சூரியாள்
|
Thursday, June 22, 2006 |
டார்ஜிலிங் பயணம்-4 |
 உடன் வந்த ஒட்டுநர்களுடன், பெல்லிங் எதிரே தெரிகின்ற மலையின் உச்சியில்
 மலையிறங்கி மலையேறும் பாதை
 டாஷி வியூ பாயிண்ட்
 கணேஷ் டோக்
 ஹனுமான் டோக்
வானுக்கடியிலிருக்கும் எல்லாமே மலைகள் தான் எனத் தோற்றம் தரும் இமயமலைத் தொடர்ச்சிகளிடையே பார்க்க வேண்டிய இடங்களாக அங்கிருக்கும் பயண முகவர்கள் நமக்குத் தருவது , வீழுகின்ற அருவிகளையும் மலைசிகரங்கள் வான் முட்டும் காட்சியையும்,கிடு கிடு பள்ளத்தாக்குகளையும் . அவர்களிடம் எப்பவும் இருக்கின்ற ஒரு பட்டியல், 5 இடங்கள் 10 இடங்கள் என.500 ரூபாயிலிருந்து 1000 வரை. எண்ணிக்கை அதிகம் சொல்லிப் போவார்கள் ஆனால் பெரும்பாலும் எல்லாமே போகின்ற வழியிலும் திரும்புகின்ற வழியிலும் இருப்பதாகவே இருக்கும். சுற்றுலா பயணிகளை கவருகின்ற வார்த்தைகள் அது. ஒவ்வொரு மலை உச்சியிலும் ஒரு கோவில் இருகின்றது. அனுமான் டோக், கணேஷ் டோக், என்று மலையின் உச்சிகளை கடவுளர்கள் ஆக்கிரமித்திருக்க. கோவில்கள் எல்லாம் சிறிய கோவில்கள் தான்.ஆனால் அழகிய காட்சிகள். கண்ணுக்கு விருந்தாகும் இயற்கை சூழல். “கணேஷ் டோக்” கில் ஒரு ஓட்டுநர் நானும் என் குழந்தைகளும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு மதராசியா என்கிறார். ஆம் என்கிறோம் எனக்கு “ கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் என்கிறார்.வணக்கம்.வாங்க சாப்பாடு என்று சொல்லி விட்டு இன்னொரு நல்ல வாக்கியம் தெரியும் என்று ஹிந்தியில் சொல்லி விட்டு” நான் உன்னை காதலிக்கின்றேன் “ என்று சொல்ல , அதை சொல்ல மொழி தேவையில்லையே என்று சொல்லி பேசிய தமிழுக்கு வாழ்த்தி கை குலுக்கி விட்டு நகலுகின்றோம். டாஷி வியூ பாயிண்ட் (tashi view point)வந்து சேர்கின்றோம் நாங்கள் வந்தது மத்தியானப் பொழுது. விடியற்காலை 5 மணிக்கு இங்கு வந்தால் கஞ்சன் ஜங்காமுனை பார்க்கலாமாம். அதேபோல் அங்கிருந்து சுற்றிப் பார்க்க ஹெலிகாப்டர் வசதியும் இருக்கின்றது. அது அதிக பட்ச தொகையாக இருக்கின்றது. நமக்கு கட்டு படியாகாது என்று வானில் அது பறப்பதை வேடிக்கை பார்த்து விட்டு அறைக்கு வந்து சேர்கின்றோம்.
இன்று தேர்தல் நாள்.8.5.06 காலை கொளம்பி காங்டாக் விட்டு வெளியேறி குவிந்து கிடக்கும் மலைச் சிகரங்களுக்கிடையே பயணித்து பெல்லிங்(pelling) நோக்கி பயணமாகின்றோம். மாருதி வேனும், ஜீப் போன்ற வாகனங்கள் மட்டுமே போகக் கூடிய பாதைஒரு மலையில் உச்சியிலிருந்து நாங்கள் போய்க் கொண்டிருக்கின்ற பெல்லிங் எதிர்த்திருக்கும் மலையின் உச்சியிலிருக்கிறது என அடையாளம் காண்பிக்கின்றார்கள் நம்ப முடியாத மலையின் பிரம்மாண்டம் வியப்பூட்டுகின்றது.வண்டி ஓட்டி வருவது எல்லாமே 19 20 வயதுள்ல சிறிய பையன்கள் தான் .ஆனால் நல்ல அனுபவ சாலிகள் ஓடுவதில். ஒரு மலையிலிருந்து இறங்கி எங்களது வாகனம் அடுத்த மலையுச்சியை வந்தடைகின்றது 2.15 க்கு பெல்லிங் வந்து சேர்க்கின்றோம் சிறிய கிராமம்.காலார நடக்கத் துவங்கியதுமே ஊர் முடிந்து விடுகின்றது. விடுதிக்குள் நுழைந்ததுமே மெல்லிய துண்டு ஒன்று கழுத்தில் இட்டு வரவேற்கின்றார்கள்.அந்த துணியில் புத்த மதத்துக்கான சக்கரங்கள் இருக்கின்றன. அந்த துண்டு வளம் கொண்டு வரும் என்று நம்புகின்றனர். கதவுகளில் வாசல் நிலைப்படிகளில் எல்லாம் அதை கட்டி வைத்திருக்கின்றனர். |
posted by mathibama.blogspot.com @ 6/22/2006 11:36:00 pm   |
|
|
Sunday, June 18, 2006 |
டார்ஜிலிங் பயணம்-3 |

4மணி நேர பயணத்திற்கு பின் காங்டாக் நகரை அடைந்தோம். மலைப் பிரதேசங்களுக்கே உரிய நெரிசலான சந்துகள் , அடுக்கடுக்கான வீடுகள் ஆனாலும் சுத்தமான காற்றும் இயற்கை சூழலும் நெகிழ்வைத் தர, மெல்லிய ரசிக்கக் கூடிய குளிர் எங்களை போர்த்திக் கொண்டது. அசைவ உணவு இருக்குமா என்று விடுதியில் கேட்க , மதராசிலிருந்து 40 பேர்கள் வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு அசைவம் இருக்கக் கூடாது என்றார்கள் அதனால் நாளை அவர்கள் போன பின்பு சமைத்து தருகிறோம் என்றார்கள். டார்ஜிலிங் பயணத்தில் , டார்ஜிலிங்கை விட எல்லா இடங்களும் கொள்ளை அழகு. அதிலும் காங்டாக் தான் அதன் முத்திரை பதித்த இடம். பயணத்தின் கடைசி தினங்களில் டார்ஜிலிங் போக திட்டமிடுவது தான் சுகம். காலையில் கிளம்பி சங்கு ஏரி(tsomgo lake,/changu lake )போனோம். காங்டாக் நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில்,. ஏரியிலிருந்து 17 கிலாமீட்டர் தொலைவில் சீன எல்லையான நாதெல்லா. எல்லையோரம் இருக்கின்ற ஏரியானதால் அந்த பகுதி முழுக்க பொதுமக்களைவிட அதிகமான அளவில் இராணுவ ஆட்களும் அவர்களது வசிப்பிடமும் தான் இருக்கின்றது. வெறும் தகரம் மூங்கிலிலாலான வீடுகள் , எப்படித்தான் குளிர்தாங்குமோ? உயர் மலைகள் பனி மூடிய சிகரங்கள் தரையோடு கொஞ்சிய படி ஓடும் நதி , மலையை குளிருக்கு போர்த்த தரையிறங்கும்பஞ்சுப் பொதி மேகங்கள்குளிரை என் மேல் வீசியெறியும் காற்று. ஏரிக்கு அருகே கடைகளில் குளிருக்கான ஆடைகள் வாடகைக்கு எடுத்து போட்டுக் கொண்டு காட்டெருமைகள்(yak) மேலேறி ஏரியை ஒட்டியிருக்கும் ஒத்தையடிப் பாதையில் பனி மூடிய சிகரத்தை நோக்கி போகின்றோம்.” கணவர் வரவில்லை? அவரோடு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என அவர்கள் சொல்லிக் கொண்டு போக, சிரித்து கேள்வியையும் பதிலையும் நிராகரித்து பனிக்குள் கால் பதிக்கின்றோம். பனியில் சறுக்கி , உருண்டு குளிர் பற்றிக் கொண்ட பிறகுதான் வேறுவழியின்றி பனி நிறைந்த தரை விட்டு நகலுகின்றோம்.

 |
posted by mathibama.blogspot.com @ 6/18/2006 11:29:00 pm   |
|
|
Saturday, June 17, 2006 |
மனவெளிப் பயணம் 5 |
 வான்கோ அருங்காட்சியகம் ஆம்ஸ்டர்டாமில் நான் பார்த்த பல்வேறு விசயங்களையும் ஒப்பீட்டளவில் கோர்த்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் பெரும்பாலான ஓவியங்கள் ஓவியர் வான்கோ சந்தித்த பாலியல் தொழிலாளர்களின் முகங்கள். பாலியல் தொழிலாளர்கள் என்ற போதும் அவர்கள் இன்றைக்கு காணக் கிடைக்கின்ற அல்லது எந்த விதமான ( எனது அவதானிப்பில் சிக்கிய வரை) உடல் சார்ந்த சித்தரிப்புகள் அவரது ஓவியத்தில் இல்லை அவர்களையும் மனிதர்களாய் அங்கீகரிக்கும் மனநிலை அவரிடம் இருந்திருக்கக் கூடும் ஆகவே தான் இன்று கலையெனும் பேரில் நவீனக் கலையெனும் பேரில் எங்கள் (பெண்கள்) உடலையே மையப் படுத்தி வரைந்து போவது நிகழ்ந்து கொண்டிருக்க பாலியல் தொழிலாளர்களிடையே உடனேயே இருந்திருந்தும் அவர்களையே வரைந்த போதும் முகங்களை மட்டுமே வரைந்திருப்பது மதிக்க நினைத்திருக்கின்றார் என்று தோன்றியது. இயற்கையை அவர் தூரிகையால் எழுதிப் பார்த்திருப்பது.வண்ணங்களின் சுழற்சிகளூடாக நம்மையும் பயணிக்க வைக்கின்றது நட்சத்திர இரவுகளும் , கோதுமை வயல் வெளிகளும் அதனூடாக பறந்து வாழும் காகங்களும் பறவைகளும் சாடியில் நிறைந்திருக்கும் பூங்கொத்துக்களும் பெரும் பாலான இடத்தை பிடித்திருக்கின்றன. 2 மணி நேர பார்வையிடலுக்கு பின் மழை விட்டிருக்க வண்டிக்குத் திரும்புகின்றோம்.மூவருமாக நகருக்குள் கட்டிட வெளிக்குள் காண முடியாதிருந்த அம்மண்ணின் உணர்வலைகளுக்குள் நுழைய முயலுகின்றேன்.உலகத்திலேயே அதிக உயரமுள்ள மக்கள் நான் ஏதோ அசாத்தியமான பிரம்மாண்ட உலகத்தினுள் நடந்து போவதாய் தோன்றியது.

நகரம் முழுவதும் நீராலேயும் போக்குவரத்து அமைக்கப் பட்டிருக்கின்றது. ஏறக்குறைய நகர் முழுவதும் 1500 பாலங்கள் நிரம்பியிருக்கின்றது பாலங்கள் இந்நகரின் சிறப்பு அம்சமும் கூட அரை வட்ட வடிவில் நகர வடிவாக்கம் அமைந்திருக்க நாங்களும் ஒரு படகில் நகரை வலம் வருகின்றோம். நதி வழி நகரின் முக்கிய இடமிருந்து படகு கிளம்புகின்றது எங்கெங்கு பார்க்கினும் இரு சக்கர மிதி வண்டிகள் நிறுத்தப் பட்டு இருக்கின்றது . இரயில் நிலையம் கப்பல் சரக்கேத்தும் இடம் தபால் நிலையம், முக்கிய பல்கலைக்கழகம் , அருங்காட்சியகங்கள் என்று சுற்றி வருகின்றது . படகு இப்பொழுது எங்களைச் சுற்றி எல்லா திசையிலும் நீர் இருக்கின்றது .ஆம்,! மழை பார்வையை மறைக்க கீழே கால்வாயாகவும் மேலே மேகமாகவும் , சூழுகின்ற திசையெல்லாம் வீழுகின்ற மழையாக நீர் எங்களைச் சூழ ஒரு பயணமிது. பழமை சார்ந்த கட்டிடங்களின் அழகிய காட்சிகள்

கிழக்கிந்திய கப்பலின் நினைவாக நின்று கொண்டிருக்கும் கப்பல் முடிந்து நகருக்குள் நடக்கத் துவங்க நகரின் மையப் பகுதிக்கு வருகின்றோம். எல்லா வித கேளிக்கைகளும் நிரம்பியிருக்கும் “டாம் ஸ்கொயர்” எனப்படும் சதுக்கம். “ மேடம் துஷா” எனப்படும் முக்கிய நபர்களின் மெழுகு உருவச் சிலைகள் இருக்குமிடம் இங்கும் இருக்கின்றது லண்டனில் இருப்பதை போல.

வெளிச்சம் கவ்வி தின்று இருளை போர்த்த நினைத்த மேகம் படை படையாய் அணிவகுத்து வந்த போதும் கூசும் விளக்கொளியில் அதையெல்லாம் முறியடித்து போட்ட படி இருந்ததந்த இடம் கேளிக்கைகளின் வடிவங்களையும் பார்க்கிறேன் 8 கைகளுடைய எலும்புக் கூடு திடீரென கீழிறங்கி நமை மிரளச் செய்யும் ராட்சத சிலந்தி ராட்சத கொரில்லா உருவமாய் திடீரென உயிர்த்து உள் வர அழைக்கும் பயமுறுத்தும் குரல் ( நவீன , பின்நவீன இலக்கிய வாதிகளின் புனைவு உலகம் இப்படி சாதாரண கேளிக்கைகளுக்குள் இருந்தா நகல் எடுக்கின்றது.) இத்தோடு நம்மூர் திருவிழா நேர பொட்டல் நினைவுக்கு வருகின்றது மாடென்றும் மயிலென்றும் வேசமிட்டு வரும் ஆட்டங்கள் குச்சியின் உச்சியில் அழகாய் சிங்காரித்த பொம்மையை கை தட்ட வைத்து மிட்டாயை குழந்தைகளின் கற்பனைக்கு ஏற்ற மாதிரி செய்து விற்கும் தாத்தா, வாலு பையன்கள் வாங்கினால் வீட்டு வாசல் வரை கூட பத்திரமாய் வராத பலூன் மற்றும் பிளாஸ்டிக் சாமான்கள் , ஊதி ஊதி காற்றை சப்தமாகவும் சோப்பு நுரையாகவும் மாற்றிப் போகும் குழந்தைகள் வெட்கத்தோடு கைகளில் கண்ணாடி வளையலிட்டுக் கொள்ளும் புது மணப்பெண் கதறக் கதற சிரித்த படியும் மூக்கு குத்திக் கொள்ளும் பெண்கள் எல்லாரும் வேலையும் இதர கொண்டாட்டங்களையும் முடிக்க காத்திருக்கும் நாடக மேடை.மக்களோடு விடிய விடிய முழித்திருக்கும் சாமி, இவற்றின் முன்னால் வக்கிர கற்பனைகள் எதுவும் கலந்து விடாத கொண்டாட்டங்களில் மகிழ்வு கனநேரம் நினைவுக்கு வந்து போகின்றது . நகரின் மைய இடமிருந்து சின்ன சின்னதாய் பின்னலிட்டுப் போகும் சந்துக்குள் நுழைகின்றோம் நெடுக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நீள சிவப்பு விளக்குகள் எரிகின்றன. ஆம் பாலியல் தொழில் சட்ட பூர்வமாக நடைபெறும் “தம்” பகுதியில் தான் இருக்கின்றோம்.வெறும் கண்ணாடிக்கு பின் புறம் தன்னுடலை பொருளாக்கி அரை குறை ஆடையுடன் தெருவில் போகும் ஆண்களை அழைக்கும் தோரணையில் கண்ணாடிப் பதுமைகளாய் நிற்கின்றார்கள்.சில கண்ணாடிக் கதவுகளில் திரை தொங்குகின்றது.அறிவால் விக்கிரமாதித்தன் சிம்மாசப் பதுமைகளாய் இருந்து அரசோச்ச உதவியதாய் சொல்லப் படுகின்ற புனைவின் உக்கிரம் நினைவுக்கு வருகின்றது.
அசையாத அடித்தட்டுகள் உதிரி மணல்களாய் ஒட்டாது இருக்கின்ற மேல் நிலைகள் எல்லாம் இயல்பாய் போனதாய் சொல்லிக் கண்ணாடிச் சிறையிருக்கும் அரை நிர்வாணச் சின்ரல்லாக்கள்
வந்து போகும் இளவரசர்களிடம் பாதரட்சைகளை மறந்தாவது போட்டு விடக் காத்திருக்க சமூகமெனச் சொல்லி சில தாலிகளுக்குள்ளும் உரிமை எனச் சொல்லி சில கண்ணாடி கதவுக்கு பின்னும் ஆடிக் கிடப்பதை சுகமாக்கிப் போகும் நடமாடும் மனிதர்கள்
அசைகின்ற அடித்தட்டில் மணல்கள் இறுகி முழுங்கித் தீர்க்க எதுவாகியிருக்க வென்று உணராது தவிக்கும் தலை தொலைத்த உடலங்கள்
உடலங்களை தொலைத்து மூளைகள் உயிர்த்தெழ ஏங்கும் தவமிருப்புகள் மூடி விட்ட புற்றுகளில் முழுகிப் போகின்றன வரங்கள் வந்து போன போதும் உணராது போக உடைத்து வந்து எப்போ நான் உடலற்று திரிய
கண்ணாடிப் பதுமைகள் என்னவோ சிரித்தபடி மகிழ்வாய் இருப்பதாய் சொன்னாலும் காசுக்கு தின்று போகின்ற கூட்டத்தின் முன்னால் இன்றும் சீரழிந்து கிடக்கும் பெண்ணின் அவலம் என்னைத் தலை குனிய வைக்கின்றது. மூளை மழுங்கச் செயும் கஞ்சா விற்பவனை விரட்டிப் பிடித்த கலவர நிகழ்வை கல்லாய் சமைந்தவளாகவே நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் .பெண்ணுக்கு இதுவே சுகம் என்று பழக்கப் படுத்திக் கொண்டிருக்கும் சமூகத்தின் மேல் வெறுப்பு பற்றிக் கொண்டு வருகின்றது, அரசாங்க சலுகைகளாய் தந்து போகின்ற காசுகளால் எதை நிரப்ப முடியும் இன்று எத்தனை காலத்திற்குத்தான் பெண் உடல் அழகு சார்ந்ததாகவும் ஆணுக்கான சுகத்தை தருவதாயும் நிறுவப் போகின்றோமோ தெரியவில்லை பெண் உடல் பார்க்கப் பட வேண்டிய தளத்தை மாற்றி கட்டமைக்க பெண்னையும் சிந்திக்க விடாத சூழலை உருவாக்கிக் கொண்டு அதையே தூக்கிப் பிடித்து பெண்ணுக்காக கொக்கரிப்பதாய் சொல்லும் சமூகம் பெண் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க சொல்லிப் பார்க்கின்றது மேலைத் தேய நாடுகளை முன்னுதாரணமாகக் நிறுத்தி இந்தியாவுக்குள்ளும் நுழைக்கப் பார்க்கின்றது. மும்பை போன்ற இடங்களில் சாதித்ததை . எல்லாரிடமும் பரப்பவும் நினைக்கின்றது. முத்து லெட்சுமி ரெட்டி அவ்வளவு கஸ்டப் பட்டு சாதித்ததை விட்டுக் கொடுத்து விடுவோமா என்ன? மதுரையில் தாய் எனும் நிறுவனத்தை தற்செயலாக என் நண்பர் அதில் பணிபுரிவதகச் சொன்னதால் உள்ளே நுழைந்தேன்.எய்ட்ஸ் ஒழிப்பிற்காக அந்த நிறுவனத்திற்கு நிதி பில்கேட்சால் தரப் படுகின்றது. பாலியல் தொழிலாளர்களை அடையாளம் கண்டு ஒன்றினைக்கின்ற அதே தருணத்தில் அவர்களை அதிலிருந்து மீட்பது பற்றி யாருமே பெசுவதில்லை. முக்கியமாக “இத்தனை தொழிலாளர்கள்” என்று கணக் கெடுப்பே அவர்களது தேவையாய் இருக்கின்றது இத்தொழிலாளர்கள் இருக்கும் வரைதான் அவர்களது வேலையும் இருப்பும் என்றிருக்க பாலியல் தொழிலை இவர்கள் ஒழிக்க எப்படி நினைப்பார்கள்.அங்கிருக்கும் பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கப் படுகின்ற தொழில்கள் அழகு கலை கூடை பிண்ணுதல் அதே போல் நான் இலங்கை சென்றிருந்த போதும் நான் உணர்ந்த ஒரு விடயம் இன்றைக்கு பலர் சமாதானப் பேச்சு வார்த்தை என்பதில் பணி புரிகின்றார்கள் அது ஒரு புரோஜெட் ஆகவே கட்டமைக்கப் படுகின்றது. அதை ஒரு பணியாக எடுத்து செய்து கொண்டிருப்பவர்கள் அதன் மூலம் கிடைக்கும் இருப்பையும்வசதியையும் தொலைக்க விரும்புவார்களா என்பதுவும் கேள்விக் குறியே அப்படிப்பட்டவர்கள் நம்மிடையேயும் தலித்தியம் பெண்ணியம் எனும் தளத்தில் அதன் மேல் ஏறி நின்று கொண்டு தனக்கு கிரீடம் சூடிக் கொள்ளப் பார்க்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்காக என்று சொல்லி பதாகை தாங்குபவர்கள் ஒரு நாளும் விடுதலை பெற்று சமநிலை வர விடவே மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை சமநிலை இல்லாதிருப்பதுவா வாழ்க்கை. அப்படிப்பட்டவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும் ஆயுதம் ஏந்தி அணுகுண்டிட்டு வெல்வதை விட இன்றைய வல்லரசுகள் வளர்ந்து வரும் நாடுகளின் மூளைகளை வெல்வதன் மூலமும் சமநிலையை குலைப்பதன் மூலமும் ஆதிக்கம் செலுத்தி விடத் தயாராகின்றன. தனி மனிதனின் வாழ்க்கை பாடுகளிடையே தேசத்தை விட்டுக் கொடுக்க அதன் புனிதங்களை விட்டுக் கொடுக்க யாரும் முன் வரக் கூடாது |
posted by mathibama.blogspot.com @ 6/17/2006 12:13:00 am   |
|
|
Sunday, June 11, 2006 |
பொதிகையில் நேர்காணல் |
நண்பர்களே பொதிகை தொலைக் காட்சியில் வருகின்ற 12ம் தேதி திங்கட் கிழமை காலை 7 மணியளவில் எனது நேர்காணல் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கின்றது |
posted by mathibama.blogspot.com @ 6/11/2006 12:26:00 am   |
|
|
Friday, June 09, 2006 |
டார்ஜிலிங் பயணம்-1 |
 டார்ஜிலிங் பயணம்-1 ஒரு வார காலம் குழந்தைகளோடு அவர்களது விடுமுறைக்காக திட்டமிடப் பட்ட பயணமிது.சில முக்கிய விசயங்களையும் சுவாரசியமான தகவல்களையும் படங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றேன். பயணம் குழந்தைகளோடு என்று சொன்னதும் கணவர் இல்லாமலா எனக் கேட்கத் துவங்கிய கேள்விகள் பயணத்தின் வழியெங்கும் இரைந்து கிடக்க, பார்க்கின்ற ஒவ்வொருவரும் அதை எடுத்து என்னிடமே மீண்டும் தருகின்றனர் . தொலைக்க முடியாது தவிக்கிறேன். குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகி என் பயணம் விடுமுறைக்காக . குழந்தைகள் விமானப் பயணத்தின் ஒவ்வொரு துளியும் சிந்தாமல் சிதறாமல் பருகி முடிக்க கல்கத்தா வந்து இரவு சேர்கின்றோம்.முன் கூடி பணம் செலுத்தும் வாடகை கார் நாங்கள் போகச் சொல்லி கேட்ட இடத்திற்கு 220 ரூபாயும் அதே சமயம் தனியார் வாடகை வண்டிக்கு 650 ரூபாயும் கேட்கப் படுகின்றது. மஞ்சள் நிற பழைய அம்பாஸிடர் வண்டிகளில் விமான நிலையை விட்டு வெளியே வந்ததும் முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போகின்றது கல்கத்தா |
posted by mathibama.blogspot.com @ 6/09/2006 09:42:00 pm   |
|
|
Friday, June 02, 2006 |
இலவசமாய் ஏமாற்றுகள் |
இலவசமாய் ஏமாற்றுகள்
“ம் “என்றால் சிறைவாசம், “ஏன்” என்றால் வனவாசம் என்றிருந்த காலங்களை உடைக்க சிந்திய இரத்தமும் பண்ணிய தியாகங்களும் , சிந்தனை வழியாகவும் செயல் வழியாகவும் உழைத்த உழைப்புகளும் நினைந்து நினைந்து இன்றைய நிலையின் மகத்துவத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் . உருளுகின்ற உலகம் இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மட்டுமல்ல மனிதனை நாகரீகம் எனும் படிக்கட்டுகளில் ஏற்றி விடவும் முயற்சிக்கிறது. உணவு , உடை , பழக்க வழக்கங்கள் எவை மாறிய பொதும் வாழ்வதற்கான ஆசையும் அதற்கான நேர்மையான உழைப்பும், நேர்மையாய் வாழ்வதற்கான போராட்டமும் மாறாததே. புதுமைப் பித்தன் சொல்லுவார் 200 ஆண்டுகளாக சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம் என்று. அப்படியான செக்கு மாட்டுத் தன சிந்தனையை கலைத்து புதிதாய் இன்றைய தேவைக்கு கட்டமைத்து, ஒழுங்கு செய்வதற்கான சிந்தனையை வடிவமைப்பது இலக்கியங்கள். அதற்கு செயல் வடிவாக்கம் கொடுப்பது மனிதனின் பல்வேறு போராட்டங்களும், அதன் ஒட்டு மொத்த சொல்லாடலாய் திகழும் அரசியலும். அப்படி சிந்தனை வழியாக செயலும், செயலின் வழியாக மீண்டும் சிந்தனையும் மாறி மாறி திருத்தப் படுகின்றன, வடிவமைக்கப் படுகின்றன, புதிதாய் தோற்றுவிக்கப் படுகின்றன. அரசியலின் அநாகரீகங்களின் உச்ச கட்டங்களை தேர்தலின் மிக நெருங்கிய இந்த கால கட்டத்தில் சந்தித்து வருகின்றோம். ஊடகங்கள் , அதிலும் தொலைக்காட்சியும், செய்தித் தாள்களும் கட்சி கட்டிக் கொண்டு இரண்டாய் நாளாய் பிரிந்து கிடக்கின்ற வேளையில் சாமான்ய மனிதனை கிறுக்காக்குவதையும் தாண்டி , ஒவ்வொரு அறிவிப்பின் பல்வேறு பக்கங்களையும் யோசிக்க வைத்தும் போகின்றன. ஏன் எதற்கு யார் என்பது கூட அறியாது சின்னங்களில் குத்தி விட்டு வரும் நிலை மாறியிருக்கின்றது. சொல்வதை எல்லாம் நம்பி விடுகின்ற நிலை தாண்டி சொல்வதற்கு பின்னால் இருக்கின்ற மறைக்கப் பட்ட பகுதிகளை வெளிச்சமிட்டு காட்டியும் போகின்றன அவைகளே அறியாது ஊடகங்கள். இலவசங்களாய் வந்து விழுகின்ற அறிவிப்புகள் , தேர்தல் வாக்குறுதிக்கென்று ஏழுமலை ஏழுகடல் தாண்டி வைக்கப் பட்ட அரக்கனின் உயிராய் பாட்டி சொன்ன கதைகளின் புனைவுகளையும் வென்று சிந்துபாத் கதையாய் நீளப் போகின்றன. அறிவிக்கப் பட்ட இலவசங்கள் மக்களுக்காகவா? அல்லது அடுத்த கட்சிக் காரனை விட பெரியதாய் சொல்லியிருக்கின்றேன் என்று பூச்சாண்டி காட்டவா? எதை இலவசமாய் தரப் போகின்றார்கள் ? முதலில் அவை இலவசங்கள் தானா? எந்தக் காலத்தும் யாரும் எதையும் சும்மா தந்து விட வும் சும்மா பெற்று விடவும் வாய்ப்பே இல்லை என்பது பொது ஜனம் அறியாததா? அதுவும் இன்றைய வணிகச் சூழலில், எல்லாவற்றுக்கும் விலை பேசும் கால கட்டத்தில் அதெல்லாம் சாத்தியம் தானா? மக்கள் பணத்தையே சேமிப்பாக்கி அதிலேயே கடனும் தந்து , அதற்கெனவே வட்டி வசூலிக்கும் சில சேமிப்புத் திட்டங்களைப் போல் , மக்கள் வரிப்பணத்திலேயே ஆட்சி நடத்தும் அரசாங்கங்கள் மனிதனின் வாழ்வதற்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது அதன் கடமையாக இருக்க எப்படி சாத்தியமாகின்றது” கடமைகளை” இலவசங்களாய் சொல்லிப் போக? உணவும் உடையும் இருப்பும் வாழ்வை உயர்த்தும் கல்வியும் தொடரும் வாழ்வும் பயணத்தில் மக்களின் நோய் , வேலையின்மை முதுமை என்று பற்பல காலங்களில் உருவாகும் அடிப்படி தேவைகளுக்கு சாமான்யனின் முதுகு தடவி தோள் கொடுக்கும் அரசாங்கத்தை மக்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சியால் இதுவரை சாத்தியமாக்க முடிந்ததா? முடிந்திருந்தால் இன்று இலவச அறிவிப்புகளாய் சொல்லப் படுபவை எல்லாம் திட்டங்களாய் அறிவிக்கப் பட்டிருக்கும் , சாதாரண வியாபாரியின் விற்பனை தந்திரத்தோடு “ இலவசமெனும்” பேரில் அறிவிக்கப் பட்டிருக்காது எந்த கட்சித் தலைவரும் அவர்கள் சொந்த உழைப்பின் பணத்திலிருந்து இலவசமாய் துன்பம் கண்டு துயரம் கண்டு தானம் தரும் எண்ணத்தில் தந்து விட வில்லை “இலவசங்களை” மகள் உழைத்து சேமித்த சேமிப்பிலிருந்து நேராகவும் மறை முகமாகவும் கட்டிய வரிப் பணத்திலிருந்து மக்களுக்கே அவரவர்கள் பெருந்தன்மையோடு இலவசமாய் கொடுக்கப் போவதாய் அறிவித்துப் போகின்றார்கள். அறிவிப்புகள் எல்லாம் நிஜங்கள் போல தோற்றம் தரும் மாயைகளே. சாமான்ய மனிதனாய் இருந்து அரசாங்க அலுவலகத்தில் தனக்கு சேர வேண்டிய உரிமைகளை கூட பெற்றுக் கொள்ள முடியவில்லையே. தெரிந்த ஆட்களோடுதான் செயல்படுத்த முடிகின்றது. ஊனமுற்றவர்களும் வயோதிகர்களும் யாரையும் எதிர்பார்க்காது வாழக் கூடிய தன்னிச்சையான வாழ்வுக்கு யார் உத்திரவாதம் தர முடியும்? மொத்தத்தில் “இலவசம்” எனும் வார்த்தையின் அர்த்தத்தை மாற்றி விட்டுப் போயிருக்கின்றார்கள் “ஏமாற்றென்று” |
posted by mathibama.blogspot.com @ 6/02/2006 12:25:00 am   |
|
|
|
|
 |
"வரை படங்கள் அழித்து
கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி
திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும்
நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும்
எல்லாக் காலத்தும்
அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்
புவி அடித்தட்டு தாண்டி
ஆழ வேர் ஊன்றியும்
மேரு மலையென உயர்ந்தும்
வாழும் தமிழால் தமிழின் வழியால்
அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்
சூரியன் சிரித்தால் சிரித்தும்
மழை மேகம் அழுதால் அழுதும்
தன்னை மறைத்து
எதிராளியின் முகம் மட்டுமே
காட்டித் திரியும்
ஈர நிலமாயும்
சீமைக் கருவேலமும்
பார்த்தீனிய செடியும்
அயலக விருந்தாளியாய் வந்து
ஆக்கிரமித்த போதும்..."
இங்கே செய்திகள் இடம் பெறும்!!!
|
|
|
|