சூரியாள்

Sunday, April 30, 2006
எழுத்தாளர் சோமகாந்தன் மறைவு
எழுத்தாளர் சோம காந்தன்


2005, மார்ச் மாதம் 3 ம் தேதியிலிருந்து , 11 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் இலங்கையில் பெண்கள் தினத்தை ஒட்டி அழைத்திருந்த பத்மா சோமகாந்தன் அவர்களது அழைப்பின் பேரில் போயிருந்தேன். 11 நாட்களும் ஒரு முழு பயணத் திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்து பத்மா சோமகாந்தனுடன் எப்பவும் உடன் இருந்தார் சோம காந்தன். மகளாய் அவர் அன்பு செலுத்தியதையும், பத்மா அவர்களுக்கு முழுத் துணையாய் இருந்ததையும் அங்கிருந்த 11 நாட்களில் அனுபவித்திருக்கிறேன். அன்னாரின் இழப்பு பற்றிய செய்தி பதிவுகளில் பார்த்து மனம் நினைவுகளை மீட்டுப் பார்க்கின்றது.இலக்கிய வட்டாரத்தில் இணையாக வந்து பணியாற்றியவர்கள் ஒரு சிலரே .அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
posted by Thilagabama m @ 4/30/2006 08:20:00 pm   1 comments
Thursday, April 27, 2006
நனைந்த நதி -4
தீப்பூக்கும் வாகை


குமார் தின்று எரிந்த அந்த கொட்டை குப்பைத் தொட்டியில் விழுந்து சப்தமெழுப்பி ஓய்ந்தது. எச்சங்களை தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் என் வீட்டாரிடமும் சப்தமெழுப்பி, சப்தமெழுப்பி ஓய்ந்து போனதை நினைத்துக் கொண்டபடி சாப்பிட்டு முடிந்தவைகளை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள் தீபா. மேசை சுத்தமாகிக் கொண்டிருந்தது மீண்டும் அழுக்காகப் படவென்று


மேல் வீட்டின் தளத்தில் நடந்து கொண்டிருந்த வேலைகள், கட்டிடம் பிரசவ வலிகளாய் சப்தமெழுப்பி கொண்டிருக்க, சில பேரால் எதையும் லட்சியம் செய்யாது என் மாமியை போல் தூங்க முடிவதை வியந்தபடி செங்களில் விழுந்த ஒவ்வொரு அடியும் , தட்டலும் அதிர்வலைகள் என்னுள் தோற்றுவித்துக் கொண்டிருக்க, பூச்சு வேலைகளின் தீவிரம்,எதையும் பூசி விட முடியாது
அவளுள்ளும் உறைந்து கிடைந்த நிகழ்ச்சிகள் வந்து போயின

கண் மூடிக் கிடந்த சூரியன்,மேகம் தன் கனத்த மனத்தையெல்லாம், துளிகளாக்கி புவியோடு பகிர்ந்து கொண்டிருக்க, காங்கிரீட் போடவெண்று வாசலில் நின்ற கூலி ஆட்கள்

குளிருக்கும், இன்று சம்பளமில்லாது போகக் கூடுமோ என்கிற பயத்துளுள்ளும் நின்று கொண்டிருக்க வந்திருந்தஆட்களில் அவள் மட்டும் விடைத்து க் கொண்டு கற்பாறைகளுக்கு நடுவே வேர் விட்டிருந்த ல் செடியாய் தலையுலுக்கி க் கொண்டு நின்றாள்.

" என்ன செய்ய? தண்ணி செமக்க வேண்டியதில்லை என்று சந்தோசப்படவா? சித்திக்காரி சம்பளப் பணமெங்கேன்னு கேட்பான்னு வருத்தப் படவா? ....சே இன்னிக்கு சம்பாத்யத்தை மழை வந்து அடிச்சுட்டு போகுதே,"

சலித்தபடி நின்றிருந்த அவள் தோற்றம் தந்தது சந்தோசமா இல்லை ஏக்கமா? விதிர்த்து விறைத்து நிற்கும் அவளை வியந்து, பற்றிக் கொள்ளும் சந்தோசம்,பணிந்து பணிந்து பயந்து , நயந்து பேசிக் கடக்கும் எனக்கான ஏக்கமும்


ஆக மொத்தத்தில் ரெண்டு பேரும் ஒரே இடத்துல முளையடிச்சு வைச்ச கன்னுக் குட்டிதானோ சந்தோசம் கரைந்து போக நடந்து கொண்டிருந்த வேளையில் என்றல்லாது அவள் மேல் கவனம் பயணிக்கஆரம்பித்திருந்தது.


தூரல் விட்டிருக்க வந்திருந்த வேலையாட்களில் இவள் ஒருத்திதான் பெண் என்றாலும் பெண் என்பதை மறந்து, மறுத்து நின்று கொண்டிருந்தாள். கைகளில் உறையிட்டு சிமெண்ட் கலவைத் தட்டுகள் காற்று வேகத்தில் பறக்க, பிடித்து திரும்ப அடுத்த ஆள் கை பார்த்தெறிந்து வேகத்திற்கு ஈடு கொடுக்கவென்று காலகட்டி நின்றிருந்தாள்...

அன்றொரு நாள் அடுப்படி வேலையில் மும்முரமாக நானிருந்த நேரம்...எட்டி பாத்திரம் சாமான் எடுக்கவும்....அடுப்பு வேலைகளை துரிதமாக பார்க்கவும் என்று காலகட்டி நின்றிருந்த போது குமார் வந்து என் காலுக்குள் தன் காலால் தட்டி விட்டு " பொம்பளை நிக்கிற லட்சணத்தை பாரு" என்று விரட்டியதும் தடுமாறி , கொதித்து கொண்டிருந்த எண்ணைக்குள் விழப்பார்த்து சுதாரித்து கொண்டதும் கண்ணுக்குள் வந்து போக

தூத்தெறி" என்னஆம்பி¨ளைங்க நீங்க" எறிந்த தட்டுகளோடு தெறித்து விழுந்த அவளது வார்த்தைகள்.....
என் மனதுக்குள் ஓடிய நிகழ்வுக்கா பதில் சொல்கிறாள்..

"ம்ம் ...ம்ம் வரிசை பின்னாடி போகட்டும்", கூவிய ஆள் அவளை குறிப்பாகக் காட்டி
"ஏம்மா முனிமா பின்னாடி போ", என்றதும்,
தொடத் தொட சிணுங்கும் செடிகளைப் பார்த்ததுண்டு, இவளோ சீறும் பாம்பாக,
" பின்னால வைப்பிரேட்டர் இருக்கிறது தெரியலை அது கிட்ட நிக்கிறதும் உங்கிட்ட நிக்கிறதும் ஒன்னு,

அதுவும் சேலையை உருவிப்பொடும்....போய்யா நகர முடியாதுய்யா, " ஒழுங்கா ஈஸ்வரின்னு கூப்பிடு , பாத்துக்க" அவள் அதட்டலில் வீழ்ந்து கொண்டிருந்த சாரல் மூர்ச்சித்து நின்று, இடியோசைக்கு பயப்படாத நானா இவளோசைக்கு பயந்தேனென சுதாரித்து மீண்டும் தூறத் துவங்கியது.

எலும்புக்கூடாய் இருந்த தளம் மெல்ல மறைத்து முழுதாக்கும் பிரம்மாவாய் இருந்தனர் ஆட்கள்.

கலவை வரும் வேகம் குறைய,

" யோவ் வேகமா அனுப்புங்கய்யா....சும்மா நின்னா கூதலடிக்குது ....புகையிலையை குதப்பிய வாயுடன் பேசிக்கொண்டேயிருந்தாள் ஏதாவது. அவளின் முரட்டு முகம் தந்த எரிச்சல் நேரம் போகப் போக எனையறியாது மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டதுஆச்சர்யமே.

சரிவான கூரை பிடிமானமில்லாதிருந்ததை விட ஒற்றைக் கால் பலத்தில் நின்று வேலை செய்ய வேண்டிய இடம் .அதோடு கலவையும் வாங்கி கடத்தணும். நான் மாட்டேன், நீ மாட்டேன்னு போட்டி

"சரிதான் தள்ளுங்க ஆம்பிள்ளைகளா, நான் நிக்றேன்",

தள்ளி விடாத குறையாக முன்னேறிச்சென்று நின்றாள்.

"தங்கச்சி விழுந்திடப் போற, பிறகு தாங்கிப் பிடிக்க நாந்தேன் வரணும்", எகத்தாளமாய்

ஒரு பதில் தன்னால் இயலாததை அவள் செய்துவிட்டாளே என்று.

” சரிடா அண்ணா ..எறிந்த தட்டுடன் எறிந்த அந்த வார்த்தைகள்.

" அப்படித்தான் போன வாரம் உந் தங்கச்சி விழுந்திட்டா நாந்தான் பிடிச்சு தூக்கி விட்டேன்".

சிரிப்பில் சில்மிசம் தெரிந்தது. தவிர்க்க எண்ணி என் பார்வை அங்கிருந்த வேப்ப மரத்தில் விழுக, காத்துக்கு மரம் அசையுதா, மரம் அசையிறனால காத்து அங்கு தோன்றியதா குழப்பமாகத்தான் இருந்தது........

"அப்படியா அண்ணா யாரடா அவ என் சக்களத்தி என எறிந்த தட்டோடு அவனையும் எறிந்து இறங்கி வந்தாள்.

சூரியன் மெல்ல மறைய, அவளும் கூரையை விட்டு இறங்கி வர சரியாக இருந்தது.

கால் கை கழுவ நின்ற கூட்டத்திலிருந்து தனித்து நின்றிருந்தாள்.

" என் சித்திக்காரி என்ன அழகா துவைச்சு கொடுத்த சேலை இப்படி அழுக்கா

போயிடுச்சே.யாரடி இது?" ன்னு கேட்கும். தானாய் பேசிக் கொண்டு சென்றவளை என் கேள்வி நிறுத்த

" உன் பேர் என்ன ஈஸ்வரியா, முனியம்மாவா?"

"முனீஸ்வரிக்கா, ஈஸ்வரின்னு கூப்பிடுவாங்க"

"அப்படியா, கழுத்திலே காதுல ஏன் ஒன்னையும் காணோம்?"

அதுவரை எரித்துக் கொண்டிருந்து எட்டா உயரத்தில் பறந்து கொண்டிருந்த அவள் கண்களும் செய்கையும் தரை இறங்குவதை சகிக்க முடியா உணர்வுடன் நான் உணர்ந்து கொண்டிருக்க,

வீட்டுக்காரர் இல்லைக்கா" அதிர்ந்த என் மனது நிலைக்குவர நேரம் பிடித்தது.

"உனக்கு வயது என்ன?"

"இருவத்தஞ்சு"

"என்ன்னாச்சு உன் வீட்டுக் காரருக்கு? குழந்தைகள்?" கேள்வியை முடிக்காது நிற்க அவள் தொடர்ந்தாள்.

"பொண்ணு ஒன்னு இருக்குக்கா வீட்டுக்காரரை போலீஸ் பிடிச்சுட்டு போயிட்டாங்க.."..

"ஏன்?"

"கொலை பண்ண முயற்சி பண்ணினதா, செயில்ல இருக்குக்கா"

"ஏன்? நீ போய் அதைப் பார்க்கலையா?"

"சீ......அதையாரு போய்ப் பார்ப்பா..எனைய வேண்டாமுண்ன்னு 40 பவுனு ரொக்கம் தரான்னு அவ அத்தை மகளை இழுத்துட்டு ஓடிப்போச்சே... அதை ஏன் நான் போய் பாக்கனும்?


"சும்மாவா விட்டே?". விடுகிற ஆளாய் அவளில்லையே என்று என் மனதில் பட கேள்வி வந்து விட்டது.

"ஓடுன ள என்ன செய்ய சொல்லுறீங்க? கால்லேயா விழுக....'

அவளுக்குள் மௌனமாய் ஒன்று கொதித்துக் கொண்டிருந்ததை ஒரு குரூர முகமூடி போட்டு , முகமூடி ரணத்தில் அவள் வலி மறைக்கப் பார்த்திருந்தாள்.ஆனால் இங்கு எல்லோரும்

அப்படித்தனோ? என்னையும் சேர்த்து. ஓடும் நினைவுகளோடு,வலியை வலியால்

மறைப்பதா?...புரியாது பார்க்கிறேன். மனதுக்குள் விழுந்த அழுத்தங்களில்

கணங்களில் மூழ்கிய மனது வார்த்தையை வெளியெ விடாது தகர்க்க..

"பிறகு ஏன் ஒண்ணும் போடாம இருக்க?"

"போட்டா சித்தி வையும் எவன மயக்கன்னு. எதுக்கு இந்த பல்லு போட்டு பேசுற ஜோலி? ன்னு விட்டுட்டேன்."

"யாருக்காகவும் எதையும் ஏன் விடனும்? உனக்கு பிடிச்சா போட்டுக்கிட வேண்டியதுதானே?"

என் கேள்வி எனையே பார்த்து சிரித்தது... நான் என் நாத்தனாருக்கு போடக்
கொடுக்காததுனால என் நகை அடகுக் கடையில் வைக்கப் பட்டு இன்னும் கேட்க
முடியாமல்.....

ஒரு வித குற்றவுணர்வு அழுத்த அவள் முகம் பார்த்தேன் பதிலுக்காக
அவள் வெறுமனே உச்சு கொட்ட

ஆமா சித்தியா யாரது?"

"எங்கப்பா புதுசா ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கு "...

" அது சரி உனக்கு கல்யாணம் பண்ணும் நினைப்பு இல்லையாக்கும் உங்கப்பாவிற்கு/"

"அப்பாவை விடுங்கக்கா...எவனுக்கு அந்த நினைப்பு வரும்?...எல்லாம் பச்சிலையா

தலைவலிக்கு கசக்கித் தடவி போட்டு போற ஆட்கள்கா ...அவன் வலி தீர்ந்தவுடன் நாம உதிர்ந்திடனும்ன்னு நினைப்பான்களே ,ஒழிய, யாரு நம்ம வலிக்கு மருந்தா இருக்கப் போறா?.....பிள்ளைகளோட எவன் கட்டிக்கிறேங்கறான்

பிறகெதுக்கு இப்படி அகராதியா பேசுறேன்னு நினைக்கிறீங்க...அன்பாவும் ஆசையாவும் பேச நினைப்பு இருக்குதான்.எவன் மனுசியாப் பாக்கிறான் .எல்லாம் பொம்பிளையாய் பாக்குற கூட்டம், கொஞ்சம் அசந்தா ரோட்டோரத்தில மல்லாத்திப்பொடுவான்க..போகச்

சொல்லுங்க"
மனசுக்குள் கேல்வி எழுந்தது.. ..உண்மை சொல் கௌதமா? நீதான் கல்லாய் போக

சாபமிட்டாயா , இல்லை, இவளைப் போல அகலிகையும் தானே கல்லாகினாளா?..

நிகழ்கால நிஜம் தோளைத் தொட விழித்தெழுந்தேன்

மழை பார்த்து காத்துக் கிடந்த செம்மண் வரிகளாய் அவள் ரணப்பட்டு கிடப்பது தெரிந்தது...
என்ன செய்ய ?ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படியிலிருந்து அடுத்த படிக்கு போக போராடிக்கிட்டு இருக்கோம். படிகள் இருந்தும் அடுத்த படி ஏறுவதற்கு சண்டையடிக்க வேண்டியிருக்கு...

.மெல்ல அவள் மனது சிந்தனைக்குள் ஆழ...தன் பேரில் இருக்கும் பணத்தை கேட்டு, பிள்ளைகள் பேரில்

டெபாசிட் செய்ததுக்காக இன்னும் அம்மா வீடு அனுப்பாது இருப்பதைத் தண்டனையாய்

தந்திருக்கும் தன் வீட்டாள்களின் நினைப்பு வர......முகமூடிகளின் உணர்வுகள்தான் வேறயே


ஒழிய.....மொத்தத்தில் எல்லாரும் ஒழிந்து கொண்டிருப்பது வெளிச்சமாக...அவளுக்குள்ளும் ரணங்கள்

முகமூடி பேசியது......

"சொல்ல முடியாது ஈஸ்வரி உன் மனசுக்கு திருப்தியா யாராவது தென்பட்டா

தயங்காத.....அதுக்காக துணையில்லேன்னு மருகவும் செய்யாத. கழுத்து காதுல

போட்டுக்க...உனக்கான வாழ்க்கையை நீயே அமைச்சுக்கிட்டேன்னு சந்தோசமா இரு.

அடிக்கடி எனை வந்து பாரு

எனக்கு அதிக எதிர்பார்ப்பைத் தந்து கொண்டிருக்கும் வாசலில் நின்ற வாகை

மரம் தீப்பற்றி அது பூப்பூக்க ஆசைப்பட்டு கன்று வாங்கி வைத்தேன். ஆண்டுகள் பலவாகியும்

இன்னமும் பூக்க மனமில்லாது, முதிர்ந்து பழுத்து கொப்புகளில் தாளாது காற்றுக்கு ஊசலாடி

தரை பூராவும் விரிப்பாகிக் கிடக்க , தனித்து நின்ற கொப்புகளில் புதிய தளிர்கள்

நம்பிக்கையாய் வந்திருந்ததை கவனித்த மாலைப் பொழுதில் மீண்டும் வந்தாள் ஈஸ்வரி.
புன்னகையோடு கொஞ்சம் பொன்னகையும் தாங்கியிருந்தாள்... "என்ன ஈஸ்வரி சித்தி வையலையா......?
"ஒரு மாதிரி பார்த்துச்சு. ப்ரெண்ட் வீட்டுக்குபோறேன்னு கடுப்பாக்கி விட்டு
வந்திருக்கிறேன்...உங்ககிட்ட காமிக்கனும்ன்னு."

" சந்தோசம் ஈஸ்வரி" வேறு என்ன பேசலாம் என்று வார்த்தைகளைத் தேடியபடி

வாகை செந்தணலாய் தீப்பற்றி பூப்பூக்கும் நாளும் வரும் என்று உதிர்ந்தும் , துளிர்த்தும் இருக்கும் வாகை மரத்தைப் பார்த்தபடி .....பரணிலிருந்து என் பெட்டி எடுத்தேன்

..அம்மாவை பார்த்து வரவென.

எங்கே என்பதாய் விழியுயர்த்திய குமாருக்கு

“அத்தை வந்தா சொல்லிடுங்க,அம்மா வீட்டுக்கு போயிட்டு வருகிறேன்னு.”
posted by Thilagabama m @ 4/27/2006 09:37:00 am   0 comments
Tuesday, April 18, 2006
நனைந்த நதி -3
வெற்றுத் தாள்களில் விளைந்த அச்சுகள்

இயந்திரத்துள் போயும் வந்தும் கொண்டிருந்த காகிதம் போகும் போது வெற்றுத் தாள்களாய் போய் வெளி வருகையில் எழுத்துக்களோடு வெளி வந்தது.இயந்திரத்தோடு இயந்திரமாகிப் போயிருந்த குமாருக்கு தனது
வாழ்வைப் பிரதிபலித்தாய் தோன்ற கண்கள் நிலைக்குத்தியது. கைகள் மட்டும் வேலையைத் தொடர மனமோ தனது வாழ்வின் வெள்ளைப் பக்கங்களை கண்களுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது.

விடுமுறை நாளன்று சுவரேறிக் குதித்த அந்த மாநகராட்சி பள்ளியில் நானும் எனது நண்பர்களும். செம்மண்ணு அடித்து போட்டிருந்த அரை குறை ஓடுதளம் .என் வாழ்விலும் திருப்பத்தை உணர்த்தி , மனத்தை செக்கு மாடாய் சுற்றச் செய்யும் என்று உணராது ஆடிக் கொண்டிருந்த காலங்கள்.
யாரும் துரத்தாமலேயே மூச்சிரைக்க ஓடும் ஓடுதளம். தற்போது நான் மூச்சிரைக்க ஓடியும் எல்லையோ, முடிவோ வராது, நாக்கு தள்ள
முழங்கால்களுக்கு கீழ் கால் எங்கே என்று உணர முடியாத படி ஓடிக்
கொண்டிருப்பதாய்......
தீபாதான் தட்டி விட்டாள்"ஏன் அச்சு கோர்த்ததில் ஏதும் தவறிருக்கா? அப்படி வெறிச்சிட்டுஇருக்கீங்களே"

ஓடுதளத்திலிருந்து நடப்பு வேலைகளுக்குள் வந்து விழுந்தேன். அதன் அடையாளமாய் உதிர்ந்து விழுந்த பெருமூச்சு.

" தப்புதான் " தனையறியாது உதிர்ந்து விழுந்த சொல் ஒன்று தீபாவின்

காதுகளுக்கு போய்ச் சேரமாலேயே கரைந்து போயிற்று. அடித்து வெளிவந்த

காகிதங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.

எல்லாம் சரியாகத்தானே இருக்கு சொல்லி விட்டு அடுத்த வேலைகளைக்

கவனிக்க அடுத்த தட்டில் இருந்த அடுக்களைக்குள் போனாள்..உள்ளிருந்து

வானொலியில் தாய் வீடு நிகழ்ச்சி ஆரம்ப மென தொகுப்பாளர்

உச்சரிக்கையில் கடந்து வந்த தனது தாயின் நினைவுகளும்...எனது தாய் வீடும் வந்து

போக....கைகளில் வந்தமர்ந்த ஈ தந்த எரிச்சலோடு நினைவுகள் தட்டி விட்டு....

எனது கால்களும் நினைவுகள் மீறி இயல்பாய் அடுத்த வேலையை நோக்கி

போனது. அச்சிட்டப்பட்ட காகிதங்கள் ஒரே சீராய் வெட்டப்பட்டு வெளிவந்து

கொண்டிருந்தது.

மீண்டும் மனது ஓடுகளத்திற்குள்......அச்சு எழுத்துக்கள் பதியாத வெற்றுத்தாள்

மனதை, மனம் ஆசையோடு தடவிப் பார்த்தது. எத்தனை சந்தோசங்கள்,

எத்தனைஎத்தனை கும்மாளங்கள் எல்லாம் ஒரு சில வார்த்தைகளில் என்

மனதுக்குள் விழுந்த வார்த்தைகளால் அழியாத அச்சாகிப் போனாது....இப்போது

வெட்டுப் பட்டுக் கொண்டிருக்கும் காகிதங்களாய் கண்ணில்....தெரிய முதல் முறை

செய்யும் வேலை உறுத்தியது. என் வாழ்வை பிரதிபலித்து காண்பித்த கண்னாடியாய்

வேலை.....உடைத்து விட மனம் துடிக்கும் உள்ளே இருக்கும் உயிரும் உடலும் அதை

ஆட்சேபிக்கும் அவைகள் ஜீவித்திருக்க வேண்டி.மனம் தான் வெட்டப்பட்டு

வெட்டப்பட்டு கிடந்தது....


பள்ளியின் முன் வாசலுக்கு எதிர்த்திருந்த கருவேலங்காட்டுக்குள்ளிருந்து பெறக்கிய கட்டைகள் ஸ்டெம்பாக இருக்க இருந்த ஒரே மட்டையைப் பிடிக்க சண்டை நடந்து கொண்டிருந்தது விளம்பரங்களில் வரும் கிரிக்கெட்

வீரர் களை சுற்றும் பெண்கள் பார்த்து எங்களுக்குள்ளும் ஆசை முளை விடும் மீசை பருவமது....


எங்கே எதற்காக ஆரம்பித்த சண்டை என்பதெல்லாம் நினைவிலிருந்து அழிந்து போய் இறுதியில் வெளிவந்த

வாய் வார்த்தைகள் மட்டும் திரும்ப திரும்ப பிரதி எடுக்கும் அச்சு இயந்திரமாய் என் மனம் முழுவதும் அச்சாக்கிப் போயிருந்தது

"உங்க அம்மாவைப்பத்தி தெரியாதா? உனையெல்லாம் சேர்க்க மாட்டோம்? உன் கூட சேரக்கூடாதுன்னு வீட்ல

சொன்னாங்க....அதிர்ந்து நான் நிற்க உங்க அம்மா உங்க பெரியப்பாவை வெச்சுகிட்டு இருக்காராம்"


மட்டை தர முடியாதுன்னு சொல்லியிருக்கலாம்.....போடான்னு சண்டை போட்டு வந்திருப்பேன்......அவன் சொல்லிய

காரணம் வேளை தெரியாது இரைச்சல் தின்று அங்கு மௌனம் நிரப்பியது ....இன்னும் என் மனம் கூசச்

செய்தது.....அமைதியாய் கிளம்பியவன் வீடு நெருங்க நெருங்க அனலானான்.......புரிந்தும் புரியாதுமிருந்த விசயம்

தந்த கோபம் பட்டென போட்டு உடைக்க .....புரிய வைக்க முடியாது விழித்த தாயின் கண் பார்த்து வெறித்திருந்தேன்

பார்க்க மனம் பயந்தது......தாயிடம் கோபித்தது நெருடலாக இருக்க தப்பைத்தானே கேட்டோம்.. தந்தையின்

இடத்தில் இன்று கேட்க வேண்டியவன் நானல்லவா.தன்னைதானே சமாதானம் செய்ய முயன்று நகல்கையில்.....


அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கும் மனசு சடாலென அம்மா காலில் விழ நொறுங்கிய மனசு இன்று வரை சேர்க்க முடியாது.கெஞ்சிய அம்மா சொன்ன விளக்கங்களும் நடை முறை பிரச்சனைகளும் ஒத்துக் கொள்ளாத மனது .

தற்கொலை செய்து கொள்ள வென அம்மா கொல்லைபுற கிணறு தேடி இரவில் ஓடிய போது எல்லாவற்றையும் மனதில் புதைத்து எதுவுமே நடக்காததாய் வாழ்க்கையை நகர்த்த முயலுவதே என் வாழ்வாய்......


குனிந்த தலையோடு களம் விட்டு வெளியேறிய நான் மீண்டும் ஆடுகளத்துள் நுழையவும் இல்லை ...மனதுள் இருந்த பாரம் தலை நிமிரவும் விடவில்லை.

ஓடிக் கொண்டிருந்த இயந்திரம் வேலை முடிந்ததாய் நிறுத்தினான்.மனசு மட்டும் நிறுத்த முடியாது, நச் நச் என்று வெட்டிக் கொண்டிருந்தது


....இருபது வருடங்கள் ஓடியும் அழியாத அந்த வார்த்தைகள் அலுப்பு தர நிலை படியதனில் வந்து சோர்ந்து உட்கார ,சமையல் அறையிலிருந்து வந்த தீபா " முடிச்சாச்சா? பின் அடிச்சிரலாமா?" கேட்டுக் கொண்டு வெட்டுப் பட்ட பக்கங்களை அடுக்க ரம்பித்தாள்

..........என்னங்க யோசனை?

அடித்த புத்தகத்தில் வந்த விசயம் மனசில் ஓடிக்கிட்டிருக்கு தீபா....


"என்ன அது ?" பிரச்சனையில் தீவிரம் உணராது கேட்டாள் ஏன் சொன்னோம் அவளிடம்....இத்தனை வருட வாழ்வில் சொல்லாது காத்திருந்த ரகசியம்........வேறு வழியில் வந்து விட்டதே ....மனசு பயந்தாலும்......வேறு வழியில் இரகசியம் காத்தது சந்தோசமும்......இவற்றை சொன்னதே கனமும் குறைய ஆரம்பித்திருப்பதும் எனை மேலும் தொடர வைக்க

"இப்ப அடிச்ச மேட்டரில 20 வயது பையனின் அம்மா தவறு செய்யவதாகவும்....மகனுக்கு தெரிய வந்து அவன் நொறுங்கிப் போவதாகவும், 40 வயது ஆகியும் ஈரத்தோடு அவன் மனம் கண்ணீர் சிந்துவதாயும்.....முடிக்காது

மனசு நினைவுக்குள் மூழ்கிப் போக


"அய்ய இதுதானா பிரச்சனை நான் கூட என்னவோன்னு நினைச்சேன்.....19 வயசுல அவன் கோபமோ வருத்தமோ

பட்டிருந்தா நியாயம். 40 வயசுல நடந்து முடிஞ்சதை நினைச்சு உடைஞ்சா கிறுக்குத் தனமுங்க

முந்திய தலைமுறை செய்த தவறுகள் நமக்குப் பாடமா நினைக்கனும்...பாரமா நினைக்க வேண்டாம் நம்மால அடுத்த

தலைமுறை இதுபோல உருகாம இருக்க புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கட்டும்"


" வெட்டாம தாள அச்சு மையால் கரையாக்காம எப்படிங்க பக்கம் கோர்த்து புத்தமாக்குகிறது

லாபத்திலிருந்து கிடைக்கிற நட்டத்தை விட நட்டத்திலிருந்து கிடைக்கிற லாபம் பெரிசுங்க....காகிதத்தை வெட்டிடோம்னு கவலைப் படாம ....புத்தமாச்சேன்னு சந்தோசப்படுங்க"


வார்த்தைகள் காத்தோடு கரைய விட்டு அரிசியிலிருந்து கல்லை பிரித்தெடுத்து முடித்தவளாக உலையில் போடப் போனாள்

வாசலில் நிழலாட..."தீபா உன் தங்கச்சி வந்திருக்கு....இருந்து சாப்பிட்டு போம்மா"....சொல்லிவிட்டு தனியே இருந்த தாயை தன்னுடன் இருக்கச் சொல்லலாம் என்ற நினைப்புடன் அம்மா வீடு போய் வந்திடறேன் தீபா சொல்லி

விட்டு வெளியேறினேன்


மை வாசனை கரைந்து வாசலில் இருந்த வேம்புவிலிருந்து கசந்த ஆனால் சுகந்தமான வாசனை எனை தழுவிச் சென்றது
(நனைந்த நதி சிறுகதை தொகுப்பிலிருந்து)
posted by Thilagabama m @ 4/18/2006 07:50:00 am   3 comments
Saturday, April 15, 2006
பகிர்வு


பாலாஜி, திலகபாமா, தமிழ் மணவாளன், சொர்ணபாரதி (கல்வெட்டு இதழ் ஆசிரியர்)
கோட்டில் குந்தியிருந்த எண்ணற்ற புள்ளிகளின் மனப்பொழுதின் பகிர்வுகள்

இஸம் மற்றும் குழு அரசியல் சாராது திறந்த மனதுடன் தர்க்கிக்க நமக்குள் நாமோ அல்லது இன்ன பிறதோ பிறரோ வீசி விட்டு முளைத்து நிற்கும் கருத்து பயிர்களை இனம் கண்டு அவற்றினுடைய இருப்பின் பிண்ணனி மற்றும் அதனின் சமூக பகிர்வு அறிய எமது இயங்கியலை அடுத்த கட்ட நகர்வுக்கு முன் நகர்த்த இறுகியகட்டமைப்பற்ற ஒரு அமைப்போடு உரையாட இலக்கியம் சார் உரையாடல் அவசியப் படுகின்றது. அந்த அவசியத்தை 25.3 06 அன்று சென்னை எழும்பூரில் ஹோட்டல் அபிராமியில் மாலை 3.30க்கு நிகழ்த்தி கொள்ள தொழிலதிபரும் ஹைக்கூ கவிஞருமான திரு விஜயன் இடமளிக்க … சக இலக்கிய தோழமைகளை ஒன்றிணைக்கும் பணியை சொர்ணபாரதியும் மேற்கொள்ள இளம் பனிக்கால சூழலோடு(a/cஅறையில்) சுமார் 25 இலக்கிய சகாக்களின் அமர்தலோடு துவங்கியது

இணைய தளத்தில் தொடர்ந்து எழுதும் அமெரிக்க வாசியான பாஸ்டன் பாலாஜியும் சிவகாசியிலிருந்து கவிஞர் திலகபாமாவும் சுற்றுச்சூழல் அதிகாரியும் கவிஞருமான வைகை செல்வியும் எழுத்தாளர் அமிர்தம் சூர்யாவும் தமிழ் திரையுலகிலிருந்து கவின்(இயக்குநர்) மற்றும் பதிப்பாளர்கள் கவிஞர்கள் நாடகாஆசிரியர்கள் என பல்வேறு முகாந்திரங்களிலிருந்து வந்திருந்தனர்.
பாஸ்டன் பாலாஜி தனது வாசிப்பு அனுபவங்களை பற்றி பேச ஆரம்பித்திருந்தார் மௌனியை இணைய தள வாசகர்களுக்குஅளிக்கும் போது கவர்ந்திழுக்கும் விதமாய்” மௌனியை பற்றி திரிஷா என்ன சொல்கிறார்?” என்று தலைப்பிட்டு வலையில் இழுக்கின்றார்கள் மௌனியை பற்றி பேசிவிட்டு திரிஷா மௌனியை இன்னும் படிக்க வில்லையாம் என்று முடிப்பார்கள் என்றார். மேலும் எஸ்.வி. சேகர் , கிரேஸி மோஹன் நாடகங்கள் போடுவதால் பாஸ்டன் தமிழ் சங்கம் நல்ல நிலையில் இல்லை என்றும் இந்திரா பார்த்த சாரதி நாடகம் நடத்துவதால் லாஸ் ஏஞ்சல்ஸ் நியூஜெர்ஸி தமிழ் சங்கம் சிறப்பாக இருப்பதாகவும் சொன்னார்.
கவிஞர் திலகபாமா ” மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்” என்ற தலைப்பில் பேச துவங்கினார். அந்த பேச்சின் சாரம் இதுதான்


• பெண்கள் எழுதுவதெல்லாம் பெண்ணிய எழுத்தா? பெண்கள் பற்றி பிறர் எழுதுவது பெண்ணிய எழுத்தாகுமா?ஔவை எழுதியது எல்லாம் பெண்ணிய எழுத்தாகுமா? மன்னர்களையே பாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணை கதையின் நாயகியாக வைத்து , அதுவும் மன்னனையே எதிர்த்து கேள்வி கேட்பதாய் புரட்சி பாத்திரமாய் சமைத்த இளங்கோ பெண்ணிய வாதியா?பெண்ணியம் என்ற வார்த்தையே இன்று அர்த்தம் இழந்துள்ளது அதை பெண்நிலைவாதம் என்று குறிப்பிடலாம்
• ஏற்கனவே பெண்களுக்கென்று இருக்கின்ற விழுமியங்கள் கட்டுப் பாடுகள் இவற்றிலிருந்து எப்போது எழுத்து மாறு பட்டு கேள்விகளை தந்து போகின்றதோ அதை பெண்ணியமாக பெண் நிலை வாதமாக கொள்ளலாம்.
• அதிமுகவில் மதிமுக சுயமிழந்து நிற்பதை போல பின் நவீனத்துவ சிந்தனைக்குள் பெண்ணியம் தன்னை இழந்து கட்டுடைந்து கிடக்கின்றது.
• மாற்று அரசியலில் உடல்மொழியை முன்வைப்பது எனக்கு உடன் பாடில்லை எங்கள் வெற்றியை கூட யாருடைய பெருந்தன்மையாய் கூறுவது ஆணாதிக்க அரசியல் தான்
பாஸ்டன் பாலாஜி திலகபாமா உரைக்கு பின் விவாத தன்மை மேலெழுந்தது.
கவின் தனது கேள்விகளையும் எதிர்வினையை முன் வைக்கும் போது….” தனிமனித கோபத்தை தத்துவத்தின் மீதான கோபமாக மாற்றக் கூடாது லஷ்மி மணிவண்ணனின் மது மயக்க கலாட்டா மற்றும் மைத்ரி சுகிர்தராணி சல்மா போன்றவர்களின் அதிக பட்ச வரம்பு மீறல்களை வைத்து பெண்ணியத்தை வரையறுக்க கூடாது. உடல்மொழி என்று இவர்கள் எழுதுவது அதிக பட்சம் 5வார்த்தைகள்(முலை யோனி மயிர் ….) தான் அந்த வார்த்தை மீதான பிரமிப்பை உடைப்பதாகவும் அதை கொள்ளலாமே. இது புதிய ஆயுதம் இதில் கொஞ்சம் மிகை தனம் இருக்கலாம். அதற்காக ஆயுதமே வேண்டாம் என்பது தவறில்லையா?”
என்பதாய் எதிவினையாற்ற .. முரன் களரி முனுசாமி சகஜ அரசியலுக்கு எதிரான மாற்று அரசியலே வேண்டாம் என்பது எப்படி சரியாகும் .மாற்று அரசியலில் இயங்கும் எழுத்துக்களை எப்படி நிராகரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அமிர்தம் சூர்யா பாலாஜி, திலகபாமா
தொடர் விவாதத்தின் போது தன்னை தலித்தாக உணர்ந்து எழுதுதல் பிறர் வலியை உள்வாங்கி எழுதுகிறேன் என்பதெல்லாம் அமெரிக்காவில் பலிக்காது. கறுப்பின மக்களை எழுத குறைந்த பட்சம் 3 வருடமாவது அவர்களுடன் வாழ்ந்தது உணர்ந்து எழுதினால் தான் எடுபடும் இல்லையெனில் அந்த எழுத்து குப்பைக்கு போய் விடும் என்று பாஸ்டன் பாலாஜி சொன்னதன் மூலம் தமிழக எழுத்தாளர்களின் புனைவுகள் எல்லாம் குப்பையா? என்ற அமிர்தம் சூர்யா கேள்வி எழுப்ப ”ஐய்யோ சாமி ஆளை விடுங்க” என்றார்.
தொன்மத்தை கூட ஆண்கள் வசதிக் கானதாய் மாற்றி வாசிக்க பழக்கப் பட்டு இருக்கின்றோம் என்று திலகபாமா கூறியது எதன் அடிப்படையில் என்ற போது “ ஆமாம் சீதை போல் வாழ சொல்லப் படுகின்றது யாரும் கண்ணகி போல வாழ சொல்லுவதில்லை –தீக்குளிக்கத்தான் தீ வைப்பதற்கு அல்ல என்றார். இடைமறித்து அமிர்தம் சூர்யா மாதவியிடம் போகும் வரை கணவனின் தவறை இடித்துரைக்கும் போக்கை துளியும் துவங்காத அபத்த பெண்ணியவாதி கண்ணகி என்ற ஒரு வாசிப்பும் உண்டு தானே . பிறகு அந்த ரோல் மாடலும் தவறாயிற்றே என்றார். மேலும் மாற்று அரசியலில் ஈடுபாடுள்ள நவீன இலக்கிய நண்பர்களின் வருகை இன்னமும் கூடுதலாயிருந்தால் விவாதம் சூடு பிடித்திருக்கும் என்று சொல்ல மணிமேகலை நாகலிங்கம் ( மனைவியின் பேரில் உள்ள விருப்பத்தில் தனது மனைவியின் பெரை முதற்பெயராக வைத்துள்ளவர் இவர்) அதை மறுத்தார். திலகபாமா கருத்து (பெண்ணிய வாதம்) தமிழ் சூழலுக்கு ( யதார்த்த) சரியாக இருக்கையில் அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏன் விவாதிக்க வேண்டும் என்றார். தொடர் கலந்துரையாடலில் விஜயேந்திராவும் வைகை செல்வியும் தமிழ் மணவாளனும் சொர்ணபாரதியும் பங்கேற்றுப் பேச….
வில்விஜயன் பகிர்வு

வில் விஜயன் தன்னை கிருபானந்த வாரியார் மற்றும் ஜனகராஜ் குரலுக்கு மாற்றி கலை நிகழ்ச்சி செய்தார். அதில் ஜனகராஜ் குரலில் … இந்த பெண்ணிய மெல்லாம் வீட்டுக்கு உதவாது. நடைமுறையில் எது செயல் படுமோ அது எல்லாருக்கும் சரியே அதை பேசுங்கள் ஒரு உறையில்ரெண்டு கத்தி இருக்கப் படாது. ஒரு வீட்டுல ரெண்டு கூர் இருக்கக் கூடாது. ஒரு கூர் ஒரு மொக்கை . அது தான் சரி ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்தான் கூர் என்று தன் எதிர்ப்பை சிரிப்பு நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தினார்.
சிற்றுண்டிக்கு பிறகு எல்லாரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள
ப்ரியமானதை சொல்லவும் செய்யவும் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது என்று பாமா சொன்னதையும் கூளப்ப காதலும் வேண்டாம், மைத்ரியும் வேண்டாம் என்று கவின் சொன்னது பாமா முன் வைத்த பெண்ணியத்தின் சுருக்கமாக கொள்ளலாம் என்றும் , நல்ல ப்ளம்பர் யாரு எங்க இருப்பார் என்று சொல்லுவதற்கான நண்பர்கள் பலரும் உண்டு ஆனால் ஒரு கதை பற்றி அதன் தர்க்கம் பற்றி நுட்பமாக பேசி பகிர்ந்து கொள்ளும் நபர் பலருக்கு வாய்ப்பதில்லை என்ற பாஸ்டன் பாலாஜி சொன்னது தவறு இங்கு வந்திருப்பவர்கள் எல்லாரும் நல்ல நண்பர்கள் தான் தர்க்கிக்கிறவர்கள் தான் சென்னை வரும் போதெல்லாம் பாலாஜியின் குறை நீங்கும் என்றும் அமிர்தம் சூர்யா தன் நன்றியுரையில் குறிப்பிட்டார்.
சுவாரஸியாமான பொழுது ஹோட்டலுக்கு வெளியே வந்த போதும்வாசலில் தமிழக அரசியல் தேர்தலை முன் வைத்து தொடர்ந்தது.சிவகாசியில் நடக்க இருக்கும் புதுமை பித்தன் விழாவில் மீண்டும் சந்திக்க தீர்மானித்து பிரிய மனமின்றி பிரிந்தனர் ஒருவருக் கொருவர் கை குலுக்கி. அப்பொழுது காற்று சிறைப்படவில்லை. நட்பின் குஷி கொஞ்ச நேரம் குந்தியிருந்தது

வைகை செல்வி, வில் விஜயன், பாலாஜி, விஜயன்
தொகுப்பு ;சொல்வலை வேட்டுவன்,
சென்னைப் பட்டினம்.
posted by Thilagabama m @ 4/15/2006 11:32:00 pm   2 comments
Thursday, April 13, 2006
மனவெளிப் பயணம் 3

வந்ததிலிருந்து இன்று வரை அரங்கங்களின் செயற்கை வெப்பத்திற்குள்ளும் சுகமாய் இருந்தாயிற்று. லண்டன் பாலத்தை கண்டு விடவென்று . வெளியே கிளம்பி குளிருக்கான ஆடைக்குள் என்னைப் புதைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே அடி வைக்க சில்லென்ற குளிர் மூடாத முகத்தை, அதிலும் குறிப்பாக மூக்கின் நுனியை சீண்டிப் போகின்றது.
பாதைகளை சிக்னல் மரங்களில் இருக்கும் பொத்தானை அழுத்த கொஞ்ச நேரத்தில் கடக்கலாம் எனும் பச்சை விளக்கு எரிய தைரியமாய் சாலையைக் கடக்க முடிகின்றது பெட்டிக் கடை போன்று சாலையோரம் இருந்த கடையில் பேருந்து மற்றும் இரயில் பயணத்திற்கான பயணச் சீட்டு( day card) வாங்கிக் கொண்டு (ஒரு நாளைக்கானது 8 பவுண்ட்ஸ், ஏறக்குறைய 480 ரூபாய் )கிளம்பினோம். காங்கிரீட் காடுகள் என்பது பழசு. கண்ணாடிக் காடுகளாய் நம்மை சிறு துரும்பாக்கிப் போகும் நவீன கட்டிட அடுக்குகள் உயர்ந்து நிற்க , இன்னொரு இரும்பு கட்டிடமாய் இருந்த அந்த சிகப்பு நிற மாடிப் பேருந்து அசையாமல் நின்று போன கட்டிடங்களிடையே அசைகின்ற கட்டிடமாய் நகருகின்றது நிறுத்தங்களில் மெல்லச் சரிந்து நடைபாதை மேடைக்கு சரிசமமாக வந்து நிற்கும் பேருந்துகள், ஒவ்வொரு நிறுத்தங்களிலும் பேருந்து பற்றிய விபரங்கள் பேருந்து போகும் வழித்தடங்கள், எத்தனையாவது நிமிடத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு போகும் என்னும் தகவல்கள் அதை விட ஒவ்வொரு நிறுத்தத்திலும் வைக்கப் பட்டிருக்கும் “ நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள்” என்று (ஆங்கிலத்தில் தான்) குறிக்கப் பட்டிருக்கும் வரைபடங்கள் யாருடைய உதவி இன்றியும் பயணித்து விட வைக்கும் ஒழுங்குகள் ஏறக்குறைய ஐரோப்பா( லண்டனிலும் , பெர்லினிலும்)முழுவதும் பார்க்க நேர்ந்தது.
போகுமிடத்தை சொல்லி விட்டால் அடுத்து இடது பக்கம் திரும்புக என்றெல்லாம் சொல்லி போகவேண்டிய இடம் வரை துல்லியமாகச் சொல்லும் நேவிகாடர் சிஸ்டமும் இளைய அப்துல்லா கூட்டம் நடக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியாது திணறியது
அதே நேரம் ஒரு வாடகை வண்டி பிடித்து இடங்களுக்கு போவது அதிகச் செலவு தரக் கூடியது. பெண்கள் சந்திப்பு நடந்த இடமிருந்து, இளைய அப்துல்லா புத்தக வெளியீடு நடந்த இடம் சுமாராக 8 கி. மீ தொலைவு இருக்கும். 2 வாடகை வண்டிகளில் 10 பேர் போக நாங்கள் அன்று செலவளித்த தொகை, இந்திய பணத்தில் 10000 த்தை நெருக்கியது.


*
திடீரென கட்டிடங்கள் விலகி பாலமும் பாலத்தினடியில் ஓடுகின்ற தேம்ஸ் நதியும் நதியில் வீழ்ந்து அதன் குளிரை சுமந்து வரும் குளிர் காற்றும் வெயிலின் வெம்மையை துரத்தி நம்மை சில்லிட வைக்கின்றது
நமது ஊர் ஆற்றங்கரை தென்னந்தோப்பும் நெல் வயல்களும் நினைவுக்கு வர நதி நீருக்கு அருகாமையிலேயே வானளாவி நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்கள் கண்ணாடிகளால் வெயில் பட்டு பிரதிபலிக்கின்றது.நீரை வேரில் வாங்கி பயிர் வளரும், கட்டிடங்கள் வளருமா? முரண்களின் மேல்தான் எப்பவும் நம் பயணம்
எங்கேயோ வெடிக்கின்ற
துப்பாக்கி சப்தம்
கடல் கடந்து சிலரை
செவிடாக்கிப் போகின்றன.
புறப்பட்ட புகை
சிலர் கண் மூடி
குருடாக்கிப் போகின்றது
அநுமன் வால்பட்டு
பற்றிய தீயின் தெரிப்பு
துருவங்களின் பனிகளை
உருக்குகின்றது
பெயரில்லாதிருந்து
நிறங்களை சுவீகரித்து
முப்பரிமானத்தில்
ஏழு வர்ணம் காட்டி
கடலில் செவ்வண்ணம் கரைத்து
நீலவண்ணம் இருளாகி
நட்சத்திர ஒளிதெறிப்பாய்
மின்னித் துளியாக
எது எதுவாக மாறுமோ
எதை பாதிக்குமோ
அறியாமலேயே
தெரிந்து கொள்ள தேடல்களோடு
எம் பயணங்கள்
, கப்பல் நிற்குமளவிற்கு ஆழமும் ஓட்டமும் இருந்த போதும் காங்கிரீட் கட்டிடங்களுக்கிடையே சிறைப்பட்டிருக்கும் செயற்கைத் தனமோ ஏதோ ஒன்று நமது ஊர் காட்டாற்றில் மணல் பாதங்களில் உரச கால் நனைக்கும் சந்தோசத்தை தராமலே போகின்றது காங்கிரீட் கரைகளில் ஓடுவது ஆறு என்பதை மனம் ஒத்துக் கொள்ள மறுக்கின்றது. இந்த நாட்களில் காட்சிகளின் தரிசனத்தில் மட்டுமே என் மனம் இருந்ததே அல்லாது உணர்வுகளோடு பொருத்திப் பார்க்க அதற்கு இன்னமும் கொஞ்சம் அவகாசம் தேவையாயிருந்தது

பாதாள இரயில் பயணங்கள் தரையெல்லாம் மூடும் பனிக்கு பயந்து உருவாகிய பாதாள இரயில்கள் , ம் ம்…. மனிதனின் பயங்களுக்குத் தான் எவ்வளவு சக்தி. எத்தனை கண்டு பிடிப்புகளை தந்து போகின்றது, கூடவே சில நேரம் பின் விளைவுகளையும் பிரம்மாண்ட தோற்றமும் நகரும் படிக் கட்டுகளும் உடைய இரயில் நிலையங்கள் உள்ளே நவீன இசைக் கருவிகளுடன் பாடிப் பிச்சை யெடுக்கும் கலைஞன், அவரால் இரயில் சத்தத்தை மீறியும் அந்த நிலையத்திற்குள் நிரப்பப் படும் இசை
எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கின்ற காவல் துறையின் அபாய ஒலி , இன்னமும் நினைக்கையில் ஒரு வித பதட்ட உணர்வைத் தந்து போகின்றது குற்றம் நடந்தவுடன் காவல் துறை வந்து விடுகின்றது எனும் பெருமைக்கு அப்பால் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை விகிதத்தை நினக்க வைத்து பயமும் தந்து போகின்றது
1886-1894 இல் கட்டி முடிக்கப் பட்ட இந்த பாலம். ரோமர்கள் காலத்தில் மிகச் சிறந்த அனைத்துலக வணிகம் நடைபெறுவதற்கு முக்கிய காரணியாக தேம்ஸ் நதி. 1960 களிலிருந்து எங்கும் இல்லாத அளவிற்கு கடல் வாணிகம் , புதிய கப்பல்கள் கட்டப் பட்டு நடத்தப் பட்டிருக்கின்றது
பாலத்தின் வலது கரையில் டவர் ஆஃப் லண்டன் ,, பழங்காலத்து கோட்டை வில்லியம் அவர்களால் 1078 இல் கட்டப் பட்டது உள்ளது. இங்கு நிறைய ராணிகள் தூக்குத் தண்டணை தரப் பட்டு சிறை வைக்கப் பட்டிருக்கின்றனர்.(ஏன்?)
லண்டனில் சவுத் ஆல் எனும் இடம், இரயில் நிலையத்தில் முகப்பு ஹிந்தியில், எழுதப் பட்டிருக்கின்றது. அந்த தெருவில் போகின்ற போது , டெல்லியின் முக்கிய தெருவில் இருப்பதான உணர்வைத் தந்து போகின்றது.
நான் போயிருந்த நேரம் சிறுவன் ஒருவனை பற்றிய செய்தி பரபரப்பாக இருந்தது. அந்த சிறுவன் இலங்கையிலிருந்து தன் உறவினர் வீட்டில், வந்திருந்திருக்கின்றான், லண்டன் வந்து 3 மாதங்களாகின்றது.அவர்கள் வீட்டு குழந்தையைப் பள்ளியில் விட்டு வர தினந்தோறும் சவுத் ஆல் பகுதி வழியாகத்தான் போய் வருவானாம். திரும்பும் போது விட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வருவானாம். திடீரென ஒரு நாள் காணாமல் போய் விட்டான். குழந்தை திருட்டு அங்கு அடிக்கடி நடப்பது பலருக்கு பயத்தை தந்திருக்கின்றது. ஒரு நாள் தெருவில் 2 குழந்தைகளை பெல்ட் போட்டு நாய்க்குட்டியை கட்டி இழுத்து போவது போல் பாதுகாப்புக்காக கட்டி போய்க் கொண்டிருந்தனர்.இந்த சிறுவன் பின்னர் கிடைத்தானா? தெரியவில்லை. சிறுவன் கடத்தப் பட்டானா? அல்லது விரும்பியே காணாமல் போனானோ? சந்தேகங்களுக்கு விடை கிடைக்காமலேயே போனது.

பேட்டி கூட்டம் என இடங்கள் பார்க்க முடியாது போனது.
இந்த ஒரு வாரத்தில் இதுவரை என் வாழ் நாளில் இதுவரை யார் வீட்டிலும் அல்லது அடுத்தவரை சிரமப் படுத்திவிடுவோமோ எனும் தயக்கத்தோடு தங்கியதில்லை என்பதால் நிறைய தயக்கங்களை விழுங்கிய படி இருக்க பயம் வருக்கின்றது. தவறுதலாய் அதிக நாள் பயணத் திட்டம் போட்டு விட்டேனோ என்று.
பார்த்த காட்சிகளை பதிவாக்கி விட்டு 20 காலை பெர்லின் போக தயாராகின்றோம்
பெர்லின் முதல் பார்வையிலேயே பிடித்துப் போகின்றது லண்டனும் பெர்லினும் ஓரளவிற்கு ஒரே மாதிரியான நகரமே எனினும்ஏதோ அந்த நகரத்தின் முகத்திலும் நட்பான தோற்றம் தெரிவதாய் இருக்கின்றது நகரத்திற்குள்ளும் ஒரு கிராம மனோபாவம் தொற்றிக் கொண்டிருப்பதாய் படுகின்றது. இன்னமும் உலகத்தின் வெளிச்சமென்று சொல்ல முடியாது ஆர்ப்பாட்டங்களை அதிகம் உள்ளே வராது அடங்கியிருக்கின்ற கொஞ்சம் கிராமத்து நெஞ்சமும் உள்ளிருக்கும் ஊராக எனக்கு பட்டது.
இரவு வெளிச்சத்தில் பெர்லின் நுழைவு வாயிலை பார்க்கப் போகின்றேன், வெறும் ஒற்றைச் சுவரின் முன்னிலும் பின்னிலும் எவ்வளவு மாறுபட்ட ஆட்சி முறை நடந்திருக்கின்றது நினைக்க ஆச்சரியம் தான்
சுவடுகள் வீழ்ந்த பின்னும் அதன் சுவடுகள் இன்னும் அதன் தரையின் முகத்தில் ஒட்டிக் கொண்டு தானிருக்கின்றது.கிழக்கு ஜெர்மனியாய் இருந்த தெருக்களில் வறுமையின் தடங்கள் , எத்தனை அலங்காரம் செய்தும் மறைக்க முடியா விசயமாய் தெரிகின்றது.ஸ்பிரே நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஜெர்மானிய பாராளுமன்றம்,அதன் பிரம்மாண்டம் பார்த்து விட்டு வீடு திரும்புகின்றோம்..நதிக்கரை ஒட்டி முழுக்க ஆசாங்க அலுவலகங்கள்
லண்டனில் ஒரு வாரம் அலைந்த அலைச்சலின் அலுப்பு தீரு மட்டும் மறுநாள் ஓய்வெடுத்தோம்.நண்பர் சுசீந்திரன் வீட்டில். காலையில் அவர்களது வீட்டில் கீழே தங்கியிருந்த நண்பர் மணியுடன் கிளம்பி கடை வீதிக்குச் சென்றேன்.ஏற்றுமதி தொடர்பாக சிறிது காலமாக எனக்குள் இருந்த ஆர்வம் காரணமாக கடை வீதிகளில் சுற்றி வர ஆசைப்பட்டு உடன் சென்றிருந்தேன்.இயற்கை உற்பத்தி பொருட்களுக்கு அதாவது செயற்கையான உரமிடப் படாத பொருட்களுக்கு அங்கு நிலவி வரும் வாங்குபவர்களின் விருப்பம் ஆரோக்கியமானது “bio –products” என்றால் கண்ணை மூடிக் கொண்டு கேட்க்கின்ற விலையை கொடுத்து வாங்கும் ஆர்வம் இருக்கின்றது அப்படியான சான்றிதழ் வழங்கப் பட்ட பொருட்களும் மிகச் சரியான தரத்திலிருந்து விடுகின்றது. பொருட்களின் வகைகள் வாங்குபவர் தேர்ந்தெடுப்பதற்கு நிறைய வாய்ப்புகளை தருக்கின்றது. தேனில் மட்டும் எத்தனை விதமான வகைகள். ஆச்சரியம் தொற்றிக் கொண்டது
நம்மூரில் வேம்பு பூக்கும் காலங்களில் எடுக்கப் படும் தேனில் ஒரு வித கசப்பு இருப்பதை ருசித்து அறிந்திருக்கின்றோம், இன்னும் சில பகுதிகளில் முருங்கை தோட்டத்திற்குள் தேன் பெட்டி வைத்திருப்பார்கள் மலைத்தேனுடன் ஒப்பிட அதில் மருத்துவ குணம் சிறிதளவும் இல்லை எனக் கேள்விப் பட்டிருக்க கடைகளில் தேன் தரவாரியாக , சூரிய காந்தி தேன்,கோதுமை தேன் என்று பலவித பூக்களில் பேரில் வேறு வேறு நிறங்களில் வேறு வேறு சுவைகளில், சில தேன்கள் திரவமாக சில தேன்கள் , சீனி போல நெய் போல ம்…… மரங்களில் பெயர்கள் தெரியவில்லை என்பதற்காக மண் சார்ந்து ஆர்வமில்லாதவர்கள் என்று முடிவு கட்டி விடவும் கூடாதோ? கேள்விகள் ,


( அனாஸ் என்று அழைக்கப் படும் இளைய அப்துல்லாவின் துப்பாக்கிகளின் காலம் புத்தக வெளியீடு தேசம் பத்திரிக்கை யினரால் எற்பாடு செய்யப் பட்டிருந்தது. நிகழ்வின் முடிவில் பெண்ணிய நிகழ்ச்சி என்னும் தலைப்பில் தேவ கௌரி, றஞ்சி, நான் , மூவரும் பெசுவதாக அழைப்பிதழ் அடிக்கப் பட்டிருந்தது. இளைய அப்துல்லா புத்தக வெளியீடும் விமரிசனமும் முடிய 9 மணிக்கு மேல் ஆகிவிட, அந்த நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் ( அதில் குழந்தைகளும் இருந்தன) இன்னும் இனி கிளம்பி தங்கள் வீடு போய் சேர வேண்டுமே, பெண்ணிய நிகழ்ச்சி தேவையா எனும் கேள்விகளை நானும் றஞ்சியும் எழுப்ப , தேவ கௌரி தான் பேசப் போவதில்லை என்று சொல்லி விட ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தலின் பேரில் பேசத் துவங்கினோம். பெண்கள் சந்திப்பில் றஞ்சி வாசித்த புகலிடப் பெண்களின் இலக்கியம் கட்டுரையை இங்கும் வாசித்தார். நானோ மிகச் சுருக்கமாக பத்து நிமிடங்களுக்குள் தமிழகத்தில் பெண்ணியம் எனும் தலைப்பில் மண் சார்ந்து என் பார்வை எப்படி இருக்கின்றது . இங்கிருக்கின்ற உங்களுக்கு தமிழகத்து பெண்ணிய சூழலாக வாசிக்க கிடைப்பது எல்லாம் காலச் சுவடும் உயிர்மையும் திட்டமிட்டு காண்பிக்கும் ஒரு பக்கமே, அது கூட முழுமையானதல்ல . பெண் விடுதலை என்பது என்னைப் பொறுத்தவரை ஆனோ, அவள் சார்ந்த சமூகமோ அவளை தீர்மானிக்க முயலுகின்ற போது அதுவாக இல்லாது போவதே .இங்கிருக்கின்ற அதாவது மேலைத்தேயத்தில் இருக்கின்ற தீர்வுகளாக சொல்லப் படுகின்ற ஒன்றை அப்படியே எங்கள் மண்ணுக்கு கொண்டு போவது சரியாக இருக்காது.எனவே மண் சார்ந்து சிந்திக்கவும் பழகுதல் வேண்டும் என்று பேச. சுமதி ரூபனும், விஜியும் அதற்கு மாற்றுக் கருத்துக்களை சொல்ல, உரத்து பேசியபடி நடந்து கொண்ட விதம், கூடியிருந்தவர்கள் அவர்கள் கருத்தை ஏறெடுத்தும் பார்க்காத சூழலையும், என் கருத்து நிலையின் நியாயங்கள் உள் வாங்கப் படும் சூழலையும் உருவாக்கியிருந்தது.)
posted by Thilagabama m @ 4/13/2006 11:48:00 pm   0 comments
Tuesday, April 11, 2006
நனைந்த நதி -2

நனைந்த நதி சிறுகதை தொகுப்பிலிருந்து
கல்லறையில் கல்பூ

அந்த மொகலாய மன்னரின் கல்லறை உயர்ந்து எழும்பி நின்று
கொண்டிருந்தது..சிதைந்து கொண்டிருந்த அரண்மைனைச் சுவர்களை பார்த்து
கல்லறை சிரிப்பதாய் இருந்தது. பராமரிப்பு இல்லாது போன கல்லறைக் கூடம், சுற்றுலா துறையினரின் கையில் வந்திருந்ததாலும், கோட்டை சுவர்களை வீழ்த்த நினைப்பதுபோல் கல்லறையைத் தகர்க்க நினைக்கும் எதிரிகள் இல்லாததாலும் இன்னமும்கொஞ்சம் பிழைத்திருந்தது...

மழை நீர் வடிந்து வடிந்து தழும்பேறிப் போன சுவர்கள். தாஜ்மகாலை நினைவு படுத்தும் தோற்றம். சமாதியாகி கொண்டிருக்கும் அரண்மனை சுவர்களாய் தானும் கூட சமாதியாகலாம் என்றிருப்பதாய். கல்லறையில் காற்று வந்து பேசிப் போனது.கல்லறையின் மேல் காற்றோடு உலாவிக் கொண்டிருந்தவளை உங்கள் கண்ணுக்கு தெரிகிறாளோ இல்லையோ என் கண்ணுக்கு தெரிந்தாள், ஒருவேளை என்னிலிருந்து எழுந்ததாலாயிருக்கலாம் .அவள் நின்றிருந்த அமைதியில் ஒரு
அழகிருந்தது.

ஆழமிருந்தது.
ஆழமிருந்ததால் வந்த அழகோ?....காற்று அவளை இழுத்துச் செல்ல பார்த்தது.
கல்லறையின் உயரம் அவள் வானத்தில் மிதப்பதாய் தோற்றம் தந்தது.தீண்டித் தீண்டி அவள் மேலாடைக்குள் புகப் பார்த்தது கொஞ்சம் எனக்கு பொறாமை
வந்தது தென்றலைப் பார்த்து....அடுத்த கணம் யோசனையும் வந்தது.
அவளென்ன எனக்கு சொந்தமா?....
பொருளா பண்டமா சொந்தம் கொண்டாட.?.
.சொந்தம் கொண்டாடும் போது தானே பொறாமை தலை தூக்குகிறது. காதலனுக்கும், கணவனுக்குமே அவள் சொந்தமாக இருக்க முடியாது போய் இருக்கும் போது,.உணர்வுகள் பிரிந்த உடலை ,எனக்குள் வைத்திருக்கும் நான் உடல் பிரிந்த உயிராய் என்மீது நின்று கொண்டிருக்கும் அவளை எப்படி சொந்தம் கொண்டாட....

நழுவப் பார்க்கும் மேலாடையை இழுத்து பிடிக்கும் ஆசையை அவள் விட்டிருந்தாள்.காற்றோடு போவதாய் உயரப் பறந்து, உடலை விட்டு போக முடியாது மெல்லத் தாழ்ந்த அவள் மேலாடை, நட்சத்திர சிதறலாய் மின்னினாலும் ,

சோகமா?
அறிவார்ந்த சிந்தனையா? என சொல்ல முடியாதிருந்தது. குத்திட்டு நின்றிருந்த அவள் கருவிழிகள் விழிகள் மட்டுமல்லாது அவளும் ஒரு நிலைக்கு வந்திருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தன.மறையப் போகும் சூரியனுனின் மஞ்சள் வெயிலில்
குளித்திருந்தாள்.தீண்டலில் அவளை உணர்வு பெறச் செய்ய முடியாது
போக தோற்றுப் போனதாய் கரைந்து போய் வீழ்ந்தான் சூரியன்.
வெட்கமோ?
இருக்கலாம்.. குந்தி பார்வையால் கூட அல்லாது மந்திர ஒலியால் சூரியனை தீண்டி ஓர் உயிர் கையில் ஏந்தினாலே அந்த வல்லமை பெண்ணுக்குள், மென்மை என்று சொல்லப்படும் பெண்மைக்குள் இருந்த வலிமை தனக்கு இல்லாது போனது தந்த வருத்தம்..

வீழ்ந்து போனான். மெல்லக் கழிந்த இருள், அவளை அணைத்து கொள்ளப் பார்த்தது அணைத்த அணைப்பில் இருள் ஒளியாகி உயிர் பிரிய, செய்வதறியாது திகைத்து நின்றது..

வானில் அந்த பிறை நிலா, வளர் நிலா வளர்ந்து வளர்ந்தாவது அவளை கொள்ளை கொள்ளப் பார்த்தது. நிலவொளி தழுவ நீலவானமாகி நின்றாள், விசம் ஏறி நின்ற உடம்பாக
தீண்டிப் பார்த்தவர்களை எண்ணித் தீர்த்தாள். எல்லாம் தனை பண்டமாய் பார்த்த உயிர்கள். ஆனால் எல்லாரையும் ஜடமாய் இருந்து கொன்றதையும், தீண்ட வந்தவர்கள் ஜூவாலையாயல்லாது , இவள் குளிர்ந்த தேகம் கண்டு செய்வதறியாது விலகியதையும்.... .. ஆம். தீண்டித் தீண்டி உணர்வு தர முடியாது உயிர் செத்து போனவர்கள் வந்து போனார்கள் அவள் கண் முன். கல்லறையான என் மேல் நிற்கும் அவளை மண்ணால் மூடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தாலும் நானும் அவளை தீண்ட முடியாமல்தான்....

அவளை தீண்ட முடியாவிட்டாலும் அவளின் உணர்வலைகள் எனக்குள் மோதிச் சாகையில், அலறி அழுகாது அவள் கல்லாய் நிற்கையில் கல்லறையின் இலக்கணம் எனக்குள் அர்த்தமாக ஆரம்பிக்கும்.

அவள் ஓடித் திருந்த காலங்கள் நினைவுக்குள் வந்த போது நீலப்பாவாடை உடுத்து விரல் நுனியால் அதை ஏந்தியபடி என்னுள்ளும் ஓடினாள்
மொட்டு இதழ் இதழாய் விரிக்கும் நேரம் மலராத மொட்டுக்குள் துளையிட்டு, தேன் குடிக்க தேடி வந்த வண்டுகள், தனியிடம் இழுத்துப் போய் தழுவப் பார்த்த வாலிபங்களும், வயோதிகங்களும், புயலாய் வீசாது, புயலுக்கான அழுத்தங்கள் அவள் தாங்கி நிற்கையில் மெல்ல அதிர்வு தாங்கி விலகி நிற்கும் மீசை பெருச்சாளிகள்.

துணைக்குஆள் அழைக்கவி ல்லை, புழுதி வாறித் தூற்றவில்லை. அடையாளம் காட்டுவதாய் ஆரவாரம் செய்யவில்லை..இரகசியமாய் இரகசியம் காத்தாள். அதனாலேயே வெளியாகிவிடுமோ இரகசியமென்றே...... சில கடுவன் பூனைகள் வாலை சுருட்டிக் கொண்டு விதிர்த்து பார்த்தன அவளை....அலட்சிய பார்வையோடு நிமிர் நடை போட்டாள்

அப்போது.....
வீசும் தென்றலுக்கு கூட துவளும் மகரந்த இழைகள் சவுக்காக மாறிய காலங்கள். சவுக்கடி வாங்குபவர்கள் புதிது புதிதாய் முளைக்க,மலர் மலராதிருக்க தீர்மானம் தனக்குள் போட, தீர்மானங்களை தொலைக்க வந்த வாழ்வு.


காதல் சொல்லி காதோடு அவளை கனிய வைக்க, மொத்த மலரும் மலர்ந்து காட்சியாக காணக் கண் கோடி வேண்டும். கோடிகள் இல்லாது கோடியில் தள்ளப்பட்ட காதல். .கோடிக்குள் கோடிழுத்து ஓவியமாய் அதையே உணர்ந்து ரசிக்கும் கூட்டம்.
ஓவியமாய் காத கோடு மூளியாய் நின்றது. மூளியாய் நின்றதனில் முல்லை மலர்கள் செருகி அலங்காரம்...கோடுக்கும் கொஞ்சம் வாசம் வந்தது தினம் முல்லை மலர் செருக
வாசத்தோடு அதற்கும் முகிழ்த்து விட ஆசை வர தவமாய் காதல் கொண்டு வரமாய் பூத்தது. அதிகார அலுவல்களில் அலுப்படைந்து போன கனவுதனில் பூத்திருந்தது
புரியாமலே , உணரப் படாமலேயே போகும் போது உயிர் பெற்றது தவறோ என்று அரிப்பு வந்தது.மக்களுக்குதந்த அரசன் அவந்தான்.அவளும் அதை உணர்ந்தே துணை சேர்ந்திருந்தாள்.அந்தபுரத்திற்குள் அவள் அந்தரங்க ஆசைகள் அவிந்து கொண்டிருக்க பூத்து பூத்து தினம் காத்திருக்க சாபங்கள் இல்லாமலேயே அகலிகையானது.

ஆம்.பூ ஒன்று கல்லானது. நிமிடத்தில் மந்திர காரியமாய் நிகழ்ந்து விட்ட மாயமில்லை அது. தான் கல்லாவதை பார்த்து பார்த்து அதன் வலி உணர்ந்து , வலியை சுகமாய் நினைத்து மெல்ல மெல்லக் கல் ஆனது.

போவொர் வருவோர் ஸ்தல விருட்சமாய் இருக்கே என தீண்டிப் பார்க்க இறுகிக் கொண்டே போனது . தேனாகி நிரம்பி பூத்திருந்த போது உதறப்பட்ட வலி, பலர் தீண்ட வந்த போது தேனாகியிருக்கலாமோ....

நினைவுகள் நெருப்பாய் இருந்தன. எத்தனை உதறல்கள், உணர்வில்லாது காண்பித்து,இன்று நான் உதறப்படுகையில் வலித்தது
கண்ணிப் போனது கருத்து கல் பூவாய் மாறிப் போனது.


வழி வந்த சிற்பிக்கு கல் பூவிற்க்குள் தேன் வர்ணமயமாய் தெரிய விழியில் தீண்டிப் போனான்.. தீண்டல்களாய் விழாத தீண்டல். தீண்டல்கள்ஆயிரம் இருக்க விழி அவளை தீண்டித் திருடிப் போக இதோ அந்த நினைவெழ இவள் எழுந்து என் மேல் நிற்கின்றாள். இப்போது அவள் உயிர்ப்பூ தீண்டிய விழிகளை பால் வெளிகளுக்கப்பால் வைத்து விட்டு தினமும் எடுத்து வந்து தீண்டச் சொல்லி மகிழ்ந்து பூக்கிறாள்

வாழ்கிறாள்..கனவுகளோடு கரையேறுவதா வாழ்வு..ஒரு நாள் அவளும் வெள்ளமாய் கரை மீறலாம். எந்த நியாயப் படுத்தல்களும் தேவைபடாமலேயே எந்த சுட்டு விரல் நீட்டல்களும் அவளை சுட்டு விடாமலேயே.


அது நிகழுமென்று அவளும் நினைத்திருக்கவில்லை, வெளிகளுக்கப்பால் இருந்த விழிகள் கண்ணருகில் வந்து நிற்கையில் சந்திக்க முடியாது களைத்து தான் கிடந்தாள். பழகிய விழிகள் என்றாலும் அதிர்ந்தாள். அதிர்வுகளை தாங்கிய சுவாசமவளுக்குள் ஓர் பெரும் எதிர்ப்பு சக்தியாய் நிறைய, இன்று அவள் கல்லறையில்.
கல்லறைக்குள் போன தன் உயிர் சக்தியை , எதிர்ப்பு சக்தியாக்கி காற்றில் பரவ விட கல்லாய் நின்றிருந்தாள்.உணர்வுகளை தட்டிச் செல்லும் அந்த விழிகளை எப்படி உதாசீனப்படுத்துவது. ஏன் உதாசீனம் செய்யனும். உணர்வெனும் காற்றை உறவென்றும், தாலியென்றும் உறைக்குள் அடைத்தாலும் தீராது வெளியே நிரம்பிக் கிடக்கும் காற்றாய் நிறைந்திருக்கும் என்பதை உணர உள்ளுக்குள் வீசும் காற்றிலும் வியர்த்தபடி நின்றிருந்த தீபா, உதிர்ந்த இலையொன்று முகத்தில் மோத நிலைக்கு வந்தாள். மெல்ல நிமிர்ந்து பார்த்த போதுதான் அந்த குதுப் சாயி தோம்ஷின் கல்லறை அவளை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

இதுவரை தன்னோடு பேசிக் கொண்டிருந்தது கல்லறையா? கல்லறையில் கல்லாக பூத்திருந்தவளா? பிரமையா? கற்பனையா? தனது நடைமுறை வாழ்க்கை பிண்ணனனியில் மனம் பேச நினைத்ததை பேசிய அரூவமா? கூர்ந்து நோக்கிய அவள் கண்களில் கல்லறை சுவர்களுகருகில் சல்லடைக் கண்களாய் சரிந்து வீழ்ந்த மேலாடை மின்னும் நட்சத்திர சரிகையுடன் மறையப் போவதாய்......... அதுவும் பொய்

தோற்றமோ..மேகத்துக்கிடையில் மின்னிய நட்சத்திரமா?

தோன்றிய உருவங்கள் பொய்யானாலும், பேசிய உணர்வுகள் தனக்குள் சக்தியாவதை உணரும் பொழுதில் தோளில் உறுத்திய கைவிரல்கள் , சட்டென்று திரும்ப பார்வை வெப்பம் தாளாது அதிர்ந்து தழுவிய விரல்கள் நழுவ நின்றான் அவள் கணவன்.

அதிர்ந்து நின்ற கணவன் பார்த்து அவளுள்ளும் அதிர்வு. காதலென்று இல்லாது அழைக்கும் கடமையாய் தீண்டிய விரல்கள் பரிச்சியமானதுதான் என்றாலும் அன்னியமாய் தோன்றியதின் நிதர்சனம் உறுத்த, உணராத விரல்களை ஒதுக்கி, விழிகளால் தன் உயிர் உயிர்பிக்க தயாரானாள்


நிமிர்ந்திருந்த அந்த கல்லறை அவளை குனிந்து நோக்கியது தனக்கடியில் முகிழ்த்திருக்கும் இன்னொரு கல்மலர் உயிர் ஏற்று வாசம் தாங்கப் போவதை
posted by Thilagabama m @ 4/11/2006 10:17:00 am   0 comments
Sunday, April 02, 2006
நனைந்த நதி-1
(நனைந்த நதி சிறுகதை தொகுப்பிலிருந்து)

சிக்காத மனம்
-திலகபாமா
தூங்க மறுத்த கண்களுக்கும், ஏங்கித் தவிக்கும் நெஞ்சத்திற்கும் பதில் சொல்ல முடியாது இமைகளை இழுத்து மூடிய படி கிடந்தாள் தீபா.மூடிய கண்களுக்குள் தெரிந்த இருளுக்குள் ஒளிர்ந்த வளையங்களுக்கிடையில் இரு கண்கள் வந்து சிரித்து போனது. பல இடர்களை தாங்க வலிமை தந்த கண்களது.இதயங்களற்று இயந்திரமாகிப் போன மானிடர்கிடையில் என் இதயம் பூக்க செய்கின்ற கண்களது.இருக்கின்ற காதலை உணர்த்தமுடியாது, இல்லை உணர்த்தத் தேவையில்லை யென உணர்ந்தபடி போகிற அவசர உலகில் இன்னுமுமென்னை வருடிக் கொடுத்தபடி எனை சாகாமல் வைத்திருக்கின்ற கண்களது. பல நேரங்களில் என் வாழ்க்கை படகு காற்றைக் கிழித்துக் கொண்டு பயணப்பட தென்றலில் அசைந்து கொண்டிருந்த பாயது.
திரு விழாவிற்கு கட்டியிருந்த மைக்செட் அலறலில் அவள் மௌன மனம் விழித்துக் கொண்டது. அன்றும் இதே திருவிழா ஓலம்தான். அத்தை மகள் பாண்டிச் செல்வி என்கிற செல்வியும் இவளும் வருடம் ஒருமுறை பங்குனி மாத மாரியம்மன் திருவிழாவில் சந்திக்கிற சந்தோசங்களை சிந்தித்தபடி சிரிப்பும் பேச்சுமாக..
இன்றைய படிப்பு ,நாளைய வாழ்க்கை இப்படி எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி இருந்த கிராமத்து வாழ்க்கையில் இளமையே குளுமைதான். பெரியவர்கள் அறியாது கிசுகிசுத்த மரக்கிளைகளில் டும் சிட்டுக் குருவிகளாய் டும் மனதுடன்.கடந்து செல்லும் ஒவ்வொரு பால்குடமோடு வாசல் வரை போய் பின் மச்சுக்குள் வந்து அடங்கினாலும் சிறகடித்து பறந்த மணங்களோடு மலரும் பூக்களாய்.....
பாட்டியின் 5 பிள்ளைகளின் குடும்பமும் சேர்ந்ததில் இருக்க படுக்க இடமில்லாது போன சின்ன பழங்காலத்து வீடு. னால் எல்லோர் மனங்களும் விசாலமாய் இருந்ததனால் ஒருவரை ஒருவர் இடித்தபடி ,ஆனால் புழுக்கமில்லாதுஇருந்த நேரம்.
எங்கள் சந்தோசம் காண மழை வந்தது. எங்கள் உள்ளங்களில் இருந்த பிரகாசம் கண்டு பொறாமையால் நின்று போனது மின்சாரம்.
கம்பி கேட்டு மட்டும் இழுத்து விட்டபடி பெண்கள் உள்ளேயும் ண்கள் வெளியேயும் படுத்தபடி பழங்கதைகள் அவரவர் வயதொத்தவர்களுடன் பேசியபடி
மழையில் நனைந்தபடி ஓடி வந்த உருவம் அவளையும் நனைத்துப் போடும் என்று அறியாது அவளும் செல்வியும் பள்ளிக்கதைகளும் ,கல்லூரிக்கதைகளுமாக....
உருவம் கண்டு தீக்குச்சி உரசி மெழுகுவர்த்தி பற்ற வைத்து அத்தை உயர்த்திப் பிடித்து என்ன தியாகு இந்நேரம்?" என கேட்க
"காலேஜ் முடிஞ்சு கிளம்ப நேரம் யிடுச்சு சித்தி, மழை வேற"
" சாப்பிட்டியா?"
"இல்லையே சித்தி ஒரே மழை எங்கேயும் இறங்க முடியலை"
படுத்திருந்த பெண்கள் தாண்டி வரமுடியாத நிலையில் சாப்பாடு பரிமாறல் வாசலிலேயே ஒரு ஸ்டூல் போட்டு
படுத்திருந்த தீபா, செல்வி தலைக்கு மேலே சாப்பாடு பாத்திரங்கள் பறந்தபடி பரிமாறப்பட்டு...
கேலி பேசி அழுத்துப்போயிருந்த இருவரும் வந்திருப்பது தீபாவிற்கு முறைப்பையன் என்றதும் மெல்ல செருகிக் கொண்டிருந்தகண்கள் பிரகாசமாக இருளில்ம் ஒளிர்ந்தது. கிசுகிசு பேச்சுக்கள் குலுங்கும் சில்லரை சிரிப்புகள்மீண்டும்.....
பேச்சிலிருந்து யார் எவர் என்று காதுகள் தீட்டியபடி கிரகித்துக் கொண்டனர், இதுவரை பார்த்திராத ஒரு தூரத்துச் சொந்தம், இருளில் இப்பொழுதும்காணமுடியாது தூங்கிப்போனார்கள்
காலை வேளையில் இரவு வெள்ளிகளைத் தொலைத்த வானமாய் இவர்களூம் நடந்தது மறந்தபடி வேலைகளில் னால் புதிதாய் வானில் உதித்த பகலவனாய் அவன் எதிர் வந்த போது கூசும் கண்களுடன் நிலம் பார்த்தபடி மலர்ந்த தாமரையாய் அவள் ஏன் மாறினாள்?
குதி போட்டபடி இருந்த அவளது நடை இப்பொழுது ஜதி போடும் நடனமங்கையின் பதிவுகளாய் ஏன் னது?எப்பொழுதும் தன்னை வெளிப்படுத்தியபடி இருந்த அவள் இப்பொழுது அவளை மறைத்துக் கொள்ள ஏன் இத்தனை பிரயத்தனம் எடுத்துக் கொள்கிறாள்சட்டென நிமிர்ந்து எதிராளியைப் பார்க்கும் அவளாது ஞானச் செருக் கொண்ட கண்கள் எதைத் தொலைத்தோமென தேடுகிற பாவனையில் தவிக்கிறதே ஏன்?

24வருட வாழ்வில் 24 மணி நேரப்பொழுது சொற்பம் தான். னால் அந்த 24 மணி அவளின் மிச்ச பொழுதுகளையும் க்கிரமித்துக் கொண்டாதென்னவோ உண்மை
பேசிக் கொள்ள முடியாத உறவுகள் அவை,பார்வையில் பரிமாறியது எதை. தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் சந்தித்து சந்தித்து மீண்ட கண்கள் சாயங்காலக் கூடு திரும்பும் பறவையாய் அவரவர் வீடு திரும்ப எத்தனித்த போது சூழல்கள் மீறி நிலை குத்தி ஒன்றோடொன்று நின்றது இன்னமும் கண்களூக்குள்
திசை மாறி,இரை தேடி எத்தனை தூரம் கடந்தாலும் கூடவே வரும் கண்களாய் அவை எப்பொழுதும் அவள் துயர் துடைத்தபடி உயர் படிதனில் ஏற்றியபடி. சிரமங்கள் வரும் போது சிந்தனைக்குள் வந்து சிரித்து போகும் கண்களால் இவள் மனமும் சிரித்து விடும்.
பருவங்கள் மாறுகையில் பறந்து செல்லும் பறவையாய் பறந்தாலும் பயணத்தில் பின்னோக்கி செல்லும் மரமாய் இல்லாது , கூடவே வரும் நிலவாய் எட்டா தூரத்தில் எப்படி அந்தக் கண்களால் தொடர முடிகிறது
ஒவ்வொரு முறையும் இதழ் விரித்து மலராய் மலரும் எண்ணம் வரும் போதெல்லாம்,மணம் அறியாது காம்பொடிக்கப் படுகையிலும் ஆதரவாய்காயம் தடவும் அந்தக் கண்கள்....

சுரீர் சுரீர் என கொசுக்கடி தாங்காதுமுழித்துப்பார்க்கையில் அணைந்திருந்தது கொசுவர்த்தி சுருள்
கொசுக்கடிக்குப்பயந்து மேலே கிடந்த பிள்ளையின் கை நகர்த்தி எழுந்து, அலுப்பில் அயர்ந்திருந்த கணவன் குமாருக்கு போர்த்தி விட்டு கொசுவர்த்தி சுருள் பற்ற வைத்து படுக்கையில் விழுந்தாள்
அறையெங்கும் மூச்சு விட முடியாத நெடி. நெடி தாங்கச் சொல்லும் கொசுவின் கடி. திணறல்களோடு தூங்க மீண்டும் கண் மூடினாள் இருளுக்குள் ஒளிர்ந்த வளையங்களுக்கிடையில்...........
posted by Thilagabama m @ 4/02/2006 04:42:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates