சூரியாள்
|
Thursday, March 29, 2007 |
சதாரா மாலதிக்கான அஞ்சலி |

கனவுகள், காட்டாறுகள்..!-'சதாரா' மாலதியின் கவிதைகள் லதா ராமகிருஷ்ணன் 'எல்லாத் தகுதிகளும் இருந்தும் அதிகம் அங்கீகரிக்கப்படாத மரமல்லிகைகளை எப்போது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் வேதனைப்படுவேன். மில்லிங்டோனியா என்ற பெயர் கொண்ட மரமல்லிகை மணம் மிக்க கொத்துமல்லிகைகளை மிக உயரத்தில் வைத்துக் கொண்டு காத்திருக்கும்' _ 'வரிக்குதிரை(1999), தணல் கொடிப் பூக்கள்(2001) ஆகிய இரண்டு தொகுப்புகளுக்குப் பிறகு 2003ல் வெளியான 'மரமல்லிகைகள்' 'சதாரா' மாலதியின் மூன்றாவது தொகுப்பு அதன் முன்னுரையில் மேற்கண்டவாறு கவிஞர் குறிப்பிட்டுள்ளார். சதாரா மாலதி தனது எழுத்துக்கள் மூலம் திண்ணை வாசகர்களுக்கும், வேறு பல இணைய இதழ்களின் வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமானவரே. 1950ல் பிறந்த இவர் மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலியிலுள்ள கிராமமொன்றில் பிறந்த சதாரா மாலதி மத்திய அரசுப் பணியில் உயர் பதவியில் இருந்து சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். 90 கள் வரை வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்த இவர் 90களின் இறுதிப் பகுதியில் தான் தமிழ்ச் சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கினார் என்றாலும் ஏறத்தாழ பத்து வருடங்களில் கவிதைகள், சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் என்று சிறுபத்திரிகைகளில் அவருடைய எழுத்துக்கள் கணிசமான அளவு வெளியாகியிருக்கின்றன; வெளியாகி வருகின்றன. மேற்குறிப்பிட்ட கவிதைத் தொகுப்புக்களோடு கூட 'அனாமதேயக் கரைகள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பும், 'உயர்பாவை' என்ற தலைப்பில் 'ஆண்டாள் திருப்பாவை' குறித்த ஆழ்ந்த ஆய்வலசல் கட்டுரைகளும் ( இவை திண்ணை இதழ்களில் தொடராக வெளிவந்தன) இவருடைய படைப்புக்களாக இதுகாறும் வெளியாகியுள்ளன. இவருடைய தாயார் திருமதி லலிதா நாராயணன் இதுகாறும் எழுதிவந்திருக்கும் சிறுகதைகளில் சில சமீபத்தில் இரண்டு தொகுப்புக்களாக வெளியாகியுள்ளதும் இத்தருணத்தில் குறிப்பிடத் தக்கது. காத்திருப்பு என்பதன் மறுபக்கத்தில் இருப்பது தேடலும், காதலும். இந்தத் தேடலும், காதலுமே, காத்திருப்புமே 'சதாரா' மாலதியினுடைய கவிதைவெளியின் பிரதான நீரோட்டங்களாகப் புரிபடுகின்றன. ஒருவகையில் எல்லாக் கவிதைகளின் இயங்குதளங்களும், இயக்குவிசைகளும் தேடலும், காத்திருப்புமே என்று கூடச் சொல்லலாம். ஆனால், சில கவிதைகளில் இந்தத் தேடலும், காத்திருப்பும் தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும். அல்லது, தம்மைப் பற்றிக் குற்றவுணர்வு கொள்ளும். சதாரா மலதியின் கவிதைகளில் அவை ஆற்றொழுக்காக வெளிப்படுகின்றன எனலாம். நகம் மேல் விரல் விரல் மடங்கும் அங்கை முன்கை வியக்கும் முழங்கை முழங்கை முழங்கை முதல் தோளிணை தோளில் மாலை மாலையில் என் மணம் என் குறவன் விருப்பிற்கு நான் செஞ்சாந்தாய் ஆவேன்.' விறலி என்று தலைப்பிட்ட இந்த குறுங்கவிதையில் காதலும், சந்தோஷமும் எத்தனை குதூகலமாய் வெளிப்படுகின்றன! இத்தகைய கவிதைகளின் உத்வேகத்தையும், உணர்வெழுச்சியையும் உள்வாங்கிக் கொள்ள இயலாதவர்களாய், அல்லது, உள்வாங்கிக் கொள்ள மறுப்பவர்களாய் இதை ஆணாதிக்கத்தைப் பேணும் கவிதையாய் மேம்போக்காய் பகுப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? சதாரா மாலதியின் கவிதைகள் அத்தகைய எதிர் விமரிசனங்களைப் பற்றிய கவலையோ, கிலேசமோ இல்லாமல், அந்த குறிப்பிட்ட கணத்தை ஆழ்ந்து அனுபவிக்கும் ஒரே முனைப்பாய் கிளர்ந்தெழுகின்றன! இந்த உணர்வெழுச்சி சதாரா மாலதியின் பெரும்பாலான கவிதைகளில் அவருடைய பலமாகவும், ஒரு சில கவிதைகளில் அவருடைய பலவீனமாகவும் அமைவதைக் காண முடிகிறது. மொழிக் கல்லில் முட்டி முட்டி என் துயர் சொன்னேன். மொழி சும்மாயிருந்தது. பனிப்போர் அது என் நெஞ்சில் மோதி மோதி கவிதையாய் இறங்கியது.' 'மோதல்' என்ற சிறுகவிதையில் மோதல் என்ற ஒரு வார்த்தை contact, confrontation ஆகிய இரண்டு விஷயங்களையும் குறிப்பாலுணர்த்துவதன் மூலம் கவிதைக்கு கனம் சேர்க்கிறது. வார்த்தைகளின் கச்சிதமான தேர்வு, அவற்றின் கச்சிதமான இடப் பொருத்தம் இரண்டுமே ஒருசேர அமைந்தால் தான் கவிதையின் 'சிற்பச் செதுக்கல்' பூரணமாகும். ஒன்று மட்டும் இருந்து ஒன்று இல்லாமல் போய்விடும் போது அந்த இன்மையின் அளவு கவிதையும் கூர்மழுங்கியதாகி விடுகிறது.அப்படியான சில கவிதைகளையும் சதாரா மாலதியின் தொகுப்புகளில் காண முடிகிறது. இத்தகைய பூரணமற்ற கவிதைகள் இடம்பெறாத கவிதைத் தொகுப்புகளே இருக்க முடியாது என்றும் சொல்லலாம். சில கவிஞர்களின் விஷயத்தில் அவர்களுடைய ஆகச் சிறந்த கவிதைகளே 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் வெற்றிகரமாய் காண்பிக்கப்படுகின்றன; அவ்விதமாய் அவர் மேலான கவிஞராக நிலைநிறுத்தப்படுகிறார். வேறு சிலர் விஷயத்தில் நேர் எதிராக விஷயம் நடந்தேறி அவர் கவிதைகள் எளிதாக ஒரம் கட்டப்பட்டு விடுகின்றன. எனக்கு மட்டும் ஏனிப்படி/ தேன் மெழுகுக் கூடு' என்பது போன்ற வளமான வார்த்தைப் பிரயோகங்கள் சதாரா மாலதியின் கவிதைகளில் கணிசமாகக் கிடைக்கின்றன. 'சோரம் புனிதமானது ஏனெனில் பணம் பத்திரங்கள் துச்சம் அதில் பிறிதும் கண்மூடிக் காதல் அதில் தான் என்ற கவிதையை 'தட்டுக்கெட்டத்தனத்தை'ப் பரிந்துரைக்கிறது என்று பொருளுரைப்பவர்களைப் பார்த்து பரிதாபப் படத்தான் வேண்டும். 'நகை மேல் ஆணை' என்ற கவிதை பல்வேறு அணிகலன்கள் மேல் உள்ள ஈர்ப்பையும், அவற்றை ஒதுக்கி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவாய் மனம் உணரும் இழப்பையும் பதிவு செய்கிறது. நகையை விரும்புதல் பெண்ணடிமைத்தனம் என்ற முன்நிபந்தனையோடு இந்தக் கவிதையை வாசிக்கப் புகுந்தால் இதன் கவித்துவமும், லயம் ததும்பும் மொழிப் பிரயோகமும் நம்மை எட்டாமல் போய்விடும். மாதிரிக்குச் சில வரிகள்:- சூடகமும் பாடகமும் தோடும் அபரஞ்சித் தொங்கல்களும் ஏந்தி நிறுத்திய பதக்கமும் சரப்பளியும் காலால் அழகணிந்த கவிதையூறும் உலோகச் சிரிப்புகளும் களைந்தேன்.' கொலுசு என்ற கவிதையில் கொலுசைப் பறிகொடுத்த துக்கம் ஒரு பெண்ணின் 'சுதந்திரமான இயக்கமும், அதிலுள்ள சந்தோஷமும் பறிபோகும் இழப்பைக் குறிப்பாலுணர்த்துவதாகிறது. ரசிக்காத பயணத்தில் களைப்போடு இழப்பு எனக்குப் பழக்கம் தான் என்றாலும் இந்த முறை ரொம்ப ரொம்பவே வலித்தது. சொன்னேனே அதைத் தாந் என் கொலுசு தொலைந்து போயிற்று'. பழந்தமிழ்ப் பரிச்சயம் நிறைய வாய்க்கப் பெற்ற சதாரா மாலதியின் கவிதைகளில் புராண, இதிகாசக் குறிப்புகளும், குறியீடுகளும் அநாயாசமாக வந்து விழுகின்றன! 'இவை தாண்டி வடவாக்கினியில் நுழைந்து மீளவும் பச்சைப் புண்ணிடை பதிகம் தேறவும் பேச்சுக் காதுகளின் ஊசி கோர்த்த மௌனத் துளை வழி நெடிய வானம் காணவும் நீ தான் நீ தான் உடன் வேண்டும் பால் மறந்து நோயகன்றேக வேண்டும் (போர் நீங்கிய தேசத்தின்) 'தெள் நினைவு அறும் தொலைவில் மனம் போக அஞ்சினேன் சகுந்தலை விரலணியும்- தொலைந்தது நுரை மடிப்பில் (எதுவுமில்லை) சுய-அலசல், சுய-விமரிசனம் செய்து கொள்ள இவர் கவிதைகள் தயங்குவதேயில்லை! அங்கீகாரத்திற்காய் 'தான்' அல்லாத ஒரு பிம்பத்தை தன்னுடையதாக வாசகர் மனதில் பதிய வைக்க இவர் கவிதைகள் முயற்சி செய்வதில்லை. 'அன்புண்டு ஆண்டவன் தானில்லையென/ அநியாயப் புளுகுக்கு பயிற்சியெடுக்கவில்லை', முதலிய பல வரிகளை உதாரணங் காட்டலாம். பெண்கள் உடல்களாய் ஆண்கள் வெறும் கண்களாய் பார்வையும் மனதும் சதுப்புகளில் அறைபட்டு இருட்டறை இலக்கியங்களின் மிகும் வாழ்க்கை வயிறுகளில்! -என்று முடியும் கவிதை ஒரு விலகிய தொனியில் வெடிகுண்டுகளின் மத்தியிலும், இருட்டறை இலக்கியங்களின் மிகும் வாழ்க்கை வயிறுகளிலும் அறைபட்டுக் கிடக்கப் போகும் இனியான வாழ்க்கையை நமக்கு கவனப்படுத்துகிறது. அதேபோல், 'வாழ்க்கை' என்ற கவிதையும் நிறைவான வாசிப்பனுபவம் தருவது. வலிகளால் பாறையைச் சமைக்க முனைந்த சிற்பிகள் நாம். நம் வீடுகள் எல்லாம் சிறகு முளைத்துப் பறந்து இங்குமங்கும் சுவர்களாய் வழித்தடங்களாய், சத்திரத்துத் திண்ணைகளாய் காத்திருப்பு இருக்கைகளாய் அமர்ந்து கொண்டன' -என்று ஆரம்ப வரிகளிலிருந்து முடிவு வரி வரை 'இறுக்கமே' அதன் சிறப்பான நிகிழ்தன்மையாய் கட்டமைக்கப்பட்ட கவிதையிது. சில வரிகள் அதிகமாகத் தென்பட்டாலும் கூட, ஒவ்வொரு வாக்கியமும் தனித்தனி கவிதையாக வாசிப்பிற்கு உகந்ததாகிறது. 'இது பதிலில்லை' என்ற கவிதை 'என் தோல்வி எதுவென்றால் நான் செத்தே பிறந்தது', என்று வாழ்வின் ஆற்றாமைகளைப் பேசுகிறதென்றால் 'உன்னிடம்' என்ற கவிதை ' இழந்த உலகங்களை/ ஈடுகட்டிச் சிரிக்குமிடம்/ அந்தப் புல்லிடம் சிலிர்க்கும்/கண்ணிடம் கொள்ளூம்/ தூக்கம் போல்' என்று இழந்த உலகங்களை மீட்டெடுத்துக் கொள்ளும் இதமான உணர்வு குறித்துப் பேசுகிறது! எங்கோ ஒரு மனத்தின் ஒற்றை ஏரிக்குள் இரட்டையாய் பிரிந்திருக்கும் நீர்ப்பரப்பில் அமுதோ நஞ்சோ ஒன்றை ஆய்ந்தெடுத்து குளுமை தேடித் துவண்டு வீழவென்று பறக்கும், தொடர் பறக்கும், அதுவரை சுமை தவிர்க்க, தலை மேல் அழுத்துகின்ற ஆணானதையெல்லாம் அகற்றிவிடல் கூடுமேல்' -என்ற ஆணாதிக்க எதிர்ப்பு வரிகள், 'பறத்தல் இதன் வலி' என்ற கவிதையில் இடம்பெறுவது. 'பிசாசின் தன் வரலாறு' என்ற நீள்கவிதை அதன் மொழிப் பிரயோகத்திற்கும், உள்ளடக்கத்திற்கும் குறிப்பிடத்தக்கது. சிறந்த பெண்ணியக் கவிதை,பெண்மொழிக் கவிதை எனக் கூறத்தக்கது; எனில், அப்படி யாரும் இதுவரை பொருட்படுத்திக் கூறியதாகத் தெரியவில்லை. மேலும், நவீனத் தமிழ்க் கவிதையில் நீள்கவிதை எழுதியவர்கள் குறைவு. பெண்களில் எனக்குத் தெரிந்து இவரும், திலகபாமாவும் தான் எழுதியிருக்கிறார்கள். 'நெடுநாளைய சேமிப்பு நிறைய கனவு பொய்களின் அழகை வடிவை பைக்குள் அமுக்கி விட' (பொய்க்கடை) இல்லாதவர் பூசின சொல்லாத வர்ணமே நெஞ்சில் எப்போதும் குங்குமமாய் அப்பி (ஹோலி) சொல்லுக்குள் கர்ப்பம் உறா உணர்வை ஞாபகங்களில் சிறைப்படாத நரம்பை (தாண்டவம்) படிகளில் ஏறி விட வடிகால் அமைத்துத் தர சேக்காளி குழு துருப்புச் சீட்டு கோட்டைப் பொய் சேராமலே எனக்கும் அடையாளமுண்டு அது என் தனிக்கவிதை' (உறுப்பிலக்கணம்) நிறமிழந்து வானவில் வந்து போன நெடுகிலே தாமரை பூத்தது நெருப்புச் சட்டிகளில் (தாமதம்) சுறாக்கள் தின்னும் மேனி நக்கிக் கடல் புகும் (சுறாக்கள் தின்னும்) பித்தளை அடைப்பானை ஒருவன் கவர்ந்து செல்ல பெரிய்ய நீர்த்தொட்டி துளைப்பட்டது நாட்டில் நான் நீர்த்தொட்டிக்கோ அடைப்பானுக்கோ சொந்தக்காரியில்லை (அசட்டையாய்) என பலப்பல வரிகளை 'சதாரா' மாலதியின் கவித்துவத்திற்கு எடுத்துக்காட்டுகளாகத் தரலாம். சதாரா மாலதியின் கவிதைகளில் முக்கியமான கவித்துவ அம்சமாகக் குறிப்பிட வேண்டியவை அவற்றின் பாசாங்கற்ற உணர்வெழுச்சி, அமுதனைய தமிழ், தாளகதி, மற்றும் வாழ்வின் நுட்பமும், விரிவும். எல்லாத் தொகுப்புகளையும் போலவே இவருடைய கவிதைகளிலும் ( இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு எனக்குப் படிக்கக் கிடைத்ததில்லை) நீர்த்துப் போன, உரைநடைத் தன்மை அதிகமான கவிதைகளும் காணக் கிடைக்கின்றன என்றாலும் ஒப்புநோக்க அவை அதிகமில்லை. கவிதைகளின் தொனியில், கட்டமைப்பில், மொழிவழக்கில் சதாரா மாலதி வெவ்வேறு வகைமைகளைக் கையாண்டு பார்த்திருக்கிறார். அவர் கவிதைகளில் விரவித் தெரியும் காதலும், வாழ்வீர்ப்பும் மிகுந்த கவனம் கோருபவை. காதலை முதிர்ச்சியோடு கையாளுதல் என்பதாய் முன்வைக்கப்படும் வாதத்தை போலியாக்குவதாய் காதலை அதற்குரிய அத்தனை பரவசத்தோடும், குழந்தைத்தனத்தோடும் வடித்துக் காட்டுகின்றன சதாரா மாலதியின் கவிதைகள்! நவீன தமிழ்க் கவிதை குறித்த கருத்தரங்குகளில் தனது கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கும் சதாரா மாலதியின் கட்டுரைகளில் அவருடைய வாசிப்பின் வீச்சும், அவற்றின் வழியான 'கவிதை பற்றிய பார்வையின் நுட்பமும் குறிப்பிடத் தக்கது.
நன்றி: திண்ணை,லதா ராமகிருஷ்ணன் |
posted by mathibama.blogspot.com @ 3/29/2007 10:07:00 am   |
|
|
Wednesday, March 28, 2007 |
வருந்துகிறோம் |
கவிஞரும் எழுத்தாளருமான தற்போது பேங்களூரில் வசித்து வந்த சதாரா மாலதி நேற்று இரவு இயற்கை எய்தினார். அன்னாரது குடும்பத்தாருக்கும், நண்பர்கள் உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் |
posted by mathibama.blogspot.com @ 3/28/2007 09:20:00 am   |
|
|
Tuesday, March 27, 2007 |
அறிவிப்புகள் |
பாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி அறிவிப்புகள்
சி. கனகசபாபதி நினைவுப் பரிசு 2005மார்ச் முதல் 2007 மார்ச் வரை வெளி வந்த கவிதைத் தொகுப்புகள் போட்டிக்கு வரவேற்கப் படுகின்றன. 2 பிரதிகள் அனுப்பப் பட வேண்டும் ஏப்ரல் 30 க்குள் தொகுப்புகள் எங்களை வந்து சேர வேண்டும்.
சி. சு செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி 2005 மார்ச் முதல் 2007 மார்ச் வரை வெளி வந்த சிறுகதை தொகுப்புகள் வரவேற்கப் படுகின்றன 2 பிரதிகள் அனுப்பப் பட வேண்டும் ஏப்ரல் 30 க்குள் தொகுப்புகள் எங்களை வந்து சேர வேண்டும் அனுப்ப வேண்டிய முகவரி திலகபாமா மதி மருத்துவமனை 15/1 ஆறுமுகம் சாலை சிவகாசி-626123 9443124688 |
posted by mathibama.blogspot.com @ 3/27/2007 02:05:00 pm   |
|
|
Monday, March 19, 2007 |
திராவிடக் கவிதைகளில் பெண்ணியம் |
சுதந்திரப் போராட்டங்களின் பின் அரிய நாட்டை சுதந்திர பூமியாக என்றைக்கும் போல் தான் சுழன்ற புவி என்ற போதும் உதித்த சூரியனென்ற போதும் கைசேர்த்த பின்னரும் , தமிழ் நாட்டு இலக்கியங்களின் போக்குகளை அரசியல் வாழ்வியல் மாற்றங்கள் தீர்மானித்தன
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றும் கொள்வாரோ என்று பாடிப் பறக்க முடியாது சிறை பட்டும் துயர் பட்டும் வாழ்ந்த இலக்கிய கூட்டம் அடுத்த பாடுபொருளை தேடிய மௌனம் இருந்த போதும், பின்பு வந்த அரசியல் மாற்றங்கள் அது திணித்த வாழ்வியல் மாற்றங்கள் சமூகப் பார்வையாளனாக விமரிசகனாக இருந்த உண்மையான ஒவ்வொரு பிரஜைக்குள்ளிருந்தும் மொழியின் ஊற்றில் உணர்வுகள் கொப்பளித்து விழத் துவங்கின.
இந்தியாவின் பல்வெறு பகுதிகளும் , மொழி வாழ்வு கலாசாரம் பண்பாடு என பிளவு பட்டும் கிடந்த போதும் பட்ட துன்பம் சொல்லி அரசியலமைப்புக்குள் சேர்த்தாச்சு ஒரு அதிகார மையம் அமைக்கப் பட்டது அது தேவையானதும் கூட ஆனால் நகருகின்ற காலங்களில் எவ்வளவுக்கெவ்வளவு மையம் ஸ்திரமாக இருக்க வேண்டுமோ அவ்வளக்கவ்வளவு மாற்றங்களை உள் வாங்கும் இலகு தன்மையுடைதும் இருத்தல் அவசியம்
வந்து போன ஆங்கிலேயனால் பல்வேறு புதிய அனுபவங்கள் வாய்க்கப் பெற்ற அடித்தட்டு வர்க்கமும், தன்னை விழிப்பில் வைத்துக் கொள்ள முயல சுய மரியாதைச் சிந்தனைகள் தோற்றம் பெறுகின்றன. மையத்திலிருந்து தூரத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதனிடமிருந்து நிராகரிக்கப் பட்ட அழுத்தத்திலிருந்து ஒரு எண்ணம் சிந்தனை இயக்கம் , கலை எல்லாமே உருவாகும், அது மெல்ல மெல்ல ஒரு ஒழுங்குக்குள் தன்னை கொண்டு வரப் பார்க்கும். அதன் பொருட்டாக அந்த சமூகத்தின் கட்டமைப்புகளை அவை உள்வாங்கும்,கட்டமைப்புகளை உள்வாங்கியதாலேயே அது அரசியலாக்கப் படும். அப்படி செவ்வியல் தன்மையை அடைகின்ற போது அது சிலரிடம் அகப் பட்டு அழிவைத் தேடப் பார்க்கும். காலம் மீண்டும் அதை அவ்விசயம் மனிதருக்கானதாய் இருக்கின்ற போது வென்றெடுக்கும் . இது கால சுழற்சி யாராலும் மறுக்கவோ நிரகரிக்கவோ முடியாது. சுய மரியாதை சிந்தனை மெல்ல அரசியலாகி, அரசியலில் கைகள் திராவிட வர்ணம் பூசப் பட்டு இலக்கியத்தின் முகத்திலும் அந்த வர்ணம் பிரதி பலித்தன அந்த கால கட்ட இலக்கிய வாதிகளாக அதிலும் கவிஞர்களாக என்னுடைய பட்டியலில் நீலாம்பல் அம்மையார், ராமாமிர்தம் அம்மையார், சத்யவாணி முத்து, தெரியாத பெயர்களாக சொல்லப் படுகின்றதா? ஆம் பெண்களின் வெற்றிகள் பேசப் படாத பொருளாக போயிருப்பதிலிருந்தே அன்றைய பெண்ணிய புரிதல் இல்லையென்பது உணர்த்தப் பட்டு விடும் ஆனால் இன்றும் கூட அதுவேதான் பெண்களின் நிலை , பாரதி தாசன் வாணி தாசன் புலமைப் பித்தன் முடியரசன் சுரதா என்பவர்கள் வந்து சேர்கின்றார்கள் தாயாண்மை சமுதாயம் அழிவுக்கு வந்த காலம் தொட்டு , நில வுடமைச் சமுதாயம் தொடங்கியது முதல் பெண்ணுக்கு எதிரான, உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான அவர்களை எப்பவும் அடிமை இடத்திலேயே வைத்திருப்பதற்கான சாணக்கியத்தனங்கள் ஆதிக்க மனோபாவங்களினால் மெல்ல மெல்ல கட்டமைக்கப் பட்டு அதற்குள்ளேயே வேர் விட்டு வேர் விட்டு சமுதாயம் கலாசாரம் பண்பாடு அரசியல் விழுமியங்கள் ஒழுக்க நிலைகள் எல்லாம் கட்டப் பட்டு விட்டன அதிலும் குறிப்பாக பெண்ணினம் காப்பாற்றப் படும் பொருட்டும் கவனிக்கப் படும் பொருட்டுமே அடிமைத் தனத்தை விரும்பி ஏற்க வைக்கவும் அதை இயல்பாக மாற்ற பழக்கப் படுத்தப் பட்டும் அதை உணர்ந்து கொள்ளவே முடியாத படிக்கு சுகமான இருப்பாகவும் கட்டமைக்கப் பட்டு விட்டன . மாறாக சிந்தனைகள் எழும்போதெல்லாம் அதன் எதிர் துருவம் இன்னும் கொடூரமானதாகவும் இருப்பதால் பழகிய கொடுமையே போதுமென தீர்மானிக்க பழக்கப் படுத்தப் பட்டு விட்டது . எல்லாம் செயப் பாட்டு வினைகளே அன்றி செய்வினை ஒன்றுமில்லாது போனது துரதிர்ஷ்டம் தான். பலர் நினைக்கின்றார்கள் கட்டமைப்புக்கு எதிரானது மாறானது கட்டுடைப்பு என்று . அது புலிக்கு பயந்து முதலைக் கிணற்றில் குதித்த கதையாகிப் போகும்.
மாறாக தன் இயல்பை உணரச் செய்வதும் , ஏற்கனவே எழுதப் பட்டிருப்பவைகளில் தேவைப் படும் போது நிகழ் வாசிப்பு செய்வதன் மூலம் நம் நகர்தலின் வேகத்தை கணக்கிட்டு கொண்டு தேவைக்கு ஏற்ப அதை உயர்த்த ஆவன செய்வதும் இன்றைய பெண்ணியமாக இருக்கின்றது அந்த வகையில் இதுவரை வாசித்த திராவிட கவிஞர்கள் சிலரது எழுத்துக்களை நிகழ் வாசிப்பில் உங்கள் முன் வைக்க இருக்கின்றேன். திராவிட கவிஞர்களில் சொல்லப் பட்ட எந்த பெண் படைப்பாளியின் படைப்பும் வாசிக்க கிடைக்கவில்லை.
திராவிட கவிஞர்களின் பிரஞ்கை பூர்வமான சிந்தனையும் எண்ணமும் மனித நேயமும் , தமிழ் மொழி வளர்ச்சியும் மட்டுமாகவே இருக்க, அதற்கு மனித நேயத்திற்கு உள்ளான இடைப் பிரிவுகளாகத்தான் பெண் பற்றிய கவனிப்பும் சாதிய ஒடுக்கு முறைக்கெதிரான குரலும் இருந்து வந்திருந்தது. இரு விதமானபார்வையை வாசிப்பினூடாக நிகழ்த்த வேண்டியிருக்கின்றது ஒன்று பெண்ணைப் பேசும் படைப்புகள் இரண்டு பெண் உணர்வுகளைப் பேசும் படைப்புகள்
சங்க கால இலக்கியம் தொட்டு இன்று வரை கவிதைகளில் பெண்ணை பாடு பொருளாக்கி பாடியவர்கள் மிகக் குறைவு பாரதி நிவேதிதா தேவியை பற்றி பாடியிருக்கின்றார். பெண்ணைச் சித்தரிக்க தயாராயிருக்கும் கவிதா உலகு பாடு பொருளாக்கி பாடவே இல்லை என்றே சொல்லலாம்.சுரதா சீதக் காதி முதல் பாரதி தாசன் வரை புகழ்ந்து கவிதை புனைந்திருப்பர், சீதக் காதி , உமறுப் புலவர் வேத நாயகம் பிள்ளை உ.வே.சாமிநாத ஐயர் பாண்டித் துரை தேவர் ஞானியார் அட்கள் மறை மலை அடிகள் பாரதியார் திரு. வி. க பாரதி தாசன் என நீள பட்டியல் வரிசை இடம் பெறும் கால கட்டத்தில் ஒரு பெண் கூட உங்கள் பார்வையில் சொல்லத் தகுந்தவளாக அமையவில்லையா?பேண்ணின் வெற்றிகள் வெற்றிகளாக ஆண்களால் உணரப் படவில்லையா?
பெண் உணர்வை பேசுகின்ற விதமாக அமைக்கப் பட்ட சுரதாவின் “மணக்க மாட்டேன்” எனும் கவிதையின் வரிகளும் , அவரது எண்ணங்களான பகுத்தறிவு தாய் மொழிப் பற்று இவற்றையே பெண் கூற்றாக திணித்துப் போவது அல்லாது வேறு பேசவில்லை. தாய் மொழிப் பற்றில்லானை தையல் நான் மணக்க மாட்டேன்
திருக்குறள் கல்லாதானை திருமணம் செய்து கொள்ளேன்
-----பிறந்த நாட்டைக் கண்ணே போற் சிறந்ததாகக் கருதாதான் ஈக்கள் மொய்த்த புண்ணே போல் இழிந்தோன் அந்தப் புல்லனை மணக்க மாட்டேன்.
புதுமை புரட்சி என்று கூத்திட்ட போதும் காலம் காலமாக சொல்லப் பட்டு வந்த ஆண் வலிமை , பெண் அழகு நளினம் என்றும் பிரித்தல் விட்டு மாறவில்லை குன்றனென்றும், காடனென்றும் மருதனென்றும் குமணனென்றும் பெயரிடலாம் ஆண்கட்கெல்லாம்
அன்னமென்றும் அன்றிலென்றும் அல்லிஎன்றும் அருவியென்றும் பெயரிடலாம் பெண்டிர்க்கெல்லாம்
சுரதாவின் அகல்யை குறித்த பார்வை பெண்மன உணர்வை நிராகரிப்பதுமாயும் , உடைமைப் பொருளாக பார்ப்பதுவுமாகத்தான் இருக்கின்றது. குற்றம் புரிந்த மற்றொரு மங்கையோ? கௌதம முனிவரின்கட்டில் மனைவியாம்
கட்டில் மனைவி என்பதுவும், மங்கை செய்தது குற்றம் என்றால் குற்ரத்திற்கு உடனிருந்த ஆடவன் பார்வையிலிருந்து மறைக்கப் படுவது பெண்ணுக்கு எதிரான சிந்தனை
பாரதி தாசன்
பாரதி தாசன் காலம் பெண்ணுக்கு படிப்பெதற்கு என நம்பியிருந்த சமூகத்தை கடக்க வைக்க சமூகச் சிந்தனையுள்ளவர்கள் போராடிய காலம் பெண் வீட்டை காடு கழனி வேலை தவிர வேறெதுவும் அதிகம் கையிலெடுக்காத தருணம் குடும்பப் பராமரிப்பு மட்டுமே பெண்ணுக்காக சொல்லப் பட்டிருந்த கால கட்டத்தில் பெண் படிப்பு பற்றி சொல்ல வேண்டியதன் நிர்பந்தமே இருண்ட வீடும் குடும்ப விளக்கும் ஆகும் . பெண்களை எப்பவும் அழகியல் சார்ந்த ஒரு விடயமாகவும் ஆண் வாழ்வதற்கான மகிழ்ச்சி தரக் கூடியவளாகவும் சித்தரிக்கப் பட்டிருந்த காலகட்டத்தில் பாரதி தாசன் குடும்ப விளக்கு அன்றைய வழக்கிற்கு மாற்றாக பெண்ணை கவிதையின் பாடுபொருளாக்கி இருப்பதே முக்கிய விசயமாகும். பாரதி தாசன் முன்னுரையிலேயே சொல்லி விடுகின்றார்.” வருவாய் கூடத் துவங்கியதும் பெரு வாழ்வுக்கு பெண்கள் பழக்கப் பட்டு விடுகின்றனர் என்று.
பெண்கள் மட்டும் தானா? பதில் யார் சொல்வது . தன் வேலையைதானே செய்து கொள்ளும் காந்தீய தத்துவத்தை போதிக்கும் போதும் அதே தத்துவம் ஆணுக்கும் பொருந்துமல்லவா? அப்படியானால் அன்றாட உணவுக்கு வேண்டியதை தானே சமைத்துக் கொள்வது இயல்பாக உணர்த்தப் பட்டிருக்கிறதா? ஆனால் அது எப்பவும் பேசப் படாத உணமையாகவே இருளுக்குள் இருந்து விடுகின்றது ஒரு பெண் நாளெல்லாம் அவளுக்காக என்றில்லாது எப்பவும் உடனிருக்கின்ற எல்லோருக்காகவும் உழைக்கின்றவர்களாக அடிமைத் தனத்தை சந்தோசமாக ஏற்கின்றவளாக வடிவமைக்கப் படுகின்றாள். அதே நேர அவரது அக்கவிதை படிக்கும் போது மகிழ்ச்சி தருகின்ற இரு விடயம் அவரே அறியாது பெண் இத்தனை வேலைகள் செய்பவளா என “சும்மாயிருப்பதாய்” இன்றைக்கும் சொல்லிக் கொள்ளும் பெண்கள் கூட நினைத்துப் பார்த்திடாத ஒன்றாக , பட்டியலிடுகின்றார்.பெண்களே இதுவரை உலகுக்கு காண்பிக்கத் தவறிய பக்கமது.இன்றும் கூட பத்திர பதிவுகளில் வேலைக்கு சென்று பொருள் ஈட்டாத மனைவிகளை “ சுக ஜீவனம்” என்றே சொல்லிப் போகின்றார்கள் பணமோ பொருளோ புகழோ அல்லாது வேலை செய்பவளாக இருந்தும் சுக ஜீவனம் செய்பவளாகவே இந்த சமூகத்தால் உணரப் படுகின்றாள்.இன்றைய புள்ளி விபரங்கள் பெண் ஒரு நாலைக்கு 95 வேலைகள் செய்கின்றாள் என சொல்கின்றது . அதை அன்றே கவிதையில் சொல்லியிருக்கின்றார் பாரதி தாசன் இன்னொன்று அதே நேரம் அப்பெண் சோறாக்குவது பணி விடை என்று மட்டுமல்லாது நிர்வகத் திறமையோடும் தனித்து செயல்படும் திறம் இருப்பதையும் அவரே அறியாமல் சொல்லிச் சென்றிருப்பார். கணவருடைய கடைக்குப் போய் பழைய கடன் தீர்த்து புதிய கடன் தந்து அவளே முடிவெடுக்கக் கூடியவளாகவும், பிள்லைகளை தனியே கடற்கரைக்கு( 54ம் ஆண்டுகளில் அது சாதாரான விடயம் அல்ல)கூட்டிச் செல்பவளாகவும் கவிதை பேசுவது அன்றைய கால கட்டத்தில் புரட்சியான விடயமே.
அதோடு வழமையான பெண்வீட்டுச் சீர் வழக்கம் மாற்றி ஆணின் தாயும் தந்தையும் சீராக என்றில்லாது பார்க்க வரும் போது அன்பின் பொருட்டு வண்டி நிறைய பொருட்களும் பண்டங்களும் கொண்டு வருவதை சொல்லிச் செல்வது இன்றைக்கும் புரட்சிதான் வண்டி விட்டிறங்கி வந்த மாமியும் மாமனும்கற் கண்டொத்த பதிலும்கூறிக் கொண்டு வந்திட்ட பண்டம் குறையாமல் இறக்கச் சொன்னார்
குடும்ப விளக்கு தவிர தனிக் கவிதைகளில் அவாது ஒட்டு மொத்த பார்வையில் ஒரு தனித்த வித்தியாசம் உண்டு சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலும் சேசு மொழிந்த தெள்ளமுது எனும் கவிதையிலும் அறியாமல் கேள்வி கேட்பவன் ஆணாகவும் அனுபவத்தால் உணர்ந்து அரசியல் , பகுத்தறிவோடு பதில் சொல்பவள் பெண்ணாகவும் இதுவரை இல்லாத வழக்கம் மாற்றி வடிவமைத்திருப்பார்
வாணிதாசன் கன்னியின் கனவு எனும் கவிதையில் பெண் மன உணர்வுகளாக கவிதையின் இறுதி வரிகளில் பெண்கள் மண வாழ்வின் உரிமை பெற்றிட நான் முனைவேன் கண்கள் எனக்குண்டு-விரும்பும் காதலன் நானடைவேன் என்று கூறிச் சென்றாலும், அவர் கேட்பார், நான் நாணுவேன் எனும் வழமையான ஆண் வழிச் சிந்தனையில் தான் எல்லா கவிதைகளும் இருக்கின்றன.பகுத்தறிவு விளக்கத்திற்கும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக குரல் கொடுக்கவும் பெண்ணும் பெண் காதலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது எட்டிப் பழமோ பறைச்சி இதழ்”
மாமியார் செய்ததைப் போல் மருமகள் செய்வாள் என்றிப் பூமியில் பெண்கள் சொல்லும் கொள்கையில் புரட்சி காண்போம்
தாய் எனும் கவிதையில் தாயினை இகழ்வார் மாற்றாந் தாய் வர உணருவாரே
இரண்டு இடங்களிலும் பெண்களுக்கு எதிராய்பெண்களையே கிளப்பி விடும் போக்கு இருக்கின்றது. பெண்ணே பெண்னுக்கு எதிரி மாமியார் செய்ததையே மருமகள் செய்ய ஒப்ப மாட்டாள். அப்படி ஒப்பினாள் என்பதையே பெண்களே சொல்லக் கூடிய புரட்சி வரக் காண்போம் என்கிறார். தாயின் பெருமை தகப்பன் இன்னொரு திருமணத்தில் தன் வாழ்க்கை தொடங்க உணருவாரே என்று சொல்லியிருக்கலாமே அப்துல் ரக்மான்
பெண் எனும் கவிதையில் அப்துல் ரக்மானின் பார்வையைப்பாருங்கள். பெண்ணை வெறுக்காமல் இருக்கவே விலகிச் செல்கின்றேன் பெண் தூரத்தில் தான் அழகாயிருக்கிறாள்
ஏன் அழகாக இருப்பதை மட்டுமே பார்க்க விரும்புகிறீர்கள். அன்பை எதிர் நோக்கியிருந்தால் அவளில்லாதபொழுதினும் உணரலாம்
அவள் தாயாகிப் பரிபாலிக்கிறாள் தாரமாகி நிக்கிரகம் செய்கிறாள்
அவளாக இருக்க விட்டுப் பாருங்கள் அன்பாக இருப்பாள், அறிவாக , ஆண்மையாக மிளிருவாள்
நம்மை வசீகரித்து நம் சிறகுகளை எரிக்கும் விளக்கு அவள்
நீங்கள் பூச்சிகளாக இருந்தாள் உங்கள் சிறகுகள் எரிக்கப் படும். பார்வையாக மாறிப் பாருங்கள் காட்சியாகுவாள்
நம்மை இரையாகப் பிடித்துண்ன இருட்டு மூலைகலில் அவள் வலை பின்னுகின்றாள்
இருட்டிலும் , மூலையிலும் வைத்திருந்தால் வலையும் பின்னுவாள் இரையாக்கவும் செய்வாள்
நம்மை விழுங்குவதும் உமிழ்வதுமாக அவள் சலைக்காமல் விளையாடுகிறாள்
அவளை தின்று விட மாட்டீர் என நம்பிக்கை இருந்தால், விளையாட்டை விட்டு விடுவாள்.
முடியரசன் ஊரார் எனும் கவிதையில் கலப்பு மணம் செய்வதால் வருகின்ற தொல்லை பற்றி பேசும் போது பெண் உடல் நோயால் நலிவுற ஊர் புறணி பேசுகின்றது.எப்பவும் ஊர் ஏன் புறணியில் சுட்டு விரல் நீட்டுவது பெண் பக்கமாக இருக்கின்றது. ஊர்ப் பெண்கள் போய் மாமியிடமும், மருமகளிடமும் புறணி பேசுவதாய் அமைவது ஆண்டாண்டு காலமாய் உள்ள கிரமத்து ஆணாதிக்க சிந்தனை மரபில் வந்த பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்பதை சொல்லிப் போகின்றது. நாட்டு விடுதலைக்காக போராடிய போதும், சாதிய விடுதலை, அறியாமை விடுதலை இப்படி எத்தனை விடுதலை பற்றி பேசிய போதும் பொராடிப் பெற்ற போதும் அதோடு சேர்த்து பெண் விடுதலையும் பேசி விட முடியாத ஒன்றாகவே இருக்கின்றது
திராவிடக் கவிஞரில் கருணாநிதி எழுதிய தனிப்பாடல்களை வாசிக்க எண்ணி திராவிடக் கட்சிக் காரரை அணுக அவரோ , கலைஞரை விமரிசனம் செய்ய வேண்டாம் என்று புத்தகங்கள் தர மறுத்தார்.சங்கத் தமிழும், தாய் கவிதையும் உள்ளடக்கம் அவரது இல்லை என்பதால் பெண்ணிய வாசிப்புக்குள் அதை கொண்டு வர விருப்பமில்லை மற்ற கவிஞர்களின் புத்தகம் இந்த கட்டுரையாக்கத்திற்கு வாசிக்க தந்த அவருக்கு எனது நன்றிகள்
இன்றைய கனிமொழி திராவிடக் கவிஞர்கள் வரிசையில் உண்டா என்றால், திராவிட அரசியலில் இதுவரை பங்கில் இல்லாத கனிமொழி இன்று வந்து விட்ட பிறகு அவர்களது பெண்னியம் என்னவாக இருக்கின்றது. தேர்தலுக்கு முந்தைய எத்திராஜ் கல்லூரியில் இதே நிறுவனத்தார் நடத்திய கருத்தரங்கில் கண்ணகி எங்களது பண்பாட்டுச் சின்னம் அல்ல என்று வாதிட்டார். தேர்தலுக்கு பின் மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசியதாக தினமனி வெளியிட்ட செய்தியில் கண்ணகி பெண்களுக்காக போராடவில்லை. ஆனால் போராளி என்றார்.
கட்டுடைப்பு பெண்ணியம் என்று பேசியவர்கள் எதிர்த்தவர்களை கலாசார காவலர்கள் என்று குற்றம் சாட்டியவர்கள் இன்று கலாசாரம் காப்போம் என்கின்றார்கள். ஆகவே பாரதியின் உணர்வு தாங்கியிருந்த பாரதி தாசன் , (அவரிடமும் மாறுபட்ட கருத்து இருந்திருந்த போதும்), தவிர திராவிட கவிஞர்களிடம், திராவிட அரசியல் இருக்கின்றது பெண்ணியம் எங்கே எனும் கேள்வி எஞ்சி நிற்கின்றது தேர்தல் நேரத்தில் சிவகாசியில் துணிவோடு செயல் பட்ட பூஜா குல்கர்னியை நமக்குத் தெரிந்திருக்காது. ஆனால் சிவகாசி ஜெயலட்சுமியை எல்லாருக்கும் தெரியும். மறக்க மறந்து விடுவோம்
இன்றைக்கு 1937 களில் இருந்த ப்ரெஞ்சு தேசத்தை சேர்ந்த ஹெலன் சீக்சூவை புதிய பெண்ணிய கோட்பாளராகவும் , அவரது கோட்பாடுகளை இன்றைய பெண்கவிஞர்கள் தத்து எடுத்து அதை படி எடுத்து கொண்டிருப்பதிலும் பெண்ணியம் எங்கே இருக்கின்றது எனும் கேள்வி எழும்புகின்றது பாரதியின் விசாலாட்சியிலிருந்து, தர்மரின் பேச்சி வரை நம்மிடையே வாழுகின்ற மக்களிடமிருந்து பெண்ணியம் பிறந்து அது இலக்கிய உதாரணங்களாய் மாற வேண்டும் . அதற்கான தளங்களை நிகழ் வாசிப்புகள் நிகழ்த்தட்டும் |
posted by mathibama.blogspot.com @ 3/19/2007 11:51:00 am   |
|
|
Wednesday, March 14, 2007 |
மறைவாள் வீச்சு |

மறை வாள் வீச்சு (கூட்டாஞ்சோறு சிற்றிதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை) திலகபாமா
அந்தக் கடற்கரையில் அந்தலும் சிந்தலுமாக உதிர்ந்து கிடக்கின்ற கட்டடங்களும் , துருவேறி எந்த ஆட்சியிலோ வைத்து விட்டுப் போன நினைவுத் தூண்களுமாக. கால்கள் மண்ணில் புதைய மனம் வேறெதிலோ புதைந்து வெளியேற முடியாததை உணர்ந்தவளாக கடலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன் மெல்ல மெல்ல அலைகள் வந்து கால் நனைத்துப் போக நானும் உள்ளிறங்கினேன். இப்பொழுது இடைவரை கடல் போர்த்திக் கிடக்க அவ்வப் போது அலை வந்து உதைத்துப் போக சுகமாக உணர்ந்த படி இருந்தேன். அடி வாங்குவதை சுகமாக உணர்ந்து கொண்டிருக்கிற எத்தனையாவது பிறவி இது. என்று கேள்வி எழ நினைத்திடாத வேளையில் விஸ்வரூபம் எடுத்து வந்த அலை யோசிக்கவே முடியாத படிக்கு சுருட்டிக் கொண்டது எனை. இதோ எங்கேயிருக்கிறேன் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் எங்கே போய்ச் சேருவேன் அறியாத உலகத்தில் நான். எனைச் சூழ நீர் இருக்க மெல்ல மெல்ல நினைவு தப்பிக் கொண்டிருந்தது.
* மாநாய்கன் மகள், கோவலனின் மனைவி என்று தோற்றமே அறிவுறுத்திக் கொண்டிருக்க உடலெல்லாம் நகைகள் சிரிக்க அதற்குள் சிரிக்காதவளாக அவள் அமர்ந்திருந்தாள். உள்ளே வந்தவன் படோபடோபம் அவளை மிரட்டியது . சுற்றியிருந்தவர்கள் நாலடி தள்ளிப் போகக் கூடிய தோற்ற மிரட்டு. ஊஞ்சலை ட்டக் கூட தெம்பில்லாதவளாக அசையா ஊஞ்சலில் நிலையில்லா மனதுடன் அமர்ந்திருந்தாள் அவள். “கண்ணகி, கண்ணகி” தோரணை அழைப்பு திடுக்கிட வைக்க ஊஞ்சல் அரண்டு எழுந்து பதறியது. அவளோடு. “போகணும்” என்று வேகமாக சொல்லியவனைத் தொடர்ந்து எழுந்தவள் சடாரென மீண்டும் அமர்ந்தாள் ஊஞ்சலில் “போய் வாருங்களேன்” உதடு சிரித்தது. வாய் சொன்னது . உள்ளம் கனன்றது., மறைத்தது முகம் உணவருந்தவென்று தயாரிப்போடு வந்தமர்ந்தவனுக்கு அவள் வார்த்தைகள் முகத்தில் நீரை எறிந்ததாய் பட சந்தேகத்தோடவே நிமிர்ந்து பார்த்தான் ஊஞ்சலில் டும் சப்தத்தில் இதற்கு முன்பிருந்த நாட்களை அவள் மனம் எண்ணிப் பார்த்தது.. வணிகத்தை பார்த்துக் கொண்டிருந்த வேலைப் பொழுதிலும் சாப்பிடவென்று அவன் தேடி வந்த காலங்களுக்கு தான் மகிழ்ந்து போனதை நினைத்து இன்று வெட்கப் பட்டாள். சாப்பிடுவதற்கு என்று இல்லாத பொழுதினிலும், சாப்பிடவென்று காரணமிட்டு வந்த காலங்கள் பொய்யா? சாப்பிட வந்தே தீர வேண்டும் எனும் நிலை வந்த போதும், வருவது கூட போவதற்காகத்தான் என ஏற்படுத்திக் கொள்ளும் நிலைதான் நிஜமா? நினைப்புகள் ஏற்கனவே உண்ணாமல் இருந்ததும் சேர்ந்து கிறுகிறுப்பைத் தர ஊஞ்சலை விட்டு எழுந்து போனாள். பார்த்துக் கொண்டிருந்த கோவலனுக்கு கோபம் வந்திருக்க “ சாப்பாடு கட்டும்” என்றான் “போகவேண்டும் என்றீர்களே அதனால் சாப்பிட நேரமில்லையோ” என்று அவள் சொல்ல அவளை பாம்பென்று மிதிப்பதா? பழுதென்று தாண்டுவதா புரியாமல் தவித்தான்
கோபத்தை காட்டி விட்டால் பாம்பென்று மிதித்து விடுவான். பழுதென்று உணரும் படி தந்து விட்டால் அதையும் தாண்டி விட்டுப் போவான் என்று கொதிப்பு வர அப்போ இதுவரை தின்னப் பட்டு விட்டோமோ நினைப்பு வர, பரஸ்பரம் என்றில்லாமல் கோவலன் அவளைத் தின்கின்றவனாய் உணர்த்திய இடம் எது? யோசனையோடு வேறு வழியன்றி உணவைப் பரிமாற தன் தோல்வியை மறைத்துக் கொள்ளப் பிரயத்தனப்பட்ட கோவலன் உண்ணுவதில் கவனமானான். கொஞ்ச நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனான்.
* அவனைத் தன் மடியிட்டு தாலாட்டிய நாட்களை நினைத்துப் பார்க்கிறாள் இதே ஊஞ்சலில் எத்தனை நாள் சை வசனம் பேசி தரவு வேண்டுமென்று மடிமீது கிடந்திருப்பான் என்றாவது அவளிடமிருந்து பெற்ற தரவுக் கரங்களை தான் தின்ற நேரம் போக தந்து விட வேண்டுமென்று யோசித்திருப்பானா?
தந்து விட யோசிப்பது இருக்கட்டும் முதலில் அவனுக்கென அவன் தேடிக்கொள்ளும் உறவுகள் அவளுக்கு எதிரானதாய் மாறிப் போவதையாவது அறிந்திருப்பானா? இப்பொழுது கிளம்பிப் போகிறவன் இனி எந்நேரம் வருவானோ? சமீப காலமாக அவனுக்கு ஏற்பட்டிருக்கும் தொடர்புகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள். அவன் மூடி வைக்க நினைத்தாலும் நாலு பக்க சுவர் தாண்டி வாசம் வீசிக் காட்டிக் கொடுத்துவிடும் தொடர்புகள் இவை என்று அறியாமலா இருப்பான். மாதவி எறிந்த மாலை அவன் கழுத்தில் வீழ்ந்ததுதான் ஊரறிந்த ரகசியமாச்சே. னால் அதில் தான் எவ்வளவு பெருமை கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவன் கழுத்தில் விழுந்து விடப் பெருமை சந்தோச உருவெடுத்து அவனுக்கு டிய கணங்களையும் பயத்தோடுதான் பார்த்துக் கொண்டிருந்தாள். இவளது காதுகளுக்கும் எல்லாம் வந்து சேர்ந்ததை அவனும் உணர்த்திருந்தான். அவளும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை .அவனும் ஒன்றும் அறியாதது போல உண்மை பேச வேண்டி வரும் சந்தர்ப்பங்களைத் தூர வைத்துக் கொண்டான் நெருங்க விடாத படிக்கு. தெரிந்ததாய் காட்டிக் கொண்டுவிட்டலோ எங்கே பயந்து பயந்து சேற்றில் வைத்த கால்களை துணிந்து வைக்கத் துவங்கி விடுவானோ பயம் வந்த போது கேள்வியும் வந்தது . எதனால் இந்த நிலை வந்தது பெண்ணுக்கு ? இருபக்கம் இடி வாங்கும். நிலை காத்திருப்பை விட சகித்திருக்க வேண்டிய நிர்பந்தம் நேர்ந்திருப்பது உள்ளுக்குள் குடைச்சலைத் தந்திருந்தது. தன்னந்தனியே ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் நாலாபுறமும் ஊஞ்சலை தாங்கியிருந்த கம்பிகள் இவள் அமர்ந்திருந்த அழுத்தலில் கிரீச்சிட்டன. அவளது மனம் போல ஓலமிட்டு குமுறுவதாய் தோன்ற ஊஞ்சல் பலகையை விட்டு எழுந்தாள் மையக் கூடத்தில் இருந்த தூணோரம் வந்தமர்ந்தாள். அவள் அழுத்தம் விடுபட அதற்கும் புலம்பிய ஊஞ்சல் கூடுதலாய் டியது ஊஞ்சலில் மேல் சலனம் நின்று போக மேலும் கீழுமாய் டியது . பலகையின் கனத்தை பாரத்தைச் சுமந்திருந்த போதும் பலகை போகும் பக்கமெல்லாம் டிய போதும் பலகையோ வேறு யாரையோ தானே தாங்கி தாலாட்டப் பண்ணுகிறது ஊஞ்சலை தாங்கியிருந்த சங்கலிகள் புலம்பி தேய்வது தான் அதற்கான வாழ்க்கையா? அது உறங்கவே முடியாதா தாலாட்டு சுகத்தில். ஊஞ்சலின் சங்கலிகளுக்காக கவலைப் பட்ட மனது மெல்ல அவளுக்கானதாய் மாறத் துவங்கியிருந்தது. கவலை அலையாய் அரிக்க ழ்கடலாய் மாறிவிட யோசித்தாள் . மாறியிருந்தால் அலைகள் எழும்பிவிட வாய்ப்பில்லை . இல்லை அங்கேயும் காற்றின் ஓசை ஓயாது மோதி சலனப் படுத்தும் மீன்களின் சுவாசப் பேரிரைச்சல் தூங்க விடாது . எண்ணங்கள் கடலுக்குள் மூழ்கிப் போக அசைந்த கால்களின் சிலம்பின் ஓசை அவளுக்கு இதமாய் இருந்தது. தரையோடு சிலம்பு உரச கால்களில் அழுத்தமும் வலியும்
மீண்டும் பழைய விசயங்களோடு தைத்துக் கொண்டது. மனது தரையும் சிலம்பும் உரசிக் கொள்ள வலி மட்டுமெனக்கா? என் கோபங்கள் அவனை அழுத்துவதில்லை . ஏன் மாதவியாவது அவனது காதலில் மகிழ்ந்திருப்பாளா இல்லை அவளுக்கும் இதே பேரலைகள் அரிக்குமா? தான் மகிழ்வென்று நினைத்ததில் தானும் மகிழவில்லை.. எதிர்த்து தன்னோடு இருந்த யாரையும் சந்தோசப் படுத்தவும் முடியவில்லை என்று உணர்வானா கோவலன். அவனளவிற்காகவாவது கூடி வந்த காதலில் மகிழ்ந்திருப்பானா? மாட்டான். என்றே தோன்றியது . அவன் தன்னை விட்டுப் போகும் போதும் நான் அவனை விட்டு போய் விடக் கூடாதெனும் நினைப்பிலிருந்தான். வெளியில் மழை பெய்யத் துவங்கியது . சின்னஞ் சிறு துளிகள் மெல்லப் பிரபஞ்சம் நிறைத்தது. திரையாய் வீழ்ந்து மண்ணில் முதலில் காணாது போய் மெல்ல மெல்ல மண்ணை நிரப்பி நீராய் பெருக்கெடுத்து ஓட இதோ துளி துளிகளாய் இருந்த கோபங்களை இப்போதைக்கு காய்ந்து கிடந்த மண்ணாய் கோவலன் மீதிருந்த என் காதல்கள் இன்னமும் உறிஞ்சித் தீர்க்கின்றன. உறிஞ்சித் தீர்ப்பது என் காதல்களாய் இருக்க, நீ என்னை விலக்க முடியா இடம் நான் நிகழ்த்திப் போயிருக்கின்றேன். என்று பெருமை பேசிப் போகின்றான் னால் ஒரு நாள் மண்ணை நிரப்பி விழுங்கிப் போகும் நீர் என்று நினையாது வேரோடு பூவோடு உறவாடித் திளைக்கும் மண் நான் வந்து வீழ எனை மறைத்தே வைக்கிறது எனையும் , என் காதலையும், என் கோபங்களையும் பெய்கின்ற மழையில் வெளியில் குறுக்கும் நெடுக்குமாய் பறந்தும் ஓடுகிற நீர் இடையில் இருந்த பள்ளத்தில் பெருக அதில் மூழ்கியும் போன மாதம் வரை மகிழ்ந்திருந்த சின்னஞ் சிறு குருவி இன்று திக்கு முக்காடிப் போய் விதானக் கட்டையில் சிலையாகி அமர்ந்திருக்கிறது ஒரு பதட்டம் அதன் கண்களில் அசைவுகளில் , சுவாசத்தில், உற்றுப் பார்த்தேன். விதான மூலையில் யார் கண்ணுக்கும் சிக்காது கூடு ஒன்றை கட்டி ஒளித்து வைத்திருக்க தூறல்களில் நனைந்து விடுமோ என கூடுகளைக் காப்பாற்ற எண்ணி எண்ணித்தானே பறத்தலே மறந்து போகின்றன இந்த குருவிகளுக்கு என் கூட்டின் ஒவ்வொரு குச்சியாய் உருவிப் போகின்றான் கோவலன். என் கோபங்களோ சகிப்பெனும் ஓட்டுக்குள் அடைகாக்கப் பட்டுக் கிடக்கிறன. ஓட்டுக்குள் இருக்கும் வரை தான் தொலைந்து போகும் குச்சிகள் பற்றி கவலை கொள்ளும் வெளி வந்த பின்னாலோ கோவலன் உருகிப் போகும் குச்சிகளுக்காய் கவலை கொள்ளாது வானை நிறைத்து போயிருக்கும் வீடெங்கும் இறைந்து கிடந்தன கேள்விகள். கலைத்துக் கலைத்துப் போட்டு பதிலைத் தேடினாள். பகல் முழுவதும் தேடலிலேயே கழிய இரவுகள் காத்திருப்புகளில் கழியத் துவங்கியது வராமல் போன அந்நாட்களுக்கு பதில் சொல்வதைத் தவிர்க்க நினைத்து அவசர நெருக்கடித் தேவைகளோடவே வீடு வந்தான் . புரிந்தது அவளுக்கு அவளையே அவனுக்காக மட்டும் கவலைப் பட வேண்டியவளாக மாற்றி விட சரியாக மிகச் சிறப்பாக திட்டமிடுதல்களை அது அதுவாகவே தோணாத வண்ணமாகவே நடத்தி விடுகிறான்.. கவச குண்டலங்களாய் பரிதாப முகமும் நெருக்கடி முகமும் தாங்கியவனாகவே வந்து போகிறான். முகத்தோடு ஒட்டி ஒட்டிப் போனதில் பின்னால் முகமூடி என்று அறியாவண்ணம் முகத் தோல்களாகவே மாறிவிட்டதையே கிழித்து விட முடிகிற எனக்கு கவசகுண்டலங்கள் பிரம்மபிரயத்தணமாய் இருக்கவில்லை எத்தனை திசை திருப்பலின் பின்னும் அதீத கவனமாய் கவசங்களை அவள் கிழித்து விட அடுத்த தாக்குதலாய் சொல்லிப் போகின்றான் நொண்டிச் சாக்குகளை. அவை அவன் பயணப் பட முடியாத சாக்குகள் என்று அக்குவேறு ணிவேறாக அவள் கிழித்துப் போட தோல்விகளில் எரிச்சலில் வந்து விடுகிறது . அது கேள்வியா பதிலா? “ எனை பொய் சொல்ல வைப்பது நீதான் நீ விரட்டாமல் இருந்தால் துருவித் துருவிக் கேட்காமல் இருந்தால் பொய் சொல்லியிருக்க மாட்டேன்”. கோபப் படுவாள் அல்லது மன்னிப்புக் கேட்பாள் , என்றும் அவனது இந்த பதிலைக் கேட்டால் வருத்தப் படுவேன் என்றும் அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும். னால் எனக்கோ சிரிப்பு அப்பிக் கொண்டது அவன் செய்தது தவறு என்றும் தவறு என்று அவனே உணர்ந்தே அதற்குள் சிக்கிக் கொண்டு வீறாப்பு பேசுவதையும் வாக்குமூலமாய் தந்து விடச் செய்த கேள்வி இது. ஒவ்வொரு முறையும் மறைத்து வைக்க வேண்டி நீ நினைக்கிற செயல்களை விதைத்து விடுகிறாய். அது முளைத்து உனைக் காட்டிக் கொடுப்பதோடு என்னையும் சூழ்ந்து இறுகக் கட்டி விட முனைகிறது இருக்கட்டும் என்றாவது ஒருநாள் என் காலடிக் கீழும் வராமலா போகப் போகிறாய் மனம் வன்மம் சூடியது. ஊரடங்கும் நேரத்தில் தட்டப் பட்ட கதவு ஒலி தினந்தோறும் கேட்பதாய் மாற., இருளிலும் ஒவ்வொரு திறப்பிலும் உள்வரும் தூரத்து நட்சத்திர ஒலி கீறிய கோடாய் பளபளக்கும் வாளாய் அவள் கண் முன் உருமாறி நிற்க கை பிடித்து தூக்கினாள். ஒளிக் கீற்று என்ன செய்யும் எதிர்த்திருந்த கோவலன் எண்ணியிருக்க யாரும் பார்க்காத இடமிருந்து உணராத படிக்கு அறுக்கத் துவங்கியது முடியணிந்த ரங்கள், வகிடெடுத்த தலையிருந்த சுட்டிகள், காதணிந்த தோடுகள் கழுத்தணிந்த அட்டிகைகள் இடையணிந்த மேகலைகள் கையணிந்த வளைகள் அவளை சகுந்தலையாக்கியிருந்த காதலிருந்த மோதிரங்கள் இறங்கிப் படிதாண்டிப் போக கோவலன் உள்வர விட்ட ஒளிக் கீற்று வைத்தே அறுக்கத் துவங்கினாள் அவள் அறுத்தலில் சரிந்து வீழ காலடிச் சிலம்பு கேட்டு இன்று கோவலன் நிற்கிறான்.
ஏறக்குறைய செத்து விட்டிருந்தான் இல்லை செத்துக் கொண்டிருந்தான் அவன் அவ்வளவு எளிதாக சாவதில் எனக்கு இஷ்டமில்லை. மீட்டுயிர் கொண்டு வந்து உடல் செலுத்தினேன் என் காலடி வீழும் வரைக்கும் . றாத மணம் தேறத குணம் ஓங்கி அடித்து சாகடித்து விடுவது ஒன்றும் கடினமல்ல. பதியை முந்தானையால் முடியத் தெரியாதவள் எனும் பழியை என் மேல் போட்டு பரலோகம் போயிருப்பான் ஊரும் உலகமும் தூற்றும் வரை தூற்றத் துணியும் வரை கீழிறக்க வேண்டும் எனக்கு நடந்த கொடுமைகளுக்கு அது ஒன்றே விலையாக இருக்க முடியும் இனி யாரும் நிகழ்த்தி விடக் கூடாதவற்றின் நினைவைப் பதிந்து போகும் சினமாகவும் இருக்க வேண்டும் சுற்றி வந்த காலச் சக்கரத்தில் மேலும் கீழும் இடம் மாறிப் போக இதோ வீடு துடைத்து வைத்து காலி சந்தனச் சிமிழாய் பணக்கார வாசம் மட்டும் காணத் தந்தது பொருள் போன பின்புதான் சிலருக்கு வாழ்வின் பொருளே புரிய ரம்பிக்கிறது உத்தரத்தில் டிய ஊஞ்சல் அதே கிறீச்சிடலுடன் டிப் போகின்றது .பிறந்த இடம் வளர்ந்த இடம் எல்லாம் துறந்து பிழைக்க ஒரு இடம் தேடி பயணிக்க புறப்படுகிறான் கோவலன். ஒளிக்கீற்றாய் கையில் எடுத்த வாளை தனக்குள் ஒளித்து வைக்கிறாள். இன்பம் கடந்து இயலாமை கடந்து துன்பம் கடந்து கோபம் கடந்து வந்தவள் நீர் கடந்து நிலம் கடந்து மதுரை வந்து சேர்கிறாள் கோவலனோடு. இதோ இதோ அவள் எதிர்பார்த்திருந்த தருணம் காலடிச் சிலம்போடு வந்து நிற்கிறது நேரம் நேரத்திற்கு என்று சாப்பிட வந்த போதும் சாப்பிட முடியாது திணறுகிறான். “அவசரமாக போகனுமா?” கேள்விகள் கேட்டு விடுவாளோ எப்பவும் போல எனும் பயம் பற்றிக் கொள்ள , எப்பவும் போலவே அவசரங்களோடு முடித்து வெளித் திண்ணையிலமர்ந்து விடுகிறான்.. மீனாட்சி அருள் வழங்கிக் கொண்டிருந்த கடைத் தெருவில் பரதேசியாக சுற்றி வந்த போதும் ளப் பிறந்தவனாய் பூம்புகார் கடைத்தெருவில் வாழ்ந்த நாட்கள் நினைவில் வந்து போயின தாசி குல மாதர் தவறுதலாய் கண்ணில் பட்ட போதும் கண்டு விட முடியாதவனாகவே இன்று இருக்கின்றான் . கண்ணகி கதைவை மூடுவதே இல்லை. காத்திருப்பதும் இல்லை . காத்திருப்புகள் காத்திருந்தன . தானே திறந்து வீட்டுக்குள் வந்து முடங்கிப் போனான். அவளேதான் விரும்பிப் பேச்சைத் துவங்கினாள் இதுவரை ஒன்று தெரியாதவளாக அடையாளப் படுத்தப் பட்ட கண்ணகிதான் கேட்கிறாள் “ஏதாவது வியாபாரம் தொடங்கலாமே” என்று . தலைகுனிந்து அமர்ந்திருந்தவன் அறிந்தவளாக எழுந்து நிற்கும் கண்ணகியைப் பார்க்க திராணியற்றவனாக வெளிப் பார்வை பார்த்தான். கோழி ஒன்று கழுகை விரட்ட கூரை தாண்டி பறக்க முயற்சித்து கேவியது. பறக்க முடியாது போன போதும் கழுகை விரட்டி வெற்றி கண்டது அதன் கேவல் விட்டு வந்ததெல்லாம் இன்னும் மறந்து விடவில்லை. எங்கிருந்து தொடங்க முதலிலிருந்து தன்னால் தொடங்க முடியுமா? அதற்கு தனி மனப் பக்குவம் வேண்டுமெனப் பட்டது . ஏற்கனவே கண்ணகியின் வெற்றுப் பார்வையில் கூட கூசிப் போய் வெறும் கட்டை விரல் உயரமாய் மாறிப்போனதாய் உணர்ந்திருந்தான். எதைக் கேட்க முதலீடாய்? கேட்க என்ன இருக்கு இன்னும் காலடிச் சிலம்பு தவிர அவன் கண்கள் காலடி பார்க்கின்றன கழுத்தில் விழுந்த மாலைக்காய் தன் கழுத்திட்ட தாலியை அவனுக்கான காத்திருப்பை உதாசீனம் செய்தவன் , காலடிகளை தன் கண்களால் தழுவுகிறான். அவன் விழி மலர்கள் காலடியில் மேய்வதை பாதங்களை சிலம்பொலிக்க தட்டி உதாசீனம் செய்கின்றாள் புரியாதது போல் நகரத் துவங்குகிறா.ன்
தூரத்து கறவை மாடுகளின் கன்றுகளை அழைக்கும் குரல் அதே போல தோற்றமளிக்கும் னால் அதுவாக இல்லாது கன்றை ஓட்டிப் போக வருபவனைப் பற்றிய எச்சரிக்கைக் குரல் இந்த இரண்டினுக்குமான வித்தியாசம் அதுவோடவே இருப்பவனுக்குத் தான் தெரியும் கோவலன் என்று என்னுடைய உணர்வுகளோடு இருந்திருகின்றான் இன்று புரியத் துவங்க?. வியாபாரம் தொடங்கலாமே என்று கேட்டு விட்ட என் குரலின் சவுக்கடி பூவைச் செருகுகையில் முள்ளால் குத்தி விடும் வண்ணம் சுமந்த அந்தக் குரல் அவன் தெரிந்து கொள்ள, கொஞ்சமாவது எனை அறிந்து கொள்ள பிரயத்தனம் எடுத்திருக்க வேண்டும் அந்த பிரயத்தனங்கள் இல்லாத கோவலன் அவனும் அவன் கவலையுமாகவே இருக்க குனிந்திருந்த கண்ணகியின் சிலம்பு அவள் கால் மாற்றி நிற்க சிரித்து வைத்தது. தொடர்ந்த அவதானிப்பில் சிலம்பு குலுங்க முடியாது எண்ணங்களால் நிறைந்து கனத்துக் கிடந்தது கண்ணகிக்குள் நிகழும் மாற்றங்கள் பணிந்து போவதாய்க் காட்டி எதிர்ப்பின் உச்சகட்டம் வரை அவள் போகும் தருணங்கள் அவற்றை அதுவாகவே கோவலனோ இன்றைய சமூகமோ, நாளை நான் உடைபட்டு மதுரை தீக்கிரையாகிப் போன பின் எழுதப் படப் போகும் காவியத்தின் மூலகர்த்தாவோ உணர்ந்திடுவார்களா ? கேள்விக்கு விடையில்லாது ஊமையாகிப் போனது சிலம்பு
ஊமையாகிப் போன சிலம்பை கையிலெடுத்த படி அவளும் அவளுக்குள்ளாகவே பேசினாள்.
போ போ போய் சிலம்பை கையிலெடுத்து தெருத் தெருவாக நீ கூவ குரல் கேட்பவர்கள் சிலம்பை பார்ப்பவர்கள் எல்லாம் பார்வையில் எகத்தாளம் கொண்டு கடந்து செல்லும் போது நான் ஊரிலிருந்து கிளம்பிய போது தூக்கிப் பத்திரப் படுத்திய ஒளிக்கீற்று வாள் என் சார்பாக எல்லார் கையிலும் இருக்கும்
உணர்வுகள் ரணம் ரணமாய்க் கீறப்பட்டு கத்தியின்றி யுத்தமின்றி என்று வருங்காலத்தில் எதற்காக எழுதுவார்களோ தெரியாது எனை உணருபவர்கள் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் புரியும் வித்தை அறிந்து கொள்வார்கள் சிலம்பை வாங்குபவன் உன் போகா உயிரையும் சேர்த்து வாங்கிப் போவான்
அவள் மனம் நினைத்து முடிக்க சிலம்பு சிரித்தது கண்ணகி உன் உன்னையறியா உணர்வுகள் நிஜமாகிடக் காணப் போகிறாய் அப்போது எப்படி புலம்பப் போகிறாயோ? நசுக்கப் பட்டதின் வன்மம் பிரவாகமெடுக்க யார் யார் அடித்துச் செல்லப் படப் போகிறார்களோ ஏடெடுத்து எதிர்த்துப் போன வையை உன்னால், யாரும் பார்க்க முடியாது நீராவியாகப் போகிறாளோ? எப்போதடி குளிர்வாய்? உனை குளிர வைக்க ஒருவனுக்கும் அக்கறையில்லை. குளிர வைக்க நினைக்கும் போதும் அவனவன் தாகம் தீர்த்தலே நடந்து கொண்டிருக்க , அந்த அக்கறையின்மைக்கு மதுரையே சாம்பராகப் போகின்றதே சிலம்பு புலம்ப கண்ணகி சிரிக்கிறாள் அந்த சிரிப்பு எரிக்கிறது கோவலனை. யாருக்கும் கேட்டு விட முடியா சிலம்பின் மெல்லிய சிலும்பல் ஓசை கோவலன் மடிக்குள்ளிருந்து அவன் நடந்து வந்த மதுரை ரத வீதியெங்கும் நகர்ந்து போக மீனாட்சி கையேந்திய கிளி சிறகு படபடக்க தன் காதுகளை பொத்தி கொள்ள விழைகிறது. யார் காதும் அறியா சிலம்பின் ஓசை கிளிக்கும் கிளியேந்திய மீனாட்சிக்கும் நாராசமாய் ஒலிக்க கோபத்தில் கிரீடம் நடு நடுங்க பீடம் விட்டிறங்க பார்க்கிறாள் மீனாட்சி.கண்ணகியின் கோபப் பெருமூச்சின் ஒலி சிலம்பின் ஒலியை மறைத்து நிறைய, இடப்பாகம் தந்ததாய் சொன்னவன் அரங்கத்தில் பிரியாவிடை கூட அமர தனியே அமர நேர்ந்துவிட்டதிற்கு தன்னுள்ளிருந்து தனக்கு எழாத கோபம் மறைவாள்வீச்சாய் கண்ணகியுள்ளிருந்து வெளிப்படக் கண்டு தன்னிலை பற்றி மறுபரிசீலனையில் மீனாட்சி. கோவலனை தண்டித்துவிட வீழ்த்திப் பார்க்க மீனாட்சிக்குள்ளும் சை எழுகிறது னால் அதற்கு முன்னமே கண்ணகிக்குள் இருந்த வன்மம் வன்மத்தின் நெருப்பின் தகிப்பு தெரிய தான் ஒதுங்கிக் கொள்ளத்தான் வேண்டுமென உணர்ந்து கொண்டாள் நிகழப் போவதை நிகழ்த்தப் போகிறவளாய் கண்ணகி இருந்து விடுவது மட்டுமே இந்த வன்மம் வழிந்தோடுவதற்கான வழி என்றுணர மீண்டும் பீடமேறி கிளியேந்தினாள் அமைதியாக, கிளி நெருப்பு வெந்து விடாத இறகுகளுக்காக என்ன செய்வதென்று தவமிருக்க சிலம்பு விற்க வந்தவன் எதுவும் அவன் சொந்தமில்லாது போக உயிரற்ற உடலாய் கீழே கிடந்தான் கழுத்தறுத்த கத்தியிலிருந்து இரத்த திவலைகள் மாணிக்கங்களாய் சிதறித் தெறித்தன. அவன் தூக்கி வந்த சிலம்பு இன்று பாண்டியன் அரண்மனைச் சிறையிருந்தது. நாளை நாங்கள் இதே இரத்த துளிகளாய் சிதறிப் போவோம் என்றறியாது.
* இதோ செய்தி காலை விடியலாய் வந்து காதுகளில் நெருப்பள்ளி ஊற்றி எரியவிட்டுப் போகின்றது “அய்யோ அய்யோ” அரற்றுகிறாள் இப்படி அநியாயமாய் பழியிட்டு கொன்று விட்டர்களே வெறும் திருட்டுப் பட்டம் சுமத்திக் கொன்று அதுவும் தவறுதலாக சுமத்திக் கொன்றதாலேயே நாளை அவன் தியாகியாகி இரக்கத்துக்கு உரியவனாகிப் போவானே. இரக்கத்துக்கு உரியவனா கோவலன் என் உணர்வுகளை தினம் தினம் அறுத்தறுத்து சாகவும் விடாது வாழவும் விடாது செய்தவனை இப்படி ஒரே வெட்டில் என் பாடுகளை நான் முழுவதும் உணர்த்தி விட்டேன் என்று திருப்தி கொள்ளாத நிலையில் என் பழிதீர்த்தலை தியிலேயே பாழ் செய்த பாண்டியனே... .... அதற்கு மேல் மூச்சுச் வாங்கியது. சிந்தனைகள் கோர்வையாக இல்லை . எடுத்தாள் இன்னுமொரு சிலம்பு நெருப்பாய் எரிந்ததை கையிலேந்தியபடி அவைக்கு நினைத்ததை எல்லாம் கொட்டி விடத் தேவையில்லாத நிலை இன்று என் பழி தீர்த்தலை முடமாக்கி விட்ட பாண்டியன் அவையில் என்ன சொல்லி நீதி கேட்க அய்யோடா என் பழி தீர்த்தலை தீர்த்து விட்டாயே என்றா? கால்கள் நடக்க நெஞ்சு தீப்பிடித்தெரிந்தது சிலம்பைச் சிதறடித்து அவனை கள்வனல்ல என்று நிரூபிக்க சாத்தியமாக காதலை திருடியவனாக எதை உடைத்து நிரூபிக்க சிந்தனையில் அதை நிகழ்த்த விடாது கொன்று விட்ட பாண்டியன் மேல் கோபம் பற்றியெழ. இதுவரை கோவலன் அவன் பார்க்காது நிராகரித்திருந்த காதலை தனக்குள் பொத்தி வைத்திருந்த காதலை, காதல் சுகமானதாக மட்டுமே சொல்லிப் போன நிறுவிப் போன கவிஞர்கள் காதலர்கள் மக்கள் என மண்ணில் எல்லாரும் பார்க்க அவள் அவளுள்ளிருந்து எடுத்து எறிய மதுரை பிரவாகமாய் எரியத் துவங்கியது அனல் வாதம் புனல் வாதம் பார்த்த மதுரையோ காதலின் புது இருப்பையும் அதன் நெருப்பையும் முதன் முதலாய் உணரத் துவங்கியிருந்த போது கருகத் துவங்கியது உணர்ந்தவர்கள் எல்லாரும் சாம்பலாக சாம்பல் தான் சாட்சியாக நின்று போக திரும்பி பார்க்க விரும்பாது நீர் தேடி நடந்தாள் குளிர் அவளுக்கு தேவையாயிருக்க , தன்னிலிருந்த நெருப்பை அறிந்தவள் நடந்த வழியெல்லாம் இப்போது றொன்று ஓடியது நிராகரிக்கப் பட்ட காதல்களுக்காக பூக்களை புதுத் தனல் ஏந்த பழக்கி விடத் தீர்மானித்து ஒவ்வொரு விடியலிலும் கனலேந்தி கிழக்கிலிருந்து மேற்கு வரை காலை துவக்கிய பயணத்தை விடாது நிகழ்த்தி ஒவ்வொரு வெக்கையின் போது உணர்த்தப் புறப்பட்டாள்
இதோ இன்னுமொரு விடியல் கண்ணகி சூரிய அக்கினி சட்டியேந்தி நடந்து வரத் துவங்கி விட்டாள் வெட்டுப் பட்ட கோவலன்களின் இரத்தத் துளிகளை நெய்யாக்கி பழி தீர்க்க விடாது செய்த பாண்டிய கரங்களை விறகாக்கி யாரேனும் கோவலன்கள் இருப்பின் விழிக்கையிலேயே , சூரிய வணக்கத்திலேயே அதன் வெளிச்சத்தில் முதலில் உங்கள் வீடுகளின் மூலைகளிலும் தீப்பெட்டிகளுக்குள்ளும் பார்ப்பாரற்று ஒதுங்கிக் கிடக்கும் காதல்களை சீராட்டத் துவங்குங்கள் பாண்டியன்கள் இருப்பின் மனைவிக்கு கால் சிலம்பு வாங்கித் தந்து அலங்காரப் பதுமையாய் உட்கார வைத்து பெருமிதத்தில் மூழ்கடித்து விட நினைக்கையில் அந்த மூழ்கடிக்கும் நதிகளை வியாக்கும் நெருப்பாய் கண்களில் கை ஏந்திய சூரிய நெருப்புத் துளி மாறுமென உணருங்கள் மாதவிகளும் மணிமேகலைகளும் இல்லாத மண்ணாய் அந்த நெருப்பு இந்த பூமியை சுட்டெடுக்கும்.
எதிலும் கரைந்து போகாத பானைகளால் மாறாத தாகங்கள் தீருமினி
* தீராத தாகமோடு தான் நான் எங்கேயோ பயணித்து கொண்டிருக்கின்றேன். நான் நகர்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.ஆனால் எங்கு எப்படி என்பது தான் புரியாததாய் . கண்ணுக்கு முன்னால் பிரளயங்களாய் இருள் நகர்ந்து கொண்டிருக்க, ஏதோ ஒன்று இறுகக் கட்டிக் கொண்டிருந்தது மூச்சுத் திணறலோடு வந்து விழுகின்றேன் என் மேல் ஈரம் படர்ந்து கிடக்க, நான் வீழ்ந்த இடத்தின் மணல் ஒட்டிக் கொள்கின்றது.விரித்த தலையும் ஏந்திய சிலம்புமாய் இருந்த சிலையை பேரலைக்கு முன்னரே கால வெள்ளம் அடித்து போயிருந்தது. கால வெள்ளம் தூக்கிச் சென்றதா? அதுவும் கண்ணகியே தன்னை , தன் கோபத்தை அதுவாக உணராதவர்களிடமிருந்து துண்டித்துக் கொண்டாளா? கேள்விக்கு பதில் கிடைக்க , மீண்டும் நான் விழுங்கப் படத்தான் வேண்டுமா?எழுந்து ஒட்டிய மணல்கள் வீசிய காற்றில் உதிர நடக்கின்றேன். சிலைக்குள் இருந்த வேட்கை எனக்குள் எரியத் துவங்கியது துளி இரத்தம் சிந்தாது எரியும் வெக்கையில் ஆவியாக்கி போகும் காளியாய் அழிக்கப் படலாம் அரக்கர்கள். முடிந்தால் காணாமல் போகுபவர்கள் பற்றிய கணக் கெடுப்பு நிகழ்த்திப் பாருங்கள்.கால்கள் நடக்க உடல் வீடு வந்து சேர்ந்திருந்தது. மல்லிகை பூவுடன் வீடு வந்திருந்த கணவர், பாண்டியனாய் தெரிய சிரித்தபடி பூவோடு சில உணர்வுகளையும் இன்றிலிருந்து புகுத்திவிட திட்டமிடுகின்றேன் Labels: சிறுகதை |
posted by mathibama.blogspot.com @ 3/14/2007 12:15:00 pm   |
|
|
Sunday, March 11, 2007 |
பெண் எழுத்து |

திருச்சியில் பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் நடந்த சாகித்ய அகாதமி நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப் பட்ட கட்டுரை
பெண் எழுத்து திலகபாமா
பெண் தன் எழுத்தை எந்தப் புள்ளியிலிருந்து துவங்குகின்றாள். விடிவெள்ளியிலிருந்து அது கிளம்புவதில்லை. இருளில் வெளிச்சப் பொறியைத் தூவி விதைக்கும் உரசல்களாக முளைக்கின்றன. சில உரசியே உடைந்து போகின்றன சில உரசல்களில் பற்றிக் கொள்கின்றன.பற்றிக் கொண்டவை தொடர்ந்து உயிர்த்திருக்க போராடிப் பார்க்கின்றன. அதன் பற்றிக் கொள்ளும் வேகமும் பயணப்படு திசையும் தலைமுறை தலைமுறைக்கும் போராட்டத்தை விட்டுச் செல்வதாகவே இருக்கின்றன ஏன் பற்றிக் கொண்ட பொறி நிரந்தர சூரியனாய் ஒளிர முடியாது போகின்றது .ஒன்று நூற்றாண்டு நூற்றாண்டுகளாக ஊற வைக்கப் பட்ட மனித வாழ்வில் பெண் வாழ்வில் எது எரிதல் எது வெளிச்சம் என உணர்ந்து கொள்ள முடியா அளவுக்கு சிதைவுகள் உணர்வுகளில் இரண்டு உடலைக் காரணமிட்டு பத்திரப் படுத்தப் பட்ட பெண் வாழ்வு எப்பவும் கவனங்கள் உடலோடவே நின்று போக உணர்வுச் சிதைவுகள் மறக்கடிக்கப் படுகின்றன. உண்மையில் உணர்வுச் சிதைவுகள்தான் உள்ளிருந்தே அரித்து பார்க்கப் படுகின்ற உடல் சிதைவுகளை காட்டிலும் வன் கொடுமைகளாக , சமூக பிரச்சனையாகவும் வெளியில் வேறொரு ரூபம் காட்டித் திரிவதாய் மாறிப் போகின்றன
விடுதலையாக உணர்த்தப் படுவதும் வாழ்வு வாசிக்கப் படுவதும் எப்பவும் ஆணாலேயும் ஆண் வழிச் சிந்தனையாலும், ஆணை நிராகரிப்பதாக சொல்லப் படும் போதும் அவனை மையப் படுத்தி விலகிச் செல்வதுமாய் இருக்க உணர்ந்து விட முடியா உண்மை உணர்வுகள் கரிகளாகவே உணர்த்தப் பட்டு பூமியின் அடித்தட்டுகளில் ஒளிராத வைரங்களாக புதைந்து கிடக்கின்றன
வாழ்வு மாறுகின்றது கல்வி கை வந்தது அன்றாடப் பணி அடுக்களை தாண்டி அலுவலகமாகின்றது. இதுவரை அம்மாவிடமிருந்து பழகிய வாழ்க்கை அப்படியே படி எடுக்க முடியாச் சூழலில் பெண் புதிதாய் தன்னைச் சந்திக்கிறாள், இதுவரை சமூகம் அறிமுகப் படுத்தியிராத அவளாக.
இதுவரை போயிருந்த பாதையென்றால் நடந்து நடந்து தேய்ந்த அடிச்சுவட்டில் தொடர்ந்திருப்பாள். புதிதாய் முள் வெட்டி காடுதிருத்தி பாதை தேடி புதிய கற்பனை இலக்குகள் புதிய அவளது இயல்புகளை வடிவமைக்க ஒப்பாரியாகவும் தாலாட்டாகவும் மட்டுமிருந்த உணர்விலக்கியம் வேறு பலவற்றையும் தன் கச்சாப் பொருளாக்குகின்றது
ஒருவருக்கிருந்த வாழ்வு மற்றவருக்கில்லை. பெண் வாழ்வும் கௌரவமும் அடுத்தவரிடம் பேசி விட முடியா அழுத்தம் இவற்றிலிருந்து பெண் எழுத்து கிளைக்கின்றது. அவை பெரும் பாலும் பாடு பொருளைத் தேடித் திரிவதில்லை. சிதைபட்ட அவளது உணர்விலிருந்தே வேர் கொள்கின்றது. அவளது எழுத்தில் வார்த்தைகள் வாய்ஜாலாமிடுவதில்லை. அதன் வாய்மைகள் புதிய வார்த்தைகளாகிப் போகின்றன. அழகியலை வடிவமைப்பதில்லை . குழந்தையை நேசிக்கும் மனநிலையிலிருந்து யாருக்குமில்லாத புதிய அழகியல்கள் குழந்தை விளையாட்டாய் கையகப் படுத்துகிறாள். உண்மைகளை உணர்வுகளை நினைவு மனம் உள்வாங்கி தர்க்கித்துக் கொண்டதை விவாதித்ததை , தீர்வுகண்டதை தான் கண்ட தீர்வு அடுத்தவருக்குப் பொய்த்துப் போனதை மௌன மனத்தின் உரத்த ஒப்பாரிகளாய் தாலாட்டாய் பரணியாய் உணர்த்தி விடப் பார்க்கின்றன.அவளது எழுத்து இதற்கு முந்தைய வடிவாக்கங்களை முறைமைகளை கோட்பாடுகளை கையிலெடுப்பதில்லை உண்மையில் அதற்கு நேரமோ அவகாசமோ இருப்பதில்லை. அது புதிய இயல்புகளை கட்டமைக்கப் பார்க்க அது இதுவரை பார்த்திராத ஒன்றாக இருப்பதாலேயே மிரண்டு போகின்ற எழுத்துலகம் அதை நிராகரிப்பதுமாய் இருக்கின்றது. எந்த எதிர் துருவம் சென்றாலும் வெற்றியாய் உணர விடாப் பக்கமிருப்பதால் அவளுள்ளும் இயலாமையும் நம்பிக்கையின்மையும் கூடுதலாகவே இருக்கின்றன. இயலாமையை பேசுகின்ற படைப்புகள் இயற்கையியலுக்குள் தன்னை தள்ளி தானே அடுத்த அடி எடுக்க விடாது செய்து விடுகின்றனஅதைத் தாண்டி தட்டி காலடி எடுத்து வைப்பவர்கள் மிக அரிதே அப்படி அரிதாய் வந்தவர்கள் இளமை வேகத்தில் வேகமாய் வந்து வேகமாய் வாழ்வின் ஓட்டத்தில் ஆணின் வாழ்க்கை நிறம் தாங்கி தாண்டிப் போய் விடுகின்றார்கள் அடையாளமற்று அடையாள மற்றுப் போகின்றவர்களை வெற்றியாக மட்டுமல்லாது கடந்து வந்த போராட்ட வலியின் , மறக்கப் பட்டு விட்ட வலியையும் பேசுவதும் பெண் எழுத்தாகும்
தன்னை உணர்த்த உரத்துச் சொல்லி தன் கலப்படமில்லா உலகத்தை பார்க்கத் தந்து ஆதிக்க மனோபாவனங்களற்று பொதுமைக்குள் வந்து விடப் பேசும் தன்னுலகம் பெண் எழுத்தாகும்
அப்படி சுயம்புவாய் எழும்பும் பெண் எழுத்துக்களை ஏற்கனவே உள்ள எழுத்துலகம் எப்படி பார்க்கின்றன வலியை சொல்லும் உலகை புலம்பும் உலகமிது என சொல்லிப் போகின்றது புதிதாய் படைக்கின்ற எழுத்துலகை தங்கள் கை பட்டியலுக்குள் இல்லாததால் செல்லாது என அறிவித்துப் போகின்றது. உணர்வுச் சிதைவுகளை உணர்த்தி விடும் படைப்புகளையும் ஆதிக்க சிந்தனையிலிருந்து , நிஜ விடுதலையை நோக்கி நகர்த்தி விடும் படைப்புகளையும் சில நேரம் திட்டமிட்டு நிராகரித்தும் சிலநேரம் இதுவரை இல்லாத பார்வைகளை முன் வைப்பதால் புரிந்து கொள்ள இயலாமலும் , சொல்லப் பட்டதுவை அதுவாகவே வாசிக்காதும் தன் இயலாமையை மறைக்க குற்றஞ் சாட்டியும் போகின்றது.
இன்னும் சில நேரம் இன்றைய தகவலும் தொழில் நுட்பமும் வாசிக்கக் கிடைக்க கூடிய மேற்கத்திய ஐரோப்பிய பெண்ணியத்தை , இதுவரை இங்கு யாரும் சொல்லப் படாதது எனும் தளத்தில் முன் வைத்தும் அதே போல் மொட்டைப் புரிதலோடு படி எடுத்தும் கொண்டிருக்கின்றன.அவற்றை வாசிக்கும் போது அதன் சூழல் அதற்குப் பிண்ணிருந்த தேவை , இவையும் வாசிக்கப் பட்டிருக்கிறதா? அதை விவாதித்து அதை இந்த களத்திற்கு கொண்டு வந்திருக்கிறோமா? உலக இலக்கியத்தை எழுத்தாக வாசிப்பது இருக்கட்டும், உள்ளூர் சனத்தின் உணர்வுகளை செத்துப் போகாத படைப்பாளிகளாய் படைத்து தந்திருக்கிறோமா?
கோட்படு ரீதியாக உண்டான வரைவிலக்கணத்துல் நாளைய வாழ்க்கை ஏன் இன்றைய வாழ்க்கை யாவது சிக்குமா? கோட்பாடுகளை அச்சாக்கி அதில் பிரதிமை செய்து தரும் எழுத்துக்கள் , தன்னோடவே இருக்கும் தமிழ் சமூகத்தின் மண் சார்ந்த உணருதல்களை உள் வாங்குவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறோமா?
இன்னுமொரு முக்கிய விடயம் கோட்பாடுகளை வாசித்து மொழி பெயர்த்து தருபவர்கள் அவர்களுக்கே நேர்மையாக அதன் நியாய அநியாயங்களையும், சாதக பாதகங்களையும் எங்கள் முன் வைக்கின்றதா? பொதுவான போக்குகளையே வைக்கத் தவறுகின்ற இலக்கிய உலகு ஆணாதிக்க வாசிப்பிலேயே அவற்றை வாசித்து தருகின்றது.
பெண்ணை அவள் உடல் கடந்து அவளே வந்து விட முடியா தன்மையை நிறுவிப் போகச் செய்கின்றது இன்றைய புதிய புதிய தேவைகளுக்கேற்ப உண்மைகளை பேசையில் தான் புதிய கருப் பொருட்கள் கவிதையின் பாடுபொருளாகியும் புதிய வடிவாக்கங்களும் பிறக்குமே அல்லாது புதிதாய் எதைப் பேச எனத் தேடித் திரிவது போலிகளின் உற்பத்திக்கும் செயப் படு பொருளாக எழுத்து மாறுவதற்கும் வழி வகுக்கும்.
ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலை நோக்கில் ரேகை சட்டத்திற்கெதிராக “ கட்டை விரலை வெட்டு” என்பதற்கும் பெண் ஒடுக்கப் படுதலுக்கெதிராக “ கர்ப்பப் பையை எடுத்துப் போடு” என்பதிலும் பெரும் வேறு பாடு இருக்கின்றது இரண்டாவதில் பெண்ணின் இயல்பான பெண்மையை காலியாக்கப் பட்டு விடுகின்றது விடுதலை வேண்டுமெனில் பெண் பெண்மையை இழக்கத்தான் வேண்டுமா? பெண் விடுதலை கண்டிப்பாக எந்த நிபந்தனைகளுமின்றி அமைய வேண்டும் இன்று மண் சார்ந்து பேசுகின்ற கோட்பாடுகள் கூட விடுதலை கிடைக்க கிடைக்க உதிர்ந்து விடும் என்பதுவே நிஜம் அந்த இழப்பை சந்திக்க கோட்பாடுகளை புதிய சிந்தனைகள் மூலம் வடிவமைப்பவர்களும் தயாராக வேண்டும்
பெண் வேண்டுவது பாலியல் சுதந்திரம் மட்டுமன்று பாலியல் தெரிவுக்கான சுதந்திரம், அதுவும் கூட பெண்ணின் ஒட்டு மொத்த விடுதலையில் நூறில் ஒரு பங்கு மட்டுமே பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு உண்மையான எதிர்ப்பாக இல்லாமல் கட்டுப்பாடற்ற தனி மனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறிவிடும் அபாயமும் இருக்கின்றது
இன்றைய ஊடகங்களினால் பெரிதாக்கப் பட்டு விட்ட தோற்றம் தரும் பெண் எழுத்து.பாலியல் சுதந்திரம் எனும் மாய வலைக்குள் சிக்க வைக்கப் பட்டு ஒட்டு மொத்த விடுதலையை விட்டு வெறும் படுக்கையறைக்குள் முடக்கப் படும் முயற்சிகள் தானே அறியாமலும் அன்பின் பேராலும் தான் நிகழ்த்தப் படுக்கின்றன. அந்த நிகழ்த்தப் படுதல்களைத் தாண்டி உண்மையான உணருதல்களாய் எழுதப் படுகின்ற பெண் எழுத்து ஏற்கனவே நிறுவப் பட்டிருக்கிற அளவு கோள்களுக்குள் சிக்கவில்லை என்பதால் கவனிப்பாரற்று கிடக்கின்றன.
என்னைப் பொறுத்தவரை பெண் விடுதலை என்பது என் முன்னால் இருக்கும் சமூகமோ அல்லது ஆணோ நான் எதுவாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்ற போது நான் அதுவாக இல்லாது போதல் ஆகும் இலக்கிய உலகில் நிறுவப் படாவிட்டாலும் எழுத்தும் சிந்தனையும் எழுதுகின்ற அப்பெண்ணின் தொடர் இயக்கத்தில் வெளிப்பட்டு சூழ இருந்தவர்களை மெல்ல மெல்ல நிறம் மாற்றிப் போகும் . அந்த நிற மாற்றுதலே உண்மையில் அதன் வெற்றி அப்படியான எழுத்தில் பெண் மொழி மட்டுமல்ல, அப்படி பார்க்கப் புகுவது கூட ஆணாதிக்க சிந்தனையே அன்றி வேறல்ல அவளது குழநந்தைகளுக்கான பாடலில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே இருக்கின்றனர்.அவளது வாழ்வுக்கான பாடலில் விரிகின்ற உலகம் ஆணின் வெளியையும் அரசியல் பார்வைகளையும் நவீன யுகத்தில் கணிணி தொடுதல்களும், யுகாந்திர யுகாந்திர தொன்ம நுண்ணரசியிலை புதிதாய் சமைக்கின்ற காட்சிகளையும் உள்ளடக்கியதே. பெண் எழுதுவதாலேயே எப்பவும் பெண்ணிய எழுத்தென்று முத்திரை குத்தப் படுவதும் ஆபத்தானதே , அந்த ஆபத்தையும் கடந்து வாசிக்கும் போதும் வாசிக்கப் படும் போதும் தான் பெண் எழுத்து பிரபஞ்ச எழுத்தாக பார்க்கப் படும் அப்படி பார்க்கப்படும் அன்றைக்குத்தான் பெண் எழுத்து சரியாக பார்க்கப் பட்டும் எழுதப் பட்டும் இருக்கிறதென்பதைச் சொல்ல முடியும் Labels: கட்டுரை |
posted by mathibama.blogspot.com @ 3/11/2007 06:58:00 pm   |
|
|
Friday, March 02, 2007 |
அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள் |

அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள் திலகபாமா
எண்கள் குழப்பமாய் ஒரு வரிசைக் கிரமத்தில் என்றில்லாது பெரிதும் சிறியதுமாய் வந்து வந்து போக. எண்களுக்கு பின்னாள் மஞ்சளும் நீலமுமாய் விளக்கு வெளிச்சங்கள் தோன்றி மறைந்தன. எல்லாமே செல்லிடை பேசிகளின் எண்கள் . ஓடிக் கொண்டிருந்த எண்கள் ஒரு இடத்தில் நின்று கொள்ள அந்த எண்ணின் தொடர்புக்கு ஏற்ப மணிச்சத்தம் . வெறுமனே இருந்த மணிச் சத்தங்களை மாற்றி திரைப் படப் பாடல்களை எவன் நுழைத்தது. பாடல் காதோரம் கிசு கிசுக்கத் துவங்கியது “நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி நெருங்கி வருவேன்.” சட்டென்று தொடர்பை துண்டித்தன விரல்கள் , நெருங்கி நெருங்கி வருவதாய் சொல்வது பொய். மிஸ்டு காலில் எண்களைப் பார்த்து விட்டு திரும்ப அழைக்கக் கூடும் என எதிர்பார்த்து விநாடிகள் நிமிடங்கள் நாட்கள் எனப் பறந்தன. அறையெங்கும் இருள் சூழ்ந்து கிடந்தது கண் முன்னே பெரிய ஒளி அதன் பிரமாண்டத்தின் முன் முற்றிலும் எதுவுமே பார்க்க முடியாமல் போகலாம். ஒளியையும் பார்க்க முடியவில்லை என்று சொன்னால் யார் நம்பக் கூடும். மூடிக் கொண்டாள் விழியை. பல உருவங்கள் வந்து போயின. கண்ணன், குமார், தீபா சுரேஷ், அத்தை, மாமா, வீடு ஊர் தெருக்கள் எல்லாம் வேக கதியில் தோன்றி நகர இறுதி உருவமாக கண்ணன் வந்து நின்று சிரித்தான் எழுத்தை அவள் எப்பொழுது கைக்கொள்ள நேர்ந்தது என்று அவளே அறியாமல் இருந்திருந்த பொழுதில் இரவின் தனிமையொடும் இருளின் துணையோடும் எழுத்துக்களோடு இருந்திருந்தாள் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் நிரம்பி வழிந்த பணக்காரச் செழுமை ஏதோ ஒன்றை நிறைவு செய்ய முடியாமல் மேலும் அதே விதத்திலேயே தன்னை அந்த வீட்டினுள் திணித்துக் கொண்டிருந்தது . ஆனால் அவள் கண் எதிரிலோ எப்பவும் ஒரு வெறுமை இருந்து கொண்டே இருக்க வீட்டுக்குள் உடன் வாழ்ந்திருந்த ஆட்களாலும் அது நிரப்ப முடியா படிக்கு இருந்திருந்தது. காலை நேர பள்ளிக் கூட அவசரங்களில் பரபரத்த பொழுதுகளில் கூட உள்ளுக்குள் ஒரு உருவம் சோம்பல் முறித்தது. தோசை வார்க்கையில் கதைக் கருவை உருப்போட்டு முடித்திருந்தது. மேசை ஒதுக்கி மதிய உணவிற்கு ரசத்திற்கு புளி கரைக்கையில் உள்ளுக்குள் ஊறிய கவிதை முளைத்து கிளைத்து கல்லாகி ஸ்திரமாகியிருந்தது கணவர் வேலைக்கு கிளம்பிச் சென்றதும் வீடு அமைதி கொள்ளும். திரும்ப மதிய சாப்பாட்டு பொழுதுகளில் உயிர்த்துக் கொள்ளும் வீடு இரண்டு மணிக்கு உறங்கச் சென்று விடும். மாலையில் வாசல் தெளித்து கோலமிட்டு முகம் துடைத்து பூவைத்த பெண்ணாய் வாசலில் என் நினைவுகள் காத்துக் கிடக்கும். ஊரடுங்கும் நேரத்தில் வீடு திரும்பும் தந்தையும் மகனும் உண்டபடி வியாபாரம் பேசி உறக்கம் வரும் வரை கணக்கு வரவு செலவு பார்த்து பொழுதை முடித்துக் கொள்ள ஊரெல்லாம் மெச்சும் நிறைவான வாழ்க்கையாய். ஆனால் தேடல் உள்ள அவள் மனமோ ஒன்றுமேயில்லாததாய் எப்பவும் குறை பட்டு அத்தையிடம் அநுமதி வாங்கி அம்மாவீடு போய் ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயன்று தோற்றுத்தான் திரும்புகின்றது புக்ககம். புலம்பல் தாங்காது அம்மா வீட்டிலிருந்து செல்லிடைப் பேசி வாங்கித் தந்திருக்க சந்தோசமானாள்.தோழியுடன் அக்காவுடன் அம்மாவுடன் எதை எதையோ பேசிப் பேசி ஓய்ந்தாள் அந்த மாதமே வந்திருந்த அவள் பிறந்த நாளும் எல்லாரையும் கூப்பிட்டு வாழ்த்துப் பெற்றுக் கொள்ள, புகுந்த வீட்டில் நினைவு வைத்து வாங்கித் தராத புடைவைக்கு புலம்ப அம்மா வாங்கித் தந்த புடவையைக் காட்டி பெருமை பேச கணவனும் ஒரு புடவை அதை விட விலை அதிகமாய் வாங்கித் தர தோழியிடம் இரு புடவை கிடைத்ததாய் பெருமை அடித்து ஓய மாத இறுதியில் பில் தொகை தொலைபேசியை முடக்கிப் போட்டது மீண்டும் அமைதிக்குள் சரணமாக தொலைபேசி பொம்மையாகியிருந்தது எழுத்துக்களோடு பேசிப் பேசி ஓய்ந்தாள் அவளின் ஓயாத சல சலப்பு இறுக்கமும் எரிச்சலாகிப் போக பைத்தியமாகி விடுவாளோ எனும் பயத்தில் இனி தொலைபேசிக் கட்டணத் தொகை அதிகம் வந்து விடக் கூடாது எனும் எச்சரிப்பின் பிண்ணனியில் மீண்டும் உயிரூட்டப் பட்டது . இப்பொழுது வீடு தாண்டி எழுத்தோடு அவளும் அபௌதீகமாய் பயணப் படத் துவங்கியிருந்தாள் எழுத்தோடு தொடர்புடைய எல்லாருக்கும் அவளது தொலைபேசி எண் தரப்பட்டதுடன் அவள் அழைக்க முடியா இயலாமையும் அனுப்பப் பட்டது. கழி விரக்கங்கள் அவளை மையப் படுத்துவதாய் எப்பொழுதிருந்து உணரத் துவங்கியிருந்தாள் நானாக அழைக்க மாட்டேன் அழைத்தால் நான் பேசக் கூடும் என அனுப்பப் பட்ட தகவலில் தொடர்புகள் கொல்லைபுற உறவுகளாய் வெறும் பேச்சுக்களான தொடர்புகளாய் மாறிப் போயிருந்தன எப்பவும் எல்லாரும் தந்ததாய் நிறைந்த தற்பெருமை கொண்டிருந்த வீடு என் குரல்களை எதிரொலித்த படியே கிடந்தது காதுகளை பொத்திக் கொள்ளத் தூண்டியது எதிரொலியின் உச்ச கட்ட இரைச்சல் மூளையெங்கும் சுவாசக் காற்றை வெளித் தள்ளி உள் நிரப்பி எல்லாம் செயலிழந்து நின்ற கணமும் நினைவுக்கு வருகின்றது ஆனால் அந்த தருணம் பிடித்திருந்தது எதுவும் கேட்கவில்லை மூளையில் சிந்தனையில்லை குடைச்சலில்லை கண்களும் எதுவும் காணவில்லை. “ஆமாம், வீடு ஏன் எதிரொலித்தது எல்லாமாலும் நிரம்பியிருந்தும்?” என் காதுகளில் விழுந்த குரல்கள் யாருக்குமே கேட்க இயலாது ஏன் போனது யாருமே இங்கு இல்லை . மெல்லிய இன்னிசை துவங்கி பெருங்குரலெடுத்து ஆக்கிரமிக்கத் துவங்கியது. அவள் இருந்திருந்த அறையெல்லாம் நடுங்கியது அடுக்கியருந்த சமையலறைச் சாமான்களில் சின்னஞ் சிறியவை எல்லாம் சிதறி விழுந்து ஒடியது இசை ஓசை மறந்து அதிர்வுகள் மட்டும் தான் கண்களுக்குள் சிக்கியது விசித்திரம் தான் ஓடிச் சென்று போனை எடுத்தாள் இதுவரை வந்திருந்த புது எண் யாராயிருக்கும் யோசனை.அதிர்வுகள் எதிரொலிகள் கூச்சல்கள் எல்லாம் எங்கு உறைந்து கொண்டதோ தெரியவில்லை எண்கள் மட்டும் தான் இப்பொழுது கண்ணில் தெரிந்தது எழுந்தாள் பச்சை நிற பொத்தானை அழுத்தி “ஹலோ யாரது?” என்று சொல்ல “தீபா என்னப்பா செய்யுறே” கேள்வி மிக நெருக்கமாய் உரசியது “ கண்டதையும் போட்டு மனசைக் குழப்பிக் கொள்ளாதே” “நிறைய வேலை இருக்கு எழுது, படி இல்லாததற்கு ஏங்கத் தொடங்கினால் ஒரு நாளும் நீ நிறைவு கொள்ளப் போவதில்லை. “ யார் நீ ? கேட்டேன் பதிலில்லை ஊமையாகியிருந்தது யாரிடமிருந்து என எண் பதிவு செய்திருக்கும் இடத்தில் தேடினாள். அவளைப் போலவே அதுவும் கிடைக்கவே இல்லை. வேலைகள் வந்தழுத்த மெல்ல அதில் மூழ்கிப் போனாள் அவளுக்குள் சிந்தனை கொஞ்சம் இலகுவாகியிருந்தது அந்த தொலைபேசி உரையாடலுக்கப்புறம் குரல் சொன்ன அறிவுரையை விட நேசமாய் வருடிச் சென்ற குரலின் தீஞ்சுவை இன்னமும் வேண்டும் எனும் ஆசையைக் கிளப்பியிருந்தது வாசிக்கக் கிடைத்த எழுத்துக்களுக்காய் நெருங்கி வந்தவர்கள் பின்னாளில் எதுக்காக நெருங்கி வந்தோம் என்று சொல்லிக் கொள்ளாமலேயே போனார்கள். எழுத்துக்களில் இருந்து தொடங்கிய பேச்சு சுவாரஸ்யம் கூடிப் போக , ஒரு நபர் ( நண்பர் என்று எப்படி சொல்ல முடியும்) தான் அலுவலக நேரங்களில் பேசலாம் என்று சொல்லியது முதலில் நெருடவில்லை என்றாலும், மனைவியோடு இருக்கின்ற தருணங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நான் கருதிய படியாலும், தொடர்ந்த உரையாடல்கள் உணர்த்த தொடங்கின, மனைவிக்கு மறைத்தபடி ஏதோ நிகழ்த்தப் படுவதை. உணர்ந்த அடுத்த நிமிடம் நானே ஏமாற்றப் பட்டதாய் உரைக்க கண் மூடி எல்லாம் தூக்கி குப்பைத் தொட்டியில் கடாசிப் போனேன். அடுத்த சம்பவம் இதற்கு எதிர்மறையானது. எப்பவும் அந்த நபர்( இதுவும் நபர் தான்) குடும்ப நண்பராகவே உணர்த்த தலைப்பட்டது மகிழ்வைத்தர. அதிலும் கொஞ்சம் நாளில் என் ஏமாற்றங்கள் தொடர்ந்தன. தான் கொண்டிருந்த முறையற்ற உறவுகளை மனைவியிடம் நியாயப் படுத்த என்னை பயன்படுத்திக் கொண்டிருப்பது ஒரு நாள் தெரிய வர. இவ்வளவுதானா? இவ்வளவுதானா? எல்லாம் தூர எறிந்து தூரப்போனேன்.போகின்ற வழியெங்கும் பூக்கள் ஏந்தி நின்றவர்கள் அன்பில் பேராலேயே குளிரோ நெருப்போ எது தாங்கியிருப்பினும் எனக்கு எதிரானதாகவே தெரிய , யாருடனும் பழகத் தெரியாதவள், திமிர் எனும் அடையாளங்களோடு தொடர்கின்றேன் என் பயணத்தை. நெருங்கியிருந்த காலங்களில் என் எழுத்தை பற்றி பேசியதை, என் அறிவை புகழ்ந்து பேசியதை. மறைத்த படியே மறைந்து போனார்கள். எப்பவும் எனக்கெதிராய் கத்தி தூக்க வசதியாய்.எல்லாம் தெரிந்திருந்த போதும் தெரியாததாய் காட்டிய படிக்கே நிராகரிப்பை வீசியபடி கடந்தேகிய காலங்கள்…. * பத்திரிக்கை ஆசிரியனாய் அறிமுகமான கண்ணன் நினைத்தவுடன் உருவத்தை விட குரலே முதலில் வந்து நினைவில் நின்றது. அதுதானே அவளுக்கு முதலில் அறிமுகமானது “உங்க எழுத்துக்களை படித்திருக்கின்றேன்” எனும் அறிமுக குரலப்படியே மூளையில் தேங்கிப் படுத்து இடத்தை அடைத்துக் கொண்டது வெறும் வாசகனாய் எங்கோ இருந்து பேசுபவனாய் மட்டுமே மூளையில் உரைக்கத் துவங்கிய அந்த உரையாடல் எந்த இடத்தில் தடம் மாறியது அவள் மறந்து போக முடியாத ஒன்றாக… எழுத்தை இரசிப்பவனாக உள் நுழைந்தவன் மெல்ல என் எழுத்தை தீர்மானிப்பவனாக எப்பொழுது ஆகிப் போனான். தெரியாது அவனது உரையடல்கள் மெல்ல ஒரு தேவையை எனக்குள் எழுப்பி விட்டிருந்தது அந்த பேச்சில் குரலில் ஒரு சுகம் புலப்படத் துவங்கியிருக்க அதற்கு அடிமையாகின்றேனோ எனும் சந்தேகம் வர எனக்கு சந்தோச ம் தருபவற்றை நான் நெருக்கமாக வைத்துக் கொள்வதில் தவறென்ன கேள்வியும் எழும்பியது இந்த கேள்வி எழும்பிய நேரமும் அந்த தொலைபேசி அழைப்பு நினைவுக்குள்ளிருந்து இழுத்து வந்தது “தீபா என்னப்பா சேய்யுற?” எனும் அதே பெண் குரல். “நீ உச்சத்தில் இருக்கும் வரைதான் அதாவது அவனை விட விச்வரூபம் எடுக்காதவரை தான் உனை சந்தோசப் படுத்தும் குரல் உன் ஆணைக்கு கட்டுப் படும் அது கூட நடிப்புதான் நீ அவனுடைய தளமாக மாறி விட்ட பிறகு உன் மேல் நீ அசைய முடியா படிக்கு கட்டிடம் கட்டி சொத்தாக்கி அனுபவ பாத்யதை சொல்லிப் போவான் ஜாக்கிரதை.! ஜாக்கிரதை எனும் உசார் படுத்தலோடு அமைதிஆகிப் போனது தொலைபேசி . குரலின் போதையில் சுகம் கண்டவளுக்கு அதை விட்டு வெளியேற முடியா சுகம் தெரிய புதையுண்டிருப்பதை, புதையுண்டு கொண்டிருப்பதை உணராத எண்ணம் எப்படி ஏற்படாமல் போனது. சுகமான கதகதப்பென்று உணர்ந்தது தூர இருக்கும் வரைதான் நெருங்க நெருங்க எரித்து விடும் என்று உணராதவளாகவே இருந்தாள் இன்னும் இன்னும் நெருக்கமாக நேர்ந்த சந்தர்ப்பங்கள் பத்திரிக்கையில் அவளது படைப்புகள் அடிக்கடி வர ஆரம்பித்திருந்தன அவளைப் பற்றியும் கூடுதலான செய்திகளோடு அவள் அறிவின் பால் அவனுக்கிருந்து ஈர்ப்பென்று பெருமிதம் கொண்டு அந்த நேசத்தை மறுக்காமல் இருக்க, மறுக்காததை அவனுக்கானதாய் அவன் மாற்றி வாசிக்க அதையும் மறுக்க அவளுக்கிருந்த தயக்கம் தொடர்கின்றன. திறந்திருந்த பக்கத்து விட்டுக் கதவின் இடுக்கு வழி வழியும் ஒளியை தன்னையறியாமலேயே பார்த்து விடும் சுவாரசியம் இருக்கின்ற மனம் அவள் வாழ்வின் ஏக்கம் மெல்லக் கசிய அதன் ஒளியை சுவைத்தபடி அவன் உள் நுழைய எப்படி அனுமதித்தேன் வேண்டியிருந்தது எனக்கு தோள் சாயும் சுகம் தேவையாயிருந்தது. அடுப்படி கனல் தாண்டி படுக்கையறை புழுக்கம் தாண்டி உறவுகளில் சலிப்பான விசாரிப்புகள். தாண்டி குழந்தைகளின் அன்புத் தொல்லை தாண்டி எனை மடி சாய்த்துக் கொண்டு முடி கோதும் நேசக் கரம் தேவை பட்டது. காற்றின் அலையில் மிதந்து வந்த கதிர் வீச்சுகள் செல்பேசியில் குரலாக அது எனக்கு சுகமானது எப்போவாவது இடையிடை அவளின் குரலும் ஒலித்துப் போகும் “உன் மடி சாய்தலில் அவன் குளிர் காய்ந்து விட்டுப் போய் விடப் போகின்றான். போனால் பரவாயில்லை நீ தாங்குவாயா? அவன் உன்னை மடி ஏந்தாது அவனை மடி ஏந்தும் ஒன்றாகவே உனை நினைக்கிறானப்பா” குரல் சொல்ல பயம் வந்தது யார் அந்த எண் தேடினாள். எத்தனையோ உருட்டி பெருவிரல் வலிக்க செல்பேசியை தூர எறிந்தாள். விழுந்த வேகத்தில் அடித்தது மீண்டும், கண்னன் என காண்பித்துக் கொடுக்க எழுந்து பத்திரிக்கை சமீபத்திய கூட்டம் எழுத்தாளர்களின் பேசப் பட்ட அந்தரங்கங்கள் என பேச்சு நீண்டு கொண்டே போனது அவள் தனியாக நீண்ட நேர தனிமையில் இருக்கக் கூடிய நேரம் என்று தெரிந்து தான் அழைத்திருக்கின்றான், நீண்ட நேரப் பெச்சில் மனம் நெகிழத் துவங்கியிருந்தாள். “உங்கள் உணர்வுகளைப் பற்றிச் சொல்லலையே, உங்கள் குரலில் சிரிப்பு தாண்டி ஒரு சோகம் தெரியுதே” அவள் யோசிக்கத் துவங்குமுன் இன்னொரு அழைப்பு இடைவெட்டியது “பொறுங்கள்” என்று சொல்லி விட்டு யாரென்று தெரியாத அந்த அழைப்பை ஏற்க “ஒப்புவித்து விடாதேப்பா உன்னை. வெறும் புளியமரத்தடி ஜோசியன் கூட இப்படித்தான் கேள்வி கேட்டு பரிகாரம் சொல்லி சம்பாதித்து போவான். அதே எண் மீண்டும் இடைவெட்டி கண்ணனோடு தொடர்ந்தாள் ஆசைகள் ஏக்கங்கள் பகிர்ந்தாள் அவளுக்கான நண்பன் என்று மனம் சொல்லியதால். அது உறுதியில்லை உறுதியானதாய் இருக்க வேண்டும் என நம்பிய மனத்தின் பிரதி பலிப்பு “எப்போ எழுதுவீங்க இரவுகளிலா?” கேள்வியின் தூண்டில் அவளின் கண்ணுக்குத் தெரியாமல் போனது. ஆம், எல்லாரும் உறங்கிய பிறகு எழுதுவேன். அப்போதானே எனக்கான நேரம் கிடைக்கின்றது. “அப்போ உங்க வீட்டுக் காரர் உங்களை எதிர்பார்க்க மாட்டாரா?” கேட்டும் விட்டு “சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் . தவறாக கேட்டு விடவில்லையே” அடுத்தடுத்து பேசியவன் தவறொன்றும் இல்லை என்று அவள் சொல்லும் முன்னமே, மேலும் கேள்விகளை நெருக்கமான குரலில் முன் வைக்க, தொடர்ந்து தன்னை அதிகம் எதிர்பார்க்காது இயந்திரமாய் உழைப்பின் கவனத்திலேயே ஆழ்ந்து போன கணவனும் அவளும் சார்ந்த வாழ்வு பேசப் பட்டது. பேசி முடித்த போது ஏதோ கனம் குறைந்திருப்பதாய் பட்டது அந்தரங்கங்களின் கனத்தை இதுவரை தனியாகச் சுமந்த கையிடமிருந்து பகிர்ந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் எண்ணியும் இந்த தருணத்தின் சுவை ஒன்றே வாழ்நாளுக்கும் போதுமென்ற எண்ணமும் உருவாகியிருக்க , எதிர் முனையில் ஒலித்த குரலுக்கு அது போதுமானதாக இருந்ததா? இல்லை அந்த குரலுக்கு இன்னமும் வேறேதோ தேவையாயிருந்தது, தொடர்ந்த சந்தர்ப்பங்களிலும் கூட்டங்களிலும் கூட்டங்கள் துவங்குவதற்கு முன்னரும் துவங்கிய பின்னரும் இடைத்த தன்னந் தனியாக சந்தர்ப்பங்களிலும் வேறேதோ எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது அவளும் உணர்ந்த படியே இருந்தாள். அவன் பேசுகையில் நெருக்கத்தில் அவளைச் சூழ்ந்த அவனது உடல் வெப்பத்திலும் , நேர்பார்வை பார்க்கத் தயங்கி பார்வை தவழவிட்டு மேயவிடும் தனமும் அவளுக்கு கேட்கும் மூச்சின் ஓசையுமென அவன் தன்னை எதிர்பார்க்கின்றான் என்ற நிறைவு தந்த சந்தோசம் கணவனோடு அவளை ஒப்பிட வைத்தது. எத்தனை நாள் காத்திருப்பை அலட்சியப் படுத்தி உண்டு தொலைக்காட்சி பார்த்து ஆர்வமாய் பகிர்ந்து கொள்ள நெருங்கிய தருணமெல்லாம் தூர இருந்தவனை நினைக்க
“பார் பார் என்னையும் எதிர்பார்க்கும் நெஞ்சமிருக்கு” என்று கர்வம் சூடினாள், மனது கனத்தது மகிழ்ச்சியில் அதையும் கை தாங்கிக் கொள்ளத் தேடிய போது தொலைபேசி அடித்தது. அடித்த இசையில் ஓசையில் அழைப்பது யாரென்று மூளையில் உரைக்க ஓடிப் பொய் எடுத்து அழுத்த “கண்ணன்னு நினைச்சியா நான் தாண்டா தீபா நீ அருகிருந்த நெருக்கங்களை யாருமறியாது வெறும் இலக்கியப் பேச்சாய் தனிமையில் பகிர்ந்து கொண்ட தருணங்களை பார் வேறெதுவாகவோ மாற்றி அவன் நண்பர்கள் வட்டாரத்தில் பெருமை பேசிப் போகின்றான். தீபா சிக்கிக் கொள்ளாதேடா!”
சொல்லி எப்பவும் போல ஓய்ந்து போனது.அடிக்கடி காண நேருகையில் அதன் மதிப்பை தொலைத்து விடுகிறோமோ தொலைபேசி எச்சரிக்கைகள் தூரப் போட்டு கண்ணன் பேசிய பேச்சின் சுகங்களை நினைத்து எடுத்து முகர்ந்து சுவைத்து அணைத்து எல்லா வேலைகளுக்கும் நடுவில் இதையே உற்சாகமாய் எடுத்துக் கொண்டு கடந்து விடுகின்றாள் பழனி மலைத தொடரில் தன் தந்தை வழி காடுகளுக்கு ஒரு நாள் சென்றிருந்த தருணத்தில் வேலியில் யாரும் பறிக்காது அழகழகாய் வண்ண வண்ணமாய் செடிகள் பார்க்க ஒரே மாதிரியாய் இருந்த போதும் மஞ்சள் வெள்ளை வாடாமல்லி என பல்வேறு நிறங்கள் நாதஸ்வரக் குழலாய் பூத்து விரிந்திருந்த அதுவும் மாலை 5 மணிக்கு சரியாக விரிந்து சிரிக்கும் “ அந்தி மந்தாரை” செடியிலிருந்து எடுத்து வந்த கருப்பு நிற விதைகள் வீட்டு தொட்டியில் போட்டு வைக்க ஒரு மாதம் இருமாதம் ஆகியும் முளைக்காது போய் ஒட்டு மொத்த நினைவெல்லாம் மறந்திருந்த தருணத்தில் மழைத்துளி சன்னல் வழி வீழ்ந்து வைக்க முளைத்துக் கிடந்தது இறந்த காலம் இரு இலைகளாய் . வருடங்கள் கடந்து விடுகின்றன. தொட்டிக்குள் பூக்கச் சாத்தியப் படாது பசுமை மாறாதிருந்தபடி பூக்க மறந்த செடியின் கோபம் புரிந்து மண் தரையோடு வேர் விட தொட்டி அடி மட்டும் உடைத்து வைத்திருக்க தினமும் நீர் ஊற்றுகையில் எல்லாம் மொட்டரும்பு தேடிப் பார்க்கிறேன் வாழ்வில் தேடிக் கிடைக்காத சந்தோசத்தையுப் போல
ஆச்சு இரு வருடங்கள் கண்ணனோடு பழகத் துவங்கி தினம் தோறும் பேசிய காலங்களுக்கு பின் தீர்ந்து போகக் கூடுமோ என்று நினைப்பு இவளுக்குள் தோன்றத் துவங்க நட்பு தீருமா கேள்விகளோடு தொலைபேசி எடுக்கின்றாள் கண்ணன் பெயர் திரையில் உயிர்க்க அவள் அழைத்த மணிச்சத்தம் கண்ணனுக்கு எட்டாமலேயே போய் முடிகின்றது, நினைப்பதை சொல்லுங்கள் நட்பு துக்கத்தையும் பகிர்வதற்காக என்று பேசிய அதே தொலைபேசி இன்று வேலையிருப்பதாய், தான் யாரோடு என்ன வேலையாக இருக்கின்றோம் என்பதை மறைக்க, வேலையாயிருப்பதாய் சொல்லி மௌனம் காக்கின்றது. அவனது சமீப கால நெருக்கங்கள் , அந்தரங்கள் உணரத் துவங்கியிருந்தாள். பக்கத்தில் வந்துவிட எல்லா பக்க பார்வைகளும் சாத்தியமாகின. பல கூட்டங்களுக்கு தன்னோடு வரச் சொல்லி அழைத்தான் கண்ணன் ஒரு முறை அவனோடு சென்றிருக்க நிகழ்வு நடக்கின்ற இடம் நெருங்க ஆட்டோவிலிருந்து இணைந்து இருவரும் இறங்க தன் புத்தகங்களோடு சேர்ந்து கண்ணனதையும் அவள் துக்கிக் கொள்ள நேரம் செல்லச் செல்ல அந்த சுமை பாரமாகத் தோன்றியது. புத்தகங்கள் சுமையினாலா இல்லை., நிச்சயமாக இல்லை இதை விட அதிக சுமைகளையும் அலட்சியமாய் தூக்குபவள் தான் ஆனால் சந்திப்புகளிடையே எதிர் பட்ட இலக்கிய நண்பர்களிடையே அவளை அறிமுகப் படுத்திய விதமும் அவன் நினைக்கின்ற ஒன்றை இவள் செய்யக் கூடியவளாக எல்லாரிடமும் நடைமுறைப் படுத்தின விதமும் புத்தகங்களை எப்பொழுது போட்டு ஓடுவோம் எனத் தோன்றியது “ நல்லா காபி போடுவாங்க” இது கண்ணனது அறிமுகம் என்னைப் பற்றி. “இவ்வளவு தானா” இவ்வளவுதானா , வாயிருந்த எச்சிலை துப்பி விட அதே வேகம் கண்ணன் மனதிலிருந்து தூரப் போய் விழுந்தான். என் புத்தகத்தை தாங்களேன், பேனா தாங்க தீபா இப்படியாக அவன் உத்தரவுகள் தொடர உச்சகட்டமாக என்னருகில் வந்து நிற்பதற்கும் கண்ணன் அருகில் இல்லாத நேரங்களில் என்னோடு பேச தயங்குவதுமாய் சுற்றியிருந்தவர்கள் இருப்பதாய் உனர்க்கின்றேன், ஆம் எல்லாமே உணருதல்கள் தான் கூப்பிட்டு, ஏன் இப்படி நடந்தது? நடந்து கொண்டாய் என்று கேட்டாள் அப்படி நடந்ததாய் நான் சொன்னதற்கு சாட்சியம் கேட்பான். ஆம் ஒட்டுமொத்தமாய் அவனுக்கானவளாய் நிறுவப் பார்க்கின்றானென்றும் அதேநேரம் புதிதாய் அறிமுகம் செய்து வைக்கின்றான் தேவியை, எல்லார்க்கும் .அதிலும் முக்கியமாய் அவன் பத்திரிக்கை தொடர்ந்து நடத்த தேவைப்படும் பண ஆதரவும் பதவி ஆதரவும் உடைய நபர்களிடம் நெருக்கமாக அவளைப் பழக விடுகின்றான்.பார்வையில் வெற்றுப் பார்வையில் வெகு சுதந்திரமாய் உரிமையோடு பழகுவதாய் தோன்றினாலும் நுண்ணரசியல் நோக்கோடு உள்ளுணர்வின் விழிப்பில் தேவியை பயண்படுத்திக் கொண்டிருப்பது உறுத்த நான் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றிலிருந்தும் வெளியேறத் துவங்க நினைத்த கணத்தில், மெல்ல வெளியேறத் துவங்குகிறார்கள் தேவியும் இன்னும் சிலரும், பதவிகளின் பல்லக்கில் மாலை மயங்கும் வேலையில் காணாமல் போகின்றார்கள்.
அந்த நிகழ்வின் நாளை என் கண்ணிலிருந்து மறையவிடப் பார்த்து தோற்றுப் போய் கண்ணனிடம் தொலைபேசிக் கேட்கின்றேன். தேவி பற்றி எனது சந்தேகத் தீயின் நெருப்பின் நிஜத்தில் கனல் அடித்திருக்க வேண்டும் தொலைபேசி எடுக்க மறுக்கின்றான் செத்த பின் தான் தாஜ்மஹால்கள் .தாஜ்மகால்கள் கட்டப் போவதாய் சொல்லுகிறவர்களையெல்லாம் உயிர் பறிக்க திட்டமிடுபவர்களாய் சந்தேகப் படுவதில் என்ன ஆச்சரியம். கொஞ்சம் விட்டால் உயிரோடும் சமாதியாக்கும் வேலை நடக்கும். விலகல் சாத்தியமானதை உணரத் துவங்கிய போது தான் தீபாவுக்குள் தான் பகிர்ந்து கொண்ட அந்தரங்கங்கள் அடகுப் பொருளாய் மாறியிருப்பதன் வலி உணர்ந்தாள். அவள் உணர்வுகளை பொருளாக்கி பூட்டி விட்டாலும் அதன் பேரால் உரிமை கோரவும் அவனுக்கு தான் துணை போய் விட்டதை எண்ணி எண்ணித் தூக்கம் போக, மன அழுத்தம் அவளை பீடிக்கத் துவங்கவும் தான் முதன் முதலாய் குடும்பம் அதிரத் துவங்கியது. மிகச் சாதாரணமாய் வேலைகளோடு இருப்பாள் சில நேரம் எல்லாம் தொலைத்தபடி வெறித்த பார்வையில் செல்பேசியோடு பேசிக் கொண்டிருப்பாள் ஆம் ! செல்பேசியோடுதான் அந்தப் பக்கம் வேறு யாரும் பேசவோ கேட்கவோ இருந்திருக்க மாட்டார்கள் வீடு அவளது தனிமையை உணர்ந்த நேரம் காலம் கடந்திருந்தது. இதோ மருத்துவமனையில் மருத்துவரின் அறையில் * என் முன்னே ஒரே ஒளி வெள்ளம் ஒளியின் முன்னால் … முன்னாலா அல்லது பின்னாலா எதோ ஒன்று ஒளியைத் தவிர அனைத்தும் இருளாகத் தெரிய ஒளி என்னை விழுங்கப் பார்க்க இடையே எண்கள் தோன்றித் தோன்றி மினுங்கிப் போனது . எண்களால் காப்பாற்றப் பட்டேனா அல்லது எண்கள் சுழலுக்குள் இழுத்ததா? கேள்விகளுக்குள் தேடியபடி அவள் விழிகள் அலைபாய குரல் கேட்டது மருத்துவராக இருக்கலாம் பேச்சு வருடிக் கொடுத்தது கண்ணனது போலவா?. குரல் ஆசுவாசப் படுத்தியது தூங்கச் செய்தது. உள்ளுக்குள் குரல் தந்த மகிழ்வு இருக்க , மனசு கணத்து கண்ணீர் வரும் போல் இருந்தது.யார் என்னுடன் பேசுகின்றார்கள் சரியாகத் தெரியவில்லை ,சுகமாக இருக்க சுமந்திருந்த பாரம் இறக்கப் பட்டிருப்பதாய் உணர தூங்கிப் போயிருந்தேன். எவ்வளவு நேரம் அல்லது வருடங்கள் அல்லது சென்மங்கள் தூங்கியிருப்பேனோ தெரியாது. மணியடிக்க கைகள் தலைக்கு அடியில் துழாவின. செல்பேசி மினுங்கிய படி அடிக்க, கண்ணனாயிருக்க கூடாது மனம் நினைக்க, ஆம் இது அவளது தொடர்பேதான் ஆவலோடு அழுத்தினேன் “என்னப்பா செய்யுறே தீபா?” உடைபட்ட மனமிருந்து கசடுகளாய் உள்ளுக்குள் கட்டியிருந்த நினைவுகள் ஓடத் துவங்கியது கண்ணன் ஒதுக்கத் துவங்கிய ஆரம்பத்தில் மனம் அழுது புரண்டதையும் பின்னால் முறுக்கேறி நிம்மதியாய் அவனையும் இருக்க விடுவதில்லையெ ன தொலைபேசியில் கேட்டு விட்ட கேள்விகள் . தீர்மானித்து விட்டாள் அவள், இனி அவன் வழி நகருவான் , இவளை தனது நட்பை பத்திரப் படுத்த தெரியாதவள் என்று பிரகடனப் படுத்திய படியும் நகருவான் என மனது உரக்க அலறிய போது தீர்மானித்து விட்டாள். அவனை அப்படி பிரகனடப் படுத்த விடுவதில்லையென. .பல்வேறு நபர்கள் பற்றிய அந்தரங்கங்கள் என்று அவன் பகிர்ந்து கொண்ட விடயங்களில் ஒன்றாக இனி தன் விசயமும் மாறிப் போகும் என்று உணர்ந்த போது அதை அவனுக்கும் ஏன் தனக்கும் கூட இல்லாது உடைத்துப் போட்டு விட தீர்மானித்து விட்டாள். அவன் வெளியே பெருமை அடித்து விட முடியாத படிக்கு அவளது தொலைபேசி தொந்தரவுகள் தொடர அவளை ஒட்டுமொத்தமாக நிறுத்தி விட இன்னும் சிலரின் தொடர்போடு காய் நகர்த்திய கண்ணன், மூக்குடைபட்டு இரத்தம் வந்ததையும் அவளை மூக்கால் அடித்து அதனால் வந்த புண்ணென்று ,விழுப்புண்ணாக மாற்றித் திரிய, வெளியே சொல்ல முடியாது அவன் மனம் அறுத்துக் கிடந்த அந்த நிகழ்வே தண்டனையாக இருக்கும் என்று இப்போது ஒதுங்கி தனித்து நிற்க முயலுவதாய் பேசிக் கொண்டிருக்க குரல் தோளில் தட்டியது. பாராட்டாக “அப்படித்தாண்டா செய்யனும் இந்த நாய்களை உனது நட்பை பத்திரப் படுத்த தெரியாதவனாய் பிரகடனப் படுத்து அதில் இன்னும் தூள் தூளாகி நொறுங்கி போவான் நீ மூழ்கி முத்தெடுத்து மீண்டு வந்தவள் உன்னை வீழ்ந்த நினைத்த போது உயரத் தாண்டியும் மூழ்கடிக்க நினைத்த போது முத்தெடுத்தும் மீண்டு வந்தவள் இனி என் குரல் தேவையில்லை வாழ்த்துக்கள்!” அணைந்து போன தொலைபேசியை உயிர்பித்து இதுவரை பேசிய எண்ணைத் தேடினாள் அது அங்கு இல்லாது போயிருந்தது . கட்டிலிலிருந்து இறங்கி அறை விட்டு வெளிவந்து இன்றைக்கு வாங்க வேண்டியதை மனது பட்டியலிட்டது.
* தான் தனித்துவமானவள் யாராலும் தன் வேகத்தை மிஞ்சி கூட வந்து விட முடியாததன் நிதர்சனம் உரைக்க , உண்மைகளின் அடிப்படையில் மன அழுத்ததிலிருந்து மீண்டு முன்னேறத் துவங்கியிருந்தாள். வேகமாக வர முடியாதவர்களுக்கு கொஞ்ச நேரம் நின்று , நின்ற நேரத்தில் அன்பைத் தந்து அவள் தரக் கூடியவள் யாரிடமிருந்தும் பெறக் கூடியவள் அல்ல என்பதில் மமதை சூடினாள் கண்ணன் நின்று போனவனாகி , புள்ளியாகி பின்னாளில் இல்லாதவனாய் மாறிப் போயிருந்தான். எல்லாம் மறந்து மகிழ்ந்து , நிறைவாய் வாழ்ந்த பொழுதொன்றின் மாலை வேளை யாரும் வீட்டிலில்லாப் பொழுதில் தொலைபேசி அடித்தது.எழுதிக் கொண்டிருந்த வரியை முடித்து விட்டு இடது கையால் செல்பேசியை பார்க்காமலேயே அழுத்தினாள். தொலைபேசியில் சுகம் தேடும் மனது அற்றுப் போயிருந்ததால் அதை தொலைபேசியாக ஒரு பொருளாக மட்டுமே பார்க்கின்ற மனநிலை. உள்ளிருந்தது எப்போவாவது பள்ளம் விழுந்து கொண்டிருந்த நேரத்தில் எங்கிருந்தோ பிடிமானமாய் ஒலித்த குரலின் மேல் மட்டும் நன்றி கசிய நினைவு நின்று போகும் “வணக்கம், நான் தீபா பேசுறேன் . சொல்ல எதிர்முனையிலிருந்து “ தேவி பேசுகின்றேன் எப்படி இருக்கீங்க” குரல் கெட்டு சுதாரித்தாள். ஏதேதோ நண்பர்கள் பிரசுரமாகிய கவிதைகள் பத்திரிக்கைகள் என்று தேவி பெசிக் கொண்டே போக திடீரென தனக்கு ஏன் போன் செய்கின்றாள் . தான் முன்பு பட்ட கஷ்டங்களை இன்று இவளும் கண்ணனோடு இணைந்த பழக்கத்தில் அநுபவிக்கிறாளோ அவளது சந்தேகம் உறுதியானது “நாய்க்கு வேலையில்லை நிக்கவும் நேரமில்லை” தேவி சொன்ன இந்த வசனத்துக்கப்புறம் ஒன்றுமே கேட்கவில்லை காதுகளில் . இது இது கண்ணனின் ஆஸ்தான வசனம். கண்ணனுடன் நெருக்கமாகப் பழகிய காலங்களில் தனக்குள்ளும் கண்ணனிடமிருந்து ஒட்டிக் கொண்ட வசனமிது. நெருக்கமாக பழகுகிறவர்களுக்கு அவர்களே அறியாது ஒட்டிக் கொள்ளுகின்ற தொற்றுவியாதியும் கூட. தனது சந்தேகம் ஊர்ஜிதமாக, பேச்சில் கவனம் செலுத்தினால். வைத்தியம் செய்ய வேண்டிய தேவை உணர மனது கிடந்து அடித்தது, “தேவி உன்னை வித்துப் பிழைப்பான் கண்ணன். பின்னாளில் உணர்வாய் மனம் உரத்துச் சொன்ன போதும் வாய் சொல்ல முடியாது மௌனம் சூடியது “ எவ்வளவு சாணக்கியத்தனம் இந்த ஆண்களிடம் இரு பெண்களின் ஏன் பல பெண்களிடம் ஒரே நேரத்தில் பழகிக் கொண்டு ஒருவர் இன்னொருவருடன் நெருக்கத்தை வெளிப்படுத்தி விடாமல் இருக்க அவர்களுடைய பொசசிவ்னெஸ்சை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைப்பு தோன்ற பெண்கள் மனம் விட்டுப் பகிர்ந்தால் கண்ணன்களின் சுவடு காணாமல் போகும் , மனம் வன்மம் சூட வார்த்தைகளில் விசம் தோய்த்தாள் ஆம்! விசம் முறிக்க விசம் தானே மருந்து “கண்ணன் வசனம் உன் வாயில் வருதே நெருக்கமான பழக்கமோ? பார்த்து சிரிப்புக்குள் சோகம் தெரியுதேன்னு சொல்லியிருப்பானே? உன் எழுத்து யாரிடமும் இல்லைன்னு சொல்லியிருப்பானே? உடல் மேல் ஆசைப்படாதவனாய் தொடநேர்ந்த சந்தர்ப்பங்களை உருவாக்கி வெறும் முடி கோதி அன்பாய் தந்தாய் சொல்லிப் போனானா? அதை விட நேரடியா படுக்க வர்றியானு கேட்கிறவன் யோக்கியன்.” கவனமாயிரு நான் சொன்னதையெல்லாம் உனக்கும் நடந்திருக்கும் எனக்குத் தெரியும் இதே வசனம் பலபேர் அவன் சொன்னதா சொல்லியிருக்காங்க அவன் பிழைப்புக்கு நம்மை ஆட்டுவிச்சு பார்ப்பான். வேண்டாம்கிற போது அத்து விடவும் ஆள் தேடுவான் “ எதிர் முனை மௌனமாய் இருந்தது. யோசிக்கத் துவங்கியிருந்தது ஒத்துக் கொள்ளவும் பயம் இருக்கும் தானே இருக்கக் கூடாது என தான் தீர்மானிச்சதை நினைச்சு பெருமையா எனக்கே இருக்கு “அடுப்பில பால் வைச்சிருக்கேன் . பிறகு பார்க்கலாம்” வேணும்னே தொடர்பைத் துண்டித்தாள் தொலைக் காட்சியில் மாய்ந்து மாய்ந்து காதலனுக்காய் உருகி உருகி பாடிக் கொண்டிருந்தாள் “வசீகரா” என்று கதாநாயகி. இல்லை யார் சுகத்துக்காகவோ யார் பிழைப்புகாகவோ , யாரோ பாட வைத்துக் கொண்டிருந்தார்கள் கை கொண்டே கண் குத்தும் வேலைகள் தொடர்கின்றன. மனது நிறைந்து கிடந்தது , பசி எடுத்தது. சோத்தை வட்டிலில் போட்டுக் கொண்டு அள்ளி அள்ளி சாப்பிட்டாள்
(புதிய பார்வை பிப்ரவரி இதழில் வெளி வந்த கதை) Labels: கதைகள் |
posted by mathibama.blogspot.com @ 3/02/2007 11:53:00 pm   |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|