதேச மொழியை கையில் எடுத்ததோ அதே போல் சித்தார்த்தன் நாவல் தத்துவ உணர்தலுக்கான மொழியை கொண்டிருக்கின்றது. நிகழ் காலமாய் இல்லாது போயிருப்பதால் வேறு தளம் போல் தோற்ற மளிக்கின்றது.மொழியில் புதிய தரிசனங்களை சித்தார்த்தனும் கொற்றவையும் கோருகின்ற வித்தை ஆண்களாலேயே நிரப்பப் பட்டிருக்கின்ற மொழி. அதில் பெண்கள் அவர்களது நிகழ்த்துதல்கள், உயிரிகள் அல்ல. சித்தார்த்தன் எதிர் புனைவில் தத்துவ வாசிப்பை எல்லா இடத்திலும் உணர்த்துகிறது. மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தல் போல ஆனால் கொற்றவையோ எதிர் புனைவில் மனித வாழ்வின் வாசிப்பை தட்டையாக்கிப் போகின்றது.

சித்தார்த்தனை வாசிக்கையில் எனக்குள் எழும்பிய கேள்விகள் இவை

• கடந்த காலத் தவறுகளை ஒத்துக் கொள்ள மறுப்பவர்கள் சொல்லும் அழகிய சொல் அனுபவம். மனிதன் எதையுமே அழகுறச் சொல்லிப் பழகியவன். அதில் தவறுகள் மறைக்கப் படுகின்றன சாமர்த்தியமாக

• செய்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு விட்டு சாதனையாக்குவது ஒன்று
செய்யாத தாறுகளால் பட்டியலிட முடியாது எதுவுமே செய்யப் படாததாய் காணாமல் போவது ஒன்று. எந்த தரிசனம் பரி நிர்வாணமாய் அர்த்தப் படப் போகின்றது.

• ஆண்களால் தவறுகளைத்தான் பாடமாகவும் வாழ்வாகவும் வாசிக்க முடியும்
நேர்மையின் வெளியைச் சந்தித்தவர்கள் அதைப் பாடமெனச் சொல்பவர்களைக் கடந்து போவார்கள்

• இறுதியாக நீங்கள் சித்தார்த்தனாக மாறுவதற்கு கமலாக்கள் தேவை கமலாக்களோ பல சித்தார்த்தன்களின் பால்யத் தவறுகளை உறிஞ்சி விடும் பஞ்சுகளாக போதித்த கவுதமர்களை விட போதிக்காது வாழ்வதை பாடமாக்கும் கமலாக்களும் புத்தர்களே . போதிப்பவரையே புத்தராக வாசிக்கப் பழகி விட்ட உனக்கு கமலா புத்தராக தெரியப் போவதில்லை.



கொற்றவை வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நான் தமிழர் வரலாறு வாசித்துக் கொண்டிருந்தேன். அந்நூல் தகவல்களாய் தந்து கொண்டிருந்ததை கொற்றவை புனைவாக்கியிருந்தது. புனைவின் நோக்கம் தகவல்களைச் சொல்வதாக மட்டுமிருந்தால் அந்த தகவல்களுக்கு நான் தமிழர் வரலாறேயே படித்து விட்டுப் போகலாமோ ? ஒன்று

மற்றொன்று புனைவின் தன்மை நமெக்கெல்லாம் தெரியும் கண்ணகி நெஞ்சை பிடுங்கி எரிய மதுரை எரிந்தது என்பது புனைவே அதிலும் சாமானியனுகே தெரியும் அந்த புனைவு அவளின் உச்ச கட்ட கோபத்தை ஆசிரியர் சொல்ல பயன் படுத்திய மொழி அதுவென்று. அதைப்போய் தட்டையாக்குகின்ற வேலையை செய்யத் தேவையில்லையே அப்புனைவை தட்டையாக்குகின்ற வேலையை கொற்றவை செய்திருக்கின்றது.
யதார்த்தமோ புனைவோ ஒவ்வொரு காலமும் புனிதங்களின் பேரால் இருக்கும் போலித்தனங்களையும் மலினப் படுத்தல்களையும், சடங்குகளாய் மாறிப் போகின்ற விசயத்தையும் தட்டையாக்குவதே எல்லாக் காலத்தின் தேவையாகவும் இருக்க சாதாரனப் பெண் பாத்திரத்தை ஒரு உச்சத்திற்கு எடுத்துப் போன உன்னத புனைவை எதிர் புனைவில் தட்டையாக்குவது
“ நான் தப்பு செய்திட்டேன்னு நிஜம் சொல்லிடேன்ல”
என்று தப்பித்துக் கொல்வதற்கு ஒப்பானது
தப்பு செய்திட்டேன்னு நிஜம் சொல்லவில்லை
தவறுகளை ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அவ்வளவுதான்.
நிஜம் சொன்னதாக அதில் பெருமைப் பட்டுக் கொள்ள ஒன்
றுமில்லை

இன்னுமொன்று இன்னாவலிலும் பெண் பாத்திரங்கள் எல்லாம் அழுத வண்னமே இருக்கின்றன. வரலாற்று மொழி போர்வையில் தொலைக் காட்சித் தொடர் பெண்மணிகளாய் அழுது தொலைக்கும் தவற்றை நிகழ்த்தியிருப்பதை மறைத்திருக்கின்றார். ஆம் அளம் நாவலிலும் அதேதான் நிகழ்ந்திருக்கிறது. பிரதேச மொழியின் போர்வையில் அல்லது அதன் வெளிச்சத்தில் இயலாமைப் பெண்களை முன்னிறுத்தி விட்டுப் போயிருக்கின்றார்.
அதிலும் கொற்றவையில் எல்லாப் பெண்களின் கண்ணீரும் விழுகின்ற இடமாகட்டும் இன்னும் பெண் உடல் சார்ந்த உடல் வர்ணிப்பாகட்டும் பெண் உடல் மட்டுமே என பார்க்கும் பார்வை வெறுப்பை அல்லது பெண் உடலை எழுதி அல்லது சொல்லிப் பார்ப்பதில் தெறிக்கும் வக்கிரத்தை நமக்கு அடையாளம் காட்டிப் போகின்றது

இன்றைக்கு வாழ்க்கையோ , திரைப் படங்களோ, இலக்கியமோ அரசியலோ எல்லாமே, அதீதங்களாக செய்தி விட்டு அதற்குள் தவறுகளை ஒளித்துக் கொள்வது ஏதுவாகிப் போகின்றது. எதிர் மறை வழிபாட்டிப் பொருளாக ஆக்குவது எந்த சமூகத்திற்கும் நல்லதல்ல. அஹ்டிலும் இலக்கியத்தில் எழுதப் பட்ட அதீதப் பக்கங்களுக்குள் ஆங்காங்கே வைக்கப் படும் விசத் தூவல்களாய் எதிர் மறைகள் புனிதங்களாக்கிப் பேசுவது நிகழுகின்றது அது அணுகுண்டை விட ஆபத்தான விசயம் இந்த அறிவுத் தளத்தில் நச்சுக் கிருமியை தூவி விடுவது.வாசகர்களின் வாசிப்பு இன்றைக்கு சவாலானது.
posted by mathibama.blogspot.com @ 2/27/2010 09:16:00 am   0 comments
Thursday, February 25, 2010
பெண் கவிஞர்கள் இன்று
பெண் கவிஞர்கள் இன்று
திலகபாமா
(திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் வாசிக்கப் பட்ட கட்டுரை)

கவிஞர்கள் காலம் காலமாக வாழ்வை , வாழ்வின் முரணை விசாரணைக்குள்ளாக்கி அதன் முன்னகர்தலை மொழியின் இயங்கியலூடாக சிந்தனை தளத்திற்கு வேரடி நீராய் மாற்றித் தருபவர்கள்.
இதில் ஆண் பெண் கவிஞர்கள் பேதமில்லை . மொழி நாடு இனம் வரையறை இல்லை எனினும் மொழி தன் இருப்பினூடாக பதிவு செய்து போகும் காலமும் இடமும் விமரிசனப் பார்வையில் பிரித்துப் பார்ப்பதற்கும் கவிதைகளின் நுண் துளைவழி உற்று நோக்கு வதற்கும் வாசகனின் மையக் குவியத்தை ஒரு முகப் படுத்துவதற்கும் இப்பிரித்தல்கள் உதவுமென்பதால் பெண் கவிஞர்கள் மட்டும் அதுவும் இன்றைய பெண் கவிஞர்களை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு ஒரு உரை என்பது சரியாக இருக்கும்
நான் என் வாசிப்பினூடாக 3 வகைப்படுத்தல்களை முன் வைக்கின்றேன்

1 கவிதை ஒரு செயல் என நம்புபவர்கள்
2, கவிதை எங்கள் வாழ்வென்று நம்புபவர்கள்
3 கவிதையை தங்கள் இருப்பாக்குபவர்கள்

கவிதையை செயலாக நம்புபவர்களின் துவக்கம் முதல் முதலாக எழுதத் துவங்குபவர்களிடம் தொடங்குகின்றது . ஆரம்பத்தில் கவிதை எழுதுவதை செயலாகவே நம்பத் துவங்குகின்றோம். பெரும்பாலான நேரங்களில் அடுத்தவரிடம் சொல்லத் தயங்குவதை எழுத்தில் வடிகாலாக மகிழ்வாக மட்டும் வடிய விட்டுப் போகின்றவர்கள். இளமைப் பருவத்தில் பதின்ம வயதில் பேசத் தயங்குகின்ற விசயத்தில் தொடங்குகின்ற இவர்கள் வேறு செயல்கள் வாய்க்கின்ற வரையில் கவிதையோடு தொடர்கின்றார்கள்
வேலை திருமணம் , இடம் மாறுதல் போன்றவை சிலரின் கவிதைகளை நிறுத்தி விடுகிறதெனில் அவர்கள் கவிதையை ஒரு செயலாக நம்பி விட்டவர்கள். இன்னும் சிலரோ தொகுப்பு போட்ட நிலையில் அச்செயல் முடிந்ததாய் நின்று போகின்றார்கள். திருமணம் ஆனதும் காதல் வெற்றியடைந்ததாய் சுபம் சொல்லி முடிப்பவர்கள் போல.
இக்கவிதைகளில் பாடுபொருள் வெறும் பெண்களின் பிரச்சனைகள் என்று கவனத்திலெடுப்பதாக நினைத்துக் கொண்டு கள்ளிப் பால், திருமணம் , காதல் தோல்வி, அதிலும் காத்திருப்பு, வரதட்சனை என்பதாக வெற்றுக் கோசங்களையும் தட்டையான மொழியூடாகவும் பேசப் பட்டும் விடுகின்றது.

நமது பார்வை குவிய வேண்டிய இடமென்பது கவிதை எங்கள்வாழ்வு என மொழியை வாழ்வோடு இயங்க அனுமதித்தவர்களிடம்தான்.எல்லா சம்பவங்களும் கவிதையல்ல.சம்பவங்களுக்கு பின்னாலிருக்கின்ற உணர்வுகள் ஏற்கனவே இருக்கின்ற வார்த்தைகளின் முகத்திலிருந்தே புதிய தரிசனங்களாக்கி வாசிக்க தருவதே கவிதை
அவ்வகையில் பெண் கவிஞர்களின் துவக்கம் இரா மீனாட்சியிலிருந்து துவங்குகின்றது. கவிஞர்களின் பெயர் பட்டியல் தவிர்த்து கவிதைகள் வாயிலாக கவிஞர்களை வாசிக்க வேண்டுமென நம்புகின்றேன். அவ்வகையில் இப்பகுதியைச் சேர்ந்த கீதாஞ்சலி பிரிய தர்ஷிணியின் “திருமதியாகிய நான்” எனும் என் சமீபத்திய வாசிப்பு அத்தளத்தில் பேசுவதற்கான வாய்ப்பைத் தந்திருக்கின்றது.

நாம் இரண்டு விசயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம்
ஆணின் வாழ்வும் வெற்றியும் பெண்ணின் வாழ்வும் வெற்றியும் அன்று தொடங்கி இன்று வரை வேறு வேறொன்றாகவே இருக்கின்றது. அதன் வாசிப்பில் தான் எழுதப் படுகின்ற மொழியின் இயங்கியலும் அதன் வெற்றி தோல்வியும் வாசிக்கப் படுகின்றது. சில கவிதைகளின் வெற்றி யாருமே உணர்ந்து கொள்ளாத இடமிருந்தும் கூட நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது தன்னைத் தானே மரித்துக் கொண்டு

இன்னுமொன்று பிரபலமாகுவதை , புகழ்பெறுவதை உச்சமென வாசிக்கின்ற மனோநிலையும் ஆணின் வெற்றி வாழ்வு அடிப்படையில் தீர்மானிக்கப் படுவதாய் இருக்க மௌன அங்கீகாரங்களுக்கிடையே வெற்றி பெற்றதாய் சொல்லப் படாத கவிதைகளை , எழுத்துக்களை , எழுதப் படாத வெற்றுத் தாளாய் மனதை வைத்துக் கொண்டு வாசித்தால் தான் அதன் வாழ்வின் மொழி புரியும். இதுவரை இருந்திருக்கின்ற ஆண்களின், சமூக குரல்களிலிருந்து புதிய தரிசனங்களை தருகின்ற குரல் பெண்களிடமிருந்து ஒலிக்கத் துவங்கியிருக்கின்றது

கடல் சிறுமி

கடல்பற்றி ஒரு கவிதை
எழுதச் சொல்லிக் கேட்டபடி மாலையில்
நெளிந்தபடி வந்தாள்
எதிர்வீட்டுச் சிறுமி

உனக்கு கடல்பற்றி ஏதும்
தெரிந்தால் நீயே எழுது என்றேன்
தெரியாதே என்ற அவள்
கொஞ்சம் யோசித்து
கடல் ப்ளூவாக இருக்கும் என்றாள்
இன்னும் சொல் என்றதும்
நாலு வரி போதும் என்று
ஆசிரியை சொன்னதாகச் சொன்னாள்
நாலு வரிகளுக்குள்
அடங்கி விடக் கூடியதான ஒரு கடலை
தனியே உட்கார்ந்து
தேடிக் கொண்டிருக்கிறேன்



கவிஞனின் கவிதையில் ஒரு சொல் வெறும் அச்சொல்லாகவே இல்லாது பன்முகத் தன்மை கொண்டிருப்பதும் எல்லாவற்றுக்குமான பொதுமையாகிப் போவதும் தான் சிறப்பு.
இக்கவிதை ரொம்ப எளிதாகப் புரிந்து கொள்ளப் பட்டு விட்ட சொற்களுக்கிடையில் கடலைப் புரிந்துகொள்ள முடியாமல் போன வியப்பையும் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட விசயமாக சிறுமிக்கான கடல் நிலை கொண்டிருப்பதையும் அது மேலும் விரிவு படாமல் அதற்குள்ளாகவே தாங்கள் பார்த்து விட்ட நாலு வரிகளுக்குள்ளாகவே இருந்து விடக் கோருவதும் , முன் தீர்மானங்களின் வழி வாசிக்கக் சொல்வதையும் சொல்லாமல் சொல்லிச் செல்கின்ற கவிதை வரிகள் இவை.
கவிதை புரிதலுக்கானது அல்ல உணர்தலுக்கானது .
இதோ இன்னுமொரு கவிதை உங்கள் உணர்தலுக்காக

பொருட்காட்சி விட்டு வந்து
வெகுநேரம் ஆகியிருந்தும்
தலைக்குள் ஓடிக் கொண்டுள்ளது

பொம்மை ரயில் ஒன்று
சிரிக்கும் புத்தர் பொம்மை கூடவும்
கான்டீன் மிளகாய் பஜ்ஜியும்
கொதிக்கிறது மனதில் கரித்து விடாமல்
பிரியமானவர்களுடன் எடை பார்த்து
துப்பும் காகிதச் சீட்டு ஒன்றையும்
மல்லிகைச் சரத்தையும் எறிய
சாக்கடையில் மிதக்கிறது நிலா
என் கைப்பைக்குள் அவிழ்ந்த
ரிப்பனாய் சுருண்டபடி நான்
என் பொருட்காட்சி விட்டு நடந்து

கடைசி ஐந்து வரிகளில் கவிதை எப்பவும் நாம் பேசுகின்ற பொருட்காட்சியிலிருந்து வேறு இடத்திற்கு நகட்டிக் கொண்டு போய் விடுகின்றது. பொருட்காட்சிக்கு முன் “ என் “ என கவிஞர் சேர்க்கின்ற வார்த்தை பொருட்காட்சி என்கின்ற வார்த்தையை வாழ்வாக வாசிக்க வைத்து விடுகின்றது.

பெண்கள் சார்ந்த விசயங்கள் தான் என்றில்லாது , சமூகம் பெண்களூடாக எங்கெல்லாம் பயணிக்கிறதோ எங்கெல்லாம் அவளைப் பெண்ணாக நிறுத்தி விட முனைகிறதோ, இப்படி எல்லா தளமிருந்தும் பெண்களின் குரல் வரத் துவங்கி விட்டது தட்டையான வாசிப்பை உணருதலை புறம் தள்ளி

தாயுள்ளத்தைத் தவிர வேறெந்த உள்ளமும் ஆண் உடலுக்குள்ளிருந்தாலும் பெண் உடலுக்குள்ளிருந்தாலும் ஆணின் சுயநல உள்ளமே
எப்பவும் எனக்கு இது பிடிக்கும் எனது நினைப்பு இது எனது ஏக்கம் எனது வலி இப்படியே சொல்லிக் கொண்டிருக்கின்ற சுயநல உள்ளமே ஆண்களுக்கும் ஆண் மனதுகளுக்கும் வாய்க்கிறது
பெண்களிலும் நிறைய ஆண் உள்ளங்கள் இருக்கவே செய்கின்றன
அவை சுயம் பேசுவதன் மூலமும் தன் வழியாகவே தன் நிறத்தின் சாயலாகவே எதையும் பார்க்க வல்லவை. ஆனால் தாயுள்ளம்தான் உண்மையில் பெண் மனம் அதுவே கவிஞனின் மனமும் கூட அதனாலேயே தன்னைப் பெண்ணாகப் பாவித்து எழுதிய ஆண்கவிஞர்கள் நம்மிடையே நிறைந்து இருந்தார்கள். அப்பெண் மனமே தனக்கு ஏதொன்று கிடைத்திருந்தால் நல்லாயிருக்குமே என்று நினைக்கும் போதே அதே போல் ஒன்றைத் தன் எதிராளிக்குத் தந்து விடத் தயாராகி விடும். அப்படிப்பட்ட கவி மனம் கவிதையை வாழ்வாக நம்புபவர்களிடமிருந்து நமக்கு நம் வாழ்வின் அடுத்த நகர்தலுக்கான அச்சாணியாய் மாற்றி விடும் அதிசய சொற்களாய் ஆகி விடுகின்றது

கவிதையை தங்கள் இருப்பாக்குபவர்களின் இடமிருந்து வாசகன் கவனமாய் இருத்தல் அவசியம். நிஜம் போல பொய்யும் வலி போல தங்களையும் எப்பவும் கவிதை வாயிலாக முன்னிறுத்திக் கொள்பவர்கள்.இவர்கள் கவிதைகள் அவநம்பிக்கையையும். இதுவரை பேசப் படாத துணிச்சல்களாக பொய்மைகளையும் மாற்றி முன் வைத்து விட்டுப் போகின்றது. இக்குரல்கள் ஊடகங்களினால் பிரபலப் படுத்தப் படுகின்றன. அப்படி சில பெண் கவிஞர்கள் இதுவரை ஆண் எழுதிய எங்கள் உடலை நாங்களே எழுதினால் என்ன என எழுதிக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக பெண் உடல் சார்ந்த வளாக சித்தரிக்கப் பட்டதாலேயே அவள் உடமைப் பொருளாயும், வணிகப் பொருளாயும் மாறிப் போனாள் இந்த உலகமய மாக்களில். அதிலிருந்து மீள பெண் தான் உடல் மட்டுமல்ல . இச்சமூகம் சிதைப்பது அவள் உடலை மட்டுமல்ல அவள் உணர்வுகளையும் தான் எனவும், அவள் அறிவும் ஆற்றலுமானவள் அவள் பார்வைகள் நாலு அறைகளுக்குள்லானது மட்டுமல்ல நாலு அறைகளுக்குள்ளாகவும் அவள் பெற்ற அனுபவம் இந்த உலகத்துக்குமானது என்பதை நிரூபிக்க வேண்டும். ஒரு கவிதை உண்மையான வாழ்வின் துயரத்தை சரியான பொதுமையில் பேசுமாயின் அக்கவிதை அவளுக்கானதாக மட்டுமல்லாது வாசிப்பவருடைய அனுபவமாக மாறி விடக் கூடும்
உதாரணமாக
எனது ஒரு கவிதை

நேசிக்கின்ற படியால்
கொலை செய்யப் படுகின்றேன்
உனக்கு வலிக்குமென்றுதான்
உண்மைகளைப் புதைக்கின்றேன்
புதைபடுகின்ற வலியோடு
கூடு தேடி அலையும்
எந்தன் உடலும்

சொல்ல முடியா உண்மைகள் சூழ்ந்து விட
தூரப் போகின்றேன்
நெருக்கடி தாங்காது
பார்க்கின்ற தூரத்தில் இருந்தும்
உணர முடியா தூரத்தில் நீ
சொல்லிப் போகின்றாய்
பெண் புதிரானவளென்று

இக்கவிதை வாசிக்க நேர்ந்த ஒரு அமைதிப் படையில் வேலை செய்த காவல் அதிகாரி இக்கவிதை இலங்கைப் பிரச்சனையை பேசுகிறது என்கின்றார்.
ஆதிக்கத்துக் கெதிராக ஒரு பெண்ணாயிருந்து எழுதப் பட்ட கவிதை , ஆதிக்க அரசாங்கத்துக்கெதிரான ஒரு இன விடுதலைக்கானதாய் வாசிக்கவும் முடியுமென்பதற்கு அச்சம்பவம் ஒரு சாட்சி

ஆனால் கவிதையை தன் இருப்பாக்குபவர்கள் தன்னையையே எழுதத் தொடங்கி , தன்னின் நிஜத்தையும் எழுதாது மேலெலும்பாது தான் மட்டுமாகவே சுருங்கிப் போவது நிராகரிக்க வேண்டியது

இன்றைய வாழ்வுதான் உனது எனதுமான நிஜம்
ஆனால் ஆண் கட்டமைத்த இச்சமூகத்தில் பொய்யைத் தான் நிஜமென வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை எடுத்துச் சொல்ல பெண் குரல்கள் பழைய மற்றும் மேற்கத்திய சாயங்கள் ஏறாத பெண் நிலை வாதமாக முன்னெடுக்கப் படவெண்டும் அப்படி முன்னெடுப்பவர்கள் பட்டியலில் வைகை செல்வி, இளம்பிறை , தமிழச்சி, நந்திதா, சக்தி ஜோதி இன்னும் பலரது கவிதைகள் புதிய புதிய தளங்களாக வந்த வண்ணம் இருக்கின்றன.அவற்றை வாசிப்பதுவும் வளர்த்தெடுப்பதுவும் வாசகனின் வேலை
posted by mathibama.blogspot.com @ 2/25/2010 07:40:00 pm   2 comments
Monday, February 15, 2010
என் வீட்டு காளி

என் வீட்டு காளி

தமிழ் கொஞ்சிடும் மொழியோடு

அழகு துஞ்சிடும் விழியோடு

பயம் அஞ்சிடும் நிலையோடு

வீட்டில் காளியொருத்தி இருந்தாள்

கணிணித் தமிழ் கையிலெடுத்து

இணையத்தில் மடல் விடுத்து

இலக்கியத்தின் சுவை எடுத்து

வாசல் துளசிக்கு நீரூற்றினாள்

அவள் பந்தாடினாள், புவி சுழன்றது

அவள் விழி இமைத்தாள் சூரியன் உதித்தது

கடைக்கண்ணசைவில்

அமாவாசை நிலவு வளர்ந்தேகியது

முத்தமிட்ட எச்சிலில் புவி பசுமை பூத்தது.

அடுத்த வீட்டாரும் தெரியாமல்

என்னுடன் வாழ்ந்தாள் காளி

எதிர்த்த சனமும் பாராது

என்னில் உலாவந்தாள் காளி

அவர்களின் மனப்பிம்ப காளி

இவளுருவில் இல்லாததால்

அன்றைய செய்தித்தாள்

அவர்கள் மனப் பிம்ப காளியாய்

அவளை மாற்றிற்று.

பாலியல் வழக்குகள்

உடலை பொருளாக்கி

வாங்கியவன் மறைந்து போக

எச்சில்படிந்த பண்டங்களின்

வரிசையாய் பெண்கள்

குற்றவாளிக் கூண்டுகளில்

மாதவி பின்னால் சென்றவனின்

இரத்தத்தில் குளித்த மண்ணில்

நின்று காளி இன்று என்னுருவில்

மார் தட்டுகிறாள்

காதலைக் கொன்றவர்களின்

கழுத்தைச் சீவி மாலையாயிட்டு

சொன்னாள் காளி அதைக்

கவிதையில் சொல்கின்றேன் நான்

ஆதிக்ககாரன் கை ஆயுதமாய்

பெண்ணும் அவளூடான காதலும்

அன்றும் இன்றும் என்றும்

ஒரே வாசிப்பில்

காதல்

எழுதி எழுதி தேய்த்த வார்த்தை

வாழ்ந்து வாழ்ந்து துளிர்த்த வார்த்தை

இறப்பின் நிமிடமே உயிர்த்திடும் வார்த்தை

பாடியும் ஆடியும் திரையில் வெளுத்த வார்த்தை

கருவிலேயே திருவான பத்ம வியூக வார்த்தை

பருவத்திற்கானதென்று பலரும்

உருவத்திற்கானதென்று சிலரும்

ஆணும் பெண்ணுக்குமானதென்று காதலர்களும்

அண்டசராசரங்களுக்குமானதென்று மொத்தமும்

எத்தனை வரை விலக்கனங்கள்

அத்தனையும் வாழ்ந்து விட முடியா

ஈசலாய் மானுட வாழ்வு

பேரண்டமாய் காதலின் இருப்பு

ஒரு இதயம் ஒரு காதலென்றாய்

இறப்பில் இதயம் சாம்பலானபின்னும்

பீனிக்ஸ் பறவையாய் காதல்

பாலியல் சனநாயக சுதந்திரக் காதலென்றாய்

பாவங்கள் கழுவி நீரை கறையாக்கியபின்னும்

கங்கைக் கரை நீராய் காதல்

குருடன் தடவலில் யானை

சொல்லிய வார்த்தையில் காதல்

சொல்லாத மௌனங்களின் சுவையில்

இல்லாமல் இருக்கும் காதல்

எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரிந்த மானுடம்

உணர்தலில் கூட்டிவாசிக்க முடியாது

இன்னுமும் பாலபாடத்தில்

எல்லாவற்றும் பொருள் சொல்லும் அகராதி

இன்றும் காதலுக்கு பொருள் சொல்லாது

மௌனத்தில் விளக்கிக் கொண்டிருக்குது

*

சூடிக் கொடுத்த

சுடர்க்கொடியின் காதல்

பக்திக்குள் ஒளிந்திருக்குது

எண்ணத்தில் நினைக்க

கைவந்த மாங்கனிக் காதல்

பேயாகி தலைகீழாய் நடந்தது

வானத்திலொருவன் பயணிக்க

ஓடிய நதியில் தெரிந்த காதல்

தனயன் கைவெட்டுப் பட்ட தலையானது

கண்ணகிக் காதல் நெருப்பானது

சீதைக் காதல் நெருப்பில் நீரானது

பாஞ்சாலிக் காதல் மாம்பழக் காம்பில்

பசையானது

பெண்களின் காதலெல்லாம்

காதலாக வாசிக்க முடியா

மீசைக் கூட்டங்கள்

நீருக்குள்ளிருந்து

நீரின் காற்று திருடும்

மீன் கூட்டமாய் வாழ்ந்து விட

காளி கண் திறக்கிறாள்

உடல் பண்டமானதன் காரணம்

தேடித் தாண்டவமாடுகின்றாள்

விழிதான் எழுத்து

விழிதான் சொல்

விழி வழி மொழிதான் காதல்

நிமிர்ந்து பார்த்தவர் வாசிப்பர்

புரிந்து நேசிப்பவர் தரிசிப்பர்

விழியசைவோடு நடக்கின்றாள்

ஜதியின் மிதியில் சிந்தனை தெறிக்க

கால் தூக்கி தோடு மாட்ட முடியாது

சிவனும் தோற்கிறான்

பத்து மாதம் கருவாகி

இரத்தமொடு உருவாகி

எல்லோரும் போல

மண்ணில் பிறந்தோம்

நிலம் கீறி விதை விதைத்து

நீர் விட்டு பயிர் வளர்த்து

நெருப்பிட்டு உணவாக்கி

மீண்டும் வயிற்றுக்குத் தந்தோம்

என்னில் வளர்ந்தனர் குழந்தைகள்

என்னில் வாழ்ந்தது கலாசாரம்

என்னில் மகிழ்ந்தனர் மக்கள்

என்னில் வரலாறாகினர் சமூகம்

பூதங்கள் நானாக வேதங்கள் நீயாக

என்று இரண்டாகப் பிளந்தோம்

ஆள்பவன் நீயாக சாமரங்கள் நானாக

படிநிலைக்கு மாறப் பழகினோம்

தருமங்கள் நானாக சூதுகள் நீயாக

என்று மறுபடியும் வெல்வோம்

ஐவிரல்கள் பாதமாக

இருகால்கள் மனிதனாக

தனியே நடப்பதில்லை எதுவும்

காதல் இருவருக்குமாக

சுகங்கள் உனக்கு மட்டுமாக

எப்போதிருந்து உணரப் பழகினோம்

நீ என்பது உழைப்பாக

நான் என்பது உடலாக

வீட்டுக்குள் பழகினோம்

வீடென்பது நாடாக

நாடென்பது நாமாக

நாமென்பது நான் நீயாக

சுழலுது சக்கரங்கள் செக்கு மாடாக

சக்கர சுழற்சியை வெட்டுகிறாள்

என் காளி

காதலைக் கொன்ற மூளைகள்

மாலையாக அவள் கழுத்தில்

என் விருப்பு உன் விருப்பு

சொன்ன அடக்குமுறைச் சிவன்

அவள் காலடியில்

நெற்றிக்கண் நெருப்பால்

பெண் எரித்த கூட்டம்

அவள் சூலாயுதத்து கூர்மையில்

குத்தப் படாமல் இருக்குது இன்னமும்

காளி

புவனேஸ்வரிகளின் நாவில்

சூல் கொண்டு எழுதிடு

காந்தி தலை தரித்த

காகிதத்திற்கு

உடல் விலை பேசிய புள்ளிகளை

சந்தியில் நிறுத்திட

பெரும் புள்ளிகளுக்கு கரும்புள்ளி

இரத்தச்சொட்டில் வைக்க

எல்லாவார்த்தையையும்

உரத்துச் சொல்லிய சமூகம்

காதலை மட்டும் காதோடு

சொல்லிப் போகுது

அடுத்தவர் காதுக்கு கேட்காத

தைரியத்தில் சிலர்

நாலைந்து காதோடு

சொல்லிப் போய் விடுகின்றனர்

வெட்கமின்றி தைரியமாய்உரத்துச்

சொல்லப் படவேண்டிய உணர்வு காதல்

ஏன் முக்காடிட்டு

கொல்லைப் புற கதவு வழியாக இன்னமும்

காதல் உணர்வு பூர்வமானது

மனதோடு சம்பந்தப் பட்டது

உடலோடு முடிச்சிட்ட கூட்டம்

காளியென் கழுத்தில் மாலையாகிக்

கிடக்கின்றனர் விழி பிதுங்கி

ஊசிகள் நுழைய இடம் கொடுத்தால்

கிழியலைத் தைக்காது

விழியிமை தைத்து

கண்கள் குருடாக்கி போடும் கூட்டம்

ஊசிகளின் துளைகளையும்

கூர்மையையும்

தண்டித்து விடக் கோரும்

கூர்மையில்லாவிட்டால் வெறும் குச்சி

துளையிருந்தால் தான் ஊசி

காதலிருப்பதுதான் பெண்

அவள் உணர்வோடு தருவதை

உடலோடு வாசிப்பவன் ஆண்

காதலோடிருப்பவள் தான் பெண்

அவள்

காதலில் குழந்தைகள் வளர்வார்கள்

காதலில் ஆண்கள் இதுவரை ஆண்டார்கள்

இனியாவது வாழட்டும்

காதலில் வாழ்க்கை மகிழ்வாகும்

காதலில் புவி வெக்கை

காணாமல் ஆவியாகி

காண முடிந்த மேகமாகி

துளித் துளியாய் நீராகி

பிரபஞ்சம் நனைக்கும்

அதில் புதுப் பூமி துளிர்க்கும்

காதலைக் கொன்றவர்களின்

கழுத்தைச் சீவிச் சொன்னாள் காளி

காதலில் வாழ்பவர்களை என்மனதிலிட்டு

கவிதையில் சொன்னேன் இதுவரை நான்

posted by mathibama.blogspot.com @ 2/15/2010 12:46:00 pm   1 comments
Tuesday, February 09, 2010

மொழியின் அபௌதீக இயங்கியலில் வாழ்வு

அமிர்தம் சூர்யா உரை
கிளாரிந்தா -கவலை ஓர் ஆய்வு தோதாத்ரி


கவிதா மனங்களும் சிறுகதை தளங்களும் -சோ.தர்மர்
posted by mathibama.blogspot.com @ 2/09/2010 08:50:00 am   0 comments
இலக்கிய மாநாட்டுப் படங்கள் 3

அன்பாதவன் கவிதை வாசிப்பு

ஒருங்கிணைப்பாளர்கள்

"பாரதியின் சிறுகதைகளில் இன்றைய கருத்துருவாக்கங்கள்" மாலன் உரை

துவக்க விழாவில் சிறப்புரை
posted by mathibama.blogspot.com @ 2/09/2010 08:20:00 am   0 comments
இலக்கிய மாநாட்டுப் படங்கள் 2

மாணவர்களின் பதிவு

அரங்கில் இலக்கிய ஆர்வலர்களும் மாணவர்களும்

திருமாவளவன், வே எழிலரசு

பா.வெங்கடேசன், பிரதிபா ஜெயச்சந்திரன், அசதா( சிறுகதை அரங்கில்)
posted by mathibama.blogspot.com @ 2/09/2010 07:59:00 am   0 comments
இலக்கிய மாநாட்டுப் படங்கள் 1

கல்லூரி முதல்வருடன் எழுத்தாளர்கள் சந்திப்பு

அமிர்தம் சூர்யாவின் " கடவுளைக் கண்டு பிடிப்பவன்" கீதாஞ்சலியின் " திருமதியாகிய நான் " நூல் வெளியீடு

திருமாவளவன் உரை
posted by mathibama.blogspot.com @ 2/09/2010 07:46:00 am   0 comments
Monday, February 08, 2010
இலக்கிய மாநாட்டுப் படங்கள்


நிகழ்வின் இறுதி மகிழ்வில்
posted by mathibama.blogspot.com @ 2/08/2010 06:04:00 pm   1 comments
Saturday, February 06, 2010
மலையாளக் கவிஞ்சர்களின் பங்களிப்பு


posted by mathibama.blogspot.com @ 2/06/2010 03:14:00 pm   1 comments
பாரதி இலக்கிய சங்கத்தின் இலக்கிய மாநாட்டுப் படங்கள்


posted by mathibama.blogspot.com @ 2/06/2010 11:03:00 am   2 comments
Friday, February 05, 2010
பாரதி இலக்கிய சங்கத்தின் இலக்கிய மாநாட்டுப் படங்கள்



posted by mathibama.blogspot.com @ 2/05/2010 11:45:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates