சூரியாள்

Sunday, May 24, 2009
கவிதை
அசமம்

கழுகுத் தன் வானப் பார்வையிலிருந்து
கேள்வி எழுப்பியது.
தட்டையான சமவெளியில்
நேராக போகத் தெரியாத
நதி பற்றிய எள்ளலை

நெளிந்து நெளிந்து போயிருந்த
நதிக்குத் தெரிந்திருந்தது
கழுகுப் பார்வையில்
காணக் கிடைக்காத
மேடு பள்ளங்கள்
தழுவலில் மட்டுமே
புரியக் கூடிய
அசமங்கள் தானென

Labels:

posted by mathibama.blogspot.com @ 5/24/2009 10:53:00 pm   2 comments
கவிதை-
வீழும் வாழ்வு
திலகபாமா

நிலம் கீறி
உண்மைகளை விதைத்துக்
கொண்டிருந்த அவளோ
எப்பவும் வறுத்துக் கொண்டிருக்கின்றாள்
நாளைய விதைகளின் நீர் சத்தை
உறிஞ்ச விட்டபடி
உனக்கான சாப்பாட்டுக்காய்

கண்ணாடிக் கூடுகளுக்குள்
பாதியில் நிரம்பியிருந்த பொய்களை
மீதி உண்மைகளைச் சொல்லி
நீ விற்கத் துவங்கிய
சுருக்கிய இடங்களுக்குள்
எனக்கான இடத்தை
காலி செய்திருக்கின்றாய்
நான் உள்வர விரும்பவே முடியாத படிக்கு

வாழ்க்கை முடிகின்ற
இடத்திலிருந்து எனை நீ
சேர்த்துக் கொள்ள நினைக்க

நானோ எப்பவும்
உன்னிலிருந்தே துவங்க
வடக்கு தெற்கு
முரண்பாடுகளூடாகவே
ஈர்த்துக் கொள்கின்றோம்

மலையும்
பள்ளத்துக்குமிடையில்
வீழுகின்ற அருவியாய்
எனக்கும்
உனக்குமிடையில்
வாழ்க்கை
வீழ்ந்தபடியே வாழுகின்றது

Labels:

posted by mathibama.blogspot.com @ 5/24/2009 10:39:00 pm   0 comments
Saturday, May 16, 2009
கவிதை
உயிரோடு மரணம் தழுவ
திலகபாமா

இதுவரை நீ தின்று செரித்த
வெளிச்ச இரவுகள்
நடந்து கொண்டே
வாழ்ந்ததாய் நிறுவிய
இருள் பகல்கள்

நட்டதாயும்
வளர்ந்து கிளை விரித்தாயும்
நிறுவிய புனைவு நிஜங்களை
சொர்க்க மென வாசித்த
உன்னிடம்

இதுவரை இல்லாதிருந்த
சொர்க்கம்
கட்டி வைத்து காத்திருந்து
வாசிக்க சொல்லி
சொர்க்கமென வாசித்துவிடுவாயென
நம்புவது நியாயமில்லைதான்

திரிசங்கென
என் புதிய வார்த்தையின் முன்
பாடம் நடத்தும் நீ தோற்க
நான் தொட முடியாததாய்
சொல்லித் திரிகின்றாய்


மரண அடிகள் தந்து விட
விரும்பாது
உயிரோடு சிறைப்பிடிப்பேன்
தினம்தோறும் நீ
மரணத்தை உணர்வோடு தழுவ

Labels:

posted by mathibama.blogspot.com @ 5/16/2009 11:58:00 pm   3 comments
Saturday, May 09, 2009
படித்ததில் பிடித்தது
கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்திலும் சரி அரசியலிலும் சரி வெறும் உணர்ச்சி வசப் பட்டு பேசக் கூடியவர்களும் எழுதக் கூடியவர்களும் துணிச்சல் மிக்கவர்களாக சொல்லப் பட்டு சொல்லப் பட்டு ஆழ்ந்த சிந்தனை உள்ள கருத்துக்களும் அறிவு பூர்வமான தீர்வுகளும் மௌன அங்கீகரிப்புகளூடவே மறைந்து அல்லது மறக்கப் பட்டு விடுவதும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது. அதையெல்லாம் மீறி மிக அரிதாக மிக குறுகிய எல்லைகளுக்குள் கருத்துக்களையும் தங்களையும் சிக்க விடாமல், மனிதனாகக் பிறந்தவன் வாழப் பிறந்தவன் தேச , இன, சாதி, மத, பால் வேறுபாடுகளைத் தாண்டியும், என்பதை கருத்தில் ஊன்றி குறுகிய காலத் தீர்வாக அல்லாது நீண்ட காலத் தீர்வுகளையும் நோக்கி சிந்திப்பவர்களின் கருத்துக்கள் வெளி வரத் துவங்கியிருக்கின்றன. உண்மையில் இவைதான் மிகத் துணிச்சலானவை.வெற்று ஆர்ப்பாட்ட குரல்கள் துணிச்சலான கலகக் குரல்களாக பார்க்கின்ற மனோநிலை, தலித்தியம் பெண்மொழி, இலங்கை அரசியல் எல்லாவற்றினுள்ளும் இன்றைக்கு புகுந்து உண்மையான மனித விடுதலையை நோக்கி நகர்தலை தடுத்து விடுகின்றது.அதைத் தாண்டி மிக அரிதாக வெளி வருகின்ற சிந்தனைகளாக புது விசையில் வந்திருக்கின்ற சுசீந்திரனின் நேர்காணல் பேசி பகிர்ந்து கொண்டு பலருக்கும் கடத்த வேண்டிய முக்கிய நேர்காணல்.

"மன்னிக்க வேண்டும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை..."

-நடராசா சுசீந்திரன்


பல இணைய தளங்களும் இந்நேர்காணலை பிரசுரித்திருக்கின்றன. அவற்றுக்கும் எனது நன்றிகள்
நேர்காணலை வாசிக்க:


Labels:

posted by mathibama.blogspot.com @ 5/09/2009 07:22:00 am   0 comments
Friday, May 08, 2009
கவிதை
கத்தியின்றி இரத்தமின்றி வன்முறை
திலகபாமா

வன்முறை
குண்டு துளைப்பும்
குருதி இழப்பும் மட்டுமல்ல

என் அன்பின் சுகங்களை எல்லாம்
அனுபவித்து விட்டு
நீ திருப்பித் தராததின்
வலியைச் சொன்னால்
நிராகரிக்கும் உன் இயல்பில்

யாருமற்ற ஏதுமற்ற
அகதி வாழ்வின் வலியும்

எனை கெட்டிக் காரியென
சொல் தூவி
உனக்கானவளாய் மாற்றிக்
கொள்ளும் தொடர் வாழ்வில்

பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொள்ளும்
மூச்சுத் திணறலின் வலியும்
வன்முறைதான்
நன்றி .திண்ணை.காம்

Labels:

posted by mathibama.blogspot.com @ 5/08/2009 12:32:00 pm   2 comments
Sunday, May 03, 2009
புத்தகச் சந்தை
புத்தகச்சந்தை
திலகபாமா

விடுதலை பேசிய வார்த்தைகள்
புத்தகச் சந்தையில்
அடுக்கப் பட்டிருந்தன

“கழிவு” களை அழுத்திச் சொல்லி
தங்களை வாங்கி விடக்
கோரிக் கொண்டிருக்கின்றன

தாள்களுக்குள் தீர்மானிக்கப் பட்டு
திணிக்கப் பட்ட மொழிகள்
கருத்தியல்களை
வெளித்தள்ளியிருக்க
அவை கால்மிதியடிகளின்
துளைகளுக்குள் ஒளிந்து கொள்கின்றன

கூடிக் களிக்க
சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்த
நண்டுகள்
எழுத்துக் காடுகளுக்குள்
மாறி நுழைந்து விட்டதையும்
மறந்து
முட்டைகளை தொலைத்து விட
தேடித் திரிகின்றன மறைவுகளை

இதுவரை உண்மை பேசிய பழமிதழ்கள்
கடைகள் கிடைக்காமல்
சந்தைக்கு வெளியில்
பரத்திக் கிடக்கின்றன
விற்க நேர்ந்துவிட்ட கிழவனால்

சமாதானம் உருவாக்க விளைந்த
எழுத்துக் காடுகள்
தீப்படித்தலைகின்றன

தாகம் தீர்க்கத் தோன்றிய
மொழிக் குளங்கள்
தற்கொலைகளை மூழ்கடிக்கின்றன

விடுதலையைக் கோரிய சிறகுகள்
படுக்கையறைக் கூண்டுகளில்
சாட்சியாகிப் போய் விட்டன

விற்று முடித்த மாலையில்
புழுக்கைகளையே விட்டு விட்டு
நகலும் சந்தையை
கூட்டிய படி சிரிக்கின்றாள்
குமரித் தோற்றம் தொலைக்கா ஔவை

மூடிய கதவுகளுக்கப்பால்
ஒருவனை ஒருத்திகளும்
ஒருத்தியை ஒருவன்களும்
திருடியதை மறைத்தபடி
மகிழ்ச்சியில் மறைவதை
பார்த்து சிரித்தபடி

Labels:

posted by mathibama.blogspot.com @ 5/03/2009 06:32:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates