சூரியாள்

Thursday, March 30, 2006
மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்


இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று தகவல் தொழில் நுட்பமும், மாற்றங்களில் ஒன்று மனிதன் இடம் பெயர்வதும்
தகவல் தொழில் நுட்பம் உலகை சன்னல்களும் வாசல்களும் இல்லா பெருவெளியாக மாற்றியிருப்பது உண்மைதான் , பெண்ணுக்கு மட்டுமல்ல மனிதத்திற்கே , இதுவரை பயன்பாட்டில் இல்லாத மிகப் பெரிய வெளி உலாவக் கிடைத்திருப்பது உண்மைதான். நமக்கும் மகிழ்வுதான் என்ற போதும் புதிய வழிகளில் பயணிப்பவர்கள் வர இருக்கும் புதிய இடர்ப்பாடுகளையும் சந்திக்க நம்மை தயார் படுத்திக் கொள்வதும் இன்றியமையாததாகின்றது. இன்று திறந்திருக்கும் வெளியிலிருந்து பல்வேறு கலாசார பண்பாட்டு மொழி , வர்க்க , பொருளாதார பாதிப்புகள் நமக்குள்ளும் சாதக பாதகங்களைத் தந்து போவதும் தவிக்க முடியாததாயிருக்க இன்று அவை பெண்ணியச் சிந்தனைக்குள் தந்து போய்க் கொண்டிருக்கும் எல்லாவிதமான மாறுதல்களையும் நோக்கும் கட்டாயத்தில் இருந்து வருகின்றோம்

மொழி காலம் காலமாக விஞ்ஞானம் இயந்திரங்கள் என்று வளர்ச்சி வராத காலங்களில் கூட மனித உணர்வை ஒரு இடமிருந்து மற்ற இடத்திற்கு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எல்லாம் அழிந்த போதும் அழிந்து விடாத மனித வாழ்வின் எச்சமாக பதிவாக ஆவணமாக இருந்து கொண்டிருக்கும் ஒரு ஊடகமாக இருந்து வó¾¢Õ츢ýÈÐ. þÐŨà எழுதப் பட்ட இலக்கியங்களின் பெரும்பான்மை ஆண்களாலயே எழுதப் பட்டிருக்கிறது அதுவும் காலம் காலமாக தனக்கு உபயோகப் படுகின்ற விதத்தில் உடமைப் படுகின்ற விதத்தில் அதையும் பெண்ணே மனமுவந்துசெய்து விடுகின்ற செய்ய நினைக்கின்ற கருத்தியல்களை வடிவமைக்கிற ஊடகமாகத்தான் இன்று வரை இருந்து வந்திருக்கின்றது. ஆதிக்க சமுதாயம் ஆணுக்குள் எப்படி ஆதிக்க எண்ணங்களை திணித்திருந்ததோ அதே போல் பெண்ணுக்குள்ளும் அடிமை மனோபாவங்களை திணித்ததோடு மட்டுமல்லாது அதை அடையாளம் காண முடியாத அளவுக்கு பெண்ணையும் வைத்திருந்ததை காலம் காலமாக எழுதப் பட்ட இலக்கியங்கள் சொல்லும் காட்சியாக நம் முன்னால் இருக்கின்றன.
முனையடிக்கப்பட்ட கயிற்றில் கட்டப் பட்ட செக்குமாட்டுத் தனமான யாராலோ தீர்மானிக்கப் பட்ட வாழ்வு மாறிய காலங்களிலும் கூட கயிறுகளின் நீளம்தான் கூடியிருக்கின்றதே தவிர முனைகள் பிடுங்கப் படவில்லை.
ஒவ்வொரு நிஜமான படைப்பாளியுமே இதுவரை இருந்தவற்றின் மீது தனக்கு ஏற்படுகின்ற கேள்விகளை மாற்றுப் பார்வையில் சமூகத்தின் முன்வைத்து அதன் மூலம் புதிய சமுதாயக் கருத்தியல்களை உருவாக்கவே முனைகின்றான் அப்படி இருந்த போதும் பெண் பக்க பார்வை இருளுக்குள்ளேயே இருந்து வருகின்றது
எனது தொடர் வாசிப்பில் புகழ் பெற்ற எழுத்துக்களாய் முன் வைக்க பட்ட நாவல்கள் கூட எனக்கு என் கருத்தோட்டங்களுக்கு , பெண்ணுக்கு விரோதமாகவே தெரிகின்றது. நோபல் பரிசு பெற்ற அந்நியன் நாவல் தொட்டு, இன்¨Èய எஸ். ராமகிருஷ்னணின் நெடுங்குருதி வரை கவனிக்கப் படாமல் விடப் படுகின்ற பகுதி பெண்ணுக்கு விரோதமாக மாறி விடக் கூடிய அபாயம் இருந்துகொண்டே இருக்கின்றது.
அதே போல் எது நல்ல எழுத்து என்று தீர்மானிப்பவர்கள் ஆண்களாகவே இருக்கின்றார்கள். எழுதப் படுகின்ற பெண் படைப்புகளும் ஆண்களின் அங்கீகாரத்திற்கே காத்திருக்கின்றன. பா. விசாலத்தின் “ மெல்லக் கனவாய் பழங்கதையாய் “ எனும் நாவலெனக்கு மிக முக்கியமான ஒன்றாய் தோன்ற . அது பேசப் படாமல் போன நாவல்தான்.அது அளவுக்கு அதிகமாக பேசுகின்றது. அலுப்பைத் தருகின்றது எனும் குற்றச் சாட்டு முன் வைக்கப் படுகின்றது. ஆம் பெண் அப்படியான அலுப்பு தரக் கூடிய வாழ்க்கையைத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அதை எழுதினால் அலுப்பாகத்தான் இருக்கும். அது இதுவரை ஆண்களிடமிருந்து வராத குரல். என்று பார்க்கக் கூடிய பார்வை பெண்களிடம் கூட இல்லை.
இன்றைக்கு ஆணுக்கு நிகராய் பெண் எதுவும் செய்ய முடியும் என்ற நிலைமை சாத்தியமாக பெண்ணுக்குள் இதுவரை பார்க்கப் படாதிருந்த பக்கம் பார்க்க சாத்தியமாகின்றது. பெண் கேள்வி எழுப்ப வேண்டிய நிர்பந்தமும் , புதிய குரலாக இதுவரை ஒலிக்காத குரலாக உணரப் படலாம். என்னைப் பொறுத்தவரை அந்த குரல் கூட புதிய அடைமொழிக்குள் தன்னை அடைபட அனுமதிக்கக் கூடாது என்று தான் சொல்வேன்.

சுற்றி வளைத்து
வேலி கட்டி
அதற்குள் என்னைச்
சுவாசிக்கச் சொல்வதுதான்
நீ காட்டும் சுதந்திரம்

சுயத்தையெல்லாம்
ஒப்படைத்து விட்டு
வைக்கோல் பொம்மையாகி
உன் இழுப்புக்கு
ஆட வேண்டுமென்றே
நீ நினைக்கின்றாய்
நீ சொல்வது தான் வேதம்
நீ காட்டுவது தான் உலகமெனில்
எனக்கெண்று
இதயமும் கண்களும் எதற்கு வன்மப் படுதல், அனார்

இச்சமூகம் உனக்கான் இயல்புகள் என்று கட்டமைத்து வைத்திருக்கின்ற இயல்புகளை தாண்டிய வெளிக்கு பயணப் படுதலில் பல சிக்கல்கள் இருக்கின்றது ஒன்று நாங்கள் புதிய வெளியாய்த் தீர்மானிப்பது இன்னும் மோசமான ஒன்றாகவும் இருந்து விட வாய்ப்பும், இன்னொன்று புதிய வெளிகளைத் தேடுவதிலேயே தொலைந்து போகவும் , தானே முடங்கிக் கொள்ளும் மனோ நிலைக்குத் தள்ளப் படுவதும். அப்போ புதிய வெளிகளை கண்டடைதல் மட்டுமல்ல
அதில் எதை கட்டமைக்கப் போகிறோம் என்பதை தெளிவாக திட்டமிடா விட்டால் ஏற்கனவே ஆக்கிரமித்து பழகியுள்ள சிந்தனைகள் கருத்தியல்கள் புதிய வெளிகளையும் சூழ்ந்து விடும் வாய்ப்பு இருக்கின்றது.
ஆண்டாண்டு காலமாக பெண்ணுக்கு அளிக்கப் பட்ட சாபங்களும் சரி வரங்களும் சரி ஆணுக்கு சாதகமானதாய் பெண்ணுக்கு வலி இல்லாது சிலுவையறையக் கூடியதாகவும் தான் இருந்து வந்திருக்கின்றது.
பெண் உணர்வுகள் புனிதம் ஒழுக்கம் குடும்பகௌரவம் எனும் பேரில் பேசப் படாமலும் சொல்லப் படாமலுமே இருந்திருக்க இன்று கலகக் குரல்களாக தன்னை வெளிப் படுத்திக் கொண்டு வரும் குரல்கள் எதை சொல்லுகின்றன. அப்படி சொல்வதனால் விளைகின்ற மாற்றங்கள் பெண்ணுக்கு சாதகமானதா? பாதகமானதா? பெண்ணுக்கான நிஜமான பிரச்சனைகளை முன் வைக்கின்றதா?
இவ்வளவு அறிவியல் பொருளாதார கல்வி என மாறிய போதும் , வாழ்வியலில் நாடு மொழி சமயம் வேறு பாடின்றி பெண்ணை தீர்மானிப்பவன் ஆணாகத்தானிருக்கின்றான். தேசிய விடுதலையில் பெண்ணுக்கான விடுதலையை இணைத்தே கொண்டு வர முடியாத துரதிர்ஷ்டம் தான் நேர்ந்திருக்கின்றது. எழுத்திலும் அதில் இயங்குபவர்கள் மத்தியிலும் அதன் பிரதி பலிப்பு தொடரத்தான் செய்கின்றது.ஆக ஆண் தீர்மானிக்கின்ற ஒன்றாகத்தான் இன்றும் பெண் எழுத்து இருந்து வருகின்றது
ஆதிக்க மனோபாவங்கள் தீர்மானிக்கின்ற ஒன்றை மறுதலித்து இனிவரும் சந்தர்ப்பங்களிலும் தீர்மானங்கள் பெண்ணுக்கு விரோதமாக போகா வண்ணம் பேசப் படுவதாக இருப்பதை வழி மொழியும் குரலையே நான் பெண் மொழியாக அடையாளம் காண்கின்றேன். அந்த மொழியும் கூட பெண்ணுக்கான மனித இருப்பை பேசும் மொழியே .
நானூறு பக்கம் விடாது எழுதப் பட்டிருக்கின்ற நாவலில் மருந்துக்கும் கூட பெண் இல்லாமல் போக நேர்ந்திடுகின்றது. அதில் வருகின்ற பெண்கள் எல்லாம் ஆண்களின் சுகத்துக்கானவர்களாகவும் அவர்கள் வடிவமைத்த பெண்களாகவே இருக்க, பெண்களின் எழுத்துக்களின் வீச்சைப் பார்ப்போம்.
எனக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
உமது கதைகளில்
யாம் இல்லை கனி மொழி
இப்படியாக புலம்பியது போனது. பொதுவாக சொல்வதுண்டு பெண் எழுத்துக்கள் புலம்பல்கள் என்று ஆனால் இன்று புலம்பல்களாக தம் வலிகளை சொல்லாமல். ஓங்கிய குரலில் அதட்டி கை மேல் இருக்கும் கால் நகர்த்தச் சொல்லும் குரல் புதிய குரல்.
உன் மேற்பார்வையின் கீழ்
வாழ்வை
கோப்புகளாக்கி
பூட்டி வைக்கவும் முடியாது

நான் அதிசயப் புதிரோ
ரகசியப் புதையலோ அல்ல
ஒழித்து புதைத்து விட்டு
பூதமாய் காவல் காக்க
……………..
எனது குரல்
தனித்துவமானது
என் ஆற்றலும் சிந்தனையும்
உறுதியானவை

திருத்தச் சட்டங்களாலும்
புதிய ஏற்பாடுகளாலும்
வேலிகளை விசாலப் படுத்தாமல்
விலகி நில் கோரிக்கை , அனார்

பல பெரும் இலக்கிய வாதிகள் சொல்வதுண்டு பெண் எழுத்தில் அரசியல் இல்லை அது வெறும் வீட்டுக்குள் சின்ன வட்டத்துக்குள் முடங்கி கிடக்கின்றது என்று. எனக்குத் தோன்றுகின்றது பெண் எழுத்தில் தான் அவளது பார்வையில் அவள் காணுகின்ற ஒவ்வொரு பொருளும் அவள் பேசுகின்ற விடயமும் அவளுக்கானதாய் மட்டுமல்லாது உலக விசயமாகவும் மாறிப் போகக் கூடிய சாத்திய கூறுகள் இருக்கின்றன.

யுத்த கால
இரவொன்றின் நெருக்குதல்கள்
எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்கள் ஆகிவிடும் சிவரமணி

சிவரமணியின் இக்கவிதையில் தன் குழந்தைகளை பற்றி எழுதத் தொடங்கும் பெண் பார்வையில் ஒரு போர்க்கால அரசியல் மெல்லிய , இழையாக அதே நேரம் வலுவான இழையாக இருப்பதை காண முடிகின்றது.
ஏற்கனவே இருந்த கருத்தியல்களை மறுத்து இன்னுமொரு புதிய கருத்தியலை உருவாக்க தலைப்படுமானால் அது அரசியல் கவிதை. ஒவ்வொரு பெண்ணும் ஆணின் பார்வையிலேயேதான் பார்க்க பழக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றாள். இதிலிருந்து மாறுபட்டு சுயமாக வெளிப்பட்ட சிந்தனைகளை ஒத்துக் கொள்வதென்பது பலருக்கும் இயலாததாயிருக்க அதை தொடர்ந்து செய்வதே ஒரு அரசியலாகின்றது பெண்ணுக்கு
என் வெற்றிகளை
உன் பெருந்தன்மையாய்
மாற்றிப் போடும் சூழ்ச்சி என்பதிலும்

போர்க்கள விதிகளை
என் சந்ததிகளை முன்னிறுத்தி
முடிச்சுப் போடும் நீ என்பதிலும்
அரசியலாய் பார்க்க வேண்டிய கோணங்கள் இருக்கின்றது
பெண்களின் வாழ்க்கை பல அரசியல்களை உள்ளடக்கியது.
உனக்கு பொழுது போக்காகவும்
எனக்கு போராட்டமாகவும்
போய் விட்டது
(என்) வாழ்க்கை

தாழ்மையை
பற்றுதலை
உன் திமிர் பிடித்த அதிகாரங்கள்
தாட்சன்யமின்றி
தண்டித்தன

தொன்மங்கள் நம் இலக்கியத்தின் புதையல்கள். அதை சரியாக இன்னமும் நாம் கண்டடையவில்லை. தொன்மங்கள் தொடர்பாக ஒரு வகை மலினப் புரிதல்களுக்கே நாம் இந்த ஆதிக்க சமுகத்தால் பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறோம். கல்லைக் கண்டால் நாயைக் கணோம் நாயை கண்டால் கல்லைக் காணோம் எனும் பழமொழியை எபடி தத்துவார்த்த ரீதியாக பார்க்கத் தவறி நாயையும் கல்லையும் பார்க்கின்ற போதெல்லாம் நினைவு கூறுகிறோமோ அது போல் சில தொன்மங்கள் பொருள் மாறி குணம் மாறி போய் விட்டது. ஆண்கள் பார்வையிலேயேதான் அது நமக்கு வழங்கப் பட்டிருக்கின்றது.அதையும் மாற்றி யோசிப்பது நம் கடமையாயிருக்கின்றது
தாகம் தீர்க்கும் மணல்கள்

விடிகின்ற பொழுதொன்றில்
சேவல்களாய் கூவிய
இந்திரன்கள் திகைக்க
கமண்டலமிருந்து கை ஊற்றிய நீர்
தெளிக்கத் தேடிய ஜடப் பொருள்
காணாது கௌதமனும் சிலையாக

தின்று விடவும்
சாபத்தினால் உறைய விடவும்
நீங்கள் தீர்மானித்திருந்த
நானென்ற
என் உடல்தனை அறுத்து கூறிட்டு
திசையெங்கும் எரிய
சூனியத்தில் திரிந்தலைகின்றன


உடலில்லா எனை
தழுவ முடியாது இந்திரன்களும்
தலை சீவ முடியாது பரசு ராமன்களும்
சாபமிட முடியாது கௌதமன்களும் இருக்க

சேவல்களால் கூவாத பொழுதிலும்
சூரியன்கள் உதிக்காத தருணங்களிலும்
எனக்கான விடியல்கள் உதயமாகின்றன

ஆறுகள்
சாபமேற்ற அகலிகைகளால் நிரம்பியும்
நீர்கள் எல்லாம்
பரசுராமன் வெட்டித் தீர்த்த
உடல்கள் மிதந்தலைய
தீரப் போவதில்லை உங்கள் தாகங்கள்

வெளியெங்கும் என் காதல்கள்
நானே தீர்மானித்தாலொழிய
பானைகளாகாது சிதறிக் கிடக்க

ஒப்பீடுகள் தொலைத்து
உணர முடிந்த கணமொன்றில்
உடலாக மட்டுமல்லாது
இயற்கையின் எல்லாமாகி
மணல்களும்
நீர் சுமக்கும் பானையாகி
தாகம் தீர்க்கும் அதிசயம் காண்பாய் திலகபாமா

என் மௌனங்களை மேடையாக்கி
மரபுத் தூபப் புகை எழுப்பி
புனிதக் கூண்டுகளை வடிக்கிறவர்களே
நான் நிமிர்ந்தெழும் நல்லோரையில்
இந்த பிரமிடுகள் எல்லாம்
என் சுட்டு விரல் குடைகளே
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் மீனாட்சி



இன்றைக்கும் பெண்களுக்கு ஆதரவாக என்று பல ஆண் கவிஞர்கள் பேசும் போது அது அபத்தமாக தொனிக்க ஆரம்பித்து விடுகின்றது. அவர்கள் பேசுகின்ற தொனிகளில் ஆடு நனைகிறதே என்று அழும் ஓநாயின் குரலாகவே ஒலிக்கிறது.
. இன்னமும் இலக்கியவாதிகள் மத்தியிலும் கூட “ பாலியல் சனநாயகத்தை” மதிக்கிறவன் எனும் அத்திப் பழ வார்த்தைகளுக்கு ள் நெளியும் புழுக்களை அடையாளம் காணத் தவறி விடுவதை முற்போக்கு பெண்ணியம் பேசும் பெண்களிடம் கூடப் பார்க்கின்றேன்
வாசகனாய் ஒரு படைப்பாளியின் பின் புலங்கள் கவிதை வாசிப்பவனுக்கு தேவையில்லை என்றாலும், ஒரு சமூகத்தை அவதானிப்பவராக செயல்பட வேண்டிய கட்டயத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்க பெண்ணியம் பேசுவது அரசியலிலும் சரி இலக்கியத்திலும் சரி புகழ் அல்லது பொருள், சிலநெரம் பெண் சுகம் தேடுவதற்கான ஆயுதமாக கருவியாக இன்று மாறியிருக்கின்ற சூழலில் இவ்வளவு நீண்ட அரசியலை சாக்கடையின் வீச்சத்தை தனது கவிதைகளில் பெண் கவிஞர்களால் தந்து போக முடிகின்றது
காசு கொடுத்து
ஆம்பிளை வாங்கி
அதற்கு பணிவிடையும் செய்யும் அவலங்கள்
நான் சொல்ல
விழி விரித்துக் கேட்கிறாள் மகள்
ராஜாராணி கதை கேட்கும் பாவனையில்
போர் தருகின்ற
சோகங்களுக்குள்ளாலேயும்
ரகசியமாய்
சிலிர்த்துக் கொள்கிறேன்
புலம் பெயர்ந்தமை
தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம்
என் மகள்களுக்கும்
நம் பெண்களுக்கும் வசந்தி ராஜா

உறிஞ்சி உறிஞ்சி
கனவுகளைக் குடித்தது
இரவுப் பெரும் நுளம்பு அனார்

இந்த இரு கவிதைகளும் அதிர்வுகளைத் தரவேண்டும் என வார்த்தைகளைத் தேடி எடுக்காது எளிய வார்த்தைகளில் உணர்வுகளை அதிரக் கொட்டி விட்டுப் போகின்றது .
இதுவரை இருந்திருந்த படிமங்களை மாற்றிப் போடுகின்றது.
வேர்களில் எடுத்த வலி
வண்டுகளோடு குலாவும்
பூக்களுக்குப் புரிவதே இல்லை அனார்

இதுவரை பூக்களை பெண்களுக்கு உவமையாக்கி படிமமாக்கி சொல்லித் திரிந்த மொழிக்கிடை எந்த வித பிரயத்தனமுமின்றி அதீதங்களுமின்றி மாற்றிப் போட்டு விடுகின்றது.
எத்தனை தீப்பந்தங்கள்
எரிந்தாலும்
சூரியனைப் பற்றவைக்க
உன்னால் முடியாது அனார்
ஒருகவிதையின் முக்கிய அம்சமே கவிதைக்குள் இடமும் காலமும் உயிர்த்திருப்பது தான் . பெண்களின் கவிதைகளில் இதுவரை பாடல் பெறாத புதிய பொருட்கள் அவர்களின் இருப்பாக இருந்தவற்றை கேள்வி எழுப்பவும் , அவளுக்கு மட்டுமாய் இருந்திருந்த எண்ணங்களை பொதுமைக்கும் கொண்டு வருகின்றது
அம்மி

வேகமாய்த் திரும்புகையில்
இன்றும் காலில் இடறிற்று
கருங்கல் அம்மி
‘அரைக்கவும் ஆட்டவும்
என்னென்னவோ இருக்க
எடத்தை அடச்சிக்கிட்டு
ஏந்தான் இருக்குதோ?
இப்படி
அன்றாடம் மாமியார்
கண்டனம் தெரிவித்தும்
ஆசை அம்மியை
அறுத்தெரிய மனசில்லை

அம்மா வீட்டில் இது
சும்மாவா இருந்தது?
வெள்ளைத் தேங்காயும்
கருப்பு மிளகும்
பச்சை மிளகாயும்
சிவப்பு வற்றலுமாய்
தால லயத்தோடு
அம்மா அரைக்கையிலே
ஆத்துக்கு அக்கரையிலே
அழகருக்கும் வாயூரும்

இன்றோ
அவசர உலகத்தில்
அடுக்கு மாடிக் குடியிருப்பில்
பதுங்கிக் கிடப்பதற்கு
முற்றமோ புழக்கடையோ
ஒதுங்கிக் கிடப்பதற்கு
திண்ணையோ இல்லாமல்
கவனிக்க ஆளின்றி
காய்ந்திருக்கும் வெறுங்கல்லாய்
வயோதிகம் போல் அம்மியும்
ஆயினும் ஓர் நாள்
மழைநாள் இரவில்
மின்சாரம் தடைபட்டுச்
சிம்னி கதகதப்பில்
ராச்சோறு சுவைப்பதற்காய்
பருப்புத் துவையலதை
கருங்கல் அம்மியிலே
வேடெல்லாம் மணந்தது
அம்மாவின் வாசனையில் வைகை செல்வி

இக்கவிதையை நகரத்து குடியிருப்பின் வலிகள் மதுரை கள்ளழகர் திருவிழா, அம்மா பாட்டி கவனிக்கப் படாத வயோதிகம் மாமியார் மருமகளிடையேயான தர்க்கங்கள் என எத்தனையோ வெறும் அம்மியை முன்னிட்டு வைக்கப் படுகின்றது. இக்கவிதைகளில் அம்மி அம்மியாக இல்லாது மொழி பெண்ணுக்கான மொழியாகவும் மட்டுமல்லாது , பொதுப் பார்வைக்கும் வருகின்றது.
வருகின்றது. இதுவரை கவிஞர்களிடமிருந்து வராத பார்வை.
பல்லக்கு தூக்கி

நான் உன்னுடைய நாட்டிற்கு
திரும்பி வந்த அகதி
கடந்த காலப் புழுதி மயக்கம் தெளிய
இப்போது
உன் மூச்சுக்கள் நிறைந்த
காற்றை சுவாசிக்கிறேன்

என்னதான் பெண் மொழி பெண்ணியம் என்று பேசினாலும் நமை அறியாமலேயே ஆதிக்க சமுதாயத்தின் மூச்சுக் காற்றை சுவாசிப்பவர்களாகவே இருக்க நேருகின்றது. இதை உணர்ந்து அடையாளம் காணத் தொடங்கும் பெண்ணினம் புது மொழியை , புதிய சிந்தனை வழியாக கைகொள்ளும்
ஆனால் இன்று பெண் மொழி உடல் மொழி என்ற பதத்தை எங்கிருந்து பெற்றோம்.
Women language, body language
மொழி பெயர்ப்புகள் சில நேரம் சரித்து விட்டு விடுகின்றன.
பெண் மொழியின் பரப்பு, மொழியின் இரத்தமும் சதையுமான உயிர்ப்பு இப்படியாக அர்த்தப் படுத்தலாமே அல்லாது உடல் மொழி , என மொழி பெயர்ப்பது விண்மீனை skyfish என்று மொழி பெயர்ப்பதற்கு ஒப்பாகும்.

வயிற்றுப்பசிக்காக
இருட்டில்
நிர்வாணப்பட்டது
சமூகக்குற்றம்.

எந்தப் பசிக்காக
அறிவுஜீவி கவிதைகள்
வெளிச்சத்தில்
அம்மணமாய்
வீதியில் ஊர்வலம் ?

உடல்கூட ஆயுதம்தான்
கண்ணகிக்கு-
ஈழத்து கண்மணிக்கு-
மணிப்பூரின் பெண்மணிக்கு.
உங்களுக்கு?

எழுதுங்கள் உடல்மொழியை
சிரங்குகள் இல்லாமல்.
அட.. சிரங்கு திணவெடுத்தால்
எப்போதாவது
சொறிந்து கொள்ளுங்கள்.
ஆனால் சொறிவது மட்டுமே வாழ்க்கையல்ல
சொறிந்து சொறிந்து
அதுவே சுகமாகிப் போனால்
எப்போது கிடைக்கும் இயல்பான
உங்கள் உடல்மொழி.?

பாலியல் விதிகளின்
கட்டுடைக்கப் பிறந்த
உங்கள் கவிதைகள்
உங்களையே
கட்டிப்போட்டு
உங்கள் முகம்மறைத்து
உங்களின் எதைக் காட்டுகிறது?
வன்புணர்ச்சியில் சிதைந்தால்
போராடலாம். நீங்களோ
தன்புணர்ச்சியில் அல்லவா
புதைந்துவிட்டீர்கள்.
எப்படி எடுக்கபோகிறேன்
உடைபடாமல்
உங்கள் தாழிகளை புதிய மாதவி



ஆக உடல்மொழி என்று மொழி பெயர்த்து விட்டு, உலக மயமாக்கலில் கடன் வாங்கிய அந்த உத்தியில் உடலை பற்றியும் உடல் சார்ந்த உணர்வுகளை பற்றியும் எழுதுவதுதான் சுதந்திரம் என்று இன்று எழுத்துக்கள் வலம்வரத் துவங்கியுள்ளன
காலம் காலமாய் ஒரு சிலருக்குள் இருந்திருந்த இயற்கையியலும் அதீதப் புனைவியலுமான படைப்புகள் “ துணிவான படைப்புகள்” எனும் பதாககைகளோடு இன்று உலாவருகின்றது. அதீதப் புனைவியல் மூலம் உலக நடப்பியலிருந்து தப்பித்தலைத்தான் செய்து வருகின்றன
எந்த வார்த்தையும் இலக்கியத்தில் தீண்டத் தகாத வார்த்தை அல்ல. ஆனால் பெண் உடல் உறுப்புக்களை பற்றி பேசுவதாலேயே பெண்மொழியாகவும் ஆகி விடாது.
மொழி என்பது வெறும் வார்த்தைகளின் கூட்டம் அல்லாது உணர்த்தப் படுகின்ற விசயத்தினாலேயே வலுப் பெறுகின்றது
உடலை கொண்டாடுவதாகக் கிளம்பியது சரிதான். ஆனால் காலம் காலமாக உடலைக் காரணமிட்டே நம்மை முடக்கத் துவங்கியிருந்த சமூகத்தின் முன் உடல் மட்டுமல்ல பெண் என்று நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குள் பெண் இருக்கின்றாள்.
பெண்ணின் வேலைகள் சமூகப் பணியாக பார்க்கப் படாமல் தனிமனித வேலையாக பார்க்கப் பட்டு மலினப் பட்டுக் கிடப்பதை உடல்மொழி தூக்கி நிறுத்துமா?
அழகிய பெண்களை கொடுங்கள் கவிதாயினிகளாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லித் திரிபவர்களுக்கும் , இதுவரை என்னுடன் படுக்காத பெண் கவிஞரே இல்லை என பெருமை பேசும் கவிஞர்கள் பத்திரிக்கை காரர்கள் , இதுதான் கவிதை இன்றைக்கு இதுதான் ட்ரெண்ட் , யாரும் பேசாத விசயத்தை பேசுங்கள் என எழுதத் தூண்டுகின்ற அதே இடத்திலிருந்து எழுதப் படுகின்ற உடல்மொழிக் கவிதைகள் அந்த பெண் கவிஞர்களேயே தூண்டிவிட்டவர்கள் இடமிருந்தாவது காப்பாற்றுமா?

சமூகத்தை மாற்றாது மொழியில் மட்டும் மாறுதல் உலகமயமாக்களின் பெட்ரோல் விலையேத்தம் அடுப்படியில் அடுப்பு வரை பாதிப்பதை ,உணர்த்துவதையும், தேசிய போராட்டங்களும் தேடித் தராத பெண்ணுக்கான மனித இருப்பையும் பெற்றுத் தருமா?
பெண் சுயமாக வெளிக்கிளம்பி விடக் கூடாது. படுக்கையறையிலும் அடுப்படியிலும் இருப்பதே சுகம்என தீர்மானித்து வலை விரித்து வைக்கின்றார்கள். மொத்தத்தில் பெண்ணுக்கெதிரான சதி அவர்களே அறியாமல் நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது

பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு உண்மையான எதிர்ப்பாக இல்லாமல்கட்டுப்பாடற்ற தனி மனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறிவிடும் அபாயம் இருக்கின்றது

பெண் மொழி , பெண்ணியம், தலித்தியம் என்கின்ற சொற்கள் கூட மீண்டும் பேதங்களைத்தான் நிலை நிறுத்தப் பார்க்கின்றதுபெண்களுக்கான அல்லது ஒடுக்கப் பட்டவருக்கான உரிமை என்றல்லாது சக மனிதத்திற்கான உரிமை , கூடுதலாக காலம் காலமாக ஒடுக்கப்பட்டதை கணக்கிலெடுத்து தரப் படுகின்ற அங்கீகாரங்கள் ( சலுகைகளல்ல) என்ற வகையில் நமக்குள் இருக்கின்ற ஆதிக்க , அடிமை மனோபாவங்களைத் தகர்த்தெறிய வேண்டும்.
இவ்வளவு காலமும் ஆண் எழுதினான் பெண் எழுதினாள் என்ன?உடனே எழும் கேள்வி இது. பழிக்கு பழி வாங்குதல் என்பதை விட பழி செய்ய முடியாத தளத்தை உருவாக்குவது தான் முதன்மை பணியாக இருக்கிறது பெண் ஆண் போல் மாறுவது சுதந்திரமல்ல, அவரவர் அவரவராக இருப்பதுவே சுதந்திரம் சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் எழும் போது விட்டுக் கொடுத்தல் போய் விடுமோ பயம் வருகின்றது. நீ எனக்காக விட்டுக் கொடுக்கலாம் நான் உனக்காக விட்டுக் கொடுக்கலாம், ஆனால் பெண் என்பதற்காக விட்டுக் கொடுக்க நேருமானால் எதிர்ப்பு குரல்களை பலத்து ஒலிப்போம். அது பெண்ணுக்கான மனித இருப்பை ஒலிக்கும் மனித மொழியாக பொதுமைக்குள் உணரப் பட வேண்டும்

நானே பாரதி
என் காலத்தின் கவிச் சக்ரவர்த்தினி
என் கவிதை சோதி மிக்க நவ கவிதை
இந்த விதை களர் நிலங்களிலும்
கிளர்ச்சி செய்ய்யும்
மண் கீறும்
ஊற்றடைப்புகளை
வெடியெனத் தகர்க்கும்
இரா மீனாட்சியின் வரிகள் நமக்கு பாதையிட்டு செல்லட்டும்
posted by mathibama.blogspot.com @ 3/30/2006 08:10:00 am   0 comments
Monday, March 20, 2006
நிகழ்வு
நவீன கலை இலக்கிய பரிமாற்றம்

இடம்: அபிராமி ஹோட்டல்
(அரசினர் குழந்தைகள் மருத்துவமனை அருகில்)
எழும்பூர்.
நாள் :25.3.06 , சனிக் கிழமை, 3மணிக்கு
வரவேற்புரை: சொர்ணபாரதி
தலைமை : தமிழ் மணவாளன்
சிறப்புரை : “பாஸ்டன் பாலாஜி” எனது வாசிப்பனுபவம் என்றும்
திலகபாமா “மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம் “ என்றும்
பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள்.
தொடர்கின்ற கலந்துரையாடலில் வைகை செல்வி கவின் கவி , விஜயேந்திரன், சூர்ய ராஜன், பாக்யம் சங்கர், விஜயன், உதயகண்ணன், வில் விஜயன் ஆகியோர் பங்கு கொள்ள இருக்கின்றார்கள் உடன் நீங்களும்
நன்றியுரை: அமிர்தம் சூர்யா

அன்புடன் அழைக்கும்
வைகறை இலக்கிய வாசல்
கல்வெட்டு பேசுகிறது-இலக்கிய இதழ்
பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி
posted by mathibama.blogspot.com @ 3/20/2006 10:05:00 pm   0 comments
Friday, March 17, 2006
சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின்


சி. ஜெயபாரதன், கனடா


இது நம்ம பூமி!
இது நம்ம வானம்!
இது நம்ம தண்ணீர்!
இம்மூவகைச் சூழ்வெளி வளத்தையும்
செம்மையாய்க் காப்பது,
நம்ம பணி!

இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியும் பெண்டிரை ஆணாதிக்கப் பரம்பரை பாலியல் சீண்டல்களால் பேரின்னல் கொடுத்து, மன வேதனை தரும் கொடுமைகளைப் பாரதக் கலாச்சாரக் கூட்டங்களில் முரசடித்து வருபவர், வைகைச் செல்வி. தொழிலகங்களில் ஊழியம் புரியும் மாதர்களின் தொழில்மூலம் ஏற்படும் உடல்நலச்
சீர்கேடுகளை உலகப் பேரவைகளில் உரையாற்றிக் காட்டி வருபவர், வைகைச் செல்வி. "கூடுவிட்டுக் கூடு பாயத் தனிப் பறவைக்குக் காலெதற்கு? சிறகெதற்கு?" என்று கேட்கும் வானம்பாடி வைகைச் செல்வி, தமிழகத்தில் திருச்சி, நெய்வேலி, மதுரை, சிவகாசி, சென்னை, கரூர், கோவை, திருப்பூர், நாகை போன்ற தளங்களுக்கு அடிக்கடிச் சென்று சூழ்வெளி மாசுப் பிரச்சனைத் தீர்வுகளில் பங்கெடுத்தும், பெண்டிர் உரிமை பற்றிக் கருத்தரங்குகளில் உரையாற்றியும் வருகிறார். தனிப் பறவையாகக் காலில் சக்கரங்கள் பூட்டிக், கைகளில் இறக்கைகளைக் கோர்த்து, அப்பணிகளைக் கனிவோடும், பூரிப்போடும், அயராது, அலுக்காது செய்து வரும் வைகைச் செல்விக்கு இணை எவருமில்லை. "செவிக் குணவில்லாத போது, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்ற வள்ளுவர் வாக்குப்படி வைகைச் செல்வி, ஊழியப் பணிபுரிந்து ஓய்வான வேளைகளில், எழுத்துப் படைப்புகளில் ஈடுபட்டுக் கவிதை, கட்டுரை, கதைகள் எழுதி வருகிறார். பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களான இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்று, வைகைச் செல்வியின், "அம்மி" என்னும் "கவிதைகள் நாற்பது" புதுயுகத் தமிழ்க் காவியப் பூங்காவில் பூத்த வாடா மலர்கள்!

வைகைச் செல்வியின் சாதனைகள்

வைகைச் செல்வி என்னும் புனைப்பெயர் போர்த்திய ஆனி ஜோஸ்•பின் மதுரையில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, மதுரையில் மேற் படிப்பை முடித்து மூன்று கல்லூரிப் பட்டங்கள் [M.A.(Eng.Literature), M.Com., M.B.A.) பெற்றவர். அவற்றிலும் திருப்தி அடையாமல் மேலும் சிறப்பு நுட்பங்களைப் பயின்று வேறு சில மேல்நிலை டிப்ளோமாக்களையும் (Post Graduate Dipomas in Environmental Laws, Industrial Pollution Control, Labour Laws & Computer Applications) வாங்கியவர். "கற்றது கடுகளவு! கல்லாதது கால் பந்து அளவு", என்னும் கல்வி நெறியை மேற்கொண்டு, முனைவர் பட்டப் படிப்புக்குத் [Ph.D. in Occupational Health Hazards of Women in Textile Industies & Environmental Management] தன்னைப் பதிவு செய்திருக்கிறார். தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் ஓர் மேலதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

பள்ளிபருவம் முதலே கவிதைகள் எழுதத் துவங்கி கடந்த 20 வருடங்களாகக் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். கல்லூரிப் பட்டமளிப்பு விழாக்கள் சிலவற்றிலும், உலக சூழ்மண்டலப் பேரவைகள் சிலவற்றிலும், தமிழ்நூல்கள் வெளியீடுக் கூட்டங்களிலும் பெண்டிர் நிலை மேம்பாடு பற்றிப் பலமுறை உரையாற்றி யிருக்கிறார். 2005 ஜூன் முதல் உதயமாகி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும், "வானகமே, வையகமே", என்னும் சூழ்மண்டலக் கண்காணிப்பு இதழில் "இது நம்ம பூமி" என்னும் தலையங்கக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி அதன் கௌரவ ஆசிரியராகப் பணிபுரிந்து அதற்கு மெருகேற்றி, ஒளியேற்றி வருகிறார்.

2002 டிசம்பரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட இவரது முதற் காவியம், "அம்மி" என்னும் கவிதைத் தொகுப்பு, கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக மதிப்புப் பெற்றுள்ளது! பணிபுரியும் பெண்டிர் பாலியல் சீண்டல் இன்னல்களை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி வைகைச் செல்வி "பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு" என்னும் ஒரு நூலில் எழுதியுள்ளார். தமிழகத்தின் சில கவிஞர்களைச் சூழ்வெளியைப் பற்றி எழுத வைத்து "நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே" என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 2003 இல் அந்நூல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாக எடுத்துக் கொண்டுள்ளது. அவரது கதைகளை எல்லாம் ஒன்று திரட்டிக் "கறிவேப்பிலைச் செடியும், நெட்டிலிங்க மரங்களும்" என்னும் தலைப்பு நூலைக் காவ்யா பதிப்பகம் 2004 டிசம்பரில் வெளியிட்டது. 2005 ஆம் ஆண்டில் "ஊழியப் பணிபுரியும் பெண்டிர் படும் பாலியல் சீண்டல்கள்" பற்றி அவரது கைநூல் ஒன்றும் வெளியானது.

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2002 ஆண்டில் வைகைச் செல்வியைச் சிறந்த எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்துப் பரிசும் அளித்தது. சிறந்த பெண் எழுத்தாளியாகச் சக்தியின் 2003 ஆண்டுப் பரிசும் அவருக்குக் கிடைத்தது. திருப்பூர் லயன்ஸ் கிளப் 2003 இல் அவரைப் பாராட்டிச் சிறந்த பெண் கவிஞர்ப் பரிசைக் கொடுத்தது. 2006 பிப்ரவரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்திய, "சூழ்வெளியும், சுத்தமய நிலைப்பாடும்" [Environment & Sustainability] எனப்படும் உரை அரங்கில் அவர் வாசித்த, "பாரதத்தில் சூழ்வெளிப் பாதுகாப்பு நிலைப்பாடு" என்னும் கருத்துரைப் பத்துச் சிறப்புக் கட்டுரைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. அதே சமயத்தில் திருச்சி ஸெயின்ட் ஜோஸ•ப் கல்லூரி ஏற்படுத்திய, "விஞ்ஞானத் தமிழ் தேசீயச் சொற்பொழிவு விழாவில்" [National Seminar on Scientific Tamil] வைகைச் செல்விக்குச் "சூழ்வெளிக் கவிஞர்" [Environmental Poet] என்னும் சிறப்பு விருதை அளித்துள்ளது. பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் அவரை வெற்றிப் பெண்மணி என்று பாராட்டிக் கெளரவித்துள்ளனர். 2006 மார்ச் 8 ஆம் தேதி, நெய்வேலியில் உள்ள "மாதர் பொதுத்துறைப் பணியகம்" வைகைச் செல்விக்குப் "பெண் சாதிப்பாளி" என்னும் விருதைக் கொடுத்துக் கௌரவித்திருக்கிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆய்வாளர் ஒருவர், "வைகைச் செல்வியின் கவிதைகளில் பெண்ணியம்" பற்றிய ஒரு தெளிவுரையைத் [Thesis] தயாரித்துள்ளார். 2004 டிசம்பரில் நேர்ந்த தெற்காசிய சுனாமிப் பாதிப்பு பற்றிய ஓர் ஆய்வுரையை, 2005 டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி முதலாண்டு நினைவுப் பூர்த்தி விழாவில் வைகைச் செல்வி உரையாற்றி வெளியிட்டார். மாதம் ஒருமுறை அண்ணா பல்கலைக் கழக வானொலி நிலைய ஒலிபரப்பில், "சக்தி அறிவாயடி" என்னும் வழக்கமான வாயுரையில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். சூழ்வெளி மாசுகள் சம்பந்தமாகக் குட்டித் திரைப்பட வெளியீடுகள் சிலவற்றைத் தயாரித்துள்ளார். அவரது கவிதைகளைச் சென்னைப் பல்கலை கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக் கழகம், தமிழ் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டுள்ளன. பாமரக் கலைக்கூத்து மூலம் [Folk Arts] தமிழகம் எங்கும் பரப்பும் பயிரின, உயிரினச் சூழ்வெளிக் கலாச்சாரக் குழுப் [Eco Cultural Awareness Team] படைப்புநரும் அவரே.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வைகைச் செல்வியின் சிறப்புப் பணியை மெச்சி அவரை மூன்று மாத மேற்பயிற்சி பெற டென்மார்க் தேசத்திற்கு 2001 ஆண்டு அனுப்பியது. அந்த மகிழ்ச்சியான பயிற்சி சமயத்தில் நோய்வாய்ப்பட்ட அவரது அருமைத் தந்தையார் சென்னையில் எதிர்பாராது காலமாகி, வைகைச் செல்விக்கு அதிர்ச்சி அளித்து ஆறாத துயரை, நெஞ்சில் அழியாதவாறு பதித்து விட்டது!

வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

மதுரை வைகை ஆற்றங்கரையில் துவங்கி, சென்னைக் கடற்கரை வரையில் என் கவிதைகள் பயணம் செய்கின்றன என்று வைகைச் செல்வி தனது "அம்மி" கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முச்சங்கம் வைத்து, முத்தமிழை வளர்த்த பாண்டிய மன்னர்களின் பாதம் பட்ட மதுரை மாநகரில் பிறந்து, வளர்ந்து, கன்னித்தமிழில் புலமை பெற்று, ஒளவையார், ஆண்டாள் வழித்தோன்றலாய் அரியதோர் காவியம் படைத்ததில் பெருமிதம் கொள்கிறார். வெள்ளமோ அல்லது வெற்று மணலோ எது காணப்பட்டாலும், தன் கற்பனைக்கு ஊற்றாய் இருந்ததோடு பெரும்பாலான துயரங்களையும், ஏமாற்றங்களையும் கவிதைகளாக மாற்றயதே அந்த வைகை ஆறுதான் என்று மனதின் உள்ளோட்டத்தைக் காட்டிக் கொள்கிறார்.

பல்வேறு வேலை அழுத்தங்களுக்கு மத்தியில், போர்க்கள அவசரத்தில் ஏற்படும் வேதனைக்கு நடுவில் எவ்வித முயற்சியும் செய்யாமலே பல சமயங்களில் தானாக முகையவிழ்ந்த வரிகளே கவிதைகளாகப் பரிணமிதுள்ளன என்று சொல்கிறார். பூவைத் தொடுவது போல், பூவாசத்தை எப்படி ஈர்ப்பது? கவிதை வரிகளுக்குள் கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒருமணம் இழையோட வேண்டும் என்று கூறுகிறார் வைகைச் செல்வி. சொல்ல நினைப்பதைச் சொல்ல இயலாமல் ஏற்படும் நெஞ்சுத் துடிப்பைப் போல், கவிதையின் தாக்க மிருக்க வேண்டும். நிரம்ப மெய்ப்பாடும், சிறிது கற்பனையும் கலந்தவை அவரது கவிதைகள். வைகைச் செல்வியின் படைப்புக்கு வித்திட்டவை வானவில், மழை, இலைகள், மரங்கள், மலர்கள், காதல், கனவு, காட்டு வெளி, காலம், நட்பு, சினம், மோதல், அநீதி, சுயநலம், அடிமைத்தனம், பதவி உயர்வு, பொய்வாசம் போன்றவை. அம்மி கூடத்தான் அவரது கவிதைப் பூக்களில் ஒன்றாக மலர்கிறது. படைப்புகள் உள்பட தனது எல்லா முயற்சிகளுக்கும், தேடல்களுக்கும் சேர்ந்து உழைத்து, காயம் பட்டபோது மனதைத் தேற்றி, போராட்டங்களில் தனக்கு உதவியாகத் தோள் கொடுத்து, மேம்பட்ட கல்வியையும், இறைப்பற்றையும் ஊட்டி, உன்னத நிலைக்குத் தன்னைக் கொண்டுவந்தவர், அருமைத் தந்தை திரு. ஆபிரகாம் ஞானமுத்து குருசுவாமி இஸ்ரேல் என்று தனது முன்னுரையில் போற்றுகிறார், வைகைச் செல்வி.

எது கவிதை? என்ன செய்யும் கவிதை?

கவிதை எதுவென்று வைகைச் செல்வியே தன் கவிதை ஒன்றில் கூறுகிறார். "ஒரு கவிதையும்... பல கவிதைகளும்" என்னும் தலைப்பில், நவீனக் கவிதைகள் இடியாப்ப இழை போல் ஒன்றை ஒன்று ஊடுறுவிப் பின்னிச் சிக்கலானவை; பொருள் மயக்கம் அளிப்பவை; வரிகளை மடக்கி, மடக்கி எழுதுவதா கவிதை என்று கேட்கிறார்.

மரபில் விளையாடி
புதுமைப் பூச்சூடி,
நடந்த இளங் கவிதை
நவீனப் புயலில் சிக்கி விட்டது!....

நவீனத்தில், மேலும்
இடியாப்பச் சிக்கல்கள்!
மடக்கிய வரிகளுக்குள்
அடங்குமோ ஓர் கவிதை?

என்று சுட்டிக் கேட்டபின் வைகைச் செல்வி தொடர்கிறார்,

பாலும், தெளி தேனும், பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துருக்கி,
வார்த்தை விதை ஒன்று,
மூளைக்குள் தெறிக்க,
முளை விட்டு உணர்வுக்குள்
கணுக் கணுவாய்ப் பயிர் வளர,
செங்குருதிப் புனல் பாய,
மண்ணுக்குள் அடிக்கரும்பாய்,
மனசெல்லாம் சர்க்கரையாய்,
நெஞ்சுக் குழிக்குள்ளே,
இறங்கி வழிந்தோடி
உறங்கும் உயிர்ப் பந்தை....
(உசிப்பிப்)
புரட்டுவது கவிதை!

என்று ஓர் அரிய விளக்கம் தருகிறார்.

எது கவிதை என்னும் கேள்விக்கு எனது பதில் இதுதான்:

உள்ளத்தைப் படமெடுத்துக் காட்டுவது!
உலகத்தை விழித்திரையில் நாட்டுவது!
வெள்ளத்தைச் சிற்றோடையில் கூட்டுவது!
வெண்ணிறத்தைப் பன்னிறத்தில் தீட்டுவது!

கவிஞர் திலகம் புகாரியின் "அன்புடன்" வலையிதழில் எழுந்த "எது கவிதை" என்ற கேள்விக்கு நான் எழுதிய பதிலிது. கவிதையின் தனித்துவப் பண்பு சுருங்கச் சொல்லி சுவையை அளித்தல். காவியக் கம்பரின் இராமகதை போல், சமீபத்தில் நீண்ட கவிதை வடிவில் எழுதப் பட்டது, கண்ணதாசன் படைத்த ஏசு பெருமான் வரலாறு. பத்து அல்லது இருபது வரிகளில் ஒரு கவிதை தன் முழுக் கருத்தை முரசடிக்க முடிய வில்லை யென்றால், ஐம்பது வரிகளில் அது உறுதியாகக் கூற முடியாமல் தவியாய்த் தவிக்கும்! தற்காலச் சிறு கவிதைகள் நீண்டு போனால், இரண்டு முறைகளில் அதன் அழுத்தமும், நளினமும் குன்றி விடுகிறது! நேரமின்றிக் கண்கள் விரைவாய் நுகரும் நீண்ட வரிகளில், உட்கருத்துத் தண்ணீராகித் தளர்ந்து கரைந்து விடுகிறது! அடுத்துக் கடைசியில் ஐம்பதாவது வரியைப் படிக்கும் போது, ஐந்தாவது வரி என்ன சொல்லியது என்பது மறந்து தொடர்ச்சி அறுபடுகிறது! முடிவில் கவிதை என்ன சொல்லியது என்பது புரியாமல் கண்கள் மேலும், கீழும் தாவி மனம் குழம்பி விடுகிறது! அவ்வித மின்றி வைகைச் செல்வியின் படைப்புக் கவிதைகளோ அவர் தன் உள்ளக்கடலில் மூழ்கி எடுத்த சின்னஞ்சிறு முத்துக்கள்! உதடுகள் உதிர்க்காத, உள்ளம் கனலாய் வெளிவந்து ஊட்டிய விழித்திரை மொழிகள்! உள்ளம் படமெடுத்துக் காட்டிய வெண்திரைக் காட்சிகள்! பசுமரத்து ஈட்டிபோல், படிப்போர் உள்ளத்தில் பாய்ந்து தைத்துக் குருதியுடன் கலந்து கொள்பவை!

சர்க்கஸ் விளையாட்டு போல் வார்த்தைகளை பல்டி அடிக்க வைத்து, அந்தரத்தில் தொங்கும் வளையங்களில் தாவி ஊஞ்சல் ஆடுவதா கவிதை? வார்த்தைகளின் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வதா கவிதை? இரண்டு மணிநேரம் சர்க்கஸ் ஆட்டத்தைக் கண்டு நாம் பிரமித்தாலும், வெள்ளித் திரையில் உள்ளத்தைத் தொடும் ஒருகலைக் காட்சிபோல், சர்க்கஸ் பல்லாண்டு காலம் மனதில் நீடிப்ப தில்லை! சுருங்கச் சொல்லி சுவை தரும் கவிதை ஒரு குட்டித் திரைப்படம். கருத்தாட்சி, சொல்லாட்சி, நடையாட்சி மூலம் உள்ளத்தைக் கவர்ந்த கவிதை, நமது நினைவில் அழியாதவாறு ஓட்டிக் கொண்டு விடுகிறது! அத்தகைய கலைப் படைப்பு நியதிகளைக் கையாண்டு எழுதப் பட்டவையே, வைகைச் செல்வியின் கவிதைகள்! அவரது கவிதைகளில் வரும் வார்த்தைகள் குட்டிக்கரணம் போடவில்லை! சொற்களின் வயிற்றைக் கீறி, சுவைப்போரின் நெஞ்சைப் பிளக்கவில்லை! வார்த்தைகள் சிலம்பாட்டம் ஆடாமல், சிந்துபாடிக் கோலாட்டாம் ஆடுகின்றன!

வைகைச் செல்வி கையாளும் கவிதை நடை தென்றல் நடை. வான மண்டலத்தில் மேகங்கள் நகர்வதைப் போல் வரிகள் மிதந்து செல்கின்றன! கவிதை மொழிகள் அன்ன நடை போடுகின்றன! கராத்தே முறையில், கவிதை வரிகள் காலைத் தூக்கிப் படிப்போரை எட்டி உதைக்காமல், கசப்பையும் கனிவோடு பேசுகின்றன! புதுக் கவிதைகள் போல் சொற்கள் சடுகுடு பாடிக் கபடி ஆடாமல், நீரின் மீது படகுபோல் மெதுவாய்த் தானாய்ப் போகின்றன. துப்பாக்கி ரவைகள் போல் சுட்டுத் தள்ளி மனத்தில் புரட்சி செய்தாலும், புதுக் கவிதைகளின் வரிகள் ஏனோ மனதில் பதிந்து கொள்வதில்லை! காரணம் புதுக் கவிதைகள் பலவற்றின் பொருள் பளிச்செனத் தெரியாமல் புதிராகத் தொங்கிக் கொண்டிருப்பதால்தான்! தேவையற்ற அமங்கலச் சொற்களைப் புகுத்திக் கொண்டு, படிப்போரை அதிர்ச்சியிலும், அருவருப்பிலும், ஆங்காரத்திலும் அவரது கவிதைகள் தள்ளுவதில்லை; ஆணும், பெண்ணும், சிறுவரும், வயோதிகரும் அவரது கவிதைகளைப் படிக்கலாம். படிப்போர் கவனத்தை ஈர்க்கவும், பணப் பெட்டியை நிரப்பவும், பகட்டாக அவரது காவியம் படைக்கபட வில்லை!

வைகைச் செல்வியின் கவிதைகள் தனித்துவம் கொண்டவை. கலைத்துவம் செழித்தவை. உண்மைக் கருத்துக்கள் கவிதைக்கு ஆத்மாக உள்ளொளி காட்டிப் புறவொளி வீசுகின்றன. கவிதைகள் யாவும் தனித்துவ முறையில் தாமாக நம்முடன் உரையாடுகின்றன. வைகைச் செல்வியின் எந்தக் கவிதையும் சங்கு ஊதி உரத்த குரலில் உபதேசிக்க வில்லை! ஒவ்வொரு கவிதையும் வைகைச் செல்வியின் மனதைக் கண்ணாடி போல் காட்டுகிறது. "அம்மி" என்னும் அவரது கவிதைக் கோப்பு வழக்கம் போல் பெண்களின் பிரச்சனைகளைக் கும்மி அடிக்காமல், பளிச்செனக் கண்ணில் வெட்டி அதிர்ச்சி கொடுக்கிறது. கண்ணில் விழும் இல்லறத் தூசுகளை மெல்லவே காட்டுகிறது! ஆண்-பெண் நட்பு உறவுகளில் அனுதினம் முட்களாய்க் குத்திவரும் முள்வேலிகளைக் காட்டுகிறது! சூழ்வெளி மாசுகளை அகண்ட வெண்திரையில் ஒளிபெருக்கிக் காட்டுகிறது!

வைகைச் செல்வியின் கவிதைகள் சில நமக்குக் கதை சொல்லுகின்றன! சில நாடகமாய் கண்முன் நடக்கின்றன! சில புயல்போல் நெஞ்சைத் தாக்குகின்றன! சில தென்றல் போல் மேனியைத் தழுவுகின்றன! சில கவிதைகள் நெஞ்சை முள்ளாய்க் குத்துகின்றன! மெய்யான மொழிகளைச் சொல்லாமல் சொல்லுகின்றன. சில கவிதைகளின் முடிவில் வரும் வரிகளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளது! சொற்கள் எளிதாக இருந்தாலும், தெளிவாகத் தெரிந்தாலும் வரிகள் ஒட்டு மொத்தமாய் என்ன உரைக்கின்றன என்று புரியாமலும் போகலாம்!

பெண்மையும், விடுதலையும்

கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் வைகைச் செல்வி, "உள்ளே ஒரு வானவில்" என்னும் கவிதையில்:

தாழ் திறக்கும் என்றால்தான்
காத்திருத்தல் சுகம்,
இல்லையெனில் மரண வேதனை!
தாழ் திறக்கா விட்டாலும்
மரண வேதனை!
அந்திப் பொழுதின் வானவில்!

பகலென்று தெரிந்தால், சிறகுகளை விரிக்கலாம்!
இரவென்று தெரிந்தால் கூட்டுக்குள் ஒடுங்கலாம்!

அந்திப் பொழுதாய் இருந்தாலும்,
சில்லென்ற குளிர்காற்றும்,
சிங்காரப் பூமணமும்,
உன் முத்தம் தந்திடுமோ?

கால மயக்கத்தில்
கண் விழித்துப் பார்க்கையில்
பகலா, இரவா ஏதும் புரியவில்லை!
அந்திப் பொழுதின் வானவில் .....
எந்த நிலையில் மங்கிப் போயிருக்கும் என்று மதி மயக்கத்தைக் காட்டுகிறார்.

பெண்டிர் விடுதலையைப் பற்றிக் குறிப்பிடும் போது,

60 ஆண்டுகளுக்கு முன்பு ஆண், பெண் அனைவரும் பாரதத்தில் அடிமைகளாய்ச் சிறையிலிருந்தோம்! காந்தி, நேரு, பட்டேல், பாரதியார் வீர சுதந்திரம் வேண்டிப் போராட நம் நாட்டில் சுதந்திரச் சூரியன் உதித்துச் சிறைக் கதவுகள் திறந்தன! ஆனால் உண்மையாகக் கிடைத்தது பாதி விடுதலையே! யாருக்குக் கிடைத்தது? பாதித் தொகையான ஆடவருக்கு மட்டுமே! மீதித் தொகையானப் பாதிப் பெண்டிருக்கு? விடுதலை இன்னும் கிடைக்க வில்லை! பெண்களின் பாதி விடுதலையும் களவாடப் பட்டு, இரண்டு மடங்கு அசுர பலத்தோடு ஆதிக்கம் செலுத்தும் ஆடவருக்குப் பெண்கள் அடிமைகளாகி விட்டார்! அன்னியனுக்கு அடிமையாய் இருந்த பெண்டிரினம், இப்போது ஆடவ ஆதிக்கத்துக்கு அடிமை ஆகி யிருக்கிறது! இந்த உலகம் ஆடவர்களால் உண்டாக்கப் பட்டது! ஆடவருக்காக உண்டாக்கப் பட்டது! பாரத தேசத்தில் பெரும்பான்மையான வீடுகளில், இப்போதும் பெண்கள் இரண்டாம் வகுப்புப் பிறவிகளாகத்தான் நடத்தப்பட்டு வருகிறார்.

அன்று
அடிமைச் சிறையில் இருந்தோம்.
காந்தியும், நேருவும், பட்டேலும், ....
பாரதியாரும்,
வீர சுதந்திரம் வேண்டிப்
(போராட)
(சிறைக்) கதவுகள் திறந்தன!
தலைமறைகள் கடந்தோட
(பெண்களாகிய) நாங்கள்,
இன்றும் சிறையில்தான்!
ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்,
சாவி
எங்களிடமே உள்ளது!

பாரத தேசத்தில் ஆனந்த சுதந்திரம் அடைந்தவர் ஆடவர் மட்டுமே! பெண்டிருக்குப் பூரண விடுதலை இன்னும் கிடைக்க வில்லை! அடிமையாய் உள்ள பெண்ணுலகம் வீறுகொண்டு எழுந்து சிறைக் கதவுகளை உடைக்கவோ அல்லது பூட்டைத் திறக்கவோ சாவி அவரிடமே உள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். ஆனால் ஆணாதிக்க உலகம் பெண்களின் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, கண்ணைக் கட்டி, கையைக் கட்டி, காலைக் கட்டிச் சாவியைக் களவாடிக் கொண்டுள்ளது என்பது கட்டுரையாளர் கருத்து!

"உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ?" என்னும் கவிதையில் வாழ்வின் இன்பங்களில் ஒன்றான ஆண்-பெண் நட்பைப் பற்றி நெஞ்சுறுதியுடன் அஞ்சாமல் கூறுகிறார். தாமரை இலைமேல் ஒட்டாமல் உருளும் நீர்த்துளி போல், ஆணும் பெண்ணும் தோழமை உணர்வோடு பழக முடியும் என்பதை, வெகு அழகாகக் கூறுகிறார்! வாழ்வில் தந்தை, தமையன், கணவன், புதல்வனைத் தவிர பிரியமான மற்றோர் ஆடவனுடன் உரையாடுவது, உறவாடுவது தவறு; அதுவும் நட்பு என்பது அறவே கூடாது என்னும் பாட்டி காலப் பழைய கோட்பாடுகள் நாட்டை விட்டு நழுவிச் செல்லும் காலமிது! ஆணும், பெண்ணும் தாமரை இலை மீதுள்ள தண்ணீர் போல், ஒட்டாமல் உறவாடலாம், உரையாடலாம், ஒன்றாகப் பழகிக் கொள்ளலாம் என்ற மனித உறவு நியதி அவரது கவிதைகளிலும், கதைகளிலும் ["தாயின் மடியில்"] வெளிப்படையாகக் காணப்படுகின்றன.

"மங்கையராகப் பிறப்பதற்குப் பெரும்
மாதவம் செய்திட வேண்டு மம்மா!"
என்று பாரதி பாடினார்.

ஆனால் வைகைச் செல்வி தாயைப் பார்த்துப் பெண்ணைப் பெறுவதற்கு நீ மாதவம் செய்யத் தேவையில்லை என்று எதிர்வாதம் புரிகிறார்! பெண்கருவை நீக்கும் புண்ணிய இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பது பாபமாகக் கருதப்பட்டு, பாரத மாதாவின் கண்களில் அனுதினமும் நயாகரா நீர்வீழ்ச்சி ஆறாக ஓடுகிறதே!

என் தாயே! .. என்னைப் பெற நீ
மாதவம் செய்திருக்கத் தேவை யில்லை!
அந்தக் கூட்டத்தில்
எந்தன் பிரிய நண்பன் இருக்கிறான்.
பகற் பொழுதினிலேயே
அவனுடன் நானமர இயல வில்லையே!
(ஆனால்) இவ்விரவில்...?
அவன் ஓர் ஆணாம்! நானோர் பெண்ணாம்!
என் மனத்தின் ஆண்மை
யாருக்குப் புரியும்?
ஆதாமுக்குப் பிறகு ஆடவனு மில்லை!
ஏவாளுக்குப் பிறகு பெண்டிரு மில்லை!
இது இங்கே யாருக்குப் புரியும்?

நட்பு, சுமை, சுயநலம், மௌனம்!

"நட்பு ஓர் அழகிய கண்ணாடிக் கிண்ணம்! ஓர் அற்புதச் சித்திரக் கிண்ணம்!" என்று ஓர் எளிய இனிய சிறு கதையைக் கூறுகிறார் நமக்கு. ஒரு முரட்டுக் குதிரை முட்செடி ஒன்றை மிதித்த பின்பு கூறுகிறதாம்: "தளிர்ச் செடியே! உனது முள் என் காலை யிடறிக் காயப் படுத்தியது; எனக்கு வலித்ததும் உண்மைதான்! ஆனால் அந்த முள்ளில்லா விட்டால், நான் உன்னைக் கடந்தல்லவா போயிருப்பேன்," என்று தணிவாய்ச் சொன்னது.

கால்பட்டுக் கசங்கினாலும், கசிந்த இலைகள் ஒளியுடன் பலபலத்து, "குதிரையே! உன்னைத் தெரியாமல் குத்தி விட்டேன் நான்" என்று கனிவாய் சொல்லின.

குதிரை தலைகவிழ்ந்து, "தளிர்ச் செடியே! நானும் உன்னைத் தெரியாமல் மிதித்து விட்டேன்," என்று பணிவாய்ச் சொன்னதாம்.

இதுதான் நட்பு என்று ஒரு குட்டிக் கதையைச் சுட்டிக் காட்டுகிறார், வைகைச் செல்வி. "நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய தில்லை! சொந்தக் கரங்களே சில வேளைகளில் தவறப் பார்க்கின்றன! அவனும் நானும் ஆணும் பெண்ணுமாக அல்லாமல், என்றென்றும் தோழர்களாய், அருகருகே நிற்கிறோம்! ஆயினும் ஓர் சிறு இடைவெளி, முகக்கண்களின் இடைத்தூரம், எமக்கு நடுவில்! அதிலே காலநதி கரை புரண்டோடுகிறது," என்று ஆண்-பெண் இடையே நேரும் புனித நட்பைப் பற்றி அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்! கணவனோ, நண்பனோ ஆண்-பெண் உறவிலோ அல்லது நட்பிலோ பழக்க முறைகளில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பது வெகு வெகு அபூர்வம்! பிரச்சனைகளே இல்லாமல் இருப்பதற்கு யாராவது ஒருவர் ஊமையாகவோ, செவிடாகவோ அல்லது குருடாகவோ இருக்க வேண்டும்!

வாழத் தெரியாத தோழன் ஒருவனுக்கு, "மௌனம்" என்னும் கவிதையில் ஓர் ஊசி குத்துகிறார்:

நானுனக்கு
என்ன எழுத வேண்டுமென்று தெரியவில்லை!
ஆனால் (உனக்கு)
என்ன எழுதக் கூடாதெனத் தெரிகிறது!

உன்னிடம் நான்
என்ன பேச வேண்டும் என்று
இதுவரையில் தெரிய வில்லை!
ஆனால் (உன்னிடம்)
என்ன பேசக் கூடாதெனத் தெரிகிறது!

அதனால்தான் நீ
நேரில் இருக்கையில் பேசாமலும்,
தூரப் போய்விட்ட பிறகு
எழுதாமலும் இருக்கிறேன்!

இவ்விதம் வாழத் தெரியாத தோழன் மீது வாளெடுத்து வீசாமல், எளிய தர்க்க முறையில் மௌன ஊசி போட்டு வெளியே தள்ளும் பெண்ணைப் பார்த்ததுண்டா? தோழனைக் காயப் படுத்தாமல், "போயொழி, திரும்பி வராதே" என்று புறக்கணிப்பதை இத்தனை மென்மையாக எந்தப் பெண்கவி சொல்லி யிருக்கிறார்?

"உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும்," என்று கண்ணதாசன் வெள்ளித் திரையில் பாடல் புனைந்துள்ளார். பிரியப் போகும் நண்பன் ஒருவன் தனது தோழி மீது பூவை வீசி விட்டாலும், அவளது கண்ணை பூவிலுள்ள முள் குத்தி விடுகிறது! அவன் சொல்லாமல் போகிறான். பிரிவுத் துயரைக் காட்டாமல் மிருகம் போல் நீங்குகிறான். வருந்துகிறாள் ஒரு மாது, அதற்கு! படிப்போர் நெஞ்சைத் தொடுகிறது, அவரது பாடலின் பரிவு நடை!

நண்பனே!
எந்நேரத்திலும், எதற்காகவும் நீ
என்னைப் பிரிந்து போகலாம்! அது
உன்னுடைய சுதந்திரம்!
பிறரைப் போல நீயும்,
என் மீது
கல்லெறியலாம்! .....
என்னைக் காயப் படுத்தலாம்!
கூழாங் கற்கள் முதல்
பாறாங் கற்கள் வரை, எனக்குப்
பரிச்சயமே!
அன்பின் மிகுதியால்
பளிங்குக் கற்களை வீசியவரும் உண்டு!
ஆனால்
உனக்கு உரிமை அதிகம்..!

நண்பனே! நீதான்
கதவைத் திறந்து
(என்னை) எட்டிப் பார்த்தாய்!
ஆச்சரிப்பட்டாய்!
அன்பு காட்டினாய்!
முகம் தெரியாத போதும்,
பெயர் சொல்லி அழைத்தாய்!
பிறகென்ன?
எல்லா வற்றையும், நீயே மூடலாம்!
ஆயினும்
நீ திறந்தது சாளரக் கதவுதான்!

யாரென்று அறிவதற்குள்
பிரிந்திட்டாய்!
கற்களை வீசியவர்
மத்தியில்
நீயோ பூவை வீசினாய்!
முள்ளொன்று
கண்ணில் தங்கி விட்டாலும்,
என்னில்
ஒருகணம் மென்மை (உணர்ச்சி)!
கண்ணிமைக்க மறந்தது
என் குற்றம்தான்!

என்னைப் போல் நிறமுடைய
அத்தூதனைத் தவிர
வேறெவனும் எனக்குச் சொந்த மில்லை!
சொல்லாமல் பிரிந்திட்டாய்!
தண்ணிலவும், செங்கதிரும்
யார் அழைத்து வந்தன?
யார் சொல்லிப் போயின?
நீயும் பிரிந்து செல்லலாம்,
அது உன் சுதந்திரம்!

என்று நண்பனுக்கு நிரந்தர ஓய்வை அளிக்கிறார், வைகைச் செல்வி!

சினமென்னும் கொல்லியைப் பற்றிக் கூறும் போது:

செந்தீ யணைக்க நீருண்டு!
சினத்தீ யணைக்க யாருண்டு?

என்று தீப்பறக்கச் சொற்கள் எழுகின்றன!

எரிமலை வெடிக்க
அக்கினிப் பொறிகள்
சரமாய்ச் சொரியும்! ...
மல்லிகை பந்தலில்
அனற் கங்குகள்! ...
வெள்ளை உள்ளம்,
மெல்லிய தளிர்க்கொடி எல்லாம்...
கோபத் தீயில் ..
உருகி யோடும்! ...
அறிவு மயங்கி, ஆன்மா மறைய
உணர்ச்சிக் கொதிப்பில்... ஆட்டம் போடுது
மனித மிருகம்!

வேரை அழிக்கும் செந்தீக்கு
உன்னில் அசையும்,
உயிர்ப்பூத் தென்றலைச்
சுவைத் தறிய வழியேது?


தொழிற் துறைகளில் பெண்டிர் பணியாற்றும் போது, பதவி உயர்வுகள் பாலைவனக் கனவுகளாய்ப் போவதைப் பற்றி வருந்துகிறார். ஆடவருக்கு ஊழியப் பயிற்சி அளித்த மூத்த அனுபவப் பெண்டிருக்கு முன்பாக, அதே வாலிபர் பதவி உயர்வு பெற்று, அதே பெண்டிருக்கு அதிபதியாக ஆவது, ஆடவர் உலகில் வழக்கமாக நேரும் அதிர்ச்சி நிகழ்ச்சிகள்.

ஆண்டுகள் பலவாய் ஓடி...ஓடி
இறுதியில்
(பதவி உயர்வென்னும்)
அந்த ஏணியை அடைந்தேன்!
கூரிய கற்களும்... கொடிய முட்களும்
குத்திக் கிழித்தும்
(அதை நோக்கி ஆவலாய்)
ஓடிய கால்கள் .....!
ஏணியின் உயரம்
அயர்ச்சியை அளிக்க ....
புத்துயிர் பெற்றுக்
கண்களைத் திறந்தேன்!

காலை எடுத்து
முதற்படி வைப்பதற்குள்
என்னைத் தாண்டிச்
(சென்றன) சில காகங்கள் ....
கழுத்தில் சலங்கையுடன்,
காலில் எலியுடன்,
ஏணியைத் தள்ளி
(என்னை மிதித்துக் கொண்டு)
இடத்தை நிரப்பின!

என்று மனவேதனைப் படுகிறார்!

"பலி" என்னும் கவிதையில் ஒரு பெண்மேல் விழும் பழிகளைப் பற்றிக் கூறுகிறார். பெண்ணின் ஊதியமும், உழைப்பும் பிறருக்குப் பயன்பட்டாலும், பதிலாகப் பழியும் பாவமும், வலியும் வேதனயும் வருவது அதே பெண்ணுக்குத்தான்!

நானிட்ட புள்ளிகளில் யார் யாரோ கோலமிடுகிறார்! நான் வரைந்த ஓவியத்துக்கு யார் யாரோ வண்ணம்
தீட்டுகிறார்! நான் வடித்த சிற்பத்தில் யார் உளியோ மெருகேற்றுகிறது! நான் படைத்த கவிதைக்கு யார் யாரோ அர்த்தம் சொல்கிறார் என்று கட்டுரை எழுதும் எனக்குப் பாராட்டை அளிக்கா விட்டாலும், பதிலாக என் முதுகிலிப்படி ஓங்கி அடிக்காமல் விட்டிருக்கலாம்!

என் வீட்டு ரோஜாப்பூ
யாருடைய வீட்டு மேஜையிலோ?
நான் கோர்த்த மணிமாலை
எந்தப் பொம்மை கழுத்திலோ?
என் தோட்ட மருதாணி
யாருடைய விரல்களிலோ?
என் வீட்டுத் தென்னங் கீற்று
யார் வாசல் தோரணமோ?
ஆனால்
யார் யாருக்கோ வரவேண்டிய
வலியும், துக்கமும்
ஒட்டுமொத்தமாய்
எனக்கு மட்டும்தான்!

பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் புற்றுநோயாய்ப் பரவித் துயர்ப்படுத்தும் ஜாதி, மத இன வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வு ஊஞ்சல் நிலைகள் மக்களிடையே பேரளவில் உண்டாக்கிப் பிளவு படுத்தி வருவதைச் சாடுகிறார், வைகைச் செல்வி.

என்னைப் பார்த்து
ஊர் கூடிச் சொல்கிறது:
'நான் பள்ளத்தில் இருக்கேனாம்'
அவர்கள் எல்லாரும் ஏறி நிற்கையில்
என் தட்டு மட்டும்
தாழ்ந்தி ருக்கிறது!
நான் மறைந்து விட்டேனாம்!
கட்டைகள் மிதக்கையில்,
கல்லொன்று ஆழத்தில் உறங்குகிறது!....
மலைதான் என்னை இடறிற்று,
கூழாங்கற்கள் அல்ல!

ஏறிக் கொண்டிருக்கையில்
ஏணியை எடுத்திருந்தால்
ஏற்றுக் கொண்டிருப்பேன்!

மேலேறி வந்து மூச்சிரைக்க நிற்பதற்குள், எட்டி உதைக்கின்ற நெஞ்சங்கள் ஏராளம் என்று பெருமூச்சு விடுகிறார்! "கீழே விழுந்தாலும் சருகல்ல நான் சாவதற்கு" என்று கூறி வீறுகொண்டு எழுந்து தாக்கத் தயாராகிறார். ஆணவத் தேரில் பவனிவரும் ஆதிக்கவாதிகளை எட்டி மிதிக்கிறார், வைகைச் செல்வி.

ஆணவத் தேரேறி
(என்னை)
ஒடுக்கப் பார்த்தாலும்,
(வெடித்து விடும்)
கண்ணாடிக் குப்பிக்குள்
(பெண்மை எனும்)
புயல்காற்று ஒடுங்குமோ?

என்று தானொரு புயல் என்று ஆணவச் செவியில் பளாரென்று அறைகிறார், வைகைச் செல்வி.
"நாணமும், அச்சமும் நாய்கட்கு வேண்டும், நங்கைக்கு அல்ல" என்று பாரதியார் அழுத்திச் சொல்வதை வைகைச் செல்வி முத்திரை வைத்து ஒப்புதல் தெரிவிக்கிறார்.

அச்சம் எனக்கில்லை!
தாழ்வும் எனக்கில்லை!
எதிராளி பலம் பார்த்து (நான்)
போருக்கு வரவில்லை!
இந்நெருப்பில் கைவைக்க
எவர் வந்தால் என்ன? .....
தொடர்ந்து விழுகின்ற
சம்மட்டி அடிகள்...
உலைக் களத்தில் புரள்கையில் ....
வலியின் கீற்றுகள்
உடலெங்கும் பரவும்!
சிறகுகளை விரித்து நான் எழும்பிப்
பறக்கையில்
எனக்கெதற்கு மரக்கால்கள்?

என்று கனல் தெறிக்கும் வரிகளில் அதிகாரக் கோலோச்சி ஆணவத் தேரேறி ஒடுக்கப் பார்க்கும் ஆதிக்கவாசிகள் மீது ஆவேசமாய்க் கணைகளை எறிகிறார்.

"உயிரின் ஒலியில்" என்னும் காதல் கவிதை அந்திம வேளையில் உயிர் அணையப் போகும் மங்கை ஒருத்தியின் நேசத்தை கல்லும் உருகும்படி அன்பனுக்குச் சொல்கிறது.

அந்தி நேரத்தில், மங்கிடும் வெளிச்சம் போல் என் உயிர் ஊசலாடுகிறது. ஆயினும் என் நேசத்தை நீ யின்னும் அறியவில்லை என்பது என்னை உறுத்துகிறது! அணையப் போகும் விளக்கின் உயிர்த் துடிப்பு உன் செவியில் கேட்கிறாதா? அன்பனே! எத்தனை முறைகள் மீண்டும், மீண்டும் சொல்லி யிருக்கிறேன், உன்னை நேசிக்கிறேன் என்று. மரணத்தின் வாசலில் நுழைந்தாலும் என் நேசம் வலியது. எமனது இரும்புக் கரங்கள் என்னை இழுத்துச் செல்வதற்குள், உன் விரல்களைப் பற்றி அவ்வார்த்தைகளை ஒருமுறைச் சொல்ல என் ஆன்மா துடிக்கிறது. ஆனால் சொற்கள் உதடுக்குள் உறைந்து விட்டன! சிறிய சொற்கள் குஞ்சுகள் போல் ஓட்டை உடைத்து வெளிவரத் துடிக்கின்றன. என் அன்புக்குரியவனே! இனி நேரமில்லையே அதற்கு? உறுதி நம்பிக்கை என்பதை ஐம்புலன்கள் உணருமா? வெண்ணிறத்தில் பன்னிற வானவில் மறைந்துள்ளது உனக்கு ஏன் தெரியாமல் போயிற்று?

இப்ப்போது உடலும், உணர்வும் மௌனச் சமாதியில், நிரந்தரமாய்ச் சங்கமம் அடையப் போகின்றன! படகின் பயணம் முடியப் போகிறது! உடலுக்கு நங்கூரம் பாய்ச்சி உயிருக்கு விடுதலை! அந்திப் பொழுதோ கண்மூடப் போகிறது! ...தீபம் அணையும் சமயம்! .. கொஞ்ச நேரந்தான். பிறகோ ஓசையும், ஒளியுமில்லா உலகில் மூழ்கிப் போவேன். அதற்குள் அறைக்குள்ளே அசைந்தாடும் உன் நிழலை மட்டும் எனக்குக் காட்டுவாயா? என்று அணையும் விளக்கு அதன் துணையிடம் துன்ப நாடகம் போடுகிறது!

"என்ன விலை காதலே" என்னும் கவிதையில் காதலர் இல்லறத் தம்பதிகளாய் ஆகும்போது ஏற்படும் தொல்லைகளை எடுத்துக் காட்டுகிறார். காதல் புரியும் ஆண், பெண் இருவர் திருமணம் செய்கையில் அவர்கள் இருதரப்புக் குடும்பங்களுடன் அடிக்கடி உறவாடி ஒட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேருகிறது. ஆனால் காதலிக்கும் ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்தபின் தனியாக ஒரு தீவில் வாழத் திட்ட மிடுகிறார்! முக்கியமாக அவரது வயோதிகப் பெற்றோர் பாரமாகிப் புறக்கணிக்கப் படுகிறார். சகோதர சகோதரிகள் உறவாட முடியாதபடி விரோதிகளாக விலக்கப் படுகிறார். தம்பதிகளின் பிரச்சனையே கைவசச் செலவு நிதிக்குப் பிறகு, அவரது வயோதிகப் பெற்றோரைப் பேணும் பொறுப்பு யார் மீது என்னும் தீராத போரே!

"சென்ற நிமிடம் வரை
நீயும் நானும் காதலித்தது....
உண்மை!
(திருமணம் புரிய ஒப்புக் கொண்டோம்)
இப்போது நீ சொல்கிறாய்,
அண்ணன் ஒரு தண்டச் சோறு,
அவன் வேண்டாமாம்! ....
அணியணியாய்க் கழற்றி
(பொன் நகைகள்)
அத்தனையும் விற்று
என்னைப் படிக்க வைத்த
என்னருமை அம்மா வேண்டாமாம்!
எட்டு விரல்களைத்
தட்டச்சில் தாரை வார்த்து (உதவிய)
என் அக்காள் வேண்டாமாம்!
ஓய்வு பெற்ற பின்னும்
ஒன்னே கால் லட்சத்தை
அன்பளிப்பாய்த் தந்த
(என்னருமை)
அப்பாவும் வேண்டாமாம்!

"அன்பனே! என்னைக் காதலித்த காலத்தில் அப்பாவை, அம்மாவைத் தப்பாமல் தரிசித்தாய்! அக்கா, தங்கையிடம் சிரிப்போடு பேசினாய், பழகினாய்! வெள்ளித் திரைக்கு அண்ணன்தான் உன் கூட்டாளி! திருமணம் என்றவுடன் அத்தனை பேர்களையும் அறுத்தெறியும் பாதகனே! கேளடா அறிவு கெட்டவனே!

கல்யாணம் ஆகிவிட்டால்,
கல்லாகி விடுவேனா?
கயவர்கள் உலகத்தில்
சுயநலமே வாழ்க்கை யெனில்
எனக்குப்
பந்தக்கால் தேவை யில்லை!
சொந்தக்கால் போதுமடா!

என்று காதலன் கன்னத்தில் பளார், பளாரென்று சொற்களால் வைகைச் செல்வி அறைவது நம் நெஞ்சில்
இடியிடிப்பது போல் எதிரொலிக்கிறது!

"காட்டு வெளியினிலே" என்னும் கவிதையில் ஒரு துன்பியல் நாடகம் அரங்கேறுகிறது! காதலனை நம்பி மோசம் போன ஒரு கோதையின் சிறுகதையைக் கேளுங்கள்.

"என்னை நீ அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே அழைத்துச் சென்றாய். மான் குட்டியைப் போல நானும் துள்ளி ஓடினேன். வனத்தின் மண் வாசனை முகர்ந்தேன். ஓவ்வோர் இலையாகத் தொட்டு, எல்லா மரங்களும் நம்மைச் சுற்றி மறைத்துக் கொண்ட போது, நான் உன்னைச் சுவாசித்தேன். நீ களிப்புடன் கவிதை பாடினாய் அப்போது! "மரங்கள் தமது கரங்களை நீட்டி, வானின் மீது எழுத ஓயாமல் போராடுகிறது! ஆனால் பூமியோ மரங்களுக்கு விடுதலை தருவதில்லை!" என்று மொழிந்து ஓர் அழகிய கவிதையைப் படைத்தாய்.

உறவுக்குப் பிறகு வருவது பிரிவுதானே! அன்று அதுபோல் சகுந்தலைக்கு நேர்ந்தது! நீ துஷ்யந்தன் பரம்பரையில் வந்தவன் தானே! பிரிந்து நீ எங்கே போனாய்? உன் மாளிகைப் பூங்காவுக்கு! அங்கே வசந்த காலம் காத்திருந்தது உனக்கு. ஆனால் நானோ அந்தக் காட்டு நிகழ்ச்சியை நினைத்த வண்ணம் தனியே சுமந்து கொண்டு வீடு திரும்பினேன். இங்கே என்னுலகில் இலையுதிர் காலம் எனக்கு. துக்கமுடன் தாழ்வாரத் தூணில் சாய்ந்திருக்கிறேன். என்மீது விழுந்த வேப்பமர இலையொன்று விழுந்தது! அது மீண்டும் நான் கானகத்தில் மான்போல் துள்ளி விளையாடியதை நினைவூட்டும். என்னை மறந்து போன கவிஞனே! அன்று காட்டிற்குள் என்னை அழைத்துச் செல்லாதிருந்தால், என் மனசும் இன்று கன்னியாக அல்லாவா வாழ்ந்து கொண்டிருக்கும்?" என் கண்களில் வெந்நீர்த் துளிகள் மரத்தின் இலைகளைப் போல் பொலபொலவென உதிர்ந்து கொண்டுள்ளன எப்போதும்!

"கல்லும், வில்லும்...புல்லாங்குழலும்" என்னும் கவிதையில், கூடு தேடும் இல்லறப் பறவை ஒன்று கூடு தெரியாமல் தடுமாறித் தவிக்கும் தனிமை நிலையை உருக்கமாகக் கூறுகிறார்.

எல்லாப் பறவைகளும்
கூடுகளுக்குப் போய்விட்டன!
அந்தி மயங்கும் வேளையில்
தனிப் பறவையாய் அலைந்தும்
என் கூடு எதுவென
எனக்குத் தெரிய வில்லை!
பிறிதோர் கூட்டில்
யார் என்னைச் சேர்ப்பார்?

அத்துவானக் காட்டில்
வேடரைத் தவிர யாருமறியேன்!
உன் கையில்
வில்லையும், கல்லையும் எதிர்பார்த்தேன்!
(ஆனால் நீ)
புல்லாங் குழலுடன்
வந்தாய்!
கூடு விட்டுக் கூடு செல்ல
காலெதற்கு? சிறகெதற்கு?
கலைந்த கூடுகள்
காணாமல் போய்விட்டால்,
பிறிதோர் கூட்டில்
யார் என்னைச் சேர்ப்பார்?

"பல்லக்குத் தூக்கி" என்னும் படைப்பில், தன்மனை விட்டுக் கணவனை நம்பிப் புதுமனையில் புகுந்த ஒரு மனைவி படும்பாடு அழகாக எடுத்துக் காட்டப் படுகிறது!

நான் உன் நாட்டுக்குத்
திரும்பிவந்த அகதி!
உன் மூச்சுக்கள் நிறைந்த
காற்றைச் சுவாசிக்கிறேன்.
ஒரு வாய்ச் சோற்றுக்கும்,
ஒரு குவளை நீருக்கும்
கையேந்தி நிற்கையில்
கட்டிப் பிடித்தென்னை
(நீ) முத்த மிடுகையிலே,
நெஞ்சக்குழி
கண்ணீரால் நிரம்பியதே!

உன் சன்னதியில்
நின்றாலும்,
தூபக் காட்டும்
(தீபப் பூசாரி) அல்ல நான்!
நாயகன் பொற்பாதம் கழுவிட
வாசற் படியோரம்
(என்னேரம்)
காத்திருக்கும் அடிமை நான்!

என் அரசே!
கம்பீரமாக நீ உலா வருகையில்,
உன்னோ டிருப்பதற்கு
கட்டாயத் தகுதி....!
(என்ன?)
பட்டத்து ராணியா?
ஆமென்று சொல்லாதே!
(பாமரனே!)
பல்லக்குத் தூக்கி யன்றோ?
எந்நாளும் நானுனக்கு?

"சுயநலக்" கூட்டத்தைப் பற்றிச் சொல்லும் போது, வைகைச் செல்வி:

பக்கத்தில் வந்தால் ...
பல்லிளிக்கும் பச்சோந்தி...!
விரட்டிப் பயனில்லை!
ஒன்று பலவாய்ப் பெருகி
கூட்டம் கூட்டமாய் எதிர்க்கும்!
போராடிப் போராடி
எதிர்க்கப் பலமின்றிச்
சடலம் சரியும்!
காக்கையும் காத்திருக்கும்,
நிரந்தரமாய்ப் பிணந்தின்ன!

பெண்சிசுக் கொலைகளைப் பற்றி வெறுப்புடன் பனிரெண்டு வரிகளில் எழுதுகிறார்: "பாரமாக, யாரும் பாவமெனப் பாராத, எவரும் விரும்பாத ஓர் அழுக்குக் குப்பையாக, ஒரு மூலையில் கிடக்கிறது! கப்பலின் சுமை மிதமிஞ்சிப் போனாலும், கடலில் அதை எறிந்து விடாதே! அதன் பிணைப்புக் கயிற்றை அறுத்து விடாதே," என்று சிசுவை உண்டாக்கிய ஆண், பெண் இருபாலரையும் வேண்டிக் கொள்கிறார்.

"கருவில் பெண்ணை அழிப்போர்க்கு
காட்டை அழித்தல் பெரிதாமோ?"

என்றும் "மெல்லச் சாகுமோ மலைக் காடுகளும்" என்னும் கவிதையில் பெண்சிசு அழிப்பை மேலும் கண்டிக்கிறார்.

பாரதியாரின் பிறந்த நாளைக் கொண்டாடும், "பாரதியின் கனவுகளே" என்னும் ஒரு கவிதையில் சொல்கிறார்: பதவி ஆசை பற்றி, பணத்தைக் கொட்டி ஆசனத்தைப் பிடித்து ஆட்சி செய்யும் ஆதிக்கவாதிகள் மக்களின் உரிமையைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, ஊதியத்தைக் களவாடிப் பணப் பெருச்சாலியாகி வருகிறார்! அவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

வெள்ளையனுக்கு நாம் அடிமை யில்லை என்று சொன்னாய்! ஆமாம் விடுதலை பெற்று, வெள்ளையனும், அரசியல்வாதியும் சமமாகி விட்டனர்! வெள்ளையன் நிலவில் தடம்வைத்து ஆராச்சிக்காகக் குழி தோண்டுகிறான்! ஆனால் கண்ணீர் விட்டு வளர்த்த அருமைச் சுதந்திர மரத்தை நம் ஆட்சியாளர் வெட்டிக் குழி தோண்டுகிறார்கள், வேரிலும் ஏதாவது கனிகள் அகப்படுமா என்ற ஆசையில்!

"நமக்குள் ஓர் வல்லரசு" என்னும் படைப்பில் நாட்டில் நச்சுப் பாம்புகளாய் முளைத்து நாசம் செய்துவரும் மூர்க்க மதவாதிகளின் அநீதிக் கொலைகளைக் கேட்டு கொதிப்படைகிறார். பாரத நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் தீவிர அடிப்படை மதவாதிகள் சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர், தலித்துகள் போன்ற அப்பாவிச் சிறுப்பான்மை மக்களை தீயிலிட்டும், கத்தி, கம்புகளால் காயப் படுத்தியும், அவமானப் படுத்தியும், கொலை செய்தும் வருவது விடுதலைப் பாரதத்தில் அநீதியான, சட்ட விரோதமான பெரும் கோரக் கொடுஞ் செயல்களே!

"இமையம் முதல் குமரி வரை மண்ணும் மாறவில்லை! விண்ணும் மாறவில்லை! ஆனால் அவற்றிடையே வாழும் மனிதர் மாறிவிட்டார்! பல்வேறு மரபினர், சாதியினர், மொழியினர், மதத்தைச் சார்ந்தவர் உள்ளார். மனம் விட்டுச் சிரித்தாலும், அவரது நெஞ்சிக்குள் ஒரு நச்சுத்தீ உருவாகிக் கசிகிறது!

உணர்ச்சி முழக்கங்கள்
தீக்குச்சி போலாகி,
மனத்தை உரசுகையில்
(கனல் பற்றி)
ஆறாத ரணங்கள் அம்மா! ....
சமுதாய இருட்டிற்கு
வெளிச்சம் தேவைதான்!
அதற்காக
உன்னை நானும்,
என்னை நீயும்
எரிக்கும் முயற்சியில் இறங்குவதா? .....

ரயில்பெட்டி எரித்துச்
சவப்பெட்டி செய்யலாமா?

என்று டெல்லி ரயில் நிலையத்தில் எரிந்த ரயில் பெட்டிகளில் கரிந்துபோன மனிதர் மீது, மனமுருகி மரணக் காவியம் படைக்கிறார்.

இனிய இந்தியனே!
பிறனை நேசித்துப்
பிறனைப் புரிந்து கொண்டால்
(உறுதியாய்) நமக்குள்
ஓர் வல்லரசு தோன்றாதா?

இவ்வாறு வல்லரசு என்னும் வார்த்தையை இரட்டைப் பொருளில் விளக்கிக் கூறுகிறார்.

ஏசு பெருமான் பிறந்த நாளைக் கொண்டாடும் தினத்தை வர்ணிக்கும் கிறிஸ்துமஸ் கவிதை ஒன்று:

மனிதன் படைக்கப் பட்டதோ
தேவ சாயலில், அவன்
உருமாற்றம் ஆனதோ
ஹிட்லராய்,
முசோலினியாய்!
இன்றவன்
கடவுள் பாதி
மிருகம் பாதி
கலந்து செய்த கலவை!

மனிதன் ஆளுவது மிருக புரி ஆயினும், அவன் ஆளவந்த தேசம் ஓர் அன்பு புரியே!

கடவுளும், மனிதனும்
ஒன்றிணைந்த அற்புதம்
என்பதை நினைவூட்டவே
இன்று
மறுபடி பிறக்கிறது
பெத்லகேம் குழந்தை.

என்று மெல்லோசையில் ஏசுவெனும் சிசு பிறப்பை இனிமையாகக் கூறுகிறார்.

வைகைச் செல்வியை ஆரம்பித்திலேயே "சூழ்வெளிக் காப்பாளர்" என்று நான் சுட்டிக் காட்டினேன். பணிபுரிந்து வரும் சூழ்வெளிக் கண்காணிப்புத் துறையின் குறிக்கோள்களைப் பல கவிதைகளில் வைகைச் செல்வி தெளிவாகக் காட்டி யிருக்கிறார்.

திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக் கொண்டு, கடைசியில் மரத்தின் நிழல் கண்டு அதன் கீழ் சுகமடைகிறார்.

நிலையற்ற இன்பத்தில்
நெடுங்காலம் மூழ்கி விட்டேன்!
போதை தெளிந்த பின்னும்
புறப்பட மனமில்லை! .....
போதி மரத்தின் கீழ்
பொழுதெல்லாம் தூங்கியதால்
"நான்" மட்டும்
என்னில் விசுவரூபம் எடுத்தது!
நீதியும், நேர்மையும் ....
ஓங்கி அழைத்தாலும்,
மரத்தின் நிழலே
சுகமாய்ப் போயிற்று!

கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம் என்னும் படைப்பில் ஒரு கவிதை நாடகத்தைக் காணலாம். தொழில் யுகத்தில் மக்கள் ஊழியத்துக்கு உதவ தொழிற்சாலைகள் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் ஓடுகின்றன அப்போது அவற்றின் கழிவுப் பொருட்கள் புகையாகவும், மாசு திரவமாகவும், திடப் பொருளாகவும் வெளியேறிச் சூழ்வெளியின் நீர்வளம், நிலவளம், வாயுமண்டலம் மாசுபடுகின்றன. அதுவே அவர் விளக்க வரும் புதுயுக தொழிற்துறை நச்சுக்கள் யுத்தம்!

நான்கு திசைகளிலும்
புகை போக்கிகள்!
நச்சுக் காற்று நெளிந்து ... மனித
நாற்றுகளை மௌனமாய்த் தலைசாய்க்கும்!
நாள்தோறும் பேருந்து,
வாகனங்கள், வண்டிகளின்
கரிய புகை!
ஆலைகள் வைத்தார், அருகில் கல்விச்
சாலைகள் வைத்தார்!
ஆலைக் கழிவும், ரசாயன நீரும்
மாணவருக்கு
அங்கே இலவச அளிப்பு!

மனிதரால் மாசுபட்ட
வாயு மண்டலத்துக்கோர்
முகமிருந்தால்
அம்மைத் தழும்புகள்
நிறைந்திருக்கும்! .....
சுற்றுப்புறம் என்பது
எங்கோ யில்லை!
என்னைச் சுற்றி .... உன்னைச் சுற்றி
நம்மைச் சுற்றி யுள்ளது.
சுற்றுப்புறத் தூய்மையை முதலில்
கற்றுக்கொள்!
பிறகு கற்றுக்கொடு!
இல்லாவிடில்,
நம் கல்லறைகளை
நாமே கட்ட ஆரம்பிபோம்!

வைகைச் செல்வி வனாந்திர மரங்களின் தோழி! அவர் மரங்களை நேசிப்பவர். அவற்றைப் பின்னிரு கவிதைகளில் காணலாம்.

மரங்களை நேசிக்கிறேன்,
மனிதர்களைக் காட்டிலும் பிரியமாய்.
இனிய வசந்தத்தில்
இலைகள்
பகலில்.. பல்வேறு நிறத்தில்
மெல்லிய மஞ்சலில், .. அரக்கு வண்ணத்தில்
கரும் பச்சையாய், இளம் பச்சையாய்
கண்சிமிட்டிச் சிரிக்கும்!
என்னைல் போல
நிமிர்ந்து நிற்கும் யூகலிப்டஸ்
இப்படி எத்தனை எத்தனை மரங்கள்
என்னை நேசிக்கின்றன!
அதனால் சொல்கிறேன்,
மரங்களை வெட்டாதீர்!
வெட்டுகையில்
இ தயத் துடுப்பு எனக்கு
மெல்ல, மெல்லக் குறையும்!

இறுதியாக "வரம் வேண்டும்", என்னும் அவரது உன்னதப் படைப்பைப் பற்றிச் கூறிக் கட்டுரையை முடிக்கிறேன்.

இ¨றைவா! ஒரு
வரம் வேண்டும் எனக்கு.
மரமாய் மாற வரம் வேண்டும்!
அந்த மரத்தில்
ஆயிரம் கரங்கள் வரும்!
எதற்கு? ... (கனிகள் பறிக்க)
ஆயிரம் ஆயிரம் பூப் பூக்கும்!
காக்கை, குருவி தேடி வரும்!
கவிதை பாடக் கூடு கட்டும்!

வெட்ட வெளியில் நின்றாலும்,
பட்ட மரமாய் ஆனாலும்,
வீட்டுக் கதவாய் வடிவெடுப்பேன்!
வெட்ட வரும் மனிதனை
விரட்டிப் பிடித்து
உயரே தொங்க விடுவேன்!
காடும் மலையும் இல்லை யென்றால்
வீடும் நாடும் இனி யேது?
சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
அற்றுப் போகும் மனித இனம்!

அம்மி நூலில் கவிதைகளின் தலைப்பும் அவற்றின் பக்கமும் உள்ள முகப்பு அட்டவணை ஏன் தவிர்க்கப் பட்டது என்று தெரியவில்லை. "அம்மி" என்னும் தலைப்பை விட கவிதை நூலுக்கு, "வரம் வேண்டும்" என்னும் தலைப்பு பொருத்தமானது என்பது என் கருத்து. அவரது சூழ்வெளிக் கண்காணிப்புப் பணியையும், காவியப் படைப்பையும் அது ஒன்றாய் இணைக்கிறது.

இறுதியாகக் கவி அரசி வைகைச் செல்விக்கு ஓர் வேண்டுகோள்! "நீங்கள் நட்டு நீரூற்றி வளர்த்த "கவிதைகள் நாற்பது" ஆலமரங்களாய்ப் பெருகி விழுதுகள் விட்டுக் "கவிதைகள் நானூறு" என்னும் சோலை வனங்களாய் அசுர வடிவத்தில் விரிந்து, இல்லறத் தூசுகளையும், சூழ்வெளி மாசுகளையும், மக்களுக்கு எடுத்துக் காட்டட்டும்!

தமிழன்னை பெற்ற மாதர்குல மாணிக்கங்களில் ஒருவரான வைகைச் செல்வி, தமிழ் கூறும் நல்லுகத்தின் "வையகச் செல்வியாக" வளர்ந்தோங்க என் வாழ்த்துக்கள்.

++++++++++++++++++++++++
வைகைச் செல்வியின் "அம்மி" காவ்யா வெளியீடு,
[முதல் பதிப்பு: டிசம்பர் 2002], விலை ரூ.40
14. முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை: 600 024
++++++++++++++++++++++++

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 14, 2006)]
posted by mathibama.blogspot.com @ 3/17/2006 11:59:00 am   0 comments
Monday, March 13, 2006
கவிதை
தாட்சாயிணி தாண்டவம்

இற்று விழுகின்றன
என் தாலியின் கண்ணிகள்
ஆடி ஆடி
ஆனது ஆனதென்று சொல்லிச் சொல்லி
சொல்லத் தேவையில்லை
எனும் தருணத்தில்
இற்று விழுகின்றன

அதில் இருந்திருந்த
சிவனார்கள் தொலைந்து போனார்கள்
ஆடிய ஆட்டத்தில்
குண்டலங்களைத் தொலைத்து
வென்று விட வழி இல்லாது செய்த
என்னுடன் இருக்கப் பயந்து

வலப் பக்கம் நான் தர மறுத்ததை
சொல்ல வெட்கி
இடப் பாகம்
இயல்பாய் இருக்கத் தெரியாதவளாய்
சொல்லிப் போக

நெற்றிக் கண் நெருப்பு
சாம்பராகிப் போனது
தாட்சாயிணி தொடங்கினாள்
தாண்டவத்தை
பாதத்தினடியில்நசுங்கும்
பலநூறு வருட சாபங்கள்
மேகங்களாய்
மழையாகி
வெள்ளமாகி
கழுவிப் போகப் பார்க்கின்றது
உப்புக் கரிக்கும் கடலையும் சேர்த்து

( இந்த மாத கணையாழியில் வெளி வந்தது)
posted by mathibama.blogspot.com @ 3/13/2006 12:33:00 pm   2 comments
Saturday, March 11, 2006
வருந்துகிறோம்
ஈழ சுதந்திர போராளியும், எழுத்தாளருமான புஷ்பராஜா அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். அன்னார் இழப்பின் தவிப்பில் இருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் எனது சார்பிலும் " பாரதி இலக்கிய சங்க" சார்பிலும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
திலகபாமா
posted by mathibama.blogspot.com @ 3/11/2006 12:09:00 pm   0 comments
Friday, March 10, 2006
புதுமைப் பித்தனும் நடப்பியலும்
புதுமைப் பித்தனும், நடப்பியலும்
எழுத்து நினைவு மனத்தின் தொடர்ச்சியாக நனவிலி மனத்திலிருந்து வெளிப்படுவது . நினைவு மனத்தின் தொடர்ச்சியாக மட்டும் எழுதப் படுகின்ற எழுத்துக்கள் வெற்றுப் பிரச்சாரங்களாகி கோசங்களாக மாறிப்போய் விடுகின்றது. வெறும் நனவிலி மனத்தின் தொடர்ச்சியாக எழுதப்படுகின்ற எழுத்துக்கள் அதீதப் புனைவியலுக்குள் மனித வாழ்வியலோடு பொருந்தாத புனைவியலுக்குள் தன்னை திணித்துக் கொண்டு அழிந்து போகின்றன.
புதுமைப்பித்தனின் எழுத்துகள் இந்த இருவெறு திசைகளுக்குள்ளும் மட்டுமல்லாது எந்த சிமிழுக்குள்ளும் சிறைப்பட்டு விடாது சமூக பிரக்ஞையுடன் கூடிய கலையைத் தந்திருக்கின்றன. படைப்பாளி சமன் நிலையை குலைக்கிறவன் அல்ல. அடுக்கப் பட்ட தொடர்ச்சியில் இடையில் நிரப்பப் படாது நின்று போகின்ற இடைவெளிகளை பயன் பாட்டுக்கு கொண்டு வருவதற்காக ஏற்கனவே இருப்பவற்றை மாற்றி அமைக்க முற்படுபவன். அந்த வகையில் தான் புதுமைப் பித்தன் எழுத்துக்கள் என் வாசிப்பில் காணக் கிடைக்கின்றன. படைப்பு பிறந்தவுடன் படைப்பாளி செத்துப் போவதில்லை . படைப்பின் வழி மறு பிறப்பெடுக்கின்றான் அவனது மரபணுவின் தொடர்ச்சி எச்சம் எல்லாம் விதையாய் விழுந்து தொடரவும் செய்கின்றது.
அப்படியான படைப்பாளி மனநிலையிலிருந்து சில நேரமும் வாசக மனநிலையிலிருந்து சிலநேரமும் என்னுடைய விமரிசனம் அமைந்து விடுகின்றது மிகச் சொற்ப படைப்பாளிகளின் படைப்புகளையே படைப்பாளி மனநிலையிலிருந்து விமரிசனம் செய்யக் கூடியதாய் இருக்கின்றது.
புதுமைப் பித்தனின் ஒவ்வொரு கதையினூடாக நான் பயணித்ததை பகிர்ந்துகொள்கின்ற இடம் தானிது. அதே நேரம் பயணித்தது முழுவதையும் விவரிக்கத் துவங்கினால் உங்களுக்கும் எனக்கும் இன்னுமொரு பிறவி தேவைப்படும்.
எனவே ஆற்றங்கரையோர பிள்ளையார், கபாடபுரம் அகல்யை, சாபவிமோசனம், பொன்னகரம், என ஒரு சில கதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு எனது கருத்துக்களை முன் வைக்கலாம்
காலப் பொருத்தம் பார்த்து ஆய்வது தான் பொருத்தமான கருத்தியல் ஆய்வு என்பார் சி. க. புதுமைப் பித்தனின் காலத்தை உணர்ந்த படியும், இன்றைய காலத்திற்கு அவை எப்படி பொருந்துகின்றன எனும் நோக்கில் தான் என் கருத்தோட்டம் அமைகின்றது


புனைவியல்

முழுக்க படிமங்களாலும் , புனைவியலாலும் நிரம்பியிருக்கின்ற கதைதான் ஆற்றங்கரையோர பிள்ளையார் . படிமங்களாலும் புனைவியலாலும் எழுதி விட்டு சாவியைத் தொலைத்து விட்டு தேட விடுபவர்கள் இருந்திருக்கின்றார்கள் இன்றும் இருக்கின்றார்கள். சாவியை ஒளித்து வைப்பதில் தனது திறமைசாலித்தனத்தை செலவழித்து போகின்றவர்களையும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றோம் . ஆனால் சாவியை தேடும் ஆர்வத்தை வாசகனுக்குள் நுழைந்து விடுகின்ற வித்தை புதுமைப் பித்தன் கதையில் தான் சாத்தியமாகின்றது. அதிலும் இக்கதையை வாசிக்கையில் எனக்கு வால்காவிலிருந்து கங்கை வரை நினைவுக்கு வந்து போகின்றது. அது யதார்த்த கட்டுரை வடிவத்திலாலான படைப்பு. இது புனைவியல் யதார்த்தம் இறுக்கமான அதே வேளையில் பரவலான தளத்திற்கு இட்டுச் செல்லும் படைப்பு. பிள்ளையாரின் விஸ்வரூபமாய் நமக்குள் இக்கதை பேசுகின்ற விடயங்கள் விரிவு பட்டு நமை கேள்விக்குள் சிக்க வைத்து வெளி வருவதற்கான பிரயத்தனங்களையும் தந்து போகின்றன.
ஆற்றங்கரை நாகரீகம் சமய தர்மமும் ராஜ தர்மமும் சேர்ந்த சமூக உருவாக்கம், பௌத்த , சமண வெளிப்பாடு மொகலாய படையெடுப்பு , சம்ய தர்மத்தை தூக்கி நிறுத்த வந்தவர்கள், தூக்கி நிறுத்திய பின்னும் கோணிக் கொண்டு நின்ற சமய தர்மங்கள் அதற்கு முன்னும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டுமென்று கோணல்களை நியாயப் படுத்தி நிறுவிய வரலாறு, மொகலாய படையெடுப்பு, ஆங்கிலேய காலணி ஆதிக்கம் , தர்மங்களிலிருந்து பிரிக்க முடியா மனிதன், தர்க்கங்களோடு கூட இருப்பவர்கள் என்று புனைவியலோடு கருத்தியல்களை கேள்விக்குள்ளாக்கும் கதையாக இருக்கின்றது. புனைவியலான எல்லாவிதமான உச்சங்களையும் எழுத்தில் தந்து போயிருக்கின்றார், அதே நேர புனைவியலுக்குள் புகுந்த அவரது நனவிலி மனம் நினைவு மனத்தின் தொடர்ச்சியான யதார்த்த வாழ்வின் கேள்விகளையும் தேக்கி நின்றதால் தான் வெற்றியடைந்திருக்கின்றது. மனித உடலும் பிரக்ஞை பூர்வமான மனதும் காலம் திசை, புனிதம் புனிதமற்றது நாகரீகம் நாகரீகமற்றது என்ற பிரிவினைகள் அற்று எல்லாமே மனிதனுக்காய் மாறுகின்ற தருணங்கள், சாக்காடு ஆதாரகோளம் புத்தி சித்தம் என்று தர்க்கங்களை கபாடபுரம் கதையெங்கும் காண முடிகின்றது. அப்படியான தர்க்கங்கள் சரி பிழை என்பது தாண்டி வாசிக்குந்தோறும் மனதூடாக அதை உணரப் படுவதை நிகழ்த்தி விடுகின்ற படைப்பாக இருக்கின்றது.
சங்குத் தேவனின் தர்மம், பொன்னகரம்:
புனைவியலால் மட்டுமல்ல, அது தாண்டியும் வெத்து உரையாடல்களாய் இருந்த போதும் புனைவியலில் கிளப்பிய அதே வேக உணர்வலைகளை கிளப்பி விடுவதாய் புதுமைப் பித்தனின் யதார்த்த மொழியிலான படைப்புகளும் இருக்கின்றன.ஆற்றங்கரை பிள்ளையாரை வாசித்து விட்டு சங்குத் தேவன் தர்மம் வாசிக்க 36000 அடி உயரத்திலிருது தரையிறங்கிய விமானமாய் தோன்றியது. இந்த பூமியில் நமக்கு அருகாமையில் அல்லது நாம் வாழுகின்ற மண் பற்றிய கதைதான். எவ்வளவு உயரப் பறந்தாலும் இந்த மண் வாசமில்லாது எழுத்து இருக்க வாய்ப்பேயில்லை. அந்த மண்சார்ந்த மக்கள் தான் அவர்களின் எண்ணங்கள் அது பிரதி பலிக்கும் சமூகம், வெற்று நிகழ்வுக்குள்ளும் நிகழ்ந்த உரையாடலுக்குள்ளும் எத்தனை பொருள்கள் கண்டு தெளிய வேண்டியிருக்கின்றது என உற்று நோக்க வைக்கின்ற படைப்பு இது.
ஹிந்து சமூகத்தின் பழைய உலர்ந்து போன கட்டுப் பாடுகளின் கைதிகளாக இருந்து வரும் ஏழைகளின் வாழ்வு பற்றி, ஆங்கிலேய ஆட்சியினால் ஊர்க்காவல் தொலைந்து களவுக்கு மாறுகின்ற சமூகத்தை பற்றி , களவுக்கு மாறிய போதும் மனிதனாய் வாழ தருணங்கள் கிடைக்கையில் அதை நிராகரித்து விடாது சாதிக்கும் மனித தர்மம் பற்றி என்று சமூக மாற்றங்களை பொருளாதார வேறுபாடுகளின் பாதிப்பை விமரிசனம் செய்யும் யாதார்த்த படைப்பு.
பொன்னகரம்
இக்கதையை இதுவரை விமரிசித்த எல்லாஇடத்திலும் கற்பு பற்றிய அவர் வசனததை சிலாகிப்பதை கேட்டிருக்கின்றேன். அதே நேரம் கற்பு என்கின்ற வார்த்தையை அம்மாளு என்கின்ற பாத்திரத்திற்காக பேசிய வசனமாகவும் வைத்துக் கொண்டு சிலாகிக்கும் போது அந்த படைப்பை இன்னு சரியான கோணத்திலிருந்து பார்க்கத் தவறு கின்றோமோ என்றும், கற்பு என்றவுடன் எங்களுக்குள்ளும் பெண் சார்ந்த ஒரு விடயம் என்று ஆணாதிக்க் சமூகம் திணித்திருக்கின்ற சிந்தனையை தவிர்க்க முடியாதவர்களாக இருப்பதற்குமே இந்த விமரிசனங்கள் சாட்சிகளாக இருக்கின்றன
பொன்னகரம் சிறுகதையில் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் எத்தனை சமுதாய சீர்கேட்டை சொல்லும் எள்ளல். இந்த இரு பக்க கதைக்குள் அம்மாளுவின் பாத்திரம்மூன்றின் ஒரு பங்கான அரைபக்கத்தில் மட்டுமே வருகின்றது. அதிலும் அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதிக்கின்ற விசயம் அதிகம் போனால் இரண்டு வரிகளுக்குள் முடிந்து விடுகின்றது. அதை விட உழைக்கும் மக்கள் “மகாராஜாவின் இம்மைக்காக” பாடு படத் துவங்குவதிலிருந்து அந்த தெருவில் எத்தனை அவலக் காட்சிகள் சமூகத்தின் முகமாக மாறித் தோற்றமளிக்கின்றதோ அதை அனைத்தையும்
முயல் வளைகள் போல் , சாராய ரஸ்தாவிற்கு போகின்ற தெரு
சேற்றுக் குழம்புகள்
முனிசிபல் கங்கை
தண்ணீர்க் குழாய்கள்?
இரும்பு வேலிகளுக்குள் நுழைந்து விடும் வறுமையின் சின்னமாய் மெல்லிசுக் குழந்தைகள்
பாரதப் போருக்கு நிகரான தண்ணீர் போர், மாமூல், குடிகாரர்கள், கஞ்சா , என இன்னும் இன்னும் விவரித்து போகும் தோரணையிலும் கோபம் தெரிக்கின்றது. இறுதியில் சொன்ன கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே எனும் வாக்கியத்தில் வரும் கற்பு எனும் வார்த்தை பலபேர் விமரிசனம் செய்கையில் பெண் சார்ந்த விசயமாகவே பார்த்து சிலாகிப்பது கூட சரி என்று எனக்கு படவில்லை. எனக்கு புதுமைபித்தன் ஒட்டு மொத்த சமூகத்தின் கற்பையே இதில் கேலி செய்கின்றார். அது பெண்ணின் பாத்திரத்தை மட்டும் குறிப்பது அல்ல அந்த வகையில் இது பெண்ணியச் சிந்தனை அல்ல, மானுட பிரச்சனையாக பார்த்த சமூகச் சிந்தனை இது. பெண்ணியச் சிந்தனையையும் பொதுமைக்குள் சமூகப் பிரச்சனையென்னும் பொதுமைக்குள் கொண்டு வந்து விடுகின்றது.

அகல்யை, சாபவிமோசனம்

புதுமை பித்தனின் மீட்டுருவாக்கச் சிறுகதைகளில் மிக முக்கியமானது. இவ்விரு கதைகளும். அகல்யை காலத்தால் முந்தியது. சாபவிமோசனம் காலத்தால் பிந்தியது.ஆணோ பெண்ணோ இந்த ஆணாதிக்க சமூகம் விட்டுச் சென்ற எச்சத்தின் கூறு எங்களுக்குள் அடிமை மனோ பாவமாகவோ, அல்லது ஆதிக்க மனோ பாவமாகவோ தொடரவே செய்கின்றது , அதை தவிர்க்க வேண்டும் என்று முனையும் போதும் தவிர்க்க முடியாது போகின்ற தருணங்களை இக்கதை அடையாளம் காட்டுகின்றது.
“ அவர் அவளுடைய லட்சியம் அதனால், அவள் கற்புடன் இருந்ததில் என்ன அதிசயம்” இந்த வரிகள் எவ்வளவு தான் நாங்கள் முன்னகர்ந்த போதும் மன இருட்டுக்குள் இருந்து கொண்டிருக்கும் இருளை அடையாளம் காட்டும் பகுதியென தோன்றுகின்றது
அதே நேரம் சாப விமோசனம் இன்னுமதிக பரப்பளவில் தன்னை வியாபித்துக் வெளிப்படுத்தியிருக்கின்றது
கைகேயியைக் கண்டு பரிதாபப் படும் அகலிகை
கணவர் ஒத்துக் கொண்ட போதும் ஊரெல்லாம் பேசுகின்றார்கள் என்று ஒதுங்கிப் போகும் யதார்த்தம், சீதையின் தீக்குளித்த நிலை கண்டு ராமனை “அவன் கேட்டானா” என்று ஏக வசனத்தில் கேட்பதுவும், அகலிகை மனக் கேள்விகளாய் “நிரூபித்து விட்டால் உணமையாகி விடுமா? உலகம் எது ? இவையெல்லாம் இக்கதை நமக்குள்ளும் எழுப்பிச் செல்கின்றது. பெண் மனமாக மாற முயற்சித்திருக்கின்றார் .
“ராமன் மனசை சுட்டது, காலில் படிந்த தூசி அவனை சுட்டது. “
இந்த வரிகளும் நம்மை ஒரு நீண்ட பயணத்திற்கு தயராக்குகின்றன. அகலிகை ராமனை பார்க்க வரவில்லை உள்ளிருந்து என்பது ராமனை சுட்டதா? அவன் காலிருந்த தூசியை படிய விட கல் இல்லாது போனது சுட்டதா?

“மறக்க வேண்டிய இந்திர நாடகங்கள்
கோதமன் உருவில் வந்த இந்திர வேடமாக பட்டது “ சாட்டையடிகளாய் நீளும் வாக்கியங்கள்
நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்ளுவது தான் பொருந்தும்
இந்த வரிகளை அவருக்கு பிறகு நாங்கள் இன்றைய சிந்தனையாய் யோசிக்க வேண்டி இருக்கின்றது புதுமை பித்தன் அவரது காலத்தில் எல்லாரையும் விட உயர்ந்து நின்றார் என்பது உண்மைதான். எனினும் “ ஏற்றுக் கொள்ளுதல்” என்ற வார்த்தை நானாயிருந்தால் பெண் குரலாயிருந்தால் வந்திருக்காது என்று தோன்றுகின்றது.
கீழ்கண்ட கவிதை எனது சிந்தனை¾¡¸õ ¾£÷ìÌõ Á½ø¸û

தாகம் தீர்க்கும் மணல்கள்
திலகபாமா

விடிகின்ற பொழுதொன்றில்
சேவல்களாய் கூவிய
இந்திரன்கள் திகைக்க
கமண்டலமிருந்து கை ஊற்றிய நீர்
தெளிக்கத் தேடிய ஜடப் பொருள்
காணாது கௌதமனும் சிலையாக

தின்று விடவும்
சாபத்தினால் உறைய விடவும்
நீங்கள் தீர்மானித்திருந்த
நானென்ற
என் உடல்தனை அறுத்து கூறிட்டு
திசையெங்கும் எரிய
சூனியத்தில் திரிந்தலைகின்றன


உடலில்லா எனை
தழுவ முடியாது இந்திரன்களும்
தலை சீவ முடியாது பரசு ராமன்களும்
சாபமிட முடியாது கௌதமன்களும் இருக்க

சேவல்களால் கூவாத பொழுதிலும்
சூரியன்கள் உதிக்காத தருணங்களிலும்
எனக்கான விடியல்கள் உதயமாகின்றன

றுகள்
சாபமேற்ற அகலிகைகளால் நிரம்பியும்
நீர்கள் எல்லாம்
பரசுராமன் வெட்டித் தீர்த்த
உடல்கள் மிதந்தலைய
தீரப் போவதில்லை உங்கள் தாகங்கள்

வெளியெங்கும் என் காதல்கள்
நானே தீர்மானித்தாலொழிய
பானைகளாகாது சிதறிக் கிடக்க

ஒப்பீடுகள் தொலைத்து
உணர முடிந்த கணமொன்றில்
உடலாக மட்டுமல்லாது
இயற்கையின் எல்லாமாகி
மணல்களும்
நீர் சுமக்கும் பானையாகி
தாகம் தீர்க்கும் அதிசயம் காண்பாய்




புதிய நந்தன்
சாதீய அமைப்பு மனிதனுக்குள் விதிக்கின்ற தடைகள் சாதீய மறுப்பு, சாதீய கலப்பு இருசமூகத்தையும் ஆதிக்க, ஒடுக்கப் பட்ட சமூகத்தையும் எப்படியெல்லாம் பாதித்தது எப்படியான மன உளைவுகளைத் தந்தது என்பதையும் சொல்லுகின்ற கதையிது,
இவரது பல சிறுகதைகளில் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற குப்பனும் சுப்பனும் நிஜ மனிதர்களாக வாழ்வின் நிஜங்களை சொல்லவும் கேள்வி எழுப்பவும் வந்து போகின்றார்கள். தலித்தியம் எனும் போர்வை எதுவும் இன்றியே சாதியை தொலைப்பது பற்றி அவரது புதிய நந்தன் கதை கோடிட்டு செல்கின்றது.கொடுக்காபுளி மரம், தனியொருவனுக்கு போன்ற கதைகள் ஒடுக்கப் பட்டவர்களின் வலியை, அதை கடக்கின்ற சிந்தனையோடு பேசுகின்றது. தலித்தியம் கூர்மையடைந்ததாக இன்று தோற்றம் தருகின்றதே ஒழிய, கிளைகளாக பிரிந்து வலுவிழந்து போயிருக்கின்றது.ஆளும் வர்க்கமும் சரி அடிமை வர்க்கமும் சரி இருவருமே சாதியை மறுக்க தலைப்பட வேண்டும். சலுகைகளுக்காக சாதியை நாம் தேடுகின்ற வரையில் அதுவும் நம்மை விட்டு போகப் போவதில்லை
கவுந்தனும் காமனும்
ஏழ்மைக்குள் சிக்கி தவிக்கும் ஒரு ஆணின் நிலை பாலுணர்வை மறக்க அல்லது வெறுக்க வைக்கின்றது. பெண்ணின் நிலை பாலியல் தொழிலை நோக்கி நகர வைக்கின்றது. இக்கதையை நான் இப்படித்தான் உணர்கின்றேன்.பெண் உடல் ஒரு ஜடப்பொருளாக பார்க்கப் படுகின்ற சூழல் ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள் இருந்து கொண்டேதானிருக்கின்றது.
வாடாமல்லிகை
விதவை திருமணம் பற்றி இன்று வரை யாரும்சொல்லியிருக்காத கருத்தாக எனக்குப் பட்டதுஇக்கதையில் வந்திருக்கும் வரிகள்
“ கொள்கைக்காக நீர் தியாகம் செய்து கொள்ள முயலுகின்றீர். அது வேண்டாம் மிஞ்சினால் நான் உமக்குப் போகக் கருவியாகத் தான் , உமது தியாகத்தின் பலிபீடமாகத்தான் நீர் கருதுவீர் அது எனக்கு வேண்டாம். நான் காதலை கேட்கவில்லை, தியாகத்தை கேட் கவில்லை என்று சொல்வது புதிய ,நல்ல விசயமும் கூட,
“உன் கால்வண்ணம் காட்டவென்றா நான் பெண்ணாய் மாற” .இக்கவிதை வரிகள் எனது சிந்தனை
வாழ்வு தருவதாய் சொல்கின்றவன் திருமணத்திற்கு அவள் ஒத்துக் கொள்ளாத போது அடுத்த வார்த்தையாக நீ ஒரு பரத்தை என்று சொல்லுகின்ற போது பெண்களுக்காய் பாவப்படுவதாய் சொல்லுகின்றவர்களின் சுயரூபத்தையும் உள்ளுக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தையும் அடையாளம் காட்டுகின்றது இக்கதை
அதே நேரம் கலியாணி கதையின் கருத்தியல் என்னால் ஒத்துக் கொள்ள முடியாததாக இருக்கின்றது
ஒரு கலைஞனுக்கு பெண் சுகம்அல்லது பெண் தேவை தவிர்க்க முடியாததாகவும்
அல்லது பெண் தனது எல்லாவற்றையும் அவனுக்காக துறப்பதாகவும் வால்காவிலிருந்து கங்கை வரையிலும் நூலிலும், மற்றும் காலம் காலமாக சொல்லப் பட்டு வருவதாகவே இருந்து வருகின்றது.
இக்கதையிலும், கலியாணியின் சூழலை பயன்படுட்திக் கொண்டு சுந்தர சர்மா, கடந்து போகின்றார் . இது இன்றைக்கும் எல்லா கலை உலகிலும் உள்ளங்கை இரகசியமாக எல்லாரும் அறிந்த ஒன்றாகவே இருந்து வர . இதில் பெண்கள் தின்னப் படுவதை அவர்களை உணரவிடாமல் வைத்திருப்பதை இந்த ஆணாதிக்க சமூகம் திட்டமிட்டு செயல்படுவதை, மிக மெல்லிய நுண்ணிய வழிகளில் எல்லாம் செயல் படுவதை பிரதியாக்கம் செய்கின்ற கதையாகும், பிரதியாக்கம் , இயற்ககயியலான படைப்பு நிலைக்கு தள்ளி விடுகின்றது ஒரு கலைஞனும் கூட இதில் தாண்ட முடியாதவர்களாகவே இருப்பது வெட்கக் கேடானது
அவதானிப்புகள்
ஒரு படைப்பாளி இதை ஏன் எழுதவில்லை என்று நாம் கேள்வி கேட்க முடியதென்றாலும், மொத்த படைப்புகளின் வாசிப்பின் பின் எனது அவதானிப்பக இரு விசயங்களை சுட்டிக் காட்ட வெண்டும் என்று னினைக்கின்றேன்
ஒன்று
“ ஒரு நாள் இரவு மேற்கு சமுத்திரத்தின் அடிப்பாகத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டதினால் கடல் ஜலம் நதிக்குள் எதிர்த்துப் பாய்ந்தது.” இதுபோன்ற சுனாமியை அடையாளப் படுத்துகின்ற வரிகள் அவரது படைப்பெங்கும் காண முடிகின்றது. அது ஏன்?
இன்னொன்று அவரது படைப்புகளில் எல்லாம் சிறு சிறு சம்பவங்கள், சம்பவங்களுக்கு பின்னாளான இட வர்ணனைகள், பல வேலை பார்க்கின்றவர்களின் சுவடுகள் என்று எவ்வளவோ பதிவாகியிருக்க, புதுமைப் பித்தனின் மிக முக்கிய கால கட்டமான 34 லிருந்து 48 வரை சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்ட கால கட்டம் நிகழுகின்ற நேரம். இயக்கங்களோடு தொடர்பு இல்லாது போனாலும், கதை சம்பவங்களின் பிண்ணனியிலும் கூட அந்த போராட்ட சூழல் அவரது கதைகளில் பதிவாகவில்லை என்பது அச்சரியம் தான் அது ஏன்? எப்படி? இந்த கேள்விகளும் இருக்கின்றன
கலை சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதிலும், அது பார்த்ததை அப்படியே பதிவு செய்யும் இயற்கையியலான படைப்பாக இல்லாது விசாரணைகள் செய்யும் நடப்பியல் படைப்பாகவும் மனிதனுக்கானது என்பதிலும் புதுமைப் பித்தன் தெளிவாக இருந்திருக்கிறார்.இந்த மண்ணுக்கான விடயங்களை எழுதத் தொடங்கி பலவித உத்தி முறைகளையும் சோதனை முயற்சி என்று தொடங்காது இயல்பாகவே செய்ததனால் கிடைத்த வெற்றி .இருளை வெளியே கொண்டு வருகின்றேன் என்பவர்களை விட இருளை அகற்ற நினைக்கும் மன நிலையாவது எழுத்து தரவேண்டும் புதுமைப் பித்தன் ஒரு ஒளியை ஏற்றி வைத்து போயிருக்கின்றார். பலரும் அவ்வொளியை பல வித வர்ண கண்ணாடிகள் கொண்டு தலித்தியம் பின் நவீனத்துவம், பெண்ணியம் என்று பார்க்க முனைகின்றார்கள். எந்த வர்ணமாகத் தெரிகின்றது என்று யார் சொன்னாலும் அது ஒளி என்பதுவே சத்தியம்
posted by mathibama.blogspot.com @ 3/10/2006 08:38:00 am   1 comments
Monday, March 06, 2006
மனவெளிப் பயணம் 2


சன நெருக்கடி அதிகமுள்ள விமான நிலையத்திலிருந்து, அறிவிப்பு பலகைகளையும், கடந்து போகின்ற ஆட்களின் பின்னாடியும் போய் பெட்டிகள் வந்து சேரும் இடம் காத்திருந்து , எடுத்து வெளியே வர பார்வையாளர்கள் கூட்டத்தில் அழைத்து செல்ல வந்த நண்பர்கள் சுசீ, இன்பாவை கண்டதும் தான் குளிர் உறைக்கத் துவங்கியது. அது வரை குளிரைக் கூட உணர முடியா நிலையில், போய் சேருவது பற்றிய கவலையில் மனது இருந்திருக்க வேண்டும் தோள் சாயும் நண்பர்கள் கிடைத்ததும் மனம் இயலாமையை உணருகின்றது. பல நேரங்களில் பெண்ணின் சார்பு நிலை இதுதான். தனக்கான ஆணை சார்ந்து இருக்கின்ற வரை இயலாமையை யாரோ தனக்கானதை நிறைவேற்றிட வேண்டும் என எதிர்பார்க்கும். கூட தோள் சுமக்க ஆளில்லாது தனியாளாய் நிற்க நேருகின்ற சமயங்களில் தான் தன் பலம் உணரத் தலைப் படுகின்றது. உண்மையில் இந்த பயணம் என் பலத்தை எனக்கு உணர்த்தியிருக்கிறது.
தொடர்ந்த நாட்களில் குளிரின் தீவிரம் உணர விடாது உடைகள் போர்த்துக் கொண்டு இல்லை சுமந்து கொண்டு திரிவதும், பெரும் தண்டனையாகத்தான் இருக்கின்றது
மறு நாள் அறைக்குள்ளிருந்து விடிந்து விட்ட பொழுதை ஆர்வமோடு பார்த்துக் கொண்டிருந்தேன். மூடிய அறைக்குள் கண்ணாடி சன்னல் வழியாக பனி மெல்லிய, பார்வை ஊடுருவக் கூடிய புகையாக இருக்க சூரியன் தன் கிரகணங்களில் அதைக் கூட்டி எடுக்க பிரயத்தனம் எடுத்த படி இருக்க, வரவேற்பறைக்கு இணையாக அலங்கரிக்கப் பட்ட குளியலறை ஆச்சரியத்தை தந்தது. தரையெல்லாம் விரிப்பு விரிக்கப் பட்டு சன்னல் மற்றும் உள்ளிருந்த அலமாரிகளின் திட்டுகளில் எல்லாம் பொம்மைகளும் , செடிகளும் வாசனையை நிரப்பும் காய்ந்த பூக்களும் வைக்கப் பட்டு எப்படி குளிப்பது? யோசிக்குமுன்னரே தண்ணீர் ஒரு பொட்டும் சிந்தாது தொட்டியுள்ளிருந்து (டஃப்) குளித்து வெளிவர அறிவுரை தரப்பட்டது. முதலிலேயே தீர்மானித்திருந்தேன் அங்கிருக்கும் வரை அங்கு கிடைக்கின்ற அந்தந்த நாட்டு சாப்பாட்டை ஏற்றுக் கொள்ளுவது என்றும் நம்மூர் சாப்பாடுதான் வேண்டுமென தேடித் திரிவதில்லையென்றும்.
காலை உணவாக பான் என்று சொல்லப் படும் ப்ரெட், நாம் காய்ச்சல் நேரங்களில்மட்டுமே வெறுப்போடு சாப்பிட நினைக்கும் ரொட்டியில், இதுவரை நமக்கு அதில் பூசி சாப்பிடவென்று தெரிந்தது,வெண்ணையும் ஜாமும், ஆனால் பானில் பூசிச் சாப்பிடவென்று வித விதமான பொருட்கள் அங்கு தயாரிப்பு உணவாக கிடைக்கின்றது அதில் சைவம் அசைவம் இரண்டும் அடக்கம். அங்கு மட்டும் இல்லை இங்கும் கிடைக்கிறது என்பது போய் வந்த பின்புதான் தெரியவருகின்றது. இவ்வளவு நாளும் அதே பொருட்கள் கடையில் இருந்த போதும் கவனத்திற்கு வராமலே போய் இருக்கின்றது. அறைக் கதகதப்பு விட்டு வெளியில் வர நினைத்துப் பார்த்திராத குளிர் போர்த்த கெண்ட் எனும் இடத்திலிருந்து க்ரொய்டன் எனும் இடம் வந்து பின் ஹெய்சில் நித்தியானந்தன் வீட்டில் வந்து தங்கினோம்
ஐரோப்பிய வாழ்க்கை ஆடம்பரமான வாழ்க்கையென்று எப்போதும் நம் முன் ஒரு பார்வை வைக்கப் படுகின்றது அதே போல் இன்றைய இலக்கியங்களில் வக்கிரமான போக்குகளை கொண்டு சேர்க்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும்(லதா ராமகிருஷ்ணன் கவனிக்க, படைப்புகளை பற்றிய விமரிசனமே அன்றி படைப்பாளியை பற்றி அல்ல), அதை வளர்த்து விடும் பத்திரிக்கைகாரர்களின் போக்குகளையும் கண்டித்து எழுதுகையில் எனக்கு சொல்லப் படுகின்ற வசனம்” உலக இலக்கியங்களை வாசித்தீர்களானால் தெரியும்” , என்றும்” நாங்கள் எழுதுவது உலக இலக்கியத்திற்கு ஒப்பானது” என்றும், சொல்லுவதும், இன்று நான் பார்க்க நேர்ந்த ஐரோப்பிய தமிழர்கள், ஐரோப்பியர்கள் வாழ்க்கை இவற்றோடு எப்பவும் மனதிற்குள் ஒரு ஒப்பீடு இருந்து கொண்டே இருந்ததை நிகழ்த்தியிருந்தது. சமூகத்தை அறிந்து கொள்ள விழையும் படைப்பாளி மனம் அந்த ஒப்பீடுகளிலிருந்து தப்பிக்க முடியாது என்றே நினைக்கின்றேன்
நீளுகின்ற இரவுகள், இயந்திரமயமான வாழ்க்கை, தனி மனித சுதந்திரம் இருக்கின்ற அதே நேரத்தில், யாருக்கும் யாரும் ஆதரவுமாக இல்லாத தனிமை, அதிகப் படியான குளிர் மனிதனுக்குள் வக்கிரங்களை எழுப்பி விடுவதாகத்தான் இருக்கின்றது. அதை வடிய விடும் முயற்சியாகவே அங்கத்தைய சாப்பாடு வாழ்வியல் எல்லாமே வடிவமைக்கப் படுகின்றது,அந்த வாழ்வியலை தொடர்ந்தே அங்கத்தைய இலக்கியங்களூம் இருக்கும் அதை கொண்டாடுவதை விடுத்து நம் மண் சார்ந்து யோசிக்க என்று நாம் பழகப் போகிறோமோ தெரியவில்லை. இந்த கேள்விகளை, அதற்கான பதிலை இந்த பயணம் முழுக்க சாட்சிகளோடு கண்டேன்.
சூழ இருந்த நண்பர்கள் நான் ஏன் அமைதியாயிருக்கின்றேன் என்று கேள்வி எழுப்ப எனக்குள் நடந்து கொண்டிருக்கின்ற விவாதங்கள் , எழும்பத் துவங்கியிருந்த நேரமாதலால் சொல்லி விட முடியா சூழலில் அப்பொழுது நான் இருக்க என் விவாதங்கள் இதோ என்னோடு இங்கு இன்று தரையிறங்கியிருக்கின்றன, 14 அக்டோபர் தொடக்கம் 20 வரை லண்டனில் நான் இருந்த குடும்பங்கள் அவர்களது வாழ்க்கை முறை , பெண்கள் தொடர்பாக நிறைய எனக்குள்ளாக பேசிக் கொண்டிருந்தேன்.
இயந்திராமாய் ஓடித் திரிந்து இரவில் மட்டுமே சந்திப்பது என்று இருந்த குடும்பங்களும் அப்படியே மண்ணோடு பெயர்த்தெடுத்துப் போய் பொருத்தமில்லாது ஒட்டிக் கொண்டிருக்கும் குடும்பங்களுமாக இரு வேறு திக்குகளையும் தூரத்தில் நின்று தராசின் முள்ளாய் அவதானிக்க முடிந்திருக்கின்றது என்றே நம்புகின்றேன்.எருமைத் தோலை பரதேசம் அனுப்பினாலும் வெளுக்காது என்று உணர்த்திய நிகழ்வும் கருந்தோல்களை மறைக்க சதையோடு பிய்த்தெரிந்து விட்டு குருதி உதிர நிற்க பார்த்ததும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாய்த்தது
கிரோய்டன் பகுதியில் ஜனநெருக்கடி மிகுந்த இடத்தில் உள்ள வீட்டிற்குள் 4 குடும்பங்கள் , ஒரே சமையலறை வரவேற்பறை கழிப்பறையை பொதுவாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். நம்மூரின் காம்பவுண்ட் வீடுகளை பார்த்திருக்கின்றேன். ஒன்று போல் தொடர் வீடுகள் என ஆனால் இன்று மிகச் சாமான்யனின் வருமானத்தில் கூட அப்படி வாழ்வதற்கு சம்மதிப்பானோ தெரியவில்லை. கூட்டுக் குடும்பங்களில் 5 குடும்பங்கள் வரை கூட ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இது வேறு மாதிரி. ஆண்கள் வேலை விசயமாக பறந்திருக்க பெண்கள் அறைக்குள்ளும், குழந்தைகளோடும் தொலைக்காட்சி தொடர்களோடும் மிக மோசமாக சிக்கிய படி இருக்கின்றனர்.

மேலைத்தேய போக்குகள் என்பது வளர்ந்து விட்ட நாடுகளின் வாழ்வியல் மேல் நமக்கு இருக்கின்ற ஈர்ப்பு இங்கே நேரில் நின்று பார்த்தால் எல்லாம் சில்லு சில்லாக உடைந்து போகின்றது. துவைக்குமியந்திரமும், பாத்திரம் கழுவும் இயந்திரமும் அறைகளில் வெல்வெட் விரிப்புகளும் தமிழகத்து, வாழ்வியல் தேவைகளுக்கும், ஆடம்பரங்களுக்குமிடையேயான வேறுபாடுகளை உணர்ந்து பார்க்கத் தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் திகைப்பூட்டலாமே ஒழிய அங்கு வளர்ந்து விட்ட நாடுகளின் அடிப்படைத் தேவைகளே தவிர அவை ஆடம்பரமல்ல என புரிந்து கொண்டு விட்டால் காலணி வீடுகளைக் கூட தவிர்த்து விடுகின்ற நமது சூழலில், ஐரோப்பிய மோகம் நில்லாது ஓடிப் போய்விடும் குண்டுச் சட்டிக்குள் ஐரோப்பா போயும் குதிரை ஓட்டும் நிலைமை நீடிப்பதை பார்க்க வருத்தமாகவே இருக்கிறது, கடல் தாண்டி நாடு தாண்டிவந்த பின்பும் எங்கள் மனத் தடைகள் ஏன் தாண்ட இயலாததாய் இருக்கின்றன, சமையல் குழந்தை வளர்ப்பு, தொலைக்காட்சி, வேலைக்கு போனாலும் சுயங்களை சிந்திக்க விடாத சூழலை இங்கேயும் காண முடிகின்றது.
ஒரு தமிழ்க் குடும்பந்தை சேர்ந்த கணவன் மனைவியை சந்திக்க நேர்ந்தது. இரண்டு கூட்டங்களில் நான் பேசிய பேச்சின் பின் என்னைச் சந்திக்க விரும்பம் தெரிவிக்க சந்தித்தேன். பெண்ணியம் என்பதை இதுவரை செய்து கொண்டிருந்த வேலைகளிலிருது தப்பித்து விடுவதற்கான ஒன்றாக பெண்ணும், பெண்ணிய கோசங்கள் தான் பெண் தன்னை உணரத் துவங்குவது தான் சந்தோசமாக திருப்தியுடன் வேலை செய்ய விடுவதில்லை எனும் குற்றச் சாட்டுடன் ஆணும் இருந்தனர்.இந்த சூழல் நாம் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்
15.10.05
இன்று பெண்கள் சந்திப்பு காலை நானும், இன்பாவும், மீனா அக்காவும் கிளம்ப நன்கு கொளுத்துவதாய் பிரகாசமாய் ஒளிரும் சூரியன் அதே நேரம் மூக்கின் . விரல்களில் நுனி உறைய வைக்கும் குளிர் , விடுகின்ற மூச்சு புகையாக மாறி வேதாளமாய் கண்ணில் தெரிந்து மெல்லத் தேய்கின்றது. இலையுதிர்த்து கிடந்த அந்த மரத்தின் பெயரை பலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது போனது. ஒரு வேளை தெரிந்தவர்களை சூழல் ஆர்வம் உள்ளவர்களை நான் அணுகவில்லையோ? தரையெங்கும் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற இலைகள் அதை நசுக்கி மேலே ஏறி வேகமெடுத்து பின்னர் அதுவும் பறக்க விட்டும் போகும் வாகனங்கள் எப்பவும் வாகனங்கள் மூடியபடி ஓடுவதாலா இல்லை வாகனங்களின் புகை கட்டுப் பட்டில் இருப்பதாலா? சென்னையில் ஆட்டோவில் போன பிறகு முகத்தில் படியும் தூசி இங்கு இல்லை .பயணங்களின் போது ஏதோ வித்தியாசமாக உணருகின்றேனே என்று எனது நீண்ட நேர யோசிப்புக்கு பின்னர்தான் ஒலிப்பான்களின் சப்தம் எங்கும் எந்த வண்டியிடமிருந்தும் வரவில்லை என்பது உரைத்தது ஓடும் கார்களின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலிருந்து எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்ற இவர்களுக்கு மரங்களின் பெயர்கள் தெரியவில்லை. எங்கள் மண்ணில் வேம்பு, புளிய மரம் வாகை , புங்கை ,பனை, தென்னை, கருவேலம், என்று எத்தனை மரங்கள் சாமான்யனுக்குக் கூட தெரிந்திருக்கும் என்று நினைக்கும் போது, மண்ணோடு இணைந்த எங்கள் வாழ்வு மகிழ்வைத் தருகின்றது.ஐசே(eiche) அந்த மரத்தின் பேராக சொல்லப் பட்டது.


பச்சை நிறம் வெளுக்க
உடல் முழுவதும் பழுக்க
தன் இலைகளை
சில்லிட்ட மண் பரப்பெங்கும்
வந்து சேரப் போகின்ற
பனி காலத்தை வெல்ல
பனி தன் வாழ்வை வென்று விடாதிருக்க
முழுக்க உதிர்த்து
ஒன்றுமில்லாததாய் நிற்க

சாய்க்க முடியா குளிர்
பாவம் சொல்லிப் போகின்றது.

சுழலும் மாற்றத்தில்
உரத்துப் பேசிய குளிர்
மரித்துப் போகும்
துளிர்க்கும் இலைகளால்
மரம் நிரம்புகையில்
இரண்டு நாள் பெண்கள் சந்திப்பு பல விசயங்களையும், சந்திக்க சிந்திக்க வைத்திருந்தது. லண்டனிலும் சரி ஐரோப்பாவிலும் சரி பெண்கள் சந்திப்பு மேல் பல பெண்களுக்கே கூட வெறுப்பு இருப்பதை உணர முடிந்தது.இந்நிகழ்வுக்கு வராத பல குடும்பத்து பெண்கள் இந்த நிகழ்வை ஒரு பயத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது( இது என் உணருதல் மட்டுமே) இது ஐரோப்பா மட்டுமல்ல பெண்ணியம் பேசுகின்ற பெண்களை இயல்பு யதார்த்த வாழ்வில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் அச்சத்தோடு பார்ப்பதும், இதெல்லாம் நடைமுறைக்கு சரிவராது என்று முற்றிலுமாக நிராகரித்து விடுவதும் பெண்ணியம் பேசுகின்றவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களை முற்போக்காக சிந்திக்க தெரியாதவர்களாய் மிகக் குறைவாக மதிப்பிடுவதும் நாம் இந்தியாவிலும் காணூம் காட்சிதான். எனினும் யோசிக்க வேண்டி இருக்கின்றது. இந்த இருவேறு எல்லைகளும் எங்கே சந்திக்கப் போகின்றது என்பதை.
படைப்பாளி ஒரு படி முன்னகர்ந்து சமூகத்தை பார்க்க கூடியவன் தான் கருத்துக்கள் சிந்தனைகள் இயல்புக்கு ஒத்து வராதது போல் தோன்றினாலும் குறை சொல்ல முடியா தளத்தில் இருந்திருக்க வேண்டும். பெண்களின் சந்திப்பு ஆண்களின் எதிர்ப்பை சந்திப்பது தவிர்க்க முடியாதென்றாலும் பெண்களின் எதிர்ப்பையும் ஏன் சம்பாதிக்கனும். பெண்களுக்கென்று உருவாக்கப் படுகின்ற , அல்லது உருவாகின்ற அரிய சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் பெண்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகள். அதை ஆக்கபூர்வமாக கட்டமைக்க வேண்டிய தேவை தொடர்ந்து நடத்தப் போகின்றவர்களுக்கு இருக்கின்றது.குஷ்பூ பிரச்சனை பேசத் துவங்குகையில் வெளியேறி வந்தாச்சு. அன்று இரவில் நித்தியானந்தன் வீட்டில் நடந்த பார்பிக்யூ விருந்தில், சந்தோசமான பாட்டும் பகிர்தலுமாக. மொழி நாடு சுற்றம் எல்லாம் விட்டு அந்நிய மண்ணில் இருப்பதின் தனிமை தவிர்க்கின்ற இப்படியான பொழுதுகள் அவர்களுக்கு தேவையானதாய் இருக்கின்றது.
நிகழ்வு முடிய இளைய அப்துல்லாவின் புத்தக வெளியீட்டுக்கு பெண்கள் சந்திப்பு நடந்த இடமிருந்து தொலைவு போக வெண்டியிருந்தது. இளைய அப்துல்லவின் புத்தக வெளியீட்டுக்குப் பின் பெண்ணிய நிகழ்வு என்று றஞ்சி தேவகௌரி நான் ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருக்க நேரம் போவது பற்றியும் எப்படி போவது என்று முடிவு எடுக்காதவர்களாகவும் இருந்தார்கள், அதே நேரம் யாராவது தங்களுக்காக முடிவெடுப்பார்கள் என்று இரண்டு நாள் தீவிரவாதப் பெண்ணியம் பேசியவர்கள் கூட சார்பு நிலையில் இருந்தது , அந்த நிலையில் 10 பேர்களுக்காக பொறுப்பேற்று அந்த நிகழ்வுக்கு கொண்டு சேர்த்த மீனா பொறுப்பேற்ற தன்மையும் ஒப்பீட்டு ரீதியில் , நாடோ , மொழியோ கலாச்சாரமோ எல்லாம் கடந்து பெண்கள் உரிமைகளையும் பெற செயல்பட வேண்டிய உழைக்க வேண்டிய தளத்தை அடையாளம் காட்டியது


பெண்கள் சந்திப்பில் ஒரு தோழியோடு பேசிக் கொண்டிருந்தபோது, தனது 14 வயது பையன் கேட்ட கேள்வியை பகிர்ந்து கொண்டார். அவரது வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகின்றவர்கள். மனைவியின் தந்தை 60 வயதானவர் அவர்களோடு வந்து தங்கியிருக்க இலங்கையிலிருந்து வந்திருக்கின்றார். கணவன் மனைவி இருவரும் வெளியே கிளம்பிச் செல்லுகையில் பெரியவருக்கு தேவையான சமையலை செய்து வைத்து விட்டுப் போக, பையன் பொறுக்க முடியாது கேட்டு விட்டான். தாத்தா ஏன் சமைக்க மாட்டாரா என்று?ஆண்கள் சமைக்கத் தெரியாமல் இருப்பது எங்களுக்கு புதிய தகவலில்லை என்றாலும், அவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கின்றது. தன் வாழ்நாளில், வாழ்க்கையின் அடிப்படை தேவையான சமையலைக் கூட தெரிந்து வைத்திருக்காத என்ன மனிதர் இவர் என்று? எல்லாரும் அந்த கேள்வியை ரசித்துச் சிரித்தோம். நிறைய யோசிக்க வேண்டிய கேள்வியும் கூட. ஐரோப்பாவிலும் பலபேர் கோப்பை கழுவிச் சம்பாதிக்கிறோம் என்று சொல்லுகையிலும், தமிழகத்திலும் யாராவது வீட்டில் ஆண்கள் சமைத்தால் பெருமையாக சொல்லுவதும் நடக்கின்ற போது எனக்குள் கேள்வி எழும்புகின்றது. பெண்கள் தினந்தோறும் செய்கின்ற சமையல் வேலை தனிமனித வேலையாகவே எப்பவும் பார்க்கப் பட ஆண்கள் சமைத்தால் மட்டும் பொது உழைப்பாக சித்தரிக்கப் படுவதும் ஆணாதிக்க மனோ நிலையின் இன்னுமொரு வடிவம் தானே ஆண் சமைப்பது அரிதான விடயம் என்பதற்காக சமைப்பதை பெருமையாக பேசுவதை நாம் நிறுத்தவே வேண்டும். பெண் முன்னுக்கு வரும் போது அதற்கான அடித்தளமாக கணவரை நிறுத்துவதும், ஆண் முன்னுக்கு வரும் போது அதற்கு உதவுவது பெண்ணின் கடமையாக மாற்றி அலட்சியப் படுத்துவதும் நாமே அறியாது நாம் வெளிப்படுத்துக்கின்ற ஆணாதிக்க மனோநிலையின் இன்னுமொரு வடிவம் தான்.
posted by mathibama.blogspot.com @ 3/06/2006 12:22:00 pm   0 comments
வாழ்த்துகிறோம்

சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்விக்கு
திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி பிப்ரவரி 24 ,25 ஆகிய தேதிகளில் நடத்திய” அறிவியல் தமிழும் கணிணிப் பயன்பாடும் “ எனும் கருத்தரங்கில் நிறைவு விழா நிகழ்ச்சியில் ” சூழலியல் கவிஞர் “ என்ற விருதும்

உலக மகளிர் தினத்தை ஒட்டி பொதுத்துறை நிறுவனங்களின் பெண்கள் அமைப்பு , நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் பிரிவு, எழுத்து மற்றும் சமுதாய சாதனைகளைப் பாராட்டி “ பெண் சாதனையாளர் “ எனும் விருதும்

கவிஞரும் மாசுக் கட்டுப் பட்டு துறையில் பணி செய்பவருமான வைகை செல்விக்கு வழங்கப் பட்டிருக்கின்றது.
நல்ல பெயர் எடுக்க நாள் செல்லும் என்பது கண்கூடாய் இருக்கின்ற இந்த கால கட்டத்தில் , அதையும் தொடர் உழைப்பின் பரிசாய் பெற்று தன் பணிகளில் எழுத்தாய் இருந்தாலும் அலுவலக பணியாய் இருந்தாலும் நிறைவையே வெற்றியாய் கை சேர்த்திருக்கும் வைகை செல்விக்கு, எனது சார்பிலும் பாரதி இலக்கிய சங்க சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வை பகிர்ந்து கொள்கின்றேன்
posted by mathibama.blogspot.com @ 3/06/2006 11:17:00 am   0 comments
Wednesday, March 01, 2006
"வானகமே வையகமே" விமரிசனம்

வானகமே. வையகமே
சுற்றுப் புற சூழல் இதழ் பற்றிய எழுத்தாளர் முத்துபாரதி அவர்களின் விமரிசன கட்டுரை
பாரதி இலக்கிய சங்கத்தில் சி. க நினைவரங்கில் வாசிக்கப் பட்டது

தமிழக கலை இலக்கிய கலாசார தளங்களில் நிலவும் பயங்கர கூச்சல்களுக்கிடையே மாறுபட்ட கருத்தாக புதிய கலாச்சார தளங்களை அமைக்கும் நோக்கில் பல சிறு பத்திரிக்கைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.
சிறு பத்திரிக்கைக்கு என்ன வரையறை எனத் தெரியவில்லை பக்கங்களை வைத்தா? வாசகர் வட்டத்தை பொறுத்தா? ஆனால் அவைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் சில நேரங்களில் சூறாவளியாக அடிக்கின்றது. என்றாலும் கும்பல் கலாசாரமும், புதிய இஸங்கள் என்று புரியாமல் எழுதுவதுதான் அறிவாளித் தனம் என்ற நிலைப்பாட்டில் இயங்குவதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் புதிய பரிமாணங்களை தமிழில் தருவதற்காக புதிய வரவாக “ வானகமே வையகமே” வந்துள்ளது.
படிக்கக் கிடைத்த இரண்டு இதழ்களில் இந்த சிற்றிதழ் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளி வருவது பாராட்டத் தக்கது ஆரோக்கியமான சுற்றுச் சூழல் பற்றிய அக்கறைதான் இந்த சிற்றிதழில் ஆதாரம். பத்திரிக்கை வெளியீடு என்பது வியாபாரம் அல்லது சுய விளம்பரமாகிக் போன சூழ் நிலையில் லாப நோக்கில்லாமல் இலவச இதழாக வெளி வருகிறது. சிறு தொகையை சந்தாவாக நிர்ணயம் செய்தால் தான் படிப்பவர்களுக்கு அக்கறை எற்படும்
வைகை செல்வியின்“ இது நம்ம பூமி” பொறுப்போடு எழுதப் பட்ட விழிப்புணர்வு தலையங்கம். சாதியில்லாத தமிழ் சமுதாயம் நிலம் சார்ந்த பாகுபாடு பின் வந்த பக்தி மார்க்கம் என தமிழனின் கலாசார வரலாற்றை வாழ்த்து மடலாக பிரசுரமாகியுள்ள மாலனின் கடிதம் இளைய தலைமுறைக்கான செய்தியாகும்.
பிளாஸ்டிக் பைகளை தின்பதால் தான் ஐந்து வயது குட்டி யானைகள் இறந்து போகின்றன என்ற திருப்பூர் கிருஷ்ணனின் செய்தி அதிர்ச்சியடைய வைக்கின்றது. நொய்யலாறு கதையைப் போல இயற்கை சார்ந்த கதைகளும் ஆழமாகவும் அழகாகவும் வர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் அதிகம் தொடாத பகுதியாக சுற்றுப் புறச் சூழல் உள்ளது அந்த குறையை வானகமே வையகமே நிறைவு செய்ய வேண்டும். தியோடர் பாஸ்கரனின் நேருக்கு நேர் பேட்டியில் தண்ணீரின் பயன்பாடு பற்றி பேசும் போது மற்ற காரணங்களைப் போல கோக், பெப்சி பாணங்களுக்காக தண்ணீரை சுரண்டுகின்றார்கள் எனப் பதிவு செய்துள்ளார்.
தாராள மயமாக்களில் கொடிய தாக்குதல் தான் இந்த தாமிரபரணி தண்ணீர் கொள்ளை…! பல இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து போராடினாலும் தண்ணீர் சுரண்டல் தொடர்கிறது. இது போகிற போக்கில் பதிவு செய்கின்ற விசயமல்ல மக்கள் இயக்கமாக மாற்றப் பட வேண்டிய பிரச்சனை

ஓசோன் குடையில் துளைகள்
கட்டுரையை படிப்பவர்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். ஓசோன் கதிரியக்கமும் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணம் என்பதை சாதாரண ஜனங்களுக்கும் சொல்ல வேண்டும். CFC Chloro pluoro corbon என்ற பொருட்களால்தான் ஓசோன் பாதிப்படைகிறது என்ற செய்தி மட்டும் உள்ளது.மக்கள் அவற்றை எப்படி தவிர்ப்பது என்பதை பட்டியலிட்டு வரும் இதழ்களில் எழுதலாம்
இயற்கை ஒன்றுக் கொண்டு இணையாக இசைத்து அமைக்கப் பட்ட நுட்பமிகுந்த மிகச் சிக்கலான ஒரு இயந்திர அமைப்பு போன்றது. இவ்வமைப்பில் ஒரு சிறு கல்லை அசைத்தாலும் முழு அமைப்பே கட்டுக் குலைந்து சமநிலை தவறிச் சிதறி விலகி வீழ்ந்து போகலாம். உதாரணமாக மலை வாழ் மரங்கள் வெட்டப் படுமானால் நீர் ஊற்றுக் கண்கள் அடைக்கப் படும் . நிலத்தடி நீர் நிலைகள் வறண்டு வற்றிப் போகும் ஆறுகள் கலங்கிச் செந்நீரால் பாய்ந்து நம்மை எச்சரிக்கும் . வெள்ளமான நீர் அழிபாட்டுக் கருவியாகி பயிரையும் உயிரையும் மாய்க்கும் மண் மேடிட்டுப் போய் கப்பல்களை வர வொட்டாமல் தடுத்து வாணிபம் தடையாகும் இந்த சூழ்நிலையில் தான் இயற்கையின் எல்லாப் பொருள்களும் மற்ற எல்லா ப்பொருள்களையும் பாதிக்கின்றன என்னும் உண்மை வெளிப்படுகின்றது இதுவே இயற்கையின் ( சமத்துவம்) சமன் செய்யும் ஆற்றல்” எனப்படும் இவ்வாறு சங்கிலித் தொடரால் இயற்கை பின்னி பிணைந்துள்ளது எனவே வரும் இதழ்களில் மலைகள் காடுகள் ஆறுகள் கடல் இன்னும் உள்ள இயற்கை கூறுகளைப் பற்றி சிறப்பு வெளியீடே கொண்டு வரலாம்
சம்பந்தப் பட் ட நிபுணர்களிடம் கட்டுரைவாங்கி பிரசுரித்தால் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் அந்த பணியை வானகமே வையகமே தொடங்கியுள்ளது என நம்பலாம்.
posted by mathibama.blogspot.com @ 3/01/2006 11:50:00 am   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates